Sunday, March 6, 2022

திருக்குறள் - செய் நன்றி அறிதல் - காலத்தினால் செய்த உதவி

 திருக்குறள் - செய் நன்றி அறிதல் - காலத்தினால் செய்த உதவி 


முந்தைய குறளில் செய்யாமல் செஎய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது என்றார். .


அடுத்து இந்தக் குறளில் காலத்தினால் செய்த உதவி பற்றிக் கூறுகிறார். 


பாடல் 


காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_6.html


(Pl click the above link to continue reading)


காலத்தி னால் = உரிய காலத்தில் 


செய்த நன்றி  = செய்த உதவி 


சிறிதுஎனினும் = சிறிது என்றாலும் 


ஞாலத்தின் = இந்த உலகை விட 


மாணப் பெரிது = மிகப் பெரிது 


எல்லா வார்த்தைக்கும் அர்த்தம் தெரியும். ஆனால், பொருள் விளங்காது. 


அது என்ன காலத்தினால் செய்த உதவி? 


பரிமேலழகர் இல்லாவிட்டால் நமக்கு இது புரியவே புரியாது. 


ஒரு குவளை தண்ணீர் நமக்கு ஒருவர் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அது என்ன பெரிய உதவியா?  சரி, ரொம்ப தாகமாக இருக்கும் போது தருகிறார் என்றே வைத்துக் கொள்வோம்...அப்போதும் அது என்ன பெரிய உதவியா? அவர் தராவிட்டால் வேறு ஒருவரிடம் வாங்கிக் கொள்கிறோம். அல்லது ஏதாவது கடையில் ஒரு பாட்டில் நீர் வாங்கிக் குடித்துக் கொள்கிறோம்.  இது என்ன பெரிய உதவி?


எங்கோ ஒரு பாலைவனத்தில் சிக்கிக் கொண்டோம், அல்லது உக்ரைன் போன்ற ஒரு யுத்தம் நடக்கும் ஊரில் சிக்கிக் கொண்டோம். தப்பிச் செல்கிறோம். வண்டி இல்லை. ரொம்ப தூரம் நடக்க வேண்டி இருக்கிறது. நாக்கு வரள்கிறது. அக்கம் பக்கம் கடை ஒண்ணும் இல்லை. அத்துவானக் காடு. தாகம் உயிர் போகிறது. கண் இருண்டு வருகிறது. அப்போது ஒருவர் ஒரு பாட்டில் நீர் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அந்த நீரின் மதிப்பு எவ்வளவு இருக்கும்? 


ஒரு நூறு ரூபாய் எவ்வளவு பெரிய உதவி? பெரிய உதவி ஒன்றும் இல்லை. 


அதி காலை. உடற் பயிற்சி என்று நடை போகிறோம். இருட்டில், ஒரு கார் நம் மேல் இடித்து விடுகிறது. அடிபட்டு இரத்தம் போய் கொண்டிருக்கிறது.  அக்கம் பக்கம் யாரும் இல்லை. செல் போன் எங்கே என்று தெரியவில்லை. அப்போது ஒருவர், நம்மை தூக்கி எடுத்து ஒரு ஆட்டோவில் போட்டு, ஆட்டோ ஓட்டுபவருக்கு நூறு ரூபாய் கொடுத்து, நம்மை அருகில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல அனுப்புகிறார். "நீ முன்னால போப்பா...நான் பின்னால என் வண்டியில வர்றேன்" என்று நம்மை சரியான நேரத்தில் மருத்துவ மனையில் சேர்த்து உயிர் காக்கிறார். அவருக்கு செலவு என்னவோ நூறு ரூபாய் தான். 


இப்படி எவ்வளவோ உதாரணம் சொல்லலாம். 


பரிமேலழகர் சொல்கிறார் 


"ஒருவனுக்கு இறுதிவந்த எல்லைக்கண் ஒருவன் செய்த உபகாரம்"


காலம் என்றால் இறுதி வந்த காலம். அல்லது மிகப் பெரிய இக்கட்டு. சிக்கல். அந்த நேரத்தில் செய்த உதவி. அது எவ்வளவு சிறியதாக இருந்தாலும், உலகை விடப்  பெரியது. 


நான் இதை இன்னொரு விதமாக சிந்தித்தேன். சரியா தவறா என்று தெரியவில்லை. 


ஒருவருக்கு உதவியை எவ்வளவோ வகையில் செய்யலாம்...பணம் கொடுக்கலாம், வேலை வாங்கித் தரலாம், சம்பந்தம் பேசி முடிக்கலாம், இப்படி ஆயிரம் வழியில் உதவி செய்யலாம். 


ஒருவருக்கு நம் நேரத்தை செலவழித்து செய்யும் உதவி மிகப் பெரியது. "காலத்தினால்" என்றால் நேரத்தின் மூலம் செய்யும் உதவி. 


ஏன் அது பெரியது?


பணம், பொருள் எல்லாம் பின் சம்பாதித்துக் கொள்ளலாம். உதவி பெற்றவர் கூட திருப்பித் தந்து விடலாம். ஆனால், நாம் நம் நேரத்தை செலவிட்டு உதவி செய்தால், அது திரும்பி வரவே வராது. யாரும் நமக்கு ஒரு மணி நேரம் அதிகம் தந்து விட முடியாது. திருப்பி தர முடியாத உதவி என்பதால் அது காலத்தால் செய்த உதவி. 


பொருளால் செய்த உதவி 

அறிவால் செய்த உதவி 

பணத்தால் செய்த உதவி 

அதிகாரத்தால் செய்த உதவி 


என்பது போல


காலத்தால் செய்த உதவி. 


அது மட்டும் அல்ல, ஒருவன் துன்பத்தில் இருக்கும் போது, அவன் அருகில் இருந்து, அவனுக்கு ஆறுதல் சொல்லி அவனை தேற்றுவது என்பது பெரிய விடயம். ஆயிரம் ரூபாய் பணம் யார் வேண்டுமானாலும் கொடுத்துவிட முடியும். இரண்டு நாள் அவன் கூட இருந்து அவனுக்கு ஆறுதலாக இருக்க முடியுமா ?


பணம் எல்லா துன்பத்துக்கும் விடை இல்லை. மனித நேயம், ஒருவருக்கு ஒருவர் கூட இருந்து, கை பிடித்து, முதுகை தடவிக் கொடுத்து, அழுவதற்கு தோள் தந்து பக்கத்தில் இருப்பது பெரிய விடயம். எனவே, ,அதை "காலத்தால்" செய்த உதவி என்று கூறி இருப்பாரோ?


இது யார் சொன்ன உரையும் இல்லை. இது இலக்கணப்படி தவறாகக் கூட இருக்கலாம். 


தோன்றியது. அவ்வளவுதான். 








1 comment:

  1. சார் அற்புதம் தங்கள் விளக்கம். பாராட்டுகள்.


    நங்கநல்லூர் சித்தானந்தம்

    ReplyDelete