Saturday, June 15, 2019

சிலப்பதிகாரம் - மங்கல வாழ்த்து

சிலப்பதிகாரம்  - மங்கல வாழ்த்து 


சொற்களுக்கு வலிமை உண்டு என்று நம் முன்னவர்கள் நம்பினார்கள்.

தமிழில் மங்கல சொற்கள், அமங்கல சொற்கள் என்று உண்டு.

எப்போதும் அமங்கல சொற்களை தவிர்த்து மங்கல சொற்களையே பயன்படுத்த வேண்டும். அமங்கல சொற்களை சொல்லுவதை விடுங்கள், அது காதில் கூட விழக் கூடாது என்று தான் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கெட்டி மேளம் என்ற ஒன்றை வைத்தார்கள்.

பூஜை செய்யும் போது மணி அடிப்பதும் அதற்குத்தான். யாராவது, அக்கம் பக்கத்தில் ஏதாவது சொல்லுவார்கள். அது பூஜை செய்யும் போது நம் காதில் விழும். மனம் அந்த சொல்லைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னேயே போய் விடும். அதைத் தவிர்க்கத்தான், மணி அடிப்பது.

கோவிலிலும், பூஜை நடக்கும் போது பெரிய மணியை அடிப்பார்கள். காண்டா மணி என்று அதற்குப் பெயர்.

கடவுள் வாழ்த்தோடு காப்பியங்களை, உயர்ந்த நூல்களை தொடங்குவது மரபு.

கவிஞன் தான் வழிபடுகின்ற கடவுளையாவது அல்லது தான் பாட எடுத்துக் கொண்ட பொருளுக்கு ஏற்புடைய கடவுளை வாழ்த்தி நூலை தொடங்குவது மரபு என்பார் பரிமேலழகர்.

சிக்கல் என்ன என்றால், எந்தக் கடவுளை வாழ்த்தினார் என்று ஆராய புறப்பட்டுவிடும் ஒரு கும்பல்.  அந்தக் கடவுள் அவர்கள் வணங்கும் கடவுள் இல்லை என்றால், அந்த நூலையே புறக்கணித்து விடுவார்கள்.

அது சைவ நூல், அது வைணவ நூல் என்று பேதம் காணத் தொடங்கி விடுவார்கள்.

திருவள்ளுவர் "ஆதி பகவன்", "வாலறிவன்" , "எண் குணத்தான் " என்று சொன்னார்.  அது எல்லாம் சமண சமயக் கடவுள். எனவே திருவள்ளுவர் ஒரு சமணர் என்று  முத்திரை குத்தி விட்டார்கள்.

திருவள்ளுவருக்கே அந்தக் கதி.

இளங்கோ அடிகள், மரபில் இருந்து சற்றே விலகுகிறார் .

காலத்தில் இறங்கிய முதல் பந்திலேயே சிக்ஸர் அடிப்பது போல, அதிரடியாக  முதல் பாடலிலேயே புரட்சியை ஆரம்பிக்கிறார்.

கடவுளை விட்டு விட்டு, இயற்கையை வாழ்த்துகிறார்.

நிலவை, சூரியனை, மழையை, கதை தொடங்கும் நிலத்தை போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவும், சூரியனும், மழையும் அனைவருக்கும் பொது தானே. என் சூரியன், உன் சூரியன் என்று உரிமை கொண்டாட முடியாதே?

பாடல்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.

ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.

மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.

பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

பொருள்

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்! = நிலவை போற்றுவோம், நிலவை போற்றுவோம்

கொங்கு = தேன் ("கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறை தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ..." பாடல் ஞாபகம் வருகிறதா?)

அலர் = நிறைந்த

தார்ச் = மாலை

சென்னி = தலை

குளிர் = குளிர்ந்த

வெண்குடை போன்று, = வெண் கொற்ற குடை போல

இவ் அம் கண் உலகு அளித்தலான். = இந்த உலகை பாதுகாத்தலால்



ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!- = சூரியனை போற்றுவோம், சூரியனை போற்றுவோம்

காவிரி நாடன் = காவிரி நாடன், சோழன்

திகிரிபோல் = ஆணைச் சக்கரம் போல

பொன்  கோட்டு  = பொன்  மலை

மேரு வலம் திரிதலான். = மேருவை சுற்றி வருவதால்


மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!- = சிறந்த மழையை போற்றுவோம், மழையை போற்றுவோம்

நாம = பயத்தை தருகின்ற

நீர் = நீர்

வேலி = வேலி போல (கடல் நீர் உலகிற்கு வேலி போல இருக்கிறது)

உலகிற்கு = உலகிற்கு

அவன் = சோழ மன்னன்

அளி = கொடை , ஈகை

போல் = போல

மேல நின்று = மேலே நின்று

தான் சுரத்தலான் = அது சுரத்தலால்



பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்! = பூம்புகாரை போற்றுவோம்

வீங்கு நீர் = நிறைந்த நீர்

வேலி உலகிற்கு = வேலி போல் அமைந்த உலகிற்கு

அவன் குலத்தோடு = சோழன் குலத்தோடு

ஓங்கிப் = உயர்ந்து

பரந்து = விரிந்து

ஒழுகலான். = இருப்பதால்

நிலவும், சூரியனும், மழையும், கதைக் களத்தையும் போற்றி காப்பியத்தை தொடங்குகிறார்.

நிலவு, சூரியன், மழை - இது எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்றெல்லாம் பார்த்து பெய்வதில்லை மழை, காய்வதில்லை நிலவும் சூரியனும்.

அது போல, அனைத்து குடி மக்களுக்கும் அரசன் நடு நிலையாக இருப்பான், இருக்க வேண்டும்  என்று முதல் பாட்டிலேயே எடுத்து வைக்கிறார் அடிகளார்.


அரசன் சிறந்த கொடையாளனாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு, வறியவர்களுக்கு, முடியாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். வரி விதிப்பதும், போர் செய்வதும் மட்டும் அரசன் கடமை அல்ல. மழை போல பலன் கருதாமல்  உதவ வேண்டும். 

அரசன் இரக்கம் நிறைந்தவனாக இருக்க வேண்டும். நிலவு எப்படி குளிர்ந்து, சுகமாக இருக்கிறதோ அப்படி  இதமாக இருக்க வேண்டும். கொடுங்கோலனாக, மக்களை வாட்டி வதைப்பவனாக இருக்கக் கூடாது. 

அரசாங்கம் வெளிப்படையாக நடக்க வேண்டும். வெளிச்சத்தில், அனைவரும் காணும்படி  , ஒளிவு மறைவு இன்றி நடக்க வேண்டும். சூரிய ஒளி எப்படி அனைத்தையும்  மறைக்காமல் காண உதவுகிறதோ அப்படி. 

மங்கல வாழ்த்து முடிந்து, காப்பியத்துக்குள் நுழைவோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_15.html

9 comments:

  1. மங்கலம் அமங்கலம் என்பதில் எனக்கு முள்முனையளவும் உடன்பாடு இல்லை என்றாலும் இயற்கை தனைப் போற்றும் இளங்கோவடிகளின் மாண்பினால் பெரிதும் ஈர்க்கப்பட்டவன் நான். நான் பங்கேற்கும் எல்லா நிகழ்வுகளிலும் யாம் பாடும் வாழ்த்துப்பா இளங்கோவின் தாக்கம் தான்.

    "மரம்தனைப் போற்றுதும்!
    மரம்தனைப் போற்றுதும்!
    மாமழை பெற்றிட
    மரம்தனைப் போற்றுதும்!

    மாமழை போற்றுதும்!
    மாமழை போற்றுதும்!
    மானுடம் பேணிட
    மாமழை போற்றுதும்!

    மரம்தனை... மழைதனை...
    மானுடம் பெற்றிட
    ஞாயிறு போற்றுதும்!
    ஞாயிறு போற்றுதும்!"

    ReplyDelete


  2. பொன்மலை மேரு மலை என்பது திருக்கைலாயம், சிவபெருமான் வடிவே ஆகும். எனவே இப்பாடல் இயற்கைத் துதி என்பது பிழை ஆகும். சிவபெருமானை வலம் வரும் சூரியனைத் துதிக்கும் பாடல்! இந்து சமயத்தில் அனுதினமும் சூரியனை வழிபடுதல் மரபு ஆகும்.

    ReplyDelete
  3. மரம், மாமழை ஆகிய இரண்டையும் மானுடம் பெற்றிட ஞாயிறு போற்றுதும் என்ற வரிகள் மிக மிக அருமை. என் மனமார்ந்த பாராட்டுகள். என் பிள்ளைகளூக்கு நான் நிச்சயம் சொல்லித் தருவேன்.

    இளங்கோவடிகளின் இந்த பாடலை என் பிள்ளையின் பாடப் புத்தகத்தில் பார்த்து படித்து புரிந்துகொண்டேன். எளியேனுக்கு ஒரு ஐயம்.

    அரசனை மிகவும் அதிகமாக புகழும் வழக்கம் அந்த காலத்தில் இருந்தது. சிலப்பதிகாரத்தின் இந்த மூன்று செய்யுளகளிலும் இயற்கையின் நிகழ்வுகளை அரசனின் தன்மைகளுடன் ஒப்பிட்டு போற்றுவதை காணலாம்.

    இனி வரும்காலங்களில் மிகையாக யாரையும் புகழ்வது தவறு என்ற நெறியை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு துறவியான இளங்கோவடிகள் சோழ மன்னனை இந்த அளவுக்கு மிகையாக புகழ்வது அவருடைய துறவி என்னும் அந்தஸ்துக்கு இழுக்கில்லையா?

    உலகின் ஒரு சிறு பகுதியை ஆளும் அரசனின் அருளையும், அதிகாரத்தையும் உலகம் முழுவதிற்கும் நன்மை செய்யும் ஞாயிறு, நிலவு மற்றும் மழையை விட சிறப்பானவையாக காட்டுவது பொய்யுரையின் உச்சம் என்றே எண்ணத் தோன்றுகிறது. நான் இந்த பாடல்களை புரிந்து கொண்ட விதம் சரிதானா?

    முதல் செய்யுள்:
    மக்களைக் காத்து அருளும் தேன் சுமக்கும் மலர்மாலை அணிந்த சோழ மன்னனின் வெண்குடையைப் போல் உலகை குளிர்வித்துக் காக்கும் நிலவைப் போற்றுவோம்.
    இரண்டாம் செய்யுள்:
    காவிரி ஆறு பாயும் நிலப்பகுதியை ஆளும் சோழ மன்னனின் ஆணையானது சக்கரம் போல் உலகம் முழுவதும் போற்றப்படுவதைப் போல் கதிரவன் பொன்மயமான மேருமலையை வலம் வருவதால் கதிரவனைப் போற்றுவோம்.
    மூன்றாம் செய்யுள்:
    கடலை வேலியாக கொண்டிருக்கும் உலகிற்கு சோழ மன்னன் செய்யும் அருளைப் போல் வானத்திலிருந்து பொழியும் மழை நன்மை செய்வதால் மழையை போற்றுவோம்.

    ReplyDelete
    Replies
    1. அப்துல்September 5, 2022 at 5:42 PM

      அது மட்டுமல்ல இளங்கொ அடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பி என்று வேறு கூறப்படுகிறது. சேர மன்னனை வாழ்த்தாமல் சோழனை மட்டும் வாழ்த்துவது ஏன் ?

      Delete