Monday, June 17, 2019

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த

சிலப்பதிகாரம் - மாதரார் தொழுது ஏத்த 


இயற்கையை போற்றிய பின், ஊர் சிறப்பு சொல்லிய பின், இளங்கோ அடுத்து என்ன சொல்லப் போகிறார்.

நாம் நினைப்போம், அரசனைப் பற்றி, அவன் ஆட்சி பற்றி, அங்குள்ள மக்கள் நலம் பற்றி சொல்லப் போகிறார் என்று.

இளங்கோ அடிகள் அதையெல்லாம் விட்டு விடுகிறார்.

கதாநாயகனை கூட அறிமுகப் படுத்தவில்லை. நேரே கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

என்னைக் கேட்டால், இது ஒரு பெரும் புரட்சி. பெண்ணுக்கு முக்கியத்துவம் கொடுத்து, முதலில் கதாநாயகியை அறிமுகப் படுத்துகிறார்.

கதாநாயகியை வர்ணிப்பது என்றால் ரொம்ப மெனக்கெட வேண்டும். மிகச் சிறப்பான உவமைகளை தேட வேண்டும்.

இளங்கோ அடிகள் கண்ணகியை அறிமுகப் படுத்தும் விதமும் மிகப் புரட்சிகரமானது.

நமக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. சினிமாவில், சிலை வடிவில் கண்ணகியை பெரிய ஒரு பெண்மணியாக நாம் பார்த்து இருக்கிறோம். கிட்டத்தட்ட ஆறடி உயரம், தலை விரி கோலம், கையில் ஒரு சிலம்பு, நிமிர்ந்த ஒரு கோப பார்வை..இதுதான் நமக்கு கண்ணகி என்றால் நினைவுக்கு வரும்.

ஏதோ கண்ணகி பிறக்கும் போதே அப்படியே பிறந்த மாதிரி.

நீங்கள் சிலப்பதிகாரத்தை இரசிக்க வேண்டும் என்றால், கண்ணகியின் அந்த பிம்பத்தை அழித்து விடுங்கள்.

இளங்கோ காட்டும் கண்ணகி மிக இனிமையானவள். மென்மையானவள். சாந்தமானவள். பயந்த சுபாவம் உடையவள். கடைசியில் கோபம் கொண்டாள் . அதற்காக அவள் எந்நேரமும் அப்படியே இருந்தாள் என்று நினைப்பது தவறு.

இளங்கோ எப்படி அறிமுகப் படுத்துகிறார் தெரியுமா ?

"அவளுக்கு பன்னிரண்டு வயது. பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண். மிக அழகாக இருப்பாள். பெண்களே , பொறாமை படும் அளவு அல்ல, கை எடுத்து கும்பிடும் அளவு நல்ல குணங்கள் அமைந்தவள். ரொம்ப அன்புடையவள். அவள் பெயர் கண்ணகி "

என்று அவளை அறிமுகப் படுத்துகிறார்.

பாடல்


மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குலக் கொம்பர்; 
ஈகை வான் கொடி அன்னாள்; ஈர்-ஆறு ஆண்டு அகவையாள்;
அவளும்-தான்,
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்,
தீது இலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும்,
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்துக்
காதலாள்; பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ.

பொருள்

மாக வான் = கரிய வானம்

நிகர் = போல

வண் கை = சக்தி வாய்ந்த கை

மாநாய்கன் = மாநாய்கன் என்ற

குலக் = குலத்தில்  பிறந்த

கொம்பர் =  கொம்பு

ஈகை = தானம் செய்வதில்

வான் கொடி அன்னாள் = வானத்தில் தோன்றும் வானவில் போன்றவள்

ஈர்-ஆறு ஆண்டு அகவையாள் = இரண்டு ஆறு, அதாவது பன்னிரண்டு வயதுடையவள்

அவளும்-தான் = அவளும் தான்

போதில் = தாமரை மலரில்

ஆர் = இருக்கும்

திருவினாள் = இலக்குமி போன்றவள்

புகழ் உடை வடிவு என்றும் = புகழ் உடைய வடிவத்தை உடையவள்

தீது இலா = தீமை இல்லாத

வடமீனின்  = அருந்ததி நட்சத்திரம் (மீன் = விண்மீன்)

திறம் இவள் திறம் என்றும் = போன்ற கற்பு இவளுடைய கற்பு என்றும்

மாதரார் = பெண்கள்

தொழுது ஏத்த = தொழுது போற்றும் படி

வயங்கிய =விளங்கிய

பெரும் குணத்துக்  = சிறந்த குணங்களை கொண்டவள்

காதலாள் = அன்பு நிறைந்தவள்

பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ. = பெயர் கண்ணகி என்று சொல்லுவார்கள்



மாக வான் = கரிய வானம்

பிரபந்தத்தில் ஒரு பாசுரம்.

"ஓ  மேகங்களே, உங்களுக்கு எப்படி அந்த நாராயணின் நிறம் வந்தது? சரி தான்,  கடலில் சென்று நீரை கொண்டு வந்து மழையாக பெய்து உயிர்களை எல்லாம்  காப்பாற்றுகிறீர்கள் அல்லவா, அந்த நாராயணனைப் போல, அதனால் தான்  உங்களுக்கும் அவன் நிறம் வந்திருக்கிறது போலும் "

மேகங்களோ உரையீர் திருமால்திரு மேனியொக்கும்
யோகங்க ளுங்களுக் கெவ்வாறு பெற்றீர், உயிரளிப்பான்
மாகங்க ளெல்லாம் திரிந்து நன் னீர்கள் சுமந்து நுந்தம்
ஆகங்கள் நோவ வருந்தும் தவமாம் அருள்பெற்றதே? (2509, நான்காம் திருமொழி)


"குலக் கொம்பர்; "

குலத்தில் பிறந்த கொம்பு. கொடி பற்றி வளர உதவும் கொம்பு போல, குலம் தழைக்க வந்த கொம்பு.

கொம்பு இல்லாத கொடி போல தவித்தேன் என்பார் மணிவாசகர்.

கொம்பர் இல்லாக் கொடிபோல், அலமந்தனன்; கோமளமே,
வெம்புகின்றேனை விடுதி கண்டாய்? விண்ணவர் நண்ணுகில்லா
உம்பர் உள்ளாய்; மன்னும் உத்தரகோசமங்கைக்கு அரசே,
அம்பரமே, நிலனே, அனல், காலொடு, அப்பு, ஆனவனே.


(நீத்தல் விண்ணப்பம்)

கண்ணகிக்கு 12 வயது.

பெரிய செல்வந்தர் வீட்டுப் பெண்.

அழகானவள்.

கற்புடையவள்.

இதெல்லாம் சரி.  வேறு என்ன சிறப்பு என்றால், வான் மழை போல அவளே தானம்  செய்வாளாம்.

இன்றும் கூட, சம்பாதிக்கும் பெண்கள் கூட, யாருக்கும் ஏதாவது தானம் , உதவி செய்வதானால் கூட , கணவனை, பெற்றோரை கேட்டுவிட்டுத்தான் செய்வார்கள், பெரும்பாலும்.

கண்ணகி, வேண்டியவர்களுக்கு, அவளே தானம் செய்தாள் என்ற அவள் இளகிய மனதை  காட்டுகிறார் இளங்கோ.

உலகிலேயே கடினமான விஷயம் ஒரு பெண் இன்னொரு பெண்ணை பாராட்டுவதுதான்.

"அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. இதெல்லாம் நீங்களே இட்டு கட்டிச் சொல்வது. நான் எல்லாம் எத்தனை பெண்களை பாராட்டுகிறேன் தெரியுமா " என்று சில பெண்மணிகள் கோபிக்கலாம்.

சரி. பாராட்டுகிறீர்கள் என்றே வைத்துக் கொள்வோம்.

வணங்குவீர்களா? ஒரு பெண்ணின் திறமையை, அவளின் அழகை, அவளின் நல்ல குணங்களை கண்டு  தலை மேல் கை வைத்து வணங்குவீர்களா? முடியுமா ?

கண்ணகியின் சிறந்த குண நலன்களை கண்டு பெண்கள் வணங்கினார்கள், போற்றினார்கள் என்கிறார் அடிகளார்.

"மாதரார் தொழுது ஏத்த"

சின்ன பொண்ணு.  12 வயசு. முடியுமா ?

இறைவனை விட்டு விட்டு , இயற்கையை வாழ்த்தி, முதல் சிக்ஸர் அடித்தார்.

வயக்காட்டில் மீன் விளையாட்டும், வறுமையே இல்லை என்று எல்லோரும் எப்போதும் சொல்லும்  ஊர் சிறப்பை விட்டு விட்டு, "பதி எழு அறியா பழங்குடி " என்று இரண்டாவது சிக்ஸர் அடித்தார்.

கதாநாயகனை விட்டு விட்டு, முதலாவதாக கதாநாயகியை அறிமுகப் படுத்தி  மூன்றாவது சிக்ஸர்.

படிக்க படிக்க மேலும் ஆர்வத்தை தூண்டும் காப்பியம்.

சரி தானே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_17.html


5 comments:

  1. அருமையாக உள்ளது.இதை எல்லாம் முன்னரே படிக்காமல் விட்டு விட்டோமே என்ற ஒரு ஆதங்கம் மனதில் எழுகின்றது.

    ReplyDelete
  2. மிகவும் சுவை செறிந்த பாடல். அருமையான உரை. புகழ்வதற்கு வேறு என்ன வேண்டும்? நன்றி.

    ReplyDelete
  3. சிலப்பதிகாரம் குறித்து ஒரு தேடலின் ஊடலாக தங்கள் வலைத்தளம் வந்தேன். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், 'அற்புதம்'. தங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்...

    ReplyDelete
  4. Dont use English words I'n between tamil....ie.., sixer

    ReplyDelete