Thursday, July 16, 2020

திருவாசகம் - அஞ்சுமாறே

திருவாசகம் - அஞ்சுமாறே 


சமயப் பெரியவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் கொண்ட மதமும் கடவுளும் தான் உயர்ந்தது, மற்றது எல்லாம் தாழ்ந்தது என்று சொல்லக் கேட்டு இருக்கிறோம்.

உன் கடவுள் உயர்ந்தது என்று சொல்ல உனக்கு உரிமை இருக்கிறது. மற்றவன் கடவுளை தாழ்ந்தது என்று சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

வைணவர்களை கேட்டால் பெருமாள் தான் உயர்வு மற்ற கடவுள் எல்லாம் தாழ்ந்தது என்பார்கள்.

சைவர்களை கேட்டால் சிவனுக்கு மிஞ்சிய கடவுள் ஒன்று இல்லை என்பார்கள்.

எல்லா மதத்திலும் இதே நிலை தான்.

இப்படி பெரியவர்கள் சொன்னதால், பின்னால் வந்தவர்கள் என் மதம், என கடவுள் என்று அடித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்.

இது சரியா?

இறை தரிசனம் பெற்ற பெரியவர்கள், இப்படி சொல்லலாமா?  ஒன்றே கடவுள் என்று அவர்களுக்குத் தெரியாதா?

காரணம் இருக்கிறது.

ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல பல வழிகள் இருக்கலாம். வழி கேட்பவனுக்கு ஒரு வழியைச் சொல்ல வேண்டும்.

"நீ இப்படிப் போகலாம், அப்படியும் போகலாம், இது அதைவிடச் சிறந்தது, ஆனால் அந்த நாலாவது வழி இருக்கே அதுல் இப்படி சில சௌகரியங்கள் இருக்கு "

என்று ஒரு பத்து வழி சொன்னால், கேட்டவன் குழம்பிப் போவான்.

சில பேர் எல்லா வழிகளையும் ஆராய்ந்து தனக்கு சௌகரியப் பட்ட  வழியை தேர்ந்து எடுப்பான்.   எல்லாராலும் முடியாது.

பத்து வழி சொன்னால், எதில் போவது என்று தெரியாமல் குழம்பி ஒரு வழியிலும் போக மாட்டான்.

எனவே தான், அடித்துச் சொன்னார்கள். இது தான், வேற வழியே கிடையாது. இதுல போனால் நீ போக வேண்டிய இடத்துக்கு போய் சேர்ந்து விடலாம்.

ஆனால், மக்களின் அறியாமை என்ன செய்வது. உன் வழி சரியா, என் வழி சரியா என்று சண்டை பிடித்துக் கொண்டு இருந்தார்கள். போகும் இடத்தை விட்டு விட்டு, எது நல்ல வழி என்று சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்கள். இருக்கிறார்கள்.

வழியா முக்கியம்? போய் சேரும் இடம் தானே முக்கியம்?

அது ஒரு புறம் இருக்கட்டும்.

நமக்கு எதில் எல்லாமோ பயம் இருக்கிறது. இப்ப புதிதாய் இந்த வைரஸ். எப்ப நமக்கு வருமோ என்று பயமாக இருக்கிறது.

மணிவாசகர் எதற்கு பயப்பட்டார் தெரியுமா ?

"புற்றில் வாழும் பாம்புக்கு அஞ்ச மாட்டேன். ஒன்றும் தெரியாவிட்டாலும், எல்லாம் தெரிந்தது மாதிரி பேசும் பொய்யர்களின் பேச்சுக்கு பயப்பட மாட்டேன். சிவன் இருக்கும் போது மற்றும் ஒரு தெய்வம் என்று எண்ணி சிவனை அறியாமல் விடுபவர்களை கண்டால் எனக்கு பயமாக இருக்கிறது" என்கிறார்.

பாடல்


புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும்அஞ்சேன்
கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி
மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்
கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.


பொருள்


புற்றில்வாள் = புற்றில் வாழும்

அரவும் = பாம்புக்கும்

அஞ்சேன் = அஞ்சேன்

 பொய்யர்தம்  = பொய் சொல்பவர்களின்

மெய்யும் = மெய் சொல்லுக்குச்

அஞ்சேன் = அஞ்சேன்

கற்றை = கற்றையாக இருக்கும்

வார் சடை = நீண்ட சடை முடியை கொண்ட

எம் அண்ணல் = எம் தலைவன்

கண்ணுதல் = நுதல் என்றால் நெற்றி. நெற்றியில் கண் கொண்ட அவர்

பாதம் நண்ணி = பாதத்தை பற்றி, நெருங்கி

மற்றும் ஓர் தெய்வந் தன்னை = மற்றும் ஒரு தெய்வம் தன்னை

உண்டென நினைந்து = உண்டு என்று நினைத்து

தெம் பெம்மாற் = எம் பெருமான்

கற்றிலா தவரைக் கண்டால் = அறியாதவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே. = ஐயோ, நான் அச்சப் படுகிறேன்

ஒன்றைப் பிடித்தால், அதைப் பிடித்துக் கொண்டு போக வேண்டும்.

சிவன் என்றால் சிவன்.

திருமால் என்றால் திருமால்.

அலை பாயக் கூடாது.

இங்கு இருக்கும் போதே, ஒரு வேளை அந்தக் கடவுள் இன்னும் நல்லவரோ? வலிமையானவரோ என்று மனம் சிந்திக்கக் தொடங்கினால், ஒன்றும் நடக்காது.

அப்படி அங்கும் இங்கும் அலைபவர்களை கண்டால், எனக்கு பயமாக இருக்கிறது என்கிறார் மணிவாசகர்.

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_16.html

5 comments:

  1. உண்மை,இந்த விளக்கம் அவசியம் பலருக்கு உபயோகமாக இருக்கும்.

    ReplyDelete
  2. பொய்யர்தம் = பொய் சொல்பவர்களின்

    மெய்யும் = மெய் சொல்லுக்குச்

    அஞ்சேன் = அஞ்சேன்

    மெய் சொல்லுக்கு ஏன் அஞ்ச வேண்டும்?

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை, நீங்கள் சதுரங்க ேவேட்டை படம் பார்த்திருந்தா இதுக்கான பதில் எளிதா புரியும்... நான் 100 பொய் சொல்லி அதுல ஒரே ஒரு உண்மை மட்டும் இருந்தால் அந்த ஒற்றை உண்மைக்காக 100 பொய்களையும் ஏற்றே தீரவேண்டும்... எனவே தான் பொய்யர்கள் மெய் பொல்லாதது... ( அந்த ஒன்று மட்டுமே உண்மை மற்றவை பொய் என்பது தெரிந்ததால் பயம் வேண்டாம்... தெரியாதவர்கள் நிலை?! அது தெரிந்தபின் என் நிலை?! )
      உதாரணம்: நடிகர்கள்...

      Delete
  3. Super. Vedhaththoda Tamil Arththam paththi Theda aarambichen.. உங்கள் எழுத்து பார்க்க நேர்ந்தது. நல்லா இருக்கு உங்கள் blog. Yelundhunga nanbarey👍😊

    ReplyDelete
  4. ஆனால், இந்த மாதிரி சொல்வதால் எவ்வளவு சண்டைகள், சச்சரவுகள், வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

    ReplyDelete