Thursday, March 3, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல்

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் 


ஒரு நிமிடம் யோசித்துப் பார்ப்போம். செய்நன்றி அறிதலில் என்ன சொல்ல முடியும்? 


செய்த நன்றியை மறக்காதே என்று சொல்லலாம். மறந்தால் வரும் தீமை பற்றி சொல்லலாம். மறவாமல் இருந்தால் வரும் நன்மை பற்றிச் சொல்லலாம். மூணு குறள் போதும். இதில் வேறு என்ன இருக்கிறது என்று நாம் யோசிப்போம். 


வள்ளுவரின் சிந்தனையின் விரிவு இந்த அதிகாரத்தை படிக்கும் போது தெரியும். இப்படி கூட சிந்திக்க முடியுமா என்று நாம் வியப்போம். 


முதல் குறளில் செய்யாமல் செய்த உதவி பற்றி கூறுகிறார். 


அது என்ன செய்யாமல் செய்த உதவி?


நாம் ஒரு சிக்கலில், இக்கட்டில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மற்றவர்களிடம் போய் உதவி கேட்கவும் தயக்கமாக இருக்கிறது. கூச்சமாகவும் இருக்கிறது. கேட்டு தரவில்லை என்றால் அவமானமாக இருக்கும். அப்புறம் எப்படி அவர்கள் முகத்தில் விழிப்பது என்ற சங்கடம்  வரும். 


அப்படி இருக்கும் போது, ஒருவர் தானே வந்து நமக்கு ஒரு உதவி செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு எப்படி இருக்கும். அவருக்கு நாம் முன்ன பின்ன உதவி செய்தது கிடையாது. அவரே வந்தார், செய்தார், போய் விட்டார் என்றால் எப்படி இருக்கும் 


அப்படிப் பட்ட உதவிக்கு இந்த உலகையும், வானத்தையும் தந்தாலும் போதாது என்கிறார். அதாவது அது அவ்வளவு உயர்ந்ததாம். 


பாடல் 


செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_3.html


(pl click the above link to continue reading)


செய்யாமல் = இது வரை நாம் ஒருவருக்கு ஒரு வித உதவியும் செய்யாமல் இருக்கும் போது 


செய்த உதவிக்கு = அவர் நமக்கு செய்த உதவி 


வையகமும் = இந்த மண்ணுலகும் 


வானகமும் = அந்த வானுலகும் 


ஆற்றல் அரிது. = கொடுத்தாலும் போதாது 


நமக்கு வேண்டிய ஒருவர், கணவனோ/மனைவியோ, பிள்ளையோ, பெற்றோரோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். மருத்துவர் சொல்கிறார் இரண்டு பாட்டில் இரத்தம் அவசரமாக தேவைப் படுகிறது என்கிறார். அப்போது அங்கு வந்த ஒருவர், "என் இரத்தமும் அதே குரூப் தான், எடுத்துக் கொள்ளுங்கள்" என்று தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்கு வேண்டியவரின் உயிர் காப்பாற்றப் படுகிறது. அந்த உதவிக்கு எவ்வளவு கைம்மாறு செய்யலாம்?


இதைப் படிக்கும் வாசகர்கள் பல பேர் பொருளாதார நிலைமையில் ஒரு நல்ல இடத்தில் இருக்கலாம். நல்ல வசதி இல்லாத ஒருவர் பெண்ணுக்கு கல்யாணம், பையனுக்கு கல்லூரியில் அனுமதி, வீடு ஏலத்துக்கு வருகிறது அதை தடுத்து நிறுத்த கொஞ்சம் பணம் வேண்டும் என்று கையை பிசைந்து கொண்டு இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம் 


நாம் போய், 'கவலைப் படாதீங்க, நான் இருக்கேன். பொண்ணு கல்யாணத்தை நடத்திறலாம் , பையனை அனுப்புங்க செக் கொடுத்து அனுப்புகிறேன், வீட்டு மேல எவ்வளவு கடன் இருக்கு...சொல்லுங்க வட்டியும் முதலும் கட்டி வீட்டை எடுத்துருவோம்...மத்தது எல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்று உதவி செய்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்...அது அவருக்கு எப்படி இருக்கும்?


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால், செய்யாமல் செய்த உதவி மிகப் பெரியது என்றால், அதை நாம் ஏன் செய்யக் கூடாது? வாழ்க்கையில் ஒரு இக்கட்டான இடத்தில் உள்ள ஒருவருக்கு நாம் செய்யும் உதவி மிகப் பெரியது. நமக்கு உதவி செய்யாதவர்களுக்கு நாம் உதவி செய்து பழக வேண்டும். 


முன்ன பின்ன தெரியாத ஒருவருக்கு நாம் உதவி செய்வதால் நமக்கு என்ன நன்மை என்று கேட்டால், அருணகிரிநாதர் சொல்கிறார் "எங்காயினும் வரும் ஏற்பவருக்கு இட்டது" என்று. .




பொங்கார வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ

"எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட(து)" திடாமல்வைத்த

வங்கா ரமுமுங்கள் சிங்கார வீடு மடந்தையருஞ்

சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே.


அருணகிரி ஒரு படி மேலே போகிறார். சரி, வேண்டியவர்களுக்கு கொடுக்காமல் வைத்து என்ன செய்யப் போகிறாய்? 


உங்கள் சிங்கார வீடும், பெண்களும் நிரந்தரமாக உங்களுடன் இருக்குமா? என்கிறார். 


உதவி என்று ஒருவர் கேட்டால், அவர் நமக்கு முன் என்ன உதவி செய்திருக்கிறார் என்று எண்ணாமல் அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிறார். 


நமக்கு உதவி செய்யாத ஒருவருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்றால், நமக்கு உதவி செய்தவர்களுக்கு கட்டாயம் மறு உதவி, கைம்மாறு செய்ய வேண்டும் என்று சொல்லாமல் பெறப்படும். 


உனக்கு உதவி செய்தவனுக்கு நீ மறு உதவி செய் என்று சொல்லுவது பெரிய விடயம் இல்லை. 


உனக்கு உதவி செய்யாதவனுக்கு நீ செய்யும் உதவி மண்ணை விட, விண்ணை விடப் பெரியது என்று சொல்லும் போது, உனக்கு உதவி செய்தவனுக்கு நீ செய்யும் உதவி அவ்வளவு பெரியதில்லை, எனவே, யோசிக்காமல் அதையும் செய் என்று கூறுகிறார். 


உதவி பற்றி இப்படி சிந்தித்து இருப்போமா?


அடுத்த முறை பூஜை செய்யும் போது, வள்ளுவருக்கு ஒரு பூ எடுத்துப் போடுங்கள். 


அது அவர் செய்த உதவிக்கு நாம் செய்யும் கைம்மாறு.






No comments:

Post a Comment