Thursday, July 23, 2020

கம்ப இராமாயணம் - தவறுகளும் பிராயச்சித்தங்களும்

கம்ப இராமாயணம் - தவறுகளும் பிராயச்சித்தங்களும் 


தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாத மனிதன் எங்கும் இல்லை.

தவறு செய்து விட்டால், அது தவறு என்று உணர்ந்து விட்டால், அதில் இருந்து எப்படி வெளிப்படுவது?

செய்த தவறு உறுத்திக் கொண்டே இருக்கும். ஐயோ, அப்படி செய்து விட்டோமே , இப்படிச் சொல்லி விட்டோமே,  அப்படி செய்து இருக்கக் கூடாது என்றெல்லாம் மனம் கிடந்து உழலும்.

இதில் இருந்து வெளி வர வழி சொல்ல வேண்டும். இல்லை என்றால் இரண்டு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

முதலாவது, அதிலேயே அழுந்தி மனிதன் மன அழுத்தம் காரணமாக, மன நோயாளியாகப் போய் விடலாம். குற்ற உணர்வு ஒரு புறம் அழுத்த, மறு புறம் மனசாட்சி உறுத்த, வெளியே சொல்ல முடியாமல் உள்ளேயே புழுங்கி மனிதன் மன நோயாளியாக மாறி விடலாம்.

இரண்டாவது, சரி, தவறு செய்தது செய்தாகி விட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று எண்ணி, செய்த தவறுக்கு ஞாயம் கற்பித்து மேலும் மேலும் அதையே செய்து கொண்டிருப்பான்.

இரண்டுமே தவறான முடிவு.

எனவே, இதில் இருந்து வெளிவர ஒவ்வொரு மதமும் ஒரு வழியைச் சொல்கின்றன.

பாவ மன்னிப்பு, புனித நீராடல், புனித இடங்களுக்குச் செல்லுவது, தானம் செய்வது, என்று எவ்வளவோ பிராயச்சித்தங்கள் சொல்கின்றன.

காசிக்குப் போனால், கங்கையில் நீராடினால் அது வரை செய்த பாவம் எல்லாம் போய் விடும்  என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.

எல்லா பாவத்துக்கும் ஒரு பிராயச்சித்தம் இருக்கிறது - ஒரே ஒரு பாவத்தைத் தவிர.

அது பாவத்தில் அனைத்திலும் கொடுமையான பாவம் ஆகும் என்பது நம் முன்னோர் முடிவு.

அது என்னவாக இருக்கும்?

மழைக் காலம் முடிந்த பின் சீதையைத் தேடித் தருவதாக இராமனிடம்  வாக்களித்து விட்டு சென்றான்  சுக்ரீவன்.  மழைக் காலம் முடிந்தும் வரவில்லை. கோபம் கொண்டு இலக்குவன் போகிறான்.

மிகவும் சுவையான பல பாடல்கள் உள்ள இடம்.

அப்போது அங்கு வந்த அனுமனிடம் இலக்குவன் கேட்கிறான்...."நீயுமா  செய் நன்றி  மறந்தாய்" என்று.

அப்போது அனுமன் கூறுவான்


"பெற்றோரை, ஆசிரியரை, தெய்வம் போல் போற்றத்தக்க அந்தணர்களை, பசுவை, குழந்தைகளை, பெண்களை கொன்றவர்களுக்குக் கூட உய்வு உண்டு. ஆனால், செய் நன்றி மறந்தவர்களுக்கு ஒரு உய்வும் இல்லை" என்பதை நான் அறிவேன்.எனவே , நான் செய் நன்றி மறக்கமாட்டேன் என்று உணர்த்துகிறான்.

பாடல்


'சிதைவு அகல் காதல் தாயை,
      தந்தையை, குருவை, தெய்வப்
பதவி அந்தணரை, ஆவை,
      பாலரை, பாவைமாரை,
வதை புரிகுநர்க்கும் உண்டாம் மாற்றல்
      ஆம் ஆற்றல்; மாயா
உதவி கொன்றார்க்கு ஒன்றானும்
      ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?'


பொருள்

(click the link below to continue reading)

https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_23.html

'சிதைவு அகல் = குற்றம் அகற்றிய

காதல் = அன்புள்ள

தாயை = தாயை

தந்தையை = தந்தையை

குருவை = குருவை

தெய்வப் பதவி அந்தணரை = தெய்வம் போல போற்றத்தக்க அந்தணர்களை

ஆவை, = பசுவை

பாலரை = குழந்தைகளை

பாவைமாரை, = பெண்களை

வதை புரிகுநர்க்கும் = கொன்றவர்களுக்கு

உண்டாம் = உண்டு

மாற்றல் ஆற்றல் =  அந்த பாவத்தில் இருந்து தப்பிக்க ஒரு மாற்று வழி உண்டு

மாயா = அழியாத

உதவி கொன்றார்க்கு = செய்த உதவியை மறந்தவர்க்கு

ஒன்றானும் = ஒருவழியிலும்

ஒழிக்கலாம் உபாயம் உண்டோ?' = அதை மறைக்க ஒரு வழி உண்டோ? (இல்லை என்பது பொருள் )

எந்நன்றி கொன்றாற்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு

என்பது பொய்யா மொழி


நன்றி மறந்தால் என்றால் யார், யாருக்குச் செய்த நன்றி என்ற கேள்வி வரும்.

அது பற்றி ஆராய முற்பட்டால் பிளாக் நீண்டு விடும்.

செய் நன்றி கொன்ற குற்றத்தை முதல் குற்றமாக வைக்கிறார்கள் நம் முன்னவர்கள்.

மனித மனம் மறக்கும் இயல்பு   உடையது.

எனவே, இதுவரை பெற்ற நன்றிகளை ஒரு பட்டியல்  போடுங்கள்.  இனி பெருபவற்றையும்  குறித்துக் கொள்ளுங்கள்.

நன்றி மறவாமல் இருப்போம்.



2 comments: