Tuesday, March 22, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - உய்வில்லை

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - உய்வில்லை 


செய்நன்றி அறிதலின் முக்கியம், அதன் இம்மை மறுமை பயன்கள், அதை எப்படிச் செய்வது என்றெல்லாம் சொல்லித் தந்தார்.


இனி, கடைசிக் குறள்.


இந்த செய்நன்றி மறந்தால் என்ன ஆகும். எனக்கு ஒருவர் செய்த நன்றியை மறந்தால் அது ஒண்ணும் சட்டப்படி குற்றம் இல்லையே? அதற்காக தண்டனை ஒன்றும் தர முடியாதே. அப்படி என்றால் எதற்கு இவ்வளவு துன்பப் படவேண்டும்? 


ஏதோ அவரால முடிந்தது செய்தார். முடியலேனா செய்யவா போறார் என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு போக வேண்டியது தானே? 


அப்படி அல்ல.


எந்த பாவத்தைச் செய்தாலும் அதற்கு ஒரு கழுவாய், பிரயாசித்தம் உண்டு. ஆனால், ஒருவர் செய்த நன்றியை மறந்தவருக்கு எந்தக் காலத்திலும் பிர்யாசித்தமே கிடையாது என்கிறது வள்ளுவம். 



பாடல் 


எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_22.html


(Please click the above link to continue reading)



எந்நன்றி  = எந்தப் பெரிய அறத்தை 


கொன்றார்க்கும் = சிதைதவர்களுக்கும் 


உய்வுண்டாம் = பிரயாசித்தம் உண்டு 


உய்வில்லை = தப்பிக்க வழியே இல்லை 


செய்ந்நன்றி = ஒருவர் பெற்ற உதவியை 


கொன்ற மகற்கு = சிதைத்தவனுக்கு 


இதில் பரிமேலழகர் மிக நுட்பமாக உரை செய்கிறார். 


"எந்நன்றி" என்ற சொல்லுக்கு பெரிய அறங்கள் என்று சொல்கிறார். நன்றி என்ற சொல்லுக்கு அறம் என்று பொருள் கொள்கிறார். எவ்வளவு பெரிய அறம் பிழைத்த காரியங்களை செய்தாலும், அதாவது எவ்வளவு பெரிய பாவத்தை செய்தாலும் என்று பொருள் சொல்கிறார். 


"செய் நன்றி கொன்ற மகற்கு" என்ற இடத்தில் ஒருவன் செய்த நன்றியை சிதைத்த மகனுக்கு என்கிறார். மறத்தல் என்ற பொருளில் கூறவில்லை. 



மறப்பது பெரிய குற்றம் இல்லை. ஆனால், நமக்கு உதவி செய்தவனுக்கு தீமை செய்யலாமா? அது பெரிய குற்றம் இல்லையா? யார் நமக்கு உதவி செய்தார்கள், யார் செய்யவில்லை என்று எப்படித் தெரியும்? அவர்கள் செய்த உதவியை மறவாமல் மனதில் நிறுத்தி வைத்து இருந்தால் அல்லவா அவர்களுக்கு தீமை செய்யாமல் இருக்க முடியும்? எனவே, செய் நன்றி மறக்கக் கூடாது. 


மற்றவர்களுக்கு தீமை செய்யலாமா என்றால் அதுவும் கூடாது. ஒருவேளை செய்து விட்டால், அதற்கு ஒரு பிரயாசித்தம் உண்டு. உதவி செய்தவனுக்கு தீமை செய்தால் பிரயாசித்தமே கிடையாது. 


ஏன் அப்படிச் சொன்னார்?


ஒருவற்கு ஒருவர் செய்த நன்றியை மறந்து செயல்படத் தொடங்கினால், சமுதாயமே ஒரு காட்டு மிராண்டி கும்பலாகி விடும். ஒரு சமுதாயப் பிடிப்பு இருக்காது. நட்பு, உறவு என்பதெல்லாம் இல்லாமல் போகும். மற்றவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனையே அந்த சமுதாயத்தில் இருக்காது. வாழ்கை நரகமாகி விடும். 


மாறாக, ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து, அப்படி உதவி பெற்றுக் கொண்டவர் அதை வாழ்நாள் எல்லாம் நினைவில் நிறுத்தி நன்றி உடையவராக இருந்தால், அந்த சமுதாயம் எப்படி இருக்கும் ? அது ஒரு உன்னத சமுதாயமாக இருக்கும் அல்லவா?


எனவே செய் நன்றியை ஒருபோதும் மறக்கக் கூடாது. 


No comments:

Post a Comment