திருக்குறள் - மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும்
சமீப காலத்தில் திருவள்ளுவர் பெரிய சர்ச்சைக்குரிய பொருளாக மாறி இருக்கிறார். இன்றைய அரசியல் வள்ளுவரையும் விடவில்லை.
வள்ளுவர் இந்துவா, இல்லை நாத்திகரா அல்லது பிற மதத்தைத் சார்தவரா என்பது விவாதத்தின் பொருள்.
இந்து என்றால், எந்தப் பிரிவைச் சேர்த்தவர் என்று அடுத்த பிரச்சனை வரும்.
அவரவர் தங்கள் பக்கத்துக்கு ஞாயம் சேர்க்க, திருக்குறளில் இருந்து ஓரிரு குறள்களை எடுத்து உதாரணம் சொல்கிறார்கள்.
அப்படி சொல்லப்படும் உதாரணங்களில், கீழே உள்ள குறளும் ஒன்று.
"மறந்தால் கூட பின், படித்துக் கொள்ளலலாம். ஆனால், பார்ப்பனர் தங்கள் ஒழுக்கத்தில் இருந்து தவறி விட்டால் பின் அதை சரி செய்ய முடியாது "
என்கிறார்.
பாடல்
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
பொருள்
மறப்பினும் = மறந்தால் கூட
ஒத்துக் கொளல்ஆகும் = மீண்டும் படித்துக் கொள்ளலாம். ஓதுதல் என்றால் மீண்டும் மீண்டும் படித்து, ஆராய்ந்து அறிந்து கொள்ளுதல் என்று பொருள். "ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்".
பார்ப்பான் = அந்தணர்
பிறப்பு ஒழுக்கம் = பிறவியில் வந்த ஒழுக்கம்
குன்றக் கெடும் = குறைந்தால், அது கெட்டுப் போகும்.
எது கெட்டுப் போகும் ? பிறப்பினால் வந்த பெருமை, ஒழுக்கம் குறைந்தால் அந்தப் பெருமை குன்றி விடும் என்கிறார்.
படித்த வேதத்தை மறந்தால் கூட, மீண்டும் படித்துக் கொள்ளலாம். அதன் மூலம் இழந்த கௌரவத்தை மீண்டும் பெற்று விடலாம். ஆனால், ஒழுக்கம் குறைந்தால், பின் அதை மீண்டும் பெறவே முடியாது என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார்.
ஆஹா, வள்ளுவரே பார்ப்பனர்களின் குடி பெருமையை பற்றி கூறிவிட்டார். எனவே, அவரும் ஒரு பார்ப்பனர்தான், அல்லது இந்துதான் என்று சிலர் கூறத் தலைப்பட்டு இருக்கிறார்கள்.
திருக்குறள் போன்ற உயர்ந்த நூல்களை படிக்கும் போது நாம் முதலில் ஒன்றை மிக மிக தெளிவாக மனதில் கொள்ள வேண்டும்.
நாம் அந்த நூல்களின் தரத்திற்கு நம்மை முன்னேற்றிக் கொள்ள வேண்டுமே அல்லாது, அந்த நூல்களை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.
வள்ளுவருக்கு மத, சாதி வர்ணம் பூசுவது, அந்த நூலை நம் நிலைக்கு கீழே கொண்டு வரும் முயற்சி.
செய்யலாம். அதனால் அந்த நூலுக்கோ, வள்ளுவருக்கோ ஒரு துன்பமும் இல்லை. நாம் தான், முன்னேறும் ஒரு வாய்ப்பை இழந்து நிற்போம்.
இரண்டாவது, குறள் , கீதை போன்ற நூல்களை நாம் படிக்கும் முறையே தவறு. குறளைப் படித்து, அதில் உள்ள கடின சொற்களுக்கு அகராதியில் அர்த்தம் கண்டு பிடித்து பொருள் கொள்வது சிறந்த முறை அல்ல.
சொல்லில் இருந்து பொருளுக்கு போகும் முறை சரி அல்ல.
பரிமேலழகர் போன்ற அறிஞர்கள் பொருளில் இருந்து சொல்லுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு குறளின் பொருள் தெரியும். அந்த பொருளுக்கு குறளின் சொற்கள் எப்படி பொருந்துகின்றன என்று சொல்லுவார்கள்.
இந்த குறளுக்கு பரிமேலழலகர் உரை எழுதி இருக்கிறார்.
நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.
"சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்"
என்று கூறுகிறார்.
அதாவது, ஒரு வர்ணத்துக்கு கூறினால் அது மற்ற வர்ணத்துக்கும் பொருந்தும் என்று கொள்ளவேண்டும் என்கிறார்.
ஒழுக்கம் என்பது எல்லா வர்ணத்துக்கும் பொது. அந்தந்த வர்ணத்துக்கு ஒரு சிறப்பு அம்சம் இருக்கிறது. அதை மறந்து விட்டால் கூட பரவாயில்லை. எவரும், தங்களுக்கு விதித்த ஒழுக்கத்தை மறந்து விடக் கூடாது என்கிறார்.
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் வைசியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் சத்ரியன்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
என்று சொல்லிக் கொண்டே போக வேண்டும். ஒன்றைச் சொன்னால், மற்றவற்றை புரிந்து கொள்ள வேண்டும் என்று பரிமேலழகர் உரை எழுதுகிறார்.
இதில், வள்ளுவர் அந்தணர்களை மட்டும் கூறினார் என்று சொல்வதற்கு எங்கே இடம் இருக்கிறது?
நான் முன்பே கூறியது போல, பெரிய நூல்களை படித்து நாம் நம் தரத்தை உயர்த்த முயற்சி செய்ய வேண்டும். அதை விடுத்து அந்த நூலை, அந்த நூலை எழுதிய ஆசிரியரை நம் நிலைக்கு கீழே கொண்டு வர முயலக் கூடாது.
வள்ளுவர் யாராக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.
அவர் என்ன சொன்னார் என்பதுதான் முக்கியம்.
அரசியல் பேசி, வள்ளுவரை இழந்து விட்டால், நட்டம் அவருக்கு அல்ல.
திருக்குறளை அறிய வேண்டும் என்றால், படிக்க வேண்டியது பரிமேலழகரை. உள்ளூர் பேச்சாளர்களை அல்ல.
https://interestingtamilpoems.blogspot.com/2019/12/blog-post_6.html