Wednesday, June 19, 2019

சிலப்பதிகாரம் - காண்பார் கண் நோன்பு என்னை

சிலப்பதிகாரம் - காண்பார் கண் நோன்பு என்னை


கண்ணகியையும், கோவலனையும் அறிமுகம் செய்தபின், இளங்கோ அடிகள் நேரடியாக அவர்கள் திருமணத்துக்கு வந்து விடுகிறார். கதை எக்ஸ்பிரஸ் வேகத்தில் நகர்கிறது.  ஊரு, அங்கு உள்ள நில புலன்கள், மக்கள் நிலை என்றெல்லாம் இளங்கோ மெனக்கடவில்லை.

யாருக்கு பொறுமை இருக்கிறது? யாரிடம் நேரம் இருக்கிறது ? Blog கொஞ்சம் நீண்டு விட்டாலே "...நல்லாத்தான் இருக்கு ஆனால் கொஞ்சம் நீளமா இருக்கு " என்று சொல்லும் காலத்தில் இருக்கிறோம் நாம். பார்த்தார் அடிகளார்.

ஒரு திரைக்கதை சொல்லுவது மாதிரி, கதையை எடிட் பண்ணி வேகமாக நகர்த்துகிறார். இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது.

கோவலன் கண்ணகி திருமணக் காட்சி.

பாடல்


முரசு இயம்பின; முருடு அதிர்ந்தன;
முரை எழுந்தன பணிலம்; வெண்குடை
அரசு எழுந்ததொர்படி எழுந்தன;
அகலுள் மங்கல அணி எழுந்தது.
மாலை தாழ் சென்னி வயிர மணித் தூண் அகத்து, 
நீல விதானத்து, நித்திலப் பூம் பந்தர்க் கீழ்,
வான் ஊர் மதியம் சகடு அணைய, வானத்துச் 
சாலி ஒரு மீன் தகையாளைக் கோவலன்,
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட,
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை!


பொருள்

முரசு இயம்பின = முரசு அடித்து சப்தம் உண்டாக்கி

முருடு அதிர்ந்தன = முருடு அதிர்ந்தது


முரை எழுந்தன = முறையாக அனைத்து மங்கல வாத்தியங்களும் எழுந்து ஒலி எழுப்பின

பணிலம் = சங்கு

வெண்குடை = வெண் குடை

அரசு  = அரசன்

எழுந்ததொர்படி = எழுந்து வரும் போது எப்படி வருமோ அப்படி

எழுந்தன = எழுந்தன

அகலுள் = ஊரில்

மங்கல அணி = மங்கல அணி, திருமாங்கல்யம்

எழுந்தது = வலம் வரச் செய்தனர்

மாலை தாழ்  = மாலைகள் கட்டிய

சென்னி = பெரிய தலையை உடைய

வயிர மணித் தூண் அகத்து = வைரம் போன்ற தூண்களில்

நீல விதானத்து = நீல நிற பட்டினாலான மேற் கூரையில்

நித்திலப் = முத்து

பூம் பந்தர்க் கீழ் = பூக்கள் செறிந்த பந்தலின் கீழ்

வான் ஊர்  = வானில் செல்லும்

மதியம் = நிலவு

சகடு = ரோகிணி நட்சத்திரம்

அணைய = சேர. அதாவது, நிலவு ரோகிணி நடச்சத்திர கூட்டத்தில் இருக்கும் போது

வானத்துச்  = வானில் உள்ள

சாலி ஒரு மீன் தகையாளைக் = ஒரு வகை விண் மீன் போன்றவளை (அருந்ததி போன்ற கற்பு உடையவளை என்று அர்த்தம் கொள்க)

 கோவலன், = கோவலன்

மா முது பார்ப்பான் = சிறந்த, வயதில் முதிர்ந்த பார்ப்பனர்

மறை வழி காட்டிட, = வேத வழி காட்டிட

தீ வலம் செய்வது = தீயை வலம் வந்து

காண்பார் கண் நோன்பு என்னை! = அந்தக் காட்சியை காண்பவர் கண்கள் என்ன தவம் செய்தனவோ

இலக்கியம் என்பது ஒரு காலக் கண்ணாடி. இலக்கியம் நடந்த காலத்தில் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள்  என்பதை நமக்குச் சொல்பவை இலக்கியங்கள்.

நம் முன்னவர்கள் எப்படி வாழ்ந்தார்கள், அவர்கள் பின் பற்றிய நடை முறைகள் என்ன, எப்படி பல்வேறு சடங்குளை செய்தார்கள் என்றெல்லாம் நமக்கு அறியத் தருபவை இலக்கியங்கள்.

இலக்கியங்கள் சொல்பவை மட்டும் அல்ல, அவை சொல்லாமல் விட்டவையும் நமக்கு  பல உண்மைகளை புலப் படுத்தும்.

எப்படி என்று பார்ப்போம்.

இப்போதெல்லாம், திருமண சடங்கின் போது திருமாங்கல்யத்தை ஒரு தட்டில் வைத்து, கொஞ்சம் மஞ்சள் கலந்த அரிசியை வைத்து திருமணம் நடக்கும் மண்டபத்தில் உள்ள  பெரியவர்கள் அனைவரிடமும் ஆசி வாங்குவார்கள்.

இந்த முறை கோவலன் கண்ணகி காலத்திலும் இருந்திருக்கிறது.

அந்தக் காலத்தில், அல்லது கோவலன் கண்ணகி போன்ற பெரிய இடத்து திருமணங்களில் , மங்கல அணியை , ஊரில் அனைவரிடமும் ஆசி வாங்கி இருக்கிறார்கள்.

"அகலுள் மங்கல அணி எழுந்தது."

என்கிறார் இளங்கோ.

இந்த தாலி கட்டுவது என்பது எப்போது வந்தது என்று தெரியவில்லை.

கம்ப இராமாயணத்தில், சீதைக்கு இராமன் தாலி கட்டியதாக கம்பன் சொல்லவில்லை.

கனா கண்டேன் தோழி நான் என்று பாடிய ஆண்டாளும், மைத்துனன் நம்பி, மதுசூதனன் வந்து என்  கழுத்தில் மாங்கல்யம் பூட்ட கனா கண்டேன் என்று சொல்லவில்லை.  தீ வலம் வந்தாள் , மாலை அணிந்தாள் , மஞ்சள் நீராடினாள்  ஆனால் மாங்கல்யம் அணிந்ததாக சொல்லவில்லை.


அடுத்ததாக, அந்தக் காலத்தில் என்னென்ன வாத்திய கருவிகள் இருந்தன என்று  காட்டுகிறார் அடிகளார்.

மேலும், மண்டபத்தை எப்படி அழகு படுத்தினார்கள் என்று காட்டுகிறார். அந்தக் காலத்திலும் திருமண மண்டபங்கள் இருந்திருக்கின்றன. அதை decorate  செய்திருக்கினார்கள். மேலே பார்த்தால் வானம் போல இருக்க வேண்டும் என்பதற்காக  நீல நிற பட்டில் மேற்கூரையை அலங்கரித்து இருக்கிறார்கள். நட்சத்திரம் மாதிரி தெரிய வேண்டும் என்பதற்காக அதில் சில  முத்துக்களை பதித்து இருக்கிறார்கள்.

இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். கதை நகர வேண்டுமே என்று அடிகளார்  "அடடா...அந்தத் திருமணத்தை பார்ப்பவர்கள் கண்கள் என்ன தவம்  செய்ததோ " என்று சொல்லிவிட்டு மேலே நகர்கிறார்.

தாலி கட்டியாகி விட்டது.

அடுத்து என்னவாக இருக்கும் ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/06/blog-post_19.html


1 comment:

  1. திருமணக் காட்சி நம் கண்முன்னே எழுகிறது.

    நன்றி.

    ReplyDelete