Saturday, March 19, 2022

திருக்குறள் - மறப்பதும், நினைப்பதும் அறம்

 திருக்குறள் - மறப்பதும், நினைப்பதும் அறம் 


ஒருவர் தனக்குச் செய்த உதவியை மறப்பது நல்லது அல்ல. அதே போல், ஒருவர் தனக்கு செய்த தீமையை அன்றே மறந்து விடுவது நல்லது என்கிறார் அடுத்த குறளில். 


ஹ்ம்ம்...நல்லாத்தான் இருக்கு. அனால், இது நடைமுறை சாத்தியமா? நாம் சும்மா இருக்கும் போது நமக்கு ஒருவன் ஒரு தீங்கு செய்கிறான். அதை அப்போதே மறந்து விடுவது நல்லதா? அப்படிச் செய்தால் அவன் நமக்கு மேலும் மேலும் தீங்கு செய்யமாட்டானா? 


அப்புறம் காவல் நிலையம், சட்டம், ஒழுங்கு, நீதி மன்றம், சிறைச் சாலை, தண்டனை எல்லாம் எதுக்கு இருக்கு? தீமையை எல்லாம் மறந்து கொண்டே இருந்தால் நாட்டில் அநியாயம் பெருத்து விடாதா ? 


இப்படி ஒரு நடைமுறை சாத்தியம் இல்லாத ஒன்றை வள்ளுவர் சொல்லுவாரா?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதெல்லாம் நமக்கு புரியவே புரியாது. 


பாடல் 


நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_19.html


(Please click the above link to continue reading)


நன்றி = ஒருவன் தனக்குச் செய்த நன்றியை, உதவியை 


மறப்பது = மறப்பது 


நன்றன்று = நல்லது அல்ல 


நன்றல்லது = ஒருவன் தனக்குச் செய்த நன்மை இல்லாததை 


அன்றே = அன்றே 


மறப்பது நன்று = மறந்து விடுவது நல்லது 


இதற்கு பரிமேலழகர் எப்படி பொருள் சொல்கிறார் என்றால், 


"நன்மையும் தீமையும் ஒருவரே செய்த பொழுது, அவர் செய்த நன்மையை மறக்கக் கூடாது, அவர் செய்த தீமையை அன்றே மறந்து விடவேண்டும்" என்கிறார். 


அதாவது, நட்பில், உறவில் சில சமயம் தவறு நேர்ந்து விடலாம். அப்போது, அந்த தவறை நினைத்துக் கொண்டு நட்பை உறவை பிரிந்து விடக் கூடாது. அவர்கள் முன் செய்த உதவியை நினைக்க வேண்டும். 


உதாரணமாக, சகோதரர்கள் நடுவில் ஏதோ ஒரு குழப்பம். சிக்கல் பெரிதாகி ஏதோ தவறான வார்த்தை வந்து விழுந்து விடுகிறது. அது நல்லது அல்ல தான். ஆனால், அதையே நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாது. முன்னால் எவ்வளவு அன்பாக இருந்தோம், ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு உதவி செய்தோம் என்று நினைக்க வேண்டும். 


முன் செய்த உதவியை மறக்காமல் இருந்தால், இப்போது செய்த தீமையை அது மறக்க உதவும். முன் செய்த உதவி மறந்து போனால், இந்த தீமை மட்டும்தான் நினைவில் நிற்கும். 


சரி, "அன்றே மறப்பது நன்று" என்று தானே சொன்னார், காலையில் தீமை செய்தால், சாயங்கலாம் வரை அவகாசம் இருக்கிறது. வள்ளுவர் "அன்றே" என்று தான் சொல்லி இருக்கிறார் என்றால், அதற்கு பொருள் சொன்ன பரிமேலழகர் சொல்கிறார் 


"அவன் செய்த தீமையைச் செய்த பொழுதே மறப்பது அறன்."


தீமை செய்த பொழுதே, அந்தக் கணமே அதை மறந்து விட வேண்டும் என்கிறார். 


ஒரு சில நொடி கூட அதைப் பற்றி நினைத்துக் கொண்டு இருக்கக் கூடாதாம். உடனே மறந்து விட வேண்டும் என்கிறார். 


தவறு செய்யாத மனிதர்களே கிடையாது. ஒருவர் செய்த தவறுகளை நினைவில் வைத்துக் கொண்டு இருந்தால், பின் உறவு என்பதே இருக்காது. 


இல்லறம் சிறக்காது. 


துறவறம் நடக்காது. 


வீடு பேறு என்பது முடியாத காரியமாகி விடும். 


"நன்றி மறப்பது நன்று அன்று" என்ற தொடருக்கு பரிமேலழகர் "அறம் அன்று" என்று   உரை செய்கிறார். 


செய்த நன்றியை மறப்பது அறம் அன்று. 


செய்த தீமையை மறப்பது அறம் 


என்று இரண்டு பக்கமும் அறம் பற்றிச் சொல்கிறார். 


மறப்பதும், நினைவில் வைத்துக் கொல்வதும் நம் வசதிக்கு அல்ல. அப்படிச் செய்வது கட்டாயம் என்கிறார். 


அப்படிச் செய்யாவிட்டால் அது அறத்தின் வழியில் இருந்து தவரியதாகவே கொள்ள வேண்டும். 


உங்களுக்கு நன்மை செய்த ஒருவரின் குற்றம் உங்கள் மனதில் நினைவு இருக்கிறதா? நீங்கள் அறம் வழுவியவர்கள் என்றே கொள்ள வேண்டும்.  அவர் உங்களுக்குச் செய்த தீமை நினைவிலேயே இருக்கக் கூடாது. மறந்திருக்க வேண்டும். 


எப்போதோ படித்த குறள். எளிமையான குறள். பல முறை நாமே கூட சொல்லி இருப்போம். 


எவ்வளவு ஆழமான அர்த்தம் இருக்கிறது அதற்குள். 


உயர்ந்த நூல்களை கற்றறிந்த அறிஞர் துணையோடு படிக்க வேண்டும். 




1 comment:

  1. குறளின் அர்த்தத்தை மனதில் பதியும் வண்ணம் அழகாக விளக்கி உள்ளீர்கள்.

    ReplyDelete