Friday, March 11, 2022

திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன் தெரிவார்

 திருக்குறள் - செய்நன்றி அறிதல் - பயன் தெரிவார் 


செய்யாமல் செய்த உதவி 

காலத்தினால்  செய்த உதவி 

பயன் தூக்கார் செய்த உதவி 


என்று உதவியின் உயர்வு பற்றி கூறினார். .


அடுத்ததாக உதவி பெற்றுக் கொள்பவர் பற்றி கூறுகிறார். .


ஒரு உதவி பெற்றுக் கொண்டவன் அதை எப்படி நினைக்க வேண்டும் ?


ஒரு விதை இருக்கிறது என்றால், அது விதை மட்டும் அல்ல..அதனுள் பெரிய மரம் இருக்கிறது, அந்த மரத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பழங்கள் வரும். அந்த பழங்களில் விதை இருக்கும். அந்த விதைகளில் இருந்து பல மரங்கள் வரும் என்று எவ்வளவு இருக்கிறது. 


ஒரு விதை என்றால், விதை என்று மட்டும் பார்க்கக் கூடாது. 


சிறு வயதில் எனக்கு என் ஆசிரியர்கள் எழுத்துச் சொல்லித் தந்தார்கள். அதன் பலன் என்ன? அதனால் மேலும் படித்து, வேலைக்குப் போய், நிறைய பொருள் ஈட்ட முடிந்தது. அ ஆ சொல்லிக் கொடுத்தார் என்று சொல்லக் கூடாது. எனக்கு இத்தனை வசதியும் அவர் கொடுத்தார் என்று நினைக்க வேண்டும். 


எனக்கு மட்டும் அல்ல, நான் பொருள் ஈட்ட முடிந்ததால் என் பிள்ளைகளை உயர் கல்விக்கு அயல் நாட்டுக்கு அனுப்ப முடிந்தது. அது எப்படி முடிந்தது? ஆரம்பப் பள்ளியில் அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்த அ ஆ, ஒன்று இரண்டு போன்றவற்றில் இருந்து. 


இப்படி ஒவ்வொரு உதவியையும் அந்த உதவியை மட்டும் வைத்துப் பார்க்கக் கூடாது. அதனால் விளையும் பயன்களை எண்ணிப் பார்க்க வேண்டும். 


அடி பட்டு இரதம் சிந்திக் கொண்டு இருந்த போது,ஒரு பத்து சென்டிமீட்டர் நீளம் உள்ள நூலால் தையல் போட்டார் என்று சொல்லக் கூடாது. அந்தத் தையலால் இரத்தம் செல்வது நின்று, உயிர் பிழைத்தது அல்லவா அதை நினைக்க வேண்டும். 


கண்ணன் ஆற்றில் குளிக்கும் போது அவன் உடை தண்ணீரில் போய் விட்டது. வெளியே வர முடியாமல் தவித்தான். பாஞ்சாலி தன் சேலையில் ஓரத்தில் கொஞ்சம் கிழித்து அவன்பால் தூக்கி எறிந்தாள். அது ஒரு முழ துணி அல்ல. அவனின் மானம். 


அதைத்தான் வள்ளுவர் சொல்கிறார். 


"திணை அளவு நன்றி செய்தாலும் அதை பனை அளவாகக் கொள்வர் பயன் தெரிவார்" என்று. 


பாடல் 


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2022/03/blog-post_11.html


(pl click the above link to continue reading)



தினைத்துணை = திணை அளவு 


நன்றி செயினும் = நன்றி செய்யினும் 


பனைத்துணையாக் = அதை பனை அளவாகக் 


கொள்வர் = நினைத்துக் கொள்வர் 


 பயன்தெரி வார் = அதன் பயன் தெரிந்தவர்கள் 


இதில் திணை, பனை என்பது அளவு குறித்து நின்றது என்கிறார் பரிமேலழகர். 


நான் சற்று வேறு விதமாக சிந்திக்கிறேன். தவறாகவும் இருக்கலாம். 


திணை அளவு உதவிக்குள் பனை அளவு பயன் இருப்பது அதை பெற்றுக் கொள்ளும் போது பெரும்பாலும் தெரியாது. 


உதவி பெற்றுக் கொள்ளும் போது திணை அளவு தான் தெரியும். 


எனக்கு பாடம் சொல்லித் தந்த போது, அதனால் இவ்வளவு பயன் விளையப் போகிறது என்று அப்போது தெரியவில்லை. 


அது சிறு வயது. 


ஆனால், வயது முதிர முதிர, அனுபவம் கூடும் போது, ஒவ்வொரு உதவியின் பின்னாலும் எவ்வளவு பலன் என்று அறிந்து கொள்ளும் பக்குவம் வர வேண்டும். 


உதவியின் பலனை அறிந்து கொண்டால் அந்த உதவியின் அளவு எவ்வளவு பெரியது என்று தெரியும். 


ஒவ்வொரு நன்மையின் பின்னாலும் மிகப் பெரிய பலன் இருக்கிறது என்று தெரிந்தால் நாம் ஒருவருக்கு ஒருவர் எவ்வளவு நன்றிக் கடன் பட்டு இருக்கிறோம் என்று தெரிய வரும். 


ஒட்டு மொத்த சமுதாயமும் நன்றிக் கடனில் நெகிழ்ந்து நிற்கும். 


இப்போது புரிகிறதா, செய் நன்றி மறந்தால் ஏன் பிரயாசித்தம் இல்லை என்று. 


அது மிகப் பெரிய கடன். அவ்வளவு பெரிய கடனை வாங்கிவிட்டு இல்லை என்று மறந்தால் எப்படி?


ஒரே ஒரு வார்த்தை "பயன்" தெரிவார் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டார். 


உயிரை உருக்கி பெற்று எடுத்து வளர்த்த தாய், ஒவ்வொரு நாளும் பாடுபட்டு உழைத்து காப்பாற்றும் தந்தை, எல்லாவற்றையும் விட்டு விட்டு வந்து நிற்கும் மனைவி, என்ன ஆனாலும் உன்னைக் காப்பேன் என்ற கணவன், தேவைப் பட்ட காலத்தில் கை நீட்டும் உடன் பிறப்புகள், உயிர் காக்கும் தோழன்...


பயன் தெரிந்து கொள்ள வேண்டும். 




No comments:

Post a Comment