Friday, January 22, 2021

திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க

 திருக்குறள் - வலியார் முன் தன்னை நினைக்க 


பாடல்களுக்கு உரை எழுதுவது, விளக்கம் சொல்லுவது என்பது பெரிய கலை. அதற்கு மிக விரிந்த நூல் அறிவு வேண்டும். எந்த நூலுக்கு உரை சொல்கிறோமோ அந்த நூல் எழுதப்பட்ட கால கட்டத்தின் பழக்க வழக்கங்கள், நெறி முறைகள், மொழி பயன்பாடு இவை எல்லாம் தெரிந்து இருக்க வேண்டும். 


அவை எல்லாவற்றையும் விட முக்கியம், மூல நூல் எழுதிய ஆசிரியனின் நோக்கம் புரிந்து எழுத வேண்டும். 

திருக்குறள் போன்ற நூல்களுக்கு உரை சொல்லுவது என்றால், திருவள்ளுவர் என்ன நினைத்தார், அவர் நோக்கம் என்ன என்று அறிந்து உரை சொல்ல வேண்டும். இல்லை என்றால், அது உரை சொல்பவனின் நோக்கமாகத்தான் இருக்குமே அல்லாமல், வள்ளுவர் சொல்ல வந்ததாக இருக்காது. 


திருவள்ளுவர் என்ன நினைத்தார் என்று அறிந்து கொள்ள வேண்டுமானால், அவர் அளவு படித்து இருக்க வேண்டும். நடக்கிற காரியமா அது? 

எனவே, நான் முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் சொல்லுவது என் கருத்துக்களே அன்றி வள்ளுவரின் கருத்து அல்ல. வள்ளுவரின் கருத்துகளை  அறிய வேண்டும் என்றால், பரிமேல் அழகர் போன்ற அறிஞர்களின் உரைகளை படிக்க வேண்டும். 

அருளுடைமை பற்றி சொல்ல வந்த வள்ளுவர், எப்படி இன்னொரு உயிரின் மேல் அருள் செலுத்துவது என்று சொல்லித் தருகிறார்.


அருள் செய்ய வழி முறை, வேறு எங்காவது கேட்டது உண்டா?  


பாடல் 


வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியார்மேல் செல்லும் இடத்து


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_93.html

(click the above link to continue reading)


வலியார்முன் = நம்மை விட வலியவர்கள் முன் 

தன்னை நினைக்க  = நம்மை நினைத்துக் கொள்ள வேண்டும் 

தான் தன்னின் = நாம் நம்மை விட 

மெலியார்மேல்  = மெலிந்தார் மேல் 

செல்லும் இடத்து = செல்கின்ற போது 


மெலிந்தவர்கள் என்றால் எடை குறைந்தவர்கள் என்று அர்த்தம் அல்ல. வலிமை குன்றியவர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். 

இந்தக் குறள் பற்றி பல முறை யோசித்துப் பார்த்து இருக்கிறேன். நாம் யாரை வருத்தி இருக்கிறோம். நாம் யாரை மிரட்டி, பணிய வைத்து இருக்கிறோம். ஒரு உயிரைக் கூட கொன்று தின்றதில்லை. அப்படியானால், நான் மிக அருள் உடையவனா? அப்படி ஒன்றும் தெரியவில்லை. பின் இந்தக் குறளை எப்படி புரிந்து கொள்ளுவது?


பல தரம் காரில் போகும் போது, சில பிச்சைகாரர்கள் பிச்சை கேட்டு நிற்பார்கள். கண்டும் காணாத மாதிரி போய் விடுவேன். அவர்கள் மேல் ஒரு பக்கம் பரிதாப உணர்வு ஏற்பட்டாலும், ஏதோ ஒரு வெறுப்பும் இருக்கிறது. வேலை செய்து பிழைத்தால் என்ன?  இந்தப் பணத்தை வைத்து குடிப்பான், இப்படி பிள்ளைகளை பழக்கி பிச்சை எடுக்க வைக்கிறார்கள், இதை எல்லாம் நாம் ஊக்கு விக்கக் கூடாது என்றெல்லாம் மனம் நினைக்கும். 


நான் ஒன்றை வேண்டி ஒருவரிடம் நின்று, அவர் என்னை இப்படி உதாசீனம் செய்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்கிறேன். அவர் மனதில் ஆயிரம் சிந்தனைகள் ஓடலாம். கடைசியில் நான் நிராகரிக்கப் பட்டேன் என்பது தான் என்னைப் பொறுத்தவரை நிகழ்ந்த உண்மை. வலிக்கும் தானே. 

எனக்கு வேண்டியது பணமோ பொருளோ இல்லாமல் இருக்கலாம். ஒரு அன்பு, ஒரு கனிவான சொல், ஒரு ஆறுதல் வார்த்தை, ஒரு அரவணைப்பு என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். 

நான் வேண்டி நின்ற அவர் என்னை பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டால், எவ்வளவு வலிக்கும். அதை நினைத்துப் பார்த்தால், இந்த போக்குவரத்து நிறுத்தங்களில்  பிச்சை எடுப்பவர்களை பார்த்து முகம் திருப்பிக் கொண்டு செல்லத் தோன்றுமா? 


நமக்கும் ஒரு தேவை வரும். நாமும் யாரிடமாவது சென்று நிற்போம். அப்போது நம் நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தால் , நமக்கு மற்றவர்கள் மேல் அருள் தானே பிறக்கும். 


வீட்டில் வேலை செய்யும் பெண்ணின் மேல்,   காவல்காரன் மேல், வண்டி ஓட்டுபவர் மேல், என்று அனைத்து மக்கள் மீது அருள் சுரக்கும்.


நமக்கு அப்படி ஒரு காலம் வராது என்று நினைக்கக் கூடாது. 


சிவ பெருமானை மண்டை ஓட்டில் பிச்சை எடுக்க வைத்தது காலம். 

உலகளந்த பெருமாளை, கூனி குறுகி வாமன உருவில் மூன்று அடி நிலம் பிச்சை எடுக்க வைத்தது காலம். 


மும்மூர்த்திகளின் கதி இதுவென்றால், நாம் எம்மாத்திரம். 


நினைத்துப் பாருங்கள். 


அருள் தானே சுரக்கும். யார் மேலும் ஒரு அன்பும், அருளும் பிறக்கும். 

வள்ளுவர் இதை நினைத்துச் சொன்னாரா என்று தெரியாது. என் மனதில் பட்டதைச் சொல்லுகிறேன். 


2 comments:

  1. மிக அருமை. Whether valluvar thought or its your interpretation, the idea is too good

    ReplyDelete
  2. "Do unto others as you would have them do to you" என்ற கிருத்துவ வாசகத்தை விட, இந்தக் குறள் அதிகப் பொருள் பொதிந்ததாக இருக்கிறது. ஏனென்றால், கிருத்துவ வாசகத்தில், வலியார்-மெலியார் என்ற பொருள் இல்லை. அருமையான குறள்.

    ReplyDelete