Wednesday, November 9, 2016

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?

இராமாயணம் - பரதன் 14 - “தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், ஆசிரியன் என்பது எல்லாம் ஒருவரை சேர்ந்தது அல்ல. அது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. 

பிள்ளையை பெற்றவள் எல்லாம் தாயாக முடியாது. தாய் என்பது, பிள்ளையை நல்ல முறையில் வளர்ப்பதில் இருக்கிறது. 

தந்தையான இறைவன் தாயும் ஆனான். தாயுமானவன் என்று அவன்  பெயர்.

தந்தை என்ற பெயரில் ஒரு தந்தை செய்யக் கூடாத செயல்களை எல்லாம் செய்பவர்களை பற்றி செய்தித் தாள்களில் படிக்கிறோம். 

ஒரு ஆசிரியராக இருந்து கொண்டு தகாத செயல்கள் செய்பவர்களை பற்றியும் படிக்கிறோம். 

எனவே, இவை செய்யும் செயலைப் பொறுத்து அமைவது. 

தாய்மை மனதில் இருந்தால் , ஒரு ஆணும் தாயாக முடியும். அன்பு மனதில் இல்லை என்றல், ஒரு பிள்ளை பெற்ற பெண்ணும் தாயாக முடியாது. 


தாடகை ஒரு பெண் என்பதால் அவளைக் கொல்லாமல் நிற்கிறான் இராமன். அவனைப் பார்த்து கௌசிகன் சொல்வான், "இந்த கொடியவளை பெண் என்று நீ நினைக்கிறாயா" என்று. பெண் போல வடிவம் இருந்தால் பெண்ணாக முடியாது. பெண் என்றால் அந்த பெண்மைக்குரிய குணங்கள் இருக்க வேண்டும். 

‘தீது என்று உள்ளவை யாவையும் செய்து எமைக்
கோது என்று உண்டிலள் : இத்தனையே குறை :
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்! ‘

என்பான் கம்பன்.

தான் பெற்ற இரண்டு வரங்களால் இராமனை காட்டுக்கும், தயரதனை வானுக்கும் அனுப்பினேன் என்றாள் கைகேயி பரதனிடம்.

அதைக் கேட்டு கொதித்துப் போய் பரதன் சொல்கிறான்

"நீ இன்னுமும் உயிரோடு இருக்கிறாய். நானும் இருக்கிறேன். உன்னை தண்டிக்காமல் இருப்பதற்கு காரணம் நீ தாய் என்பதால் அல்ல, இராமன் கோபப் படுவானே என்பதால் " என்கிறான்.

பாடல்

நீ இனம் இருந்தனை; யானும், நின்றனென்;
“ஏ” எனும் மாத்திரத்து எற்றுகிற்றிலென்;
ஆயவன் முனியும் என்று அஞ்சினேன் அலால்,
“தாய்” எனும் பெயர் எனைத் தடுக்கற் பாலதோ?


பொருள்

நீ = நீ, கைகேயி

இனம் = இன்னும்

இருந்தனை; = உயிரோடு இருக்கிறாய்

யானும் = நானும் (பரதன்)

நின்றனென் = ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டு இருக்கிறேன்

“ஏ”  = ஏ

எனும் = என்று

மாத்திரத்து = சொல்லும் நேரத்திற்குள்

எற்றுகிற்றிலென் = உன்னை தண்டிக்காமல் இருக்கிறேன்

ஆயவன் = தாய் போன்ற இராமன்

முனியும் = கோபம் கொள்வான்

என்று = என்று

அஞ்சினேன் = அச்சம் கொண்டேன். பயம் கொண்டேன்

அலால் = இல்லை என்றால்

“தாய்” எனும் = தாய் என்ற

பெயர் = பெயர்

எனைத்  = என்னை

தடுக்கற் பாலதோ? = தடுக்கும் சக்தி வாய்ந்ததா ? இல்லை.

 குழந்தையை பெற்று விட்டால் மட்டும் தாயாக முடியாது.

பால் நினைந்து ஊட்டும் தாயினும் என்பார் மணிவாசகர். பால் கொடுத்தால் அழகு குறைந்து  விடும் என்று நினைக்கும் ஒரு பெண் தாயாக முடியுமா ?

கைகேயி பரதனைப் பெற்றவள்தான். அதனால் அவளை தாய் என்று கருதவில்லை பரதன். கணவனை கொண்டு, இன்னொரு பிள்ளையை கானகம் அனுப்பிய ஒரு  பெண் எப்படி தாயக இருக்க முடியும் என்பது பரதனின் எண்ணம்.

தவறு செய்த தாய் ஒருபுறம்.

தவறிப் போன அரச நீதி மறுபுறம்.

தாயின் மேல் அன்பு கொண்ட இராமன் இன்னொரு புறம்.

தண்டித்தாலும் தவறு. தண்டிக்காவிட்டாலும் தவறு.

தவிக்கிறான் பரதன். 

சோதனைகள் மனிதனின் உண்மையான  குணத்தை வெளியில் காட்டும். 

பரதன் என்ன செய்தான் என்று பார்ப்போம். 

2 comments:

  1. பரதனின் எண்ண ஓட்டங்கள் புரிகிறது.பெற்றவளாக இருப்பினும் தான் செய்த தவறினால்., தாய் என்கிற ஸ்தானத்தை இழந்து நிற்கிறாள்.தண்டிக்க நினைத்தாலும் ராமனின் கோபத்திற்கு அஞ்சி நிற்கிறான்.அண்ணனுக்கு நியாயமாய் கிடைக்க வேண்டியதை தடுத்தாளே என்கிற ஆதங்கம் .ராமனுக்கோ தம்பிக்கு கிடைத்ததே என்கிற சந்தோஷம். தாயிடம் அதனால் சற்றும் கோபமில்லை. மாறாக ஒரு இணக்கமே. அண்ணன் தம்பிக்குள் என்னே பாசம்!

    ReplyDelete
  2. Ramayan chracters are really wonderful. very rare to applicable in real life.

    ReplyDelete