Sunday, July 19, 2020

கம்ப இராமாயணம் - இராமன் தோள்களை வெல்லலாம்

கம்ப இராமாயணம் - இராமன் தோள்களை வெல்லலாம்


யாப்பு இலக்கணத்திலே இல் பொருள் உவமை அணி என்று ஒன்று உண்டு.

பொதுவாக உவமை என்றால் ஒரு உயர்ந்த அல்லது நல்ல பொருளை உதாரணமாக கூறி அழகு படக் கூறுவது.

தேன் போல் இருந்தது அவர் குரல்

நிலவு போல் இருந்தது அவள் முகம்

என்றெல்லாம் உவமை கூறக் கேட்டு இருக்கிறோம்.

இல் பொருள் உவமை என்பது, இல்லாத ஒன்றைக் காட்டி அதை உவமையாகக் கூறுவது.

"தலையில் சம்மட்டியால் அடிப்பது போல வலிக்கிறது" என்று கூறினால், அதற்கு முன்னால் தலையில் சம்மட்டியால் அடி வாங்கி இருந்து, அது போல இருக்கிறது என்று கூறுகிறார் என்று அர்த்தமா? இல்லை. தலையில் சம்மட்டியால் அடிப்பது என்பது இல்லாத ஒன்று . அதை உவமையாக கூறுவது.

ஆயிரம் ஏரி மலை வெடிச்சது மாதிரி அப்படி ஒரு கோபம்.

ஆயிரம் அம்மாவாசையை ஒன்றாக சேர்த்து வச்சது மாதிரி ஒரு கறுப்பு

என்றெல்லாம் கூறுவது போல.

கம்பர் ஒரு இல் பொருள் உவமை கூறுகிறார்.

அதுவும் எப்படி இரண்டு நடவாத ஒன்றை , ஒன்றுக்கு மற்றொன்றாக உவமை படுத்திக் கூறுகிறார்.

இராவணன் அவையில் உள்ள கும்ப கர்ணன் , இராவணனுக்கு அறிவுரை கூறுகிறான்.

"இராவணா , நீ இராமனை வெல்லலாம் என்று நினைப்பது எப்படி இருக்கிறது தெரியுமா ? அது சீதையை அணைக்கலாம் என்று நினைப்பது போல இருக்கிறது " என்று இரண்டு நடவாத விடயங்களை காட்டுகிறான்.


பாடல்

கல்லலாம் உலகினை; வரம்பு கட்டவும்
சொல்லலாம்; பெரு வலி இராமன் தோள்களை
வெல்லலாம் என்பது, சீதை மேனியைப்
புல்லலாம் என்பது போலுமால்--ஐயா!

பொருள்


கல்லலாம் உலகினை; = இந்த உலகையே பெயர்த்து எடுத்து விடலாம்


வரம்பு கட்டவும் சொல்லலாம்;  = இந்த உலகம் அனைத்துக்கும் வேலி போடக் கூட சொல்லலாம்

 பெரு வலி  = பெரிய வலிமையான

இராமன் தோள்களை = இராமனின் தோள்களை

வெல்லலாம் என்பது, = வென்று விடலாம் என்று நினைப்பது

சீதை மேனியைப் = சீதையின் உடலை

புல்லலாம் = அணைக்கலாம்

என்பது போலுமால்--ஐயா! = என்பது போன்றது ஐயா

இராமனை வெல்லவும் முடியாது. சீதையை புல்லவும் முடியாது.

இதற்கு அது உவமை.

நல்லா இருக்குல்ல ?


https://interestingtamilpoems.blogspot.com/2020/07/blog-post_19.html

1 comment:

  1. ஆம்,கம்பனின்இல் பொருள் உவமை அணி நன்றாக  உள்ளது. ஆனால் உங்கள்விளக்கம் கடினமானதையும் எளிதாக்கி ரசிக்கும்படியாக செய்கிறது!

    ReplyDelete