Tuesday, July 30, 2013

பிரபந்தம் - நீதி அல்லாதன செய்தாய்

பிரபந்தம் - நீதி அல்லாதன செய்தாய் 


நாம் ஏதேனும் ஒரு பொருளை இழந்து விட்டால் ரொம்ப துக்கப் படுவோம். அதுவும் இழந்தது உயிர் என்றால் இன்னும் துக்கம் அதிகமாகும்.

எது இழப்பு ? நாம் வரும்போது ஏதாவது கொண்டு வந்தோமா ? கொண்டு வந்ததை இழப்பதற்கு ? வெறும் கையோடு  வந்தோம்....வெறும் கையோடு போகப் போகிறோம். நடுவில் வந்தது கொஞ்சம். போனது கொஞ்சம்.

நமது சமயப் பெரியவர்கள் இறைவனின் வேலைகள் என்று சொல்லும்போது ....படைத்தல், காத்தல், மறைத்தல், அருளுதல், அழித்தல் என்று  சொல்கிறார்கள்.

மறைத்தல் என்றால் நம்மிடம் இருந்ததை எடுத்து மறைத்து வைத்து விடுவது.

பொருள் அழிவது இல்லை...நம் கண்ணில் இருந்து மறைந்து விடுகிறது.

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நற் றில்லை சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய்

என்பார் மணிவாசகர். கரத்தல் மறைத்தல்.

நாச்சியார் திருமொழியில் ஆண்டாள்  பாடுகிறாள்.

பெண்கள் எல்லோரும் குளிக்க குளத்தில் இறங்கி இருக்கிறார்கள். கண்ணன் அவர்கள் உடைகளை எடுத்துக் கொண்டான். வெளியே வர முடியவில்லை. வேண்டும் என்றால் ஊருக்குள் போய்  சொல்லிக் கொள்ளுங்கள் என்கிறான் கண்ணன். எப்படி வெளியே போவது ? கண்ணா எங்கள் உடையைக் கொடு. நீ எங்கள் உடையை எடுத்துக் கொண்டாலும், உன் மேல் உள்ள ஆர்வம் குறையாது எங்களுக்கு என்று கெஞ்சுகிறாள், கொஞ்சுகிறாள் கோதை.

அவன் தந்தான்.

அவன் எடுத்து மறைத்து வைத்துக் கொண்டான்.

அவன் தருவான்.

இது சேலையை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளும் சிற்றின்ப விளையாட்டு அல்ல. வாழ்க்கையை விளக்கும் தத்துவம். கொண்டு வந்ததும் இல்லை. கொண்டு போகப்  .போவதும் இல்லை. எல்லாம் ஒரு விளையாட்டுதான்.

பாடல்


நீரிலே நின்று அயர்க்கின்றோம்,
நீதி அல்லாதன செய்தாய்,
ஊர் அகம் சாலவும் சேய்த்துஆல்.
ஊழி எல்லாம் உணர்வானே!
ஆர்வம் உனக்கே உடையோம்
அம்மனைமார் காணில் ஒட்டார்
போரவிடாய் எங்கள் பட்டைப்
பூங்குருத்து ஏறி இராதே


பொருள்


நீரிலே நின்று அயர்க்கின்றோம் = குளத்திலே நின்று சோர்வடைகிறோம்

நீதி அல்லாதன செய்தாய் = நீதி இல்லாதவற்றை செய்தாய்

ஊர் அகம் = ஊருக்குள் உள்ள வீடு

சாலவும் சேய்த்துஆல். = ரொம்பவும் தூரத்தில் இருக்கிறது

ஊழி எல்லாம் உணர்வானே! = ஊழிக் காலம் வரை எல்லாம் அறிந்தவனே

ஆர்வம் உனக்கே உடையோம் = உன்மேல் மட்டுமே ஆர்வம் உடையோம். ஆர்வம் என்பது அருமையான சொல். தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம், ஆசை. curiosity என்று சொல்லுவார்களே. ஒன்றை முழுவதுமாக அறிந்து விட்டால் ஆர்வம் போய்  விடும்.இறைவனை என்றுமே முற்றும் அறிய முடியாது என்பதால் "ஆர்வம் உடையோம்"


அம்மனைமார் காணில் ஒட்டார் = எங்க அம்மாக்கள் பார்த்தால் எங்களை உள்ளே சேர்க்க மாட்டார்கள்

போரவிடாய் எங்கள் பட்டைப் = எங்கள் துணிகளை எங்களிடம் கொடுத்து விடு

பூங்குருத்து ஏறி இராதே = பூ மரத்தின் மேல் ஏறி நிற்காதே.

தின்ன பழம் கொண்டு தருவான்
பாதி தின்கின்ற போதில் தட்டிப் பறிப்பான்


என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பாடலும் சொல்லுவது இதைத்தான். தருவான், அவனே எடுத்துக் கொள்வான்.

நாம் இழக்க இங்கு ஒன்றும் இல்லை. அவன் தந்தான். அவன் கொண்டான். அவன் தருவான் என்று இருங்கள்.




இராமாயணம் - ஆசைக் கடல் , அன்பு அலை

இராமாயணம் - ஆசைக் கடல் , அன்பு அலை 




வெற்பிடை மதம் என வெயர்க்கும் மேனியன்,
அற்பின் நல் திரை புரள் ஆசை வேலையன்,
பொற்பினுக்கு அணியினை, புகழின் சேக்கையை,
கற்பினுக்கு அரசியை, கண்ணின் நோக்கினான்.

சீதையை  முதன் முதலாகப் பார்க்கிறான் இராவணன்.

காட்டில், குடிசையில், தனிமையில்.

மலை போல் பெரிய கரிய யானைக்கு மத நீர் சுரக்கும். அது போல இராவணனுக்கு ஆறாக வியர்க்கிறது.

சீதை மேல் ஆசை கடல் அலை போல புரள்கிறது. ஒன்றை அடுத்து ஒன்றாக அலை அலையாக வருகிறது.

எல்லோரும் அழகாய் இருக்க அணிகலன்  அணிவார்கள். ஆனால் சீதையோ அந்த அழகுக்கு அணிகலனாய் இருக்கிறாள். எல்லா புகழும் ஒன்றாய் கொண்டவளை, கற்பினுக்கு அரசியை கண்ணால் கண்டான்.

எல்லோரும் கண்ணாலதான் காண்பார்கள். அது என்ன கண்ணால் கண்டான் ?

இது வரை மனதால் கண்டான். சூர்பனகை சொன்ன குறிப்புகளை வைத்து சீதை இப்படித்தான்  இருப்பாள் என்று மனதில் ஒரு வடிவம் வரைந்து வைத்து இருந்தான்.

இப்போது நேரில் நிற்கிறாள். அவளைக் கண்ணால் கண்டான்.

பொருள்

வெற்பிடை = வெற்பு என்றால் மலை. மலை போன்ற யானைகளிடம்

மதம் என = அதிகமாக சுரக்கும் மதன நீர் போல

வெயர்க்கும் மேனியன் = வியர்வை பொங்கும் மேனியன்

அற்பின் = அன்பினால்

நல் திரை  = நல்ல அலை

புரள் = புரண்டு புரண்டு வரும்

ஆசை வேலையன் = ஆசையைக்  கடல் போல் கொண்டவன் (வேலை என்றால்  கடல்). ஆசை எனும் கடல், அதில் அன்பு எனும் அலை....கடல் தனது அலை எனும் கரங்களால் தொட முயல்வது போல

பொற்பினுக்கு அணியினை = அழகுக்கு அணியினை

புகழின் சேக்கையை = புகழின் தொகுப்பை

கற்பினுக்கு அரசியை = கற்புக்கு அரசியை

கண்ணின் நோக்கினான் = கண்ணால் கண்டான். முதன் முதலாக கண்ணால் கண்டான். 



Monday, July 29, 2013

பிரபந்தம் - காதல் அன்றி வேறெதுவும் இல்லை

பிரபந்தம் - காதல் அன்றி வேறெதுவும் இல்லை 


உலகம் முழுதும் காதல் அன்றி  வேறில்லை. அன்புதான்,காதல்தான் எங்கும் பொங்கி வழிந்து  கொண்டிருக்கிறது.

இங்கே அன்பின்றி வேறொன்றும் இல்லை.

அன்பே சிவம்.

பூதத்தாழ்வார் திருவேங்கிட மலைக்குப்  போகிறார்.  போகிற வழியில் ஒரு ஆண் யானையும் பெண் யானையும் காதல் வயப்பட்டு  நிற்கின்றன.

ஆண்  யானை, பெண் யானை மேல் காதல் கொண்டு அருகில் இருந்த மூங்கில் மரத்தில் இருந்து மூங்கிலை முறித்து,  அதை அப்படியே உண்டால் சுவைக்காது என்று, அருகில் உள்ள தேன் அடையில் அதை நனைத்து பெண் யானைக்கு ஊட்டுகிறது. வானின்  நிறம் கொண்ட திருமாலின் மலை அப்படிப் பட்டது.

நாவுக்கரசரும் இதைப்  பற்றி சொல்லி இருக்கிறார்....


காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

ஆண்  யானையும் பெண் யானையும் ஒன்றாக வருவதைப் பார்த்தேன், அவனுடைய பாதங்களைப் பார்த்தேன், இதுவரை காணாத ஒன்றை கண்டேன்  என்கிறார்.

காதல் ஏன் இவ்வளவு பெரிய விஷயமாக  இருக்கிறது ? இதை ஏன் பூதத்தாழ்வார் பெரிதாக  சொல்கிறார் ?

இறை அனுபவத்திற்கு முந்தைய அனுபவம் காதல் அனுபவம்.

நான் என்பது அற்றுப் போகும் அனுபவம்.

நான் என்பது கரைந்து, ஆனந்தமான ஒரு புள்ளியில் நிறுத்தும் அனுபவம் காதல் அனுபவம்.

 நாயகன் நாயகி பாவம் பக்தி இலக்கியத்தில் எங்கும் காணக் கிடைக்கிறது. அது ஏதோ சிற்றன்ப உணர்சிகளை தூண்ட எழுதப் எழுதப் பட்டவை அல்ல.

ஆண்  பெண் கலந்த அந்த உணர்ச்சி இறை சன்னிதானத்திற்கு இட்டுச்    செல்லும்.

போகத்தின் உச்சியில் யோகம் பிறக்கும்.

உடலின்பத்தை மறக்கவோ மறுக்கவோ  முடியாது.ஆனால் அதைத் தாண்டி போக  முடியும்.

பாடல்


பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இளமூங்கில் வாங்கி, அருகு இருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை


பொருள்


திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ?

திருவாசகம் - நாம் யார் ? நம்முடையது எது ? 




தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார்
என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப்
புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே.

நான் என்பது என்ன ? என் உடலா ? அதில் உள்ள ஞாபகங்களா ? என் அறிவா ? என் அறிவீனமா ? 

நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் இந்த வாழ்க்கையில்  - எது என்னை செலுத்துகிறது ? எதற்க்காக நான் காரியங்களை செய்கிறேன் ? எந்த விதிகளை நான் கடை பிடிக்கிறேன் ?

எனக்கு சொந்தமானது எவை ? நான் சம்பாதித்த பொருள்களா ? என் மனைவி, மக்களா ? என் நண்பர்களா ? என் உறவினர்களா ? எது எனது ?

இவற்றிற்கு எல்லாம் ஒரு விடை உங்களுக்கு கிடைக்கலாம். 

அந்த விடைகளை காலம் மாற்றிப் போடும். உங்களது என்று நீங்கள் நினைத்தவை உங்களதாக இல்லாமல் போகலாம். உங்கள் பிள்ளைகள் உங்களை விட்டு அவர்கள் வாழ்க்கையில் போய்  கொண்டிருக்கலாம். 

உங்கள் விடைகள் எல்லாம் ஒரு மாயையே. இன்றிருப்பது நாளை மாறலாம். மாறும். 

இறைவனின் குறிப்பை அறிந்து, அவன் தொண்டரோடு சேர்ந்து , பொய்யானவை எல்லாம் நீங்கி அவன் திருவடி சேரப் பாருங்கள் என்கிறார் மணிவாசகர். 

பொருள் 


தாமே தமக்குச் சுற்றமுந் = நமக்கு நாமே சொந்தக் காரர்கள். வேறு யாரும் நமக்கு கிடையாது

தாமே தமக்கு விதிவகையும் = நம் வாழ்க்கையை செலுத்தும் விதிவகைகளை நிர்ணயிப்பதும் நாம் தான். வேறு யாரும் அல்ல.


யாமார் = யாம் யார் ? நாம யார் ?

எமதார் = என்னுடையது எது ?

பாசமார் = பாசம் என்பது என்ன ?

என்ன மாயம் = இது எல்லாம் என்ன மாயம்

இவைபோகக் = இவை எல்லாம் போக

கோமான் = கோமகன், அரசன்

பண்டைத் தொண்டரொடும் = பழைய தொண்டர்களோடும்

அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு = அவனுடைய குறிப்பே இலக்காகக் கொண்டு

போமா றமைமின் = போகும்படி அமையுங்கள்

பொய்நீக்கிப் = பொய் நீங்கி

புயங்கன் = பாம்பை தோளில் சுமந்தவன்

ஆள்வான் பொன்னடிக்கே. = எல்லோரையும் ஆள்பவன் பொன் போன்ற பாதங்களுக்கே


அங்க போறத விட்டுட்டு எங்கெங்கேயோ சுத்திக்  கொண்டு இருகிறீர்கள் என்கிறார் மணிவாசகர் 

இராமாயணம் - எழுதல் ஆகலாச் சுந்தரன்

இராமாயணம் - எழுதல் ஆகலாச் சுந்தரன் 


வந்த இராவணனை அமரச் சொன்னாள் சீதை. இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் யார், இங்கே என்ன செய்கிறீர்கள் என்று சீதை கேட்கிறாள்.

சந்நியாசி வேடத்தில் இருக்கும் இராவணன் சொல்கிறான்...."நான் இராவணன் வாழும் இலங்கையில் இருந்து வருகிறேன். அந்த இராவணன் எப்படி பட்டவன் தெரியுமா " என்று அவனே அவன் பெருமை பற்றி பேசுகிறான்.....

பாடல்

இந்திரற்கு இந்திரன்; எழுதல் ஆகலாச்
சுந்தரன்; நான்முகன் மரபில் தோன்றினான்;
அந்தரத்தோடும் எவ் உலகும் ஆள்கின்றான்;
மந்திரத்து அரு மறை வைகும் நாவினான். 


பொருள்


திருக்குறள் - அளவுக்கு மீறினால்

திருக்குறள் - அளவுக்கு மீறினால் 


பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.

மயில் தோகையே (மயில் பீலி) ஆனாலும் அளவுக்கு மீறி ஒரு வண்டியில் ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து விடும்.

இது என்னங்க குறள்  ? ரொம்ப லோடு ஏத்தினா வண்டியோட அக்சில் (axil ) உடையும்னு சொல்றதுக்கு வள்ளுவர் வேணுமா ? இது யாருக்குத்தான் தெரியாது என்று நாம் நினைப்போம்.

வள்ளுவரை அவ்வளவு எளிதாக எடை (!) போட்டு விடாதீர்கள்.

நம்ம வாழ்க்கையில நமக்கு எரிச்சலும் கோபமும் வருவது இயற்கை. அந்த சமயத்தில் ஏதாவது சொல்லி விடுவோம். நல்லவர்களையும் பகைத்துக் கொள்வோம். பின்னாடி யோச்க்கும் போது , "ஆமா, அவனோட நட்பு / உறவு இல்லாட்டி என்ன ஆகி விடும்....போனா போறான்..." என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொள்வோம்.

இப்படி கொஞ்ச கொஞ்சமாய் எல்லோரையும் பகைத்துக் கொண்டாள், ஒரு நாள் அது நம் வாழ்க்கை என்ற தேரின் அச்சையே முறித்து விடும்.

சின்ன பகைதானே, என்று அலட்சியாமாக இருக்கக் கூடாது. சின்ன சின்ன பகைகள்  சேர்ந்துவிடும் ஒருநாள்.

அது போலத்தான் சின்ன சின்ன கெட்ட பழக்கங்கள்....

ஒரு சிகரெட் தானே, ஒரு நாளைக்கு இரண்டு கப் காப்பிதானே, வாரம் ஒரு ஐஸ் கிரீம் தானே, மத்தியானம் ஒரு மணிநேர தூக்கம் தானே என்று ஆரம்பிக்கும் சின்ன பழக்கங்கள் நாளடைவில் நம்மை கெடுக்கும்.


பல கெட்ட பழக்கங்கள் ஒன்று சேரும்போது அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். ஒவ்வொரு மயில் இறகும் மென்மையானது தான். ஆனால், மொத்தமாக சேரும்போது வண்டியையே முறிக்கும்.

அது போல பல கெட்ட குணங்கள் சேர்ந்து வாழ்கையை முறிக்கும்.

ஒரே ஒரு கெட்ட  பழக்கம் தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.


 


Sunday, July 28, 2013

திருக்குறள் - வானம் ரொம்பத் தூரம் தூரம் இல்லை

திருக்குறள் -  வானம் ரொம்பத் தூரம் தூரம் இல்லை  


ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து.

சந்தேகம் இல்லாத   மனிதன் உண்டா உலகில் ?

யாருக்குத்தான் சந்தேகம்  இல்லை ? எதில்தான் இல்லை ?

இறைவன் இருக்கிறானா இல்லையா ? இந்த உலகைப்     யார் படைத்தது யார் ? 

மறு பிறப்பு  உண்டா ? பாவ புண்ணியம் என்று ஒன்று உண்டா ?

சுவர்க்கம் நரகம்  உண்டா ?

இப்படி    ஆயிரம் சந்தேகம் நம்மை நாளும் வாட்டிக்கொண்டே இருக்கின்றன.

இந்த சந்தேகங்களில் இருந்து எப்படி தெளிவு பெறுவது ?

யாரைக் கேட்டால்  இந்த சந்தேகங்கள் தீரும் ? எதைப்  படித்தால் இந்த சந்தேகங்கள் போகும் ?

இப்படி சந்தேகம் நீங்கி தெளிவு  பெற்றவருக்கு அந்த வானகம் இந்த பூமியை விட   பக்கத்திலேயே இருக்கும்.

ஐயம் நீங்கினால் மட்டும்  போதாது , தெளிவும் பிறக்க வேண்டும்.


பாடல்    

ஐயத்தின் = சந்தேகத்தின் 

 நீங்கித் தெளிந்தார்க்கு = அதை விட்டு நீங்கி, தெளிவு அடைந்தவர்களுக்கு 

 வையத்தின் வானம் = வையத்தை விட வானம் 

 நணிய துடைத்து. = நணிய   என்றால் அருகில் . நணியதுடைத்து  என்றால் அருகில்   வந்தது, இருக்கும், என்று. பொருள் நணிய  என்ற சொல்லில் இருந்து வந்தது நண்பன். 

அவர்கள் இந்த மண்ணிலேயே சொர்கத்தை காண்பார்கள் என்று பொருள். 

சந்தேகத்தை தீருங்கள். தெளிவு பெறுங்கள். வானம்  உங்கள் வசப்படும். 

 வள்ளுவர் கூறுகிறார் அப்படி சிலர் தெளிவு பெற்று இருக்கிறார்கள் என்று.

உங்களுக்கும் அந்த தெளிவு பிறக்கட்டும்.

ஒவ்வொரு நாளும் தெளிவை நோக்கி நீங்கள்  முன்னேறுகிரீர்ளா என்று யோசியுங்கள்.



இராமாயணம் - சோகமே இப்படி என்றால்....

இராமாயணம் -  சோகமே இப்படி என்றால்....


இராவணன் பார்க்கிறான்  ஜானகியை.

 அவள் முகத்தில் ஏதோ ஒரு சோகம். இராமனுக்கு என்ன ஆச்சோ என்ற கவலை. அந்த சோகத்திலும் அவள் முகம் ஒளி  விடுகிறது. இந்த சோகத்திலும் இவள் முகம் இவ்வளவு ஒளி விடுகிறது என்றால் இவள் சந்தோஷமாய் இருந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என்று சிந்திக்கிறான் இராவணன்.

சீதை, தலை முடியை வாரி முடியவில்லை. அப்படியே விட்டிருக்கிறாள். அது காற்றில் அலை  பாய்கிறது.

அலை பாய்ந்தது அவள் குழல் மட்டுமல்ல, இராவணனின் மனமும்  தான்.

இராவணன் மனதுக்குள்  நினைக்கிறான்...இலங்கைக்கு போனவுடன், இப்படி ஒரு பெண்ணை எனக்கு  காண வழி செய்த என் தங்கைக்கு (சூர்பனகைக்கு) என் இருபது மகுடத்தையும் உருக்கி ஒரே மகுடமாக செய்து அவள் தலையில் வைக்க வேண்டும்...அவளுக்கு முடி சூட்ட வேண்டும் ...

பாடல்

உளைவுறு துயர் முகத்து ஒளி இது ஆம் எனின்,
முளை எயிறு இலங்கிடும் முறுவல் என்படும்?
தளை அவிழ் குழல் இவட் கண்டு தந்த என்
இளையவட்கு அளிப்பென், என் அரசு' என்று எண்ணினான். 


பொருள்


Saturday, July 27, 2013

சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள்

இராமாயணம் - இராவணின் துன்பம் 



சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் 
மேயவள் மணி நிற மேனி காணுதற்கு 
ஏயுமே இருபது? இங்கு இமைப்பு இல் நாட்டங்கள் 
ஆயிரம் இல்லை ! ” என்று அல்லல் எய்தினான்.


கபட சந்நியாசி வேடத்தில் வந்த இராவணன்  சீதை இருக்கும் இடம் தேடி வருகிறான்.

அவள் அழகைக் காண்கிறான்.

பிரமிக்கிறான். இப்படி ஒரு அழகா ? இப்படி ஒரு நிறமா ?

எவ்வளவோ தவம் செய்து என்னன்னவோ வரம் எல்லாம் வாங்கினோமே, ஆயிரம் கண் வேண்டும் என்று ஒரு வரமும் வாங்கி இருக்கலாமே. இந்த இருபது கண்கள் பத்தாதே இவள் அழகைக் காண என்று மனம் நொந்தான்.


சேயிதழ்த் = சிவந்த இதழ்களை கொண்ட

தாமரைச் = தாமரை மலரின்

சேக்கை = சேர்க்கை

தீர்ந்து = விடுத்து

இவண் மேயவள் = இங்கு வந்தவள் (அதாவது திருமகள் )

மணி நிற மேனி காணுதற்கு = மணி போல் ஒளி பொருந்திய இவள் உடலை காண்பதற்கு

ஏயுமே இருபது? = இருபது கண்கள் போதுமா ? (போதாது )

 இங்கு இமைப்பு இல் நாட்டங்கள்  = இமைக்காத கண்கள் . நாட்டம் என்றால் கண்.

ஆயிரம் இல்லை ! ” என்று அல்லல் எய்தினான் = ஆயிரம் இல்லையே என்று துன்பப் பட்டான்.


இது நேரடியான அர்த்தம். இப்படித்தான் பலரும் எழுதி இருக்கிறார்கள். நான் கொஞ்சம் வேறு  விதமாக யோசித்துப் பார்த்தேன்.

சேயிதழ்த் தாமரைச் சேக்கை தீர்ந்து இவண் மேயவள்

என்றால் என்ன ?

சிவந்த தாமரை மலரை விட்டு இங்கு வந்தவள்.

மற்றொரு சிந்தனை.

தாமரை மலரை விட்டு இங்கு இவளிடம் வந்தவை. அவை என்ன ?

தாமரை மலருக்கு உள்ள சிறப்பு அம்சங்கள் - சிவந்த நிறம், மேன்மை, குளிர்ச்சி, நறுமணம், சூரியனை கண்டதும் மலரும் இயல்பு...போன்றவை....

இந்த குணங்கள் எல்லாம் தாமரை மலரின் சேர்க்கையை விட்டு இங்கு வந்து விட்டன  (சீதையிடம்).

சீதை அன்றலர்ந்த தாமரை மலர் போல் சிவந்து இருக்கிறாள், குளிர்ந்து இருக்கிறாள், மென்மையாக இருக்கிறாள்.

மேலும், இராமன் என்ற சூரியன் தவிர வேறு யாருக்கும் மலராத கற்பின் கனலி அவள்.

சீதை தாமரை மலர் போல் இருக்கிறாள் என்று சொல்ல முடியாது ஏன் என்றால் தாமரையின்  குணங்கள் எல்லாம் சீதையிடம் வந்து விட்டது.

இனி அவள் தான் அவளுக்கு உதாரணம். தனக்கு உவமை இல்லாதவள்

இப்படியும் யோசிக்க இடம் இருக்கிறது. 

ஆயிரம் கண் இல்லையே என்று இராவணன் வருத்தப் பட்டான்.

அப்படி வருத்தப் பட்ட இன்னொருவர் இருக்கிறார். ஆயிரம் கண் அல்ல, நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே என்று வருந்தினார் அவர். 

அவர் யார் தெரியுமா ?




திருக்குறள் - உயர்வடைய

திருக்குறள் - உயர்வடைய 


வாழ்வில் உயர வேண்டும் என்று யார் தான் விரும்ப மாட்டார்கள் ? எப்படி வாழ்க்கையில்  உயர்வது.

வள்ளுவர் மிக மிக எளிமையான வழி ஒன்றைச் . சொல்லித் தருகிறார்.


அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு.

அழுக்காறு உள்ளவன் இடத்தில் ஆக்கம் இல்லாதது போல பொறாமை கொண்டவனிடம் உயர்வு இருக்காது.

அவ்வளவுதானா?

இல்லை இன்னும் கொஞ்சம் இருக்கு.

நாம்: ஐயா, ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு  சொல்றீங்களே...நிச்சயமா சொல்ல முடியுமா ?

வள்ளுவர்: நிச்சயமாக சொல்கிறேன்.

நாம்: எவ்வளவு நிச்சயம் ஐயா ?

வ:  பொறாமை உள்ளவனிடம் ஆக்கம் இருக்காது என்பது எவ்வளவு நிச்சயமோ  அவ்வளவு நிச்சயம் ஒழுக்கம் இல்லாதவனிடம் உயர்வு இருக்காது.

நாம்: அப்படி இரண்டு விஷயத்தை ஒரே குறளில் சொல்லிட்டீங்க. மிக்க நன்றி ஐயா.  அப்ப நாங்க வரட்டுமா.


வ: கொஞ்சம் இருங்க தம்பி....இன்னும் முடியல. இதுல இன்னொரு விஷயமும்  இருக்கு.

நாம்: அது என்னது ஐயா ?

வள்ளுவர்: ஒருவனுக்கு ஒழுக்கம் இல்லை என்றால், அது அவன் உயர்வை மட்டும் பாதிக்காது, அவன் குடும்பம், சுற்றம் என்று எல்லோரையும் பாதிக்கும்.

நாம்: அது எப்படி ஐயா ?

வள்ளுவர்: இப்ப ஒரு குடும்பப் பெண் கொஞ்சம் ஒழுக்கம் தவறி நடக்கிறாள் என்று வைத்துக் கொள்வோம் ...அது அவளை மட்டுமா பாதிக்கும் ? அவளுடைய பிள்ளைகள்,  அவளுடைய சகோதரான, சகோதரி, பெற்றோர் என்று எல்லோரையும் பாதிக்கும் அல்லவா ?

நாம்: ஆம் ஐயா....ஒரு பெண் ஒழுக்கம் தவறினால் அது அந்த குடும்பத்தையே பாதிக்கும்.

வள்ளுவர்: அதே போல ஒரு ஆண் ஒழுக்கம் தவறினாலும் அது குடும்பத்தையும்  அவன் சுற்றத்தாரையும் பாதிக்கும். ஒரு ஆண் கொலை செய்து விட்டான்,  திருடிவிட்டான் அல்லது வேறு ஏதேனும் ஒழுக்கக் குறைவான செயலை செய்து விட்டால் .... ஊரார் அவன் பிள்ளையை பார்க்கும் போது என்ன சொல்லுவார்கள் ? கொலை காரன் பிள்ளை , திருடன் பிள்ளை என்றுதானே உலகம் பேசும், ஏசும் ? அவன் பிள்ளைகளுக்கு யாராவது பெண் கொடுப்பார்களா ? அவன் வீட்டில் யாராவது பெண் எடுப்பார்களா ?

நாம்: சரிதான் ஐயா ஒருவன் ஒழுக்கம் தவறினால் அது அவன் குடும்பத்தையே  பாதிக்கும் என்பது சரிதான். ஆனால் அந்த அர்த்தம் இந்த குறளில் எங்கே  வருகிறது ?


வள்ளுவர்: நீ அழுக்காறு என்ற அதிகாரத்தில் உள்ள எல்லா குறளையும் படி. கொடுப்பது  அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுவும் உண்பதுவும் இன்றி கெடும் என்று சொல்லி இருக்கிறேன். அதாவது அழுக்காறு யாரிடம் இருக்கிறதோ, அவன் சுற்றத்தார்  உண்ண உணவும், உடுக்க துணியும் இல்லாமல் கஷ்டப் படுவார்கள்   என்று சொல்லி இருக்கிறேன்.

அப்படி பொறாமை கொண்டவனின் சுற்றமும் கஷ்டப்  படுவது போல,ஒழுக்கம் இல்லாதவனின்  சுற்றமும் உயர்வு இன்றி கஷ்டப்படும்.

 நன்றி ஐயா. 

Friday, July 26, 2013

இராமாயணம் - கண்ணின் மாலை

இராமாயணம் - கண்ணின் மாலை 


முதலிலேயே பாடலை சொல்லி விடுகிறேன். படியுங்கள். படித்து இன்புறுங்கள்.  நான் என்னதான் விளக்கம் எழுதினாலும் கம்பனின் பாடலுக்கு உறை போடக் காணாது என் உரை.


பாடல்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே

மயில் போல் இருக்கும் சீதையை காண்கிறான் இராவணன். அவன் கண்கள் அவள் அழகை இரசிக்கின்றன. நம்மை மாதிரி இரண்டு கண் அல்ல அவனுக்கு. இருபது கண்கள். இருபது கண்களும் கொள்ளாத அழகு.

அவன் கண்களுக்கு ஒரு மகிழ்ச்சி.

அவளை அங்கே பார்க்கிறான், இங்கே பார்க்கிறான், மேலே பார்க்கிறான், கீழே பார்க்கிறான்.

அந்த சந்தோஷத்தை வர்ணிக்க ஒரு உதாரணம் தேடினான் கம்பன்.

பெரிய சுனை. அதில் நிறைய பூக்கள். அந்த பூக்களில் நிறைய தேன் இருக்கிறது. அவற்றை கண்டால் தேனீக்களுக்கு எப்படி சந்தோஷம் இருக்குமோ அப்படி  அவன் கண்கள் சந்தோஷப் பட்டன என்றான்.

பூ போன்ற ஜானகி. தேன் நிறைந்த பூ போன்ற ஜானகி.

அந்த பூக்களை கண்டு சந்தோஷத்தில் ரீங்காரமிடும் கரிய வேண்டுகள் போல இராவணின்  கண்கள். 20 கண்கள். வண்டுகள் போல அங்கும் இங்கும் அலைகின்றன.

ஒரு பூவை விட்டு இன்னொரு பூவுக்கு தாவுவது போல சீதையின் ஒரு அழகை விட்டு இன்னொரு   தாவுகிறது அவன் கண்கள்.

பார்த்தான் கம்பன், நல்ல உவமைதான், ஆனால் அவன் கண்களில் உள்ள சந்தோசத்தைப் பார்த்தால் அந்தத் தேன் கண்ட வண்டுகளை விட    அதிகமான அதிகமான  சந்தோஷம் உள்ளவை போல இருக்கிறதே  ? உலகிலேயே அதிக பட்ச  சந்தோஷம் உள்ளது எது, அதை அவனின் கண்களுக்கு உதாரணமாக சொல்ல வேண்டும் என்று நினைத்தான்.

அட, இங்கேயே இருக்கே....இதை விட்டு விட்டு எங்கு எல்லாமோ எதுக்கு அலைய வேண்டும்......

சீதையின் அழகை கண்டு சந்தோஷப் பட்ட இராவணின் மனம் போல அவன் கண்கள் மகிழ்ச்சியில் துள்ளின  என்றான்.  அவன் மனதை விட மகிழ்ச்சியான ஒன்று இருக்க முடியாது.

அப்படி மகிழ்ச்சியில் அவள் மேனி எங்கும் ஓடிய அவன் கண்கள் அவளுக்கு கண்ணாலேயே மாலை அணிவித்தது   போல இருந்தது.

இருபது விழிகளால்  மாலை இட்டான்

மீண்டும் ஒரு முறை பாடலைப் படித்துப் பாருங்கள்

புன மயில் சாயல்தன் எழிலில், பூ நறைச்
சுனை மடுத்து உண்டு இசை முரலும் தும்பியின் -
இனம் எனக் களித்துளது என்பது என்? அவன்
மனம் எனக் களித்தது, கண்ணின் மாலையே


பொருள் 

Thursday, July 25, 2013

தேவாரம் - நாத்திகம் பேசாதே

தேவாரம் - நாத்திகம் பேசாதே 



நடையை மெய்யென்று நாத்திகம் பேசாதே
படைகள் போல்வரும் பஞ்சமா பூதங்கள்
தடையொன் றின்றியே தன்னடைந் தார்க்கெலாம்
அடைய நின்றிடும் ஆனைக்கா வண்ணலே.

பெரிய சுனாமி வருகிறது - மனிதனால் ஏதாவது செய்ய முடியுமா ? அதை தடுத்த நிறுத்த முடியுமா ? வேண்டுமானால் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.

பெரிய நிலநடுக்கம் வருகிறது - கை கொண்டு தடுக்க முடியுமா ?

சூறாவளி, புயல் காற்று அடிக்கிறது - எதை கொண்டு அதை தடுக்க முடியும்.

இப்படி இயற்கையின் சீற்றங்களை மனிதன் ஒன்றும் செய்ய முடியாது.

இப்படி  கட்டுப் படுத்த முடியாத இயற்கையின் சக்தியைப் போல இன்னொரு சக்தியும் இருக்கிறது. நாம் அதை சரியாக  வில்லை.

அது தான், நமது ஐந்து புலன்களின் சக்தி.

அவை சீறி எழும் போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. அது இழுக்கும் பக்கம்  அடித்துச் செல்லப் பட வேண்டியதுதான். தடுத்து எல்லாம் நிறுத்த முடியாது.

இல்லை இல்லை ...கொஞ்சம் பொறுங்கள்...

ஆ...அவற்றை தடுத்து நிறுத்தும் சக்தி இருக்கிறது.

அவற்றை தடுத்து நிறுத்தி நம்மை காக்கும்  சக்தி இறை சக்தி.

அப்படி எல்லாம் இல்லை, கடவுள் இல்லை, பாவ புண்ணியம் இல்லை, மறு பிறப்பு இல்லை என்று நாத்திகம் பேசி புலன் வழி சென்று கஷ்டப் படாதீர்கள் என்று   நாவுக்கரசர்  சொல்கிறார்.

பொருள்


இராமாயணம் - தூங்கல் இல் குயில்

இராமாயணம் - தூங்கல் இல் குயில் 



இராமனும் இலக்குவனும் மான் பின் போன பின், இராவணன் வயதான துறவி போல் மாறுவேடத்தில் சீதை இருக்கும் இடம் நோக்கி வருகிறான்.

"இந்த குடிலில் இருப்பவர்கள் யார் " என்று நடுங்கும் குரலில் கேட்க்கிறான்.

சீதை அவனை வரவேற்கிறாள்....


தூங்கல் இல் குயில் கெழு    சொல்லின், உம்பரின் 
ஓங்கிய அழகினாள்    உருவம் காண்டலும், 
ஏங்கினன் மனநிலை    யாது என்று உன்னுவாம்? 
வீங்கின; மெலிந்தன;    வீரத் தோள்களே. 



அவளுடைய குரல் குயில் போல இனிமையாக இருக்கிறது. அதுவும் தூக்கம் இல்லாத குயில் போல என்கிறான் கம்பன்.

அது என்ன தூக்கம் இல்லாத குயில் ?

ஏதோ ஒரு சோகம். சோகத்தால் தூக்கம் வரவில்லை. அதன் குரலில் அந்த ஏக்கம் தெரிகிறது.  சோகம் இழையோடுகிறது.

அவள் தேவதைகளை விட அழகாக இருக்கிறாள்.

இராவணின் ஏக்கம் ஏகத்துக்கு ஏறுகிறது.

அழகு பிரமிக்க வைக்கும். அழகு பேச்சிழக்க வைக்கும். பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். வார்த்தை வராது.

காலம் நின்று போகும். நான் என்பது மறந்து போகும்.

எல்லாம் அற என்னை இழந்த நலம் என்பார் அருணகிரி.

அவன் மனதில் ஆயிரம் எண்ணம் ஓடுகிறது. அவன் என்ன நினைக்கிறான்னு எனக்கு என்ன  தெரியும் என்று கேட்க்கிறான் கம்பன்.

அவளைப் பார்த்த உடன் அவனுடைய தோள்கள் விம்மின...அவளை கட்டி    அணைக்கும்  ஆசையால். முடியாது என்பதால் அந்தத் தோள்கள் சோர்ந்து விழுந்தன.


Wednesday, July 24, 2013

தேவாரம் - என் கடன் பணிசெய்து கிடப்பதே

தேவாரம் - என் கடன் பணிசெய்து கிடப்பதே 


இறைவனுக்கு என்று ஒரு கடமை இருக்கிறது. அது அடியார்களை தாங்குவது.  தாங்குதல் என்றால் கீழே விழாமல் பிடித்துக் கொள்ளுவது. தவறி விழுந்து விடாமல் தாங்கிப் பிடிப்பது.

இறைவா, உன் கடமை என்னை தாங்கிப் பிடிப்பது என்று . கட்டளையாகச் சொல்கிறார். நான் உன்னை வணங்கி, வேண்டி, பெற்றுக் கொள்ளுவது எல்லாம் தேவை இல்லை. என்னை தாங்க வேண்டியது உன் கடமை. நீ உன் கடமையைச் செய்.

அதையும்  சொல்லுகிறார் என்றார், அந்த முருகனைப் பெற்ற பார்வதியை இடப் பாகமாக கொண்டவனே, என்னை தாங்குவது உன் கடமை.

யாருக்கும், அவர்களின் பிள்ளை பேரை சொன்னால் கொஞ்சம் மனம் கனியும். அதோடு மனைவியின் போரையும் கொஞ்சம் சேர்த்து  கொண்டால் இன்னும் இனிமை சேரும்.

அப்படி இறைவனுக்கு கடமையை சொன்ன நாவுக்கரசர், அடிவர்களுக்கும் ஒரு கடமை உண்டு என்று சொல்கிறார். அது, எப்போதும் பணிசெய்வது. பணி செய்த பின் அதற்கு என்று கூலி எதுவும் எதிர் பார்க்காமல் சும்மா கிடப்பது. அது அடியவர்களின் வேலை. திருத் தொண்டு புரிவது. 

பாடல்

நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்
என்க டன்பணி செய்து கிடப்பதே.

சீர் பிரித்த பின்

நம் கடம்பனை பெற்றவள் பங்கினன் 
தென் கடம்பை திருக் கர கோயிலான் 
தன் கடன் அடியேனையும் தாங்குதல் 
என் கடன் பணி செய்து கிடப்பதே 

பொருள்


திருக்குறள் - நகையும், பகையும்

திருக்குறள் - நகையும், பகையும் 



நண்பர்களுக்கு இடையிலேயோ, உறவினர்களுக்கு இடையிலேயோ சில சமயம்  கிண்டல், குத்தல், நையாண்டி என்று வரும்போது ஏதாவது மற்றவர்களைப் பற்றி ஏதாவது சற்று மனம் புண் படும்படி சொல்லி விடுவோம்.

சும்மா ஒரு ஜோக்குக்குத் தானே, ஒரு தமாஷ் தானே என்று என்று நாம் நினைக்கலாம். அவர்களும் அதை பெரிதாக நினைக்காமல் விடலாம்.

ஆனால், அது அவர்களுக்கு மன வேதனையை தரும் என்பது  நிச்சயம். காட்டிக் கொள்ளா விட்டாலும், மனதுக்குள் வருந்துவார்கள்.

அது ஒருபுறம் இருக்கட்டும்.

நமக்கு வேண்டாதவர்கள், பகைவர்கள் என்று யாரேனும் இருக்கலாம். நம்முடைய பகைவர் என்பற்காக அவர்கள் முட்டாள்கள் என்றோ, அறிவற்றவர்கள் என்றோ நினைக்கக் கூடாது. அவர்களிடமும் சில நல்ல பண்புகள் இருக்கலாம்.

இரண்டு விஷயங்களை கூறுகிறார் வள்ளுவர்.

நண்பர்கள்தானே என்று இகழ்ச்சியாகப் பேசக் கூடாது.
பகைவர்கள்தானே என்று அவர்களின் நல்ல குணங்களை மறுக்கக் கூடாது.

இது இரண்டும் நல்ல பண்புள்ளவர்களுக்கு அழகு.

அதாவது, விளையாட்டாகக் கூட நண்பர்களையோ உறவினர்களையோ இகழ்ந்து பேசக் கூடாது. அப்படி செய்தால், நாம் அவர்களின் நட்பையோ உறவையோ இழக்க நேரிடலாம்.

பகைவர்கள் ஆனால் கூட, அவர்களின் நல்ல பண்புகளை போற்ற வேண்டும்.


பாடல்

நகையுள்ளு மின்னா திகழ்ச்சி பகையுள்ளும் 
பண்புள பாடறிவார் மாட்டு.


சீர் பிரித்த பின்

நகை உள்ளும் இன்னாது இகழ்ச்சி பகை உள்ளும்
பண்புள்ளது பாடு அறிவார் மாட்டு

பொருள்


இராமாயணம் - அவனா நீ ?

இராமாயணம் - அவனா நீ ?


இராமனும் இலக்குவனும்  மான் பின்னால் போன பின், இராவணன் கபட சந்நியாசி வேடத்தில் மெல்ல மெல்ல வருகிறான். அவன் எப்படி வந்தான் என்று முந்தைய ப்ளாக்கில் பார்த்தோம்.

அப்படி மெல்ல மெல்ல சீதை இருக்கும் குடிசையின் வாசலுக்கு வருகிறான்.

நாக்கு குழற, குரல் நடுங்க "யார் இங்க இருக்கா " என்று கேட்டான். அவன் தோற்றத்தையும், நடிப்பையும் பார்த்தால் தேவர்கள் கூட இவன் இராவணன் என்று கண்டு பிடிக்க முடியாது.

பாடல்

தோம் அறு சாலையின்    வாயில் துன்னினான்; 
நா முதல் குழறிட நடுங்கும் சொல்லினான்; 
'யாவர் இவ் இருக்கையுள்  இருந்துளீர்?' என்றான்- 
தேவரும் மருள்தரத் தெரிந்த மேனியான்.


பொருள்

Tuesday, July 23, 2013

இராமாயணம் - இராவணின் கபட வேடம்

இராமாயணம் - இராவணின் கபட வேடம் 


மாய மான் பின்னால் அந்த மாயவன் போனான்.

போனவனை பின் தொடர்ந்து இளையவன் போனான்.

இருவரும் போன பின் சீதை தனித்து இருக்கிறாள்.

இராவணன்   வயதான முனிவர் போல் கபட வேடம் பூண்டு சீதை இருக்கும் இடம் வருகிறான்.

பாடல்

பூப் பொதி அவிழ்ந்தன 
     நடையன்; பூதலம் 
தீப் பொதிந்தாமென 
     மிதிக்கும் செய்கையன்; 
காப்பு அரு நடுக்குறும் 
     காலன், கையினன்; 
மூப்பு எனும் பருவமும் 
     முனிய முற்றினான்.

பொருள்

பூப் பொதி = பூவின் இதழ்கள்

அவிழ்ந்தன = மலர்வதைப் போல உள்ள

நடையன் = நடையுடன். சத்தமே இல்லாமல், மிக மிக மெதுவாக....ஒரு பூ மலர்வதைப் போல

பூதலம் = பூமி

தீப் பொதிந்தாமென = தீ  எரிந்தால்

மிதிக்கும் செய்கையன் =  அந்த சூட்டின் மேல் எப்படி பட்டும் படமாலும் நடப்பார்களோ அப்படி நடக்கும் செய்கையன்.


காப்பு அரு = காத்துக் கொள்ள அருமையான, அல்லது கடினமான

 நடுக்குறும் = நடுக்கம் கொண்ட

காலன், கையினன் = காலும் கையும்  கொண்டு. அதாவது காலும் கையும் நடுங்குகிறது. தடுத்து அந்த நடுக்கத்தை நிறுத்த முடியவில்லை


மூப்பு எனும் பருவமும் = வயதான  பருவத்தோடு

முனிய = கோபப்படும்படி. வயதானவர்களுக்கே அவர்களின் முதுமையை பற்றி கோவம் வரும். கண் தெரியாமல், காது சரியாக கேட்காமல், எல்லாவற்றிற்கும் மற்றவர்களின் உதவியை எதிர்பார்த்துக் கொண்டு....

முற்றினான் = .அப்படிப்பட்ட முதுமையிலும் பழுத்த, முற்றிய உருவினனாய் வந்தான்

இந்தப் பாடலில் என்ன இருக்கிறது என்று கேட்டால் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.

புல்லின் மேல் சறுக்கு விளையாடும் அந்த பனித்துளியில் என்ன இருக்கிறது...

தூக்கம் கலையாத காலைப் பொழுதில் எங்கேயோ கூவும் குயிலின் அந்த ஒத்தை  ஒலியில்என்ன இருக்கிறது ?

வெட்கப்படும் மனைவியின் கன்னச் சிவப்பில் என்ன இருக்கிறது ?

தோளில்தூங்கிப் போகும் குழந்தை, அதில் என்ன இருக்கிறது....

ஒரு வார்த்தை பேசாமல் ஒரு மணி நேரம் ஒன்றாய் நடக்கும் அந்த நட்பு, அதில் என்ன இருக்கிறது ....

இருப்பவைகளுக்கு விலை வைத்து விடலாம்...இல்லாததற்கு என்ன விலை சொல்லுவது ....

இன்று இல்லாவிட்டாலும், பின்னொரு நாள் இந்த கவிதைகளை படித்து பாருங்கள்....எங்கோ பெய்த  மழையின் மண் வாசம் இங்கே வருவதைப் போல காலம் கடந்தும் இந்த கவிதை   வாசனை உங்கள் நாசி  வருடிப் போகலாம்....

திருக்குறள் - விடாது கருப்பு

திருக்குறள் - விடாது கருப்பு 


வெல்லவே முடியாத பகை என்று ஒன்று இருக்கிறதா ?

இருக்கிறது.

அவரிடம் பெரிய பதவி இருக்கிறது. சொத்து பத்து எக்கச்சக்கம். பெரிய பெரிய அரசியல்வாதிகள்,  அதிகாரிகள் எல்லாம் அவர் கைக்குள். அவர் வைத்ததுதான் சட்டம்.

தனது செல்வாக்கை பயன்படுத்தி சில பல தீய காரியங்களை செய்கிறார். மற்றவர்களின் சொத்தை அபகரிக்கிறார். பொது சொத்தை தனதாக்கி கொள்கிறார். எதிர்த்தவர்களை, இல்லாதவர்களாக்குகிறார்.

யார் என்னை என்ன செய்ய  முடியும் என்று இருமாத்து இருக்கிறார்.

சட்டத்தை சட்டை செய்வது இல்லை.


இப்படி பட்டவர்கள் இராவணன் காலத்தில் இருந்து இன்றுவரை எத்தனையோ பேர். 

எவ்வளவு பெரிய பகை இருந்தாலும் அதை வென்று விடலாம்; ஆனால் தீவினை செய்வதால் வரும் பகையை வெல்லவே முடியாது. எங்கு போனாலும் துரத்தி வந்து பிடித்துக் கொள்ளும்.

பாடல்

எனைப்பகை யுற்றாரு முய்வர் வினைப்பகை 
வீயாது பின்சென் றடும்.

சீர் பிரித்தபின்

எனை பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை 
வீயாது பின் சென்று அடும்

பொருள்


Monday, July 22, 2013

இராமாயணம் - வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ?

இராமாயணம் - வெஞ் சின விதியினை வெல்ல வல்லமோ? 


துன்பம் மனிதனை எப்படி பக்குவப் படுத்துகிறது.

இராமனுக்கு மணி முடி கிடையாது என்று  கேட்டபோது "விதிக்கு விதி காணும் என் வில் தொழில் காண்டி " என்று சண்டமாருதம் போல் கோபத்தோடு கிளம்பிய இலக்குவன் எப்படி மாறிப் போனான்.

இராமன் , இந்த மானின் பேச்சை கேட்டு அந்த மானின் பின் போனான்.

இராமனுக்கு ஏதோ ஆபத்து நீயும் போ என்று இலக்குவனை போகும்படி சொல்கிறாள் சீதை.

இலக்குவன் சொல்கிறான் "எங்க அண்ணாவின் கோதண்டம் காதண்டம் வளையுமுன் இந்த மூவண்டம் அதிரும்...எங்க அண்ணாவுக்கு எப்படி  ஆபத்து வரும் " என்று கூறி போக மறுக்கிறான்.

நீ போகாவிட்டால் நான் உயிரை விடுவேன் என்கிறாள்.

இலக்குவன் சொல்கிறான்

பாடல்


'துஞ்சுவது என்னை? நீர் சொன்ன 
     சொல்லை யான் 
அஞ்சுவென்; மறுக்கிலென்; அவலம் 
     தீர்ந்து இனி, 
இஞ்சு இரும்; அடியனேன் 
     ஏகுகின்றனென்; 
வெஞ் சின விதியினை 
     வெல்ல வல்லமோ?

பொருள்


தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே

தாயுமானவர் - அன்னை வடிவான அப்பனே 


தாயின் கருவறையில் இருந்தோம். எவ்வளவு பெரிய இருட்டு அறை அது.

வெளிச்சம் கிடையாது, கருவில் இருக்கும் குழந்தைக்கு அறிவு கிடையாது. கண் பார்வை கிடையாது.

அது போல ஆன்மாக்களாகிய நாம், ஆணவம் என்ற இருண்ட கரு அறையில்  அகப்பட்டு கிடக்கிறோம். தெளிவாக பார்கின்ற பார்வை இல்லை. அறிவு இல்லை. அங்கும் இங்கும் போக முடியாமல் கட்டுண்டு இருக்கிறோம்.

குழந்தை பிறக்கிறது. பிறந்தது முதல் இன்னல்தான்.

பசி, பிணி, மூப்பு என்ற முப்பெரும் துயரிலே இந்த உயிர்கள் கிடந்து உழல்கின்றன.

இந்த இருளில் இருந்து, இந்த துயரில் இருந்து உயிர்கள் விடுபட்டு, பேரின்பத்தை அடையச் செய்பவன் இறைவன்.

அன்னை வடிவான அப்பனே என்று உருகுகிறார் தாயுமானவ ஸ்வாமிகள்.

அவன் தந்தையானவன்.  தாயும் ஆனவன்.

பாடல்

காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
கண்ணிலாக் குழவியைப்போற்
கட்டுண் டிருந்தஎமை வெளியில்விட் டல்லலாங்
காப்பிட் டதற்கிசைந்த
பேரிட்டு மெய்யென்று பேசுபாழ்ம் பொய்யுடல்
பெலக்கவிளை யமுதமூட்டிப்
பெரியபுவ னத்தினிடை போக்குவர வுறுகின்ற
பெரியவிளை யாட்டமைத்திட்
டேரிட்ட தன்சுருதி மொழிதப்பில் நமனைவிட்
டிடருற உறுக்கி இடர்தீர்த்
திரவுபக லில்லாத பேரின்ப வீட்டினில்
இசைந்துதுயில் கொண்மின்என்று
சீரிட்ட உலகன்னை வடிவான எந்தையே
சித்தாந்த முத்திமுதலே
சிரகிரி விளங்கவரு தக்ஷிணா மூர்த்தியே
சின்மயா னந்தகுருவே.

சீர் பிரித்த பின்

கார் இருள் இட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற 
கண்ணில்லாக் குழவியைப் போல் 
கட்டு உண்டிருந்த எம்மை வெளியில் விட்டு அல்லலாம்
காப்பிட்டு மெய்யென்று பேசும் பாழும் பொய் உடல் 
பலக்க விளைய அமுதம் ஊட்டி 
பெரிய புவனத்திடை போக்கும் வரவும் உறுகின்ற
பெரிய விளையாட்டு அமைத்திட்டே 
இட்ட தன் சுருதி மொழி தப்பில் நமனை விட்டு 
இடருற  உருக்கி இடர் தீர்த்து 
இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் 
இசைந்து துயில் கொண்மின் என்று 
சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே 
சித்தாந்த முத்தி முதலே 
சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே 
சின்மயானந்த குருவே 


பொருள்

கார் இருள் இட்ட = கரு கும்முன்னு இருட்டு

ஆணவக் கருவறையில் =ஆணவமான கருவறையில்

அறிவற்ற  = அறிவு இல்லாத

கண்ணில்லாக் = கண்ணும் இல்லாத

 குழவியைப் போல் = குழந்தையைப் போல

கட்டு உண்டிருந்த = கட்டுப்பட்டு இருந்த

எம்மை = எங்களை 

வெளியில் விட்டு =   அந்தக் கருவறை விட்டு வெளியே வரவைத்து 

அல்லலாம் = துன்பம் என்ற

காப்பிட்டு = விலங்கை இட்டு

மெய்யென்று பேசும் = உண்மை என்று பேசும்

பாழும் பொய் உடல்  = பாழாய்ப்போன இந்த பொய்யான உடலை (இன்றிக்கும் நாளை போகும் பொய்யான இந்த உடலுக்கு மெய் என்று பெயர்  வைத்தது யார் )

பலக்க விளைய = பலமாகும்படி

அமுதம் ஊட்டி = அமுதம் ஊட்டி

பெரிய புவனத்திடை = பெரிய  உலகத்தில்

போக்கும் வரவும் உறுகின்ற = பிறந்து இறந்து வருகின்ற

பெரிய விளையாட்டு அமைத்திட்டே  = பெரிய விளையாட்டை அமைத்து

இட்ட தன் சுருதி மொழி தப்பில் = நாக்குக் குழறி, மொழி தப்பி

 நமனை விட்டு = எமனை விட்டு

இடருற  உருக்கி = துன்பங்களை உருக்கி

இடர் தீர்த்து  = துன்பங்களை தீர்த்து

இரவு பகல் இல்லாத பேரின்ப வீட்டினில் =  இரவும் பகலும் இல்லாத பேரின்ப வீட்டினில்

இசைந்து துயில் கொண்மின் என்று = நன்றாக சேர்ந்து தூக்கம் கொள்ளுங்கள் என்று

சீரிட்ட உலக அன்னை வடிவான என் தந்தையே  = சீரிய உலக அன்னையான  வடிவம் கொண்ட என் தந்தையே

சித்தாந்த முத்தி முதலே = அனைத்து சித்தாங்களும் ஆதி மூலமே

சிரகிரி விளங்க வரும் தக்ஷிணா மூர்த்தியே  = தலையில் உள்ள புத்தி விளங்க வரும் தட்சிணா மூர்த்தியே

சின்மயானந்த குருவே = சின்முத்திரைகள் மூலம் உபதேசம் செய்யும் குருவே


திருக்குறள் - நினைவு நல்லது வேண்டும்

திருக்குறள் - நினைவு நல்லது வேண்டும் 


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழி 
னறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

மறந்தும் கூட மற்றவர்களுக்கு தீமை நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால், நினைத்தவனை அறக் கடவுள் தண்டிப்பார்.

விரிவுரை

மறந்தும் பிறன் கேடு  செய்யற்க என்று சொல்லவில்லை.   சூழுதல் என்றால் நினைத்தால். மறந்தும் பிறருக்கு கேடு நினைக்கக் கூடாது.

மாறாக நினைத்தால், நினைத்தவனுக்கு கேட்டினை அறம் நினைக்கும்.

சற்று உன்னிப்பாக பார்த்தால் பிறருக்கு கேடு நினைத்தாலே போதும் , உடனே தண்டனைதான். கேடு செய்ய வேண்டும் என்று இல்லை.

நினைப்பது கூட வேண்டும் என்றே நினைக்கவேண்டும் என்று இல்லை. மறந்து போய் நினைத்தால் கூட போதும், உடனே தண்டனை தான்.

சில சமயம், சில பேர் மேல் கோபம் வரும். கோபத்தில் என்ன செய்கிறோம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. "அவன் நாசமாக போக வேண்டும், அவன் துன்பப் படவேண்டும் " என்று நாம் நினைக்கவும் கூட செய்யலாம். பின்னால் கோபம்   போன பின் நாம் அப்படி நினைத்ததை மறந்து கூட போவோம். ஆனால், அறம் மறக்காது. அப்படி மற்றவர்களுக்கு துன்பம் நினைத்தால்  அறம் நமக்கு துன்பம் நினைக்கும்.

சில சமயம் மற்றவர்கள் நமக்கு கெடுதல் செய்து இருப்பார்கள். வேண்டும் என்றே நமக்கு வரவேண்டிய  நல்லதை தடுத்து இருப்பார்கள். நமக்கு நட்டம் ஏற்படுத்தி இருப்பார்கள். நமக்கு துன்பம் செய்தவர்கள் , துன்பப் படவேண்டும் என்று நாம் நினைப்பது  இயற்கை.

கூடாது என்கிறார் வள்ளுவர்

மற்றவர்களுக்கு நாம் துன்பம் ஒரு போதும் நினைக்கக் கூடாது - அவர்கள் நமக்கு துன்பமே செய்து இருந்த போதும்.

பழிக்குப் பழி என்ற எண்ணம் அறவே கூடாது.

தெரிந்தோ தெரியாமலோ பிறருக்கு துன்பம் நினைக்கக் கூடாது.

நினைவுகளுக்கு பெரிய ஆற்றல் உண்டு.

சட்டம் உங்களை தண்டிக்காமல் போகலாம். மற்றவர்களுக்குத் துன்பம் நினைப்பது  சட்டப் படி குற்றம் இல்லை. மற்றவர்களுக்கு துன்பம் செய்தால்தான் குற்றம்.

ஆனால், வள்ளுவரின் நீதி மன்றத்தில் நினைத்தாலே குற்றம்.

 மற்றவர்களுக்கு துன்பம் நினைக்கும் போது , நீங்கள் உங்களுக்கே துன்பம் விளைவித்துக்  கொள்கிறீர்கள்.

யோசிப்போம்.


Saturday, July 20, 2013

ஜடாயு - வஞ்சனை இழைத்தனன்

ஜடாயு - வஞ்சனை இழைத்தனன்


இராமனும் இலக்குவனும்  போது இராவணன் எப்படி சீதையை தூக்கி வந்திருக்க முடியும் ? ஒருவேளை இது கைகேயின் சூழ்ச்சியாக இருக்குமோ என்று ஜடாயு சந்தேகம் கொண்டான்.

பின் மேலும் சிந்திக்கிறான்.

ஆதி  சேடன் என்ற பாம்பை பஞ்சனையாக கொண்ட கருமை நிறம் கொண்டவனே இந்த இராமன். அப்படிப்பட்ட இராமன் இந்த இராவணன் வெல்வதாவது ? இருக்காது . ஏதோ வஞ்சனை மற்றும் மாயம் செய்து கள்ளத்தனமாய் சீதையை தூக்கி வந்திருப்பான்....


பாடல்

“பஞ்சு அணை பாம்பு அணை ஆகப் பள்ளி சேர்
அஞ்சன வண்ணனே இராமன்; ஆதலால்
வெஞ்சின அரக்கனால் வெல்லற்பாலனோ?
வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால். “

பொருள் 

திருக்குறள் - பொறாமையின் புறவேற்றுமை

திருக்குறள் - பொறாமையின் புறவேற்றுமை 


அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணா தழுக்கறுப் பான்.

பிறருடைய ஆக்கத்தை போற்றாது பொறாமை கொள்பவன் தனக்கு வரும் ஆக்கத்தை வேண்டாம் என்று சொல்லுபவன். அதாவது, அவனுக்கும் ஆக்கம் வராது.

இது நேரடியான எளிமையான பொருள்.

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் குறளின் வீச்சும் ஆழமும் புரியும்.

பொறாமை என்றால் என்ன என்று நம்மிடம் கேட்டால் என்ன சொல்லுவோம் ?

மற்றவர்கள் செல்வம் மற்றும் பிற சிறப்புகள் பெறுவதை பொறுத்துக் கொள்ளாமல் இருத்தல் பொறாமை என்று சொல்லுவோம்.

சுருக்கமாக சொல்லுவது என்றால் வயெற்றிரிச்சல் படுவது.

வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார்.

பொறாமை என்பது மற்றவர்களின் உயர்வை கண்டு பொறுமுவது மட்டும் அல்ல...அவர்களின் செல்வத்தை, ஆக்கத்தை பாதுகாக்காமல் இருப்பதும் பொறாமைதான் என்கிறார்.

எப்படி ? சில வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து சிந்திப்போம்.

நம்முடைய நண்பர் வெளியூரில் இருக்கிறார். நாம உள்ளுரில் இருக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நண்பருக்கு சொந்தமான ஒரு சிறு நிலம் உள்ளூரில்  இருக்கிறது. அது நமக்குத் தெரியும். அதில் யாரோ குடிசை போட்டு இருக்கிறான். ஆக்கரமிப்பு செய்து இருக்கிறான். அதைக் கண்டபின்னும், அந்த ஆக்கரமிப்பை நீக்க உதவி செய்யாமல் இருப்பது அந்த சொத்தை பேணாது விடுவதுபோலத் தான். அதுவும் பொறாமையின் ஒரு வடிவம் தான்.


நண்பர் திறமைசாலி, அறிவாளி, நல்லவர், வல்லவர். அவரைப் பற்றி ஒரு மூன்றாம் மனிதன்  நம்மிடம் சில தகாத வார்த்தைகள் சொல்லும்போது, "அவன் அப்படிப் பட்ட  ஆள் இல்லை, அவனை நன்றாக எனக்குத் தெரியும்..." என்று தடுத்து கூறி நண்பரின் புகழுக்கு (ஆக்கம்) களங்கம் வராமல் பாதுகாக்க வேண்டும். அப்படி செய்யாமல் விட்டால், அதுவும் ஒரு விதத்தில் பொறாமைதான்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

மற்றவர்களின் ஆக்கத்தை பேண வேண்டும்.

ஆக்கம் என்ற சொல் மிக ஆழமான சொல். வள்ளுவர் யோசித்து யோசித்து அந்த வார்த்தையை தேர்ந்து எடுத்து இருக்கிறார்.

பணம், செல்வம், வீடு, வாசல், நில, புலன் இது மட்டும் அல்ல ஆக்கம் என்பது.

ஒருவனின் புகழ், கல்வி, பிள்ளைகள், குடும்பம் எல்லாமே ஒருவனின் ஆக்கம்தான்.

நமக்குத் தெரிந்த ஒருவரின் பையன் புகை பிடிப்பதை பார்க்கிறோம். நேரில் அவனை கண்டிக்கலாம். அவனுடைய தந்தையிடம் சொல்லி அவனை திருத்தலாம் . அதை விட்டுவிட்டு, நமக்கு என்ன , எக்கேடோ கெட்டு போகட்டும்....என் பிள்ளை நல்லா இருந்தால் போதும் என்று நினைப்பதும் பொறாமைதான்.



சரி மற்றவர்களின் ஆக்கத்தை பேணாது பொறாமை கொண்டால் என்ன ஆகும் ?

அப்படிச் செய்பவர்கள் அறத்தினால் விளையும் ஆக்கத்தை வேண்டாம் என்று மறுப்பவர்கள் ஆவார்கள்.

அறத்தினால் என்ன ஆக்கம் விளையும் ?

அறம் - இம்மைக்கும் மறுமைக்கும் வேண்டிய எல்லாவற்றையும் நல்கும். இம்மைக்கு வேண்டிய  செல்வத்தையும், இன்பத்தையும் மறுமைக்கு வேண்டிய  வீடு பேற்றையும் நல்கும்.

மற்றவர்களின் ஆக்கத்தை பேணாது பொறாமை கொள்பவன் தனக்கு அறத்தினால் விளையும்  நன்மைகளை தானே வேண்டாம் என்று தள்ளி விடுபவன் ஆவான் என்கிறார் வள்ளுவர்.

எவ்வளவு ஆழமான சிந்தனை.

  


Friday, July 19, 2013

அபிராமி அந்தாதி - ஏதம் இலாளை

அபிராமி அந்தாதி - ஏதம் இலாளை 



அபிராமி யார் ?

தாயா ? தாரமா ? காதலியா ? அக்காவா ? தோழியா ? தேவதையா ? மகளா ?  எல்லாமும் கலந்த ஒரு பெண் வடிவா ?  

பெண்ணின் அத்தனை அம்சங்களும் நிறைந்தவள் அவள். 

கோமள வல்லி  -  மென்மையானவள். அவள் கை, அவள் மடி அவ்வளவு மேன்மை. அவள் பார்வை மனதை  போகும் தென்றல். அவள் பாதம்...பஞ்சை விட மென்மை 

அவள் மிகவும் குளிர்ந்தவள் - அவள் இருக்கும் கோவில் அல்லியும் தாமரையும் நிறைந்த குளங்கள் சூழ்ந்தது. அவ கிட்ட போனாலே ஒரு மலரின் மணம் மனதை நிறைக்கும்.

அவள் கணவனோடு இரண்டற கலந்தவள் - யாமள வல்லி 

அவளை பார்த்துக் கொண்டே இருக்கலாம் - கள்ளம் இல்லா முகம். ஒரு குறை இல்லா அழகு. பார்த்தாலே மனம் எல்லாம் நிறைந்து போகும். ஏதம் (குற்றம்) இல்லாதவள் 


அவளை விட்டு பிரியவே மனம் வராது. வீட்டுக் போன பின் அவள் நினைவு வந்ததாள்  என்ன செய்வது ? அவளை பார்க்க வேண்டும் போல இருந்தாள் என்ன செய்வது ? அவளுடைய போட்டோ அல்லது படம் ஏதாவது வரைந்து எடுத்துச் செல்லாலம் என்றால் எழுத்தில் கொண்டு வரமுடியாத அழகி அவள். அவளை பார்க்க வேண்டும் என்றால் நேரில் தான் போய் பார்க்க வேண்டும். அவ்வளவு அழகு. 

மயில் போன்ற சாயல் உடையவள். ஒரு சிலிர்ப்பு, ஒரு நளினம்...கண் கொள்ளா காட்சி...

பட்டருக்கு அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும்....

நமக்கு வாழ்க்கையில் எவ்வளவு வேலை இருக்கிறது. வீடு, வாசல், மனைவி, மக்கள், வேலை, சுற்றம், டிவி சீரியல், வார மாத பத்திரிகைகள், அரட்டை, பல்வேறு விழாக்கள் ....என்ற ஆயிரம் வேலை இருக்கிறது. 

இதற்கு நடுவில் அபிராமியை நினைக்க எங்கே நேரம் இருக்கிறது. 

பட்டர் நம் மேல் அத்தீத வாஞ்சையுடன், " உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு வணங்கினால் போதும்...அபிராமி ஓடோடி வந்து உங்களுக்கு உதவி செய்வாள்....உங்களை ஏழு உலகுக்கும் அதிபதி ஆக்கி விடுவாள் " என்கிறார். 

பாடல் 

கோமளவல்லியை அல்லியந்தாமரைக் கோயில் வைகும்
யாமளவல்லியை ஏதம் இலாளை எழுதரிய
சாமள மேனிச் சகலகலாமயில் தன்னை தம்மால்
ஆமளவும் தொழுவார் எழு பாருக்கும் ஆதிபரே

பொருள் 

ஜடாயு - சித்தி செய்த சூழ்ச்சியோ?

ஜடாயு - சித்தி செய்த சூழ்ச்சியோ?


இராவணன் போரிட்டு ஜடாயுவை வீழ்த்திய பின், சீதையை கொண்டு செல்கிறான்.

தரையில் விழுந்த ஜடாயு யோசிக்கிறான்...

இராம இலக்குவர்களோடுதான் சீதை வந்து இருக்கிராள் . அவர்கள் இருக்கும் போது, அவர்களை வென்று சீதையை கவர்ந்து செல்ல முடியாது. பின்ன எப்படி இந்த இராவணன் அவளை கொண்டு செல்கிறான். ஒரு வேளை இதுவும் கைகேயின் சூழ்ச்சியாக இருக்குமோ, ஒண்ணும் புரியலையே என்று குழம்புகிறான் ஜடாயு.


பாடல்  

'வெற்றியர் உளர்எனின், மின்னின் 
     நுண் இடைப் 
பொன்-தொடிக்கு, இந் 
     நிலை புகுதற்பாலதோ? 
உற்றதை இன்னது 
     என்று உணரகிற்றிலேன்;
சிற்றவை வஞ்சனை, 
     முடியச் செய்ததோ?


பொருள்


Thursday, July 18, 2013

திருக்குறள் - நம் கடமை

திருக்குறள் - நம் கடமை 


இந்த வாழ்க்கைக்கு அர்த்தம் என்ன ? இதன் நோக்கம் என்ன ? எதற்காக பிறந்தோம் ? எதற்காக வாழ்கிறோம் ? நாம் என்ன செய்கிறோம் ? நாம் செய்வது சரிதானா ? இப்படியே போய்க் கொண்டிருந்தால் என்ன கிடைக்கும் ? எதில் முடியும் ?

இப்படி வாழ்வின் சில விடை காண முடியாத கேள்விகள் நம்முள் எழுவது இயற்கை.

இதற்கு எப்படி விடை காண்பது ? வாழ்வின் குறிக்கோள், வாழ்வில் செய்ய வேண்டிய கடமை என்ன ?

வள்ளுவர் வழி சொல்கிறார். கோடி காட்டுகிறார்.  பாதையை காட்டுகிறார். அதில் பயணிக்க வேண்டியது நம் பொறுப்பு.



தவஞ்செய்வார் தம்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.


வாழ்வின் நோக்கம் தவம் செய்வது. அதைத் தவிர மற்றது எல்லாம் ஆசை வயப்பட்டு துன்பம்  செய்வதாகும்.

கொஞ்சம் விரித்துப் பொருள் காண்போம்.

தவஞ்செய்வார் தம்கருமஞ் செய்வார் = தவம் செய்பவர்கள் தங்கள் கடமையை செய்பவர்கள்.

மற் றல்லார் = மற்றவர்கள் , அதாவது தவம்  செய்யாதவர்கள்

அவஞ்செய்வார் = துன்பம் செய்வார்

ஆசையுள் பட்டு = ஆசையுள் பட்டு

மீண்டும் மீண்டும் பிறந்து பின் இறந்து இந்த சுழலில் சிக்கித் துன்புறும் உயிரை அந்த துன்பத்தில் இருந்து மீட்டு வீடு பேறு அடையச் செய்வதே இந்த வாழ்க்கையின் நோக்கம்.

வீடு வாங்குவது, நகை நட்டுகள் வாங்குவது, ஊர் சுற்றுவது, உண்பது, உடுப்பது இவற்றிற்காக நாம் இந்த பிறவியை எடுக்க வில்லை.

மனித வாழ்வின் நோக்கம், குறிக்கோள், பயன் பிறவிப் பிணியில் இருந்து விடுபடுவது . அதற்க்கு ஒரே வழி தவம் செய்வது.

அதை விடுத்து செய்யும் மற்றது எல்லாம் பிணி மூப்பு சாக்காடு என்ற முத்துன்பத்தில்  இருந்து விடுபடாமல் அதிலேயே மீண்டும் மீண்டும் சிக்க வைப்பது.

தவம் உடலுக்கு துன்பம் தரக்கூடியது. உயிருக்கு நன்மை தரக் கூடியது.

தவம் அல்லாத மற்றது உடலுக்கு சில காலம் இன்பம் தரலாம் பின் அதே இன்பம் துன்பமாக மாறி விடும். அது மட்டும் அல்ல, அது உடலைத் தாண்டி உயிர்க்கும்  துன்பம் தரும்.

எப்படி ?

தவம் அல்லாத மற்றவைகளை செய்யும் போது, பாவ புண்ணியம் நிகழ்கிறது. அவற்றை அனுபவிக்க இந்த உயிர் மீண்டும் பிறப்பு எடுக்க வேண்டி வரும்.

என்ன செய்கிறோம்...எதற்கு செய்கிறோம் என்று யோசித்துச் செய்யுங்கள்.

நன்றாக யோசித்த வள்ளுவர் சொல்கிறார் - தவம் செய்யுங்கள் என்று.

அப்புறம்  உங்க இஷ்டம்....





குசேலோபாக்கியானம் - கொடிது கொடிது, வறுமை கொடிது

குசேலோபாக்கியானம் - கொடிது கொடிது, வறுமை கொடிது 


கொடிது கொடிது வறுமை கொடிது என்றாள் ஔவை.

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை எனில் இந்த பாரினை அழித்திடுவோம் என்று வெகுண்டான் பாரதி.

இதற்கும் ஒரு படி மேலே போய் , பிச்சை பெற்றுதான் வாழ வேண்டும் என்றால் கெடுக இவ்வுலகு இயற்றியான் என்று அந்த இறைவனே கெட்டு ஒழிக என்று குறள் கொடுத்தார்

வறுமையில் பெரிய வறுமை பிள்ளைகள் பசித்து அழுவதை பார்ப்பது. அவர்களின் பசியை தீர்க்க முடியாத வறுமை மிகப் பெரிய கொடுமை.

குசேலரின் வீட்டில் வறுமை நடு வீட்டில் சம்மணம் இட்டு அமர்ந்து இருந்தது.

இருக்கும் உணவோ கொஞ்சம். பிள்ளைகளோ 27 பேர். உணவு பற்றாக் குறை. ஒரு பிள்ளைக்கு உணவு தரும்போது இன்னொரு பிள்ளை தனக்கும் வேண்டும் என்று அழும். அதற்கு தர முயலும் போது இன்னொன்று அழும்.

யாருக்கென்று தருவாள் அவள் ?  எந்தப் பிள்ளைக்கு என்று தருவது ? எந்த பிள்ளையை பட்டினி போடுவது ?

பாடல்


ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு
          கைநீட்டும் உந்திமேல் வீழ்ந்(து), 
     இருமகவுங் கைநீட்டு மும்மகவுங்
          கைநீட்டும் என்செய் வாளால்
     பொருமியொரு மகவழுங்கண் பிசைந்தழும்மற்
          றொருமகவு புரண்டு வீழாப், 
     பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங்
          ஙனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம். 

சீர் பிரித்த பின்


ஒரு மகவுக்கு அளித்திடும் போது ஒரு மகவு 
கை நீட்டும் உந்தி மேல் வீழ்ந்து 
இரு மகவும் கை நீட்டும் மும் மகவும்
கை நீட்டும் என் செய்வாளால் 
பொருமி ஒரு மகவு அழும் கண் பிசைந்து அழும் 
மற்றொரு மகவு புரண்டு வீழாப் 
பேரு நிலத்தில் கிடந்து அழும் மற்றொரு மகவு எங்கனம் 
சகிப்பாள் பெரிதும் பாவம் 

பொருள்


Wednesday, July 17, 2013

ஜடாயு - விதி சிதைத்த தரும வேலி

ஜடாயு - விதி சிதைத்த தரும வேலி 



தமிழில் உள்ள அற நூல்கள் எல்லாம் விதியை பெரிதும் நம்புகின்றன.

கம்பன் விதியைப்  பற்றி பல இடங்களில் குறிப்பிடுகின்றான்.

இராவணன் ஜடாயுவை வீழ்த்தினான். பின் சீதையை நிலத்தோடு கொண்டு செல்கிறான்

அடி பட்ட ஜடாயு நினைக்கிறான் ....

என் பிள்ளைகளான இராம இலக்குவனர்கள் இன்னும்  வரவில்லை. என் மருமகளான சீதைக்கு நேர்ந்த துக்கத்தை என்னால் போக்க முடியவில்லை. விதியே தர்மத்தின் வேலியை சிதைத்தால் என்ன செய்வது என்று மயங்குகிறான்.

பாடல்

'வந்திலர் மைந்தர்தாம்; 
     "மருகிக்கு எய்திய 
வெந் துயர் துடைத்தனென்" 
     என்னும் மெய்ப் புகழ் 
தந்திலர், விதியினார்; 
     தரும வேலியைச் 
சிந்தினர்; மேல் இனிச் 
     செயல் என் ஆம்கொலோ?

பொருள்


திருக்குறள் - புகழும் இகழும்

திருக்குறள் - புகழும் இகழும்

நம்மை யாராவது இழிவாகப் பேசிவிட்டால், தரக் குறைவாகப் பேசிவிட்டால் நமக்கு அவர்கள் மேல் எவ்வளவு கோபம் வரும். பதிலுக்கு நாம் அவர்களை பேசுவோம், எரிச்சல் அடைவோம், கோபம் கொள்வோம், எப்படியாவது அவர்களுக்கு ஒரு துன்பம் தர வேண்டும் என்று நினைப்போம்....

எப்போதாவது, மற்றவர்கள் நம்மை இகழ்வதர்க்குக் காராணம் நாம் தான் என்று நினைத்தது உண்டா ?

வள்ளுவர் கூறுகிறார்

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவ தெவன்?.

மற்றவர்களால் இகழப் படாமல் வாழ வேண்டும் என்றால் அதற்க்கு ஒரே வழி மற்றவர்களால் புகழப் பட வாழ்வதுதான்.

நீங்கள் புகழோடு வாழவில்லை என்றால், நீங்கள் இகழோடு வாழ சாத்தியக் கூறுகள் இருக்கிறது.

நீங்கள் எபோதாவது இகழப் பட்டால், அதற்கு காரணம் புகழோடு வாழாத நீங்கள் தானே அன்றி மற்றவர்கள் இல்லை என்று மனதில் கொள்ளுங்கள்.

புகழ் வர வர இகழ் தேயும்.

பொருள்

புகழ்பட வாழாதார் = மற்றவர்கள் புகழும் படி வாழாதவர்கள்

 தம்நோவார் தம்மை = தம்மை இழிவாக பேசுபவர்களை

இகழ்வாரை நோவ தெவன்? = அப்படிப் பட்டர்வகளை நொந்து என்ன பயன் ? ஒரு பயனும் இல்லை .


சரியாவே படிக்க மாட்டேன் என்கிறான் என்ற இழிச் சொல் - மாநிலத்திலேயே முதல்வனாய் வந்தால் தானே மறைந்து போகும்.

புகழோடு வாழுங்கள். இழிச் சொற்கள் தானே உங்களை விட்டு விலகிப்  போய் விடும்.



குசேலோபாக்கியானம் - வறுமையில் செம்மை

குசேலோபாக்கியானம் - வறுமையில் செம்மை 


இறைவனைப் பற்றி நினைக்கவும், கோவில்களுக்குப் போகவும் எங்கே நேரம் இருக்கிறது ? பணம் சம்பாதிப்பதிலேயே வாழ்க்கையின் அத்தனை நேரமும் போய் விடுகிறது. பிள்ளைகளை படிக்க வேண்டும், அவர்களை கட்டி கொடுக்க வேண்டும், வீடு வாங்க வேண்டும், பாரின் டூர் போக வேண்டும்...இப்படி எல்லாவற்றிற்கும் பணம் தேவைப் படுகிறது.

எவ்வளவு இருந்தாலும் போத மாட்டேன் என்கிறது.

இந்த பணம் எல்லாம் சேர்த்த பின், இறைவனைப் பற்றி சிந்திப்போம் என்று தள்ளிப் போட்டு விடுகிறோம்.

என்று நிறைவது ? என்று நினைப்பது ?

நிறைய பேருக்கு உதவி செய்ய ஆசை தான். அனாதை ஆசிரமத்திற்கு, முதியோர் இல்லத்திற்கு பணம் அனுப்ப வேண்டும் என்று நல்ல எண்ணம் இருக்கும்.

ஒண்ணு மாத்தி ஒண்ணு ஏதாவது செலவு வந்து கொண்டே இருக்கும்.

இன்னும் கொஞ்சம் பணம் சேர்த்த பின் அனுப்பலாம் என்று நினைப்பார்கள்.

என்று நிறைவது ? என்று அனுப்பவது ?

தானம் பண்ணவும், இறைவனை நினைக்கவும் பணம் அவசியம் இல்லை. மனம் தான் முக்கியம்.

காட்டுக்குப் போய் , செடிகளில் முளைத்து உதிர்ந்து கிடந்த தானியங்களை பொறுக்கி எடுத்து வந்து மனைவியின் கையில் கொடுப்பார் குசேலர்.

அவர் மனைவி, அந்த தானியங்களை வாங்கி அதை குத்தி, பக்குவம் பண்ணி சமைப்பாள். சமைத்த அந்த உணவில், அதிதிகளுக்கு என்று கொஞ்சம் எடுத்து வைத்து விட்டு, மீதியில் குசேலருக்கு கொஞ்சம் தருவாள். அதை மகிழ்வுடன் உண்டு, மந்திரங்களுக்கும் மறைகளுக்கும் எட்டாத திருமாலின் திருவடிகளை நினைத்து இருப்பார் .


பாடல்


வந்துதன் மனைகைந் நீட்ட 
          வாங்கிமற் றவற்றைக் குற்றி
     அந்தமெல் லியல்பா கஞ்செய் 
     ததிதிக்கோர் பாகம் வைத்துத் 
          தந்ததன் பங்க யின்று
     தவலரும் உவகை பூத்து
          மந்திர மறைகட் கெட்டா
     மாலடி நினைந்தி ருப்பான்.


பொருள்


Tuesday, July 16, 2013

திருக்குறள் - நாணம்

திருக்குறள் - நாணம் 


நாணம்.

பெண்களுக்கு இயல்பாகவே உள்ளது. ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்று அல்ல, அதைப் பற்றி பேசினாலே, நினைத்தாலே பெண்களுக்கு நாணம் வரும். அது ஒரு வகை நாணம்.

அதே போல் இன்னொரு நாணமும் இருக்கிறது.

அது என்ன நாணம் தெரியுமா ?

செய்யத் தகாத காரியங்களை பற்றி எண்ணும் போது சான்றோர்க்கு மனதில் தோன்றும் நாணம்.

சில விஷயங்களைப் பற்றி எண்ணும் போதே நம் மனம் கூசும் அல்லவா ?  அதுதான் இரண்டாவது வகை நாணம்.

பாடல்

கருமத்தா னாணுத னாணுத் திருநுத
னல்லவர் நாணுப் பிற.

சீர் பிரிக்காமல் புரியாது

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.


பொருள் 

கொஞ்சம் வார்த்தைகளை இடம் மாற்றிப் போடுவோம் 

நாணும் கருமத்தால் நாணுதல் 
பிற திருநுதல் நல்லவர் நாணு 

பொருள்  

தாயுமானவர் - இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை

தாயுமானவர் - இறைவன் ஆன்மாக்களை படைக்கவில்லை


இந்த ஆன்மாவை ஆண்டவன் படைக்கவில்லை. எப்போது இறைவன் தோன்றினானோ அப்போதே, அதே சமயத்தில் ஆன்மாக்களும் தோன்றின. ஆன்மாவும் இறைவனும் ஒன்றல்ல. ஆனால், இரண்டும் ஒரே சமயத்தில் தோன்றியவை.

பாடல்

என்றுளைநீ அன்றுளம்யாம் என்பதென்னை
இதுநிற்க எல்லாந்தாம் இல்லை யென்றே
பொன்றிடச்செய் வல்லவன்நீ யெமைப்ப டைக்கும்
பொற்புடையாய் என்னின்அது பொருந்தி டாதே.


சீர் பிரித்த பின்

என்று உள்ளை நீ அன்று உள்ளம் யாம் என்பதனை
இது நிற்க எல்லாம் தாம் இல்லை என்றே
பொன்றிடச் செய்ய வல்லவன் நீ எம்மை படைக்கும் 
பொற்புடையாய் என்னின் அது பொருந்திடாதே 

பொருள்


Monday, July 15, 2013

திருக்குறள் - ஒழுக்கம்

திருக்குறள் - ஒழுக்கம் 


ஒழுக்கம் என்றால் என்ன ? எது எல்லாம் ஒழுக்கம், எது எல்லாம் ஒழுக்கம் அல்லாதன ?

ஒழுக்கம் என்பதற்கு பல அர்த்தங்கள் சொல்லப் படுகிறது.

வரைமுறை, நெறி, நல்லன செய்தல், வேதம், கீதை போன்ற புத்தகங்களில் சொல்லியபடி நடத்தல் என்று பலவித அர்த்தங்கள் சொல்லப் படுகின்றன.

நம் முன்னவர்கள் மிகுந்த புத்திசாலிகள்.

ஒழுக்கம் என்பது காலத்தோடு சேர்ந்து மாறி வருவது. இனத்திற்கு இனம் மாறு படும், காலத்திற்கு காலம் மாறுபடும். எனவே அதற்கு என்றைக்கும் பொருந்தும் ஒரு விதியை சொல்லுவது கடினம்.

அதற்காக சொல்லாமலும் விட முடியாது.

என்ன செய்வது ?

முதலில் ஒழுக்கம் என்ற வார்த்தையை பாருங்கள். ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. கடை பிடிப்பது.

ஏதோ ஒன்றை கடைப் பிடிப்பது ஒழுக்கம்.

தினமும் காலையில் எழுந்து பல் துலக்கி, உடற் பயிற்சி செய்தால் அது ஒரு ஒழுக்கம்.

மாலையில் ஒரு மணி நேரம் படித்தால், அது ஒரு ஒழுக்கம்.

நீங்கள் ஏதோ ஒன்று கடை பிடிக்கிறீர்கள். அந்த பழக்கத்தை பொருத்தவரை நீங்கள் ஒரு  ஒழுங்கை கடை பிடிக்கிறீர்கள்.

சரி, ஏதோ ஒரு சில நாள் செய்கிறேன் மற்ற நாள் செய்வது இல்லை என்றால் நான் ஒழுங்கானவனா ? என்றால் இல்லை.

ஏன் ?

ஒழுக்கம் என்றால் ஒழுகுவது. வீட்டில் கூரையில் ஏதாவது ஓட்டை இருந்தால் , அல்லது தண்ணீர் தொட்டியில் சின்ன விரிசல் இருந்தால் நீர் ஒழுகும். ஒழுகுதல் என்றால்  தொடர்ந்து நீர் வந்து கொண்டே இருக்க வேண்டும். அப்பப்ப வந்தால் அதை நீர் சொட்டுகிறது என்போம். நீர் ஒழுகுகிறது என்று  சொல்ல மாட்டோம்.


எப்படி ஒழுகுதல் என்றால் விடாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறதோ அது போல  ஒழுக்கம் என்றால் விடாமல் கடை பிடிப்பது.


சரி, தினமும் திருடுவதை நான் கடை பிடிக்கிறேன்..ஒரு நாள் கூட தவறுவது இல்லை. நான் ஒழுக்கமானவனா ?

இல்லை.

ஏன் ?

மீண்டும் அந்த ஒழுக்கம் என்ற வார்த்தையைப் பாருங்கள்.

எங்கிருந்து ஒழுகும் ? மேலிருந்து கீழே ஒழுகும். கீழிருந்து மேலே போவது ஒழுகுதல் அல்ல.

எனவே, நம்மை விட பெரியவர்கள், உயர்ந்தவர்கள், சான்றோர்கள் சொல்லுவதை , செய்ததை நாமும்இடை விடாமல்  கடைபிடித்தால் அதற்க்கு பெயர் ஒழுங்கு.

நம்மை விட கீழானவர்களிடம் இருந்து நாம் ஒன்றை கற்று அதை செய்தால் அது ஒழுங்கு ஆகாது.


இப்போது புரிகிறதா ஒழுங்கு என்றால் என்ன என்று ?

பெரியவர்கள் - அறிவில், பண்பில், அனுபவத்தில் - அவர்களைப் பின் பற்றுவது  ஒழுங்கு.

பெரியவர்கள், சான்றோர் யார் என்ற கேள்வி வரும். அதற்க்கு வள்ளுவர் பல இடங்களில் விடை தந்து இருக்கிறார்.

செயற்கரிய செய்வார் பெரியோர் என்பது ஒரு விதி.

துறவிகள் - நிஜமான துறவிகள் - உள்ளத் துறவிகள் அவர்கள் மிகப் பெரிய வழி காட்டிகள்.  எனவே, வள்ளுவர் நீத்தார் பெருமை என்று இறை வணக்கம், வான் சிறப்பு என்ற முதல் இரண்டு அதிகாரம் முடிந்தவுடன் நீத்தார் பெருமை என்று துறவிகளின் பெருமையை மூன்றாவதாகச் சொன்னார்.

ஒழுக்கம் என்பது புத்தகங்களில் இருக்கும் விதி முறைகள் அல்ல. வாழும் பெரியவர்கள், அவர்களின் வாழ்க்கை நெறிதான் ஒழுக்கத்தின் மூலாதாரம்.

பெரியோரை துணை கோடல் என்று ஒரு அதிகாரம்.
நீத்தார் பெருமை என்று ஒரு அதிகாரம்
கேள்வி (கேட்டு தெரிந்து கொள்வது என்று ஒரு அதிகாரம்
சிற்றினம் சேராமை என்று ஒரு அதிகாரம்

இப்படி வாழ்வில் ஒழுக்கமாய் வாழ வழி சொல்லித் தருகிறார் வள்ளுவர்.

ஒழுக்கத்தைப் பற்றி சில குறள்களை ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்.

விடுபட்டவற்றை இப்போது பார்ப்போமா ?







தாயுமானவர் - என் போல் ஒரு பாவி

தாயுமானவர் - என் போல் ஒரு பாவி 


வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொன்றின் மேல் ஆசை கொள்கிறோம்.

மிட்டாய், பொம்மை, புத்தகம், படிப்பு, வேலை, எதிர் பாலினர் மேல் கவர்ச்சி, பணம், சொத்து, புகழ் , பதவி என்று ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்றை துரத்திக் கொண்டே இருக்கிறோம்.

அந்த கால கட்டத்தை தாண்டி வரும் போது, முன்னால் ஆசைப் பட்டது எல்லாம் சிறு பிள்ளைத் தனமாய் தெரிகிறது.

இதுக்கா இவ்வளவு ஆசைப் பட்டோம் என்று நம்மை நாமே பார்த்து சிரித்துக் கொள்கிறோம்.

இருந்தாலும், ஆசை விடுவது இல்லை. எல்லாம் பொய் என்று அறிந்தும் விட மனமில்லை

தாயுமானவர் உருகுகிறார்

இறைவா, நீ படைத்த எத்தனையோ உயிர்களில் என்னைப் போல் ஒரு பாவி உண்டா ? உடம்பால் செய்த உலகம் பொய் என்று அறிந்தும் ஒன்றையும் எள்ளளவும் துறக்காமல் இருப்பவர் எங்கேனும் உண்டா ?

பாடல்

உண்டோநீ படைத்தவுயிர்த் திரளில் என்போல்
ஒருபாவி தேகாதி உலகம் பொய்யாக்
கண்டேயும் எள்ளளவுந் துறவு மின்றிக்
காசினிக்குள் அலைந்தவரார் காட்டாய் தேவே. 

சீர் பிரித்த பின்

உண்டோ நீ படைத்த உயிர் திரளில் என் போல் 
ஒரு பாவி தேகாதி உலகம் பொய்யாக் 
கண்டேயும் எள்ளளவும் துறவும் இன்றி 
காசினிக்குள் அலைந்தவர் யார் காட்டாய் தேவே 

பொருள்


குசேலோபாக்கியானம் - வறுமை

குசேலோபாக்கியானம் - வறுமை 


குசேலனுக்கு இருபத்தி ஏழு பிள்ளைகள். வறுமை வறுமை எங்கு பார்த்தாலும். அந்த நிலையிலும்  சென்று பிச்சை பெறாமல் , காட்டிற்கு சென்று, அங்கு காட்டுச் செடியாய் வளர்ந்து இருக்கும் புற்களில் இருந்து விழும் யாரும் விரும்பாத தானியங்களை பொறுக்கி எடுத்து வந்து மனைவியிடம் தருவார்.

பாடல்

இருநிலத் தியாவர் கண்ணும் 
          ஏற்பதை இகழ்ச்சி யென்ன
     ஒருவிய உளத்தான் காட்டில் 
          உதிர்ந்துகொள் வாரும் இன்றி
     அருகிய நீவா ரப்புற் 
          றானியம் ஆராய்ந் தாராய்ந்(து)
     உருவவொண் ணகத்தாற் கிள்ளி
          எடுத்துடன் சேரக் கொண்டு.

சீர் பிரித்த பின் 

இரு நிலத்து யாவர் கண்ணும் ஏற்பதை இகழ்ச்சி என்ன 
ஒருவிய உள்ளத்தான் காட்டில் உதிர்ந்து கொள்வாரும் இன்றி 
அருகிய  நீவாரப் புல் தானியம் ஆராய்ந்து ஆராய்ந்து 
உருவ ஒண் நகத்தால் கிள்ளி எடுத்து உடன் சேரக் கொண்டு 

பொருள் 

Sunday, July 14, 2013

ஜடாயு - எல்லாம் என்னால தான்

ஜடாயு - எல்லாம் என்னால தான் 


 ஜடாயு    மிக உக்கிரமாக போர் புரிந்தான். கடைசியில் இராவணன், சிவன் தந்த சந்திரகாந்த வாளால் ஜடாயுவை வீழ்த்தினான்.

சீதை மிக மிக வருத்தப் பட்டாள் .

எல்லாம் தன்னால் தான் நிகழ்ந்தது என்று வருந்துகிறாள். வீட்டில் ஒரு துக்கம் என்று வரும் பொழுது, எல்லாவற்றிற்கும் நாம் தான் காரணம் என்று ஒரு குற்ற உணர்வு எழுவது எல்லோருக்கும் இயற்கை தான்.

சீதை நினைக்கிறாள், நான் இந்த வீட்டில் அடி எடுத்த வைத்த பின் என் குடும்பத்திற்கு பழி வந்தது (குல முறை பிறழ்ந்தது, மூத்தவன் முடி சூட்ட முடியவில்லை); என்னை இராவணன் தூக்கிக் கொண்டு போவதால் இராமனின் வில்லுக்குப் பழி வந்தது, இதோ இப்போது என்னால் இந்த ஜடாயுவும் மாள்கிறான் என்று சீதை வருந்துகிறாள்.

பாடல்


'கற்பு அழியாமை என் கடமை; ஆயினும், 
பொற்பு அழியா வலம் பொருந்தும் போர்வலான் 
வில் பழியுண்டது;  வினையினேன் வந்த 
இல் பழியுண்டது' என்று, இரங்கி ஏங்கினாள்.



பொருள்

திருக்குறள் - அழுக்காறு

திருக்குறள் - அழுக்காறு 




அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.

அழுக்காறு என்றால் பொறாமை. அழுக்கு ஆறு போல வருவதால் அழுக்காறு என்று பெயர் வைத்து இருப்பார்களோ ?

பொறாமை யார் கொள்கிறார்களோ அது அவர்களுக்குத் தான் நிறைய தீமை செய்கிறது.

வள்ளுவர் சொல்கிறார், நாம் யார் மேல் பொறாமை கொள்கிறோமோ, அவர்களை வென்றால் கூட பொறாமை நமக்குத் தீமை செய்து கொண்டே இருக்கும் என்கிறார்.

மேலும், அழுக்காறு உள்ளவர்களுக்கு வேறு பகைவர்களே வேண்டாம். அந்த அழுக்காரே அவர்களுக்கு பகைவர்கள் செய்யும் துன்பத்தைச்  செய்யும்.


அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது.



சீர் பிரித்தபின்

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு ஈன்பது

பொருள்


அழுக்காறு = பொறாமை

உடையார்க்கு = உடையவர்களுக்கு

அது சாலும் = அதுவே போதும் (வேறு எதுவும் வேண்டாம் )

ஒன்னார் = பகைவர்கள்

வழுக்கியும் = தோற்றபின்னும்

கேடு ஈன்பது  = கேடு தருவது.

ஒரு பகைவர் போன பின்னும், பொறாமை அடுத்தவன் மேல் பாயும். எனவே அது எப்போதும் துன்பம் தந்து கொண்டே இருக்கும்.



Saturday, July 13, 2013

இராமாயணம் - கம்பனில் காமம்

இராமாயணம் - கம்பனில் காமம் 


காமம் ஒரு உக்கிரமான உணர்ச்சி. ஊரெங்கும், உலகெங்கும் எல்லா நேரமும் ஓயாமல் காமம் கரை புரண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது. பேருந்தில், அலுவகலத்தில், இணைய தளங்களில், எங்கும் காமம் கசிந்து கொண்டே தான் இருக்கிறது.


ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் உணர்ச்சி போராட்டங்களை யாரும் படம் பிடித்து விடலாம் - கவிதையில், கட்டுரையில், கதைகளில்.

எங்கும் விரிந்து கிடக்கும் காமத்தை பற்றி சொல்லுவது கடினமான விஷயம்.

கம்பன் சொல்லுகிறான்....

கானகத்தில் காமத்தில் கண் சிவந்த சிங்கமும் அதன் துணையும் மலை குகைக்குள் செல்லுவதும், மலை போன்ற யானைகள் காம வசப் பட்டு அவற்றின் உடலில் இருந்து வழியும் மதன நீரால் மண் குழைந்து சகதியாக மாறி, அந்த சகதியில் செல்லும் தேர்கள் வழுக்கி விழுகின்றன.....

பாடல்


தழல்விழி ஆளியும் துணையும் தாழ்வரை
முழைவிழை, கிரிநிகர் களிற்றின் மும்மத
மழைவிழும் ,விழும்தொறும் மண்ணும் கீழுற
குழைவிழும் , அதில் விழும் கொடித்திண்தேர்களே!


பொருள்


ஜடாயு - படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான்

ஜடாயு - படர் கற்பினாள்பால் மோகம் படைத்தான் 




இராவணன் முத்தலை சூலாயுதத்தை ஜடாயு மேல் எறிந்தான். அந்த வேல், ஜடாயுவை தாக்காமல் திரும்பி வந்தது. இராவணன் அடுத்த படையை எடுப்பதற்கு முன் பறந்து வந்து இராவணனின் தேர் பாகனின் தலையை கொய்து இராவணன் மேல் எறிந்தான்.

பாடல்

வேகமுடன், வேல இழந்தான் படை வேறு எடாமுன்,
மாகம் மறையும்படி நீண்ட வயங்கு மான் தேர்ப்
பாகம் தலையைப் பறித்து, படர் கற்பினாள்பால்
மோகம் படைத்தான் உளைவு எய்த, முகத்து எறிந்தான்.

பொருள்


ஜடாயு - உவமையின் உச்சம்

ஜடாயு - உவமையின் உச்சம் 


இந்தப் பாடல் கம்பனின் உவமையின் உச்சம்.

ஜடாயுவுக்கும் இராவணனுக்கும் பலத்த போர்.

இராவணன் சக்தி வாய்ந்த ஒரு சூலாயுதத்தை ஜடாயு மேல் எறிகிறான்.

உன் சூலாயுதத்தை கண்டு நான் பயப்படுவேன் என்று நினைக்கிறாயா என்று துணிந்து தன் மார்பை காட்டுகிறான் ஜடாயு. அந்த வேல் அவனை நோக்கி வேகமாக வருகிறது. ஒரு நிமிடம் திகைத்து பின் மீள்கிறது.

அந்த வேல் எப்படி நின்றது பின் எப்படி சென்றது என்று கூற வந்த கம்பன் மூன்று உவமைகளை சொல்கிறான். இதுவரை யாரும் யோசித்துக் கூட இருக்க முடியாது.....

முதல் உவமை - விலை மகளின் வீட்டுக்கு கையில் பணம் இல்லாமல் சென்றவன் எப்படி, அவள் வீட்டு வாசலில் தயங்கி நின்று பின் திரும்புவானோ அது மாதிரி திரும்பியது. அவள் வீட்டு வாசலில் நிற்பான்...உள்ளே போகலாமா அல்லது வேண்டாமா என்று தயங்குவான், வாசலில் நின்று அவள் வெளியே வரும்போது பார்க்கலாம் என்று நிற்பான் . பின் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு போவான் அது போல அந்த சூலாயுதம் நின்று பின் சென்றது.

இது முதல் உதாரணம், முதல் உவமை.


இரண்டாவது, ஒருவர் வீட்டுக்கு விருந்தினாராய் சென்ற ஒருவன், சரியானபடி உபசாரம் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தி திரும்புவானோ, அப்படி திரும்பியது. முதலில் ஆர்வமாய் போவான், பின் சிறப்பான உபசாரம் இல்லை என்றால் எப்படி மனம் வருந்தி செல்வானோ அது போல் வேகமாக சென்ற சூலாயுதம், வருந்தி மீண்டது. இப்படி ஒரு நல்லவனை கொல்ல வந்தோமே என்று வருந்தி சென்றது.

இது இரண்டாவது உதாரணம்.

அடுத்தது, ஒரு உண்மையான துறவியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துவிட்ட ஒரு குடும்பப் பெண் எப்படி மனம் வருந்தி தன் பார்வையை சட்டென்று எப்படி திருப்பிக் கொள்வாளோ, அப்படி அந்த சூலாயுதம் வெட்கி திரும்பியது.

பாடல்

பொன் நோக்கியர்தம் புலன் 
     நோக்கிய புன்கணோரும், 
இன் நோக்கியர் இல் வழி 
     எய்திய நல் விருந்தும், 
தன் நோக்கிய நெஞ்சுடை யோகியர் 
     தம்மைச் சார்ந்த 
மென் நோக்கியர் நோக்கமும், ஆம் 
     என மீண்டது, அவ்வேல்.

பொருள்


Friday, July 12, 2013

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும்

புற நானூறு - உயர்ந்ததும் இழிந்ததும் 



உலகிலேயே மிக அற்பமான செயல் ஒருவரிடம் சென்று யாசகம் கேட்பது. அதை விட அற்பமானது ஒன்று இருக்கிறது. இலட்சக் கணக்கில், கோடிக் கணக்கில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு, பசிக்கிறது என்று யாசகம் கேட்டு வருபவனுக்கு ஒன்றும் கொடுக்க மாட்டேன் என்று சொல்லுவது, பிச்சை எடுப்பதை விட கேவலமானது. சில்லறை இல்லை அந்தப் பக்கம் போய் கேளு என்று வயதான பாட்டியை, கை இல்லாத பிச்சை காரனை விரட்டுவது, அந்த பிச்சை எடுப்பதை விட கேவலம்.

உண்மைதானே. அவனிடம் இல்லை. உதவி கேட்க்கிறான். வைத்துக் கொண்டு பொய் சொல்லுவது உயர்ந்ததா தாழ்ந்ததா ?

கேட்காமலே ஒருவருக்கு வலிய சென்று உதவி செய்வது உயர்ந்தது. அதைவிட உயர்ந்தது எது என்றால், அப்படி தந்த உதவியை வேண்டாம் என்று சொல்லுவது.

அப்படிச் சொன்னவர் திருநாவுக்கரசர்.

கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறவின் விளங்கினார்

அப்படி எல்லாம் வாழ்ந்த பரம்பரை நம் பரம்பரை.



ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று

என்பது புறநானூற்றுப் பாடல்.

இதைப் பாடியவர் கழை தின் யானையார் என்ற புலவர்


ஜடாயு - வில் இட்டு உயர்ந்த நெடு மேகம்

ஜடாயு - வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் 


இலக்கியங்கள் நம் கற்பனையின் எல்லைகளை மிக மிக விரிவுபடுத்கின்றன.  நாம் சிந்திக்க முடியாத அளவுக்கு நம் கற்பனையை விரிவாக்குகின்றன.

இறை என்ற சக்தி நம் கற்பனைக்கு எட்டாதது.

எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி என்பார் மணிவாசகர்.

நம் அறிவு என்பது நம்  உணர்வுக்கு உட்பட்டது. நாம் உணராத ஒன்றைப் பற்றி நமக்கு எந்த அறிவும் கிடையாது. கண் இல்லாதவனுக்கு நிறம் பற்றிய அறிவு இருக்காது.

நாம் , நம் புலன்களின் எல்லைகளை கருவிகளின் துணை கொண்டு விரிவாக்கலாம். ஒரு தொலை நோக்கியின் உதவியால் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள பொருகளை பார்க்க முடியும். இப்படியே புதுப்  புது கருவிகள்  நம் புலன்களின் எல்லைகளை பெரிதாக்குகின்றன.

மனம் என்ற கருவியின் எல்லையை எப்படி விரிவாக்குவது.

கற்பனை தான் நம் மன எல்லைகளை விரிவாக்கும் கருவி.

எப்படி கற்பனையை விரிப்பது ?

இராமாயணம் போன்ற காப்பியங்கள் நம் கற்பனையை விரிவாக்க உதவுகின்றன

வானவில் பாத்து இருகிறீர்களா ? மழை நேரத்தில் வான வில் தெரியும். கம்பன் சொல்கிறான்,

அந்த வானவில்லை மேகங்கள் தூக்கி வந்ததாக கற்பனை பண்ணுகிறார் . அது எப்படி இருக்கிறது என்றால் இராவணனின் வில்லை ஜடாயு வானில் தூக்கிக்  கொண்டு பரந்த மாதிரி இருந்ததாம்.

வானவில் மாதிரி இராவணணின் பெரிய வில்.

மேகம் பறப்பது மாதிரி பறக்கும் ஜடாயு

பாடல்

எல் இட்ட வெள்ளிக் கயிலைப் 
     பொருப்பு, ஈசனோடும் 
மல் இட்ட தோளால் எடுத்தான் 
     சிலை வாயின் வாங்கி, 
வில் இட்டு உயர்ந்த நெடு மேகம் 
     எனப் பொலிந்தான்- 
சொல் இட்டு அவன் தோள் வலி, 
     யார் உளர், சொல்ல வல்லார்?


பொருள்


திருக்குறள் - நட்பின் கடமை

திருக்குறள் - நட்பின் கடமை 


நட்பு என்றால் என்ன ?

நண்பர்கள் என்றால் நாம் பொதுவாக என்ன நினைப்போம் ?

அவர்கள் வீட்டில் ஏதாவது நல்லது கெட்டது நடந்தால் அழைப்பார்கள். அதே போல் நாமும் அழைப்போம். பணம் காசு வேண்டும் என்றால் ஒருத்தருக்கு ஒருவர் உதவி செய்வது. முடிந்தால் அப்பப்ப மெயில் அனுப்புவது, அல்லது போன் பண்ணுவது.

இதுதானே நண்பர்களுக்கு அடையாளம் ?

வள்ளுவர் நட்பை ஒரு மிகப் பெரிய உயரத்திற்கு எடுத்துச் செல்கிறார்.

வள்ளுவருக்கு எல்லாமே அறம் தான். வாழ்கையை அற வழியில் செலுத்த நட்பு மிக மிக அவசியம்.


அழிவின் அவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.

வள்ளுவர் கூறுகிறார்

நண்பன் அறம் அல்லாத வழியில் செல்லும் போது அவனை (ளை ) தடுத்து நிறுத்தி, அவனை நல்ல வழியில் செலுத்தி அப்படி நல் வழியில் செல்லும் போதும் துன்பம் வந்தால் அவனோடு சேர்ந்து அந்த துன்பத்தை அனுபவிப்பது நட்பு.

அற வழியில் செல்லும் போது துன்பம் வருமா என்றால் பரிமேல் அழகர் சொல்லுகிறார் தெய்வத்தால் வரும் கேடு என்கிறார். முன் வினைப் பயனால் வரும் கேடு.

 
அழிவின் அவைநீக்கி = அழிவு வரும் போது அவற்றை நீக்கி. அழிவு பல விதங்களில் வரலாம். அறம் அல்லாத வழியில் செல்வதால் அழிவு வரும் என்கிறார் பரிமேல் அழகர். நீங்கள் அதை விரித்து பொருள் கொள்ளலாம். அழிவில் இருந்து நண்பர்களை காக்க வேண்டும்.

ஆறுய்த்து = ஆறு + உய்த்து = ஆறு என்றால் வழி. வழி என்றால் நல்ல வழி என்பது பெரியவர்களின்எண்ணம் . நெறி அல்லா நெறி தன்னை, நெறியாக கொள்வேனை என்பார் மாணிக்க வாசாகர். நெறி அல்லாத நெறி என்பது தீய நெறி. நெறி என்றால் நல்ல நெறிதான். நல்ல வழியில் நண்பர்களை செலுத்தி.

அழிவின்கண்  = இதையும் மீறி அழிவு வந்தால்

அல்லல் உழப்பதாம் நட்பு = அந்த துன்பத்தை, நண்பரோடு சேர்ந்து அனுபவிப்பது நட்பு

நமக்கு எத்தனை நண்பர்கள் அப்படி இருக்கிறார்கள் ?

நாம் எத்தனை பேருக்கு அப்படி நண்பர்களாய் இருக்கிறோம் ?

நம் பிள்ளகைளுக்கு அப்படி நண்பர்களாய் இருக்க கற்றுத் தருவோம்.













Thursday, July 11, 2013

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும்

குசேலோபாக்கியானம் - செல்வரும் கடலும் 


நிறைய செல்வம் இருக்கும். ஆனால், பிறருக்கு உதவி செய்யும் மனம் இருக்காது.

செல்வம் குறைவாக இருந்தால் கூட, சில பேருக்கு மற்றவர்களுக்கு உதவும் ஈர உள்ளம் இருக்கும்.

அது எப்படி இருக்கிறது என்றால்

கடலில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால், அதனால் யாருக்கும் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஆனால், கரையில் சின்ன சின்ன ஊற்று இருக்கும். அந்த ஊற்று, தன் நீரின் மூலம் மக்கள் தாகம் தீர்க்கும்

பாடல்


  பெருகிய செல்வ ருள்ளும் 
          பயனிலார் உளராற் பேணி 
     அருகிய செல்வ ருள்ளும் 
          பயனுளார் உளரென் றாய்ந்து 
     பெரியவர் சொலுஞ்சொல் தேற்றும் 
          பெரியநீர்க் கடலும் ஆங்காங்
     குரியவெண் மணற்சிற் றூறற்
          கேணியும் உரிய நீரால்.

பொருள் 

ஜடாயு - இராவண ஜடாயு யுத்தம்

ஜடாயு - இராவண ஜடாயு யுத்தம் 


ஜடாயு எவ்வளவோ புத்தி சொன்னான்.

இராவணன் கேட்டான் இல்லை.

இருவருக்கும் பெரிய சண்டை மூழ்கிறது.

கம்பனின் யுத்த வர்ணனைகள் பற்றி தனியே ஒரு புத்தகம் எழுதலாம்.

சண்டையில், இராவணன் ஜடாயுவை தாக்கி அவனை மூர்ச்சையாக செய்கிறான்.

ஜடாயு சுதாரித்துக் கொண்டு எழுகிறான்

எழுந்தவுடன் இராவணனை பயங்கரமாக தாக்குகிறான் அவன் பத்து தலைகளையும் தன் அலகினால் கொத்தினான், தன் கூறிய நகத்தால் கீறினான், அவனுடைய பறந்த (பரந்த) சிறகுகளால் அடித்தான்..

பாடல்
 

ஒத்தான் உடனே உயிர்த்தான்; உருத்தான்; 
     அவன் தோள் 
பத்தோடு பத்தின் நெடும் பத்தியில் 
     தத்தி, மூக்கால் 
கொத்தா, நகத்தால் குடையா, 
     சிறையால் புடையா, 
முத்து ஆர மார்பில் கவசத்தையும் 
     மூட்டு அறுத்தான்.

பொருள்


Wednesday, July 10, 2013

திருக்குறள் - காதலியின் கடிதம்

திருக்குறள் - காதலியின் கடிதம் 


தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.



காதலியிடம் இருந்து உங்களுக்கு கடிதம் வந்து இருக்கிறதா ?

முதன் முதலில் அவள் எழுதிய கடிதம் இருக்கிறதே...அதற்கு ஈடு இணை கிடையாது. அது தான் உலகத்தில் உள்ள இலக்கியங்களிலேயே மிக உன்னதமான இலக்கியம்.

அது தரும் சந்தோஷம் உலகத்தில் வேறு எதுவும் தராது. அந்த காகிதத்தை தொட்டுப் பார்த்தால் அவள் விரலைத் தொடுவது மாதிரி இருக்கும்.

அந்த காகிதத்தில் அவள் மனம் மணம் வீசும்.

உச்சி வெயிலில் அந்த கடித்ததை படித்தால் கூட உள்ளுக்குள் குளிர் காற்று வீசும்.

அதைப் படிக்கும் போது பசி தாகம் போய் விடும்.

நட்சத்திரங்கள் காதில் வந்து இரகசியம் பேசும்.

பசி சுகமாய் இருக்கும்.

நிலவு உங்களைப் பார்க்கும் புன்னகை வீசும்.

தெருவோர மரங்கள் சில பல பூக்களை நீங்கள் நடக்கும் வழியில் உதிர்க்கும்.

கால்களுக்கு இறக்கை முளைக்கும்.

அந்த மேகங்கள் உங்கள் கைக் கெட்டும் தூரத்தில் இருக்கும்.

தொலைக் காட்சியில் வரும் அத்தனை பாடல்களும் இனிமையாக இருக்கும்.

படம் வரையத் தோன்றும்.

கவிதை ஊற்று பொங்கும். வார்த்தைகள் எல்லாம் காணாமல் போகும். வெற்றுத் தாளில் எழுதாத கவிதை ஆயிரம் இருக்கும்.

அவள் எழுதிய கடிதத்தில் இருக்கும் ஒவ்வொரு எழுத்தும் உங்களை கை நீட்டி அழைப்பது போல இருக்கும்.

அம்மாவும், தங்கையும், அக்காவும் தேவதைகளாகத் தெரிவார்கள்.

பாடல்

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

பொருள் 

தொடலைக் = மாலை அணிந்த அவள். தங்கச் செயின் என்று வைத்துக் கொள்ளுங்களேன்

குறுந்தொடி = தொடி என்றால் வளையல். குறுந்தொடி என்றால் சின்ன சின்ன வளையல், அணிந்த அந்தப் பெண்

தந்தாள் = தந்தாள்

மடலொடு = மடல் என்றால் லெட்டர். மடலொடு என்றால் லெட்டர் கூட வேறு ஒன்றையும் தந்தாள்


மாலை உழக்கும் துயர் = மாலை நேரும் தரும் துயரையும் தந்தாள்.

இந்த காதல் மத்த நேரங்களில் இருக்கும் என்றாலும், மாலை நேரத்தில் ரொம்பவும் படுத்தும். அப்படி படுத்தும் துன்பத்தை அவள் தந்தாள். அவளை பார்பதற்கு முன்  இந்த துன்பம் இல்லாமல் இருந்தது. இப்பதான் இந்த இம்சை.

அவளுடைய மடல் இந்த துன்பத்திற்கு மருந்து போல. ஒரு ஆறுதல் போல. அவளைப் பார்க்க முடியாவிட்டாலும் , அவளுடைய லெட்டெரைப் பார்த்தாவது ஆறுதல் அடையலாம்.

இல்லை இல்லை...இந்த லெட்டெர் எங்க ஆறுதல் தருது...

இதை படிக்க படிக்க அவளை இப்பவே போய் பாக்கனும்னு தோணுது...நாளைக்கு அவளைப் பார்க்கும் போது  எப்படி இருப்பாள்...வெட்கப் படுவாளா ....

இது எல்லாம் அனுபவிச்சாதான் தெரியும்னு வள்ளுவர் சொல்றார்...எனக்கு என்ன தெரியும்....



ஜடாயு - கரும்பு உண்ட சொல்

ஜடாயு - கரும்பு உண்ட சொல்


இராவணா, இராமன் வரும் முன், இந்த சீதையை என்னிடம் கொடுத்துவிட்டு ஓடி விடு என்று ஜடாயு சொன்னான்.

இராவணனுக்கு பயங்கர கோபம்.

அடேய் ஜடாயு, என் வாள் உன் மார்பை புண் ஆக்குவதற்குள் இங்கிருந்து ஓடி விடு. கொதிக்கின்ற இரும்பின் மேல் விழுந்த நீர் எப்படி மீளாதோ அது போல் இந்த கரும்பினும் இனிய சொல்லினை உடையவள் என்னிடம் இருந்து மீள மாட்டாள்

என்று கர்ஜிக்கிறான்


பாடல்


'வரும் புண்டரம்! வாளி  உன் மார்பு உருவிப் 
பெரும் புண் திறவாவகை  பேருதி நீ; 
இரும்பு உண்ட நீர்  மீளினும், என்னுழையின் 
கரும்பு உண்ட சொல் மீள்கிலள்; காணுதியால்,'

பொருள்


Tuesday, July 9, 2013

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு

அபிராமி அந்தாதி - அடியாரை தொழும் அவர்க்கு



 மெல்லிய நுண் இடை மின் அனையாளை விரிசடையோன் 
புல்லிய மென் முலைப் பொன் அனையாளை, புகழ்ந்து மறை 
சொல்லியவண்ணம் தொழும் அடியாரைத் தொழுமவர்க்கு, 
பல்லியம் ஆர்த்து எழ, வெண் பகடு ஊறும் பதம் தருமே.

பட்டருக்கும் அபிராமிக்கும் உள்ள உணர்வு, உறவு புரிந்து கொள்ள முடியாத ஒன்று. அது பக்தியா ? காதலா ? அன்பா ? சிநேகமா ? இது எல்லாவற்றையும் கடந்து வார்த்தையில் வராத ஒரு உறவா ?

அபிராமியை பார்க்கும் போதெல்லாம் அவளின் அழகு அவரை கொள்ளை கொள்கிறது. உடனே அவளுடைய கணவனின் நினைப்பும் வருகிறது. அவளின் அழகை வர்ணித்த கையோடு சிவனைப் பற்றியும் ஒரு சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறார்.

ஏன் ?

மெல்லிய நுண்மையான இடையை உடையவளே;  மின்னலைப் போன்றவளே; சடை முடியை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் அணைக்கும் மென்மையான மார்புகளை உடையவளே ; பொன் போன்றவளே; உன்னை மறைகள் சொல்லிய வண்ணம் தொழும் அடியாரைத் தொழும் அடியார்களுக்கு  மேள தாளத்துடன் ஐராவதம் என்ற வெள்ளை யானை மேல் செல்லும்  வரம் கிடைக்கும்.


பொருள்

மெல்லிய நுண் இடை = மெலிந்த சிறிய இடை

மின் அனையாளை  = மின்னலைப் போன்றவளை

விரிசடையோன் = சடையை விரித்துப் போட்டுக் கொண்டிருக்கும் சிவன் 

புல்லிய மென் முலைப் = அணைத்த மென்மையான மார்புகளை உடையவளை

பொன் அனையாளை = பொன் போன்ற நிறம் உடையவளை

புகழ்ந்து = அவளைப் புகழ்ந்து

மறை சொல்லியவண்ணம் = மறை நூல்கள் சொல்லிய வண்ணம்

தொழும் அடியாரைத் = தொழுகின்ற அடியவர்களை

 தொழுமவர்க்கு, = தொழுகின்றவர்களுக்கு

பல்லியம் ஆர்த்து எழ = பல வித வாத்தியங்கள் ஒலி எழுப்ப

வெண் பகடு ஊறும் பதம் தருமே = வெண்மையான யானை (ஐராவதம்) மேல் செல்லும் பதவி தருமே



ஜடாயு - காமம், காதையும் மறைக்கும்

ஜடாயு - காமம், காதையும் மறைக்கும் 


தன்னிடமுள்ள வரங்களை நினைத்து இராவணனுக்கு இறுமாப்பு. நம்மை யார் என்ன செய்ய முடியும் என்ற நினைப்பில். முக்கோடி வாழ் நாள், முயன்று உடைய பெரும் தவம், எக்கோடி யாராலும் வெல்லப் படாய் என்ற வரங்களை நினைத்து, நினைத்ததை முடித்து வந்தான்.

இராவணா, உன் வரங்களும் வித்தைகளும் இராமன் வில்லில் அம்பை தொடுக்கும்வரை தான் இருக்கும்.

அதற்கப்புறம், அந்த வரங்கள் பலிக்காது என்ற உண்மையை சொல்கிறான்.

நடந்தது அது தானே. உண்மை சில சமயம் நாம் எதிர் பார்க்காத இடத்தில் இருந்து வெளிப் படுகிறது. நாம் தான் காது கொடுத்து கேட்பதில்லை.

இராவணனுக்கு இந்த உண்மை மனதில்  தைத்திருந்தால் ?

விதி.

காமம் காதை மறைத்தது.

பாடல்

'புரம் பற்றிய போர் விடையோன் அருளால்
வரம் பெற்றவும், மற்று  உள விஞ்சைகளும்,
உரம் பெற்றன ஆவன-  உண்மையினோன்
சரம் பற்றிய சாபம்      விடும் தனையே.


பொருள்


Monday, July 8, 2013

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும்

குசேலோபாக்கியானம் - கடலும் கண்ணனும் 


குசேலருக்கு எல்லாம் கண்ணனாகத் தெரிகிறது.  கடலைப் பார்க்கிறார். அது கண்ணனாகவே தெரிகிறது.

எப்படி ?

கடலில் சங்கு இருக்கிறது, அதன் கரைகளில் தங்கிய நீர் நிலைகளில் குவளை மலர்கள் இருக்கிறது, ஆமையும் மீனுமாகி உயிர்களை காக்கிறது, சிவந்த பவளம் இருக்கிறது, அதன் அடியில் பொன் இருக்கிறது, குளிர்ச்சி இருக்கிறது, கருமை நிறமாக இருக்கிறது, மேகமாகப் பொழிகிறது.....

இது எல்லாம் கண்ணன் தானே .....கண்ணனிடமும் சக்கரம் இருக்கிறது, அவன் நாபிக் கமலத்தில் இருந்து தாமரை மலர் பூத்தது, மச்ச அவதாரமும், கூர்ம அவதாரமும் எடுத்து உயிர்களை காத்தான், அவன் அதரம் சிவந்த நிறம் பவளம் போல், பொன் போன்ற திருமகளை அணைத்தவன், கருமை நிறத்தவன், தன் அருளை மேகம் போல் பொழிபவன் ....

பாடல்

சீருறு சங்கம் வாய்ந்து
          செழுங்குவ லயமுண் டாக்கி
     ஓருறு கமடம் மீனம்
          உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி
     ஏருறு பவளச் செவ்வாய்
          இயைந்துபொன் புணர்ந்து தண்ணென்
     காருறு நிறமுங் காட்டிக்
          கண்ணனைத் துணையும் வாரி.


பொருள் 

சீருறு சங்கம் வாய்ந்து =  சிறப்பான சங்கை கொண்டு

செழுங்குவ லயமுண் டாக்கி = செழுமையான குவளை மலர்களை உண்டாக்கி

ஓருறு கமடம் மீனம் = (ஆராயும் போது , ஆமை மீன்

உருவங்கொண் டுயிர்கள் ஓம்பி = உருவம் கொண்டு உயிர்களைக்  காத்து

ஏருறு பவளச் செவ்வாய் =  அழகான பவளம் போன்ற சிவந்த வாய் (கபெற்ற)

இயைந்துபொன் புணர்ந்து  = பொன்னை தானுள் கொண்டு, பொன் போன்ற திருமகளைப் புணர்ந்து

 தண்ணென் காருறு நிறமுங் காட்டிக் = குளிர்ச்சியான கருமையான நிறத்தை காட்டி

கண்ணனைத் துணையும் வாரி = கண்ணன் போல் துணை புரியும் மழை



ஜடாயு - தெரியாமல் உண்ட விஷம்

ஜடாயு - தெரியாமல் உண்ட விஷம்


ஜடாயு மேலும் இராவணனிடம் சொல்லுவான்....

கோபம் கொண்டு வரும் யானை மேல் மண் உருண்டையை எடுத்து எரிவதையா நீ விரும்புகிறாய் ? அது உன்னை கொல்லும் என்று நீ அறியவில்லையா ? விஷத்தை தெரியாமல் உண்டாலும் அது கொல்லாமல் விடுமா.

பாடல்

'கொடு வெங் கரி கொல்லிய வந்ததன்மேல் 
விடும் உண்டை கடாவ விரும்பினையே? 
அடும் என்பது உணர்ந்திலை ஆயினும், வன் 
கடு உண்டு, உயிரின் நிலை காணுதியால்!

பொருள்

திருக்குறள் - நிலவும் நட்பும்

திருக்குறள் - நிலவும் நட்பும் 


வள்ளுவர் நிலவைப் பார்க்கிறார். அது நாளும் வளர்கிறது. தேய்கிறது. ஒரு நாள் பௌர்ணமியாகிறது . ஒரு நாள் அம்மாவாசையாகிறது. இதை பார்க்கும் போது வள்ளுவருக்கு நட்பு பற்றி தோன்றுகிறது.


நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்நீர பேதையார் நட்பு.

நல்லவர்களுடனான நட்பு பிறை மதி நாளும் வளர்ந்து முழு நிலவாவது போல வும் , பேதையர் நட்பு முழு நிலவு நாளும் தேய்ந்து அம்மாவாசையாக போவதும் போல இருக்கிறது என்கிறார் 

நீரவர் கேண்மை பிறை நிறை நீர = நல்லவர்களின் நட்பு பிறை (நிலவு) நிறைவதைப் போல 

பேதையார் நட்பு மதிப் பின் நீர - பேதையர் நட்பு முழு நிலவு பின் தேவதைப் போல 

சரி அவ்வளவுதானா ?

இது ஒண்ணும் பெரிய விஷயம் மாதிரி தெரியலையே...

இரண்டு அறிவுடையவர்களுக்கு இடையேயான நட்பு முதலில் மிக மிக சாதரணமாகத்தான்  தொடங்கும். ஏன் என்றால் இருவரும் ஒருவர் அறிந்து இருக்க மாட்டார்கள் . அறிவு எதையும் ஆராயாமல் ஏற்றுக் கொள்வது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, ஒருவரை ஒருவர் அறிந்து, ஒருவர் மற்றவரின் அறிவை , திறமையை அறிந்து, வியந்து அந்த நட்பு ஆழமாக மாறும் 


ஆனால் இரண்டு முட்டாள்கள் நட்பு கொள்ளும் போதோ, முதல் நாளே ஏதோ   பலநாள்  பழகியவர்களைப் போல ஆரம்பிக்கும், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும், ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்து கொள்ளாமல் நட்பு கொண்டு விட்டு  , பின் நாளும் அவஸ்த்தைப் பட்டு பின் ஒரு நாள் அந்த நட்பு முறிந்தே போகும் . அம்மாவாசை நிலவைப் போல. 

அதாவது, நட்பு கொள்ளும்போது நிதானமாக இருங்கள் என்கிறார். சிறிது சிறிதாக வளரும் நட்பு  பின் பிரகாசமாய் இருக்கும், எல்லோருக்கும் ஒளி தரும்.