Thursday, March 17, 2022

திருக்குறள் - விழுமம் துடைத்தார் நட்பு

திருக்குறள் - விழுமம் துடைத்தார் நட்பு 


நமக்கு சில பேரை பார்த்தவுடனேயே பிடித்துப் போய் விடும். அது போல சில பேரை முதல் தரம் பார்க்கும் போதே ஒரு வெறுப்பு வரும். காரணம் என்ன. 


இது எங்கு தெரியும் என்றால், காதல் செய்பவர்களை கேட்டால் சொல்லுவார்கள். "எனக்கும் அவளுக்கும் (அல்லது அவனுக்கும்) ஏதோ ஒரு முன் ஜென்ம தொடர்பு இருந்திருக்கிறது போல இருக்கிறது. இல்லை என்றால் இத்தனை பேரில் அவளை மட்டும் எனக்கு பிடிப்பானேன்?" என்று சொல்லுவார்கள். 


இது உண்மையா? முற் பிறவி என்று ஒன்று உண்டா? அடுத்த பிறவி என்று ஒன்று உண்டா? 


தெரியாது. ஆனால், நம் உள் உணர்வு சொல்கிறது இது ஏதோ ஜன்ம ஜென்மமாய் வரும் உறவு என்று. 


எங்கிருந்து வருகிறது அந்த உணர்வு? யார் சொல்லித் தந்தார்கள்?


இதை எல்லாம் நம்பாத நாத்திகன், பகுத்தறிவுவாதி கூட, மனைவி/காதலி மேல் உண்மையான ஆழமான அன்பு இருந்தால் இந்த உணர்வைப் பெறுகிறார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அது உண்மை. 


அப்படி ஏன் சில பேரை பார்த்த மாத்திரத்தில் அன்பு வருகிறது என்றால், அவர்கள் முற்பிறவியில் நமக்கு செய்த நன்மை. அந்த நன்மை மனதில் ஆழமாக பதிந்து, உயிரோடு கலந்து விடுகிறது. உயிர் ஒரு உடலை விட்டு இன்னொரு உடலில் செல்லும் போது, அந்த நன்றி உணர்வும் கூடவே வந்து விடுகிறது என்கிறார். 


பாடல் 


 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமம் துடைத்தவர் நட்பு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_17.html


(Pl click the above link to continue reading)


எழுமை  = எழும் தன்மை, உயர்தல் 


எழுபிறப்பும் = ஏழு பிறப்பிலும் 


 உள்ளுவர் = நினைப்பார்கள் 


தங்கண் = தனக்கு 


விழுமம் = துன்பம் 


 துடைத்தவர் நட்பு = நீக்கியவர்களின் நட்பை 


தனக்கு துன்பம் வந்த காலத்தில் அதை போக்க உதவி செய்தவர்களை இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, இனி வரப் போகும் ஏழு பிறவியிலும் நினைப்பார்கள் என்கிறார் வள்ளுவர். 


கொஞ்சம் ஆழ்ந்து சிந்திப்போம். 


"உள்ளுவர்" என்றால் நினைப்பர் என்று அர்த்தம். நேத்து மதியம் என்ன சாப்பிட்டோம் என்பதே மறந்து போய் விடுகிறது. இதில் அடுத்த பிறவியில் மட்டும் அல்ல இன்னும் வரும் ஏழு பிறவியில் எப்படி நினைக்க முடியும்? 


முடியும். செய்த உதவியை பெரிதாக நினைத்து, மனதில் அதை ஆழமாகப் பதித்தால், தானே நினைவு வரும். 



இரண்டாவது, ஒரு விடயம் எப்படி ஞாபகம் இருக்கும். அதை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டிருந்தால் அது மனதில் தங்கும்.  ஒருவர் செய்த உதவியை மறுபடி மறுபடி நினைக்க வேண்டும். அப்போது அது, இந்தப் பிறவியில் மட்டும் அல்ல, பல பிறவியிலும் நினைவில் நிற்கும். .


மூன்றாவது, என்ன உதவி பெற்றுக் கொண்டாலும், அதை பெரிதாக நினைத்தால் அது மறுபடி மறுபடி ஞாபகம் வரும். அதை மனதுக்குள் நன்றி பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.  "அன்னைக்கு அவர் அந்த உதவி செய்தார். அவர் மட்டும் அந்த உதவிய செய்யலேனா" என்று நினைக்க வேண்டும். 


நான்காவது, சில பேர்இருக்கிறார்கள். என்ன உதவி செய்தாலும், 'அதெல்லாம் ஒரு பெரிய உதவியா" என்று அலட்சியம் செய்வார்கள். பனைத் துணையாக செய்தாலும், தினைத் துணையாகக் கொள்வார்கள். சிறியோர். அவர்களுக்கு என்ன செய்தாலும், அது அவர்கள் நினைவில் தங்காது. 


ஐந்தாவது, "துடைத்தவர் நட்பு" என்கிறார்.  துடைப்பவர் நட்பு என்று இருந்திருக்க வேண்டும். விரைவு கருதி இறந்த காலத்தில் கூறினார் என்கிறார் பரிமேலழகர் உரையில். முன்பே இது பற்றி சிந்தித்து இருக்கிறோம். 


அவசரமாக வெளியே போக வேண்டும். மனைவி அலங்காரம் செய்து கொண்டு இருக்கிறாள். கணவன் வெளியே பொறுமை இல்லாமல் "எவ்வளவு நேரம்...சீக்கிரம் கிளம்பு" என்று அவசரப் படுத்துகிறான். "இதோ வந்துட்டேன்" என்கிறாள். வரவில்லை. இருந்தும், வந்து விட்டேன் என்பது, விரைவில் வந்து விடுவேன் என்பதை குறிப்பதற்காக. 


துடைத்தவர் என்றால் விரைந்து துடைப்பவர்.  ஒரு உதவி என்று கேட்டுப் போனால், அப்புறம் வா, நாளைக்கு வா, அடுத்த வாரம் இதைப் பற்றிப் பேசலாம் என்று இழுத்து அடிக்கக் கூடாது. உடனே, உடனே அவர் துன்பத்தை துடைக்க வேண்டும். அந்த நட்புதான் ஏழு பிறப்பிலும் தொடரும் என்கிறார். 


நமக்கு பாடம் என்ன என்றால், உதவி என்று யாராவது கேட்டால், குறிப்பாக நண்பர்கள், "உடனே" செய்து விட வேண்டும்.  உடுக்கை இழந்தவன் கை போல் என்று வள்ளுவர் கூறியது போல. அப்படி உதவி செய்தால் அது அவர் மனதில் நிற்கும். ஏழு பிறவியிலும். 


இந்தப் பிறவியில் அப்படிச் செய்யுங்கள். அடுத்த பிறவியில் நீங்கள் தேடாமலேயே பல சிறந்த நட்பு உங்களுக்கு கிடைக்கும். அன்பு செய்வர் என்கிறார் பரிமேலழகர். 


என்ன ஒரு சிந்தனை !


படிக்க படிக்க உவகை ஊட்டும் நூல். 


இதை எல்லாம் விட்டு விட்டு 'முது காட்டில் காக்கை உகக்கும் பிணம்" போல எதையெதையோ படித்துக் கொண்டு இருக்கிறார்கள். 



No comments:

Post a Comment