Thursday, August 29, 2024

நீதி நெறி விளக்கம் - கல்வியின் சுகம்

 நீதி நெறி விளக்கம் - கல்வியின் சுகம் 


காதலியின் விரல் படும் போது, முதன் முதலாக முத்தம் பெற்ற போது, காதலியை, மனைவியை கட்டி அணைக்கும் போது பிறக்கும் சுகத்தை விட கல்வியில் பிறக்கும் சுகம் பெரிது என்கிறது நீதி நெறி விளக்கம். 


ஐந்து புலன்களுக்கும் இன்பம் தருவது ஆணுக்கு , பெண் தரும் சுகமும், பெண்ணுக்கு, ஆண் தரும் சுகமும் என்பார் வள்ளுவர். நீதி நெறி விளக்கம் அதை விட ஒரு படி மேலே போய், காமத்தில் கிடைக்கும் சுகத்தை விட கல்வியில் கிடைக்கும் சுகம் பெரிது என்கிறது. 


பாடல் 


தொடங்கும்கால் துன்பமாய் இன்பம் பயக்கும்

மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி நெடுங்காமம்

முன் பயக்கும் சில நீர இன்பத்தின் முற்றிழாய்

பின் பயக்கும் பீழை பெரிது


பொருள் 


தொடங்கும்கால் துன்பமாய் = அகல்வி கற்கத் தொடங்கும் போது கடினமாய் இருக்கும்.  


இன்பம் பயக்கும் = பின் இன்பம் பயக்கும் 

மடம் கொன்று = மடமையை கொன்று. அதாவது அறியாமையை அழித்து 


அறிவு அகற்றும் = அறிவை அகலமாகச் செய்யும் 


கல்வி = கல்வியானது 


நெடுங்காமம் = பெரிய காமம் 


முன் பயக்கும் = முதலில் தரும் 


சில நீர இன்பத்தின் = சிறிது நேர இன்பத்தில் 


முற்றிழாய் = பெண்ணை 


பின் பயக்கும் பீழை பெரிது = பின்னால் விளையும் தீமை பெரியது 


காமம், முதலில் மிக இன்பமாக இருக்கும். ஆனால். பின்னாளில் பெரிய துன்பம் தரும். கல்வியோ, தொடங்கும் போது கடினமாய், துன்பம் தருவதாய் இருக்கும். ஆனால், போகப் போக அது பெரிய இன்பத்தைத் தரும். 


எனவே காமம் தரும் இன்பத்தை விட கல்வி தரும் இன்பமே சிறந்தது என்கிறார். 


என் அனுபவத்தில், மேலும் சில விவரங்களைச் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 


காமத்துக்கு ஒரு கால எல்லை உண்டு. எத்தனை வயது வரை காமத்தை அனுபவிக்க முடியும்?  கல்விக்கு கால எல்லையே கிடையாது. 


காமத்துக்கு இன்னொருவர் வேண்டும். அந்த இன்னொருவருக்கு சரியான மன நிலை வேண்டும். கல்விக்கு அதெல்லாம் தேவை இல்லை. 


காமம், ஒரு கட்டத்தில் சலிப்பைத் தரும். கல்வி ஒரு நாளும் சலிக்காது. ஒவ்வொரு நாளும் புதுப் புது விடயங்கள் வந்து கொண்டே இருக்கும். 


காமத்தின் சுவையை ஒருவரோடும் மட்டும் தான் பகிர்ந்து கொள்ள முடியும். கல்வியின் சுகத்தை எத்தனை பேரோடு வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ள முடியும். 


காமம், ஒரு எல்லை வரை போகும் . அதற்கு மேல் அதில் என்ன இருக்கிறது?  கல்விக்கு கரையே இல்லை. எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் போகலாம். 


காமத்தினால் வரும் இன்பம், அதை அனுபவிக்கும் ஒருவரோடு முடிந்து விடுகிறது. ஒருவன் சிறந்த கல்விமானாக இருந்தால், அவனால் உலகமே இன்பம் அடையும். 


இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 




Wednesday, August 28, 2024

கம்ப இராமாயணம் - குழந்தை இராமன்

 கம்ப இராமாயணம் - குழந்தை இராமன் 


இராமன் கானகம் சென்ற போது துக்கத்தில் தசரதன் மாண்டான். கைகேயியோ, கோசலையை மாளவில்லை. ஏன்? அவர்களுக்கு அவன் மேல் அன்பு இல்லையா?


தசரதன் இராமன் மேல் கொண்ட அதை என்ன என்று சொல்லுவது?  


அப்பாக்களுக்கு மகன்கள் மேல் உள்ள காதல் சொல்லி மாளாது. மகள் மேல் உள்ள பாசத்தை அப்பாக்கள் கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், மகன்கள் மேல் உள்ள பாசத்தை வெளியில் சொல்லுவது இல்லை. 


அது ஏனோ அப்படி ஆகி விடுகிறது. 


இராமன் சிறு குழந்தையாக தொட்டிலில் கிடக்கிறான். 


தசரதன் தன் மகனைப் பார்த்து உருகுகிறான். 


"என் இராசா, என் உசிரு, என் தங்கம், என் செல்லம்",...என்றெல்லாம் பிள்ளைகளை கொஞ்சுவதைக் கேட்டிருக்கிறோம். 


தசரதன் நினைக்கிறான் , 'இவன் தான் உயிர்" என்று. அதோடு நிறுத்தி இருந்தால் பெரிய விடயம் இல்லை. அவன் ஒரு படி மேலே போகிறான். "இவன் தான் என் உடலும்" என்கிறான். 


அதாவது அவனை தவிர்த்து தனக்கு எதுவும் இல்லை என்கிறான். உயிர் மட்டும் என்றால், உடல் தனது என்று ஆகி விடும். 


உயிரும், உடலும் என்றால் எல்லாம் அவனே. தசதரன் இராமனில் கரைகிறான். 


பாடல் 


காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்

ஆவியும் உடலமும் இலது என அருளின்

மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.



பொருள்


காவியும் = நீலோற்ப மலரும் 


ஒளிர்தரு = ஒளி வீசும் 


கமலமும் = தாமரை மலரும் 


எனவே = போல 


ஓவிய = ஓவியத்தில் எழுதி வைத்த 


எழில் உடை = அழகைக் கொண்ட 


 ஒருவனை  = சிறந்த ஒருவனை 


அலது ஓர் = அவனைத் தவிர்த்து 


ஆவியும் = உயிரும் 


உடலமும் இலது = உடம்பும் இல்லை 


என = என்று 


அருளின் மேவினன் = கருணை மேலிட 


 உலகு உடை வேந்தர் தம் வேந்தன் = உலகத்தை ஆளுகின்ற வேந்தர்களுகெல்லாம் வேந்தனான தசரதன் 


சாதாரண அழகு என்றால் வயதாக வயதாக அது குன்றும். ஓவியத்தில் எழுதிய அழகு என்றால் எத்தனை யுகம் ஆனாலும் அப்படியே இருக்கும். இராமனின் அழகு அழியாத அழகு என்பதற்கு அதை உதாரணமாகச் சொன்னார்.


அளவுக்கு மீறிய அன்பு.


அதனால் தான் பின்னாளில் பிரிவைத் தாங்க முடியவில்லை. 




Tuesday, August 27, 2024

திருக்குறள் - குன்றிமணி போல

 திருக்குறள் - குன்றிமணி போல 


யாரையும் அவர்கள் தோற்றத்தை வைத்து எடை போடக் கூடாது. 


சில துறவிகள் பார்க்க துறவிகள் போல் இருப்பார்கள். துறவிகளுக்கு ஏற்ற உடை, நீண்ட தாடி, பேச்சில் ஒரு மென்மை, நடை, உடை, பாவனை எல்லாம் துறவிகள் போலவே இருக்கும். ஆனால், உள்ளுக்குள் பல கபட எண்ணங்கள் ஓடும். 


எங்கேயிருந்து எவ்வளவு பணம் வரும், யாரிடம் இருந்து பணம் பறிக்கலாம், எந்த சொத்தை அபகரிக்கலாம், எந்தப் பெண்ணை கவிழ்க்கலாம் என்றெல்லாம் மனம் ஓடும். 


அது போன்ற போலித் துறவிகளுக்கு வள்ளுவர் ஒரு உதாரணம் தருகிறார். 


குன்றி மணி இருக்கிறதே, அது ஒரு புறம் சிவப்பாக இருக்கும், மறு புறம் கருப்பாக இருக்கும். 


சிவந்த பக்கத்தை மட்டும் பார்த்தவர்கள், அது முழுவதும் சிவப்புத்தான் என்று அடித்துச் சொல்லுவார்கள். அவர்கள் அந்தக் குன்றிமணியை சற்றே திருப்பிப் பார்த்தால் தெரிந்திருக்கும் அதற்கு ஒரு கரிய பகுதியும் உண்டு என்று. 


பாடல் 


புறம்குன்றி கண்டனைய ரேனும் அகம்குன்றி

மூக்கின் கரியார் உடைத்து


பொருள் 


புறம் = வெளியே 


குன்றி = kகுன்றி மணியைப் போல 


கண்டனைய ரேனும் = பார்க்கும் படி இருந்தாலும், சிவப்பாக, அழகாக இருந்தாலும் (புறத் தோற்றம் அழகாக இருக்கும்) 


அகம்குன்றி =  அகம், மனம், குறை பட்டு, குற்றங்களுடன் 


மூக்கின் கரியார் = குன்றின் மணியின் மூக்கு கருப்பாக உள்ளது போல 


 உடைத்து = உடையவர்களைக் கொண்டது இந்த உலகம் 


நன்றாக பேசுவார், பெரிய பெரிய நூல்களில் இருந்து மேற் கோள் காட்டுவார், உடம்பெல்லாம் சமயச்  சின்னங்கள் இருக்கும். அவற்றைக் கண்டு ஏமாந்து விடக் கூடாது என்கிறார். 


உலகம் ஏமாற்றத் தயாராக இருக்கும். 


நாம் தான் எச்சரிக்கையாக, விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 


போலிச் சாமியார்கள் பணம் பறிக்கிறார்கள். அது ஒரு புறம் இருக்கட்டும். அவர்கள் சொல்வதை எல்லாம் நம்பி பலர் தங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள். அதைச் செய், இதைச் செய், என்று பரிகாரம் எல்லாம் சொல்லி, இருக்கின்ற கொஞ்ச நாளையும் வீணடிப்பார்கள். 


பணம் போனால் போய் விட்டுப் போகட்டும், சம்பாதித்துக் கொள்ளலாம். 


நேர விரயம் இருக்கிறதே, அது சகிக்க முடியாத ஒன்று.  


Saturday, August 24, 2024

நீதி நெறி விளக்கம் - சிற்றுயிர்க்கு உற்ற துணை

 நீதி நெறி விளக்கம் - சிற்றுயிர்க்கு உற்ற துணை 


எதுக்கு படிக்கணும்?  பில் கேட்ஸ் படிச்சா இருக்காரு. பெரிய ஆளா ஆகலையா? காமராஜர் படித்தாரா? பெரிய அரசியல் தலைவரா வரலையா?  படிப்பெல்லாம் தேவை இல்லை என்று இன்றைய தலைமுறையினர் வாதிடுவதை நாம் கண்டிருக்கிறோம். 


இருக்கலாம். சிலர் படிக்காமலேயே பெரிய சாதனைகள் செய்து இருக்கலாம். அதற்காக படிக்காத எல்லோரும் அப்படி செய்வார்கள் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது. 


கல்வியால் எனென்ன பயன்கள் என்று நீதி நெறி விளக்கம் கூறுகிறது. 


"அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கல்வி தரும். நீண்ட குற்றமற்ற புகழைத் தரும். கவலை ஏதாவது வந்தால், அதை மாற்ற உதவி செய்யும். எனவே, மக்களுக்கு கல்வியை விட சிறந்த ஒன்று வேறு இல்லை" 


என்று.


பாடல் 


அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்

புறங்கடை நல் இசையும் நாட்டும் - உறும் கவல் ஒன்று

உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை

சிற்றுயிர்க்கு உற்ற துணை


பொருள் 

அறம் = அறம் 


பொருள் = பொருள் 


இன்பமும் = இன்பம் 


வீடும் = வீடு பேறு 


பயக்கும் = தரும் 


புறங்கடை = வெளி உலகில் 


நல் இசையும் = நல்ல புகழையும் 


நாட்டும் = தரும் 


உறும் கவல்  ஒன்று = வருகின்ற கவலைகளை 


உற்றுழியும் = வந்த பொழுது 


கைகொடுக்கும் = கை கொடுக்கும் 


கல்வியின் = கல்வியைப் போல் 


ஊங்கு இல்லை = சிறந்த ஒன்று இல்லை 

 

சிற்றுயிர்க்கு = சிறிய உயிர்களான மக்களுக்கு 


உற்ற துணை = கிடைத்த துணை 


அறம் = சரியான வாழும் முறை. "விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும்" என்பார் பரிமேலழகர் 


சில பேர் நேர்மையாக வாழ்வார்கள், கையில் காலணா இருக்காது. வறுமையில் வாடுவார்கள். கல்வி பொருளையும் தரும். 


பொருள் இருந்தால் மட்டும் போதுமா?  மனைவி, மக்கள் என்று இன்பம் வேண்டாமா?  வெறும் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது?  கல்வி இன்பத்தையும் தரும். 


சரி, இந்த பொருள், இன்பம் எல்லாம் வீட்டோட சரி. வெளியில் நாலு பேர் நம்மைப் பற்றி புகழ்ந்து பேசும் படி வாழ வேண்டாமா என்றால், கல்வி புகழையும் தரும். 


அவ்வளவுதானா என்றால். இல்லை, வீடு பேறும் தரும். 


ஒழுங்காக போய் கொண்டிருக்கும் வாழ்வில் சில சமயம் ஏதாவது கவலை வந்து விடலாம். இப்ப செய்த தவறினால் அல்ல. முன்பு, முற்பிறவியில் செய்த வினையால் கூட கவலை வரலாம். அப்படி வந்துவிட்டால், கல்வி அந்தக் கவலைகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லித் தரும். 


நாம இருக்கப் போவது என்னமோ கொஞ்ச காலம். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். இந்த கொஞ்சக் காலத்தில் இவை அத்தனையும் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு கல்வியைத் தவிர வேறு எதுவும் இல்லை. 


எளிய, அழகான, கருத்துள்ள பாடல். 





Friday, August 23, 2024

திருக்குறள் - வன்கணார் இல்

 திருக்குறள் - வன்கணார் இல் 


ஒரு குழந்தை ஏதோ ஒரு இனிப்புப் பண்டம் தின்று கொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தையை ஒருவன் ஏமாற்றி அதன் கையில் உள்ள இனிப்பை பிடுங்கி தான் தின்றால் என்றால் அவனை பற்றி நாம் என்ன நினைப்போம்?


சரியான அரக்கனா இருக்கானே, சின்ன பிள்ளையை ஏமாற்றி பிடுங்கித் தின்கிறானே, இவன் எல்லாம் ஒரு மனுஷனா, ஒரு ஈவு இரக்கம் இல்லையா, சீ, இப்படியும் ஒரு பிழைப்பா என்று அவனை நிந்தனை செய்வோம் அல்லவா? 


அதே போல், அப்பாவி மக்களை ஏமாற்றி, "நான் பெரிய துறவி, சொர்கத்துக்கு வழி காட்டுகிறேன், முக்தி தருகிறேன்" என்றெல்லாம் சொல்லி அவர்களிடம் உள்ள பொருள்களை பறித்துக் கொள்ளும் போலிச் சாமியார்களைப் போன்ற கொடுமைக்காரர்கள் இந்த உலகில் இல்லை.


என்கிறார் அள்ளுவர். 


பாடல் 


நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து

வாழ்வாரின் வன்கணார் இல்


பொருள் 


நெஞ்சில் துறவார் = மனதால் துறக்க மாட்டார்கள் 


துறந்தார்போல் = ஆனால் முற்றும் துறந்த்வராய் போல் 


வஞ்சித்து = அப்பாவி, ஏழை மக்களை வஞ்சனை செய்து, அவர்களிடம் உள்ள பொருள்களை பறித்துக் கொண்டு 


வாழ்வாரின்  = வாழ்பவர்களைப் போன்ற 


வன்கணார் = கொடியவர்கள், கெட்டவர்கள் 


இல் = இல்லை. 


வஞ்சனை என்று ஏன் சொன்னார் என்றால், 


முதலாவது, துறவி ஆகாமலேயே துறந்துவிட்டேன் என்று பொய் சொல்லியதால். 


இரண்டாவது, கோவில் கட்ட வேண்டும், யாகம் செய்ய வேண்டும், அன்னதானம் செய்ய வேண்டும் என்று சொல்லி மக்கலியம் இருந்து பணம் வசூலிப்பது.


மூன்றாவது, ஏதோ தாங்கள் பெரிய ஆள் போலவும், மற்றவர்கள் எல்லாம் தன்னை விட தாழ்ந்தவர்கள் என்றும் நினைப்பது. அது உண்மை அல்ல. அவர்கள் உழைத்து சம்பாதிக்கிறார்கள். இவர் உழைப்பே இல்லாமல் பொய் சொல்லி சம்பாதிக்கிறார். 


அப்பாவி ஏழை மக்களை ஏமாற்றி பணம் பிடுங்குவதால், அப்படிப்பட்ட போலிச் சாமியார்களைப் போன்ற கொடுமைக்கார்கள் யாரும் இல்லை என்றார். 


வள்ளுவர் காலத்திலேயே இப்படிப்பட்ட போலிச் சாமியார்கள் இருந்து இருக்கிறர்கள் என்றால் இப்போது கேட்கவே வேண்டாம். துறவிக்கு எதற்கு பணம்?  விட்டவந்தானே துறவி. அப்புறம் என்ன நன்கொடை, உண்டியல், கணக்கு, வழக்கு, சொத்து எல்லாம். 


உண்மையான துறவி எப்படி இருப்பான் என்று பட்டினத்தடிகள் சொல்லுவார்


பேய் போல் திரிந்து, பிணம் போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம் 

நாய் போல் அருந்தி, நரி போல் உழன்று, நன் மங்கையரைத் 

தாய் போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மை சொல்லி

சேய் போல் இருப்பர் கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே!


குழந்தை மாதிரி இருப்பார்களாம். 


மடம், ஆள், அம்பு, சேனை, பல்லக்கு, வாகனம், மூன்று வேளை மூக்குப் பிடிக்க உணவு, கையில் காலில் தங்க நகைகள்...இதெல்லாம் துறவின் இலட்சணமா?


தமிழில் ஒரு சொல் வழக்கு உண்டு. யார் எப்போது அழாக இருப்பார்கள் என்று...


ஆண்கள் படித்தால் அழகு 

பெண்கள் மணந்தால் அழகு 

துறவிகள் மெலிந்தால் அழகு 

நான்கு கால் பிராணிகள் கொழுத்தால் அழகு 


துறவிகள் மெலிந்து இருக்க வேண்டும். நல்ல வாட்ட சாட்டமா இருந்தால் அவன் துறவி அல்ல என்று தெரிந்து கொள்ள வேண்டும். 







Thursday, August 22, 2024

நீதி நெறி விளக்கம் - கடவுள் வாழ்த்து

 நீதி நெறி விளக்கம் - கடவுள் வாழ்த்து 


கடவுள் வாழ்த்து என்றால் எப்படி இருக்கும்? கடவுளை வாழ்த்தும் பாடலகத்தானே இருக்க வேண்டும்?  


நீதி நெறி விளக்கம் அதில் ஒரு புதுமையை கொண்டு வருகிறது. 


அறவுரைகள் சொல்லி, ..அப்படி இருக்க கடவுளை வணங்காமல் இருப்பது எப்படிச் சரி என்று ஆரம்பிக்கிறது.


பாடல் 


நீரில் குமிழி இளமை நிறை செல்வம்

நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்

எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே

வழுத்தாதது எம்பிரான் மன்று


பொருள் 


நீரில் குமிழி இளமை  = நீர் மேல் தோன்றும் குமிழி போன்றது இளமை 


நிறை செல்வம் = நிறைகின்ற செல்வம் இருக்கிறதே அது 


நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் = நீர் மேல் சுருண்டு எழும் அலைகள் 


நீரில் எழுத்து ஆகும் யாக்கை  = தண்ணீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றது இந்த நிலையில்லா உடம்பு 




நமரங்காள் = நம்மவர்களே 


என்னே வழுத்தாதது = போற்றாமல் இருப்பது என்ன காரியம் தொட்டு 


எம்பிரான் = இறைவன் வீற்றிருக்கும் 


மன்று = மன்றம், கனக சபை


உடம்பு, இளமை, செல்வம் - இந்த மூன்றும் நிலை இல்லாதது.


இது எங்களுக்குத் தெரியாதா ? இதைச் சொல்ல ஒரு ஆள் வேண்டுமா என்று கேட்கலாம். 


தெரியும் ஆனால் தெரியாது. 


பணம் வைத்திருக்கும் purse தொலைந்து போனால் மனம் எவ்வளவு வருந்துகிறது?  பங்குச் சந்தையில் போட்ட பணம் நட்டமானால் எவ்வளவு வருத்தம் வருகிறது. தங்கம் விலை குறைந்தால் மனம் என்ன பாடுபடுகிறது. விற்ற பின்னும், வீட்டின் மதிப்பு உயர்ந்ததை எண்ணி மனம் நோகாமலா இருக்கிறது?


நிலையில்லா செல்வத்தின் மேல் ஏன் இவ்வளவு பற்று. அது போகும் என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு வருத்தம்?


உடம்பு நிலையில்லாதது. தெரியும். நெருங்கியவர்கள் யாராவது இறந்து போனால் எவ்வளவு வருத்தம் வருகிறது. நிலையில்லாதது போனது பற்றி என்ன வருத்தம். நிலை இல்லாதது என்பது கருத்தளவில் நிற்கிறது. உண்மை உள்ளே செல்லவில்லை. சென்றால் வருத்தம் வருமா?  


ஊருக்கு பேருந்தில் போகிறோம். போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விட்டால், ஐயோ ஊர் வந்து விட்டதே, இந்தப் பேருந்தை விட்டு நான் எப்படி பிரிவேன் என்று யாராவது வருந்துவார்களா? மாட்டார்கள். ஏன் என்றால் பிரிவோம் என்பது நிச்சயமாகத் தெரியும் என்பதால். மற்றவை அப்படி அல்ல. பிரிவு வரலாம், ஒரு வேளை வராமலும் இருக்கலாம் என்று ஒரு ஆசை மனத்து ஓரம் இருப்பதால் இந்த சங்கடங்கள். 


இளமை போகும். எவ்வளவு மை பூசினாலும், எவ்வளவு அலங்காரம் பண்ணினாலும், இளமை போகும். பல் விழும். முடி நரைக்கும். முட்டு வலிக்கும். காது கேட்பது குறையும். கண் பார்வை மங்கும். வருந்தி ஏதாவது பயன் உண்டா?


இப்படி உடம்பும், இளமையும், செல்வமும் நிலையில்லை என்று தெரிந்த பின், நிலையாக இருப்பது என்ன என்று அறிய வேண்டாமா?  நிலையானது இறைவன் ஒருவனே என்று கண்டு சொன்னார்கள். அவனைப் பிடிக்க வேண்டாமா என்று கடவுள் வாழ்த்தை தொடங்குகிறது நீதி நெறி விளக்கம். 


இதில் உள்ள பல பாடல்களை நாம் பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். மீண்டும் ஒரு நினைவூட்டிக் கொள்வது ஒரு சுகம்தான். 


படிக்கவில்லை என்றாலோ அல்லது மறந்து விட்டாலோ, மீண்டும் ஒரு முறை படிப்போம். 


மிக மிக எளிமையான, இனிமையான, அர்த்தம் செறிந்த பாடல்கள். 


102 பாடல்கள். 


Wednesday, August 21, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்ற இளவரன்

 கம்ப இராமாயணம்  - இராமன் என்ற இளவரன் 

https://interestingtamilpoems.blogspot.com/2024/08/blog-post_21.html


இராமனின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலில் அவன் எப்படி இருந்தான் என்று கம்பன் வாயிலாக பார்க்க இருக்கிறோம். 


ஏனோ தெரியவில்லை, கம்பன் இராமனின் குழந்தைப் பருவத்தை பற்றி பாடமலேயே விட்டுவிட்டான். அல்லது அவன் பாடி அந்த ஏடுகள் நமக்குக் கிடைக்கவில்லையோ என்னவோ. அந்தக் குறை தீர ஆழ்வார்கள் இராமனின் குழந்தைப் பருவத்தை பிரபந்தத்தில் பாடி அனுபவித்து இருக்கிறார்கள். 


கம்பன் காட்டும் இளவரசனான இராமனைப் பார்ப்போம். 


சக்ரவர்த்தித் திருமகன். செல்வத்துக்கு ஒரு குறைவில்லை. அதிகாரம், ஒரு பொருட்டே இல்லை. பட்டத்து இளவரசன் என்றால் ஏறக் குறைய அவன் அரசன்தான். 


மற்ற பணக்கார வீட்டுப் பிள்ளைகள் எப்படி இருக்கும்? அவர்கள் தங்கள் வீட்டில் வேலை பார்க்கும் வண்டி ஓட்டுபவர், வீட்டு வேலை செய்யும் ஆட்களை எப்படி நடத்துவார்கள் என்று நாம் அறிவோம். 


ஆனால் இராமன் எப்படி இருக்கிறான் என்று கம்பன் காட்டுகிறான். 


அவ்வளவு பணிவு, அவ்வளவு அன்பு, கரிசனம், மக்கள் மேல் அவ்வளவு வாஞ்சை. 


வசிட்டர் குருகுலத்தில் இருந்து மாலை இராமனும் அவன் சகோதர்களும் அரண்மனை திரும்புகிறார்கள். வருகிற வழியெல்லாம் மக்கள் இராமனைக் காண ஆவலோடு காத்து இருக்கிறார்கள். 


இன்றைய அரசியல் தலைவர்கள் போல் கையை ஆட்டிவிட்டு போகவில்லை. 


அவர்களை நெருங்கி விசாரிக்கிறான். 


அதுவும் மிகுந்த கருணையோடு, மலர்ந்த முகத்தோடு கேட்கிறான் ?


"நான் உங்களுக்கு எதாவது செய்யணுமா? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டி இருக்கிறதா?  உங்களுக்கு ஒரு கஷ்டமும் இல்லையே?  வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? பிள்ளைகள் எல்லாம் ஆரோக்கியமா இருக்காங்களா?"



பாடல் 


 எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்

முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா

‘எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?

மதிதரு குமரரும் வலியர் கொல்? ‘எனவே.


பொருள் 


எதிர் வரும்  = எதிரில் வரும் 


அவர்களை  = அந்த மக்களை 


எமை உடை இறைவன் = எங்களை ஆட்கொள்ளும் இறைவனான இராமன் 


முதிர் = மிகுந்த 


தரு கருணையின் = அள்ளித்தரும் கருணையோடு 


முகமலர் = முகம் என்ற மலர் 


ஒளிரா = ஒளி விடும்படி (முகம் மலர்ந்து) 


‘எது வினை?  = ஏதாவது செய்யணுமா?  


இடர் இலை? = உங்களுக்கு துன்பம் ஒன்றும் இல்லையே? 


இனிது நும் மனையும்? = வீட்டில் உங்கள் மனைவி இனிதாக இருக்கிறாளா ?


மதிதரு குமரரும்  = அறிவுள்ள பிள்ளைகளும் 


வலியர் கொல்? = உடல்நலக் குறை ஒன்றும் இல்லாமல் ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கிறார்களா 


எனவே = என்று வினவினான் 


இதெல்லாம் அவன் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. பேசாமல் தேரில் ஏறி நேரே அரண்மனைக்குப் போய் இருக்கலாம். 


அதை விடுத்து, மக்கள் மேல் உள்ள அன்பினால், அவர்களை அணுகி அவர்களை நலம் விசாரிக்கிறான். 


பெண்டாட்டி, பிள்ளைகள் நலமா?  சந்தோஷமா இருக்கீங்களா?  ஏதாவது உங்களுக்கு நான் செய்யணுமா? என்று. 


"எமை ஆளும் இறை" என்று கம்பன் ஆரம்பிக்கிறான். 


இறைவன் இறங்கி மனித உருவில் வந்து  மக்கள் குறை கேட்டதாக காட்டுகிறான். 


இப்படி ஒரு தலைவன், அரசன் கிடைக்கமாட்டானா என்று மக்கள் ஏங்கும்படி கம்பன் இராமனைக் காட்டுகிறான். 


சின்ன வயதில் வந்த முதிர்ச்சி. 


கம்பன் காட்டும் இளவல். 



Tuesday, August 20, 2024

கம்ப இராமாயணம் - இராமன் என்றோர் மானுடன்

கம்ப இராமாயணம் - இராமன் என்றோர் மானுடன் 



இராமன் பரம்பொருளின் அவதாரம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. 

கம்ப இராமாயணத்தில், கம்பன் இராமனை தெய்வம் என்றே கொண்டாடுகிறான். ஒவ்வொரு காண்டத்திலும், அவனை முழு முதற் கடவுளாகவே துதிக்கிறான். 

இருந்தும், காப்பியம் முழுக்க அவனை ஒரு மாநிடனாகக் காட்டுகிறான். 

குடிகளின் நலம் விசாரிக்கும் அன்பான அரசனாக, தந்தை சொல் கேட்கும் மகனாக, தாயாரை வணங்கும் பிள்ளையாக, சீதையைக் கண்டவுடன் மனதைப் பறி கொடுக்கும் ஒரு இளைஞனாக,  ஜடாயுவுக்கு ஈமக் கடன் செய்கையில் கண்ணீர் விட்டு அழும் ஒரு உறவினனாக, குகன், வீடனனிடம் உடன் பிறவா சகோதரனாக, சீதையைப் பிரிந்து நின்று கலங்கும் ஒரு அன்பான கணவனாக, கோபம் கொள்ளும் அரசனாக, எதிரியையும் பாராட்டும் ஒரு வீரனாக இப்படி பல கோணங்களில் இராமன் இந்த அவதாரத்தில் எப்படி ஒரு மனிதனாக வாழ்ந்தான் என்று கம்பன் காட்டுகிறான். 

இராமன் கடவுள் என்று சொல்லி விட்டால், கடவுள் செய்வதை எல்லாம் நாம் செய்ய முடியுமா என்று இராமன் வாழ்ந்து காட்டிய வழியை யாரும் பின் பற்ற மாட்டார்கள். 

கிருஷ்ணன் காட்டிய வழியில் போக யாரும் விரும்ப மாட்டார்கள். அது முடியாது. அவன் சக்ராயுதம் கொண்டு சூரியனை மறைக்கிறான், விஸ்வரூப தரிசனம் தருகிறான்...இதெல்லாம் நம்மால் ஆகுமா?  இறைவனின் லீலை என்று இரசிக்கலாமே தவிர செய்ய முடியாது. 

மாறாக இராமன், அழுகிறான், தற்கொலைக்கு முயல்கிறான், தளர்ந்து விடுகிறான், தான் செய்த செயலை எண்ணி நோகிறான்....

மானுடம் வென்றதம்மா என்பான் கம்பன். 


எப்படி மனிதனாக அவதரித்த இராமன், மனிதனாக வாழ்ந்து காட்டினான் என்று கம்பன் வாயிலாக பார்ப்போம். 

இது எனது சிறு முயற்சி. உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன். 


 

Monday, August 19, 2024

திருக்குறள் - பற்றற்றேம் என்பார்

திருக்குறள் - பற்றற்றேம் என்பார்


ஒரு தவறு செய்தால் அதனால் என்ன விளையும் என்று தெரிந்தால் தவறு செய்ய மாட்டோம் அல்லவா? 


கொலை செய்தால் தூக்கில் போடுவார்கள் என்று தெரிந்ததால் கொலை செய்ய அஞ்சுவார்கள். கொலை செய்தால் நூறு ரூபாய் அபராதம் என்று இருந்தால் நிறைய கொலை செய்வார்கள் அல்லவா?


உண்மையிலேயே துறவு மேற்கொள்ளாமல், துறந்து விட்டோம் என்று பொய் வேடம் போட்டால் என்ன ஆகும் ? அதன் விளைவு என்ன?


வள்ளுவர் கூறுகிறார், "பொய்யாக துறவி வேடம் போடலாம், அதனால் பெரிய மதிப்பும் மரியாதையும் கிடைக்கலாம். ஆனால், பின்னால் ஐயோ இதை ஏன் செய்தோம் என்று நினைத்து நினைத்து வருந்துவாய்" என்று. 


பாடல் 


பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று

ஏதம் பலவும் தரும்


பொருள் 


பற்றற்றேம் = பற்றுகளை விட்டு விட்டேன் 


என்பார் = என்று சொல்லுவார் 


படிற்றொழுக்கம் = மறைந்து செய்யும் செயல்கள் 


எற்றெற்றென்று = எற்று எற்று என்று. ஏன் செய்தோம், ஏன் செய்தோம் என்று 

 

ஏதம் = துன்பம் 


பலவும் தரும் = பலவற்றையும் தரும். 


அது என்ன துன்பம் என்று சொல்லவில்லை. 


ஏன் சொல்லவில்லை என்று யோசிக்கலாம். 


இந்த மாதிரி துன்பங்கள் வரும் என்று ஒருவேளை சொல்லி இருந்தால், "அவ்வளவுதானே, நான் பார்த்துக் கொள்கிறேன் " என்று சில பேர் கிளம்பி விடுவார்கள். 


மாறாக, "செய்யாதே, செய்தால் என்னவெல்லாம் துன்பம் வரும் என்று எனக்கே தெரியாது" என்று சொல்லி  பயமுறுத்துகிறார் வள்ளுவர். 


இதில் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கும் போல என்று அந்தத் தவற்றினை செய்ய நினைப்பவன் கொஞ்சம் அஞ்சி பின் வாங்கலாம். 


மேலும், 


"பற்றற்றம் என்பார்"  என்பதில், பற்றை விடமால், விட்டுவிட்டேன் என்று சொல்லுபவர்கள் என்று பொருள் கொள்கிறார் பரிமேலழகர். வாயால் சொல்லுவார்கள். உண்மையில் விட்டிருக்க மாட்டார்கள் என்று பொருள். பற்றுகளை விட்டவன் ஏன் அதைச் சொல்லிக் கொண்டு திரியப் போகிறான்?  "ஹா அவர் பெரிய துறவி" என்று எல்லோரும் புகழ வேண்டும் என்ற ஆசையினால், பற்றினால் தானே சொல்லித் திரிவார்கள்?  உண்மையிலேயே பற்றினை விட்டவன் ஊரெல்லாம் சொல்லித் திரிய மாட்டான்.


பட்டினத்தார் "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடைவழிக்கே" என்ற ஒரு வாசகத்தை படித்தவுடன் துறவியானார். அவரின் கணக்கப் பிள்ளை அவரிடம் வந்து "இந்த சொத்தெலாம் என்ன செய்யட்டும் " என்று கேட்டார். 


பட்டினத்தார், யார் யாருக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்று சொலல்வில்லை. 


"எல்லாத்தையும் எடுத்து தெருவில் போடு யாருக்கு எது வேண்டுமோ எடுத்துக் கொண்டு போகட்டும் "என்றார். பற்றினை விட்டு விட்டால் பின் அந்தப் பொருள் யாருக்குப் போனால் என்ன?


அது ஒரு புறம் இருக்கட்டும். 


துறப்பதைத் தவிர வாழ்வில் வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்ன?  வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் துறவறத்தை நமக்குச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. 


இருந்தும், கணவன், மனைவி, பிள்ளைகள், பேரப் பிள்ளைகள், வீடு வாசல்  என்று மனம் பற்றிக் கொண்டு இருக்கிறது. அப்படியா, விடமாட்டாயா, இந்தா பிடி துன்பம் என்று வாழ்க்கை துன்பத்தைத் தருகிறது. இல்லை, அப்படியும் விடமாட்டேன் என்று அடம் பிடித்தால் மேலும் மேலும் துன்பத்தைத் தந்து கொண்டே இருக்கிறது. பற்றை விடும் வரை வாழ்க்கை விடுவதில்லை நம்மை. 


இதை எவ்வளவு சீக்கிரம் புரிந்து கொள்கிறோமோ, அவ்வளவு நல்லது. 


விட மாட்டேன், அது எப்படி விட முடியும் என்று இறுகப் பற்றிக் கொண்டு இருந்தால், அடி விழுந்து கொண்டே இருக்கும். பிடியை விடும் வரை அடி தொடரும். 


துறவறம், எளிதான அடுத்த படி.  


Wednesday, August 7, 2024

திருக்குறள் - மறைந்து இருந்து பறவையைப் பிடித்தால் போல்

 திருக்குறள் - மறைந்து இருந்து பறவையைப் பிடித்தால் போல் 


போலிச் சாமியார்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள்?  போலியாக துறவி வேடம் போடுவதால் அவர்களுக்கு என்ன பயன்?  என்ன இலாபம் கிடைக்கிறது?  ஏதோ ஒன்று கிடைப்பதால்தானே அவர்கள் அந்தப் போலி வேடத்தைப் போடுகிறார்கள் ?


முதலில், மக்கள் மத்தியில் ஒரு மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் கிடைக்கிறது. அவர்களைப் பார்க்க மக்கள் காத்துக் கிடக்கிறார்கள். 


இரண்டாவது, செல்வம். மக்கள் காணிக்கை என்ற பெயரில் தங்கள் செல்வத்தை அந்தப் போலிச் சாமியார்களுக்கு தருகிறார்கள். இன்று கூட துறவிகள் என்று சொல்பவர்கள் பெரிய சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கிறார்கள். நிலம், தங்கம், வங்கியில் கோடிக்கணக்கான பணம், என்று பெரிய மிராசுதார்கள் போல் இருக்கிறார்கள். 


மூன்றாவது, பெண்கள்.  iஇது பற்றி மேலும் சொல்ல வேண்டாம். 


துறவி என்ற போர்வையில் மறைந்து கொண்டு, அவர்கள் இவற்றை எல்லாம் அடைகிறார்கள். 


இது எப்படி இருக்கிறது என்றால், புதரில் மறைந்து இருந்து வேடன் பறவைகளை வலை விரித்துப் பிடிப்பது போல இருக்கிறது என்கிறார் வள்ளுவர். 


பாடல் 


தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து

வேட்டுவன் புள்சிமிழ்த்து அற்று


பொருள் 


தவம்மறைந்து = தவ வேடத்தின் பின் மறைந்து கொண்டு 


அல்லவை செய்தல் = அந்த தவக் கோலத்துக்கு ஒவ்வாதன செய்தல் 


புதல்மறைந்து = புதரில் மறைந்து இருந்து 


வேட்டுவன் = வேடன் 


புள்சிமிழ்த்து அற்று = பறவைகளைப்  பிடிப்பது போல 


பறவைகளுக்குத் தெரியாது வேடன் மறைந்து இருக்கிறான் என்று. தெரியாமல் வந்து மாட்டிக் கொள்ளும். 


இன்றும் கூட பல சாமியார்களை பார்க்கப் போகும் சாதாரண மக்களைக் கேட்டால் "அவர் போல உண்டா, அவர் சொல்வது அப்படியே நடக்கும், அவர் ஒரு நடமாடும் தெய்வம்" என்றுதான் சொல்லுவார்கள். 


வேடத்தின் பின் இருக்கும் வேடனை அவர்களுக்குத் தெரியாது. அப்பாவி மக்கள். 


போலிச் சாமியார்களிடம் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கிறார். 






Tuesday, August 6, 2024

கலித்தொகை - எனக்கு எப்படித் தெரியும் ?

 கலித்தொகை - எனக்கு எப்படித் தெரியும் ?


அவளோடு இனிக்க இனிக்க பேசி, காதல் செய்து, அவளைக் கூடிக் கலந்த பின் அவளை விட்டு பொருள் தேடி வெளிநாடு சென்று விடுகிறான். இன்று போல் அன்று தொலைபேசி, மின் அஞ்சல், whatsapp எல்லாம் கிடையாது. 


அவனிடம் இருந்து ஒரு தகவலும் இல்லை. அவள் பதறுகிறாள். ஒரு வேளை வர மாட்டானோ?  வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டு அந்த ஊரிலேயே இருந்து விடுவானோ?  என்னை மறந்து இருப்பானோ என்றெலாம் அவள் கவலைப்படுகிறாள். 


" நீ என்ன அன்று மென்மையாக பேசி, சிரித்து, கலந்த போது, அது எல்லாம் பொய்யாகப் போகும் என்று எனக்கு எப்படித் தெரியும். இன்று ஊரே நம்மைப் பற்றிப் பேசுகிறது. உன் மனம் கல் மனம் தான் போல் இருக்கிறது. சுட்டெரிக்கும் இந்த உச்சி வெயிலை விட கொடுமையான பாலை நிலத்தின் வழியே நீ செல்கிறாய். இப்படி என்னை விட்டுப் போக உனக்கு எப்படி மனம் வந்தது. பெண்ணின் மனதை புரிந்து கொள்ள முடியாத உன்னை எப்படி ஒரு நல்ல ஆண் மகன் என்று நான் சொல்ல முடியும் ? 


நீ போ. உன் இஷ்டத்துக்குப் போய் கொள். போயி, அறம் அல்லாத செய்து (என் மேல் அன்பு இல்லாததால் அது அறம் அல்லாதது) நிறைய பொருள் சேர். அது தானே உனக்கு வேண்டும்?  அப்படி ஓடி ஓடி பொருள் சேர்க்கும் போது, நம் ஊரில் இருந்து யாராவது அங்கு வந்தால், அவர்களிடம் என்னைப் பற்றி விசாரிக்காதே. விசாரித்தால் உன் பொருள் சேர்க்கும் வினை தடை படும். ஏன் தெரியுமா? நான் இறந்து விட்டேன் என்று அவர்கள் உன்னிடம் சொல்லுவார்கள். அந்தக் கவலை உன்னை வருத்தும். உன் ஊக்கம் குறையும்...."


ஒரு இளம் பெண்ணின் கவலை, ஏக்கம், பயம், வெறுப்பு, சந்தேகம் எல்லாம் குழைத்து குழைத்து தீட்டிய பாடல். 


பாடல் 


   


செவ்விய தீவிய சொல்லி, அவற்றொடு

பைய முயங்கிய அஞ்ஞான்று, அவை எல்லாம்

பொய்யாதல் யான் யாங்கு அறிகோ மற்று? ஐய!

அகல் நகர் கொள்ளா அலர் தலைத் தந்து,

பகல் முனி வெஞ் சுரம் உள்ளல் அறிந்தேன்;               5

மகன் அல்லை மன்ற, இனி

செல்; இனிச் சென்று நீ செய்யும் வினை முற்றி,

அன்பு அற மாறி, 'யாம் உள்ளத் துறந்தவள்

பண்பும் அறிதிரோ?' என்று, வருவாரை

என் திறம் யாதும் வினவல்; வினவின்,            10

பகலின் விளங்கு நின் செம்மல் சிதைய,

தவல் அருஞ் செய் வினை முற்றாமல், ஆண்டு ஓர்

அவலம் படுதலும் உண்டு.


பொருள் 



செவ்விய = நேரம், தருணம், என்னோடு பழகிய அந்தக் காலத்தில் 


தீவிய சொல்லி = இனிமையாகப் பேசி 


அவற்றொடு = அப்படி பேசிக் கொண்டே 


பைய = மெல்ல 


முயங்கிய = என்னோடு கலந்த 


அஞ்ஞான்று = அன்று 


அவை எல்லாம் = அது எல்லாம் (பேசியதும், பழகியதும்) 


பொய்யாதல் = பொய்யாகும் 


யான் = நான் 


யாங்கு அறிகோ மற்று? = நான் எப்படி அறிவேன் (அவ்வளவு வெகுளி) 


ஐய! = ஐயனே 


அகல் நகர்  =  ஊர் எல்லாம் 


கொள்ளா = பேசி மாளாமல் 


அலர் = புறம் பேசுதல் 


தலைத் தந்து = வாய்ப்பு தந்து (ஊருக்கே தெரியும். எல்லோரும் நம்மைப் பற்றி பேசுகிறார்கள்) 


பகல் முனி = உச்சி வெயிலை விட 


வெஞ் சுரம் =  கடுமையான 


உள்ளல் அறிந்தேன்; = உன் உள்ளத்தை இன்று அறிந்து கொண்டேன் 


மகன் அல்லை மன்ற = ஒரு பெண்ணின் தவிப்பை, அன்பை அறிந்து கொள்ள முடியாத உன்னை ஆண் மகன் என்று கூற மாட்டேன் 


இனி செல் = இனி நீ போ 


இனிச் சென்று = நீ போயி 


நீ செய்யும் வினை முற்றி = உன் வேலையை பார்த்துக் கொண்டு 


அன்பு = அன்பும் 


அற மாறி = அறமும் மாறி 


 'யாம் உள்ளத் துறந்தவள் = "என் உள்ளத்தை விட்டு நான் தூர எறிந்தவள்"


பண்பும் அறிதிரோ?' = "எப்படி இருக்கிறாள்"


 என்று = என்று 


வருவாரை = நம் ஊரில் இருந்து அங்கு வருபவர்களை 


என் திறம் = என்னைப் பற்றி 


யாதும் வினவல் = எதுவும் கேட்காதே 


வினவின் = கேட்டால் 


பகலின் விளங்கு = பகலை விட சிறந்து ஒளி விடும் 


நின் செம்மல் = உன் பெருமை 


சிதைய = சிதையும் 


தவல் = குறைபடும் 


அருஞ் செய் = அருமையான உன் வேலை 


வினை முற்றாமல் = முற்றுப் பெறாமல் 


ஆண்டு ஓர் = அப்படி ஒரு 


அவலம் = துன்பம் 


படுதலும் உண்டு = நிகழ்வும் வாய்ப்பு இருக்கிறது 


உன் வேலை தடை படும் ஏன் என்றால், நான் உன் பிரிவைத் தாங்காமல் இறந்து விட்டேன் என்று சொல்லுவார்கள். அதைக் கேட்டு உன் முனைப்பு தடைபடும் என்கிறாள். 


படித்த பின் மனம் கனக்கிறது அல்லவா?