Wednesday, July 29, 2020

நான்மணிக் கடிகை - உலக இயற்கை

நான்மணிக் கடிகை  - உலக இயற்கை 


கடிகை என்றால் துண்டு. மணி கடிகை என்றால் மணிகள் அமையப்பெற்ற துண்டு. இந்த நூலில் ஒவ்வொரு பாடலிலும் நான்கு நல்ல கருத்துக்களை அழகாகச் சொல்லுவதால் இது நான் மாணிக்கடிகை என்று பெயர் பெற்றது.

இனிமையான, அனுபவ மொழிகள்.

நமக்கு இப்போது  சில வலிமைகள் இருக்கும். உடல் நன்றாக இருக்கும். ஞாபகம் சரியாக இருக்கும். நம் வேலையை நாமே செய்து கொள்ளக் கூடிய வலு இருக்கும்.

ஆனால், இந்த வலிமை அப்படியே இருக்காது. ஒரு நாள் கட்டாயம் குன்றும். எழுந்திருக்க முடியாமல் போய் விடலாம். நினைவு குறைந்து பல விட்டுப் போகலாம்.

அதை நினைக்க வேண்டும். என்றும் நாம் இதே வலிமையோடு இருப்போம் என்று நினைக்கக் கூடாது.

உடல் வலிமை மட்டும் அல்ல. எல்லா வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

உலகம் அனைத்தையும் ஆண்ட சர்வாதிகாரிகள் எங்கே? அவர்கள் கட்டிய அரசாங்கம் எங்கே? உலகிலேயே பெரிய நிறுவனம் என்று சொல்லிக் கொண்டிருந்த சில நிறுவனங்கள் இன்று இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன.

எல்லா வலிமையையும் ஒருநாள் குன்றும்.

அது போல, பிறந்த உயிர்கள் எல்லாம் கட்டாயம் ஒரு நாள் அழியும். சந்தேகமே இல்லை.

அது போல, செல்வம். ஓரிரு தலைமுறைகள் இருக்கும். பின் விட்டுச் சென்று விடும்.  செல்வோம் என்பதால் அது செல்வம்.

இளமை அப்படியே இருக்குமா? இளமை மாறி முதுமை வருவது கட்டாயம்.

இதை எல்லாம் உணர்ந்து என்றும் அறம் செய்ய வேண்டும்.

பாடல்

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம்
தாவாத இல்லை வலிகளும் - மூவாது
இளமை யிசைந்தாரும் இல்லை - வளமையிற்
கேடுஇன்றிச் சென்றாரும் இல்.

பொருள்

(click the link below to read further)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_64.html

சாவாத இல்லை பிறந்த உயிரெல்லாம் = பிறந்த உயிர்கள் சாகாமல் இருக்க முடியாது.


தாவாத இல்லை வலிகளும்  = எல்லாம் வலிமையையும் ஒரு நாள் குன்றும்.

மூவாது இளமை யிசைந்தாரும் இல்லை = மூப்பு அடையாமல் எப்போதும் இளமையோடு இருப்பவர் யாரும் இல்லை

வளமையிற் கேடுஇன்றிச் சென்றாரும் இல். = செல்வச் செழிப்போடு இருந்தாலும், அந்தச் செல்வம் நீண்ட நாள் நிற்காமல் போய் விடும்.


பிறந்தது இறக்கும், வலிமைகள் குன்றும், இளமை போய் முதுமை வரும், செல்வம் ஒரு நாள் போய் விடும்.

யாக்கை நிலையாமை
இளமை நிலையாமை
செல்வத்தின் நிலையாமை
வலிமையின் நிலையாமை

இந்த நிலையாமைகளைப் பற்றி ஒரே செய்யுளில் சொல்கிறது நான்மணிக் கடிகை.

இந்த நூலில் உள்ள மற்ற பாடல்களையும் படித்துப் பாருங்கள். 

No comments:

Post a Comment