நீதி நெறி விளக்கம் - சிற்றுயிர்க்கு உற்ற துணை
எதுக்கு படிக்கணும்? பில் கேட்ஸ் படிச்சா இருக்காரு. பெரிய ஆளா ஆகலையா? காமராஜர் படித்தாரா? பெரிய அரசியல் தலைவரா வரலையா? படிப்பெல்லாம் தேவை இல்லை என்று இன்றைய தலைமுறையினர் வாதிடுவதை நாம் கண்டிருக்கிறோம்.
இருக்கலாம். சிலர் படிக்காமலேயே பெரிய சாதனைகள் செய்து இருக்கலாம். அதற்காக படிக்காத எல்லோரும் அப்படி செய்வார்கள் என்று அர்த்தம் பண்ணிக் கொள்ளக் கூடாது.
கல்வியால் எனென்ன பயன்கள் என்று நீதி நெறி விளக்கம் கூறுகிறது.
"அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும் கல்வி தரும். நீண்ட குற்றமற்ற புகழைத் தரும். கவலை ஏதாவது வந்தால், அதை மாற்ற உதவி செய்யும். எனவே, மக்களுக்கு கல்வியை விட சிறந்த ஒன்று வேறு இல்லை"
என்று.
பாடல்
அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்
புறங்கடை நல் இசையும் நாட்டும் - உறும் கவல் ஒன்று
உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியின் ஊங்கு இல்லை
சிற்றுயிர்க்கு உற்ற துணை
அறம் = அறம்
பொருள் = பொருள்
இன்பமும் = இன்பம்
வீடும் = வீடு பேறு
பயக்கும் = தரும்
புறங்கடை = வெளி உலகில்
நல் இசையும் = நல்ல புகழையும்
நாட்டும் = தரும்
உறும் கவல் ஒன்று = வருகின்ற கவலைகளை
உற்றுழியும் = வந்த பொழுது
கைகொடுக்கும் = கை கொடுக்கும்
கல்வியின் = கல்வியைப் போல்
ஊங்கு இல்லை = சிறந்த ஒன்று இல்லை
சிற்றுயிர்க்கு = சிறிய உயிர்களான மக்களுக்கு
உற்ற துணை = கிடைத்த துணை
அறம் = சரியான வாழும் முறை. "விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும்" என்பார் பரிமேலழகர்
சில பேர் நேர்மையாக வாழ்வார்கள், கையில் காலணா இருக்காது. வறுமையில் வாடுவார்கள். கல்வி பொருளையும் தரும்.
பொருள் இருந்தால் மட்டும் போதுமா? மனைவி, மக்கள் என்று இன்பம் வேண்டாமா? வெறும் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது? கல்வி இன்பத்தையும் தரும்.
சரி, இந்த பொருள், இன்பம் எல்லாம் வீட்டோட சரி. வெளியில் நாலு பேர் நம்மைப் பற்றி புகழ்ந்து பேசும் படி வாழ வேண்டாமா என்றால், கல்வி புகழையும் தரும்.
அவ்வளவுதானா என்றால். இல்லை, வீடு பேறும் தரும்.
ஒழுங்காக போய் கொண்டிருக்கும் வாழ்வில் சில சமயம் ஏதாவது கவலை வந்து விடலாம். இப்ப செய்த தவறினால் அல்ல. முன்பு, முற்பிறவியில் செய்த வினையால் கூட கவலை வரலாம். அப்படி வந்துவிட்டால், கல்வி அந்தக் கவலைகளை எப்படி சமாளிப்பது என்று சொல்லித் தரும்.
நாம இருக்கப் போவது என்னமோ கொஞ்ச காலம். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு நூறு வயது வரை வாழ்வோம். இந்த கொஞ்சக் காலத்தில் இவை அத்தனையும் கிடைக்க வேண்டும் என்றால், அதற்கு கல்வியைத் தவிர வேறு எதுவும் இல்லை.
எளிய, அழகான, கருத்துள்ள பாடல்.
ஆம். எளிய ஆனால் கருத்துள்ள பாடல் தான்
ReplyDelete