திருமந்திரம் - எப்படி அப்படி
ஜீவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பை பலவிதமாக பல பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு. ஆனால், முயன்றால் ஜீவ ஆத்மா , பரமாத்மாவுடன் சேரலாம் என்று.
அ-த்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்கிறது. வேறு மாதிரி தெரிவது மாயை.
விசிஷ்டாத்வைதம் சொல்கிறது, இரண்டும் வேறு வேறு என்று. இரண்டும் கலக்கவே முடியாது என்கிறது.
இதில் எதை நம்புவது. மூன்றும் , வெவ்வேறு திசையில் இழுக்கின்றன.
திருமூலர் இதை எளிதாக விளக்குகிறார்.
ஒரு படி நீரில், ஒரு பிடி உப்பைப் போட்டால், நீரின் அளவு மாறாது. அது அதே ஒரு படிதான் இருக்கும். அப்படி ஆனால் உப்பு எங்கே போனது? தண்ணீருக்குள்தான் இருக்கிறது. ஆனால், அது தனியாக தெரிவது இல்லை. தண்ணீரை வற்றக் காய்ச்சினால், அந்த உப்பு மீண்டும் வரும்.
இரண்டும் ஒன்றாக கலந்ததா என்றால், ஆம்.
கலந்த பின் உப்புக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லாமல் போயிற்றா என்றால், ஆம்.
மீண்டும் அதை பிரித்து எடுக்க முடியுமா என்றால் , ஆம்.
அது போலத்தான் சீவனும், சிவனும் என்கிறார் திருமூலர்.
ஜீவாத்மா , பரமாத்மாவோடு இரண்டு அற கலந்து விடும். ஒரு வித்தியாசமும் தெரியாது. ஆனால், உள்ளே தனியாக இருக்கும். வேண்டும் என்றால் மீண்டும் பிரித்துக் கொண்டு வந்து விடலாம்.
இதை எப்படி விளக்குவது? அது போலத்தான் ஜீவனும், சிவனும் என்று கொள்ள வேண்டும் என்கிறார்.
பாடல்
அப்பினில் உப்பென அத்தன் அணைந்திட்டுச்
செப்பு பராபரம் சேர்பர மும்விட்டுக்
கப்புறு சொற்பதம் மாயக் கலந்தமை
எப்படி அப்படி என்னும் அவ்வாறே.
பொருள்
அப்பினில் = நீரினில்
உப்பென = உப்பைப் போல
அத்தன் = இறைவன்
அணைந்திட்டுச் = சேர்ந்துக் கொண்டு
செப்பு பராபரம் = சொல்லும் பராபரம்
சேர் = சேர்ந்து
பர மும் விட்டுக் = பரத்தை விட்டு விட்டு
கப்புறு = உறுதியான
சொற்பதம் = திருவடிகளை
மாயக் கலந்தமை = மறையும்படி கலந்தது
எப்படி = எப்படி என்றால்
அப்படி என்னும் அவ்வாறே. = அப்படி நடந்ததே அதே மாதிரி
உப்பும் தண்ணீரும் கலந்த மாதிரி என்று சொல்லலாம் என்கிறார்.
எளிய உதாரணம். உயர்ந்த கருத்து.
https://interestingtamilpoems.blogspot.com/2020/04/blog-post_30.html