Tuesday, March 15, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - மறவற்க, துறவற்க

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - மறவற்க, துறவற்க 


இதுவரை சிக்கல் இல்லாமல் சென்று கொண்டிருந்த அதிகாரம், இப்போது ஒரு சிக்கலான ஒரு விடயத்தை சொல்ல வருகிறது. 


நமக்கு துன்பம் வந்த காலத்தில் ஒருவர் உதவி செய்கிறார். பின்னாளில் அவர் அவ்வளவு நல்லவர் இல்லை என்று தெரிய வருகிறது. என்ன செய்யலாம்? அவர் செய்த நன்றியை மறவாமால் போற்ற வேண்டுமா அல்லது அவர் நல்லவர் இல்லை என்பதால் அவர் தொடர்பை துண்டித்துக் கொள்ள வேண்டுமா? 


இது ஒரு சிக்கலான கேள்வி. நல்லவர் இல்லை என்று தொடர்பை துண்டித்துக் கொண்டால், செய் நன்றி மறந்த குற்றம் வரும். சரி, அவருடன் நட்பில் இருக்கலாம் என்றால் அதனால் என்னென்ன சிக்கல்கள் வருமோ என்ற பயமும் வரும். 


இதுக்கு என்ன தான் தீர்வு? 


சரி, அது புறம் இருக்கட்டும். 


சிலபேருடன் நாம் நட்பாக இருப்போம். அவர்கள் நமக்கு நேரடியாக ஒரு உதவியும் செய்து இருக்க மாட்டார்கள். பணமோ, பொருளோ, எதுவும் செய்து இருக்க மாட்டார்கள். ஆனால், அவர்களின் நட்பு நம்மை எவ்வளவோ விதத்தில் உயர்த்தி இருக்கும். அவருடைய அறிவு, பண்பு,  போன்றவை நம்மை வியக்க வைக்கும். நாமும் அது போல இருக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தை நம்முள் விதைக்கும். நம்மை அறியாமலேயே நாம் அவர்கள் சொல்வது போல், பேசுவது போல, நடந்து கொள்வது போல் நடக்க தலைப் படுவோம். அது நம்மை உயர்த்தும். 

அது ஒரு நன்மையா? அது அவர்கள் செய்த உதவியா? அதை மறக்காமல் இருக்க வேண்டுமா? 


இது அடுத்த கேள்வி. 


இந்த இரண்டு சிக்கலான கேள்விக்கும், ஒரே குறளில் பதில் தருகிறார் வள்ளுவர். 


"குற்றமற்ற நல்லவர்களின் நட்பை மறக்கக் கூடாது. நமக்கு துன்பம் வந்த காலத்தில் உதவி செய்தவர்களின் நட்பை துறக்கக் கூடாது" 


பாடல் 



மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துள் துப்பாயார் நட்பு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_15.html


(pl click the above link to continue reading)



மறவற்க = மறக்காமல் இருக்க 


மாசற்றார் = குற்றம் அற்றவர் 


கேண்மை = நட்பு 


துறவற்க = விட்டுவிடக் கூடாது 


துன்பத்துள் = நமக்கு ஒரு துன்பம் வந்த காலத்து 


 துப்பாயார் நட்பு. = துணையாய் நின்றவர்களின் நட்பை 


இரண்டாகப் பிரித்துக் கொள்வோம். 


மாசற்றார் கேண்மை மறவற்க - குற்றமறவர் நல்லவர்களின் நட்பை மறக்கக் கூடாது. 


சரி, அதுக்கும் இந்த அதிகாரத்துக்கும் என்ன சம்பந்தம்? 


இருக்கு. அதுதான் வள்ளுவர். 


நல்லவர்களின் நட்பால் நமக்கு பல நன்மைகள் விளையும். அப்படி நன்மை விளைந்ததால் அதை செய் நன்றி அறிதல் என்ற அதிகாரத்தில் வைத்ததார். 


ஆனால், அப்படி ஒன்றும் நன்மை விளைந்த மாதிரி தெரியலையே என்றால் , பரிமேலழகரிடம் தான் கேட்க வேண்டும்.   அவர் சொல்கிறார் 


"மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்" 


மாசு அற்றார் கேண்மை மறுமைக்கு உறுதி தரும் என்கிறார். அவர்களுடைய நட்பால் நாம் அற வழியில் செல்வோம். அதனால் நமக்கு மறுமைக்கு நன்மை கிடைக்கும் என்பதால், அவர்கள் நட்பை விட்டுவிடக் கூடாது என்கிறார். 


அடுத்தது, 



"துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு"


நமக்கு துன்பம் வந்த காலத்தில் நமக்கு துணை நின்றவர் நட்பை விட்டு விடக் கூடாது என்கிறார். 


நம் துன்பம் கண்டு, நமக்கு இரங்கி உதவி செய்தார் அல்லவா, அதுவே ஒரு நல்ல குணம் தான். அவரிடம் வேறு பல தீய குணங்கள் இருக்கலாம். அவர் தண்ணி அடிக்கலாம், கையூட்டு வாங்கலாம். அதெல்லாம் செய்தாலும், நமக்கு உதவி செய்ய வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லையே? இருந்தும் செய்தார். அந்த நன்றியை மறக்கக் கூடாது.  குற்றம் இல்லாத மனிதன் எங்கே இருக்கிறான். தவறே செய்யாதவன் என்று ஒருவனும் கிடையாது. உதவி செய்தவர்களிடம் உள்ள குறைகளை, குற்றங்களை ஆராய முற்பட்டால், ஒருவர் கூட மிஞ்ச மாட்டார். பின் செய்நன்றி அறிதல் என்பதே அர்த்தம் இல்லாமல் போய் விடும். 


அவன் எப்படியோ இருக்கட்டும். உனக்கு துன்பம் வந்த காலத்தில் காப்பாற்றினான் அல்லவா, அந்த நன்றியை மறவாதே என்கிறார். 


அதில் உள்ள இன்னொரு ஆழ்ந்த அர்த்தம் என்ன என்றால், யாரிடம் உதவி கேட்கிறோம் என்று தெரிந்து கேட்க வேண்டும். ஏன் என்றால், உதவி பெற்றுக்கொண்டால், நன்றி மறக்கக் கூடாது. 


ஊரிலேயே உள்ள பெரிய அயோக்கியனிடம் சென்று உதவி கேட்டுப் பெற்றால், பின்னாளில் சிக்கல் வரத்தான் செய்யும். 


இப்போதைக்கு உதவி வாங்கிக் கொள்ளலாம். பின்னால் கழட்டி விட்டு விடலாம் என்று நினைக்கக் கூடாது.. 


உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை மறக்கக் கூடாது.  (இம்மைப் பலன்)


நல்லவர்கள், உதவியே செய்யாவிட்டாலும், அவர்கள் நட்பை விட்டுவிடக் கூடாது. (மறுமைப் பயன்)



எவ்வளவு சிந்தித்து இருந்தால் இவ்வளவு சொல்ல முடியும்?




1 comment:

  1. சிக்கலான இடத்தை மற்றும் பார்ப்போம்.அயோக்கியன் என்று தெரியாமல் உதவி பெற்று கொண்ட பிறகு ஆள் நல்லவர் இல்லை என தெரிய வந்தால் ,செய் நன்றி மறக்காமல் இருக்கவேண்டும். ஆனால் அத்துடன் அந்த நட்பு நிற்க வேண்டும்..
    பின்னர் ஈஷி கொள்ளாமல் சற்று விலகியே இருக்கவேண்டும். இது சரிதானே?.

    ReplyDelete