Tuesday, March 1, 2022

திருக்குறள் - செய்நன்றி மறவாமை

 திருக்குறள் - செய்நன்றி மறவாமை 


உலகில் எத்தனையோ கொடிய பாவங்கள் இருக்கின்றன.  நம்மால் மனதால் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகள் நடக்கின்றன. சொல்லவும், படிக்கவும், ,கேட்கவுமே மனம் நடுங்கும். இப்படியுமா மிருக குணம் மனிதர்களிடம் இருக்கும் என்று மனம் பதைக்கும்.


அவற்றைப் பற்றி எல்லாம் நாளும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. அவற்றை சொல்லாமல் விடுவதே நலம்.


அப்படிப்பட்ட கொடுமைகளில் மிகப் பெரிய கொடுமை எது தெரியுமா?  


செய் நன்றி மறப்பது தான் என்கிறது வள்ளுவம். 


ஆச்சரியமாக இருக்கும். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, காட்டிக் கொடுத்தல், உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல், அடுத்து கெடுதல் என்று ஆயிரம் பாவங்கள் இருக்க, செய் நன்றி மறப்பதை மிகப் பெரிய பாவமாக ஏன் சொல்ல வேண்டும்?


இந்த பாவத்துக்கும் ஒரு பிரயாசித்தம் உண்டு. கழுவாய் உண்டு. பாவ விமோசனம் உண்டு. ஆனால், செய் நன்றி மறந்த பாவத்துக்கு பிரயாசித்தமே கிடையாது என்கிறார் வள்ளுவர். 


எந்த கங்கையில் மூழ்கினாலும், எந்த கோவிலுக்குப் போனாலும், என்ன தான தர்மம் செய்தாலும், செய் நன்றி கொன்ற பாவம் மட்டும் போகவே போகாது என்கிறார்.


அப்படி என்ன பெரிய பாவம் அது?


யோசித்துப் பார்ப்போம். 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post.html


(Pl click the above link to continue reading)



செய்நன்றி முதலில் பெற்றோரிடம் ஆரம்பிக்கிறது. நல்ல பெற்றோர்.  அப்படிப்பட்ட பெற்றோர் செய்த உதவியை மறப்பது. 


அடுத்தது, ஆசிரியர். அறிவுக் கண்ணை திறந்து வைத்த ஆசான். அவர் செய்த நன்றியை மறப்பது. 


அடுத்தது, உடன் பிறப்பு, நட்பு, உறவு ...அவர்கள் செய்த உதவியை மறப்பது.


அடுத்து, நோய் தீர்த்த மருத்துவன், உணவு செய்து கொடுத்த விவசாயி, உயிரை பணயம் வைத்து நம்மை காக்கும் படை வீரன், அவர்கள் செய்த நன்றியை மறப்பது. 


அடுத்து, வீட்டு வேலைக்காரன், வண்டி ஓட்டுபவன், வீட்டு காவல் காரன்....


சொல்லிக் கொண்டே போகலாம். எவ்வளவு பேர் நமக்கு நன்மை செய்கிறார்கள்?


swtich ஐ தட்டினால் காற்று வருகிறது, தொலைக் காட்சி வருகிறது, குளிர்ந்த காற்று வருகிறது, குளிக்க சூடான நீர் வருகிறது. எப்படி? எவ்வளவு பேரின் உழைப்பு அதன் பின்னால் இருக்கிறது. 


நான் எழுதுவதை நீங்கள் படிக்க எவ்வளவு பேரின் உதவி வேண்டும். 


நன்றியோடு இருப்பது என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் நன்றியோடு தான் இருக்க வேண்டும். ஒரு கணம் கூட நன்றி மறக்க முடியாது. 


இவ்வளவு நன்மையை பெற்ற ஒருவன், அவற்றை மறப்பான் என்றால், அவன் மனம் எவ்வளவு வறண்டு இருக்கும். அவன் வேறு என்ன கொடுமை செய்ய மாட்டான் ? 


ஏனைய குற்றங்கள் ஒருவன் மற்றவருக்கு செய்வது என்ற அளவில் நிற்கும். 


நன்றி மறப்பது என்பது ஒருவன் ஒரு சமுதாயத்துக்கு செய்யும் குற்றம், ஒரு நாட்டுக்கு செய்யும் குற்றம், மனித குலத்துக்கே செய்யும் குற்றம். 


எப்படி எப்படியோ சிதறிக் கிடந்த புராணங்களை, வேத பாடங்களை தொகுத்துத் தந்தார் வியாசர். நன்றி வேண்டாமா?


பிரபந்தத்தை, தேவார திருவாசகத்தை தொகுத்தவர்கள் பால் நன்றி வேண்டாமா?


தடுப்பூசி கண்டு பிடித்தவர்கள், நோய் தீர்க்கும் மருந்தை கண்டு பிடித்தவர்கள் என்று எவ்வளவு பேருக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும். 


ஒவ்வொருவரின் இதயம் முழுவதும் நன்றியால் நிறைந்தால், உலகம் எவ்வளவு இனிமையாக இருக்கும். தவறுகள் நடக்குமா? தவறு செய்யும் எண்ணம் கூட வராது. 


தனி மனிதன் சிறக்க, குடும்பம் சிறக்க, சமுதாயம், நாடு சிறக்க நன்றி மறவாமை வேண்டும். 


பெரிய அறம். 


இந்த அதிகாரத்தில் வள்ளுவர் சொல்லும் விடயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. 


அவற்றை நாளை முதல் சிந்திக்க இருக்கிறோம். 



No comments:

Post a Comment