Friday, January 29, 2021

திருக்குறள் - மாசற்றார் கோள்

 திருக்குறள் - மாசற்றார் கோள் 

மூன்று விதத்தில் நாம் மற்றவர்களுக்கு தீமை செய்கிறோம் என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அதில் முதலாவது, நமக்கு ஒரு பயன் வேண்டி மற்றவர்களுக்கு துன்பம் செய்தல். 

பிறரை ஏமாற்றுவது, பிறர் பொருளை களவு எடுப்பது, ஒருவருக்கு வர வேண்டிய உழைப்பின் பலனை தட்டிப் பறிப்பது, நம்மிடம் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக மற்றவர்களை உதாசீனப் படுத்தி மகிழ்வது, மற்ற உயிர்களை துன்புறத்தி அதில் இன்பம் காண்பது...என்று பல விதங்களில் நமக்கு ஒரு பலன் வேண்டி மற்றவர்களை துன்புறுத்துகிறோம். 

இதில் மற்றவர்கள் என்பது மனிதர்கள் மட்டும் அல்ல, விலங்குகளும் சேரும். 


அப்படி, நமக்கு ஒரு பலன் கிடைக்கும் என்றாலும், பிறருக்கு இன்னல் தரமால் இருப்பது பெரியவர்களின் கோட்பாடு என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_29.html

click the above link to continue reading


சிறப்புஈனும் = சிறப்பினைத் தரும் 

செல்வம் பெறினும் = செல்வத்தைப் பெற்றாலும் 

பிறர்க்கு = மற்றவர்களுக்கு 

இன்னா செய்யாமை = துன்பம் செய்யாமல் இருப்பது 

மாசற்றார் கோள். = குற்றமற்றவர்களின் கொள்கை, கோட்பாடு.


சரி, இது ஒரு எளிமையான குறள் போலத்தானே இருக்கிறது என்று நாம் நினைப்போம். 

இதற்கு பரிமேல் அழகர் தந்த உரையை படித்தால் தெரியும் எவ்வளவு நுட்பமாக, எவ்வளவு ஆழமாக படித்து உரை செய்து இருக்கிறார் என்று. 


ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தங்கச் சுரங்கம். 

"சிறப்புஈனும்" என்றால் என்ன அர்த்தம்? கன்றினை ஈனும் என்றால், எது கன்றினை ஈனும்? ஒரு பசு மாடு கன்றினை ஈனும். அது போல, இங்கே சிறப்பு ஈனும் எது சிறப்பு? பரிமேல் அழகர் யோசிக்கிறார்.  எது சிறந்தது? பக்தி, வீரம், காதல், அன்பு, அதிகாரம், ...எது சிறந்தது, சிறப்பு வாய்ந்தது என்று யோசித்து முடிவுக்கு வருகிறார். 


"யோகம்" தான் உள்ளதிற்குகுள் சிறந்தது. ஏன் என்றால், அது இம்மைக்கும், மறுமைக்கும் பலன் தர வல்லது. எனவே, சிறப்பு என்றால் அது யோகம் தான். அதைவிட சிறந்து ஒன்றும் இல்லை. 

அந்த யோகம் ஈனும் என்றால், யோகத்தில் ஈடுபட்டால் கிடைக்கும் என்று அர்த்தம். என்ன கிடைக்கும் ? அட்டமா சித்திகள் கிடைக்கும். ஞானம் கிடைக்கும். வீடு பேறு கிடைக்கும். 


எனவே, அந்தப் பலன்களை சிறப்பு ஈனும் செல்வம் என்றார். செல்வமாவது அந்த யோகம் தரும் பலன்கள்.


அப்படி, அவ்வளவு சிறப்பான யோகம் தரும் பலன்கள் கிடைத்தால் கூட, மற்றவர்களுக்கு  துன்பம் செய்ய மாட்டார்கள் "மாசற்றவர்கள்" என்கிறார். 


"மாசற்றவர்கள்" என்றால் யார்?  முற்றும் துறந்த துறவிகள், மயக்கம், குழப்பம், ஐயம், திரிபு போன்றவை இல்லாதவர்கள். அவர்களிடம் ஒரு குற்றமும் இருக்காது. 


எவ்வளவுதான் சிறந்த நன்மை கிடைக்கும் என்றாலும், மற்றவர்களுக்கு துன்பம் செய்யக் கூடாது. அல்லது பிறருக்கு துன்பம் தந்து அதன் மூலம் கிடைக்கும் நன்மை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், அதை வேண்டாம் என்று ஒதுக்கி விட வேண்டும். 


நாம் அவ்வாறு செய்கிறோமா? பெரிய நன்மை என்ன பெரிய நன்மை, ஒரு சின்ன நன்மை கிடைத்தால் கூட போதும், பிறருக்கு தீமை செய்ய நாம் தயங்குவதே இல்லை. 


ஓட்டுக்கு பணம் வாங்குவதில் இருந்து, இலஞ்சம் கொடுத்து காரியம் சாதிப்பதில் இருந்து, பில் போடாமல் சாமான்கள் வாங்குவதில் இருந்து சின்ன சின்ன நன்மைகளுக்காக எவ்வளவு பெரிய தீமைகளையும் நாம் செய்யத் தயாராக இருக்கிறோம். 


அப்படி செய்யக் கூடாது என்று நன்மை நோக்கி பிறருக்கு தீமை செய்வதை விலக்குவதைப் பற்றி கூறுகிறார். 


நமக்கு ஒரு நன்மை வருகிறது என்பதற்காக பிறருக்கு துன்பம் செய்யலாமா?




 


 செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசற்றார் கோள்.





1 comment:

  1. "சிறப்பு ஈனும் செல்வம்" என்ற சொற்றொடர் குழப்பமாக இருக்கிறது. (1 )சிறப்பு செல்வத்தைத் தருகிறதா, அல்லது (2) செல்வம் சிறப்பைத் தருகிறதா என்ற இரண்டு பொருள்களும் இந்தச் சொற்றொடரிலிருந்து பெற முடியும் என்று தோன்றுகிறது.

    மேற்கண்டவற்றில் பரிமேலழகர் (1)ஐ எடுத்துக்கொண்டு விளக்கியிருக்கிறார். அந்த விளக்கம் அருமையாக இருக்கிறது.

    (2)ஐ எடுத்துக்கொண்டு விளக்கினால் எப்படி இருக்கும்? யோசிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete