Friday, November 29, 2019

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர்

திருக்குறள் - பல சொல்லக் காமுறுவர் 


சிலருக்கு வள வள  என்று எதையாவது பேசிக் கொண்டே இருக்க வேண்டும். "எதுக்கு போன் பண்ணினே?" என்று கேட்டால் "ஒண்ணும் இல்லை, சும்மாதான் போன் பண்ணினேன்" என்பார்கள்.

சின்ன விஷயத்தைக் கூட பெரிதாக நீட்டி முழக்கி சொல்லுவார்கள். "என்ன ஆச்சு தெரியுமா நேத்து" என்று ஏதோ மூன்றாம் உலகம் யுத்தம் வந்தது போல கதை சொல்லுவார்கள். ஒன்றும் இருக்காது.

ஏன் அப்படிச் சொல்கிறார்கள்?

சிந்திக்காமல் பேசுவது. என்ன பேசப் போகிறோம், எப்படி பேசுவது. எப்படி சுருக்கமாக பேசுவது என்று சிந்தித்துப் பின் பேச வேண்டும்.

அப்படி சிந்தித்தாலே, பேச வேண்டிய அவசியமே இருக்காது. "இதில் என்ன இருக்கிறது போய் சொல்ல " என்று பேசாமல் இருந்து விடுவார்கள்.

வள்ளுவர் சொல்கிறார்,

"பெரிதாக நீட்டி பேச ஆசைப் படுவார்கள் யார் என்றால் எதையும் சுருக்கமாக சொல்லத் தெரியாதவர்கள்" என்று

பாடல்

பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்


பொருள்

பலசொல்லக் = பல சொற்களை சொல்ல

காமுறுவர் = ஆசைப் படுவார்கள்

மன்ற = உறுதியாக

மாசு அற்ற = குற்றம் அற்ற

சிலசொல்லல் =சில சொற்களை சொல்லத்

தேற்றா தவர் = தெரியாதவர்கள்



தேறாதவர் என்றால் தெரியாதவர் என்று அர்த்தம். அது என்ன "தேற்றாதவர்"?


மற்றவர்களுக்கு சொல்லி அவர்களை தெளிய வைக்க, அறிய வைக்க முடியாதவர்  என்று பொருள் கொள்ளலாம்.

சில சொற்கள் கூறுகிறேன் பேர்வழி என்று புரியாமல், தவறாக பேசவும் கூடாது.

அதனால் தான் "மாசு அற்ற" என்று கூறுகிறார்.

குற்றமற்ற சில சொற்களில் சொல்லி புரிய வைக்க முடியாதவர்கள் தான் பல சொல் பேச ஆசைப் படுவார்கள்.

அடுத்த முறை பேச ஆரம்பிக்கும் முன், யோசியுங்கள். எப்படி சொல்ல வந்ததை சுருக்கமாக அழகாக சொல்லலாம் என்று.

சொல் வன்மை என்ற அதிகாரத்தில் வரும் குறள் இது.

அதில் உள்ள மற்ற குறள்களையும் படித்துப் பாருங்கள். எப்படி பேச வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_29.html

Wednesday, November 27, 2019

பட்டினத்தார் பாடல்கள் - எது எப்படி போனால் என்ன ?

பட்டினத்தார் பாடல்கள் -  எது எப்படி போனால் என்ன ?



சிலர், இந்த உலகமே தங்களால் தான் சுழல்கிறது என்று நினைத்துக் கொண்டு செயல் படுவார்கள். இந்த வீடு, பிள்ளைகள், கணவன்/மனைவி, அலுவலகம், மகன்/மருமகள், மகள்/மருமகன் என்று எல்லாம் தன்னையே சார்ந்து இருப்பதாய் நினைத்துக் கொள்வார்கள்.

"நான் மட்டும் இல்லை என்றால் என்ன ஆகும் தெரியுமா" என்று நினைத்துக் கொண்டு எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள்.

பின், "என்ன செய்து என்ன பலன்...என் அருமை யாருக்குத் தெரியுது " என்று அலுத்துக் கொள்ளவும் செய்வார்கள்.

உண்மையில், அவர்களை நம்பி யாரும் இல்லை. எதுவும் இல்லை. அவர்கள் இல்லாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. "ஆ..அப்படியெல்லாம் இல்லை...யாரை வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் " என்று அவர்கள் குதிக்கலாம். என்ன சொன்னாலும், அவர்கள் இல்லை என்றால் ஒன்றும் நடந்து விடாது.

உலகம் மிகப் பெரியது. நம்மை நம்பி எதுவும் இல்லை. நமது தேவைகள் மிகக் குறைவு. என்னமோ நாம் தான் என்று பிரமித்து போக வேண்டாம்.

பட்டினத்தார், பெரிய பணக்காரர். அரசருக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இருந்தது. எத்தனை வேலைக் காரர்கள் இருந்திருப்பார்கள்? கொடுக்கல், வாங்கல், வரவு, செலவு, போட்டி, என்று எவ்வளவு இருந்திருக்கும் அவர் வாழ்வில்?

எல்லாவற்றையும் ஒரே நாளில் தூக்கி எறிந்து விட்டு, கட்டிய கோவணத்துடன்  இறங்கி விட்டார்.

நான் இந்த செல்வத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும். அதை பாது காக்க வேண்டும்,  முதலீடு செய்ய வேண்டும், எவனாவது கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுவானோ என்று பயப்பட வேண்டும்...இதுதான் எனக்கு வேலையா  என்று நடையை கட்டிவிட்டார்.

அவர் சொல்கிறார்,  நிலவின் பிறை வடக்கு பக்கம் உயர்ந்தால் என்ன, தெற்கு பக்கம் உயர்ந்தால் நமக்கு என்ன...என்று ஜாலியாக இருந்தார்.

அவர் சொல்வதைக் கேட்போம்....


பாடல்


உடைகோவணமுண்டுறங்கப்புறந்திண்ணையுண்டுணவிங்கடைகாயிலையுண்டருந்தத்தண்ணீருண்டருந்துணைக்கேவிடையேறுமீசர்திருநாமமுண்டிந்தமேதினியில்வடகோடுயர்ந்தென்னதென்கோடுசாய்ந்தென்னவான்பிறைக்கே.



பொருள்


உடைகோவணமுண்டு  = உடை, கோவணம் உண்டு

உறங்கப் புறந் திண்ணை யுண்டு = உறங்குவதற்கு யார் வீட்டு திண்ணையாவது இருக்கும்

உணவிங் = உணவு இங்கு

கடைகாயிலையுண் = கடைக் காய் இல்லை உண்டு

அருந்தத் தண்ணீருண்டு = அருந்த தண்ணீர் உண்டு

அருந்துணைக்கே = அருமையான துணைக்கு

விடையேறுமீசர்திருநாமமுண்டு = எருதின் மேல் ஏறும் ஈசர் திரு நாமம் உண்டு


இந்த மேதினியில் = இந்த உலகில்

வட கோடுயர்ந்தென்ன = வட கோடு உயர்ந்து என்ன ?

தென் கோடு சாய்ந்தென்ன = தென் கோடு சாய்ந்து என்ன ?

வான்பிறைக்கே. = வான் பிறைக்கே

அவரைப் போல் நம்மால் இருக்கிறதை எல்லாம் உதறிவிட்டு தெருவில் இறங்க முடியாது என்பது  வாஸ்தவம்தான்.

ஆனாலும், எல்லாம் நான் தான், என்னை வைத்துத்தான் எல்லாம் நடக்கிறது, நான்  இல்லாவிட்டால் இந்த உலகம் நின்று விடும் அல்லது என் குடும்பம் நின்று விடும்  என்று நினைப்பதை குறைக்கலாம்.

அந்த எண்ணம் வரும்போது மனம் லேசாகும். படபடப்பு குறையும். வாழ்க்கை  மென்மையாக இருக்கும். ஓட்டம் குறையும். நிதானம் வரும். அழுகை குறையும். ஆதங்கம் குறையும்.

மனம் உள்நோக்கித் திரும்பும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_30.html

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம்



இறைவன் ஒருவனே. அவன் தான் உலகைப் படைத்தான். காக்கிறான்...என்று ஏறக்குறைய எல்லா மதமும் சொல்கிறது. அனைத்து பக்தர்களும் ஏற்றுக் கொள்ளகிறார்கள். இருந்தாலும், அந்தக் கடவுள் யார் என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நான் வணங்கும் கடவுள் தான் அந்தக் கடவுள். நீ வணங்கும் கடவுள் உண்மையான கடவுள் அல்ல என்று.

கடவுள் ஒருவர் தான் என்றால் எப்படி பல கடவுள்கள் இருக்க முடியும். உன் கடவுள், என் கடவுள் என்ற பேதம் எப்படி வரும்?

மனிதனின் அகங்காரம். "நான்" வணங்கும் கடவுள்தான் உண்மையான கடவுள் என்பது மனிதனின் பயம் கலந்த அகங்காரம் அன்றி வேறு என்னவாக இருக்கும்.

உன் கடவுள், என் கடவுள், உன் ஆச்சாரம், என் ஆச்சாரம்,   ,ஜாதி, மதம், குலம் , கோத்திரம் என்று மனிதர்கள்  கடவுளின் பெயரால் வரம்பு கட்டிக் கொண்டு சண்டை போட்டுக் கொண்டு  இருக்கிறார்கள். சண்டை என்றால் கத்தி , துப்பாக்கி ஏந்தி இரத்தம் சிந்தி சண்டை போட வேண்டும் என்று இல்லை. வெறுப்பு, உயர்ந்தவன்/தாழ்ந்தவன் என்ற எண்ணம், துவேஷம்,  கோபம், இவையும் சண்டை போல் வன்முறையை சார்ந்தவைதான்.

நம்மாழ்வார் கூறுகிறார் ,

"இந்த உடல் நிலத்தில் விழுவதற்கு முன், உங்கள் வேற்றுமைகளை மறந்து எங்களோடு வந்து சேர்ந்து, நாடும் நகரமும் நன்றாக அறிய உரத்த குரலில் "நமோ நாராயணா"  கூறி அவனுக்கு  பல்லாண்டு கூறுங்கள் " என்று.


பாடல்


ஏடுநிலத்தில் இடுவதன்முன்னம் வந்து எங்கள் குழாம்புகுந்துகூடுமனமுடையீர்கள் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோநாடுநகரமும் நன்கறி யநமோ நாராய ணாயவென்றுபாடுமனமுடைப் பத்தருள் ளீர்வந்து பல்லாண்டு கூறுமினே.



பொருள்


ஏடு = இந்த உடல் (அல்லது எமன் ஓலை)

நிலத்தில் இடுவதன்முன்னம் = நிலத்தில் விழுவதன் முன்

வந்து = வந்து

எங்கள் = எங்கள்

குழாம்புகுந்து = எங்கள் குழுவில் சேர்ந்து

கூடுமனமுடையீர்கள் = கூடுகின்ற மனம் உள்ளவர்களே

வரம்பொழி வந் = வரம்பு ஒழிந்து வந்து

ஒல்லைக் கூடுமினோ = சீக்கிரமாக வாருங்கள்

நாடு = நாடும்

நகரமும் = நகரமும்

நன்கறி ய = நன்கு அறிய

நமோ நாராய ணாயவென்று = நமோ நாராயனா என்று

பாடு = பாடும்

மனமுடைப்  = மனம் உடைய

பத்தருள் ளீர் = பக்தர்களுக்குள்

வந்து பல்லாண்டு கூறுமினே. = வந்து பல்லாண்டு கூறுகள்

எல்லோரும் வாருங்கள். நமக்குள் ஒரு பேதமும் இல்லை.  நாம் மட்டும் இரகசியமாக வைத்துக் கொள்வோம். நாம் மட்டும் சுவர்க்கம் போவோம் மற்றவன் எப்படியும் போகட்டும் என்று இல்லாமல்,  "எல்லோரும் வாருங்கள்" என்று அழைக்கிறார்.

"சேர வாரும்  ஜெகத்தீரே " என்று தாயுமானவர் அழைத்தது போல.

ஜாதி மத வரம்புகளைத் தாண்டி, எல்லோரும் வாருங்கள்.

பிரபந்தம், தேவாரம் போன்ற பாடல்களுக்குக் கூட சாதி, சமய சாயம் பூசி  விலக்கி வைத்து  விடுகிறார்கள்.

யார் சொல்வதையும் கேட்காதீர்கள். நீங்களே படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

இந்தப் பாடல்கள் உங்கள் மனதை விரிவடையச் செய்யும். குறுகிய வட்டத்தில் இருந்து வெளி வரச் செய்யும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_27.html

Tuesday, November 26, 2019

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர்

பட்டினத்தார் பாடல்கள் - உண்மை ஞானம் தெளிந்தவர் 


எது சரி, எது தவறு என்று மக்கள் குழம்பும் போது, உண்மை அறிந்த ஞானியர்களை மக்கள் நாடினார்கள்.

அனைத்தும் துறந்த, சுயநலம் இல்லாத ஞானிகள் அவர்கள். அவர்கள் சொல்வதை மக்கள் சந்தேகம் கொள்ளாமல் ஏற்று நடந்தார்கள்.

புத்தர், இயேசு, சங்கரர், இராமானுஜர், வள்ளலார், வள்ளுவர் போன்றவர்கள் மக்களை வழி நடத்தினார்கள்.

ஆனால், இன்று அப்படி யார் இருக்கிறார்கள்? யாரிடம் போய் கேட்பது?

யார் உண்மையானவர், யார் பொய்யானவர் என்று தெரியமால் மக்கள் குழப்புகிறார்கள்.

பட்டினத்தார், உண்மை ஞானம் கண்டு தெரிந்தவர்கள் எப்படி இருப்பார்கள் என்று அவர்களின் இலக்கணம் சொல்லுகிறார்.

நீங்கள் யார் பேச்சையாவது கேப்டதாய் இருந்தால், அவர்களுக்கு இந்த இலக்கணம் பொருந்துகிறதா என்று பாருங்கள். இல்லாவிட்டால் கேட்காதீர்கள்.


பாடல்

பேய்போற்றிரிந்துபிணம்போற்கிடந்திட்டபிச்சையெல்லா
நாய்போலருந்திநரிபோலுழன்றுநன்மங்கையரைத்
தாய்போற்கருதித்தமர்போலனைவர்க்குந்தாழ்மைசொல்லிச்
சேய்போலிருப்பர்கண்டீருண்மைஞானந்தெளிந்தவரே.


பொருள்

பேய்போற்றிரிந்து= பேய் போல் திரிந்து

பிணம்போற்கிடந்து = பிணம் போல கிடந்து

இட்டபிச்சையெல்லா = இட்ட பிச்சை எல்லாம்

நாய்போலருந்தி = நாய் போல் அருந்தி

நரிபோலுழன்று = நரி போல் உழன்று

நன்மங்கையரைத் = நல்ல பெண்களை

தாய்போற்கருதித் = தாய் போல கருதி

தமர்போலனைவர்க்குந் = உறவினர் போல அனைவருக்கும்

தாழ்மைசொல்லிச் = பணிவாகப் பேசி

சேய்போலிருப்பர் = குழந்தையைப் போல இருப்பார்கள்

கண்டீர் = கண்டீர்

உண்மை ஞானந் தெளிந்தவரே. = உண்மையான ஞானம் தெளிந்தவரே


பேய் போல திரிந்து - பேய்க்கு ஒரு இருப்பிடம் கிடையாது.  அது பாட்டுக்கு காட்டில் அலையும்.  அதன் பேரில் ஒரு வீடு, பேங்க் அக்கௌன்ட் எல்லாம் கிடையாது.

பிணம் போல கிடந்து - பிணத்துக்கு உணர்ச்சி இருக்காது. நல்ல உணவு,  குளிர் சாதன அறை, பெரிய கார், பெண்கள், என்று உணர்ச்சிகளுக்கு அடிமையாக மாட்டார்கள்.

இட்ட பிச்சை எல்லாம் - அந்த உணவு வேண்டும், இந்த உணவு வேண்டும் என்று கேட்பது எல்லாம் கிடையாது. கிடைத்த பிச்சையை

நாய் போல் அருந்தி - தட்டு கூட கிடையாது

நன் மகளிரை தாய் போல் கருதி - பெண்களை தாயைப் போல கருதுவார்களாம்.

எல்லோரையும் உறவினர் போல நினைத்து பணிவாகப் பேசுவார்கள்.  என் ஜாதி,  என் மதம். இது பார்க்கும் நேரம். அதற்கு கட்டணம்.  யார் கிட்ட வரலாம், யார் தள்ளி நிற்க வேண்டும் என்றெல்லாம் கட்டுப்பாடு கிடையாது.

சேய் போல் இருப்பர் - சின்ன பிள்ளை போல கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார்கள்.

முதலில், சாமியாருக்கு மடம் எதற்கு?  எல்லாவற்றையும் வேண்டாம் என்று தானே  துறவறம் பூண்டு சாமியாராக ஆனாய். பின் எதற்கு மடம் , அதில் ஏக்கர் கணக்கில்  நிலம், பணம், தங்கம், சொத்து, வருமானம், வரி என்றெல்லாம்.  இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்?  மடத்தில் இருக்கும்  யாரும், பட்டினத்தார் பட்டியலில் வர மாட்டார்கள்.

சொத்து சேர்த்து, அதை காப்பாற்றி, அதை பெருக்கி, அதை நிர்வாகம் பண்ண ஆளை போட்டு, அவன் ஏமாற்றாமல் இருக்கிறானா என்று தெரிந்து  கொள்ள  ஒரு ஆடிட்டர் ஐ போட்டு...இதெல்லாம் ஞானம் அடைந்ததின் குறியீடா?

உண்மையான ஞானிகளை பார்க்க போக வேண்டும் என்றால் மடத்திற்குப் போகாதீர்கள்.

எந்த மதத்திலும், எந்த பிரிவிலும், எங்கே பணமும் சொத்தும் புரள்கிறதோ அங்கே ஞானம் இருக்காது. உங்களுக்கு பணம் வேண்டும், செல்வாக்கு வேண்டும், காரியம் நடக்க யாரையாவது பிடிக்க வேண்டும் என்றால் அங்கே போங்கள். ஞானம்?

ஞானிகள் தங்களை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். ஞானம் எங்கே இருக்கிறது என்று நீங்கள் தேடிப்  போக வேண்டும்.

அந்தத் தேடல் தான் உங்கள் ஞானத்தின் முதல் படி.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_26.html

Monday, November 25, 2019

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும்

வில்லி பாரதம் - சாபமும் ஆசீர்வாதமும் 


கர்ணன் குற்றுயிரும் குலை உயிருமாக கிடக்கிறான். அர்ஜுனன் எத்தனையோ அம்புகளை விடுகிறான். அவை கர்ணனை தீண்டவில்லை. கர்ணன் செய்த தர்மம் அவனை காத்து நின்றது.

பார்த்தான் கண்ணன். கர்ணன் செய்த தர்மம் அவனுக்கு பக்க பலமாக உள்ளவரை அவனை கொல்ல முடியாது என்று கருதி, கிழ வேதியர் வடிவம் தாங்கி, கர்ணனிடம் அவன் செய்த தவங்கள் யாவையும் தானமாகப் பெற்றான். (செய் தர்மம் - வினைத்தொகை). அதற்குப் பின், அர்ஜுனனிடம் "நீ இனி அம்பு விடு, அவன் இறந்து விடுவான்" என்று சொல்கிறான்.

அதே போல் அர்ஜுனனும், அம்பு விட்டு அவனை கொல்கிறான்.

நான் சொல்ல வந்தது இந்த கதை அல்ல.

அர்ஜுனன் விட்ட அம்பு குறி தவறாமல் கர்ணனின் மார்பை துளைத்தது என்பதற்கு ஒரு உவமை சொல்ல வேண்டும் என்று நினைத்த வில்லி புத்தூர் ஆழ் வார் ஒரு உவமையை தேர்வு செய்கிறார்.

"தகலுடையார் மொழி போல"

என்று சொல்கிறார்.

அதாவது தவம் செய்த பெரியவர்கள் சொன்ன சொல் எப்படி தவறாகாதோ , அது போல் தவறில்லாமல் அந்த அம்பு அதன் இலக்கை அடைந்தது என்கிறார்.

அந்த மாதிரி பெரியவர்கள் சபித்தாலும் சரி, ஆசீர்வாதம் செய்தாலும் சரி, அது பலிக்கும் என்று நம்மவர்கள் நம்பினார்கள்.

சொல்லுக்கு அவ்வளவு வலிமை இருக்கிறது. அது சொல்பவர்களைப் பொறுத்தது.

பாடல்

பகலவன்தன்மதலையைநீபகலோன்மேல்பாற்பவ்வத்திற்
                    படுவதன்முன்படுத்தியென்ன,
விகல்விசயனுறுதியுறவஞ்சரீக மெனுமம்பாலவ
                            னிதயமிலக்கமாக,
வகலுலகில்வீரரெலாமதிக்கவெய்தா னந்தவாசுக
                         முருவியப்பாலோடித்,
தகலுடையார்மொழிபோலத்தரணியூடு தப்பா
               மற்குளித்ததவன்றானும்வீழ்ந்தான்.


பொருள்

பகலவன்தன்மதலையை = பகலைத் தருகின்ற சூரியனின் மகனை (கர்ணனை)

நீ = நீ (அர்ஜுனா)

பகலோன் = சூரியன்

மேல்பாற் = மேற்கு திசையில்

பவ்வத்திற் = உள்ள கடலில்

படுவதன்முன் = மறைவதன் முன்

படுத்தியென்ன, = அம்புகளை விடுவாய் என்று  சொல்ல

விகல்விசயனும் = இகல் விஜயன் - வீரம் பொருந்திய அர்ஜுனன்

உறுதியுற = உறுதியாக,

அஞ்சரீக மெனும் அம்பால்  = அஞ்சீரகம் என்ற அந்த அம்பால்

அவனிதயமிலக்கமாக, = அவன் (கர்ணன்) இதயம் இலக்காக  (குறி வைத்து)

அகலுலகில் = அகன்ற உலகில்

வீரரெலாமதிக்க = வீரர் எல்லாம் மதிக்க

வெய்தா னந்த = எய்தான், அந்த

ஆசுகம் = அம்பு

முருவியப்பாலோடித், = உருவி அப்பால் ஓடி

தகலுடையார் = தவமுடையவர்

மொழிபோலத் = மொழி போல

தரணியூடு = உலகத்தின் வழி

தப்பாமற் = தப்பாமல்

குளித்ததது = விழுந்தது

வன்றானும்வீழ்ந்தான். = அவனும் (கர்ணனும்) வீழ்ந்தான்

வார்த்தைகள் வலிமை மிக்கவை. அவற்றை நாம் வீணடிக்கக் கூடாது.

பெரியவர்களின் ஆசி அப்படியே பலிக்கும்.

பெரியவர்கள் என்றால் வயதில் பெரியவர்கள் அல்ல. திருதராட்டிரன் கூட வயதில் பெரியவன் தான். அதற்காக அவன் சொன்னது எல்லாம் நடக்கும் என்று கொள்ளக் கூடாது. காட்டு எருமைக்கும், காண்டா மிருகத்துக்கும், கடல் ஆமைக்கும் கூடத்தான் வயதாகும். வயது ஒரு பொருட்டு அல்ல.

தவத்தால், ஒழுக்கத்தால் , அறிவால் பெரியவர்கள்.


அப்படிப் பட்டவர்கள் ஆசியைப் பெற வேண்டும்.

நாமும் அப்படிப்பட்டவர்களாக முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_25.html

Sunday, November 24, 2019

திருப்புகழ் - ஏது புத்தி

திருப்புகழ் - ஏது புத்தி 


கொஞ்சம் பெரிய பாடல் தான். படிக்கவும் சற்று கடினமான பாடல் தான். பொறுமையாகப் படித்தால் அவ்வளவு சுவை நிரம்பிய பாடல். சீர் பிரித்து பொருள் அறியலாம்.

அருணகிரிநாதர் சொல்கிறார்.

விளையாடிக் கொண்டிருந்த பிள்ளை, திடீரென்று அருகில் அப்பா அம்மா யாரும் இல்லாததை கண்டு திகைக்கிறது. எங்கு போய் தேடுவது என்று தெரியாமல் குழம்புகிறது. பின், அதுவே நினைக்கிறது. எனக்கு என்ன புத்தியா இருக்கு அப்பா அம்மாவை தேடி கண்டுபிடிக்க என்று நினைத்து ஓ வென்று அழ ஆரம்பிக்கிறது. பிள்ளை அழுதால் அப்பா அல்லது அம்மா யாராவது ஓடி வருவார்கள் தானே. நாம் எதுக்கு போய் தேடணும். அழுதா போதுமே, அவங்களே வந்து தூக்கிக் கொள்வார்கள் அல்லவா என்ற அந்த பிள்ளையின் அறிவு கூட எனக்கு இல்லையே.

இத்தனை காலம் இந்த உலகில் விளையாட்டுப் பிள்ளையாக இருந்து விட்டேன். திடிரென்று உன் ஞாபகம் வந்தது முருகா. உன்னை எங்கே போய் தேடுவேன். எனவே, அழுகிறேன். அழுதால் உன் பிள்ளையான என்னை நீ வந்து தூக்கிக் கொள்வாய் அல்லவா ? எனக்கு வேறு யாரைத் தெரியும்?

நீ வருவாய் என்று எனக்குத் தெரியும். பிள்ளை அழும் போது அதை கவனிக்காவிட்டால் ஊரில் அதன் அப்பா அம்மாவைப் பற்றி என்ன சொல்லுவார்கள். பிள்ளையை கவனிக்காம அப்படி என்ன வேலையோ என்று பெற்றோரைத் தானே திட்டுவார்கள்.

முருகா, நீ என்னை கவனிக்காவிட்டால் ஊரில் உன்னைத் தான் எல்லோரும் திட்டுவார்கள். பரிகாசம் பண்ணுவார்கள். பெரிய கடவுளாம், பக்தன் அழும் போது வந்து  கவனிக்கக் கூட தெரியவில்லை என்று.  இது தேவையா உனக்கு?

என்று சொல்லிவிட்டு, முருகனை துதிக்கிறார்.

அற்புதமான பாடல். சந்தம் கருதி கொஞ்சம் வார்த்தைகளை அங்கே இங்கே பிரித்துப் போட்டு இருக்கிறார். நாம் அதை கொஞ்சம் சீர் பிரித்து வாசித்தால் அதன் அழகு தெரியும்.

பாடல்



ஏது புத்திஐ யாஎ னக்கினி
     யாரை நத்திடு வேன வத்தினி
          லேயி றத்தல்கொ லோஎ னக்குனி ...... தந்தைதாயென்

றேயி ருக்கவு நானு மிப்படி
     யேத வித்திட வோச கத்தவ
          ரேச லிற்பட வோந கைத்தவர் ...... கண்கள்காணப்

பாதம் வைத்திடை யாதே ரித்தெனை
     தாளில் வைக்கநி யேம றுத்திடில்
          பார்ந கைக்குமை யாத கப்பன்முன் ...... மைந்தனோடிப்

பால்மொ ழிக்குர லோல மிட்டிடில்
     யாரெ டுப்பதெ னாவெ றுத்தழ
          பார்வி டுப்பர்க ளோஎ னக்கிது ...... சிந்தியாதோ

ஓத முற்றெழு பால்கொ தித்தது
     போல எட்டிகை நீசமுட்டரை
          யோட வெட்டிய பாநு சத்திகை ...... யெங்கள்கோவே

ஓத மொய்ச்சடை யாட வுற்றமர்
     மான்ம ழுக்கர மாட பொற்கழ
          லோசை பெற்றிட வேந டித்தவர் ...... தந்தவாழ்வே

மாதி னைப்புன மீதி ருக்குமை
     வாள்வி ழிக்குற மாதி னைத்திரு
          மார்ப ணைத்தம யூர அற்புத ...... கந்தவேளே

மாரன் வெற்றிகொள் பூமு டிக்குழ
     லார்வி யப்புற நீடு மெய்த்தவர்
          வாழ்தி ருத்தணி மாம லைப்பதி ...... தம்பிரானே.



பொருள்



ஏது புத்தி = ஏது புத்தி

ஐயா = ஐயா

எ னக்கு = எனக்கு

இனி = இனிமேல்

யாரை = யாரை

நத்திடுவேன் = நாடுவேன்

அவத்தினிலே = வீணாக

இறத்தல்கொ லோ = இறப்பதுதான்

எனக்கு = எனக்கு

நீ = நீ

தந்தைதாயென்று = தந்தை தாய் என்று


இருக்கவும் = இருக்கவும்

நானு மிப்படியே  = நானும் இப்படியே

தவித்திடவோ = தவித்திடவோ

சகத்தவர் = உலகில் உள்ளவர்கள்

ஏசலிற் படவோ = திட்டும் படியாக

நகைத்தவர் = என்னைப் பார்த்து சிரிப்பவர்கள்

கண்கள்காணப் = அவர்கள் கண்கள் என்னை காணும் படி

பாதம் வைத்திடை யா = உன் பாதங்களை வைத்திடு ஐயா

ஆதரித்து எனை = ஆதரித்து எனை

தாளில் வைக்க = உன் திருவடிகள் என் தலைமேல் வைக்க

நி யேம றுத்திடில் = நீயே மறுத்தால்

பார் நகைக்குமை யா  = பார் நகைக்கும் ஐயா

தகப்பன்முன் = தகப்பன் முன்

மைந்தனோடிப் = பிள்ளை ஓடி

பால்மொழி = குழந்தையின் பால் போன்ற மொழியில்

குர லோல மிட்டிடில் = குரல் ஓலம் இட்டிடில்

 யாரெடுப்பதென = யார் எடுப்பது என

நா வெறுத்தழ =நாக்கு வெறுத்து அழ

பார்வி டுப்பர்க ளோ = பாரில் (உலகில்) விட்டு விடுவார்களா

எனக்கிது = என்று இதை

சிந்தியாதோ =  சிந்திக்க மாட்டார்களா?


ஓத முற்றெழு = வெள்ளம் முழுவதுமாக எழுவது போல

பால்கொ தித்தது =பால் கொதித்தது

போல = போல

எட்டிகை = எட்டு திசையில் உள்ள

நீசமுட்டரை = நீசம்முற்ற அசுரர்களை

யோட வெட்டிய = ஓட வெட்டிய

பாநு  = சூரியனை போல் ஒளிவிடும்

சத்திகை = சக்தியான வேலைக் கொண்ட

யெங்கள்கோவே = எங்கள் அரசனே


ஓத மொய் = வெள்ளம் பெருகும்

சடை யாடவும்  = சடை ஆடவும்

உற்ற மான் மழு கரம் ஆட = மானும் மழுவும் கையில் ஆட

பொற்கழ லோசை  = பொன்னால் அணிந்த கழல் ஓசை

பெற்றிடவே நடித்தவர் = தோன்றும்படி நடனமாடியவர்

தந்தவாழ்வே = தந்த எங்கள் வாழ்வான முருகனே


மாதி னை = மாதினை

புன மீதி ருக்கு = புனை மீது இருக்கும்

மை = மை பூசிய

வாள்விழிக் = வாள் போன்ற விழிகளைக் கொண்ட

குற மாதினைத் = குற மாதினை

திருமார்ப ணைத்த = மார்போடு அனைத்துக் கொண்ட

மயூர = மயில் மேல் ஏறும்

அற்புத = அற்புதமான

 கந்தவேளே = கந்தக் கடவுளே

மாரன் வெற்றிகொள் = மன்மதனை வெற்றி கொள்ளும்

பூமு டிக்குழலார்  = பூக்கள் முடிந்த குழலை உடைய பெண்கள்

வியப்புற = வியக்கும்படி

நீடு மெய்த்தவர் = நீண்ட மெய் தவம் செய்பவர்

வாழ் = வாழும்

திருத்தணி  = திருத்தணியில்

மாமலைப் = பெரிய மலை

பதி  தம்பிரானே.= அதிபதியான தம்பிரானே

கொஞ்சம் பொறுமையாக பாடலை வாசித்துப் பாருங்கள். சந்தம் துள்ளும்.

அர்த்தம் தோய்ந்த இனிய பாடல்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_24.html

Friday, November 22, 2019

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்

திருக்குறள் - பொதுநோக்கு நோக்குதல்



கல்லூரி நாட்களில் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார காதலித்தார்கள். ஆனால், வெளியே காட்டிக் கொல்வதில்லை. எப்போதாவது பேசிக் கொள்வது. ஓடை நீர் பார்வை பரிமாற்றம் மட்டும்தான். கல்லூரி  முடிந்து ஆளுக்கு ஒரு பக்கமாய் போய் விட்டாலும், தொலை பேசியிலும், whatsapp லும் அவர்கள் காதல் தொடர்ந்து கொண்டே தான் இருந்தது.

அவர்களின் நண்பர்களுக்கு அரசல் புரசலாகத் தெரியும். இருந்தும் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. என்ன பெரிய விஷயம் என்று விட்டு விட்டார்கள்.

எப்போதாவது, ஆண்டுக்கு ஒரு முறை, அல்லது இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நண்பர்கள் எல்லோரும் கூடுவார்கள். அல்லது நண்பர்கள் வீட்டில் ஏதாவது திருமணம் போன்ற விஷேசம் வந்தால் கூடுவார்கள்.

அவர்களும் வருவார்கள். ஆனால், அவர்களுக்குள் ஒன்றும் இல்லாதது போல பார்த்துக் கொள்வார்கள்.

அவளுடைய தோழிகளும், அவனுடைய தோழர்களும் அவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டே இருப்பார்கள். ம்ஹூம் ...ஒன்றும் தெரியாது.  யாரோ, எவரோ போல இருப்பார்கள்.

இரண்டும் சரியான கல்லுளி மங்கர்கள். அழுத்தமான ஆளுகள் தான்....


இது இன்று நடக்கும் ஏதோ சினிமாவோ அல்லது சீரியலோ அல்ல, திருவள்ளுவர்  காலத்தில் நடந்த நாடகம்...அவரே சொல்கிறார் பாருங்கள் ....


பாடல்

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள

பொருள்

ஏதிலார் = ஒருவரை ஒருவர் அறியாதவர்

போலப் = போல

பொதுநோக்கு நோக்குதல் = பொதுப்படையாக நோக்குதல்

காதலார் =காதலர்கள்

கண்ணே உள = கண்ணில் மட்டும் தான் இருக்கும்

உள என்பது பன்மை. இரண்டு பேர் மனத்திலும் காதல் இருப்பதால் உள என்ற பன்மையை போடுகிறார் வள்ளுவர்.


நோக்குதல் என்பது ஒன்று தானே?  இரண்டு பேரும் ஒரே காரியத்தைத்தானே செய்கிறார்கள். பின் எதற்கு பன்மை போட வேண்டும்?

எல்லோரையும் நோக்குவது ஒரு தொழில். காதலியை (காதலனை) நோக்குவது இன்னொரு தொழில். அது வேறு பார்வை. இது வேறு பார்வை. பார்த்தால் ஒரே மாதிரிதான்   இருக்கும். இருந்தாலும், உள்ளுக்குள் வேறுபாடு உண்டு   என்பதால்,  "உள" என்ற பன்மையை கையாள்கிறார் வள்ளுவர்.


அவளுக்கு , அவன் மேல் காதல்.

அவனுக்கு, அவள் மேல் காதல்.

இருவரும் மனதுக்குள் அந்த காதலை நினைத்து மகிழ்கிறார்கள். அருகில் இருப்பது, ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அவர்களுக்குள் ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது.  இருந்தாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், ஒன்றும் தெரியாதவர் போல பார்த்துக் கொள்கிறார்கள்.

அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் அந்த கண நேரத்தில் பட்டுத் தெறிக்கும் காதல். அதை மற்றவர்கள் அறிந்து கொள்ளக் கூடாது என்று மறைத்து வைக்கும் செயல் என்று   பல செயல்கள் நடப்பதால், "உள" என்றார்.

சரி, அது என்ன "காதலார்". காதலர் என்று தானே இருக்க வேண்டும். ஏன் 'லார்" என்று ஒரு பொருந்தாத சொல்லப் போடுகிறார் ?

அவர்கள் காதலிக்கிறார்கள். ஆனால், காதலை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். அது ஒரு  முரண் தானே. அந்த முரணைக் பாட்டில் கொண்டு வருகிறார் வள்ளுவர்.

"காதலார்" என்று ஒரு நெருடலான சொல்லைப்  போடுகிறார்.

அந்த சூழ்நிலையில் அவர்கள் செயல் அப்படி பொருத்தம் இல்லாததாக இருப்பதை மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறார்.

எவ்வளவு சுவையாக இருக்கிறது.  படிக்கும் போதே ஒரு சுகம் தெரிகிறது அல்லவா? முகத்தில் ஒரு புன்னகை வருகிறது அல்லவா?

ஆண் பெண் உறவை அவ்வளவு இனிமையாக சொல்லி இருக்கிறார் வள்ளுவர்.

படிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_22.html


Thursday, November 21, 2019

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்

கந்த புராணம் - பழி ஒன்று நின்பால் சூழும்


அவனுக்கு அவள் மேல் கொள்ளை காதல். எட்ட இருந்து, பார்த்து, இரசித்து , எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தவித்துக் கொண்டிருக்கிறான்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தது.

அவளிடம் போய்

"ஏங்க , ஏதாவது சொல்லுங்க. பிடிச்சுருக்குனு சொல்லுங்க, இல்லை பிடிக்கலேன்னு சொல்லுங்க...ஏதாச்சும் சொல்லுங்க" என்று சொல்கிறான்.

அவள் ஒன்றும் சொல்லவில்லை. நிலத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

"சரிங்க, பேச வேண்டாம், ஒரு புன்சிரிப்பு?"

அதற்கும் அவள் ஒன்று செய்யாமல் நிற்கிறாள்.

"சரி போகட்டும், புன்னகை கூட வேண்டாம், ஒரே ஒரு பார்வை பாருங்க...அது போதும்" என்கிறான்.

அவள் மசியவில்லை. நிமிர்ந்து பார்க்கவும் இல்லை.

"என்னங்க நீங்க, நான் கிடந்து தவிக்கிறேன்...எனக்கு ஒரு வழி சொல்லுங்க "

அவள் அப்போதும் மெளனமாக இருக்கிறாள்.

"ஏங்க, உங்க மனசு என்ன கல் மனசா ? எனக்கு சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல...பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு...எனக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா , அந்த பழி உங்க மேல தான் வரும் " என்று கூறுகிறான்.

அந்த அவன் = முருகன்.

அந்த அவள் = வள்ளி.

மேலே சொன்ன dialogue , அப்படியே கச்சியப்ப சிவாச்சாரியார் சொன்னது.

பாடல்

மொழி ஒன்று புகலாய் ஆயின் முறுவலும் புரியாய்  ஆயின்விழி ஒன்று நோக்காய் ஆயின் விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்வழி ஒன்று காட்டாய் ஆயின் மனமும் சற்று உருகாய் ஆயின்பழி ஒன்று நின்பால் சூழும் பராமுகம் தவிர்தி என்றான்.



பொருள்


மொழி ஒன்று புகலாய் ஆயின் = ஒரு வார்த்தை கூட பேசாமல் இருந்தால்

முறுவலும் புரியாய்  ஆயின் = ஒரு புன்னகை கூட புரியவில்லை என்றால்

விழி ஒன்று நோக்காய் ஆயின் = ஒரு கண் ஜாடை கூட காட்டவில்லை என்றால்

விரகம் மிக்கு = விரகம் அதிகமாகி

உழல்  வேன் உய்யும் = துன்பப்படும் நான் தப்பிக்கும்

வழி ஒன்று காட்டாய் ஆயின் = வழி ஒன்றும் காட்டாவிட்டால்

மனமும் சற்று உருகாய் ஆயின் = எனக்காக மனம் உருக்காவிட்டால்

பழி ஒன்று நின்பால் சூழும் = உன் மேல் தான் பழி வரும்

பராமுகம் தவிர்தி என்றான். = எண்னை பார்க்காமல் இருப்பதை விட்டுவிடு என்றான்.

தெய்வீகக் காதல்தான். முருகன் , வள்ளி மேல் கொண்ட காதல். அதை விட பெரிய தெய்வீக  காதல் என்ன இருக்க முடியும்?

அந்த காதலின் பின்னாலும், காமமே தூக்கி நிற்கிறது.

"விரகம் மிக்கு உழல்  வேன் உய்யும்" என்கிறான் முருகன்.

பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக சொல்கிறார் கச்சியப்பர். "விரகம்" தான்  இந்தப் பாடு படுத்துகிறது என்று.

சரி, அது பக்கம் இருக்கட்டும்.

பக்தர்கள் பலர் இறைவனை வேண்டுவார்கள்..."ஆண்டவா, எனக்கு முக்தி கொடு,  வீடு பேறு கொடு, மோட்சம் கொடு, உன் திருவடி நிழலில் இருக்கும் பேற்றைத் தா " என்று.

"சரி பக்தா, உன் பக்திக்கு மெச்சினோம். புறப்படு" என்று கூப்பிட்டால் எத்தனை பேர்  போவார்கள்?

மற்றவர்களை விடுங்கள்.

மணிவாசகர் போகவில்லை. இறைவன் வலிய வந்து அழைத்தான். இவர் போகவில்லை.

காரணம், மனம் பக்குவப்  படவில்லை.

பின்னால், அதை நினைத்து நினைந்து, நைந்து நைந்து புலம்பினார். அந்த புலம்பலின் மொத்த  தொகுப்புதான் திருவாசகம்.

இறைவன் கூப்பிட்டுக் கொண்டேதான் இருக்கிறான்.

நமக்கு கேட்பதில்லை.

கேட்டாலும், கண்டு கொள்ளாமல் இருந்து விடுகிறோம்.

அப்புறம் பார்த்துக் கொள்ளலாம். பிள்ளைகள் படிப்பு, அதுகளுக்கு ஒரு கல்யாணம், வயதான பெற்றோர், என்று இவ்வளவையும் விட்டு விட்டு எங்க போறது?

அப்புறம், இந்த இறைவனுக்கு என் மேல் கருணையே இல்லையா என்று புலம்ப வேண்டியது.

முருகன் வலிய வந்து வள்ளியிடம் கேட்கிறான்.

அவளோ,ஒன்றும் பேசாமல் இருக்கிறாள்.

முருகன் சொல்கிறான் "இங்க பாரு...நான் வந்து கூப்பிடுகிறேன்...நீ வரவில்லை என்றால் , பழி உன் மேல் தான் வரும். என்னை யாரும் குறை சொல்ல முடியாது ..எனவே என் கூட வா" என்கிறான்.

பக்குவம் இல்லாத ஆன்மா. வந்திருப்பது இறை என்று அறியாமல் விழிக்கிறது.

எங்கோ இருந்த குகனுக்குத் தெரிந்தது , அருகில் இருந்த கூனிக்குத் தெரியவில்லை.

பிள்ளை பிரகாலதனுக்குத் தெரிந்தது, தந்தை இரணியனுக்குத் தெரியவில்லை.

தம்பி வீடணனுக்குத் தெரிந்தது, அண்ணன் இராவணனுக்குத் தெரியவில்லை.

என்ன செய்ய?

பக்குவம் வேண்டுமே?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_21.html

Monday, November 18, 2019

கந்த புராணம் - பேரினை உரைத்தி

கந்த புராணம் - பேரினை உரைத்தி 


அவளை அன்று தற்செயலாக வீட்டிற்கு அருகில் உள்ள ஒரு பெரிய  கடையில் பார்த்தான்.  வீணையின் ஒற்றை தந்தியை சுண்டி விட்ட மாதிரி ஒரு சிலிர்ப்பு. யார் இவள் ? இவ்வளவு அழகா? சிரிக்கிறாளா இல்லை முகமே அப்படித்தானா? என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். பக்கத்தில போய் பேசலாமா என்று நினைக்கிறான். அதற்குள் அவள் போய் விட்டாள்.

அவனுக்குள் ஏதோ ஒரு அவஸ்தை.

சிறிது நாள் கழித்து, மீண்டும் அவளை ஒரு நூலகத்தில் பார்த்தான். அவள் பாட்டுக்கு படித்துக் கொண்டிருக்கிறாள். அவனுக்குள் ஒரு இனம் புரியாத பரபரப்பு. பேசவும் முடியாது. அவள் இருக்கும் மேஜைக்கு பக்கத்து மேஜையில் அமர்ந்து கொள்கிறான்.

அவள் வாசித்து முடித்து விட்டு செல்கிறாள். அவனும் அவள் பின்னையே போகிறான்.

ஏதாவது அவளிடம் பேச வேண்டும் என்று ஆசை. என்ன பேசுவது, என்ன கேட்பது என்று தவிக்கிறான். ஏதாவது கேட்டால் , அவள் தப்பாக நினைத்துக் கொள்வாளோ என்றும் பயம்....

ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவளை அணுகி, தன்னை அறிமுகப் படுத்தி கொண்டு, அவள் பெயரை கேட்கிறான்.

அவள் பதில் சொல்லாமல் போய் விடுகிறாள்.

அப்புறம் சிறிது நாள் கழித்து, "ஏங்க , பேர் சொல்லாட்டாலும் பரவாயில்ல, நீங்க எந்த ஊருன்னாவது சொல்லுங்க" என்றான். அதற்கும் அவள் பதில் சொல்லவில்லை.

கொஞ்ச நாள் சென்றது, "சரிங்க , ஊர் பேர் சொல்லாட்டாலும் பரவாயில்லை, உங்க ஊருக்கு போற வழியையாவது சொல்லுங்க. ஏதாவது சொல்லுங்க "  என்று  அவளை பேச வைக்க பாடாய் படுகிறான். ....

இது ஏதோ நம்ம ஊர் +2 , காலேஜ் படிக்கும் பையன் , பொண்ணுங்க கதை மாதிரி இருக்கா?

இல்லை, இது கந்தபுராண கதை.

நம்ப மாட்டீர்கள் என்று தெரியும். பாடலைப் பாருங்கள்.


பாடல்


வார் இரும் கூந்தல் நல்லாய் மதி தளர் வேனுக்கு  உன்றன்
பேரினை உரைத்தி மற்று உன் பேரினை உரையாய் என்னின்
ஊரினை உரைத்தி ஊரும் உரைத்திட முடியாது என்னில்
சீரிய நின் சீறுர்க்குச் செல்வழி உரைத்தி என்றான்.


பொருள்

வார் இரும் = வாரி, வகிடு எடுக்கப்பட்ட

கூந்தல் = கூந்தலை கொண்ட

நல்லாய் = நல்ல பெண்ணே

மதி  தளர் வேனுக்கு = புத்தி தடுமாறும் எனக்கு

உன்றன் = உன்னுடைய

பேரினை உரைத்தி = பேர் என்னனு சொல்லு

மற்று  = அல்லாமல்

உன் பேரினை உரையாய் என்னின் = பேரை சொல்லமாட்டியா, சரி, அப்படினா

ஊரினை உரைத்தி = உன் ஊர் பேராவது சொல்லு

ஊரும் உரைத்திட முடியாது என்னில் = அதையும் சொல்ல முடியாது என்றால்

சீரிய = சிறந்த

நின் = உன்னுடைய

சீறுர்க்குச் = சிறப்பான ஊருக்கு

செல்வழி உரைத்தி என்றான். = போகிற வழியாவது சொல்லு  என்றான்

அது சிறந்த ஊருனு இவனுக்கு எப்படித் தெரியும்? ஊர் பேரே தெரியாது. ஆனால், அது சிறந்த ஊர் என்று எப்படித் தெரியும்?

அவள் பிறந்ததனால், அது சிறந்த ஊராகத்தான் இருக்க முடியும் என்பது அவன் எண்ணம்.

காதல் இரசம் கொஞ்சும் பாடல்.

இது கந்த புராணத்தில் 10149 ஆவது பாடல்.

எவ்வளவு பாடல்கள் இருக்கின்றன. என்னைக்கு அதை எல்லாம் படித்து இன்புறுவது?

whatsapp , youtube , facebook பாக்கவே நேரம் இல்லை...இதில் கந்த புராணத்தை  எங்கே போய்  படிப்பது ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_18.html

Saturday, November 16, 2019

கந்த புராணம் - அயன் படைத்திலன்

கந்த புராணம் - அயன் படைத்திலன் 


ஆயிரம் ஆனாலும், பெண்களுக்கு தங்கள் பிறந்த வீட்டைப் பற்றி குறை கூறினால் பிடிப்பது இல்லை. அதுவும் கட்டிய கணவனோ, அவனைச் சார்ந்தவர்களோ சொன்னால் இன்னும் பிடிப்பது இல்லை.

அதற்காக, சில சமயம் உண்மையை சொல்லாமல் இருக்க முடியுமா?

வள்ளி, தினை புனத்திற்கு காவல் இருக்கிறாள். பயிர்களை, காகம் முதலிய  பறவைகள் வந்து சேதப்படுத்தால் அவைகளை விரட்டி, பயிரை காவல் செய்கிறாள்.

அங்கே முருகன், வயோதிக அந்தணர் வேடத்தில் வருகிறான்.


வந்து, வள்ளியிடம் சொல்கிறான்

" கூர்மையான வாளைப் போன்ற கண்களை உடைய பெண்ணே, கேள். உலகில் உள்ள பெண்கள் எல்லாம் கண்டு கை தொழும் படி இருக்கும் உன்னை, இந்த பயிர்களை பாதுகாக்க வைத்துவிட்டுப் போய் இருக்கிறார்களே, அந்த வேடர்களுக்கு, ஆய்ந்து அறியும் அறிவை அந்த பிரம்மன் வைக்கவில்லை போலும் " என்கிறான்.

உங்கப்பா முட்டாள் னு சொன்னா, எதை பொண்ணு பொறுத்துக் கொள்வாள்? அதையேதான் கொஞ்சம் மாற்றிச் சொல்கிறான் கந்தன் "உங்கப்பாவுக்கு , அந்த பிரம்மன் அறிவை வைக்க மறந்து விட்டான் போல் இருக்கு
 னு. தப்பு உங்க அப்பா மேல இல்ல, அந்த பிரம்மன் மேல்தான் என்று சொல்லுமாப் போல.....


பாடல்


நாந்தகம் அனைய உண்கண் 

நங்கை கேள் ஞாலம்  தன்னில்

ஏந்திழையார் கட்கு எல்லாம் 

இறைவியாய் இருக்கும் நின்னைப் 

பூந்தினை காக்க வைத்துப் போயினார் 

புளினர் ஆனோர்க்கு 

ஆய்ந்திடும் உணர்ச்சி ஒன்றும் 

அயன் படைத்திலன் கொல் என்றான்.



பொருள்

நாந்தகம் = கூறிய கொடுவாள்

அனைய போன்ற

உண்கண் = பார்ப்பவரை உண்ண க் கூடிய கண்களைகே கொண்ட

 நங்கை கேள் = பெண்ணே !, கேள்

ஞாலம்  தன்னில் = இந்த உலகம் தன்னில்

ஏந்திழையார் கட்கு = பெண்களுக்கு 

எல்லாம் = எல்லாம்

இறைவியாய் இருக்கும்   = தலைவியாய் இருக்கும்

நின்னைப் = உன்னை

பூந்தினை = தினைப்புனம் உள்ள  வயல் காட்டை

காக்க வைத்துப்  = காவல் காக்க  வைத்து  விட்டு

போயினார் = போனார்கள்

புளினர் = வேடர்கள்

ஆனோர்க்கு = அவர்களுக்கு

ஆய்ந்திடும் = ஆராய்ச்சி செய்யும்

உணர்ச்சி ஒன்றும் = ஒரு உணர்ச்சியையும்

அயன் = பிரம்மன்

படைத்திலன் = படைக்கவில்லை

கொல்  = அசைச் சொல்

என்றான். = என்றான் (முருகன்)

கச்சியப்ப சிவாச்சாரியாரின் தமிழ் கொஞ்சுகிறது.

இராமாயணம்,பாரதம் அளவுக்கு  கந்த புராணம் அவ்வளவாக பேசப் படுவது இல்லை.

இருந்தும், அதில் உள்ள பாடல்கள், அவ்வளவு இனிமையானவை.  எளிமையானவை.

வேறென்ன சொல்லப் போகிறேன்? மூல நூலை தேடிப் படியுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_1.html

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன்

கம்ப இராமாயணம் - இராமன் என்ற மாணவன் 


ஆசிரியர் ஒன்றைச் சொல்லிக் கொடுத்தால், அந்த ஒன்றில் இருந்து பத்தாக, நூறாக படித்துக் கொள்ள வேண்டும். எல்லாமா ஆசிரியர் சொல்லித் தருவார். மாணவன்தான் தேடி பிடித்து படிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது, செய்து பார்க்க வேண்டும்.

இராமனுக்கு வில் வித்தை எல்லாம் சொல்லித் தந்தவர் விஸ்வாமித்ரர். ஜனகனிடம் , இராமனை அறிமுகப்படுத்தும் போது, அவர் சொல்கிறார்

"நான் தான் இந்த அஸ்திர பிரயோகங்களைச் சொல்லிக் கொடுத்தேன். ஆனால், அந்த படைக் கலன்களை இராமன் கையாளும் போது, எனக்கே பயமாக இருக்கிறது..அப்படி ஒரு வேகம், இலாகவம் " என்று கூறுகிறார்.

பாடல்


ஆய்ந்து ஏற உணர் - ஐய!-
   அயற்கேயும் அறிவு அரிய;
காய்ந்து ஏவினன். உலகு அனைத்தும்
   கடலோடும் மலையோடும்
தீய்ந்து ஏறச் சுடுகிற்கும்
   படைக் கலங்கள். செய் தவத்தால்
ஈந்தேனும் மனம் உட்க.
   இவற்கு ஏவல் செய்குனவால்.



பொருள்


ஆய்ந்து = ஆராய்ச்சி செய்து

ஏற  = ஏற்புடையதாக

உணர் = உணர்ந்து கொள்வாய்

ஐய!- = ஜனகனே

அயற்கேயும் = பிரம்மாவுக்கும் (அயன் - பிரமன்)

அறிவு அரிய = அறிந்து கொள்ள முடியாத

காய்ந்து ஏவினன் = எரித்து ஏவினான்

உலகு அனைத்தும் = உலகம் அனைத்தையும்

கடலோடும் = கடலோடும்

மலையோடும் = மலையோடும்

தீய்ந்து ஏறச் சுடுகிற்கும் = அனைத்தையும் தீய்த்து சுட்டு பொசுக்கும்

படைக் கலங்கள் = படை கலங்கள்

செய் தவத்தால் = அவை, செய்த தவத்தால்

ஈந்தேனும் = ஈந்த (தந்த) நானும்

மனம் உட்க. =மனம் நடுங்க

இவற்கு = இராமனுக்கு

ஏவல் செய்குனவால். =ஏவல் செய்கின்றன


அம்புகளை கொடுத்தது நான் தான். மந்திரங்களை சொல்லிக் கொடுத்தது நான்தான்.

ஆனால், இராமன் அவற்றை விடும்போது, எனக்கு மனம் நடுங்குகிறது என்கிறார்.

அப்படி படிக்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_16.html

Friday, November 15, 2019

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள்

அபிராமி அந்தாதி - அதிசயமான வடிவுடையாள் 


இங்கே யாரும் தனித்து ஆணும் இல்லை, தனித்து பெண்ணும் இல்லை.

ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள்.

ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஒரு ஆண் இருக்கிறான்.

ஒரு ஆணும் (தந்தை) பெண்ணும் (தாய்) கலந்த கலப்பில் தான் நாம் எல்லாம் பிறக்கிறோம். தாயின் குணம் கொஞ்சம், தந்தையின் குணம் கொஞ்சம் இரண்டும் கலந்த கலவை நாம். நமக்குள்ளே ஆணும் உண்டு , பெண்ணும் உண்டு.

என்ன, புற உலகம், ஆணிடம் உள்ள பெண் குணத்தையும்  , பெண்ணிடம் உள்ள ஆண் குணத்தையும் மழுங்க அடித்து விடுகிறது. ஒரு சிறு பையன் அழுதால் , "சீ, என்னடா, பொம்பள புள்ளை மாதிரி அழுது கொண்டு" என்று அழுவது பெண்ணின் குணம், ஆண் அழக் கூடாது என்று சொல்லி சொல்லி வளர்க்கிறது இந்த சமுதாயம். "என்ன ஆம்பிள்ளை பிள்ளை மாதிரி திங்கு திங்கு னு நடக்குற...மெல்ல நட " என்று பெண்ணுக்குச் சொல்லப் படுகிறது.

அபிராமியை ஒரு பெண்ணாகவே பார்த்த பட்டர், அவளுக்குள்ளும் இருக்கும் ஆணை காண்கிறார்.

ஆணும் பெண்ணும் கலந்த அர்த்த நாரியாக கண்டு அதிசயப் படுகிறார்.

பெண்ணை கட்டிக் கொடுத்து விட்டு, கொஞ்ச நாள் கழித்து அவள் வீட்டுக்குப் போகும் பெற்றோர் அதிசயப் படுவார்கள் "நம்ம வீட்டுல அப்படி இருந்த பெண்ணா, இங்க இப்படி பொறுப்பா இருக்கிறாள், வீட்டை நிர்வாகம் பண்ணுகிறாள், கணவனை , பிள்ளைகளை, வீட்டை, வெளி உலகை, அலுவலகத்தை எப்படி நிர்வாகம் பண்ணுகிறாள் " என்று வியப்பார்கள்.

பெண் அதியசமானவள் தான்.

உலகத்தையெல்லாம் தன் காம வலையில் வீழ்த்துபவன் மன்மதன். அவனை கண்ணால் எரித்தவர் சிவ பெருமான். அப்படி காமத்தை வென்ற சிவனை மயக்கி அவன் உடலில் ஒரு பாகமான அபிராமியே, நீ அதிசயமானவள் என்கிறார்.

பாடல்

அதிசயம் ஆன வடிவுடையாள் அரவிந்தம் எல்லாம்துதிசய ஆனன சுந்தரவல்லி துணை இரதிபதி சயமானது அபசயமாக முன் பார்த்தவர்தம்மதி சயமாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே



பொருள்

அதிசயம் ஆன வடிவுடையாள்  = அதிசயமான வடிவம் உடையவள்

அரவிந்தம் எல்லாம் = மலர்கள் எல்லாம்

துதிசய ஆனன = துதிசெய்யும்

சுந்தரவல்லி = அழகிய வல்லிக் கொடி போன்றவள்

துணை இரதி = இரதி தேவியின்

பதி = கணவன் (மன்மதன் )

சயமானது = அவன் இது வரை  பெற்ற வெற்றிகள் எல்லாம்

அபசயமாக = தோல்வி அடையும்படி

முன் = முன்பு

பார்த்தவர்தம் = நெற்றிக்கண்ணால் பார்த்தவர், எரித்தவர்

மதி = அவருடைய புத்தியை , மனதை

சயமாக அன்றோ = வெற்றி பெற்று அல்லவா

வாம பாகத்தை = இடப் பாகத்தை

வவ்வியதே = அடைந்ததே


அது ஒரு புறம் இருக்கட்டும்.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். அவளை பார்க்கும் போதெல்லாம் அவனுக்குள் ஆயிரம் மின்னல் ஒன்றாக இறங்கியது போன்ற ஒரு சிலிர்ப்பு. அவளை தூரத்தில் பார்த்தாலே அவனுக்குள் ஆனந்த கங்கை கரை புரண்டு ஓடும்.

அவனுடைய  கனவும், நினைவும் அவளாகவே இருந்தாள்.

காலம் செய்த கோலம், அவர்கள் பிரிந்து போனார்கள். கால நீரோட்டம் அவர்களை  வேறு வேறு திசையில் கொண்டு சென்றது.

என்றேனும் அவளை காணலாம் என்று கனவு கண்டு கொண்டிருந்தான்.

ஒரு நாள், கணவனுடன் அவள் வந்தாள்.

அவள் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து அவனுக்கு சந்தோஷம்.

எப்படி அவள் இன்னொருவருக்கு மனைவியானாள் ?

அவர்களை ஒன்றாகப் பார்ப்பது அவனுக்கு பெரிய அதிசயமாக இருக்கிறது.

நான் பார்த்த பெண்ணா இவள்? அந்த சின்னப் பெண்ணா இவள் என்று அதிசயமாக பார்க்கிறான்.

அதிசயமான வடிவு உடையாள்....

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_78.html

திருக்குறள் - பிச்சை எடுப்பதும் ஒரு பெருமைதான்

திருக்குறள் - பிச்சை எடுப்பதும்  ஒரு பெருமைதான் 


என்னது? பிச்சை எடுப்பது ஒரு பெருமையா? ஒருத்தரிடம் போய், எனக்கு உதவி செய்யுங்கள் என்று கேட்பதில் என்ன பெருமை இருக்க முடியும்?  அது ஒருவனின் இயலாமையை அல்லவா காட்டுகிறது?

உண்மைதான்.

ஆனால், யாரிடம் சென்று யோசிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அது.

"மறைத்து வைக்காமல், நம் தேவை அறிந்து, நமக்கு உதவி செய்வது அவரின் கடமை என்று நினைத்து, நாம் கேட்காமலேயே உதவி செய்பவரிடம் சென்று உதவி கேட்டு நிற்பதும் ஒரு பெருமையான விஷயம்தான்" என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கரப்பிலா நெஞ்சின் கடன்அறிவார் முன்நின்று
இரப்பும்ஓர் ஏர் உடைத்து.


பொருள்

கரப்பிலா = கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள். கரப்பிலா என்றால் மறைத்து வைக்காமல்.

நெஞ்சின்  = மனம் உடையவர்கள்

கடன்அறிவார் = தங்களுடைய கடமையை அறிந்தவர்கள்

முன்நின்று = அவர்கள் முன் சென்று நின்று

இரப்பும் = யாசிப்பதும்

ஓர் = ஒரு

ஏர் உடைத்து. = அழகு, பெருமை உடையது


கடன் அறிவார் என்றால் நமக்கு உதவுவது அவர்கள் கடன் என்று அறிந்தவர்கள்.  யார் அப்படி இருப்பார்கள்? மிக நெருங்கிய நண்பர், நமக்கு மிக மிக வேண்டியவர்கள் இருக்கலாம். அல்லது நாம் யாருக்கோ முன்பு பெரிய உதவி செய்து இருக்க வேண்டும்.  நமக்கு இப்போது உதவி செய்வதை தங்கள் கடன் என்று  அவர்கள் நினைக்கலாம்.  அப்படி உதவி செய்து வையுங்கள்.

"உங்கப்பா அந்தக் காலத்தில எங்களுக்கு எவ்வளவோ செய்திருக்காருப்பா...உனக்கு செய்யாமல்  வேற யாருக்கு செய்யப் போகிறேன் "  என்று மற்றவர்கள் நம் பிள்ளைகளை பார்த்து சொல்லும் அளவுக்கு   உதவி செய்து வைத்திருக்க வேண்டும்.

"முன் நின்று" என்று சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கிறது. அதாவது, நாம் உதவி என்று கேட்க  வேண்டாம். முன் சென்று நின்றாலே போதும். அவர்கள் அறிந்து கொள்வார்கள்.  உதவி செய்வார்கள்.

அப்படிப் பட்டவர்கள் முன் சென்று உதவி கேட்டு நிற்பதே ஒரு பெருமை என்கிறார்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

அப்படி நீங்கள் யாருக்காவது கடன் பட்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு உதவி செய்வது  உங்கள் கடன் என்று நீங்கள் யாரையாவது மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா?

நினைத்துப் பாருங்கள்.

உதவி பெற்றிருந்தால், அவர்கள் கேட்காமலேயே, அவர்களுக்கு வேண்டிய போது திரும்பிச் செய்ய வேண்டும்.

ஒப்புரவு அறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறள். ஒப்புரவு என்றால் சமுதாயத்தோடு  ஒன்றி வாழ்தல்.

இன்னும் 9 குறள் இருக்கிறது அந்த அதிகாரத்தில். படித்துப் பாருங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_15.html


Thursday, November 14, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கலியும் கெடும் 



ஒரு ஊரில் பெரிய பஞ்சம். மழையே இல்லை. பூமி வறண்டு விட்டது. மக்கள் தவித்துப் போனார்கள். அந்த ஊருக்கு ஒரு துறவி வந்து சேர்ந்தார். அவரிடம் மக்கள் இப்படி மழையே இல்லை, என்ன செய்வது என்று முறையிட்டார்கள். அதற்கு அவர் "ஒரு யாகம் செய்தால் மழை வரும்" என்று கூறி, அதற்கு வேண்டிய ஏற்பாடெல்லாம் செய்து விட்டார்.

ஒரு வாரம் யாகம் நடந்தது. கடைசி நாள் யாகம். யாகம் முடிந்தவுடன், மழை "சோ' என்று பெய்தது. மக்கள் எல்லோரும் மகிழ்ந்தார்கள். அந்த துறவிக்கு நிறைய பொருள் கொடுத்தார்கள், அவரைப் புகழ்ந்து  பேசினார்கள்.

அப்போது அவர் சொன்னார் , "இந்த மழை என்னாலோ , இந்த யாகத்தாலோ, உங்களாலோ வரவில்லை. அதோ அந்த மூலையில் குடையோடு நிற்கிறானே அந்த சிறுவனின் நம்பிக்கைக்காக பெய்தது " என்றார்.

அப்போதுதான் எல்லோரும் கவனித்தார்கள்...ஒருவர் கூட குடை கொண்டு வரவில்லை, துறவியும் சேர்த்து.

அவ்வளவு நம்பிக்கை.

கடவுளை நம்பும் எவ்வளவு பேர், தாங்கள் சுவர்க்கம் போவோம் என்று உறுதியாக நம்புகிறார்கள்? ஸ்வர்கமோ, இறைவன் திருவடியோ ஏதோ ஒன்று. அங்கே செல்வதாக எத்தனை பேருக்கு நம்பிக்கை இருக்கிறது?

நம்மாழ்வார் சொல்கிறார்

"இனிமேல் நரகம் என்பதே இருக்காது.  யார் நரகத்துக்கு போவார்கள். திருமாலே இந்த பூமியில் வந்து பிறந்து நமக்கு அருள் செய்த பின், யார் நரகம் போகப் போகிறார்கள்? எமனுக்கு என்ன வேலை? கலி புருஷனும் வேலை இல்லாமல் திண்டாடப் போகிறான்" என்கிறார்.

அவருக்கு அவ்வளவு நம்பிக்கை. இனிமேல் மரணம் இல்லை, நரகம் இல்லை,கலியால் துன்பம் இல்லை என்று.

எத்தனை பேர் இதை நம்புகிறார்கள் ?

கடவுளிடம் ஒருதரம் சொன்னால் போதாதா? எனக்கு சுவர்க்கம் குடு, துன்பம் தராதே, இன்பம் தா, என்னை நல் வழியில் நடத்து என்று. தினம் தினம் போய் சொல்ல வேண்டுமா ? ஒரு தரம் கூட எதற்கு சொல்ல வேண்டும். அவருக்குத் தெரியாதா?

கடவுளுக்குத் தெரியாது என்று நம்மவர்கள் நம்புகிறார்கள்.

பாடல்


பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்,
நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங் கியாதொன்று மில்லை,
கலியும் கெடும்கண்டு கொள்மின் கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,
மலியப் புகுந்திசை பாடி யாடி யுழிதரக் கண்டோம்


பொருள்


பொலிக பொலிக பொலிக = சிறந்து விளங்குக

போயிற்று  = போயிற்று, நீங்கிற்று

வல்லுயிர்ச் சாபம்,  = இந்த உயிர்களை பிடித்த சாபம்

நலியும் நரகமும் = நரகம் நலிந்து போகும். யாரும் இல்லாவிட்டால், நரகத்தை இழுத்து மூட வேண்டியது தானே.


நைந்த = சோர்ந்து போன

நமனுக்கிங் கி = நமனுக்கு இங்கு

யாதொன்று மில்லை, = ஒரு வேலையும் இல்லை

கலியும் கெடும்  = கலி (சனி) புருஷனும் கெடுவான்

கண்டு கொள்மின் = கண்டு கொள்ளுங்கள்

கடல்வண்ணன் = கடல் போன்ற வண்ணத்தை உடையவன்

பூதங்கள் மண்மேல், = உயிர்கள் வாழும் இந்த மண் மேல்

மலியப் புகுந் = அவனே வந்து புகுந்து

திசை பாடி = இசை பாடி

யாடி = ஆடி

யுழிதரக் கண்டோம் = நடமாடக் கண்டோம்



மரண பயம் இல்லை. கலி பயம் இல்லை. நரக பயம் இல்லை.

கவலையை விடுங்கள். சந்தோஷமாக இருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_14.html

Wednesday, November 13, 2019

திருவாசகம் - வாரா வழி அருளி

திருவாசகம் - வாரா வழி அருளி 


வழி என்றால் எங்கோ போவதற்கோ அல்லது எங்கிருந்தோ வருவதற்கோதான் இருக்க வேண்டும் அல்லவா.

இறைவன் "வாரா வழி"யை அருளுவானாம்.

அது என்ன வாரா வழி?

இறந்து, பின் இங்கு திரும்பவும் வாரா வழி.

இறைவன் இருக்கிறானா? அவனை எப்படி அடைவது என்று ஆதி நாள் தொட்டு மனிதன் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறான்.

மணிவாசகர் சொல்கிறார். "நீ போய் தேடினால் கிடைக்க மாட்டான். தேடுவதை முதலில் நிறுத்து" என்கிறார்.

எப்படித் தேடுவது? எதைத் தேடுகிறோம் என்று தெரிந்தால் அல்லவா அதைத் தேடி கண்டு பிடிக்க முடியும். இறைவன் எப்படி இருப்பான் என்று நமக்குத் தெரியாது. சினிமாவிலும், படத்திலும், சிலையிலும் இருப்பது போல இறைவன் இருப்பானா?

உலகத்தில் உள்ள எல்லோரும் தேடினார்கள். யாரும் அவனை காண முடியவில்லை.

ஆனால், "நமக்கு எளியன்" என்கிறார் மணிவாசகர். நமக்கு என்றால் அன்பர்களுக்கு.  அறிவு கொண்டு தேடாமல், அன்பு உள்ளம் கொண்டவர்களுக்கு  அவன் எளியன் என்கிறார்.

அவனே வந்து, என் உள்ளம் புகுந்து, வாரா வழி அருளி, என்னை பைத்தியமாகி, தீராத இன்பத்தைத் தந்தான் என்கிறார்.

அவர் அப்படி உருகி உருகி பாடிய பாடல், இதோ.

பாடல்


பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலுங் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்.

பொருள்

பாரார் = பாரில் உள்ளவர்கள்

விசும்புள்ளார் = வானத்தில் உள்ளவர்கள்

பாதாளத் தார் = பாதாள உலகில் உள்ளவர்கள்

புறத்தார் = இவை அன்றி மற்ற உலகில் உள்ளவர்கள்

ஆராலுங் = யாராலும்

காண்டற் கரியான்  = காண்பதற்கு அரியவன்

எமக்கெளிய பேராளன் = எமக்கு எளிய பேராளன்

தென்னன் = தென்னாடுடையவன்

பெருந்துறையான் = திருப்பெருந்துறை என்ற இடத்தில் உறைபவன்

பிச்சேற்றி = பித்து ஏற்றி

வாரா வழியருளி  = மீண்டும் வந்து பிறக்காத வழியை அருளி

வந்தென்  = வந்து என்

உளம்புகுந்த = உள்ளத்தில் புகுந்த

ஆரா அமுதாய் = தீராத அமுதமாய்

அலைகடல்வாய் மீன்விசிறும் = அலைக்கடலில் வலை வீசி மீன் பிடிக்கும்  (திருவிளையாடல்)

பேராசை  வாரியனைப் = பெரிய அன்பு கொண்டவனை

பாடுதுங்காண் அம்மானாய். = அம்மானை சொல்லி பாடுவோம்


இறைவனை வெளியே  காண முடியாது.

"ஆராலுங் காண்டற் கரியான்"

ஏன், காண முடியாது?

வெளியே இருந்தால் அல்லவா காண்பதற்கு ? அவன் உள்ளே இருக்கிறான். எல்லோரும் வெளியே தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.


"வந்தென் உளம்புகுந்த"

அவன் வந்து உள்ளத்தில் புகுந்து கொள்கிறான்.

விளக்கிருக்க தீ தேடுவதை விட்டு விடவேண்டும்.

தேடல் நின்றால், தேடியது கிடைக்கும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_13.html

Tuesday, November 12, 2019

திருவாசகம் - அறைகூவி வீடருளும்

திருவாசகம் - அறைகூவி வீடருளும்


மருந்து கசக்கத்தான் செய்யும். கசப்பான மருந்தை உட்கொள்ள அதற்கு மேல் கொஞ்சம் இனிப்பை தடவி இருப்பார்கள். நாக்கில் பட்டவுடன் இனிப்பாக இருக்கும். அந்த இனிப்பு மருந்தை உட்கொள்ள கொடுத்த ஒரு உத்தி. மருந்தை உட்கொள்ள வேண்டுமே அல்லாது மாத்திரையின் மேல் உள்ள இனிப்பை மட்டும் நக்கி விட்டு, மாத்திரையை தூர எறிந்தால் அது எவ்வளவு அறிவுடைய செயலாகும்?

புராணங்களில் சில கதைகள் வரும். கதைகள் இனிப்பு போல. அதற்கு உள்ளே உள்ள அர்த்தத்தை கண்டு பிடிக்க வேண்டும்.

கதையோடு நின்று விடக் கூடாது.

சிவ பெருமானின் அடி முடி தேடி திருமாலும், பிரம்மாவும் சென்றார்கள் என்றும். அவர்களால் காண முடியாமல் திரும்பி வந்தார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

இந்த கதையை வைத்துக் கொண்டு, சிவன்தான் பெரியவர், மற்றவர்கள் சிறியவர்கள் என்று சிலர் பேசித் திரிகிறார்கள்.

கதை சொல்ல வந்த கருத்து என்ன?

திருமால், செல்வத்தின் கடவுளான இலக்குமியின் கணவன்.

ப்ரம்மா, அறிவின் கடவுளான சரஸ்வதியின் கணவன்.

இறைவனை அறிவாலும், செல்வத்தாலும் காண முடியாது என்பது கருத்து.

உண்டியலில் நிறைய பணம் போட்டால், கோவிலுக்கு நிலம் வழங்கினால்,  நிறைய   புத்தகங்கள் படித்துத் தெரிந்தால் இறைவனை அடைய முடியாது  என்று சொல்ல வந்த கதை அது.

யார் பெரியவர் , யார் சிறியவர் என்று சொல்ல வந்த கதை அல்ல.

வங்கி பெட்டகத்தில் சில பல கோடிகள் இருந்தால் இறைவனை அடைந்து விடலாம்  என்று நினைக்கக் கூடாது.

"ஏழை பங்காளனை பாடுதுங்காண் அம்மானாய் " என்பார் மணிவாசகர்.

"இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் " என்பது பிரபந்தம்.

பல பட்டங்கள் பெற்றால் இறைவனை  அறிந்து விடலாம் என்று நினைக்கக் கூடாது.


அது ஒரு புறம் இருக்கட்டும்.

பாடல்


செங்கண் நெடுமாலும் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் அறைகூவி வீடருளும்
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணண் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய்.


பொருள்


செங்கண் = சிவந்த கண்களை உடைய

நெடுமாலும்= திருமாலும்

சென்றிடந்துங் = சென்று, தோண்டி

காண்பரிய = காண்பதற்கு அரிய

பொங்கு = மலரும்

மலர்ப்பாதம் = மலர் போன்ற பாதம்

பூதலத்தே = இந்த பூவுலகில்

போந்தருளி = போய் அருளி

எங்கள் = எங்கள்

பிறப்பறுத்திட் = பிறப்பு அறுத்து

என் தரமும் = என் தரமும்

ஆட்கொண்டு = ஆட்கொண்டு

தெங்கு= தென்னை மரங்கள்

திரள் = திரண்டு இருக்கும்

சோலைத் = சோலைகள் சூழ்ந்த

தென்னன் = தென்னன்

பெருந்துறையான் = பெருந்துறையான்

அங்கணண் = அழகிய கண்களை உடைய

அந்தணனாய் = அந்தணனாய்

அறைகூவி = கூப்பிட்டு

வீடருளும் = வீடு பேற்றை அருளும்

அங்கருணை = அந்த கருணையை

வார்கழலே = வீர திருவடிகளை

பாடுதுங்காண் = பாடுதுங்காண்

அம்மானாய். = அம்மானாய்

வீடு பேறு அடைவது என்பது கடினமான ஒன்றா ? அதை அடைய என்னென்னவோ செய்ய வேண்டும்  என்று சொல்கிறார்கள்.

ஆனால், மாணிக்க வாசகர் சொல்கிறார், இந்த கத்தரிக்காய், முருங்கை காய் விற்பது போல  இறைவன் "அறை கூவி" வீடு பேற்றை அருளுவானாம்.


"அறைகூவி வீடருளும்"

இந்த பேருந்து நிலையங்களில் பயணிகளை, ஊர் பேரைச் சொல்லி அழைப்பது போல,  "வீடு பேறு , வீடு பேறு போக விரும்புவர்கள் வாருங்கள் " என்று   இறைவன் கூவி கூவி அழைப்பானாம்.

நாம் தான் கேட்க மறுக்கிறோம்.

பேருந்து நிலையத்தில் எல்லா ஊருக்கும் போக வண்டிகள் இருக்கும். யாருக்கு எந்த ஊர் வேண்டுமோ, அதில் ஏறிப் போகலாம்.

வீடு பேறு அடையும் வண்டிக்கு நடத்துனர் இறைவன். கூப்பிட்டுக் கொண்டு இருக்கிறார்.  யார் போகிறார்கள் அங்கே. அப்புறம் போய் கொள்ளலாம் என்று  வேறு வேறு வண்டியில் ஏறி பணம், செல்வம், புகழ், அதிகாரம், பதவி என்ற ஊர்களுக்குப் போகும் வண்டியில்  பயணம் செய்து கொண்டு இருக்கிறோம்.

வண்டியை நிறுத்தி, சரியான வண்டியில் ஏறுங்கள்.

நம்மை எல்லாம் அந்த வண்டியில் ஏற்றுவானா?  ஏற்றுவான் என்கிறார்.

"எந்தரமும் ஆட்கொண்டு" 

என்னுடைய தகுதி அறிந்தும் என்னை ஆட்கொண்டான் என்கிறான்.

யாராலும் காண முடியாத அவன், நமக்காக இங்கு வந்து, அறை கூவி அழைத்துக் கொண்டிருக்கிறான்.

திரு அம்மானை என்ற பகுதியில் இது போல இனிமையான பாடல்கள் 20 இருக்கின்றன.

படித்துப் பாருங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_12.html

Monday, November 11, 2019

திருக்குறள் - மறப்பும், நினைப்பும்

திருக்குறள் - மறப்பும், நினைப்பும் 


அறம் பற்றி அவ்வளவு ஆழமாக சிந்தித்து எழுதிய வள்ளுவர், காதல் பற்றியும் அந்த அளவுக்கு எழுதி இருப்பதை பார்க்கும் போது நம்மால் வியக்காமல் இருக்க முடியாது.

அவர்கள் காதலர்கள்.

அடிக்கடி அவளை அவன் வந்து சந்தித்து விட்டுப் போகிறான். இது இப்படி கொஞ்ச நாள் நடக்கிறது.

ஒரு நாள்,  அவளுடைய தோழி, அவனிடம் கேட்டே விட்டாள், "என்ன இப்படி வந்து போய்கிட்டு இருந்தா எப்படி. ஊருக்கு போன பின் எங்களை மறந்து விடுவாயா" என்று.

அதற்கு அவன் பதில் சொல்கிறான்

"உங்களை நான் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்" என்று.

தோழி பதறிப் போனாள். "என்னது நினைத்துக் கூட பார்க்க மாட்டியா" என்று.

அவன் சிரித்துக் கொண்டே சொல்கிறான் "மறந்தால் அல்லவா நினைக்க. நான் அவளை மறப்பதே இல்லை. பின் எப்படி நினைப்பது" என்று.

பாடல்

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியே
னொள்ளமர்க் கண்ணாள் குணம்.

பொருள்


உள்ளுவன் = நினைப்பேன்

மன் = அசைச் சொல்

யான் = நான்

மறப்பின் = மறந்தால்

மறப்பறியேன் = மறத்தல் என்பதை அறியேன்

ஒள் அமர் = ஒளி பொருந்திய

கண்ணாள் = கண்களை உடையவள்

குணம் = குணம்

நினைப்பது, மறப்பது என்று ஏதோ சொல் விளையாட்டில் போய் இருந்தால் வள்ளுவருக்கு என்ன பெருமை.

மனைவியை, அல்லது காதலியை நினைப்பது என்றால் எதை நினைப்பது?

அவளுடைய அழகை, அவளின் கூந்தலை, அழகான சிரிப்பை, முத்துப் போன்ற  பற்களை, இவற்றையா?

இல்லை இல்லை....

"ஒள் அமர் கண்ணாள் குணம்"

அவளுடைய குணத்தை எப்படி மறப்பேன் என்கிறான் காதலன்.

அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு என்ற பெண்ணின் குணங்களை நான் எப்படி மறப்பேன்  என்கிறான்.

உடல் அழகு மறைந்து விடும்.  ஓரிரண்டு பிள்ளைகள் பிறந்து, வயதானால் உடல் அழகு மாறும். 

குணம் என்றும் அப்படியே இருக்கும். இன்னும் சொல்லப் போனால்,  அது மெருகு ஏறும்.

இந்த பெண்களின் குணம் என்று சொல்லப்படுவதில் அச்சம் புரிகிறது, நாணம் புரிகிறது.

அது என்ன மடம் , பயிர்ப்பு?

மடம் என்றால் மடமை இல்லை. தெரிந்தாலும், தெரிந்தது போல காட்டிக் கொள்ளாமல் இருத்தல்.

'கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை'

என்பார்கள்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எனக்கு வேறு ஒன்று தோன்றுகிறது.  பெரும்பாலான பெண்கள் அப்படி இருப்பது இல்லை. தங்களுக்குத் தெரிந்ததை தைரியமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள். போராடி இருக்கிறார்கள். அப்படி என்றால், அவர்கள் பெண்மை குணம் இல்லாதவர்கள் என்று சொல்ல முடியுமா?

முல்லைக்கு தேர் கொடுத்தான் ஒரு மன்னன்.

மயிலுக்கு போர்வை கொடுத்தான் ஒரு மன்னன்.

தன் சதையையே அறுத்துக் கொடுத்தான் ஒரு மன்னன்.

ஒரு மன்னனுக்குத் தெரியாதா? கொடி, கொழு கொம்பு இல்லாமல் வாடினால் ஒரு  குச்சியை ஊன்றி வைத்தால் போதாதா? இல்லை, அதை தூக்கி ஒரு மரத்தின் மேல் படர விட்டால் போதாதா?  தேரையா கொடுக்க வேண்டும்?

அதற்கு கொடைமடம் என்று பெயர்.

மனதில் அன்பு அளவுக்கு அதிகமாக இருந்தால், என்ன செய்கிறோம் என்று  தெரியாது.

மற்றவர்களின் துன்பம் மட்டுமே தெரியும். சிந்திப்பது எல்லாம் இல்லை. மனதில்  பட்டதை , அறிவை கொண்டு சிந்திக்காமல் செய்து விடுவது.

கழுகுக்கு வேண்டுமானால் ஒரு கிலோ மாமிசம் வாங்கித் தரலாமே. அதற்கெல்லாம் நேரம் இல்லை. தன் தொடையை அறுத்துக் கொடுத்தான்.

அது மடமை தான். அதற்குப் பெயர் கொடைமடம்.

பெண்களும் அப்படித்தான். தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ஒரு துன்பம் என்றால்,  தாங்க மாட்டார்கள். எதையோ, சிந்திக்காமல் செய்து விடுவார்கள். சரியா தப்பா என்றெல்லாம் யோசிப்பது கிடையாது.

அன்பின் மிகுதியால் வரும் மடமை. கொடைமடம் போல.

ஆண்கள் அப்படி அல்ல. ஆயிரம் யோசிப்பார்கள்.

அன்புக்காக எதையும் செய்வார்கள். காதலன் கேட்டான் என்பதற்காக, தங்களையே  கொடுத்து விட்டு, பின்னால் கையை பிசைந்து கொண்டிருக்கும் பெண்கள்  எவ்வளவு பேர்? அவர்களுக்குத் தெரியாமல் இல்லை. அந்த நேரத்தில், இவ்வளவு அன்பாக இருக்கிறானே, இவ்வளவு ஆசையாக கேட்கிறானே என்று  கொடுத்து விடுகிறார்கள்.

அது மடமை என்றால் மடமை தான். முல்லைக்கு தேர் கொடுத்ததைப் போல.

பயிர்ப்பு என்றால், பிற ஆடவர்கள் தங்களை கூர்ந்து பார்க்கும் போதோ, தொடும் போதோ உண்டாகும் ஒரு வித அருவெறுப்பு என்று சொல்லலாம்.

பயிர்ப்பு என்ற சொல், தொல்காப்பியத்தில் இல்லை. பின்னால் வந்து சேர்ந்து கொண்டது.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

பெண்ணின் குணங்களே மனதில் தங்கி நிற்கும் என்கிறார் வள்ளுவர்.

பட்டுப் புடவை, தங்க நகை, facial , லிப் stick , மனதில் நின்றது என்று சொல்லவில்லை.

அவளுடைய நிறம், உயரம், உடல் வண்ணம் இவை எல்லாம் மனதில் நின்றது என்று சொல்லவிலை.

குணம்.  அது மட்டும்தான் நினைவில் நின்றது என்கிறார்.

சரியா இருக்குமோ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_64.html


கம்ப இராமாயணம் - ஆவியும் சிறிது உண்டு கொலாம்

கம்ப இராமாயணம் - ஆவியும் சிறிது உண்டு கொலாம் 


நாம் யார் மீதாவது ரொம்ப அன்பு வைத்து இருந்தால், அவர்களின் பிரிவு நம்மை மிகவும் வாட்டும் அல்லவா?

ஒரு சோர்வு, ஒரு தளர்வு, ஒரு அயர்ச்சி வரும் அல்லவா?

அது போல, சீதையை பிரிந்த இராமன், அயர்ந்து போகிறான்.

இராஜ்யமே போனது. கவலை இல்லை. அவன் பாட்டுக்கு காட்டுக்கு மர உரி தரித்துக் கொண்டு கிளம்பிவிட்டான். ஆனால், சீதையின் பிரிவு அவனை வாட்டுகிறது. அவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை விட, சீதையின் அருகாமை பெரிதாகப் படுகிறது அவனுக்கு.

அன்பென்றால் அது.

"காவி, கருங்குவளை, நெய்தல், காயம் பூ போன்ற மலர்களின் நிறத்தைக் கொண்ட இராமன், புலம்பி, தளர்ந்து, உயிர் உடலில் இருக்கிறதா என்று நினைக்கும் அளவுக்கு சோர்ந்து போய் , புலம்ப ஆரம்பிக்கிறான்"

பாடல்


காவியும், கருங் குவளையும்,
      நெய்தலும், காயாம் -
பூவையும் பொருவான் அவன்,
      புலம்பினன் தளர்வான்,
'ஆவியும் சிறிது உண்டு
      கொலாம்' என, அயர்ந்தான்,
தூவி அன்னம் அன்னாள் திறத்து,
      இவை இவை சொல்லும்:


பொருள்

காவியும் = காவி மலரும்

கருங் குவளையும் = கருங்குவளை மலரும்

நெய்தலும், = நெய்தல் மலரும்

காயாம் = காயாம்

பூவையும் = பூவையும்

பொருவான் = அந்த மலர்களின் நிறத்தை பெற்றவன்

அவன் = அவன் இராமன்,

புலம்பினன் = புலம்பினன்

தளர்வான் = தளர்வான்

'ஆவியும் = உடலில் ஆவியும்

சிறிது = கொஞ்சம்

உண்டு கொலாம்' = இருக்கிறதா

என, அயர்ந்தான், = என்று அயர்ந்தான்

தூவி அன்னம் = மெல்லிய சிறகை உடைய அன்னத்தைப் போன்ற

அன்னாள் திறத்து = சீதையின் பொருட்டு

இவை இவை சொல்லும் = இவ்வாறு சொல்ல ஆரம்பிக்கிறான்

மனைவியின் பிரிவு, இராமனையே புரட்டிப் போடுகிறது என்றால் மற்றவர்கள்   நிலை எப்படி இருக்கும்? அதாவது, மற்ற பெண்கள் சீதை மாதிரி இருந்தால்.

எவ்வளவு அன்போடு இருந்தார்கள் என்று காட்டுகிறது இந்தப் பாடல்கள்.


interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_11.html

Saturday, November 9, 2019

கம்ப இராமாயணம் - அது வருத்தோ?

கம்ப இராமாயணம் - அது வருத்தோ?


மனைவி இருந்தால் ஏதாவது சொல்லிக் கொண்டிருப்பாள். அது செய்யல, இது செய்யல, என்று ஏதாவது பட்டியல் வாசித்துக் கொண்டே இருப்பாள். என்னடா இது எந்நேரம் பார்த்தாலும் இதே பாட்டுத் தானா என்று பல கணவன்மார்கள் அலுத்துக் கொள்வார்கள்.

மனைவி ஊருக்குப் போய் விட்டால் ஒரு இரண்டு நாளைக்கு நிம்மதியா இருப்பது போலத் தெரியும். ஆனால், அவள் இல்லாவிட்டால் ஏதோ ஒரு வெறுமை இருக்கத்தான் செய்யும். குயில் போல் இல்லாவிட்டாலும், அவள் குரல் கேட்டுக் கொண்டாவது இருக்கும். அவள் இல்லாமல், அவள் குரல் இல்லாமல், வீடே கொஞ்சம் 'வெறிச்" என்று இருப்பது போல இருக்கும்.

சீதையின் குரல் தேனையும், அமிழ்தையும் குழைத்து செய்தது போல இருக்குமாம். அவ்வளவு இனிமையான குரல். அந்த குரலை கேட்காமல் இராமன் தவிக்கிறான்.


"அளவு இல்லாத அந்த கார் காலம் வந்தால், தவம் புரிவோர் கூட தடுமாறுவார்கள் என்றால் அமுதையும், தேனையும் குழைத்து செய்த குரலைக் கொண்ட சீதையின் தோளில் இன்பம் கண்ட இராமனின் துன்பத்திற்கு எதை உவமை சொல்ல முடியும்"

பாடல்


அளவு இல் கார் எனும் அப்
      பெரும் பருவம் வந்து அணைந்தால்,
தளர்வர் என்பது தவம்
     புரிவோர்கட்கும் தகுமால்;
கிளவி தேனினும் அமிழ்தினும்
      குழைந்தவள் கிளைத்தோள்
வளவி உண்டவன், வருந்தும்என்றால்,
      அது வருத்தோ?


பொருள்

அளவு இல் = அளவற்ற, நீண்ட

கார் எனும் = கார் என்ற

அப் = அந்த

பெரும் பருவம் = பெரிய பருவ நிலை

வந்து அணைந்தால், = வந்து விட்டால்

தளர்வர் = தளர்ந்து போவார்கள்

என்பது = என்பது

தவம் புரிவோர்கட்கும் = தவம் செய்யும் முனிவர்களுக்கும்

தகுமால்; =பொருந்தும் என்றால்

கிளவி = மொழி, குரல்

தேனினும் = தேனையும்

அமிழ்தினும் = அமுதத்தையும்

குழைந்தவள் = குழைத்து செய்த குரலைக் கொண்ட சீதையின்

கிளைத் = மூங்கில் போன்ற

தோள் = தோள்களை

வளவி = அணைத்து

உண்டவன் = இன்பம் கண்டவன்

 வருந்தும் = வருந்தினான்

என்றால், = என்றால்

அது வருத்தோ? = அது என்ன அவ்வளவு எளிய ஒன்றா ?

பேசும்போது அப்படி பேச வேண்டும். இனிமையாக பேச வேண்டும். அடடா, அந்த குரலை கேட்க முடியவில்லையே என்று மற்றவர்கள் வருந்த வேண்டும். அன்போடு, நல்ல சொற்களை தேர்ந்து எடுத்து, இனிமையாகப் பேச வேண்டும்.

வாயைத் திறந்தாலே, எப்படா மூடுவாள் என்று நினைக்கக் கூடாது.

கோபம், வருத்தம், ஆங்காரம், வெறுப்பு போன்ற குணங்களை நீக்கி அன்போடு, பண்போடு பேசிப் பழக வேண்டும்.

செய்து பாருங்கள். உங்களிடம் பேசுவதற்காகவே மற்றவர்கள் காத்துக் கிடப்பார்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_9.html

Friday, November 8, 2019

கம்ப இராமாயணம் - யாரைக் கண்டு உயிர் ஆற்றுவான்

கம்ப இராமாயணம் - யாரைக் கண்டு உயிர் ஆற்றுவான் 


இராமனை நமக்கு பெரிய வீரனாகத் தெரியும், நல்ல மகனாகத் தெரியும், நல்ல அண்ணனாகத் தெரியும், பொறுமை உள்ள ஒரு தலைவனாகத் தெரியும்....ஆனால், மனைவியை பிரிந்து, அழுது, மனம் நொந்து, புலம்பும் இராமனை நமக்கு அவ்வளவாகத் தெரியாது.

ஆண்கள் என்றால் ஏதோ உணர்ச்சிகள் அற்றவர்கள், கல் மனம் கொண்டவர்கள், முரடர்கள் என்ற ஒரு தோற்றம் உருவாக்கப் பட்டிருக்கிறது. அந்த தோற்றத்தை காப்பாற்ற வேண்டி ஆண்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல் அடக்கியே வைத்து இருக்கிறார்கள். அது ஒரு புத்திசாலித்தனமான காரியம் இல்லை.

உணர்வுகளை வெளிப்படுத்தத் தெரிய வேண்டும்.

துக்கம் வந்தால், அழ வேண்டும். பிரிவு வந்தால் தவிக்க வேண்டும்.

எல்லாவற்றையும் போட்டு உள்ளேயே அடக்கி வைத்துக் கொண்டிருந்தால், "இவன் என்ன மனுஷனா, இல்லை இயந்திரமா" என்ற ஐயம் வந்து விடும்.

பேராற்றல் கொண்ட இராமன், சீதையின் பிரிவினால் எப்படி வாடுகிறான் என்று கம்பன் காட்டுகிறான்.

கம்பன் விரும்பி இருந்தால், "இராமன் அந்தப் பிரிவை புன்னகையோடு ஏற்றுக் கொண்டான் " என்று எழுதிவிட்டுப் போயிருக்கலாம். அப்படிச் செய்யவில்லை.

இராமனை அழ விடுகிறான். தவிக்க விடுகிறான். புலம்ப விடுகிறான்.

அதனால், நமக்கு இராமன் மேல் உள்ள மதிப்பு குறையவில்லை. மாறாக உயர்கிறது.

இது ஆண்களுக்கு ஒரு பாடம்.

"சீதையின் முகத்தைக் காணாமல் தவித்தான். நல் உணர்வுகள் அழிந்தன. இந்த கார்காலம், என்னை வாட்ட வேண்டும் என்பதற்காகவே, இவ்வளவு மலர்களை பூத்து, மன்மதனிடம் கொடுத்து என் மேல் விடச் சொல்கிறதோ. துயரத்துக்கு ஒரு முடிவே இல்லை"

பாடல்

தேரைக் கொண்ட பேர்
      அல்குலாள் திருமுகம் காணான்,
ஆரைக் கண்டு உயிர் ஆற்றுவான்?
      நல் உணர்வு அழிந்தான்;
மாரற்கு எண் இல் பல்
      ஆயிரம் மலர்க் கணை வகுத்த
காரைக் கண்டனன்; வெந் துயர்க்கு
      ஒரு கரை காணான்.

பொருள்


தேரைக் கொண்ட = தேரின் மேல் தட்டு போன்ற

பேர் = பெரிய

அல்குலாள் = அல்குலை உடைய சீதையின்

திருமுகம் காணான், = அழகிய முகத்தை காணாமல்

ஆரைக் கண்டு = வேறு யாரைப் பார்த்து

உயிர் ஆற்றுவான்? = தவிக்கும் உயிரை ஆற்றுப் படுத்துவான்?

நல் உணர்வு அழிந்தான்; = நல்ல உணர்வுகள் அழிந்தான்

மாரற்கு = மன்மதனுக்கு

எண் இல் பல் = கணக்கில் அடங்காத பல

ஆயிரம்  = ஆயிரம்

மலர்க் கணை = மலர் அம்புகளை

வகுத்த = எய்யக் கொடுத்த

காரைக் கண்டனன் = கார் காலத்தைக் கண்டான்

வெந் துயர்க்கு = வெண்மையான துயரத்துக்கு

ஒரு கரை காணான். = ஒரு முடிவை காணாத இராமன்


சீதை மேல் அவ்வளவு உயிர் இராமனுக்கு.

மனைவியைப் பிரிந்தால், கணவன் "அப்பாடா கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம் " என்று நினைக்கக் கூடாது. "ஐயோ, எப்ப வருவாளோ" என்று தவிக்க வேண்டும்.

தாம்பத்ய பாடம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_8.html

Wednesday, November 6, 2019

கம்ப இராமாயணம் - யார் என விளம்புகேன் ?

கம்ப இராமாயணம் - யார் என விளம்புகேன் ?


இன்று வணிக மேலாண்மை (business management ) யில் செய்தித் தொடர்பு (communication) என்பது பெரிய விஷயமாக பேசப் படுகிறது. எப்படி பேச வேண்டும், எப்படி பேசினால் காரியம் நடக்கும், பொருளை விற்க, வாங்க, என்று எங்கு பார்த்தாலும் செய்தித் தொடர்புதான் பெரிதாகப் பேசப் படுகிறது. மேலும், டிவி, கணனி என்று வந்த பின், செய்திகளின் பெருக்கம் அதிகமாகி விட்டது.

வெளி உலகை விடுவோம். வீட்டுக்கு வருவோம். கணவன்/மனைவி, பிள்ளைகள், பெற்றோர், நண்பர்கள், உடன் பிறந்தவர்கள் என்று எல்லோரிடமும் எப்படி பேசுவது என்று ஒரு முறை இருக்கிறது அல்லவா? அது தெரியாமல் எதையோ, எப்படியோ பேசி உறவுகளில் சிக்கல்களை உண்டாக்கி விடுகிறோம்.

தமிழ் இலக்கியங்களை படிக்கும் போது, நம்மை அறியாமலேயே நாம் பேசுவது, எழுதுவது என்பது பண் படும். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறுவது போல, கம்பன், இளங்கோ, வள்ளுவர் போன்றவர்களை படிக்கும் போது அவர்களின் சொல்லாற்றல் நம்மையும் பற்றிக் கொள்ளும்.

வீட்டுக்கு ஒரு பெரியவர் வருகிறார். வீட்டில் உள்ள சிறுவனுக்கு அவர் யார் என்று தெரியாது. "நீங்க யார்" என்று கேட்டால் மரியாதைக் குறைவு. கேட்காமலும் இருக்க முடியாது. என்ன செய்வது ? எப்படி பேசுவது?

இராம இலக்குவனர்களை சந்தித்தபின் , அனுமன் அந்த நிலையில் இருக்கிறான்.

அவர்கள் இருவரும் பெரிய ஆள் போலத் தெரிகின்றது. ஆனால், நீங்கள் யார் என்று கேட்டால் மரியாதைக் குறைவாகப் போய் விடலாம். எனவே, அனுமன் கேட்கிறான்

"எங்கள் அரசர் கேட்டால் உங்களை யார் என்று சொல்லட்டும் . நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ , அப்படியே அவரிடம் போய் சொல்கிறேன் " என்று.

பாடல்


'யார் என விளம்புகேன் நான்,
     எம் குலத் தலைவற்கு, உம்மை?
வீர! நீர் பணித்திர்! ' என்றான்,
     மெய்ம்மையின் வேலி போல்வான்;
வார்கழல் இளைய வீரன்,
     மரபுளி, வாய்மை யாதும்
சோர்வு இலன், நிலைமை
     எல்லாம் தெரிவுறச் சொல்லலுற்றான்:


பொருள்


'யார் என  = நீங்கள் யார் என்று

விளம்புகேன் நான் = சொல்லுவேன் நான்

எம் குலத் தலைவற்கு, = எங்கள் குலத் தலைவருக்கு

உம்மை? = உங்களை

வீர! = வீரர்களே

நீர் பணித்திர்! ' என்றான், = நீங்களே சொல்லுங்கள் என்றான்

மெய்ம்மையின் வேலி போல்வான் = உண்மைக்கு வேலி போன்றவன்

வார்கழல் இளைய வீரன் = வீர கழல்களை அணிந்த இளைய வீரன் (இலக்குவன்)

மரபுளி = மரபின் படி

வாய்மை யாதும் = உண்மை அனைத்தையும்

சோர்வு இலன் = சோர்வு இல்லாமல்

நிலைமை எல்லாம் = நிலைமை அனைத்தையும்

தெரிவுறச் சொல்லலுற்றான்: = தெரிந்து கொள்ள சொல்ல ஆரம்பித்தான்

என்ன ஒரு அழகு ! என்ன ஒரு நளினம் !

சொல்லின் செல்வன் என்று இராமனால் பாராட்டப் பட்டவன் அல்லவா?

நாமும் இது போல பேசிப் பழக வேண்டாமா?


https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_6.html

Tuesday, November 5, 2019

தேவாரம் - நடக்கும் நடக்குமே

தேவாரம் - நடக்கும் நடக்குமே 


இரவும் பகலும், எந்நேரமும் ஏதோ ஒன்றின் பின்னால் அலைந்து கொண்டு இருக்கிறோம்.  பணம், புகழ், ஆசை,பொறாமை, காமம், பதவி என்று ஐந்து புலன்களும் நம்மை அங்கும் இங்கும் அலைக்கழிக்கின்றன. ஒரு நிமிடம் நிற்க விடுவது இல்லை.

என்னதான் செய்வது?  எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றால் அதுவும் முடிவது இல்லை. வைத்துக் கொண்டு அல்லாடாவும் முடியவில்லை. ஒரு சில சமயம் இன்பமாக இருப்பது போல இருந்தாலும், துன்பமே மிகுதியாக இருக்கிறது.

இப்படி கிடந்து  உழல்வதுதான் நமக்கு விதித்த விதியா ? இப்படியே போய் கொண்டிருந்தால் இதற்கு என்னதான் முடிவு.

நாவுக்கரசர் சொல்கிறார்

"இரவும் பகலும் ஐந்து புலன்கள் நம்மை அரித்துத் தின்ன, இந்த துன்பத்தில் இருந்து எப்படி விடுபடுவோம் என்று நினைத்து ஏங்கும் மனமே உனக்கு ஒன்று சொல்வேன் கேள். "திருச்சிராப்பள்ளி" என்று சொல். நீ செய்த தீவினை எல்லாம், உன்னை விட்டு முன்னே நடந்து போய் விடும்"

என்று.

பாடல்

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 


சீர் பிரித்த பின்

அரித்து இராப் பகல் ஐவரால் ஆட்டுண்டு 
சுரிச்சிராது நெஞ்சே ஒன்று சொல்லக்கேள்
திருச்சிராப்பள்ளி  என்றலும்  தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே. 

பொருள்

அரித்து = அரித்து

 இராப் பகல் = இரவும் பகலும்

ஐவரால் = ஐந்து புலன்களால்

ஆட்டுண்டு  = ஆட்டப்பட்டு

சுரிச்சிராது = துக்கப்படாமல்

நெஞ்சே  = நெஞ்சே

ஒன்று சொல்லக்கேள் = ஒன்று சொல்வேன் கேள்

திருச்சிராப்பள்ளி = திருச்சிராப்பள்ளி

 என்றலும் = என்று சொன்னால்

  தீவினை = செய்த தீய வினைகள் எல்லாம்

நரிச்சு இராது = கூடவே இருக்காமல்

நடக்கும் நடக்குமே.  = மெல்ல மெல்ல நடந்து  சென்று விடும் , (உன்னை விட்டு)

"திருச்சி" அப்படினு சொன்னா போதுமா ? ஏன் திருச்சி, வேற ஊர் பேர் சொல்லக் கூடாதா ?

பெயர் அல்ல முக்கியம்.

எப்போதும் புலன்கள் பின்னால் அலைவதை விடுத்து மனதை நல்ல வழிகளில்  திசை திருப்பச் சொல்கிறார். புலன் இன்பம் மட்டுமே வாழ்க்கை அல்ல.  அது கொஞ்சம் கொஞ்சமாக நம் வாழ்வை அரித்து விடும்.துன்பத்தையே தரும்.  அதை அறிந்து கொண்டு, மனதை திசை திருப்பச் சொல்கிறார்.

பெரியவர்கள் சொல்லும் போது, ஏதோ ஒரு மந்திரத்தைச் சொல்,  கடவுள் பெயர், ஊர் பெயர், என்று ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள் என்பார்கள்.

நம்மவர்கள் உடனே, ஏன் அந்த சாமிப் பெயர், எதுக்கு அந்த ஊர், அதில் இன்னார் பெரிய  உயர்வு என்று சண்டை பிடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏதாவது ஒரு ஊர் பெயரைச் சொல் என்றால், எந்த ஊர் என்ற கேள்வி வரும்.

இப்படி மனம் கிடந்து அலைந்து திரியும்.  காரியம் நடக்காது.

எனவேதான், ஒன்றை பிடித்துக் கொள் என்கிறார்கள். அது உயர்ந்தது என்பதற்காக அல்ல. எல்லாவற்றையும் தூக்கிப் போட்டால், எதை எடுப்பது, எதை விடுவது என்று   நாம் குழம்பிப் போவோம் என்பதற்காக.

உங்கள் மனதில் எது படுகிறதோ, எது இலயிக்கிறதோ அதைச் சொல்லுங்கள்.

"உலகம் யாவையும் தாமுளவாக்கலும்"

தான் உள்ளே இருக்கும்படி இந்த உலகைச் செய்தான். அனைத்திலும் அவன் இருக்கிறான் என்கிறபடியால், எதை வேண்டுமானாலும் நினைக்கலாம்.

எளிமையான பாடல்கள் என்பதால், நாம் சிலவற்றை கடந்து போய் விடுகிறோம்.

எல்லாவற்றிலும் பொருள் உண்டு.

"முறுக வாங்கிக் கடைய, முன் நிற்குமே"



https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_5.html

Saturday, November 2, 2019

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல்

ஆத்திச் சூடி - மிகைப்பட பேசேல் 



வாழ்க்கை என்றால் ஏதாவது அசம்பாவிதம், சிக்கல், எதிர்பாராத நிகழ்வுகள் இருக்கத்தான் செய்யும்.

அப்படி ஏதாவது நிகழ்ந்து விட்டால், ஐயோ, அப்பா என்று அதை பெரிது படுத்தக் கூடாது.

தடங்கல்களும், சறுக்கல்களும் அவ்வப்போது வரும் , போகும்.

சரி சரி என்று எடுத்துக் கொண்டு போக வேண்டும்.

சிலர், சின்ன தலை வலி வந்தால் கூட  ஏதோ உயிர் போவது போல அலட்டிக் கொள்வார்கள்.

சிலர், அடி பட்டு, எலும்பு முறிந்திருந்தால் கூட, பெரிதாக காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

சிலர், எதையும் மிகைப் படுத்திக் கூறுவதன் மூலம் தாங்களும் துன்பப் பட்டு, சுற்றி இருப்பவர்களையும் ஒரு உணர்ச்சி மிகுதியில் அழுத்தி விடுவார்கள்.

காதலித்தவர் கை விட்டு விட்டால், பரிட்சையில் தோல்வி அடைந்தால், உறவுகளில் சிக்கல் வந்தால், வியாபாரத்தில் நட்டம் வந்தால், போட்ட முதல் சரியானபடி வருமானம் தரவில்லை என்றால்...அதை எப்படி நாம் எடுத்துக் கொள்கிறோம், எப்படி நாம் மற்றவர்களிடம் சொல்கிறோம் என்பதில் இருக்கிறது  அதன் பாதிப்பு.

பிரச்சனைகளை ஊதி ஊதி பூதாகரமாக மாற்றி விடக் கூடாது.

"இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா...வாழ்க்கை என்றால் அப்படி இப்படித் தான் இருக்கும் " என்று சொல்லிப் பழக வேண்டும்.

அப்படி சொல்லிப் பழகுவதன் மூலம், பெரிய பிரச்சனை கூட சாதாரணமாய் தெரியும்.

மாறாக, "ஐயோ, எனக்கு இப்படி நிகழ்ந்து விட்டதே " என்று ஒப்பாரி வைத்தால்,  பூதக்  கண்ணாடி மூலம் பார்த்தால் எப்படி சிறிய பொருள் கூட பெரிதாய் தெரியுமோ, அப்படி சின்ன சிக்கல் கூட பெரிதாய் மாறி விடும்.


இராஜ்யமே போனால் கூட, "அன்றலர்ந்த செந்தாமரையை ஒத்தது" போல இராமன் சிரித்துக் கொண்டே சென்றான். வானுக்கும் பூமிக்கும் குதிக்கவில்லை.

எனவே தான் ஒளவை சொன்னாள்

"மிகைப்பட  பேசேல்"

என்று.

ரொம்ப அலட்டிக் கொள்ளக் கூடாது.

சாதாரணமாக பேசிப் பழக வேண்டும்.

அப்படிச் செய்தால், மனம் பதட்டம் அடையாது, நிதானம் வரும், பிரச்சனைகளை  சரி செய்யும் பக்குவம் வரும்.

பழகுங்கள்.

உங்களை சுற்றி உள்ளவர்களிடமும் சொல்லுங்கள். அவர்கள் மிகைப்பட  பேசி, உங்கள் இரத்த அழுத்தத்தை ஏற்றி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

இரண்டு வார்த்தையில் வாழ்க்கை நெறியை சொல்லி விட்டுப் போகிறாள் அவள்.

ஒன்றாம் வகுப்பில் படித்த ஆத்திச் சூடி !

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post_2.html

Friday, November 1, 2019

கந்த புராணம் - அந்த மூன்று

கந்த புராணம் - அந்த மூன்று 


எல்லாவற்றிற்கும் அடிப்படை எது என்ற ஆராய்ச்சி எல்லா துறைகளிலும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

பொருள், அதன் அடிப்படை அணு என்றார்கள் . பின், அனுவின் அடிப்படை ப்ரோடான், நியூட்ரான், எலக்ட்ரான் என்றார்கள். பின் அதற்கும் உள்ளே போய் போஸான், Neuon, quarks என்று சொல்லுகிறார்கள். நாளை வேறு ஏதாவது வரும்.

உடல், அதன் அடிப்படை உறுப்புகள், அதற்குக் கீழே திசுக்கள், அதற்கு கீழே செல்கள், அதற்கு கீழே DNA , mitochandria, golgai bodies என்று போய் கொண்டே இருக்கிறது.


எது நிரந்தரமானது என்று தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

மேலே சொன்னவை வெளி உலக ஆராய்ச்சி. நமக்கு எது அடிப்படை. மனித வாழ்வு, மனித உறவு, உண்மை, மெய் பொருள் இவற்றிற்கு எல்லாம் எது அடிப்படை என்று ஆராய்ந்தார்கள் நம் முன்னவர்கள்.

மிகுந்த ஆராய்ச்சிக்குப் பின், அவர்கள் மூன்று பொருள்கள் நிரந்தரணமானவை, அழிவில்லாதவை என்று கண்டு கொண்டார்கள்.

இந்த உலகம், நம் வாழ்க்கை, நம் ஆசா பாசங்கள், உறவுகள், அதில் வரும் சிக்கல்கள், வாழ்வின் நோக்கம், குறிக்கோள், தோற்றம், வளர்ப்பு, முடிவு என்ற இவை அனைத்துமே  அந்த மூன்றை அடிப்படையாகக் கொண்டது என்று கண்டு  கொண்டார்கள்.

அது என்ன மூன்று ?

நமது சித்தாந்தம் மிக மிக விரிவாக அது பற்றி சொல்கிறது.  அந்த விரிவை பின்னொரு நாள் சிந்திப்போம்.

அந்த மூன்று என்ன என்று கச்சியப்பர் சொல்லுகிறார்.

அவை பதி , பசு, பாசம் என்ற மூன்று.  நம் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் எல்லாம் இதன் அடிப்படையில் எழுதப்பட்டவைதான் என்கிறார் கச்சியப்பர்.

பாடல்



சான்றவர் ஆய்ந்திடத் தக்க வாம் பொருள்
மூன்று உள மறை எலாம் மொழிய நின்றன
ஆன்றது ஓர் தொல் பதி ஆர் உயிர்த்தொகை
வான் திகழ் தளை என வகுப்பர் அன்னவே .


பொருள்


சான்றவர் = பெரியவர்கள்

ஆய்ந்திடத் தக்க  வாம் = ஆராய்ச்சி செய்யத் தக்க

பொருள் = பொருள்கள்

மூன்று உள = மூன்று உள்ளன

மறை எலாம் = நம் வேதங்கள், உபநிடதங்கள் எல்லாம்

மொழிய நின்றன = அதையே சொல்லி நிற்கின்றன

ஆன்றது = அது என்ன என்றால்

ஓர் தொல் பதி  = பழமையான "பதி"

ஆர் உயிர்த்தொகை = உயிர்களின் கூட்டம் - "பசு"

வான் திகழ் = பெரிதாக விளங்குகின்ற

தளை  = தளை என்றால் விலங்கு, கையில் பூட்டும் விலங்கு.  அதாவது "பாசம்"

என வகுப்பர் அன்னவே . = என்று வகுப்பார்கள்

"பதி  - பசு - பாசம்"  என்ற மூன்றும் அனைத்துக்கும் அடிப்படை.

பதி கடவுள்

பசு நாம் மற்றும் உயிர் கூட்டங்கள்

பாசம் உயிரை , இந்த உலகோடு பிணிக்கும் தளை.

இது ஒரு மிகப் பெரிய தத்துவம். இதை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னவர்கள்  பின்னிய  சித்தாந்த வலை இருக்கிறதே, அது மிக மிக ஆச்சரியமானது. எவ்வளவு சிந்தித்து இருக்கிறார்கள் என்று வியக்க வைக்கும்.

நேரம் ஒதுக்கி, தேடிப் பாருங்கள். கிடைக்காமலா போய் விடும்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/11/blog-post.html