Thursday, December 26, 2019

கம்ப இராமாயணம் - இராவணனார் காதலும்

கம்ப இராமாயணம் - இராவணனார் காதலும்


கம்ப இராமாயணம் முடியும் இடம் வந்து விட்டது. போர் முடிந்து, இராவணன் இறந்து கிடக்கிறான். அவன் மனைவி மண்டோதரி போர்க் களம் வந்து, இராவணன் மேல் விழுந்து புலம்புகிறாள்.

பத்தாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி ஆகி விட்டது. கம்பனின் எழுத்தாணி சோர்ந்து போயிருக்கும் என்று நாம் நினைப்போம்.

பத்தாயிரம் பாடல் எழுதுவது என்றால் சாதாரணமா? இப்போது மாதிரி அல்ல, எழுதி பார்த்து சரி இல்லை என்றால் காகிதத்தை கசக்கி குப்பையில் போட்டு விட்டு இன்னொரு பக்கத்தில் எழுதத் தொடங்கலாம். அல்லது, கணனி என்றால் எடிட் பண்ணிக் கொள்ளலாம்.

கம்பன் எழுதிய காலத்தில் ஓலைச் சுவடிதான் இருந்திருக்கும். ஒரு சோர்வும், சலிப்பும், ஆயாசமும் வந்திருக்கலாம் அல்லவா?

அது தான் இல்லை.

முதல் பாடல் எழுதிய அதே கற்பனை வளம், எழுத்து வன்மை, உணர்ச்சிகளை படம் பிடிக்கும் துல்லியம்...கொஞ்சம் கூட குறையாமல் எழுதுகிறான் கம்பன்.

சாத்தியமா? சிந்தித்துப் பாருங்கள்.

இராவணன் இறந்து கிடக்கிறான்.  இராமன், அவனை கொன்று விட்டான். இராமன் எவ்வளவுதான் பெரிய ஆளாக இருந்தாலும், மண்டோதரிக்கு இராமனை பாராட்ட மனம் வரவில்லை. தன் கணவனை கொன்றவனை பாராட்ட எந்த மனைவிக்குத்தான் மனம் வரும். இருந்தும், அப்பேற்பட்ட இராவணனை ஒருவன் கொல்கிறான் என்றால், அவன் சாதாரண ஆளாகவும் இருக்க முடியாது.

அவள் சொல்கிறாள்


"இராவணனை கொன்றது இராமனின் அம்பு மட்டும் அல்ல. சீதையின் அழகும், அவளின் கற்பும். இராவணன் அவள் மேல் கொண்ட காதலும். சூர்ப்பனகையின் இழந்த மூக்கும், தசரதன் கொடுத்த வரமும் , இந்திரன் முதலிய தேவர்கள் செய்த தவமும், இராவணனை கொன்றது "

என்கிறாள்.

நம்மால் மறுக்க முடியுமா? கற்பனை வளம் செறிந்த அந்தப் பாடல்

பாடல்



'காந்தையருக்கு அணி அனைய சானகியார் பேர் அழகும், அவர்தம் கற்பும்

ஏந்து புயத்து இராவணனார் காதலும், அச் சூர்ப்பணகை இழந்த மூக்கும்,

வேந்தர் பிரான், தயரதனார், பணியதனால் வெங் கானில் விரதம் பூண்டு

போந்ததுவும், கடைமுறையே புரந்தரனார் பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா!


பொருள்



காந்தையருக்கு = பெண்களுக்கு

அணி அனைய  = அணிகலன் போன்ற

சானகியார் பேர் அழகும் = ஜானகியின் பேர் அழகும்

அவர்தம் கற்பும் = அவளுடைய கற்பும்

ஏந்து புயத்து = வீங்கிய தோள்களை உடைய

இராவணனார் காதலும் = இராவணனின் காதலும்

அச் சூர்ப்பணகை = அந்த சூர்ப்பனகை

இழந்த மூக்கும், = இழந்த மூக்கும்

வேந்தர் பிரான் = அரசர்களுக்கு எல்லாம் தலைவர் ஆன

தயரதனார் = தசரதன்

பணியதனால் = பணித்ததால்

வெங் கானில் விரதம் பூண்டு = கொடிய கானகத்தில் விரதம் மேற்கொண்டு

போந்ததுவும் = இராமன் போனதுவும்

கடைமுறையே = கடைசியாக

புரந்தரனார் = இந்திரன்

பெருந் தவமாய்ப் போயிற்று, அம்மா! = செய்த பெரிய தவமும் ஒன்றாக வந்தது

கவிதையின் அழகு ஒரு புறம்.

மண்டோதரியின் சோகம் ஒரு புறம்.

அதெலாம் ஒரு புறம் இருக்கட்டும்.

பாடலின் அடி நாதம் புரிகிறதா?


இராவணனின் அழிவு வர வேண்டும் என்று இயற்கை எப்படி காய் நகர்த்தி இருக்கிறது என்று புரிகிறதா?


தசரன், வேட்டைக்கு போன போது ஒரு அந்தணச் சிறுவனை தவறுதலாக கொன்று விடுகிறான். அந்த சிறுவனின் பெற்றோர் "நாங்கள் புத்திர சோகத்தில்  உயிர் விடுவதைப் போல நீயும் சாவாய்" என்று சாபம் தருகிறார்கள்.

அதற்கு முன்னால் தயரதன் கைகேயிக்கு இரண்டு வரங்கள் தந்திருக்கிறான்.

இராமன் கூனியை வில்லால் அடிக்கிறான்.

கூனி தூண்ட, கைகேயி வரம் வேண்ட, தயரதன் இராமனை காட்டுக்கு அனுப்புகிறான்.

சூர்ப்பனகை, இராமன் மேல் ஆசைப் படுகிறாள். மூக்கு அறுபடுகிறாள். சீதை பற்றி   இராவணனுக்கு மோகம் வரும் படி பேசுகிறாள். இராவணன் சீதையை சிறை எடுக்கிறான்.

இராமன் இராவணனைக் கொல்கிறான்.

இராவணனை கொல்ல வேண்டும் என்றால் இராமன் கானகம் வந்தான்?

இதெல்லாம் என்றோ முடிவு செய்யப் பட்டுவிட்டது.நாடகம் அரங்கேறியது.

வாழ்வில், நம்மை மீறி காரியங்கள் நடக்கும் போது , இது இப்போது நடக்கிறது என்று   நினைக்கக் கூடாது. ஏதோ நாம் வேறு மாதிரி சிந்தித்து இருந்தால் , சூழ்நிலை வேறு மாதிரி நடந்திருக்கும் , நாம் தவறு செய்து விட்டோம், அல்லது மனைவி/கணவன்/மாமியார்/உடன் பிறப்புகள் தவறு செய்து விட்டார்கள்   என்று எண்ணக் கூடாது.

இப்படி நடக்க வேண்டும் என்று இருக்கிறது. அப்படித்தான் நடக்கும்.

சிந்திக்க வேண்டிய விடயம்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_26.html

1 comment:

  1. இந்த மாதிரி சிந்தனைக்கு முடிவே இல்லை. இப்படியே மேலும் மேலும் இழுத்துக் கொண்டே போகலாமே? உதாரணமாக, தசரதன் ஏன் காட்டுக்குப் போனான் என்று அதற்கு ஒரு கதை சொல்லலாம்.

    ReplyDelete