திருக்குறள் - இதுவும் மாசற்றார் கோள்
மூன்று விதத்தில் நாம் பிறருக்கு தீமை செய்கிறோம் என்று பார்த்தோம். அவை
- பலன் நோக்கிச் செய்தல்
- செற்றம் (பகை) பற்றிச் செய்தல்
- சோர்வால் (மறதியால்) செய்தல்
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள் என்று பலன் கருதி இன்னா செய்யாமை பற்றி முதல் குறளில் சொன்னார்.
இப்போது, செற்றம் பற்றி இன்னா செய்வதைப் பற்றி கூறப் போகிறார்.
நம் மேல் பகை கொண்டு, பொறாமை கொண்டு, நமக்கு ஒருவன் கெடுதல் செய்தாலும், அதை மறுத்து அவனுக்கு கெடுதல் செய்யாமல் இருப்பது மாசற்றவர்களின் கொள்கை.
பாடல்
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_30.html
(click the above link to continue reading)
கறுத்து = பகைமை கொண்டு, கோபம் கொண்டு,
இன்னா = தீமை
செய்தவக் கண்ணும் = செய்த அந்த போதும்
மறுத்து = அதை மறுத்து
இன்னா = அவருக்கு தீமை
செய்யாமை = செய்யாமல் இருப்பது
மாசற்றார் கோள் = குற்றமற்றவர்களின் கொள்கை
அதாவது பழிக்குப் பழி, பல்லுக்கு பல், கண்ணுக்கு கண் என்று போகக் கூடாது என்கிறார்.
மகாத்மா காந்தி கூறினார் "கண்ணுக்கு கண் என்று ஆரம்பித்தால் இந்த உலகமே வெகு சீக்கிரம் குருடாகி " விடும் என்று.
மறுத்து என்ற சொல்லுக்கு பரிமேல் அழகர் மிக அழகான விளக்கம் தருகிறார்.
"உட்கொள்ளாது" என்று கூறுகிறார்.
யோசித்துப் பார்த்தால் தெரியும், ஒருவர் ஒன்று சொல்கிறார், உடனே அது நம்முள் ஒரு எதிர் விளைவை ஏற்படுத்துகிறது.
"கடவுள் இருக்கிறார்" என்று சொன்னால், "யார் சொன்னா...எங்கே நிரூபி பார்போம்" என்று வாதம் செய்யத் தொடங்கி விடுகிரோறம்.
"அந்தத் தலைவர் நல்லவர்" என்றால், "ஹா அவர் இலட்சணம் எனகுத் தெரியாதா" அவர் செய்த தவறுகளை எடுத்துக் காட்ட ஆரம்பித்து விடுகிறோம்.
இதுதான் நமக்கு வேலையா? ஒவ்வொருவர் சொல்லுவதற்கும், செய்வதற்கும் எதிர் வினை செய்து கொண்டே இருந்தால் நாம் போய் சேர வேண்டிய இடத்தை எப்போது அடைவது.
தெருவில் போகும் போது நாய் குரைக்கும். "என்னைப் பார்த்த குரைத்தாய்" என்று பதிலுக்கு நாமும் நின்று அதைப் பார்த்து குரைத்துக் கொண்டு இருக்க முடியுமா? அப்படிச் செய்தால் , இந்த உலகம் நம்மைப் பற்றி என்ன நினைக்கும்?
அதை கண்டு கொள்ளாமல் மேலே போய் விட வேண்டும். முட்டாள்களுக்கு எல்லாம் பதில் சொல்லிக் கொண்டே இருந்தால், காலம்தான் விரயம் ஆகும்.
நாம் அவனை கண்டு கொள்ளாமல் போய் விட்டால், இவன் நம்மை சீண்டக் கூட மாட்டேன் என்கிறான் என்று வேறு இடம் போய் விடுவார்கள். மாறாக, அவனோடு சரிக்கு சரி நின்றால், நம் நிலை தான் தாழும்.
Don't fight with the pig in the mud, the pig will enjoy it என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.
கீழ் மக்களுக்கு வம்புக்கு சண்டை பிடிப்பதும், முரண் படுவதும் இயற்கை. நாம் அவர்களுக்கு நிகராக நம் நிலைமையை தாழ்த்திக் கொள்ள கூடாது.
சரி தானே?
கொஞ்சம் இலக்கணம் படிப்போமா?
வீட்டுக்குள் அம்மா வருகிறாள். மதிய நேரம்..ஒரு இரண்டு மணி இருக்கும். மகனைப் பார்த்து கேட்கிறாள் "என்னடா ...மத்யானம் சாப்டியா" என்று.
மகன் சொல்கிறான் "வேலை ரொம்ப இருக்கு...காலையிலும் சாப்பிடலை" அப்படின்னு.
அப்படினா, மத்யானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல?
காலையில் சாபிடல அப்படின்னு சொல்லி இருந்தால், சரி , மத்யானம் சாப்பிட்டு இருப்பான் என்று நினைக்க இடம் இருக்கு.
காலையிலு"ம்" என்று ஒரு "ம்" போட்டதால காலையிலும் சாபிடல, மத்தியானமும் சாப்பிடலைன்னு தெரியுதுல.
அந்த "ம்" க்கு இறந்தது தழுவிய எச்ச உம்மை என்று பெயர்.
ஆங்கில பரீட்சை எப்படி செய்து இருக்கிறாய் என்று கேட்டாலும் "அதை ஏன் கேக்குற...தமிழும் சரியா செய்யல" என்றால் ஆங்கிலம், தமிழ் இரண்டும் சரியா செய்யல என்று நாம் புரிந்து கொள்கிறோம் அல்லவா.
இங்கே, குறளில்,
கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்துஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்
என்றார்.
முந்தைய குறளில்
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும்
பிறர்க்கு இன்னா செய்யாமை மாசற்றார் கோள்
என்றார்.
இங்கே இரண்டாவது குறளில் "செய்யாமையு'ம்' மாசற்றார் கோள் என்று இருந்திருக்க வேண்டும்.
அதுவும் மாசற்றார் கோள் , இதுவும் மாசற்றார் கோள் என்பதால், இரண்டாவதாக வந்த "செய்யாமை" என்பதை 'செய்யாமையும்" என்று இருந்திருக்க வேண்டும். அப்படி இல்லை.
எனவே, அது "இறந்தது தழுவிய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கி (மறைந்து) நின்றது " என்று உரைக் குறிப்பு எழுதுகிறார் பரிமேல் அழகர்.
எவ்வளவு தூரம் உன்னிப்பாக ஒரு நூலை படித்து இருக்கிறார்கள்.
அப்படி படிக்க வேண்டும்.