Tuesday, December 31, 2019

நன்னூல் - எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும்?

நன்னூல் - எந்த மாதிரி புத்தகங்களைப் படிக்க வேண்டும்?


நீங்கள் இது வரை படித்த புத்தகங்களின் பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். இனி படிக்க வேண்டும் என்று நினைத்து இருக்கும் பட்டியலையும் தயார் செய்து கொள்ளுங்கள். புத்தகங்கள் என்றால் படிக்கும் எல்லாமே இதில் அடங்கும். ஆடியோ புத்தகங்கள், ப்ளாகுக்குகள், மின் வடிவில் உள்ள புத்தகங்கள் எல்லாம் இதில் அடங்கும்.

எதற்காக ஒரு புத்தகத்தைப் படிக்க வேண்டும். எந்த புத்தகம் என்றாலும் சரி. அதைப் படிப்பதற்கு ஒரு நோக்கம் வேண்டும் அல்லவா?


பொழுது போக்க என்று படிக்கலாம்.

தேர்வு எழுதப் படிக்கலாம்.

என்னதான் இருக்குனு தெரிந்து கொள்ள படிக்கலாம்.

நம்மவர்கள் நான்கே நான்கு நோக்கம் தான் ஒரு புத்தகத்தின் பயன் என்கிறார்கள்.

அதாவது, அறம் , பொருள், இன்பம், வீடு பேறு இந்த நான்கை அடையத்தான் புத்தகம் எழுத வேண்டும் என்று சட்டம் வைத்தார்கள்.

இதைத் தவிர வேறு நோக்கங்களுக்காக புத்தகம் எழுதக் கூடாது.

தான் பணம் சம்பாதிக்க, தனக்கு புகழ் வேண்டி, வேறு யாரையாவது துதி செய்ய, அரசியல் செல்வாக்கு பெற என்று புத்தகம் எழுதக் கூடாது. அப்படிப்பட்ட புத்தகங்களை வாசிக்கவும் கூடாது.

ஒரு நல்ல புத்தகம் என்றால் அறத்தை போதிக்க வேண்டும். அற வழியில் பொருள் ஈட்ட சொல்லித்தர வேண்டும். அப்படி ஈட்டிய பொருளை அற வழியில் இன்பம்  துய்க்க வழி செய்ய வேண்டும்.   பின் அந்த இன்பத்தையும் கடந்து வீடு பேறு அடைய  வழி செய்ய வேண்டும்.

பாடல்

அறம்பொரு ளின்பம்வீ டடைதனூற் பயனே. (சூத்திரம் 10)


பொருள்


அறம் = அறம்

பொருள் = பொருள்

இன்பம் = இன்பம்

வீடடைதல் = வீடு அடைதல்

நூற் பயனே = நூலின் பயன் ஆகும்

ஒரு நூலைப் படித்தால் இந்த பயன்கள் விழைய வேண்டும்.

அப்படிப்பட்ட நூல்களை, (ப்ளாகுகளை, மின் நூலகங்களை, ஒலி நூல்களை) கண்டு பிடித்துப் படியுங்கள்.

கண்டவற்றையும் படித்து நேரத்தையும், வாழ்க்கையையும் வீணாக்காதீர்கள்.

பலன் இல்லாமல் ஒரு காரியமும் செய்யக் கூடாது.  வாசிப்பதின் பலன் இந்த அறம் , பொருள், இன்பம் மற்றும் வீடு பேறு என்பதாகும்.

எதையும் வாசிக்கத் தொடங்குமுன் இதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_31.html

Monday, December 30, 2019

திருக்குறள் - பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

திருக்குறள் - பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு



பாடல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.



பொருள்

அற்றால் = முதலில் உண்ட உணவு முற்றுமாக சீரணம் ஆன பின். அற்றல் என்றால் விட்டுப் போதல். முதலில் உள்ள உணவு முற்றிலும் உடலை விட்டுப் போய் விட வேண்டும்.

அறவறிந்து உண்க  = அடுத்த  உணவை  அளவு அறிந்து உண்க

அஃதுடம்பு =  அப்படிச் செய்தால், அது உடம்பை

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நெடிது உய்க்கும்

ஆறு. = வழி

அற்றால்  என்ற ஒரு வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றும் அது என்ன சொல்ல வருகிறது என்றும் முந்தைய  பிளாகில் பார்த்தோம். 

"பெற்றான்" என்றால் என்ன?

யார் பெற்றான்? எதற்கு பெற்றான் ? என்ற கேள்வி வரும் அல்லவா?


முன்பு  உண்ட உணவு செரித்து விட்டதா இல்லையா என்று அறிந்து பின் அளவு அறிந்து உண்டால்  அது உடம்பைப் பெற்றவன் நீண்ட நாள் வாழும் வழி செய்யும் என்று பார்த்தோம்.

உடம்பைப் பெற்றவன் என்றால் அது உடம்பை குறிப்பது அல்ல என்று தெரிகிறது அல்லவா?  

பெறுவது என்றால் அதற்கு இரண்டு பேர் வேண்டும். ஒருவர் கொடுக்க வேண்டும், மற்றவர் பெற்றுக் கொள்ள வேண்டும் 

உடம்பை கொடுத்தது யார்? அந்தக் கேள்வியை இப்போதைக்கு விட்டு விடுவோம்.  

பெற்றது யார்?  நான் பெற்றேன் என்றால், நான் வேறு, இந்த உடம்பு வேறு என்று தெரிகிறது அல்லவா?  நான் ஒரு பரிசை பெற்றேன் என்றால், நான் வேறு அந்தப் பரிசுப் பொருள்  வேறு என்று அறியலாம் அல்லவா.

இந்த உடம்பைப் பெற்றவன் யாரோ, அவன் நெடிது உய்க்கும் வழி என்கிறார்.

இப்போதைக்கு, உடம்பைப் பெற்றவன் ஆத்மா, உயிர், ஏதோ ஒரு சக்தி என்று வைத்துக் கொள்வோம்.  அந்த உயிர் இந்த உடம்பை பெற்றுக் கொண்டது. அது  நெடிது உய்க்கும் வழி என்று சொல்கிறாரே, அப்படி என்றால் என்ன?

இந்த உடம்பை வைத்துக் கொண்டு அந்த உயிர் ஏதோ செய்கிறது..."நெடிது உய்கிறது "

அப்படினா என்ன?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_30.html

Saturday, December 28, 2019

திருக்குறள் - வேளா வேளைக்கு சாப்பிடக் கூடாது

திருக்குறள் - வேளா வேளைக்கு சாப்பிடக் கூடாது 


நமக்கு சிறுவயது முதலே சொல்லப் பட்டது என்ன என்றால், "சரியா வேளா வேளைக்கு சாப்பிடணும். இல்லனா வயித்துல அல்சர் வரும்"

அது சரியான ஒன்றா என்று சிந்திப்போம்.

காலம் காலமாக நம் முன்னோர்கள் காடுகளில் வாழ்ந்து வந்த போது, மூன்று வேளை உணவு என்பது எப்போதோ கிடைக்கக் கூடிய ஒன்றாக இருந்திருக்கும். காட்டில் சென்று வேட்டையாடி, அதைக் கொண்டு வந்து, சமைத்து சாப்பிட்டு இருப்பார்கள். தினமும் மூன்று வேளை உணவு என்பது முடியவே முடியாத ஒன்று. அவர்களுக்கு எல்லாம் அல்சர் வந்ததா?

இன்றும் கூட, எவ்வளவோ ஏழைகள், பிச்சைக்காரர்கள் மூன்று வேளை உணவு இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அல்சர் முதலான நோய் வந்து விட்டதா? இல்லையே.

மற்றவர்களை விடுங்கள். நாமே, ஏதோ வேலை மும்மரத்தில் இருந்தால், நேரம் போனதே தெரியாது. சில நாட்கள் சரியான நேரத்துக்கு உணவு உண்ணாமல் இருந்திருப்போம். என்ன ஆயிற்று? ஒன்றும் ஆகாது.

காட்டில் உள்ள விலங்குகளைப் பாருங்கள். அவை தினம் மூன்று வேளை உணவு உண்கின்றனவா? அவற்றிற்கு எல்லாம் அல்சர் வருகிறதா? இல்லையே.

நம் உடம்பு, உணவு கிடைக்கும் போது அதை பக்குவமான வழியில் சேமித்து வைத்துக் கொள்ளும். பின் தேவைப் படும் போது சேமிப்பில் இருந்து எடுத்துக் கொள்ளும்.

மூன்று வேளை உணவு என்பது மனித வரலாற்றில் இந்த கடைசி 500 ஆண்டுகளில்  வந்த ஒன்று. அதற்கு முன் எல்லாம் நாள் கணக்கில் உணவு இல்லாமல் நம் முன்னோர்கள் அலைந்து இருக்கிறார்கள். எதிரிகள் சுத்தி வளைத்துக் கொண்டால், வெள்ளம் வந்து சூழ்ந்து கொண்டால், நெருப்பு, கொடிய விலங்குகள் என்று இவற்றில் இருந்து பாதுக்கத்துக் கொள்ள மறைந்து இருக்க வேண்டி இருந்திருக்கும். அப்போது எல்லாம் மூன்று வேளை உணவு ஏது?

கொழுப்பு என்று சொல்கிறோமே, அது நமது உடம்பு சேமித்து வைத்த சக்தி.

நாம் சாப்பிடாவிட்டால் ஒன்றும் ஆகி விடாது. நம் உடம்பு, அந்த சேமித்து வைத்த கொழுப்பில் இருந்து  தனக்கு வேண்டிய சக்தியை எடுத்துக் கொள்ளும். எடை குறையும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நாம் ஒரு முறை உணவு உண்கிறோம். அது உள்ளே சென்று, செரிமானம் ஆகி,  உணவில் உள்ள சக்தியை உடம்பு எடுத்துக் கொண்டு, தேவைக்கு அதிகமானதை  சேமித்து வைக்கும் செயலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அந்த நேரத்தில்  நாம் மேலும் உணவு உட்கொள்கிறோம்.

முன்பு உண்ட உணவு சீரணம் ஆகி முடியவில்லை. அதற்குள் மேலும் உணவை ப் போடுகிறோம். உடம்பு என்ன செய்யும்? முன்பு உண்ட உணவு அறை குறையாக  சீரணம் செய்யாமல் இருப்பதை அப்படியே விட்டு விட்டு, புதிதாக  வரும் உணவை கவனிக்கப் போய் விடும். சரி, இரண்டாவது உணவை  சீரணம் செய்து கொண்டு இருக்கும் போது, மூன்றாவது உணவு.

இப்படி தள்ளிக் கொண்டே இருந்தால்,  நம் உடலில் நடக்கும் செயல் பாடுகள் பழுதாகும் தானே?


அறுவடை முடிந்த பின்னால், அடுத்த விதை விதைத்தால் என்ன ஆகும்?

இன்று மேற்கிந்திய நாடுகளில் intermittent fasting என்று புதிதாகச் சொல்கிறார்கள். நம் அய்யன் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் கண்டு சொல்லி விட்டுப் போய் இருக்கிறான்.

பாடல்


அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்புபெற்றான் நெடிதுய்க்கும் ஆறு.



பொருள்

அற்றால் = முதலில் உண்ட உணவு முற்றுமாக சீரணம் ஆன பின். அற்றல் என்றால் விட்டுப் போதல். முதலில் உள்ள உணவு முற்றிலும் உடலை விட்டுப் போய் விட வேண்டும்.

அறவறிந்து உண்க  = அடுத்த  உணவை  அளவு அறிந்து உண்க

அஃதுடம்பு =  அப்படிச் செய்தால், அது உடம்பை

பெற்றான் = பெற்றவன்

நெடிதுய்க்கும் = நெடிது உய்க்கும்

ஆறு. = வழி

முதலில் உண்ட உணவு நன்கு சீரணம் ஆகி, உடம்பில் முழுவதுமாக  சேர்ந்த பின்,  அடுத்த உணவை உண்ண வேண்டும். அதுவும் அளவு அறிந்து உண்ண வேண்டும். அப்படிச் செய்தால், அது நீண்ட நாள் வாழ வழி செய்யும்.

வேளா வேளைக்கு சாப்பிடுவதை முதலில் நிறுத்த வேண்டும். பசித்தால் மட்டுமே  சாப்பிட வேண்டும். கடிகாரத்தைப் பார்த்து விட்டு, அடடா, மணி ஒண்ணு ஆச்சே,  என்று சாப்பிடக் கூடாது.

ஆனால் என்ன? பசிக்க வில்லை என்றால் எதற்கு சாப்பிட வேண்டும்.

அலுவலகத்தில், பள்ளியில், கல்லூரிகளில் இப்படி உணவு இடைவேளை என்று விடுகிறார்கள். அந்த நேரத்தில் சாப்பிட வேண்டும். அப்படி நம் உடம்பை பழக்கி விட்டோம். அது இயற்கைக்கு மாறானது.

பசித்துத் தான் சாப்பிட வேண்டும்.

வள்ளுவர் வேலை மெனக்கெட்டு 7 வார்த்தைகள் கொண்டு குறள் செய்கிறார்.

கிழவி இரண்டே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள் .

பசித்துப் புசி 


என்று.

வருகிற புத்தாண்டில் இருந்து பசித்தால் மட்டுமே சாப்பிடுவது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவு ஆரோக்கியமாக இருப்பீர்கள் தெரியுமா?

அது மட்டும் அல்ல, இந்த குறளுக்கு ஒரு பத்து பதினைந்து பாகத்தில் உரை எழுதலாம்.  இந்த ஏழு வார்த்தையில் அவ்வளவு அர்த்தச் செரிமானம் இருக்கிறது.  அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும்.

இதைப் பற்றி சிந்தியுங்கள். பசித்தால் ஒழிய சாப்பிடுவதில்லை என்று முடிவு எடுங்கள். முதலில் ஒரு சில நாள் கொஞ்சம் கடினமாக இருக்கும். போகப் போக உங்கள் உடல் பழகி விடும். ஒரு வாரம் பத்து நாள் ஆகலாம்.

அதற்குப் பின் உங்கள் உடம்பு உங்களுக்கு நன்றி சொல்லும்.

செய்வீர்களா ? நீங்கள் செய்வீர்களா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_28.html

Friday, December 27, 2019

திருக்குறள் - கேட்டார் பிணிக்கும்

திருக்குறள் - கேட்டார் பிணிக்கும் 


சொல் அல்லது பேச்சு என்றால் எப்படி இருக்க வேண்டுமாம் ? கேட்பவர்களை கட்டிப் போட வேண்டும். கேட்காதவர்கள் கூட, அடடா , கேட்க விட்டுப் போய் விட்டதே என்று கேட்க விரும்பும் படி இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

பாடல்

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

பொருள்

கேட்டார்ப் = கேட்டவர்களை

பிணிக்கும் = கட்டிப் போடும்

தகையவாய்க் = தன்மை உள்ளதாய்

கேளாரும் = கேட்காதவர்களும்

வேட்ப = ஆசைப் படும்படி

மொழிவதாம் = சொல்லுவதாம்

சொல் = நல்ல சொல் அல்லது பேச்சு

இதற்கு பலவிதங்களில் பெரியவர்கள் அர்த்தம் சொல்லி இருக்கிறார்கள். என் அறிவு அவ்வளவு தூரம் எல்லாம் போகாது.

நம் அன்றாட வாழ்க்கையில் இது எப்படி செயல்படுகிறது என்று பார்ப்போம். மேலும், இந்த குறள் எப்படி நம் இனிய வாழ்க்கைக்கு வழி காட்டுகிறது என்று சிந்திப்போம்.


வீட்டில் நாம் அன்றாடம் கேட்கும் பேச்சு என்ன ....


'என்ன சொன்னாலும் இந்த பிள்ளைகள் கேட்கவே மாட்டேன் என்கிறார்கள்...அவங்க நல்லதுக்குத்தானே சொல்கிறோம்...கேட்டால் என்ன "

"அவரு நான் என்ன சொன்னாலும் கேக்க மாட்டாரு. அவங்க அம்மா சொன்னா கேப்பாரு "

"அவளுக்கு என்ன தான் வேணும் என்றே தெரியல...எதைச் சொன்னாலும் இடக்கு மடக்கா பேசுறா...அவளோட வர வர பேசவே முடியல "

இப்படி எங்க பார்த்தாலும் சொன்னால் கேட்பதில்லை என்ற அங்கலாய்ப்பு நிறைந்து இருக்கிறது.

பிள்ளகைள் சொன்ன மாதிரி கேட்டு, கணவன்/மனைவி ஒருவரை ஒருவர் மற்றவர் சொல்வதை கேட்டு புரிந்து கொண்டு நடந்தால் வாழ்கை எப்படி இனிமையாக இருக்கும்?

அது ஏன் நிகழ மாட்டேன் என்கிறது.

தவறு அடுத்தவரிடம் இல்லை. நம்மிடம் இருக்கிறது.

பேசத் தெரியவில்லை.

பேசத் தெரியாமல் பேசி, இருப்பதை மேலும் குழப்பம் ஆக்கி விடுகிறோம்.

கணவனோ மனைவியோ ஒருவர் மற்றவரிடம் ஏதோ ஒன்று சொல்லப் போகிறார்கள். அது மற்றவருக்கு பிடிக்காது என்று தெரியும். சொன்னால் கேட்க மாட்டார்கள் என்றும் புரியும். அப்படி இருந்தால் கூட, "சரி என்னதான்  சொல்றா/ங்க னு கேப்போமே " என்று விரும்பும்படி பேச வேண்டுமாம்.

பேச்சு என்பது கலை. மேடைப் பேச்சு மட்டும் அல்ல. வீட்டில் பேசுவதும் கலைதான்.

கணவன்/மனைவி/மாமியார்/பிள்ளைகள்/மாமனார்/உறவினர்/நண்பர்கள்/அதிகாரிகள்/ கீழே வேலை செய்பவர்கள்/அண்டை/அயல் என்று எங்கும் பேச வேண்டி இருக்கிறது. நாம் பேசுவதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவிட்டால் கூட, அவர்கள் நம் பேச்சை கேட்க விரும்பும் படி பேச வேண்டும்.

நன்றாக பேசத் தெரிந்து விட்டால், நம் வாழ்கை மட்டும் அல்ல, நம்மைச் சுற்றி உள்ளவர்கள் வாழ்வும் இனிமையாக இருக்கும்.

சரி. புரியுது. ஆனால், எப்படி நன்றாக பேசுவது? இனிமையாக எப்படி பேசுவது?

நல்ல பேச்சின் குணங்கள் என்ன என்ன? நம் எதிரி கூட நம் பேச்சை விரும்ப வேண்டும் என்றால் எப்படி பேச வேண்டும்?

 அது பற்றி வள்ளுவர் ஏதாவது சொல்லி இருக்கிறாரா? அல்லது நம் இலக்கியங்கள் ஏதாவது சொல்லி இருக்கிறதா ?

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_27.html



Thursday, December 26, 2019

கம்ப இராமாயணம் - இராவணனார் காதலும்

கம்ப இராமாயணம் - இராவணனார் காதலும்


கம்ப இராமாயணம் முடியும் இடம் வந்து விட்டது. போர் முடிந்து, இராவணன் இறந்து கிடக்கிறான். அவன் மனைவி மண்டோதரி போர்க் களம் வந்து, இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி ஆகி விட்டது. கம்பனின் எழுத்தாணி சோர்ந்து போயிருக்கும் என்று நாம் நினைப்போம்.

பத்தாயிரம் பாடல் எழுதுவது என்றால் சாதாரணமா? இப்போது மாதிரி அல்ல, எழுதி பார்த்து சரி இல்லை என்றால் காகிதத்தை கசக்கி குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பக்கத்தில் எழுதத் தொடங்கலாம். அல்லது, கணனி என்றால் எடிட் பண்ணிக் கொள்ளலாம்.

கம்பன் எழுதிய காலத்தில் ஓலைச் சுவடிதான் இருந்திருக்கும். ஒரு சோர்வும், சலிப்பும், ஆயாசமும் வந்திருக்கலாம் அல்லவா?

அது தான் இல்லை.

முதல் பாடல் எழுதிய அதே கற்பனை வளம், எழுத்து வன்மை, உணர்ச்சிகளை படம் பிடிக்கும் துல்லியம்...கொஞ்சம் கூட குறையாமல் எழுதுகிறான் கம்பன்.

சாத்தியமா? சிந்தித்துப் பாருங்கள்.

இராவணன் இறந்து கிடக்கிறான்.  இராமன், அவனை கொன்று விட்டான். இராமன் எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும், மண்டோதரிக்கு இராமனை பாராட்ட மனம் வரவில்லை. தன் கணவனை கொன்றவனை பாராட்ட எந்த மனைவிக்குத்தான் மனம் வரும். இருந்தும், அப்பேற்பட்ட இராவணனை ஒருவன் கொல்கிறான் என்றால், அவன் சாதாரண ஆளாகவும் இருக்க முடியாது.

அவள் சொல்கிறாள்


"இராவணனை கொன்றது இராமனின் அம்பு மட்டும் அல்ல. சீதையின் அழகும், அவளின் கற்பும். இராவணன் அவள் மேல் கொண்ட காதலும். சூர்ப்பனகையின் இழந்த மூக்கும், தசரதன் கொடுத்த வரமும் , இந்திரன் முதலிய தேவர்கள் செய்த தவமும், இராவணனை கொன்றது "

என்கிறாள்.

நம்மால் மறுக்க முடியுமா? கற்பனை வளம் செறிந்த அந்தப் பாடல்

பாடல்



'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!


பொருள்



காந்தையருக்கு = பெண்களுக்கு

அணி அனைய  = அணிகலன் போன்ற

சானகியார் பேர் அழகும் = ஜானகியின் பேர் அழகும்

அவர்தம் கற்பும் = அவளுடைய கற்பும்

ஏந்து புயத்து = வீங்கிய தோள்களை உடைய

இராவணனார் காதலும் = இராவணனின் காதலும்

அச் சூர்ப்பணகை = அந்த சூர்ப்பனகை

இழந்த மூக்கும், = இழந்த மூக்கும்

வேந்தர் பிரான் = அரசர்களுக்கு எல்லாம் தலைவர் ஆன

தயரதனார் = தசரதன்

பணியதனால் = பணித்ததால்

வெங் கானில் விரதம் பூண்டு = கொடிய கானகத்தில் விரதம் மேற்கொண்டு

போந்ததுவும் = இராமன் போனதுவும்

கடைமுறையே = கடைசியாக

புரந்தரனார் = இந்திரன்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! = செய்த பெரிய தவமும் ஒன்றாக வந்தது

கவிதையின் அழகு ஒரு புறம்.

மண்டோதரியின் சோகம் ஒரு புறம்.

அதெலாம் ஒரு புறம் இருக்கட்டும்.

பாடலின் அடி நாதம் புரிகிறதா?


இராவணனின் அழிவு வர வேண்டும் என்று இயற்கை எப்படி காய் நகர்த்தி இருக்கிறது என்று புரிகிறதா?


தசரன், வேட்டைக்கு போன போது ஒரு அந்தணச் சிறுவனை தவறுதலாக கொன்று விடுகிறான். அந்த சிறுவனின் பெற்றோர் "நாங்கள் புத்திர சோகத்தில்  உயிர் விடுவதைப் போல நீயும் சாவாய்" என்று சாபம் தருகிறார்கள்.

அதற்கு முன்னால் தயரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் தந்திருக்கிறான்.

இராமன் கூனியை வில்லால் அடிக்கிறான்.

கூனி தூண்ட, கைகேயி வரம் வேண்ட, தயரதன் இராமனை காட்டுக்கு அனுப்புகிறான்.

சூர்ப்பனகை, இராமன் மேல் ஆசைப் படுகிறாள். மூக்கு அறுபடுகிறாள். சீதை பற்றி   இராவணனுக்கு மோகம் வரும் படி பேசுகிறாள். இராவணன் சீதையை சிறை எடுக்கிறான்.

இராமன் இராவணனைக் கொல்கிறான்.

இராவணனை கொல்ல வேண்டும் என்றால் இராமன் கானகம் வந்தான்?

இதெல்லாம் என்றோ முடிவு செய்யப் பட்டுவிட்டது.நாடகம் அரங்கேறியது.

வாழ்வில், நம்மை மீறி காரியங்கள் நடக்கும் போது , இது இப்போது நடக்கிறது என்று   நினைக்கக் கூடாது. ஏதோ நாம் வேறு மாதிரி சிந்தித்து இருந்தால் , சூழ்நிலை வேறு மாதிரி நடந்திருக்கும் , நாம் தவறு செய்து விட்டோம், அல்லது மனைவி/கணவன்/மாமியார்/உடன் பிறப்புகள் தவறு செய்து விட்டார்கள்   என்று எண்ணக் கூடாது.

இப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறது. அப்படித்தான் நடக்கும்.

சிந்திக்க வேண்டிய விடயம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_26.html

Wednesday, December 25, 2019

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி

கந்தர் அநுபூதி - கரவாகிய கல்வி 


கரத்தல் என்றால் மறைத்தல் என்று பொருள்.

காக்கை கரவா கரைந்துண்ணும் என்பார் வள்ளுவர்.

"காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி" என்பார் மணிவாசகர். இறைவன் படைத்து, காத்து, கரந்து விளையாடுகிறான்.




ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடுந்
தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடுங்
கூத்தன்இவ் வானுங் குவலயமும் எல்லோமுங்
காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். (திருவெம்பாவை)


சிலர் படிப்பார்கள். நல்ல விஷயங்களை அறிந்து கொள்வார்கள். ஆனால் அதை பிறருக்கு சொல்ல மாட்டார்கள். எங்கே தெரிந்து கொண்டால் அவனும் நம்மை மாதிரி ஆகி விடுவானோ, நம் பெருமை குறைந்து விடுமோ என்ற பயம்.


நாம் மட்டும் நல்லா இருக்க வேண்டும். தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கு சொல்லக் கூடாது. யார் எப்படிப்  போனால் என்ன, நாம் நல்லா இருக்க வேண்டும்  என்ற சுயநலம் கூட காரணமாக இருக்கலாம்.


தான் கற்ற மந்திரத்தை உலகில் உள்ள எல்லோரும் அறிந்து கொள்ள கோவில் கோபுரத்தில் மேல் ஏறி சொன்னார் இராமானுஜர். அவருக்கு அந்த உபதேசத்தை சொன்னவர்கள் அந்த மந்திரத்தை யாருக்கும் சொல்லக் கூடாது  (மறைத்து வை) என்று  சொல்லித்தான் அனுப்பினார்கள். இராமானுஜரின்  தாயுள்ளம், எல்லோரும் உய்ய வேண்டும் என்று தான் நரகம் போனாலும் பரவாயில்லை என்று எல்லோருக்கும் சொன்னார்.


அப்படி அல்லாமல், தனக்கு மட்டும் என்று அறிவை வைத்துக் கொள்ளும் அறிவுக் கருமிகளின்  வீட்டு வாசலில் சென்று நிற்கும் படி என்னை வைத்து விடாதே என்று முருகனிடம் வேண்டுகிறார்.



பாடல்

கரவா கியகல்வி யுளார் கடைசென்
 றிரவா வகைமெய்ப் பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசா யுதகுஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

படிக்க கொஞ்சம் கடினம் தான். சீர் பிரிப்போம்.


கரவாகிய கல்வியுளார் கடை சென்று 
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
 குரவா குமரா குலிசாயுத குஞ்
 சரவா சிவயோக தயாபரனே!

பொருள்


கரவாகிய  = மறைத்து வைக்கக் கூடிய

கல்வியுளார் = கல்வியை உடையவர்கள்

கடை சென்று  = வாசலில் சென்று

இரவா வகை  = கை  ஏந்தும் படி செய்யாமல்

மெய்ப்பொருள் ஈகுவையோ = உண்மையான பொருளை தருவாயாக

 குரவா = தலைவா. குரவன் என்றால் தலைவன்

குமரா = குமரா

குலிசாயுத =குலிசாயுதம் என்ற ஆயுதத்தை கையில் கொண்டவனே

குஞ்சரவா  = குஞ்சரவா

சிவயோக  = சிவ யோகத்தில் நிற்பவனே

தயாபரனே! = தயை நிறைந்தவனே

கல்வியை கற்றால் அதை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.

இதற்கு இன்னொரு விளக்கமும் தரலாம்...மறைத்து வைக்கக் கூடிய கல்வி.

கல்வி, உண்மையை நம்மிடம் இருந்து மறைத்து விடும்.

"கற்றாரை யான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும்"  என்றார் மணிவாசகர்.

கல்விக்குள் போகக் கூடாது. போனால், அதைத் தாண்டி போக வேண்டும். எல்லை கடக்க வேண்டும்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் வாலறிவன் நற்றாழ் தொழாஅர் எனின் 

என்பார் வள்ளுவப்  பேராசான்.

அறிவு இறைவனிடம் இட்டுச் செல்ல வேண்டும்.

எங்கே இட்டுச் செல்கிறது?  ஆணவத்திடம் தான் இட்டுச் செல்கிறது.

படியுங்கள். படித்ததை மற்றவர்களுக்கும் தாருங்கள். படித்தத்தின் பலன் என்ன என்று சிந்தியுங்கள்.  பயன் என் கொல் என்று வள்ளுவர் கேட்கிறார்.


interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_25.html

Tuesday, December 24, 2019

கம்ப இராமாயணம் - அளவற்ற ஆற்றல் பெற

கம்ப இராமாயணம் - அளவற்ற ஆற்றல் பெற 


நமக்கு வேண்டியவற்றை அடைய நமக்கு ஆற்றலும், திறமையும் வேண்டும். நம் ஆசையோ அளவு இல்லாதது. அவ்வளவு  ஆற்றலுக்கு எங்கே போவது?

கம்ப இராமாயணம் வழி சொல்கிறது. நேரடியாக அல்ல. சற்று மறைமுகமாக. நாம் தான் தேடி அதை கண்டு பிடித்துக் கொள்ள வேண்டும்.

இராமாயணத்தில் மிகுந்த பலம் வாய்ந்த பாத்திரம் என்றால் அது வாலிதான்.

கதாநாயகன் இராமன் மிகுந்த பலசாலி. அவனுக்கு எதிரே நிற்கும் இராவணன் இராமனுக்கு இணையான பலசாலி. வாலியோ, இராவணனை ஒரு பூச்சி போல வாலில் கட்டி அங்கதனின் தொட்டிலில் தொங்க விடுவானாம்.  அது மட்டும் அல்ல, வாலியின் எதிரில் நின்று போரிடாமல், இராமனே மறைந்து நின்று தான் போரிட்டான். இராமன் எய்த பாணம், வாலியின் நெஞ்சை தாக்கி உள்ளே செல்ல முயல்கிறது.  வாலி அதைத் தடுத்து, வெளியே இழுக்கிறான். இராம பாணத்தை தடுக்கும் அளவுக்குவாலியிடம் பேராற்றல் இருந்தது.

அவனுக்கு எப்படி அவ்வளவு பலம் வந்தது?


நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் சில நல்ல குணங்கள் இருக்கும். சில கெட்ட குணங்களும் இருக்கும். நல்லதே மட்டும் உள்ளவர்களும் இல்லை. அனைத்துமே கெட்ட குணங்கள் என்றும் எவரும் இல்லை.

நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் உள்ள நல்ல குணங்கள் என்ன என்று கண்டு பிடித்து அவற்றை நாம் அடைய முயற்சி செய்து, அடையவும் செய்தால், நம்மைப் போல பல சாலி யாரும் கிடையாது.


வாலி, தன்னை எதிர்க்கும் எதிரியிடம் இருந்து அவர்களின் "நல்ல" குணத்தில், பாதியை அவன் பெற்றுக் கொள்ளும் வரத்தை பெற்று இருந்தான். அவனை யாரும் வெல்லவே முடியாது. யார் எதிரில் நின்றாலும், அவர்களின் பலத்தில் பாதி வாலியிடம் போய் விடும் என்றால் அவர்கள் எப்படி வாலியை வெல்ல முடியும்?

அப்படி, ஒவ்வொருவரின் பலத்திலும் பாதி அவனை சென்று அடைந்ததால் அவன் மிகப் பெரிய பலம் பெற்று விளங்கினான்.

பாடல்

'கிட்டுவார்பொரக் கிடைக்கின், அன்னவர்
பட்ட நல் வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி, நாளும் உற்று,
அட்ட மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்;



பொருள்


'கிட்டுவார் = எதிரில் வருபவர்கள்

பொரக் கிடைக்கின் = போருக்கு என்று வந்தால்

அன்னவர் = அவர்களின்

பட்ட நல் வலம் = பெற்ற நல்ல பலத்தில்

பாகம் எய்துவான்; = பாதியை வாலி அடைவான்

எட்டு = எட்டு

மாதிரத்து = பெரிய திசைகளிலும்

இறுதி = முடிவில்

நாளும் உற்று, = தினமும் சென்று

அட்ட மூர்த்தி = சிவனின்

தாள் பணியும் ஆற்றலான்; = திருவடி தொழும் ஆற்றல் பெற்றவன்


அவனிடம் இரண்டு குணங்கள் இருந்தன.

ஒன்று, மற்றவர்களின் நல்ல குணங்களின் பாதியை பெற்றுக் கொள்வான்.

இரண்டாவது,  அவ்வளவு வலிமை பெற்ற பின்னும், அவனுள் ஒரு அடக்கம் இருந்தது. தினமும், இறைவனைத் தொழுதான்.

எனவே, ஆற்றல் பெற வேண்டும் என்றால், மற்றவர்களின் நல்ல குணங்களைப் பார்த்து  படித்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் வரம் இல்லை. எனவே அவர்களின் நல்ல குணங்கள் தானே நம்மை அடையாது. அதனால் என்ன?  தானே வராவிட்டால், நாம் முயற்சி செய்து அடையலாம் தானே.

Inspiration and motivation என்று சொல்லுவார்கள்.  நம்மைவிட அறிவில், குணத்தில் உயர்ந்தவர்களைப் பார்த்து  அவர்களின் அந்த குணங்களை நாம் அடைய நாளும் முயல வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், தலைக்கு இரண்டு நல்ல குணம் என்று பத்து பேரை எடுத்துக் கொண்டால், நம்மிடம் 20 நல்ல குணங்கள் வந்து விடும். அவர்கள் எல்லாம் இரண்டு நல்ல குணத்தோடு இருப்பார்கள். நாம் 20 நல்ல குணத்தை பெற்றவர்களாக இருப்போம்.

வாலி வதை சரியா தவறா என்பதை விட்டு விட்டு, நம்மை உயர்த்திக் கொள்ள  அங்கே என்ன பாடம் இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_75.html

கம்ப இராமாயணம் - எரியே அவனைச் சுடல்

கம்ப இராமாயணம் - எரியே அவனைச் சுடல் 


"எல்லை நீத்த இந்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்" என்றாள் சீதை.

சொன்னால் போதுமா? அவளுக்கு அப்படி ஒரு வலிமை இருந்ததா அல்லது சும்மா சொல்கிறாளா?

அப்படி வலிமையோடு அவள் ஏதாவது செய்து காண்பித்து இருக்கிறாளா?

அனுமன், இலங்கைக்கு வந்து பிராட்டியைக் கண்ட பின், அங்கிருந்த மரம் செடி கொடிகள் எல்லாம் உடைத்து எறிகிறான். பிறவிக் குணம் யாரை விட்டது?

அரக்கர்கள், அனுமனை பிடித்துக் கொண்டு போய் இராவணன் முன் நிறுத்துகிறார்கள். இராவணனுக்கும், அனுமனுக்கும் நீண்ட பேச்சு வார்த்தை நிகழ்கிறது. அருமையான பல கருத்துக்களைக் கொண்ட பேச்சு வார்த்தை அது. அது பற்றி பின் ஒரு நாள் சிந்திப்போம்.

கடைசியில், அனுமனின் வாலுக்கு தீ வைத்து அவனை விரட்டி விடும்படி இராவணன் கூறுகிறான்.

அதைக் கேள்விப் பட்ட சீதை வருந்துகிறாள். ஐயோ, அனுமனுக்கு அது துன்பம் தருமே என்று அஞ்சி, தீக் கடவுளை கூப்பிட்டு, "நான் கற்புள்ளவள் என்றால், தீயே, அவனைச் சுடாதே" என்று அக்கினி கடவுளுக்கு கட்டளை இடுகிறாள். தீக் கடவுளும் அவள் பேச்சுக்கு அடி பணிகிறான். அரக்கர்கள் இட்ட தீ, அனுமனுக்கு குளிர்ந்தது.

பாடல்


‘தாயே அனைய கருணையான்
    துணையை, யாதும் தகவு இல்லா
நாயே அனைய வல் அரக்கர்
    நலியக் கண்டால், நல்காயோ?
நீயே உலகுக்கு ஒரு சான்று;
    நிற்கே தரெியும், கற்பினால்
தூயேன் என்னில் தொழுகின்றேன்,
    எரியே அவனைச் சுடல் ‘என்றாள


பொருள்


‘தாயே அனைய = தாயைப் போன்ற

கருணையான் = கருணை கொண்டவன் (இராமன்)

துணையை = (அவனுடைய) துணையை (அனுமனை)

யாதும் = எந்த ஒரு

தகவு இல்லா = சிறப்பும் இல்லாத

நாயே அனைய = நாயைப் போன்ற

வல் அரக்கர் = கொடிய அரக்கர்கள்

நலியக் கண்டால் = துன்புறுத்துவதைக் கண்டால்

நல்காயோ? = உதவி செய்ய மாட்டாயா ?

நீயே உலகுக்கு ஒரு சான்று; = இந்த உலகில் நடக்கும் அனைத்திற்கும் நீயே ஒரு சாட்சி


நிற்கே தெரியும் = உனக்கே தெரியும்

கற்பினால் தூயேன் என்னில் = நான் கற்பினால் தூயவள் என்றால்

தொழுகின்றேன், = (உன்னை) வணகுகிறேன்

எரியே = தீயே

அவனைச் சுடல் ‘என்றாள = அவனை சுடாதே என்றாள்


முக்கிய செய்தி என்ன என்றால், நீ ஒழுக்கத்தோடு இருந்தால், இயற்கை உனக்கு கட்டுப்படும்.  தீயை குளிர வைக்கலாம். உதிக்கும் சூரியனை நிறுத்தி வைக்கலாம், காலத்தை நிறுத்தலாம் (மார்க்கண்டேயர்).

ஒழுக்கம், அறம் ...இதுதான் வாழ்க்கை என்று நம்பியது நம் இலக்கியங்கள்.

எதை எதையோ நம்புகிறோம்.

நல்லதை , உண்மையைச் சொன்னால் நம்ப மறுக்கிறோம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_24.html

Sunday, December 22, 2019

கம்ப இராமாயணம் - என் சொல்லினால் சுடுவேன்

கம்ப இராமாயணம் - என் சொல்லினால் சுடுவேன்


சீதையை தேடி வந்த அனுமன் அவளை அசோக வனத்தில் காண்கிறான். அவளிடம், "நீங்கள் பேசாமல் என் தோளில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். உங்களை இராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். மத்தது எல்லாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம்" என்கிறான்.

சீதை அதை மறுக்கிறாள். "அனுமனே, எனக்கு துன்பம் செய்யும் இந்த அரக்கர்கள் நிறைந்த இலங்கை மட்டும் அல்ல, எல்லை இல்லாத இந்த உலகங்கள் அனைத்தையும் என் ஒரு சொல்லினால் சுடுவேன். அப்படி செய்தால் அது இராமனின் வில்லின் ஆற்றலுக்கு மாசு என்று செய்யாமல் இருக்கிறேன்" என்கிறாள்.


பாடல்

அல்லல் மாக்கள் இலங்கை அது ஆகுமோ?
எல்லை நீத்த உலகங்கள் யாவும் என்
சொல்லினால் சுடுவேன்; அது தூயவன்
வில்லின் ஆற்றற்கு மாசு என்று வீசினேன்.

பொருள்


அல்லல் = துன்பம் (செய்யும்)

மாக்கள் = விலங்குகளைப்  போன்ற அரக்கர்கள் வாழும்

இலங்கை அது ஆகுமோ? = இலங்கை மட்டும் அல்ல

எல்லை நீத்த =எல்லை இல்லாத

உலகங்கள் யாவும்  = இந்த உலகங்கள் அனைத்தையும்

என் சொல்லினால் சுடுவேன்; = என் ஒரு சொல்லினால் சுட்டு எரித்து விடுவேன்

அது = அப்படிச் செய்தால்

தூயவன் = இராமனின்

வில்லின் ஆற்றற்கு = வில்லின் ஆற்றலுக்கு

மாசு என்று வீசினேன். = குற்றம் என்று கருதி அந்த எண்ணத்தை கை விட்டேன் என்கிறாள்.

தெரிந்த பாடல் தான்.  பல முறை, பல இடங்களில் படித்த,கேட்ட பாடல்தான்.

இதில் புதிதாக என்ன செய்தி இருக்கிறது?

வீட்டில் கணவன் சில விஷயங்களில் கவனம் செலுத்தாமல் இருக்கலாம். அது  மற்ற வேலையின் காரணமாக இருக்கலாம், அல்லது சோம்பேறித்தனமாக இருக்கலாம்.  பெரும்பாலான வீடுகளில் என்ன நடக்கிறது என்றால், மனைவி வேறு யாரிடமோ  சொல்லி காரியத்தை செய்து கொள்ள முயல்கிறாள். அப்படி செய்து கொள்ள முயலும் போது, ஏன் அவள் கணவன்  செய்யவில்லை என்ற கேள்வி வரும் அல்லவா ? அதற்கு, தன் கணவனை பற்றி  அவளே வெளிப்படையாக சொல்ல நேர்கிறது. "அவருக்கு  இதில் எல்லாம் சாமர்த்தியம் போதாது. நீங்க இதில் கெட்டிக்காரர்,  " என்று கணவனின் பலவீனத்தை  வெளிப்படையாக  மனைவி இன்னொருவரிடம் சொல்லும் போது பல சிக்கல்கள்  ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இரண்டாவது, இன்றைய பெண் விடுதலை பற்றி பேசுபவர்கள், கணவனைப் பற்றி, வீட்டுக்கு வருபவர்களிடம் பேசும் போது, "அவருக்கு இதெல்லாம் ஒண்ணும் தெரியாது" என்று பேசுகிறார்கள். அதில் ஏதோ தங்களுக்கு பெரிய பெருமை இருப்பது போல.  சில வீடுகளில் மரியாதை கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் "அதுக்கு ஒண்ணும் தெரியாது" என்று.

தான் பெரியவள் என்று காட்டிக் கொள்ள, கணவனை மட்டம் தட்டுவது, அல்லது அவனை  சிறுமைப் படுத்தும் போக்கு பல இடங்களில் காணப் படுகிறது. "நீ இல்லாவிட்டால் என்ன...என்னால் சாதிக்க முடியாதா...செய்து காட்டுகிறேன்  பார்" என்று பெண்கள் கோதாவில் இறங்குகிறார்கள்.

செய்தும் காண்பிக்கிறார்கள். அவர்களிடம் திறமை இருக்கிறது. அறிவும் இருக்கிறது.  என்ன சிக்கல் என்றால்,  "நான் இல்லாவிட்டாலும் அவள் தன்னைத் தானே கவனித்து கொள்வாள் " என்று கணவன் நினைக்கத் தலைப்படுவான். அது மட்டும் அல்ல, "நான் அவளுக்கு தேவை இல்லை, என் துணை அவளுக்குத் தேவை இல்லை " என்று அவன் நினைக்கும் போது, சரி,  என்  துணை யாருக்குத் தேவைப் படுகிறதோ அங்கு நான் போகிறேன் என்று  நினைக்கிறான்.

காரியத்தை செய்து விட்டு, காதலை இழக்கிறார்கள்.

சீதைக்கு முடியாத காரியம் அல்ல.

இராமன்,  படை திரட்டி, பாலம் கட்டி, பல நாள் போர் செய்து தான் இராவணனை வென்றான்.  சீதை சொல்கிறாள், "அதெல்லாம் தேவை இல்லை, ஒரே சொல்லால் இந்த உலகம் அனைத்தையும் எரிப்பேன்" என்கிறாள். அவளுடைய ஆற்றல் அளவு கடந்தது.

ஆனாலும், அனுமன் என்ற இன்னொரு ஆடவன் மூலம் அவள் காரியத்தை சாதித்துக் கொள்ள நினைக்கவில்லை.   தானும் தனித்து நின்று காரியம் செய்து கொள்ளவும்  நினைக்கவில்லை.  அப்படிச் செய்தால் ஒரு வேளை தனக்குப் பெருமை வரலாம் , ஆனால் உலகம் இராமனை இகழும். கட்டிய மனைவியை காப்பாற்றத் தெரியாத   இவன் எல்லாம் ஒரு ஆண் மகனா என்று  உலகம் இராமனை இகழும்.

இராமன் வந்து சிறை மீட்க வேண்டும் என்று சீதை தன் ஆற்றலை சுருக்கிக் கொண்டு, பிற ஆடவர் உதவியும் பெறாமல், துன்பத்தைத் தாங்கிக் கொண்டு  இருந்தாள்.

தாம்பத்தியத்தின் இரகசியம் இது.

குடும்பம் என்பது யார் பெரியவர் என்பதை நிர்ணயம் செய்யும் குஸ்தி மைதானம் அல்ல.

யாருக்கு கோப்பை கிடைக்கிறது பார்க்கலாம் என்று களம் இறங்குவது அல்ல, குடும்ப வாழ்க்கை.

இன்றைய பெண் விடுதலையாளர்கள் நினைக்கக் கூடும், "சீதை செய்தது சரி அல்ல.  அவள் பாட்டுக்கு சண்டை போட்டு, இராவணனை கொன்று போட்டுவிட்டு வந்திருக்க வேண்டும், அல்லது அனுமனின் தோளில் ஏறி வந்திருக்க வேண்டும் ..இது என்ன பத்தாம் பசலித்தனம்" என்று.


அது சரிதானா என்பதை வாசகர்கள் தீர்மானித்துக் கொள்ளட்டும்.

கம்பன் காட்டிய சீதை அப்படி செய்யவில்லை.

பாடம் படித்துக் கொள்வது நம் விருப்பம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_22.html



Friday, December 20, 2019

கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்

கம்ப இராமாயணம் - தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்


இராவணன் இறந்து கிடக்கிறான்.  அவனை அருகில் சென்று பார்க்கிறான் இராமன். அவன் முதுகில் புண் இருக்கிறது. "அட சீ இவன் போரில் புறமுதுகு கண்டவனா " என்று இராமன் இகழ்ந்து நோக்குகிறான்.

அப்போது அங்கு வந்த வீடணன் சொல்வான். "இராவணன் முதுகில் உள்ள தழும்புகள், அட்ட திக்கு யானைகளோடு சண்டை போட்டு, அந்த யானைகள் இராவணன் மார்பில் தங்கள் தந்தத்தால் குத்தி அது முதுகின் வழியாக வந்த புண்ணே அன்றி இராவணன் ஒரு போதும் புறமுதுகு கண்டவன் அல்ல" என்று விளக்குகிறான்.

அவன் மேலும் சொல்லுவான்,

"இராமா, ஆயிரம் கைகள் கொண்ட கார்த்த வீரியனும், வாலியும் முன்பு இராவணனை ரொம்ப முயற்சி செய்து வென்றார்கள். இராவணன் தோற்றதற்கு காரணம் அவன் வீரம் இன்மை அன்று. இராவணன் பெற்ற சாபங்கள் அவனை தோல்வி அடைய வைத்தன. இப்போதும், தாயினும் தொழத் தக்க சீதை மேல் வைத்த காதல் என்ற நோயும், உன் சினமும் அவனை வீழ்த்தியதே அன்றி அவன் கோழைத் தனத்தால் அவன் விழவில்லை " என்று.

பாடல்



'ஆயிரம் தோளினாலும், வாலியும், அரிதின், ஐய!
மேயின வென்றி விண்ணோர் சாபத்தின் விளைந்த; மெய்ம்மை;
தாயினும் தொழத் தக்காள்மேல் தங்கிய காதல்-தன்மை
நோயும் நின் முனிவும் அல்லால், வெல்வரோ  நுவலற்பாலார்?


பொருள்


'ஆயிரம் தோளினாலும் = ஆயிரம் தோள்களைக் கொண்ட கார்த்த வீரியனும்

 வாலியும் = வாலியும்

அரிதின் = அரிதாக

ஐய! = இராமா

மேயின வென்றி = பெற்ற வெற்றிகள்

 விண்ணோர்  = தேவர்கள்

சாபத்தின் விளைந்த = சாபத்தால் விளைந்தவை

மெய்ம்மை; = உண்மை என்ன என்றால்

தாயினும் தொழத் தக்காள்மேல் = தாயை விட தொழுது வணங்கத் தக்க சீதை மேல்

தங்கிய காதல் = தங்கிய காதல்

தன்மை = தன்மை

நோயும் = நோயும்

நின் முனிவும் அல்லால் = உன் கோபமும் அல்லாது

வெல்வரோ = வெல்ல முடியுமா (இராவணனை)

 நுவலற்பாலார்? = யார் சொல்ல முடியும்

எவ்வளவு வீரம் இருந்தாலும், அறம் நீங்கி வாழ்ந்தால் , அந்த அறமே அழிக்கும்  என்பது நீதி.

நம் இலக்கியங்கள் அறம் அறம் என்று ஓலமிடுகின்றன.

இலக்கியங்களை படிப்பதன் நோக்கம் அவை கூறும் அறங்களை கடை பிடித்து வாழ.

இலக்கியங்கள் நம்மை நல் வழிப் படுத்த வேண்டும்.

இல்லை என்றால் அவை இலக்கியங்கள் அல்ல.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_20.html

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7

நன்னூல் - முதல் நூல் - பாகம் 7


நூற்கள் மூன்று வகைப்படும் என்று பார்த்தோம். அதில் முதலாவது "முதல் நூல்".

முதல் நூல் என்றால் என்ன?

அதற்கு விடை காண்பதற்கு முன்னால், எதற்காக பொதுவாக நூல் எழுதுகிறார்கள் என்று யோசிப்போம்.

தன் அறிவை காட்டிக் கொள்ள, பணம் சம்பாதிக்க, புகழ் அடைய என்று பல காரணங்கள் இருக்கலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், ஒரு ஆசிரியன் நூலை எழுதுகிறான் என்றால் அவன் வாழ்ந்து வளர்ந்த சூழ்நிலை, அவன் படித்த புத்தகங்கள், அவனைப் பாதித்த நிகழ்வுகள் இவற்றால் உந்தப்பட்டு ஒரு நூலை எழுதுகிறான்.

இவை எதனாலும் பாதிக்கப் படாமல், தான் செய்த வினைகள் அனைத்திலும் இருந்து விடுபட்டு, அதன் பின் தோன்றிய தெள்ளிய அறிவில் இருந்து எழுதுவது முதல் நூல் எனப்படும்.


பாடல்

அவற்றுள் ,வினையி னீங்கி விளங்கிய வறிவின்முனைவன் கண்டது முதனூ லாகும்


பொருள்


அவற்றுள் , = அந்த மூன்று வகையான நூல்களுள்

வினையி னீங்கி = தான் செய்த வினைகளில் இருந்து நீங்கி, விடுபட்டு

விளங்கிய வறிவின் = விளங்கிய அறிவின்

முனைவன் = முயற்சி உடையவன்

கண்டது முதனூ லாகும் = கண்டது முதல் நூலாகும்

நாம்    விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நாம் செய்த வினைகள் நம்மை பற்றி தொடரும்.

அந்த வினைப் பயன்களில் இருந்து விடுபடுவது என்பது எளிய காரியம் அல்ல.

"முந்தை வினை முழுவதும் ஓய உரைப்பன் யான் " என்பார் மணிவாசகப் பெருந்தகை.

வினை ஓய்ந்த பின் பிறக்கும் நூல், முதல் நூல்.

இதற்கு இலக்கணம் செய்த பெரியவர்கள்  சொல்லுகிறார்கள், முதல் நூல் என்பது  இறைவன் , உயிர்களுக்கு அளித்த நூல் என்று.

இறைவனுக்கு ஒப்பானவர்கள் எழுதிய நூல் என்று கொள்ளலாம்.

எனவே தான்,  திருக்குறள் செய்த வள்ளுவரை "தெய்வப் புலவர்" என்கிறார்.

பெரிய புராணம் செய்த சேக்கிழார் பெருமானை "தெய்வச் சேக்கிழார்" என்கிறோம்.

அந்தக் கால நூல்களை பார்த்தால் , அதில் "தெய்வப் புலவர் திருவள்ளுவர் அருளிச் செய்த " என்று போட்டிருக்கும்.

அவர்களின் அருள் அந்த நூல் மூலம் வெளிப்பட்டது.

நீங்களும் நானும் எழுதினால் என்ன போடலாம் ?

"...பொருளிச் செய்த " என்று வேண்டுமானால் போடலாம்.

மற்றவர்களுக்கு அருள் செய்ய வேண்டும் என்று யார் நூல் எழுதுகிறார்கள்?

திருக்குறள், கீதை, பெரிய புராணம், தேவாரம், பிரபந்தம் போன்றவை முதல் நூல்கள்.

அவை வெளிப்பட்ட நூல்கள்.  எந்த ஒரு காரணம் பற்றியும் வந்தவை அல்ல.

நாம் செய்த புண்ணியம், நம் தாய் மொழியில் பல முதல் நூல்கள் உள்ளன.

இது வரை படிக்க நேரம் இல்லாவிட்டாலும், இனியாவது நேரம் ஒதுக்கிப் படிக்க முயல்வோம்.

interestingtamilpoems.blogspot.com/2019/12/6_20.html


Thursday, December 19, 2019

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

விவேக சிந்தாமணி -  மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்


நாம் எப்படிப்பட்ட ஆள் ? நம் அறிவின் வீச்சு என்ன? ஆழம் என்ன? நம் திறமை என்ன ? நம் ஆளுமை (personality ) என்ன ?

இதெல்லாம் நாம் எப்படி அறிந்து கொள்கிறோம். நம்மைச் சுற்றி உள்ளவர்கள் சொல்வதில் இருந்து நாம் அறிந்து கொள்கிறோம். நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மைப் பற்றி புகழ்ந்து சொன்னால், நாம் அது சரிதான் என்று மகிழ்ச்சி அடைகிறோம். நம்மை இகழ்ந்தால், அது சரி அல்ல என்று நினைத்து, சொன்னவர் மேல் கோபம் கொள்கிறோம்.

சொல்பவர் யார் என்று பார்க வேண்டும். நம்மை விட அறிவில் தாழ்ந்தவன் நம்மை அதி புத்திசாலி என்றுதான் சொல்லுவான். அவன் சொன்னதால், அது சரி என்று ஆகி விடுமா?

ஒரு காட்டில் ஒரு கழுதை இருந்தது. அது இரவு நேரங்களில் பெரிய குரலில் கனைக்கும். அதே காட்டில் ஒரு பேய் வசித்து வந்தது. அதற்கும் பொழுது போக வேண்டாமா? அப்பப்ப இந்த கழுதை கத்துவதை கேட்க வரும். அப்படி வந்த ஒரு நாளில், அந்த பேய் சொன்னது "கழுதையே , உன் குரல் தான் எவ்வளவு இனிமையாக இருக்கிறது...நீ நன்றாகக் பாடுகிறாய் " என்றது. அதைக் கேட்ட கழுதைக்கு ஒரு மகிழ்ச்சி. நம்மை விட சிறந்த பாடகர் இந்த வையகத்தில் கிடையாது என்று எண்ணி மகிழ்ந்தது.

கழுதைக்கு பேய் கொடுத்த பட்டம் போல, நமக்கும் பலர் பட்டம் தரலாம், புகழ்ந்து சொல்லலாம்...அதை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு  பெருமை  கொள்ளக் கூடாது.  உண்மையிலேயே நம்மைவிட உயர்ந்தவர்கள் நம்மை பாராட்டும் படி வாழ வேண்டும்.

பாடல்



கழுதை கா எனக் கண்டு நின்றாடிய அலகை
தொழுது மீண்டும் அக்கழுதையைத் துதித்திட அதுதான்
பழுதிலா நமக்கு ஆர் நிகர் மெனப் பகர்தல்
முழுது மூடரை மூடர் கொண்டாடிய முறைபோல்

பொருள்


கழுதை = கழுதை

கா எனக் கண்டு = "கா" என்று கத்திய பாடியதைக் கண்டு

நின்றாடிய அலகை = நின்று ஆடிய பேய்

தொழுது = அந்தக் கழுதியை வணங்கி

மீண்டும் = மீண்டும்

அக்கழுதையைத் துதித்திட = அந்தக் கழுதையை போற்றிட

அதுதான் = அந்தக் கழுதையும்

பழுதிலா = குற்றமில்லாத

 நமக்கு = நமக்கு

ஆர் நிகர் மெனப் = யார் நிகர் ஆவார்கள் என்று

 பகர்தல் = சொல்லுவது

முழுது மூடரை  = முழு மூடரை

மூடர் கொண்டாடிய முறைபோல் = இன்னொரு மடையன் பெருமையாக சொன்னது போல

"என் மகனைப் போல உண்டா ?"

"என் மகள் பெரிய திறமைசாலி "

"என் கணவர் சகலகலா வல்லவர் "

"என் மனைவி பேரழகி "

இவற்றை எல்லாம் உண்மை என்று நம்பிக் கொண்டு திரியக் கூடாது. அவை எல்லாம் அன்பினால் சொல்லப்படுபவை, பலன் கருதி சொல்லப் படுபவை.

பெரியோரின் பாராட்டுதான் முக்கியம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_19.html


Wednesday, December 18, 2019

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6

நன்னூல் - நூலின் வகைகள் - பாகம் 6



ஒரு உணவு விடுதிக்குப் போகிறோம். அது சைவ விடுதியா, அசைவ விடுதியா, வடநாட்டு உணவகமா/தென் நாட்டு உணவகமா/ சைனீஸ் உணவகமா என்று தெரிந்தால், அங்கே என்ன கிடைக்கும் என்று நமக்குத் தெரியும் அல்லவா? ஒன்றும் தெரியாமல் உள்ளே போய்விட்டு, "ஐயோ, இது அந்த மாதிரி உணவகமா? " என்று திரும்பி வருவதை தவிர்க்கலாம்.

அது போல,

பலவிதமான நூல்கள் உள்ளன. பாடப் புத்தகம், நாவல், தின, வார, மாத இதழ்கள், ஆராய்ச்சி நூல்கள், மொழி, அறிவியல், புவியியல், கணிதம், விளையாட்டு, மதம் என்று அனைத்து துறைகளிலும் நூல்கள் இருக்கின்றன.

இந்த நூல்களை எப்படி வகைப் படுத்துவது ? ஒரு நூல் எந்த வகை நூல் என்று அறிந்து கொண்டால், அதன் தன்மை நமக்கு புரிபடும்.

நூலின் வகை தெரிந்தால், அதில் என்ன இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

உலகத்தில் உள்ள அத்தனை நூல்களையும் மூன்று விதமாக பிரிக்கலாம் அல்லது மூன்று பிரிவுக்குள் அடக்கி விடலாம் என்கிறது நன்னூல்.

அவையாவன, "மூல நூல், வழி நூல், சார்பு நூல்" என்பதாகும்


பாடல்

முதல்வழி சார்பென நூன்மூன் றாகும் . (சூத்திரம் 5)


பொருள்


முதல் = முதல் நூல்

வழி = வழி நூல்

சார் = சார்பு நூல்

பென  = என்று

நூன்மூன் றாகும்  = நூல்கள் மூன்று வகைப்படும்

சரி. அது என்ன முதல், வழி, சார்பு ?

மேலும் பார்க்க இருக்கிறோம்.


(என் குறிப்பு - தமிழ் இலக்கணம் மிக சுவையானது. ஒரு இலக்கியம் படிப்பது போல  படிக்கலாம். இருந்தும், பலருக்கு இது சலிப்பைத் தரலாம். உங்கள் எண்ணம்  என்ன என்று comment பகுதியில் பகிர்ந்து கொண்டால் மேலும் எழுதுவது பற்றி முடிவு எடுக்க  எளிதாக இருக்கும். நன்றி)

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/6.html





Tuesday, December 17, 2019

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?

திருக்குறள் - உலகம் எப்படி நிலைத்து நிற்கிறது ?


இது ஒரு ஆச்சரியமான விடயம் தான். இவ்வளவு சுயநலம், பொறாமை, போட்டி, கோபம், வன்மம், பழி வாங்கும் உணர்ச்சிகள், சாதி, மத, மொழி, நிற வேறுபாடுகள் எல்லாம் நிறைந்த இந்த உலகம் ஏன் இன்னும் அழிந்து போகாமல் இருக்கிறது ?  எது இந்த உலகை கட்டிக் காக்கிறது?

இந்தக் கேள்வியை எழுப்பி, அதற்கு  பதில் தருகிறார் வள்ளுவப் பேராசான்.

உலகில் தீயவை எவ்வளவு மலிந்தாலும், சில பண்புடையவர்கள் இருப்பதால், அவர்களை நோக்கி இந்த உலகம் இருப்பதால், அது இன்னும் அழியாமல் இருக்கிறது என்கிறார்.

பாடல்

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்மண்புக்கு மாய்வது மன்


பொருள்


பண்புடையார்ப்  = நல்ல பண்பு உள்ளவர்கள்

பட்டுண்டு = அமைந்து உள்ளது

உலகம் = இந்த உலகம்

அதுஇன்றேல் = அது இல்லாவிட்டால்

மண்புக்கு = மண்ணுக்குள் புகுந்து

மாய்வது = மாய்ந்து போவது

மன் = நிலைத்து நிற்கும் உயிர்கள்

ஒரு சமுதாயத்தில் எவ்வளவு அயோக்கியர்கள் இருந்தாலும், இந்த உலகம்  அந்த அயோக்கியர்களை விடுத்து நல்லவர்களையே   நோக்கி இருப்பதால் அது இன்னும்  அழியாமல் இருக்கிறது.


ஒரு அரசியல்வாதியோ, ஒரு தொழில் அதிபரோ எவ்வளவோ அக்கிரமங்கள் செய்து பணம், புகழ், அதிகாரம் சேர்த்தாலும், மக்கள் அவர்களை தங்கள் முன்னோடிகளாகக் கொள்வது இல்லை.

பணம், செல்வாக்கு, அதிகாரம் இல்லாவிட்டாலும், நல்லவர்களையே போற்றுகிறது. அவர்களையே தங்கள் வழி காட்டுதலாகக் கொள்கிறது.

உதாரணம்,

இராவணன் எவ்வளவோ பெரிய வலிமை உள்ளவன் தான். பக்தன், வீரன், செல்வந்தன், எல்லாம் தான். இராமன் படாத பாடு பட்டான். காடு மேடு எல்லாம்  மனைவியை பறி கொடுத்து அலைந்தான்.

யாராவது, "நான் இராவணனைப் போல வாழ ஆசைப்படுகிறேன்" என்று சொல்வார்களா?  இராமனை உலகம் போற்றுகிறது. அதனால் தான் இந்த உலகம் இன்னும் அழியாமல் இருக்கிறது.

இரண்டாவது, வள்ளுவர் பண்புடையார் பற்றித் தான் கூறுகிறார். அறிவுடையார் பட்டுண்டு உலகம் என்று கூறவில்லை. அறிவை எளிதாக பெற்று விடலாம். பண்பு என்பது கடினமான விடயம்.

மனித மனம் தீயவை நோக்கி எளிதில் செல்லக் கூடியது. அதை மாற்றி நல் வழியில் செலுத்துவது என்பது கடினமான காரியம். எனவே தான் பண்புடையாரை உயர்த்திச் சொல்கிறார் வள்ளுவர்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்ன என்றால், நல்லவர்கள், பெரியவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள் மிகக் குறைந்த பேரே இருக்கிறார்கள், இருந்தார்கள்.  அவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு தவறு நடந்து இருக்கலாம். அதை பெரிது படுத்தி, அவர்களின் மேன்மையை குறைத்து விட்டால், பின் வருங்கால சந்ததிக்கு யாரை உதாரணமாக கை காட்ட முடியும்?

ரமண மகரிஷிக்கு புற்று நோய் வந்தது ....

பாரதியார் சின்ன வயதில் போதை மருந்து உண்டார் ....

இராமன் மறைந்து இருந்து வாலியைக் கொன்றான் ...

என்று பெரியவர்களின் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை சுட்டிக் காட்டி அவர்களின் மேன்மையை குறைத்தோம் என்றால்,  பின் அடுத்த சந்ததிக்கு யாரை  உதாரணம் காட்டப் போகிறோம்?

அவர்களை போல பண்பு உள்ளவர்கள் இருப்பதால் தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது.   அவர்களையும் விட்டு விட்டால், பின் வேறு வழி இல்லை.


வாலியைக் மறைந்து நின்று கொன்றது சரியா தவறா என்று பட்டி மன்றம்.

கற்பில் சிறந்தவள் கண்ணகியா சீதையா என்று விவாதம்.

ஒருவரை உயர்த்துகிறேன் என்று மற்றவரை தாழ்த்தி சொல்லுவது. பெரியவர்களின் வாழ்க்கையை  குறைத்து மதிப்பிடுவது....இவை எல்லாம் அறிவுக்கு வேண்டுமானால்  நன்றாக இருக்கும். வாழ்க்கைக்கு நல்லது அல்ல.


எனவே, நல்ல நூல்களை, நல்லவர்களை குறை சொல்வதை விடுத்து அவற்றில் இருந்து  நாம் நல்லவற்றை கண்டு அதை கடை பிடிக்க முயல வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_17.html

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5

நன்னூல் - இரு பாயிரம் - பாகம் 5


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பாயிரம் என்றால் என்ன என்று முந்தைய பிளாகில் பார்த்தோம்.

அந்த பாயிரம் இரண்டு வகைப்படும்.


"பாயிரம் பொதுச்சிறப் பெனவிரு பாற்றே ."

அதாவது, பாயிரம் என்பது பொதுப் பாயிரம் , சிறப்புப் பாயிரம் என்று இரண்டு வகைப்படும்.


ஒரு நூலை எழுதும் ஆசிரியன், இந்த இரண்டையும் எழுத வேண்டும். அந்த நூலை வாசிக்க விரும்புபவர்கள், பாயிரத்தை மட்டும் படித்தால் போதும், அந்த நூல் தங்களுக்கு ஏற்றதா அல்லது இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியும்.

பொதுப் பாயிரம் என்றால் என்ன?

பவணந்தியார்  சொல்கிறார்.

பாடல்

நூலே நுவல்வோ னுவலுந் திறனே
கொள்வோன் கோடற் கூற்றா மைந்தும்
எல்லா நூற்கு மிவைபொதுப் பாயிரம் .


பொருள்

நூலே = அந்த புத்தகத்தின் வரலாறு, தன்மை, நோக்கம்

நுவல்வோன் = நூல் எழுதிய ஆசிரியனின் தகுதி, திறமை, அனுபவம் போன்றவை.

நுவலுந் திறனே = ஆசிரியனின் சொல்லும் திறமை.

கொள்வோன் = அந்த நூல் யாருக்கு என்று எழுதப் பட்டது

கோடற் கூற்று = மாணவன் அந்த நூலை எப்படி படிக்க வேண்டும்

ஐந்தும் = இந்த ஐந்தும்

எல்லா நூற்கு மிவை = எல்லா நூலுக்கும் இவை

பொதுப் பாயிரம் . = பொதுவானது

இந்த ஐந்தும் எல்லா நூலுக்கும் இருக்க வேண்டும்.

யோசித்துப் பாருங்கள், இவை இருந்தால் இரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு சுலபமாக இருக்கும்.

உதாரணமாக

"இந்த நூல் பொருளாதாரம் பற்றிய ஒரு அறிமுக நூல். இதை எழுதிய ஆசிரியர் பொருளாதாரத்தில் முனைவர் (doctorate) பட்டம் பெற்றவர். பல பல்கலை கழகங்களில் விரிவுரையாளராக கடந்த 20 ஆண்டுகளாக பணி புரிந்து வருபவர். இதற்கும் பொருளாதாரம் பற்றி 10 நூல்கள் எழுதி உள்ளார். இந்த நூல் 15 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உள்ளது....."

இது பாயிரத்தின் ஒரு வகை. இப்படி இருந்தால் ஒரு நூலை தேர்ந்து எடுப்பது எவ்வளவு எளிதாக இருக்கும்?

நமக்குத் தேவை அல்லாத, அல்லது பொருந்தாத புத்தகத்தை வாங்குவதனால், வீணான பண விரயம் மட்டும் அல்ல, அதை படிப்பதின் மூலம்  நம் நேரமும் விரயம் ஆகும். அதை படிக்கும் நேரத்தில் இன்னொரு நல்ல நூலை படித்து இருக்கலாம். அதுவம் போச்சும்.

மற்றொன்று, இன்று ஒரு நூலை பார்த்து அதை நகல் எடுத்த மாதிரி எழுதும் போக்கு இருக்கிறது.  இன்னொருவரின் கற்பனையை, உழைப்பை தன்னது மாதிரி  எடுத்து எழுதி விடுகிறார்கள். நூல் ஆசிரியனின் தன்மை தெரிந்தால் அதை ஓரளவுக்கு நாம்  தடுக்க முடியும். Plagiarism என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள்

மற்றது, தவறானவற்றை எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று காட்டிக் கொள்ள மாட்டார்கள். மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதுபவர்கள் தாங்கள் யார் என்று  வெளிப்படையாக சொல்வது கிடையாது. மலிவான செய்திகளை, மலிவான நோக்கத்தோடு எழுதுபவர்கள் தங்களை ஏன் வெளிக் காட்டிக் கொள்ளப் போகிறார்கள்?

பொதுப் பாயிரம் என்பது ஒரு நூலின் முழுத் தன்மையையும் நமக்கு ஒரு சில பக்கங்களில்  தந்து விடும்.

ஒரு நூலுக்கு இலக்கணம் வகுக்க வேண்டும் என்றால், அதற்கு முன் எவ்வளவு நூல் அந்த மொழியில் வந்திருக்க வேண்டும்?    அதில்  நல்ல நூல் எது, அல்லாதது எது   இனம் கண்டு, ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் வகுத்திருக்கிறார்கள் என்றால்  இந்த மொழியின் தொன்மை, ஆழம்,வீச்சு  பற்றி   நாம் எவ்வளவு பெருமை படலாம்.

நம் பெருமை தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/5.html


Sunday, December 15, 2019

விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில்

விவேக சிந்தாமணி - ஈனருக்கு உரைத்திடில் 


ஒரு ஊரில் ஒரு தூக்கணாம் குருவி இருந்தது. அது ஒரு மரத்தில் கூடு கட்டி வாழ்ந்து வந்தது. அப்படி இருக்கும் போது ஒரு நாள் பெரு மழை வந்தது. குருவிக்கு ஒரு பயமும் இல்லை. தான் கட்டிய கூட்டில் அது சுகமாக இருந்தது. கூட்டில் இருந்து அது வெளியே எட்டிப் பார்த்த போது, அந்த மரத்தில் ஒரு குரங்கு இருந்தது தெரிய வந்தது. அந்தக் குரங்கு மழையில் நனைந்து  , குளிரில் நடுங்கியபடி இருந்தது.

அதன் மேல் இரக்கப்பட்டு, அந்த தூக்கணாம் குருவி "ஏ குரங்கே..நீ ஏன் இப்படி மழையில் துன்பப் படுகிறாய். என்னை போல் ஒரு கூடு கட்டிக் கொண்டு சுகமாக வாழலாம் தானே...நான் உனக்கு கூடு கட்டச் சொல்லித் தருகிறேன் " என்றது.

அதைக் கேட்ட குரங்குக்கு கடுமையான கோபம் வந்தது.

"போடா ஊசி மூஞ்சி மூடா...நீயா எனக்கு புத்தி சொல்வது " என்று வெகுண்டு, அந்த தூக்கணாங் குருவி கூட்டை பிய்த்து எரிந்து விட்டது.

கீழானவர்களுக்கு உயர்ந்த கருத்தைச் சொன்னால், இதுதான் நிகழும் என்கிறது விவேக சிந்தாமணி.

பாடல்

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்
தானொரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்
ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே! 


பொருள்

வானரம் = குரங்கு

மழைதனில் நனையத் = மழையில் நனைய

தூக்கணம் = தூக்கணாம் குருவி

தானொரு  = தான் ஒரு

நெறிசொலத் = வழி சொல்ல

தாண்டி பிய்த்திடும் = குதித்து வந்து பிய்த்து போடும்

ஞானமும் = ஞானமும்

கல்வியும் = கல்வியும்

நவின்ற நூல்களும் = நல்ல நூல்களும்

ஈனருக்கு உரைத்திடில் = கீழானவர்களுக்கு சொன்னால்

இடர்அது ஆகுமே!  = அது துன்பத்தில் போய் முடியும்


உயர்ந்த நூல்களின் அர்த்தம் புரியாமல், அதன் நோக்கம் புரியாமல், அதைத் தரக்குறைவாக விமர்சிப்பவர்கள்,  அதை கிண்டல் செய்பவர்கள், அதைப் பற்றி குதர்க்கமாக   கேள்வி கேட்டு கேலி செய்பவர்கள் எல்லாமே அந்த ஈனர் கூட்டத்தில்  சேர்வார்கள்.

புரியவில்லை என்றால் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். கிண்டல் செய்வதும், குதர்க்கம் பேசுவதும் நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளும் வழியின்றி வேறில்லை.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_15.html

Friday, December 13, 2019

நன்னூல் - பாயிரம் - பாகம் 3

நன்னூல் - பாயிரம் - பாகம் 3


ஒரு நல்ல நூல் எப்படி இருக்க வேண்டும் என்று நன்னூல் சொல்கிறது. ஒரு நல்ல நூலின் கூறுகள், அல்லது பகுதிகள் என்ன என்ன என்று பட்டியல் தருகிறது. அவற்றின் மூலம், அந்த புத்தகம் நமக்குத் தேவையா இல்லையா, யார் இதைப் படிக்கலாம் என்றெல்லாம் புரிந்து கொள்ள முடியும்.

அந்த கூறுகள் அடங்கிய பாடலை முதலில் பார்த்தோம். அது கீழே உள்ளது.


பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

அதில் உள்ள முதல் வரி 

"நூலின் இயல்பே நுவலின் இரு பாயிரம் தோற்றி"

அது என்ன இரு பாயிரம் ?

பாயிரம் என்பது ஒரு நூலுக்கு முன்னுரை போல. அப்படிச் சொன்னால் போதுமா ? சரியான விளக்கம் வேண்டும் அல்லவா.

பாயிரம் என்றால் என்ன என்று சொல்லுகிறார் பவணந்தியார் 

முகவுரை, பதிகம், அணிந்துரை, நூல்முகம், புறவுரை, தந்துரை, புனைந்துரை என்பது பாயிரம். 

இது என்னடா, வார்த்தைக்கு அர்த்தம் கேட்டால், அதை விட கடினமான வார்த்தைகளில் அர்த்தம் சொன்னால் என்ன செய்வது என்று திகைக்க வேண்டாம். 

எளிமைப் படுத்துவோம்.

பாடல் 

முகவுரை பதிக மணிந்துரை நூன்முகம்

புறவுரை தந்துரை புனைந்துரை பாயிரம் .

பொருள் 


முகவுரை = நூலின் முன் பகுதி. முதலில் நூலை நமக்கு அறிமுகப் படுத்தும் பகுதி. அதை நூல்முகம் என்றும் கூறுவார்கள். 

பதிக = ஒரு நூலில் பொதுவான மற்றும் சிறப்பான பகுதிகள்  என்னென்ன என்று எடுத்துக் கூறுவது 

மணிந்துரை = அணிந்துரை = நூலின் சிறப்பை பற்றிக் கூறுவது 

நூன்முகம் =அல்லது முகவுரை. இதை புனைந்துரை என்றும் கூறுவர்.


புறவுரை = நூல் எதைப் பற்றி சொல்லாது என்று சொல்வது. அதாவது, இந்த நூல் எந்த எல்லை வரை போகும் என்று கூறுவது. 

தந்துரை = நூலில் இல்லாத சிலவற்றை பொருள் விளங்க வேண்டி, அவற்றை விளக்கிக் கூறுவது. உதாரணமாக, ஒரு இயற்பியல் (physics ) புத்தகத்தில் சில வேதியல் (chemistry ) பற்றி கூறுவது. அது இயற்பியலுக்கு சம்பந்தம் இருப்பதால். 

புனைந்துரை = நூல் முகம் 

பாயிரம்  = இவையே பாயிரம் எனப்படும். 


அதாவது நூலின் நோக்கம், அதன் சிறப்பு, அதன் எல்லை, அது எதை பற்றி எழுதப் பட்டது, என்று முதலில் கூறுவது பாயிரம்.

பாயிரத்தைப் படித்தாலே, அந்த நூலைப் பற்றி நமக்கு ஒரு எண்ணம் தோன்றும்.

இது நமக்கு ஏற்ற நூல் தானா, இதை நாம் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்து கொள்ளலாம்.

முழு நூலையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. எளிதாக தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.

எவ்வ்ளவு நேரம் மிச்சமாகும் என்று நினைத்துப் பாருங்கள்?

ஒரு நூலின், அறிமுகம் எப்படி இருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்து தந்து இருக்கிறார்கள்.

அடுத்த முறை ஏதாவது ஒரு புத்தகம் வாங்க வேண்டும் நினைத்தால், அதன் முன்பகுதியைப் படியுங்கள்.  இதில் சொன்ன எல்லாம் அதில் இல்லாமல் போகலாம். ஆனால், நமக்கு ஒரு பிடி கிடைக்கும்.

ஆங்கிலத்தில் Foreward கூறுவார்களே அது.

சரி, பாயிரம் என்றால் என்ன என்று புரிகிறது. அது என்ன "இரு பாயிரம்" ?

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_13.html

Thursday, December 12, 2019

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108

நாலாயிர திவ்ய பிரபந்தம் - கள்ளம்மனம் விள்ளும்வகை - 108 



கோவிலுக்குப் போவது, இறைவனை தொழுவது, அப்படி தொழுதால் நமக்கு வேண்டியது கிடைக்கும் என்பதெல்லாம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாத ஒன்று.

யாரோ ஒருவர் எங்கோ இருந்து கொண்டு, நான் எழுதிய பரீட்சையில் எனக்கு நிறைய மதிப்பெண் பெற்றுத் தருவார், எனக்கு வேலை வாய்ப்பை கொண்டு தருவார், என் பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய ஏற்பாடு செய்வார் என்று நினைப்பதெல்லாம் ஒரு நம்பிக்கை, ஒரு மன அமைதிக்காக இருக்கலாமே அன்றி அது முழுக்க முழுக்க உண்மை என்று அதை நம்புபவர்களே கூட ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

அப்படியே இறைவன் ஒருவன் இருக்கிறான் என்று ஏற்றுக் கொண்டாலும், அவனுக்குத்தான் எல்லாம் தெரியுமே. நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியாதா? எதுக்கு அனாவசியமா போய் வேண்ட வேண்டும். பிள்ளைக்கு என்ன வேண்டும் என்று தாய்க்குத் தெரியாதா? அம்மா என் பசிக்கு உணவு தா என்று எந்த பிள்ளையும் தாயிடம் சென்று வேண்டுவது இல்லையே.

பின் எதற்காக கோவில், இறை வணக்கம் எல்லாம்?

நம்  மனதில் சில பல அழுக்குகள் இருக்கின்றனதானே ? அழுக்கே இல்லாத மனம் யாருக்கு இருக்கிறது? கொஞ்சம் கோபம், கொஞ்சம் பொருந்தா காமம்,  அந்தப் பக்கம் பொறாமை, இந்தப் பக்கம் வஞ்சம், என்று ஆயிரம் மன அழுக்குகள் இருக்கின்றதானே?

அவற்றைப் போக்கும் படி இறைவனை வேண்ட வேண்டும் என்கிறார் திருமங்கை ஆழ்வார், பெரிய திருமொழியில்.

இறைவனே இருக்கிறானா இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரியாத போது , நம் மன அழுக்கை நீக்க அவனை ஏன் நாட வேண்டும்?

வேண்டாம்தான். அவன் செய்கிறானோ இல்லையோ, என்னிடம் இந்த இனித்த அழுக்குகள்  இருக்கின்றன, அதை மாற்றித்தா என்று வேண்டும் போது, நமக்குள் ஒரு விழிப்புணர்வு (awareness ) ஏற்படுகிறது.

நம்மிடம் உள்ள குற்றத்தை , அழுக்கை நாம் அறிந்து கொள்ளும் போது, அதை வெளிப்படையாக  ஏற்றுக் கொள்ளும் போது,  அடுத்த கட்டம் அது தானே மாறி விடும்.

ஆங்கிலத்தில் "Awareness brings its own change" என்று சொல்லுவார்கள்.

எப்போது நமக்கு நம் குறைகள் தெரியத் தொடங்குகிறதோ, அதை மாற்ற வேண்டும் என்ற எண்ணம்  வருகிறதோ, அப்போதே நாம் அந்த குறைகளில் இருந்து மெல்ல மெல்ல  வெளியே வரத் தொடங்குவோம்.

அதற்காகவேணும் , இறைவனைத்  தொழலாம்.அது ஒரு குறியீடு. அவ்வளவுதான்.


பாடல்

கள்ளம்மனம் விள்ளும்வகை கருதிக்கழல் தொழுவீர்வெள்ளம்முது பரவைத்திரை விரிய,கரை யெங்கும்தெள்ளும்மணி திகழும்சிறு புலியூர்ச்சல சயனத்துள்ளும்,என துள்ளத்துளு முறைவாரையுள் ளீரே.



பொருள்

கள்ளம் மனம் = கள்ளம் நிறைந்த மனம். குற்றம், அழுக்குகள்  நிறைந்த மனம்.

விள்ளும் வகை  = அதில் இருந்து விடுபடும் வகை

கருதிக் = நினைத்து

கழல் தொழுவீர் = அவன் திருவடிகளைத் தொழுவீர்

வெள்ளம் = நீர், அதிகமான நீர் நிறைந்த

முது பரவைத் = பழைய கடல்

 திரை விரிய = அலை அடிக்க

கரை யெங்கும் = கரை எல்லாம்

தெள்ளும் மணி திகழும் = கொழித்துக் கிடக்கும் மணிகள் நிறைந்த

சிறு புலியூர்ச் = சிறு புலியூர்

சல சயனத் துள்ளும் = சல (நீர்) சயனத்திலும் (தூக்கத்தில்)

என துள்ளத்துளும்  = எனது உள்ளத்தின் உள்ளும்

முறைவாரை = உறைவாரை , இருப்பவரை

யுள் ளீரே. = நீங்கள் நினையுங்கள்

சிறுபுலியூர்.

108 திவ்ய தேசங்களில் ஒன்று. 11 - ஆவது தேசம்.

நாக பட்டினத்துக்கும், மாயவரத்துக்கும் நடுவில் உள்ளது. மாயவரம் (மயிலாடுதுறை)  போனால், அங்கிருந்து ஒரு வாடகை காரில் போய் விட்டு வந்து விடலாம். சின்ன கிராமம். அழகான கோவில்.

பெருமாள் பால சயனத்தில் இருக்கும் கோலம்.

தெற்கு நோக்கிய சயனம் (இது ஒன்று, ஸ்ரீ ரங்கம் மற்றது).

திருமங்கை ஆழ்வார் மங்களா சாசனம் செய்த திவ்ய தேசம். பத்து பாடல்கள் பாடி இருக்கிறார். தேன் சொட்டும் பிரபந்தங்கள். மற்றவற்றைப் படித்துப் பாருங்கள்.

கள்ள மனம் மாறும்.

ஒரு முறை கருடனுக்கும், ஆதி சேஷனுக்கும் சண்டை வந்ததாம். பெருமாளுக்கு  சேவை செய்வதில் யார் சிறந்தவர் என்று. அந்த சண்டையை பெருமாள் இந்த த் திருத்தலத்தில் வைத்து சமரசம் செய்து வைத்தாராம்.

இங்கே ஆதி சேஷனுக்கு நில மட்டத்துக்கு அடியில் சன்னிதானம் இருக்கிறது.

ஒரு சனி ஞாயிற்றுக் கிழமை , ஒரு எட்டு போயிட்டு வரலாம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/108.html

Tuesday, December 10, 2019

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு - பாகம் 2

நன்னூல் - நல்ல நூலின் இயல்பு  - பாகம் 2


ஒரு நல்ல நூலுக்கு இலக்கணம் என்ன? ஒரு நூல் எப்படி அமைய வேண்டும் என்று ஆராய்ந்து அதற்கு ஒரு வழி வகுத்து இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் என்றால் எப்படி இருக்க வேண்டும் ?

இரண்டு கண், ஒரு மூக்கு, இரண்டு காது, ஒரு வாய், அதில் 32 பற்கள் என்று ஒரு வரை முறை இருக்கிறது அல்லவா?

அது போல ஒரு நூலின் வரை முறை என்ன என்று சொல்கிறார் பவணந்தியார்.

பாடல்

நூலி னியல்பே நுவலி னோரிரு
பாயிரந் தோற்றி மும்மையி னொன்றாய்
நாற்பொருட் பயத்தோ டெழுமதந் தழுவி
ஐயிரு குற்றமு மகற்றியம் மாட்சியோ
டெண்ணான் குத்தியி னோத்துப் படலம்
என்னு முறுப்பினிற் சூத்திரங் காண்டிகை
விருத்தி யாகும் விகற்பநடை பெறுமே .

பொருள்

நூலி னியல்பே = நூலின் இயல்பு, அதாவது தன்மை

நுவலின்= கூறுவது என்றால்

ஓரிரு = ஒன்று அல்லது இரண்டு

பாயிரந் தோற்றி = பாயிரம் கூறி

மும்மையி னொன்றாய் = மூன்று வகை நூல்களில் ஒன்றாக

நாற்பொருட் பயத்தோடு = நான்கு  பயன்களைத் தந்து

எழுமதந் தழுவி = ஏழு மதங்களை தழுவி

ஐயிரு குற்றமு மகற்றி = பத்து விதமான குற்றங்களை நீக்கி

அம் மாட்சியோடு  = அந்த பாங்கோடு

என் நான்கு உத்தியின் =  32 (8 x 4) உத்திகளோடு

ஓத்துப் படலம் = ஓத்துப் படலம்

என்னு முறுப்பினிற் = என்ற இரு உறுப்புகளைக் ஒண்டு

சூத்திரங் = சூத்திரம்

காண்டிகை = காண்டிகை

விருத்தி யாகும் = விருத்தியாகும்

விகற்ப = விகற்பம்

நடை பெறுமே . = பெற்று நடை தொடரும்

ஒரு நூல் என்றால் இத்தனையும் இருக்க வேண்டும்.

பாதிக்கு மேல் நமக்கு ஒன்றும் புரியவில்லை.

இதெல்லாம் கேள்விப் பட்டதே இல்லையே.

நன்னூல் எழுதிய பவணந்தி முனிவர், ஒவ்வொரு வரியையும் பின்னால் விளக்குகிறார்.

அனைத்தையும் படிக்க இருக்கிறோம்.

ஒவ்வொரு வரிக்கும் ஒரு சூத்திரம் எழுதி இருக்கிறார்.

எவ்வளவு நுட்பமாக சிந்தித்து இருக்கிறார்கள்.

தமிழ் படிப்பதை விடுங்கள், அதில் ஒரு நூலை படித்து முடிக்கவே ஒரு ஆயுள் காலம் போதாது.  இதில் மற்றவற்றை படிக்க எங்கே நேரம் இருக்கப் போகிறது?


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/2.html


Sunday, December 8, 2019

நன்னூல் - ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

நன்னூல்  -  ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டும் ? - பாகம் 1

இப்போதெல்லாம் கோடிக் கணக்கில் புத்தகங்கள் வருகின்றன. நாள் இதழ், வார இதழ், மாத இதழ், நாவல்கள்,கவிதைகள், கட்டுரைகள், இலக்கியங்கள், அறிவியல், வரலாறு, விளையாட்டு, கணிதம், சமையல் என்று எல்லா துறைகளிலும் நூல்கள் வருகின்றன. 

எதைப் படிப்பது, எதை விடுவது? 

இருக்கும் நாட்களோ கொஞ்சம். அதில் ஆயிரம் வேலை இருக்கிறது. இதில், படிப்பதற்கு என்று உள்ள நேரம் மிக மிகக் குறைவு. அந்த நேரத்தில் படித்து அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், நாம் தேர்ந்து எடுக்கும் நூல்கள் சிறந்ததாக இருக்க வேண்டும் அல்லவா?

சிறந்த நூல் என்றால் என்ன? அதன் இலக்கணம் என்ன? எப்படி சிறந்த நூலை தேர்ந்து எடுப்பது?

ஒரு புத்தகத்தை எடுத்தால் இது நமக்கு உதவுமா இல்லையா என்று எப்படி கண்டு பிடிப்பது? நாம் கண்டு பிடிக்க அந்த நூல் ஆசிரியர், அந்த நூலை பதிப்பித்தவர் எல்லாம் என்ன செய்ய வேண்டும்? 

இதை எல்லாம் யோசித்து அதற்கு முறை செய்து வைத்திருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இல்லையா?

அது பற்றி சிந்திக்க இருக்கிறோம். 

நன்னூல் என்ற இலக்கண நூலில் இருக்கிறது.

படிக்கும் ஆர்வம் உண்டு என்றால், இந்த blog இந்த comment பகுதியில் "yes" அல்லது  "ஆமாம்" என்று  type செய்து "post it " பட்டனை அழுத்தவும்.

உங்கள் பேரைச் சொல்ல விருப்பம் இல்லை என்றால், you can post as Annonymous.

எத்தனை பேருக்கு தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் ஒரு சின்ன  முயற்சி இது. அவ்வளவுதான். 

Friday, December 6, 2019

திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்

திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்


சமீப காலத்தில் திருவள்ளுவர் பெரிய சர்ச்சைக்குரிய பொருளாக மாறி இருக்கிறார். இன்றைய அரசியல் வள்ளுவரையும் விடவில்லை.

வள்ளுவர் இந்துவா, இல்லை நாத்திகரா அல்லது பிற மதத்தைத் சார்தவரா என்பது விவாதத்தின் பொருள்.

இந்து என்றால், எந்தப் பிரிவைச் சேர்த்தவர் என்று அடுத்த பிரச்சனை வரும்.

அவரவர் தங்கள் பக்கத்துக்கு ஞாயம் சேர்க்க, திருக்குறளில் இருந்து ஓரிரு குறள்களை எடுத்து உதாரணம் சொல்கிறார்கள்.

அப்படி சொல்லப்படும் உதாரணங்களில், கீழே உள்ள குறளும் ஒன்று.

"மறந்தால் கூட பின், படித்துக் கொள்ளலலாம். ஆனால், பார்ப்பனர் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து தவறி விட்டால் பின் அதை சரி செய்ய முடியாது "

என்கிறார்.

பாடல்

மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

பொருள்

மறப்பினும் = மறந்தால் கூட

ஒத்துக் கொளல்ஆகும் = மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஓதுதல் என்றால் மீண்டும் மீண்டும் படித்து, ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் என்று பொருள். "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்".

பார்ப்பான் = அந்தணர்

பிறப்பு ஒழுக்கம் = பிறவியில் வந்த ஒழுக்கம்

குன்றக் கெடும் = குறைந்தால், அது கெட்டுப் போகும்.

எது கெட்டுப் போகும் ? பிறப்பினால் வந்த பெருமை, ஒழுக்கம் குறைந்தால்  அந்தப் பெருமை  குன்றி விடும் என்கிறார்.

படித்த வேதத்தை மறந்தால் கூட, மீண்டும் படித்துக் கொள்ளலாம். அதன் மூலம் இழந்த கௌரவத்தை மீண்டும் பெற்று விடலாம்.  ஆனால், ஒழுக்கம் குறைந்தால், பின் அதை மீண்டும் பெறவே முடியாது என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார்.

ஆஹா, வள்ளுவரே பார்ப்பனர்களின் குடி பெருமையை பற்றி கூறிவிட்டார். எனவே, அவரும் ஒரு பார்ப்பனர்தான், அல்லது இந்துதான் என்று சிலர் கூறத்  தலைப்பட்டு   இருக்கிறார்கள்.

திருக்குறள் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது நாம் முதலில் ஒன்றை மிக மிக  தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.

நாம் அந்த நூல்களின் தரத்திற்கு நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமே அல்லாது, அந்த நூல்களை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது. 

வள்ளுவருக்கு மத, சாதி வர்ணம் பூசுவது, அந்த நூலை நம் நிலைக்கு கீழே கொண்டு வரும் முயற்சி.

செய்யலாம். அதனால் அந்த நூலுக்கோ, வள்ளுவருக்கோ ஒரு துன்பமும் இல்லை. நாம் தான், முன்னேறும் ஒரு வாய்ப்பை இழந்து நிற்போம்.

இரண்டாவது, குறள் , கீதை போன்ற நூல்களை நாம் படிக்கும் முறையே தவறு. குறளைப் படித்து, அதில் உள்ள கடின சொற்களுக்கு அகராதியில் அர்த்தம் கண்டு பிடித்து பொருள் கொள்வது சிறந்த முறை அல்ல.

சொல்லில் இருந்து பொருளுக்கு போகும் முறை சரி அல்ல.

பரிமேலழகர் போன்ற அறிஞர்கள் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு குறளின் பொருள் தெரியும். அந்த பொருளுக்கு குறளின் சொற்கள் எப்படி பொருந்துகின்றன   என்று சொல்லுவார்கள்.

இந்த குறளுக்கு பரிமேலழலகர் உரை எழுதி இருக்கிறார்.

நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

"சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்"

என்று கூறுகிறார்.

அதாவது, ஒரு வர்ணத்துக்கு கூறினால் அது மற்ற வர்ணத்துக்கும் பொருந்தும்  என்று கொள்ளவேண்டும் என்கிறார்.


ஒழுக்கம் என்பது எல்லா வர்ணத்துக்கும் பொது. அந்தந்த வர்ணத்துக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அதை மறந்து விட்டால் கூட பரவாயில்லை. எவரும், தங்களுக்கு விதித்த ஒழுக்கத்தை மறந்து விடக் கூடாது என்கிறார்.


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்  வைசியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் சத்ரியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்


என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். ஒன்றைச் சொன்னால், மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும்  என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.

இதில், வள்ளுவர் அந்தணர்களை மட்டும்  கூறினார் என்று சொல்வதற்கு எங்கே இடம் இருக்கிறது?

நான் முன்பே கூறியது போல, பெரிய நூல்களை படித்து நாம் நம் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும்.  அதை விடுத்து அந்த நூலை, அந்த நூலை எழுதிய  ஆசிரியரை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.

வள்ளுவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.

அவர் என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்.

அரசியல் பேசி, வள்ளுவரை இழந்து விட்டால், நட்டம் அவருக்கு அல்ல.

திருக்குறளை அறிய வேண்டும் என்றால், படிக்க வேண்டியது பரிமேலழகரை. உள்ளூர் பேச்சாளர்களை அல்ல.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_6.html


Wednesday, December 4, 2019

கவிதையின் இலக்கணம் - நன்னூல்

கவிதையின் இலக்கணம் - நன்னூல் 


கவிதை  என்றால் எப்படி இருக்க வேண்டும்? எது  கவிதை?

இன்று புதுக்கவிதை, மரபுக் கவிதை என்றெல்லாம் பேசிக் கொள்கிறார்கள். வார்த்தைகளை மடக்கிப் போட்டு, இது தான் கவிதை என்கிறார்கள்.

யாப்பு இலக்கணத்தில் அமைந்து விட்டால் மட்டும் கவிதை என்று சொல்ல முடியுமா?

நன்னூல் சொல்கிறது கவிதை எப்படி இருக்க வேண்டும் என்று.

"சில சொற்களில், பலவிதமான பொருள்களை, சிறப்பான ஒரு கண்ணாடியில், துல்லியமாக காட்டுவது போல திடமாக, நுட்பமாக சிறப்பாக சொல்வது கவிதை"

பாடல்

சில்வகை எழுத்தில் பல்வகைப் பொருளைச்
செவ்வன் ஆடியிற் செறித்தினிது விளக்கித்
திட்ப நுட்பஞ் சிறந்தன சூத்திரம்

பொருள்

சில்வகை எழுத்தில் = சில எழுத்துகளில் (சொல் கூட இல்லை, எழுத்தில்)

பல்வகைப் பொருளைச் = பல விதமான பொருளை

செவ்வன் = சிறப்பான

ஆடியிற் = கண்ணாடியில்

செறித்தினிது = நுணுக்கமாக அழகாக

விளக்கித் = விளக்கித்

திட்ப = திடமாக

நுட்பஞ் = நுட்பமாக

சிறந்தன = சிறந்த வழியில் சொல்வது

சூத்திரம் = சூத்திரம் அல்லது கவிதை


அது என்ன கண்ணாடி?

ஒரு பெரிய மரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதை சற்று தூரத்தில் நின்று ஒரு சின்ன கண்ணாடியில் முழுவதும் பார்க்க முடியும். அந்தக் கண்ணாடி தெளிவாக இருந்தால், மரத்தின் அத்தனை நுணுக்கங்களையும் அதில் காண முடியும். கண்ணாடி என்னவோ சின்னதுதான். ஆனால், பெரிய மரத்தை அது தன்னுள் அடக்கிக் காட்டுகிறது.

சுருக்கி மட்டும் அல்ல, நுணுக்கங்களையும் தெளிவாக காட்டும்.

அது போல, கவிதை பெரிய விஷயங்களை சில சொற்களில் தெளிவாக சொல்ல வேண்டும்.

அது மட்டும் அல்ல, கவிதை எதைச் சொல்ல வருகிறதோ, அதை உறுதியாக சொல்ல வேண்டும் . குழப்பக் கூடாது.

நுட்பமாகச் சொல்ல வேண்டும். உணர்வுகளை, அறத்தை நுட்பமாக எடுத்துச் சொல்ல வேண்டும்.

இவ்வளவும் இருந்தால் மட்டும் போதாது, கேட்கவும் இனிமையாக இருக்க வேண்டும்.

பொதுவாக, அது சிறப்பாக இருக்க வேண்டும்.

கவிதை என்றால் அப்படி இருக்க வேண்டும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_4.html

Tuesday, December 3, 2019

திருக்குறள் - வாய்ச் சொல்

திருக்குறள் - வாய்ச் சொல்


எது சரி,  எது தவறு என்று நாம் குழம்பும் நேரம் வரும்.

"அவளுக்கு என்னதான் வேணும்னே தெரியல. என்ன செஞ்சாலும் ஏதாவது குத்தம் சொல்லிகிட்டே இருக்கா .."

"அவருக்கு என் மேல் அன்பே இல்ல...என்னமோ வாழ்க்கை ஓடுது...என்ன செய்றதுன்னே தெரியல ... "

"இந்த பிள்ளைகள் இப்படி நன்றி இல்லாமல், தவிக்க விட்டு விட்டு போய் விட்டார்களே "

இப்ப என்ன செய்வது என்ற குழப்பம் வரும் நேரங்கள் உண்டு. சிக்கலான சமயத்தில்  எப்படி முடிவு எடுப்பது? யாரைக் கேட்பது ? நமக்கு நாமே சிந்தித்துக் கொண்டிருந்தால் குழப்பம் மேலும் அதிகம் ஆகுமே அன்றி குறையாது.

சரி, யாரிடமாவது என்று யோசனை கேட்கலாம் என்றால், யாரைக் கேட்பது? யார் நமக்கு சரியான வழிக்காட்டுதலை தருவார்கள் என்று நினைப்போம்.

வாழ்வில் சிக்கல் வரும்போது யாரிடம் அறிவுரை கேட்க வேண்டும் என்று வள்ளுவர் சொல்லித் தருகிறார்.

நடந்து செல்லும் நிலம் வழுக்கினால், கையில் உள்ள ஊன்று கோல் எப்படி நமக்கு உதவி செய்யுமோ, அது போல ஒழுக்கமுடையார் வாய் சொல் இருக்கும் என்கிறார்.


பாடல்

இழுக்கல் உடையுழி ஊற்றுகோல் அற்றேஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்



பொருள்


இழுக்கல் = வழுக்கும் தன்மையுடைய நிலத்தில்

உடையுழி = செல்லும் போது

ஊற்றுகோல் = ஊன்று கோல் போல்

அற்றே = உள்ளது போன்றது

ஒழுக்கம் உடையார் = ஒழுக்கம் உடையவர்

வாய்ச் சொல் = வாயில் இருந்து பிறக்கும் சொற்கள்

"அறிவுடையவர் வாய் சொல்", "படித்தவர் வாய்ச் சொல் " என்று சொல்லவில்லை. ஒழுக்கம் உடையார் என்று சொல்லை தேர்ந்து எடுத்துப் போடுகிறார்  வள்ளுவர்.  படிப்பறிவு சில சமயம் குறுக்கு வழியில் கூட போகும். அதனால்தான் ஒழுக்கம் உடையவர் வாய்ச் சொல்லை கேட்க்கச் சொன்னார்.

யாரும் வேண்டும் என்றே வழுக்கும் இடத்துக்குப் போக மாட்டார்கள். போகிற இடத்தில்  தரை வழுக்கினால் என்ன செய்வது? எப்படி விறைப்பாக நின்றாலும் வழுக்கும், கீழே விழ நேரிடும். என்ன செய்வது? ஊன்று கோல் இருந்தால் கீழே விழுந்து அடி படாமல் தப்பித்துக் கொள்ளலாம். ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல் அப்படிப்பட்டது. நாம் தவறி விழுவதில் இருந்து நம்மை காக்க உதவும்.

"வாய்ச் சொல்" என்று ஏன் கூறுகிறார்? அவர்களிடம் இருந்து நேரே கேட்க வேண்டும். அவர் சொல்லி, மற்றவர் கேட்டு, அவர் இன்னொருவரிடம் சொல்லி  , இப்படி பல பேரை தாண்டி வந்தால் ஒழுக்கம் உடையவர் சொன்னது  கடைசியில் மாறிப் போய் இருக்கும்.

இன்று உள்ள பல சமயங்களைப் பார்த்தால் தெரியும். யாரோ,எப்போதோ சொன்னதை, அவர்களுடைய சீடர்கள் கேட்டு, அந்த சீடர்கள் அடுத்த தலைமுறை சீடர்களுக்குச் சொல்லி, பின் அவர்கள் மற்றவர்களிடம் சொல்லி , பலப் பல தலை முறைகள் கடந்து அவர்கள் சொன்னது இன்றைய தலைமுறையை வந்து அடைகிறது. முதலில் சொன்னது அப்படியே வந்து சேர்ந்து இருக்குமா?

"ஒழுக்கம் உடையார்". சொல்பவன் எப்படி இருந்தால் என்ன? என்ன சொல்கிறான் என்பது தானே முக்கியம் என்று கேட்கலாம். இல்லை, சொல்பவன் ஒழுக்கமாக  இருந்தால் தான் அவன் சொல்வதை கேட்க வேண்டும் என்கிறார்.  ஒழுக்கம் இல்லாதவன் சொல்வதை கேட்பது பலன் தராது  என்பது பொருள்.

நீங்கள் யார் பேச்சை கேட்கிறீர்கள் என்று ஆராய்ச்சி செய்யுங்கள். நீங்கள்  யார் பேச்சை கேட்கிறீர்களோ , அவர்கள் ஒழுக்கம் உள்ளவர்கள்தானா என்று உங்களுக்குத் தெரியுமா ?

சிந்தியுங்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post.html