Sunday, March 27, 2022

சிவ ஞான போதம் - இரண்டாம் சூத்திரம் - ஆணை வழி

 சிவ ஞான போதம் - இரண்டாம் சூத்திரம் - ஆணை வழி 


இந்த பிறத்தல், இருத்தல், அழிதல் என்ற முத்தொழில் இருக்கிறதே, அதை யார் செய்கிறார்? 


பிரம்மா, விட்டுணு, உருத்திரன் என்று நாம் பெயர் வைத்து இருக்கிறோம். கடவுளுக்கு இது தான் வேலையா? ஏன் இதை அவர் செய்ய வேண்டும்? பேசாமல் இருந்து விடலாம்தானே? 


வேலை மெனக்கெட்டு தோற்றுவிப்பானேன், பின் அதை காப்பானேன், பின் அழிப்பானேன்? இது ஒரு வெட்டி வேலையாக தெரியவில்லையா?  


ஒரு குயவன் அவனே குடம் செய்து, அதை பாதுகாத்து பின் தூக்கிப் போட்டு உடைபானா? அது அறிவுள்ளவன் செய்யும் வேலையா? எந்த பெற்றோராவது தங்கள் பிள்ளைகளை கொல்வார்களா? பின் ஆண்டவன் மட்டும் ஏன் அப்படிச் செய்ய வேண்டும்?


அது மட்டும் அல்ல, காப்பதற்கு ஒருவர், அழிப்பதற்கு ஒருவர் என்றால் அவர்களுக்குள் சண்டை வராதா?  இவர் அழிக்க வேண்டும் என்பார், அவர் காக்க வேண்டும் என்பார். யார் வெல்வார்கள் இதில்? 


இதெல்லாம் ஒரு மாயை. 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_27.html


(Pl click the above link to continue reading)


அப்படி எல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. தெரியவில்லை, புரியவில்லை என்றால் மாயை என்று சொல்லி தப்பித்து கொள்ளக் கூடாது என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. 


நாம் தெருவில் வண்டி ஓட்டிக் கொண்டு போகிறோம். காவல் அதிகாரி நம்மை நிறுத்தி "ஏன் வண்டியை வேகமாய் ஒட்டினாய்? அபராதம் கட்டு "என்கிறார். "நீ யார் அதைக் கேட்க?  என் வண்டி, நான் வரி கட்டுகிறேன், எப்படி வேண்டுமானாலும் ஓட்டுவேன்" என்று சொன்னால் என்ன சொல்வார்?


நான் சாலை விதிகளை மக்கள் ஒழுங்காக கடை பிடிக்க நியமிக்கப் பட்டவன் என்பார். 


உன்னை யார் நியமித்தது என்றால் , உயர் அதிகாரியின் பெயரைச் சொல்வார்.


அவரைக் கேட்டால் அவருக்கு மேலே உள்ள ஒருவரைச் சொல்வார். இப்படியே போனால், முதல் மந்திரி, குடியரசு தலைவர், பிரதம மந்திரி என்று போகும். அவர்களை கேட்டால் "இல்லையே நான் இவரை நியமிக்கவில்லையே" என்பார்கள். 


பின் யார் தான் நியமித்தது என்றால் "இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்".  அதன் கீழ் உண்டாகிய பல சட்டங்கள், சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்த தோற்றுவிக்கப்பட அமைப்புகள், பாராளுமன்றம், சட்ட சபை, நீதி மன்றம்,  காவல் துறை எல்லாம் அந்த அரசியல் அமைப்பு சட்டத்தில் இருந்து வருவது. 


அது ஒரு புத்தகம் அவ்வளவு தான். 


ஆனால், அந்த ஒரு புத்தகம் ஒரு நாட்டை நிர்வாகம் பண்ணுகிறது.


அது போல, இறைவனின் ஆணையில், சந்நிதியில் இந்த பிறப்பு, இறப்பு, இருப்பு என்பதெல்லாம் நிகழ்கின்றன. 


அவர் நேரடியாக ஒன்றும் செய்ய மாட்டார். ஆனால் செயல் நிகழும். 


இன்னொரு உதாரணம் பார்ப்போம். 


காலையில் சூரியன் எழுகிறது. 


வெளிச்சம் வருகிறது. சூடு வருகிறது. நீர் ஆவியாகிறது. செடி கொடிகள் வளர்கின்றன. புழு பூச்சிகள் சில இறக்கின்றன.


சூரியனுக்கு இதெல்லாம் வேலையா? இன்னைக்கு அந்த குளத்தை வற்றச் செய்ய வேண்டும், இந்த செடியை வளர்க்க வேண்டும், இந்த பூச்சியை கொல்ல வேண்டும் என்று அது நினைத்து வருவது இல்லை. ஆனால், அதன் சந்நிதியில் இவை நிகழ்கின்றன. 


இன்னொரு உதாரணம் பார்ப்போம்.


ஒரு அலுவலகம். அங்கே வேலை பார்ப்பவர்கள் சும்மா அரட்டை அடித்துக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருக்கிறார்கள். முதலாளி வருகிறார். எல்லோரும் கப் சிப் என்று அவரவர் இடத்துக்குச் சென்று தங்கள் வேலையை செய்யத் தொடங்கி விடுகிறார்கள். முதலாளி ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவருக்கு அந்த வேலையெல்லாம் நடப்பதே கூடத் தெரியாது. ஆனால், அவர் முன்னிலையில் அவை ஒழுங்காக நடக்கின்றன. 


சூரியன் செய்வது, பிரதம மந்திரி செய்வது, முதலாளி செய்வது என்பதெல்லாம் ஒரு மாயை. ஒரு பிரமை. ஆனால் அங்கே நிகழ்கிறது அல்லவா?


அது போல் இந்த உலகம் என்று அடுத்த சூத்திரம் சொல்ல வருகிறது. 


அது என்ன என்று நாளை பார்ப்போம்.


(பின் குறிப்பு - சற்று நீண்டு விடுகிறது. சுருக்கிச் சொன்னால் புரியாமல் போய் விடலாம். நீட்டிச் சொன்னால் ஒரு அலுப்பு வந்து விடலாம். எனவே முடிந்த வரை பிரித்து பிரித்து பொருள் சொல்கிறேன். 


உங்கள் எண்ணம் என்ன?)


No comments:

Post a Comment