Wednesday, January 20, 2021

கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன்

 கம்ப இராமாயணம் - கல்லும் மரங்களும் உருக நோக்கும் காதலன் 


வீடணன் செய்தது சரியா, தவறா என்ற வாதம் இன்று வரை தொடர்கிறது. 

என்னைப் பொறுத்தவரை சரி தவறு எல்லாம் அறிவு சம்பந்தப் பட்டது.  சாத்திரங்கள், சட்டங்கள், நடைமுறை பழக்க வழக்கங்கள் இவற்றைக் கொண்டு, தர்கா ரீதியாக அலசி ஆராய்ந்து எடுக்கப்படும் முடிவுகளை சரியா தவறா என்று விவாதம் செய்யலாம்.


அளவற்ற அன்பில், கருணையில் பிறக்கும் ஒரு செயலை எப்படி சரி தவறு என்று நிர்ணயம் பண்ணுவது. 


பிள்ளைக்கு உடம்பு சரியில்லை. சரியாக சாப்பிட மாட்டேன் என்கிறது. சோர்ந்து படுத்து இடுக்கிறது. ஊரெல்லாம் விழாக் கோலம். பக்கத்து வீடுகளில் இருந்து நிறைய பலகாரங்கள் வந்து கிடக்கிறது. அந்தப் பிள்ளையின் அம்மா உற்சாகமாக அவற்றை எடுத்து உண்பாளா ? அல்லது, அவற்றை வெறுத்து ஒதுக்குவாளா?


பிள்ளைக்குத் தானே உடம்பு சரி இல்லை. இவளுக்கு என்ன? சாப்பிட வேண்டியது தானே?  இவள் சாப்பிடாமல் விட்டால் பிள்ளைக்கு உடம்பு சரியாகுமா?  அவள் செய்தது சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


எனக்குத் தெரிந்து எவ்வளவோ வீடுகளில் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும், கணவன் நலமாக இருக்க வேண்டும் என்று பெண்கள் பல விரதங்கள் இருக்கிறார்கள்.  பிள்ளை பிழைத்து வந்தால், இனி வாழ் நாள் எல்லாம் இனிப்பு சாப்பிடாமல் இருப்பேன்  என்றெல்லாம் தியாகம் செய்கிறார்கள். இவை எல்லாம் சரியா தவறா என்று விவாதம் பண்ண முடியாது. 


அன்புக்கு முன்னால் எல்லாம் சரி தான். 


கருணைக் கொலை என்று சொல்கிறார்கள்.  அன்புக்கு உரியவர் படும் பாடு தாங்க முடியாமல்  அவர்கள் நிம்மதியாகப் போய் சேரட்டும் என்று அவர்களுக்கு தரும்  சிகிச்சையை நிறுத்தி அவர்கள் உயிர் பிரிய வழி செய்கிறார்கள். அது கொலை தான். அதற்குப்   பெயர் கருணைக் கொலை. பல நாடுகள்   அதை அங்கீகரிக்கிறது. 


அன்புக்கு முன்னால், எதுவும் சரி தான். 


அதை புரிந்து கொள்ள வேண்டும் என்றால், சட்டப் புத்தகங்களை தூக்கிக் கொண்டு வரக் கூடாது. மனம் நிறைய அன்பைக் கொண்டு வர வேண்டும்.   அவ்வளவு அன்பு வந்து விட்டால், இந்த விவாதங்கள் இருக்காது. 


இராமனிடம் அடைக்கலம் வேண்டி வீடணன் வருகிறான். 


அவன் வரும் அந்தக் காட்சியை கம்பன் காட்டுகிறான். படித்துப் பாருங்கள். அதற்குப் பின், சரியா தவறா என்ற வாதங்கள் எவ்வளவு அபத்தம் என்று புரியும். 


"இரண்டு கைகளையும் தலைக்கு மேல் கூப்பியபடி வருகிறான். அவன் மனதில் உள்ள அன்பும் கருணையும் கண்ணில் வெளிப்படுகிறது. அதைப் பார்த்து கல்லும் மரமும் உருகுகின்றன. இராமன் அவனை பார்த்த போது, தரையில் விழுந்து வணங்குகிறான்".


இது நான் சொல்லும் உரை. கம்பன் பாடலைப் பாருங்கள். மனம் உருகும்.


பாடல் 

கரங்கள் மீச் சுமந்து செல்லும் கதிர் மணி முடியன், கல்லும்

மரங்களும் உருக நோக்கும் காதலன், கருணை  வள்ளல்

இரங்கினன் நோக்கும்தோறும், இரு நிலத்து இறைஞ்சுகின்றான்;

வரங்களின் வாரி அன்ன தாள் இணை வந்து வீழ்ந்தான்.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_20.html


click the above link to continue reading


கரங்கள் = கைகளை 

மீச்  = மேலே 

சுமந்து = சுமந்து. கைகள் மேலே நிற்கவில்லை. தளர்ந்து விழுகின்றது. அதை தலையில் சுமந்து 

செல்லும் = செல்லுகின்ற 

கதிர் = ஒளி வீசும் 

மணி  = மணிகள் நிறைந்த 

முடியன் = கிரீடம் அணிந்த வீடணன் 

கல்லும் = கல்லும் 

மரங்களும் = மரங்களும் 

உருக = உருகும்படி 

நோக்கும் காதலன் = நோக்கும் காதலன் 


கருணை  வள்ளல் = கருணை வள்ளலான இராமன் 

இரங்கினன் = இரக்கம் கொண்டு 

நோக்கும்தோறும், = பார்க்கும் போதெல்லாம் 

இரு நிலத்து இறைஞ்சுகின்றான்; = நிலத்தில் விழுந்து வணங்குவான் 

வரங்களின் = வரங்களின் 

வாரி அன்ன = கடல் போன்ற 

தாள் இணை = இரண்டு திருவடிகளில் 

வந்து வீழ்ந்தான். = வந்து வீழ்ந்தான். வணங்கினான் என்று கூட இல்லை. வீழ்ந்தான்  என்கிறான் கம்பன். 


இராமனை சொல்லும் போது , "வரங்களின் கடல்" என்கிறான். எவ்வளவு கொடுத்தாலும் குறையாது. 


வீடணனின் தோற்றம் கண்டு கல்லும் மரமும் உருகியது. 


அப்படிப்பட்ட மனதில் குற்றம் இருக்குமா?  துரோக சிந்தனை இருக்குமா? பதவி ஆசை இருக்குமா? 


சரியா தவறா என்று ஆய்வு செய்வது அன்பில்லாதவர்,  அன்பு பற்றி அறியாதவர் செய்யும் செயல். 


அன்புக்கு மிஞ்சிய ஒரு அறம் இல்லை. 





2 comments:

  1. அன்புக்கு மிஞ்சிய ஒரு அறம் இல்லை - சபாஷ்

    ReplyDelete