Monday, July 20, 2020

ஒளவையார் பாடல் - தீதே

ஒளவையார் பாடல் -  தீதே 


பாடல்

தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு அற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே-தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது.

பொருள்

மிக எளிய பாடல்.

தீயாரைக் காண்பதுவும் தீதே = தீயவர்களை காண்பதும் தீது

திரு அற்ற = சிறப்புகள் அற்ற

தீயார் சொல் கேட்பதுவும் தீதே = தீயவர்கள் சொல்வதை கேட்பதும் தீது

தீயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே = தீயவர்களின் குணங்களை உரைப்பதும் தீதே

அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது. = அத்தகைய தீயவர்களோடு சேர்ந்து இணக்கமாக இருப்பதும் தீதே


சரியாத்தானே சொல்லி இருக்கிறாள் கிழவி. இதில் என்ன சொல்ல இருக்கிறது என்று கேள்வி எழலாம்.

அதுவும் இல்லாமல் நாம எங்க தீயவர்களோடு பழகுகிறோம், பேசுகிறோம், பார்க்கிறோம்.  இதெல்லாம் நமக்கு இல்லை. நாம் பாக்குறது, பேசுறது எல்லாம் நம்ம அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள், நன்பர்கள், உறவினர்கள் அவ்வளவுதான்.  அவங்க எல்லாம் தீயவர்கள் இல்லை. எனவே, நமக்குச் சொன்ன அறிவுரை இல்லை   என்று எடுத்துக் கொள்ளலாமா?

சற்று யோசியுங்கள்.

நீங்கள் தீயவர்களை  பார்ப்பதே இல்லையா?  அவர்கள் சொல்வதை கேட்பதே இல்லையா?

நீங்கள் தினமும் தீயவர்களை பார்க்கிறீர்கள், அவர்கள் சொல்வதை கேட்கிறீர்கள் , அவர்களோடு இணக்கமாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

எத்தனை டிவி பார்க்கிறீர்கள்?

அதில் எத்தனை சீரியல்கள், நாடகங்கள், அரசியல் அலசல்கள், "பெரியவர்களின்" பேச்சுகள் - அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

அவர்கள் நல்லதைத்தான் சொல்கிறார்களா? நல்லதைத்தான் செய்கிறீர்களா?

யாரை எப்படி கொல்லுவது , யாரை எப்படி ஏமாற்றுவது, எப்படி வஞ்சகம் செய்வது,  ஆட்களை கடத்துவது, கொலை செய்வது, திருடுவது என்று உலகில்  உள்ள அத்தனை வக்ரங்களும் அவற்றில் இல்லையா?

அவற்றை பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் மனம் பாதிக்கப் படாதா?

இல்லை பாதிக்காது என்று நீங்கள் சொன்னால், பின் நீங்கள் ஆன்மீக சொற்பொழிவுகளை  கேட்பதிலோ, படிப்பதிலோ அர்த்தம் இல்லை.

நாம் பார்க்கும், கேட்கும், படிக்கும் அனைத்தும் நம்மை பாதிக்கத்தான் செய்யும்.

சரி. நான் தான் தொலைக்காட்சியே பார்ப்பதே இல்லையே . அப்படியே பார்த்தாலும்  செய்தி, பாடல், நகைச்சுவை என்று மட்டும் தானே பார்ப்பேன்  என்று சொல்லலாம்.

அந்தச் செய்திகளில் தீயவை இல்லையா?  அதை சொல்பவர்கள் நல்லவர்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?  யார் யாரோ பேசியதை காட்டுகிறார்கள் செய்தியில்.  அவர்கள் எல்லோரும் நல்லவர்களா?

சார், தொலைக் காட்சியே பார்ப்பதே இல்லை. எங்கள் வீட்டில் தொலைக் காட்சிப் பெட்டியே இல்லை என்று சொல்லலாம்.

சினிமா?

செய்தித்தாள் ?

தீமைகள் எங்கும் பரவிக் கிடக்கின்றன. அவை தீமை என்று கூடத் தெரியாமல்   வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

சரி பார்த்தால் என்ன? கேட்டால் என்ன? அதில் சொன்ன மாதிரியா செய்கிறோம் . நமக்குன்னு ஒரு அறிவு இருக்குல்ல என்று சொல்லலாம்.

ஒரு நடிகர் சிகரெட்டை தூக்கிப் போட்டு பிடிக்கிறார். எத்தனை சிறுவர்கள்  அது ஒரு பெரிய  விடயம் என்று அது போல நாமும் இருக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறார்கள் ?

தங்கள் தங்கள் ஆதர்ச கதாநாயகர்கள் என்ன செய்கிறார்க்ளோ  அதே போல்  நாமும் செய்ய வேண்டும் விரும்புவது இல்லையா?

அது தான்  இணக்கமாக இருப்பது.

சரி, சினிமாவும் பார்ப்பது இல்லை என்று வைத்துக் கொள்வோம்.

Youtube ? வாட்ஸாப்ப்?

இவற்றில் இல்லாத வக்கிரங்களா?

அப்படியெல்லாம் இல்லை. எனக்கு வரும் செய்திகள் அப்படி ஒன்றும் மோசமானவை இல்லை  என்று நாம் நினைக்கலாம்.

சொல்லில் வரும் குற்றங்கள் நான்கு.

முதலாவது - பொய் சொல்லுதல்

இரண்டாவது - புறம் கூறுதல்

மூன்றாவது - பயனில சொல்லுதல்

நான்காவது = கடும் சொல் சொல்லுதல்

உங்களுக்கு வரும் செய்திகளில் இவை இல்லை என்று சொல்ல முடியுமா?

அக்கம் பக்கத்தில் உள்ளவர்களில் சிலர் புறம் சொல்லுபவர்களாக இருக்கலாம். அது ஒரு தீய செயல் தானே? அதைச் செய்பவர்களதீயவர்கள் தானே?

அவர்களை நாம் பார்ப்பது இல்லையா? அவர்களோடு பேசுவது இல்லையா? அவர்களோடு இணக்கமாக இருப்பது இல்லையா?

பேச்சின் மூலம் சாதிச் சண்டையை, மதச் சண்டையை தூண்டுகிறான் ஒருவன்.அவன் சொல்வதை youtube ல் கேட்பது இல்லையா?

ஒளவையார் தீயவர்களை நேரில் சென்று காண்பது தீது, அவர்கள் சொல்வதை நேரே  நின்று கேட்பது தீது என்றெல்லாம் சொல்லவில்லை.

ஒருவன் தவறான எண்ணத்தோடு ஒரு புத்தகம் எழுதுகிறான். அதை வாசித்து,  அவன் சொல்லுவதும் சரியாத்தானே இருக்கிறது என்று நாம் நினைத்தால்,  நாம் அந்த தீயவனோடு இணக்கமாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

யோசித்துப் பாருங்கள். உங்களை அறியாமலேயே எவ்வளவு தீயவர்களோடு  நீங்கள் தொடர்பு  வைத்து இருக்கிறீர்கள் என்று புரியும்.

இது ரொம்ப நாள் நடந்து கொண்டிருப்பதால் நமக்குத் தெரிவதில்லை.

சற்று தள்ளி நின்று யோசித்தால் இதன் விபரீதம் புரியும்.

சரி, அப்படினா என்னதான் செய்றது?

டிவி கூடாது, செய்தித் தாள் கூடாது, whatsapp , youtube கூடாது, அக்கம் பக்கம் அரட்டை அடிக்கக் கூடாது  என்றால் பின் என்னதான் செய்றது?

கிழவி அதற்கும் வழி சொல்லி விட்டுப் போய் இருக்கிறாள்.

அது என்ன தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_20.html

2 comments: