Saturday, January 23, 2021

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு

ஆசாரக் கோவை - தானறிந்த வழியில் தெய்வம் தொழு 


நம் மனம் கால நிலை வேறுபாட்டால் மாறும் இயல்பு உடையது. நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் தெரியும். காலையில் உங்கள் மனம் எப்படி இருக்கிறது, மதியம் எப்படி இருக்கிறது, மாலை மற்றும் இரவில் எப்படி இருக்கிறது என்று. நேரம் மாற மாற மனம் மாறும். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறுவதால் நாம் அந்த மாற்றத்தை உணர்வது இல்லை. 


சில காரியங்களை,சில நேரத்தில் தான் செய்ய முடியும். மாற்றிச் செய்தால் என்ன என்று கேட்கலாம். செய்யலாம். அவ்வளவு சிறப்பாக இருக்காது. 


நீங்கள் இதை சோதித்துப் பார்க்கலாம். ஒரு நாள் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , குளித்து, நல்ல உடை உடுத்துப் பாருங்கள். உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று. இன்னொரு நாள் காலை பத்து பதினொரு மணிவரை தூங்கி விட்டு எழுந்து, குளிக்காமல் உணவு உண்டு, இருந்து பாருங்கள். உங்கள் மனம் எப்படி வேலை செய்கிறது என்று. வித்தியாசம் தெரியும். 


சரி, இப்படி காலத்தோடு சேர்ந்து மனம் மாறுகிறது என்றால், அது சட்டென்று மாறாது. ௮ மணிக்கு மேல் இந்த மன நிலை என்று மாறாது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்குப் போகும். 


அப்படி போகும் போது, இந்த இடைப்பட்ட நேரத்தில் கொஞ்சம் குழப்பம் வரும்.  அந்த இடைப்பட்ட நேரங்களை சந்தி நேரம் என்பார்கள். இரண்டு கால நேரங்கள் சந்திக்கும் இடம். அந்த நேரத்தில் மனதில் சற்று குழப்பம் வரும். அந்தக் குழப்பத்தை போக்க, இறை வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


சந்தி நேரத்தில் செய்யும் வழிபாட்டுக்கு "சந்தியா வந்தனம்" என்று பெயர். 


மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு அதை மென்மையாக கொண்டு செல்லும் வழி. 


இருள் விலகி பகல் வரும் ஒரு சந்தி - அதிகாலை. 

பகல் விலகி இருள் வரும் நேரம் - மாலைச் சந்தி 

இந்த இரண்டு நேரங்களும் சற்று அழுத்தம் வாய்ந்தவை. எனவே இந்த நேரங்களில் வழிபாடு செய்யச் சொன்னார்கள். 


பாடல் 


நாளந்தி கோறின்று கண்கழீஇத் தெய்வத்தைத்

தானறியு மாற்றாற் றொழுதெழுக அல்கந்தி

நின்று தொழுதல் பழி.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/01/blog-post_23.html


(pl click the above link to continue reading)


நாளந்தி = நாள் அந்தி = அதி காலையில் 

கோறின்று = கோல் தின்று  என்றால் குச்சியால் பல் துலக்கி 

கண்கழீஇத் = முகம் கழுவி 

தெய்வத்தைத் = தெய்வத்தை 

தானறியு மாற்றாற் றொழுதெழுக = தான் அறியும் ஆற்றான் தொழுது எழுக. இது மிக முக்கியமானது. உனக்கு தெரிந்த மாதிரி தெய்வத்தை தொழு. அந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று செய்யாமல். உன் மனதுக்கு பிடித்த மாதிரி, உன் அறிவுக்கு எட்டிய வரை தெய்வத்தைத் தொழு. 


 அல்கந்தி = மாலையில் 

நின்று தொழுதல் பழி. = நின்று தொழக் கூடாது. அமர்ந்து இறை வழிபாடு செய்ய வேண்டும். நாள் எல்லாம் வேலை செய்த பின் உடல் களைத்துப் போய் இருக்கும். நின்று செய்தால், மேலும் சோர்வு வரும். மனம் சலிக்கும். எப்படா இந்த வழிபாடு முடியும் என்று. எனவே, நன்றாக அமர்ந்து, நிதானமாக வழிபாடு செய்ய வேண்டும். 


உள் உணர்வை கூர்மையாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனம் எப்படி வேலை செய்கிறது என்று அவ்வப்போது கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி உள் உணர்வு கூர்மையானால், வழிபாடு செய்யும் போது என்ன நிகழ்கிறது என்று தெரியும். இல்லை என்றால், ஏதோ எல்லோரும் செய்கிறார்கள் நானும் செய்கிறேன் என்று வாய் ஏதோ முணுமுணுக்கும், கை ஒரு வேலை செய்யும், கண் ஒரு பக்கம் போகும், காது வேறு எதையோ கேட்டுக் கொண்டிருக்கும். அது அல்ல வழிபாடு. 


வழிபாட்டுக்கு முன்னும் பின்னும் உள்ள மன நிலையின் வேறுபாடு தெரியாவிட்டால், பின் எதற்கு வழிபாடு செய்வது? செஞ்சாலும் ஒண்ணு தான், செய்யாவிட்டாலும் அதே தான் என்றால், எதற்கு நேரத்தை விரயம் பண்ண வேண்டும்? 


கூர்ந்து கவனியுங்கள். 


உணவு உண்ட பின் உங்கள் மனம் எப்படி இருக்கிறது என்று கவனியுங்கள். 


காப்பி குடித்தவுடன் மனம் மாறும். 


எண்ணையில் பொறித்த இனிப்பு பலகாரம் சாப்பிட்டால் மனம் மாறும். 


பழைய சோற்றில் எருமை தயிர் விட்டு சாப்பிட்டால் மனம் மாறும். 


அந்த மாற்றத்தை கவனிக்கத் தெரிய வேண்டும். 


தெரிந்தால், இந்த ஆசாரங்களின் தேவை மற்றும் அர்த்தம் புரியும். இல்லை என்றால்....என்ன சொல்ல..ஏதோ ஒரு பொழுது போக்கு என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். 



No comments:

Post a Comment