நீதி நெறி விளக்கம் - கடவுள் வாழ்த்து
கடவுள் வாழ்த்து என்றால் எப்படி இருக்கும்? கடவுளை வாழ்த்தும் பாடலகத்தானே இருக்க வேண்டும்?
நீதி நெறி விளக்கம் அதில் ஒரு புதுமையை கொண்டு வருகிறது.
அறவுரைகள் சொல்லி, ..அப்படி இருக்க கடவுளை வணங்காமல் இருப்பது எப்படிச் சரி என்று ஆரம்பிக்கிறது.
பாடல்
நீரில் குமிழி இளமை நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் - நீரில்
எழுத்து ஆகும் யாக்கை நமரங்காள் என்னே
வழுத்தாதது எம்பிரான் மன்று
பொருள்
நீரில் குமிழி இளமை = நீர் மேல் தோன்றும் குமிழி போன்றது இளமை
நிறை செல்வம் = நிறைகின்ற செல்வம் இருக்கிறதே அது
நீரில் சுருட்டும் நெடுந்திரைகள் = நீர் மேல் சுருண்டு எழும் அலைகள்
நீரில் எழுத்து ஆகும் யாக்கை = தண்ணீர் மேல் எழுதிய எழுத்துப் போன்றது இந்த நிலையில்லா உடம்பு
நமரங்காள் = நம்மவர்களே
என்னே வழுத்தாதது = போற்றாமல் இருப்பது என்ன காரியம் தொட்டு
எம்பிரான் = இறைவன் வீற்றிருக்கும்
மன்று = மன்றம், கனக சபை
உடம்பு, இளமை, செல்வம் - இந்த மூன்றும் நிலை இல்லாதது.
இது எங்களுக்குத் தெரியாதா ? இதைச் சொல்ல ஒரு ஆள் வேண்டுமா என்று கேட்கலாம்.
தெரியும் ஆனால் தெரியாது.
பணம் வைத்திருக்கும் purse தொலைந்து போனால் மனம் எவ்வளவு வருந்துகிறது? பங்குச் சந்தையில் போட்ட பணம் நட்டமானால் எவ்வளவு வருத்தம் வருகிறது. தங்கம் விலை குறைந்தால் மனம் என்ன பாடுபடுகிறது. விற்ற பின்னும், வீட்டின் மதிப்பு உயர்ந்ததை எண்ணி மனம் நோகாமலா இருக்கிறது?
நிலையில்லா செல்வத்தின் மேல் ஏன் இவ்வளவு பற்று. அது போகும் என்று தெரிந்தும் ஏன் இவ்வளவு வருத்தம்?
உடம்பு நிலையில்லாதது. தெரியும். நெருங்கியவர்கள் யாராவது இறந்து போனால் எவ்வளவு வருத்தம் வருகிறது. நிலையில்லாதது போனது பற்றி என்ன வருத்தம். நிலை இல்லாதது என்பது கருத்தளவில் நிற்கிறது. உண்மை உள்ளே செல்லவில்லை. சென்றால் வருத்தம் வருமா?
ஊருக்கு பேருந்தில் போகிறோம். போய்ச் சேர வேண்டிய இடம் வந்து விட்டால், ஐயோ ஊர் வந்து விட்டதே, இந்தப் பேருந்தை விட்டு நான் எப்படி பிரிவேன் என்று யாராவது வருந்துவார்களா? மாட்டார்கள். ஏன் என்றால் பிரிவோம் என்பது நிச்சயமாகத் தெரியும் என்பதால். மற்றவை அப்படி அல்ல. பிரிவு வரலாம், ஒரு வேளை வராமலும் இருக்கலாம் என்று ஒரு ஆசை மனத்து ஓரம் இருப்பதால் இந்த சங்கடங்கள்.
இளமை போகும். எவ்வளவு மை பூசினாலும், எவ்வளவு அலங்காரம் பண்ணினாலும், இளமை போகும். பல் விழும். முடி நரைக்கும். முட்டு வலிக்கும். காது கேட்பது குறையும். கண் பார்வை மங்கும். வருந்தி ஏதாவது பயன் உண்டா?
இப்படி உடம்பும், இளமையும், செல்வமும் நிலையில்லை என்று தெரிந்த பின், நிலையாக இருப்பது என்ன என்று அறிய வேண்டாமா? நிலையானது இறைவன் ஒருவனே என்று கண்டு சொன்னார்கள். அவனைப் பிடிக்க வேண்டாமா என்று கடவுள் வாழ்த்தை தொடங்குகிறது நீதி நெறி விளக்கம்.
இதில் உள்ள பல பாடல்களை நாம் பள்ளிப் பருவத்தில் படித்திருப்போம். மீண்டும் ஒரு நினைவூட்டிக் கொள்வது ஒரு சுகம்தான்.
படிக்கவில்லை என்றாலோ அல்லது மறந்து விட்டாலோ, மீண்டும் ஒரு முறை படிப்போம்.
மிக மிக எளிமையான, இனிமையான, அர்த்தம் செறிந்த பாடல்கள்.
102 பாடல்கள்.
நீர் நீர் நீர் என்று இருப்பது அருமை
ReplyDelete