Thursday, June 20, 2019

சிலப்பதிகாரம் - ஒசிந்த நோக்கினர்

சிலப்பதிகாரம் - ஒசிந்த நோக்கினர் 


இந்த கல்யாண வீட்டுல பார்த்தா, பெண்கள் தான் பெரிய முக்கியத்துவம் பெறுகிறார்கள். இருக்குறதுக்குள்ள நல்ல பட்டா எடுத்து கட்டிக்கிட்டு, வீட்ல இருக்குற நகையெல்லாம் அள்ளி மேல போட்டுக்கிட்டு, beauty பார்லர் ல போய் முகத்தை எப்படியெல்லாம் மெருகேற்ற முடியுமோ அப்படி எல்லாம் மெருகேற்றிக் கொண்டு கல்யாண வீட்டுக்கு  வந்து விடுவார்கள்.

வந்த பின், சும்மா நின்னால் யாராவது ஏதாவது சொல்லுவார்களோ என்ற பயத்தில் எதையாவது கையில் எடுத்து வைத்துக் கொள்வார்கள். ஒரு தட்டில் பூ, ஒரு குடத்தில் தண்ணீர், ஒரு கும்பாவில் சந்தனம், ஏதாவது சாமி படம் என்று எதையாவது கையில் வைத்துக் கொள்ளுவார்கள்.

சரி, கையில் வைத்துக் கொண்டு சும்மா நின்னா எப்படி, வேலை செய்வது மாதிரி காட்ட வேண்டுமே...அதற்காக, அங்கும் இங்கும் பரபரப்பாக நடப்பார்கள்....ஏதோ மூன்றாம் உலக யுத்தம் வரப்போவது மாதிரியும், இவர்கள் தான் அதை போய் தடுக்கப் போவது மாதிரியும் அப்படி ஒரு பரபரப்பு. "அந்த கல்கண்டை பாத்தியா, பால் வந்ததா, பூக் காரன் வந்தானா, வீடியோ ஆள் இன்னும் வரலியா ...." என்று தானும் டென்ஷன் ஆகி, இருக்கிற ஆளுகளையும் டென்ஷன் பண்ணிக் கொண்டு இருப்பார்கள். வேலை செய்கிறார்களாமாம்...

அங்கு உள்ள ஆம்பிளைங்க எல்லாம் பேசாம நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இந்த தையா தக்கா ஆட்டத்தை இரசித்துக் கொண்டு இருப்பார்கள்.

இது இன்று நேற்று நடப்பது அல்ல....சிலப்பதிகார காலம் தொட்டு நடக்கிறது.

இளங்கோ அடிகள் சொல்கிறார்

அந்தக் காலத்தில் புகைப் பட வசதி இல்லை. கண்ணகியின் திருமண நிகழ்ச்சியை ஒரு   வீடியோ, அல்லது குரூப் போட்டோ எடுத்தால் எப்படி இருக்கும் , அதை அப்படியே கண் முன் கொண்டு வந்து காட்டுகிறார் அடிகளார்....

பாடல்


விரையினர், மலரினர், விளங்கு மேனியர், 
உரையினர், பாட்டினர், ஒசிந்த நோக்கினர்,
சாந்தினர், புகையினர், தயங்கு கோதையர்,
ஏந்துஇள முலையினர், இடித்த சுண்ணத்தர்,
விளக்கினர், கலத்தினர், விரிந்த பாலிகை
முளைக் குடம் நிரையினர், முகிழ்த்த மூரலர்,
போதொடு விரி கூந்தல் பொலன் நறுங் கொடி அன்னார், 


பொருள்

விரையினர் = நறுமண பொருள்களை கொண்டு நடப்பவர்கள். சந்தனம், அகில் போன்றவை.

மலரினர் = தட்டில் பூக்களை வைத்துக் கொண்டு அங்கும் இங்கும் அலைபவர்கள்

விளங்கு மேனியர் = அழகான வடிவம் உள்ளவர்கள் ("figure")

உரையினர் = எதையாவது பேசிக் கொண்டே இருப்பவர்கள்

பாட்டினர் = பாட்டு பாடுபவர்கள்

ஒசிந்த நோக்கினர் = ஓரக் கண்ணால் பார்ப்பவர்கள் (சைட் அடிப்பவர்கள்)

சாந்தினர் = மேலே பூசிக் கொள்ளும் சந்தனம், குங்குமம் போன்றவற்றை கொண்டு நடப்பவர்கள்

புகையினர் = சாம்பிராணி, ஊதுபத்தி போன்ற நறுமண புகை தரும் பொருள்களை கொண்டு நடப்பவர்கள்

தயங்கு கோதையர் = மெல்லமாக, தயங்கி தயங்கி நடக்கும் பெண்கள்

ஏந்துஇள முலையினர் = எடுப்பான, இளமையான மார்பகத்தை கொண்டவர்கள்  (இளங்கோ அடிகள் சொல்கிறார்)

இடித்த சுண்ணத்தர் = பொடிகளை இடித்து வைத்திருப்பவர்கள்

விளக்கினர் = கையில் விளக்கை ஏந்தியவர்கள்

 கலத்தினர் = நீர் குடம், பால் குடம் போன்ற குடங்களை ஏந்தியவர்கள்

விரிந்த பாலிகை முளைக் குடம் நிரையினர்  = முளைப் பாலிகை குடத்தை கையில் ஏந்தியவர்கள்


முகிழ்த்த மூரலர் = புன்னகை மலர்ந்த முகத்தினர்

போதொடு  = மலரோடு

விரி கூந்தல் = விரித்த கூந்தல் (ஷாம்பூ போட்டு குளித்து, hair straighten பண்ணி வந்தவர்கள்)

பொலன் நறுங் கொடி அன்னார்,  = அழகிய பொற் கொடி போன்றவர்கள்

ஆண்பிள்ளைகளை மருந்துக்கும் காட்டவில்லை  இளங்கோ அடிகள்.

எல்லாம் அவங்க நாட்டாமை.

"போதொடு விரி கூந்தல்"

போது என்றால் அன்று அலர்ந்த மலர் என்று அர்த்தம்.


"போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார், அவர் பின் புகுவேன் " என்பார் நாவுக்கரசர்.

பக்தர்கள், பூவும் நீரும் கொண்டு கோவிலுக்கு செல்வார்கள், அவர்கள் பின்னேயே நானும் சென்று விடுவேன் என்கிறார். அவ்வளவு பணிவு.

மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,
போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,
யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,
காதல் மடப்பிடியோடும் #களிறு வருவன கண்டேன்.
கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்.

இத்தனை பேரும் உள்ள ஒரு கல்யாண மண்டபத்தை கற்பனை செய்து பாருங்கள்.

வீடியோ, புகைப்படம் இல்லாத குறை தீர்ந்ததா?

அதுதான் இலக்கியம். அதுதான் கவிதை.

தொன்று தொட்டு வரும் பாரம்பரியத்தை படம் பிடிக்கும் காலக் கண்ணாடி.

கல்யாண வீட்டில் வேறு என்ன என்ன நிகழ்ந்தது என்று பார்ப்போமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_20.html


4 comments:

  1. அப்படியே நேர பார்க்க மாதிரியே இருக்கு. பிரமாதம்

    ReplyDelete
  2. பெயருக்குத்தான் இளங்கோ அடிகள் போலும்! சும்மா பெண்களை இப்படிப் படம் எடுத்தது போல எழுதியிருக்கிறார்!!

    ReplyDelete
  3. இளங்கோ அடிகள் துறவியேயாயினும், இது தான் கவியின் சிறப்பு. உங்கள் விளக்கமும் அருமை. தொடருங்கள்!

    ReplyDelete
  4. அருமையான இலக்கிய விமர்சனம்..

    ReplyDelete