Saturday, July 31, 2021

திருக்குறள் - வாழ்வாங்கு வாழ்பவன்

 திருக்குறள் - வாழ்வாங்கு வாழ்பவன்


இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தின் இறுதிப் பகுதிக்கு வந்து விட்டோம். 


பதினொரு கடமைகள், அதுவும் அற வழியில் ஈட்டிய பொருளில்,  பகிர்ந்து உண்டு வாழ்ந்தால் என்ன கிடைக்கப் போகிறது? 


இதெல்லாம் எதற்குச் செய்ய வேண்டும். வள்ளுவர் சொல்கிறார், இதெல்லாம் அறம் என்பதற்காக செய்ய முடியுமா? அப்படியே செய்தாலும் நமக்கு கிடைக்கும் பலன் என்ன? 


இல்வாழ்க்கை சிறந்தது என்றார், மற்ற வழியில் போய் பெறுவது ஒன்றும் இல்லை என்றார், முயல்வாருள் எல்லாம் தலை என்றார், அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்றும் கூறினார். அதெல்லாம் சரி. நமக்கு என்ன பலன்?


அதைப் பற்றி இங்கே கூறுகிறார். 


மேலே சொன்ன அனைத்தும் இந்த உலகில் இல்லறத்தில் இருப்பவனின் சிறப்பு. பெருமை. இவை பற்றி பேசிற்று. 


பலன் என்றால் இரண்டு விதமான பலன்கள் இருக்கும். 


ஒன்று இம்மைப் பலன். மற்றது, மறுமைப் பலன். 


அந்த இம்மை மறுமை பலன்களை பற்றி இங்கே கூறுகிறார். 


பாடல் 


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_31.html


(Please click the above link to continue reading)



வையத்துள் = உலகில் 


வாழ்வாங்கு = வாழ்கின்ற முறைப்படி 


வாழ்பவன் = வாழ்பவன் 


வானுறையும் = வானில் இருக்கும் 


தெய்வத்துள் = தெய்வங்களில் ஒன்றாக 


வைக்கப் படும். = வைத்துப் போற்றப் படுவான் 


அதாவது, இல்லற முறைப்படி வாழ்பவன் இந்த உலகிலேயே தெய்வத்துக்கு ஒப்பாக போற்றப் படுவான் என்று கூறுகிறார். 


அப்படியா? பரவாயில்லையே...நாமும் கடவுள் மாதிரி ஆகி விடுவோமா என்று நினைக்கலாம். பரிமேலழகர் இல்லை என்றால் இந்த நுட்பம் எல்லாம் புரியாது. 


உரைக்கு போவதற்கு முன்...


இந்த உலகில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடப்பதை நாம் காண்கிறோம். அனுபவித்துக் கொண்டும் இருக்கிறோம். 


இது இந்த உலகில். 


இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகம் இருக்குமா? துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்று நம்சமயங்களும், இலக்கியங்களும் சொல்கின்றன. 


இன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகத்துக்குப் பெயர் சுவர்க்கம். 


துன்பம் மட்டுமே உள்ள ஒரு உலகத்துக்குப் பெயர் நரகம். 


நாம் செய்யும் நல்வினை தீவினைகளுக்கு ஏற்ப நாம் மறு பிறவியில் சுவர்கத்திலோ, நரகத்திலோ அல்லது இந்த பூமியிலோ வந்து பிறப்போம். 


இந்த சுவர்கத்தில் உள்ளவர்கள் தேவர்கள் என அழைக்கப் படுகிறார்கள். 


அது நிரந்தரம் அல்ல. வினைப் பயன் முடிந்தவுடன் மீண்டும் வேறு எங்காவது வந்து பிறக்கத்தான் வேண்டும். 


மறு பிறவியே இல்லாத ஒரு இடம் என்றால் அது இறைவனின் திருவடிதான். அதைத்தான் மோட்சம், வீடு பேறு என்கிறார்கள். 


சுவர்க்கம் வேறு, வீடு பேறு என்பது வேறு. 


வீடு பேறு பெற்று விட்டால் பின் மறு பிறவி கிடையாது. 


சுவர்கத்தில் இந்திரனுக்கும், பிரமனுக்கும்,  விஷ்ணுவுக்கும், உருத்திரனுக்கும் , எமனுக்கும் ஒரு காலக் கணக்கு உண்டு. அந்தக் காலம் முடிந்தால் அவர்கள் போய் விடுவார்கள். அடுத்த ஆள் வருவார். 


இறைவன் என்பவன் இவற்றை எல்லாம் கடந்தவன்.


"மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்" 


என்று கேட்பார் மணிவாசகர். 


இறைவன், அல்லது பரம் பொருள் என்பது மும்மூர்த்திகளுக்கும் தெரியாத ஒன்று. 

இப்போது குறளுக்கு வருவோம். 


வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான் என்று உரை எழுதுகிறார் பரிமேலழகர். 


தெய்வம் என்பதை தேவர் என்று குறிப்பிடுகிறார். 


தேவர்களுக்கு இறைத் தொழிலில் ஒரு பங்கு உண்டு. அக்னி, வாயு, வருணன், இந்திரன், என்று பல தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு தொழில் இருக்கும். 


அது போல, இல்லற தர்மத்தில் இருப்பவன், மற்ற உயிர்களை காக்கும் பணி செய்கிறான். அது ஒரு இறைச் செயல். படைத்தல், காத்தல், அழித்தல் என்ற முத்தொழிலில் காத்தலும் ஒரு இறைத் தொழில். அதைச் செய்வதால், அவன் வான் உறையும் தேவர்களில் ஒருவனாக வைக்கப் படுவான், வைத்து போற்றப் படுவான் என்கிறார். 


இங்கேயே போற்றப் படுவதால், இம்மை பலன் கிடைத்து விடுகிறது. 


இப்படி சிறப்பாக வாழ்ந்ததால் கட்டாயம் சுவர்க்கம் போவான் என்பதால் மறுமை பயனும் கூறப் பட்டது. 


இப்படி அனைத்து இன்பங்களையும் தந்து, போதாக் குறைக்கு இம்மை மறுமை பலன்களையும் தருவதால் இல்லறம் சிறந்தது என்பதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்?


என்ன சரிதானே?



Thursday, July 29, 2021

திருக்குறள் - அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை

திருக்குறள் - அறன் எனப்பட்டதே இல் வாழ்க்கை 


இல்லறம், துறவறம் என்று இரண்டு அறங்கள் இருக்கின்றன. இதில் துறவறம் என்பது மிகக் கடினமான ஒன்று. புலன்களை அடக்க வேண்டும். மனதை அடக்க வேண்டும். விரதம், தவம் எல்லாம் செய்ய வேண்டும். 


இல்லறம் அப்படி அல்ல. அனைத்து இன்பங்களையும் துயித்துக் கொள்ளலாம். ஒன்றும் முரண்பட வேண்டாம். 


இதில் எது சிறந்த அறம் என்ற கேள்வி நம் முன் நிற்கிறது. 


இந்தக் குறளில் அறம் என்றாலே அது இல்லறம் தான் என்று வள்ளுவர் கூறுகிறார். 


பாடல் 


அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_29.html



(pl click the above link to continue reading)



அறன் = அறம் 


எனப்  = என்று 


பட்டதே = சிறப்பித்து சொல்லப் பட்டதே 


இல்வாழ்க்கை = இல்வாழ்க்கை 


அஃதும் = அதுவும் 


பிறன் = மற்றவர்கள் 


பழிப்பது இல்லாயின் = பழிக்காமல் 


 நன்று = நல்லது 


இந்தக் குறளில் கொஞ்சம் குழப்பம் வரும். 



பிறர் பழிக்காத இல்லறமே சிறந்தது என்று நாம் பொருள் கொண்டு விடுவோம். 


அது சரி அல்ல என்று பரிமேலழகர் கூறுகிறார். 


அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை என்று கூறி இருக்கலாம்.  அதை விட்டுவிட்டு 


அறன் எனப்பட்ட"தே" இல்வாழ்கை என்று ஒரு ஏகாரம் போடுகிறார் வள்ளுவர். 


ஏகாரம் பிரிநிலை என்கிறார் பரிமேலழகர். 


கொஞ்சம் இலக்கணம் படிப்போமா? (இலக்கணம் வேண்டாம் என்பவர்கள் கீழே உள்ளதை விட்டு விடலாம்.). 


தமிழ் இலக்கணத்தில் இடைச் சொல் ஒன்று உண்டு.

தனித்து நின்று பொருள் தராது. இரண்டு சொற்களுக்கு இடையில் வந்து அவற்றிற்கு இடையில் உள்ள உறவு, அல்லது அர்த்தத் தெளிவை தரும்.

இடை எனப்படுவ
பெயரொடும் வினையொடும்
நடைபெற்று இயலும் : தமக்கு இயல்பு இலவே


என்பது தொல்காப்பியம்.

இடை எனப்படுவது பெயரோடும் (பெயர் சொல்லோடும் ), வினையோடும் (வினைச் சொல்லோடும் ) சேர்ந்து வரும். தனக்கென்று தனி இயல்பு இல்லாதது என்பது தொல்காப்பியம் தரும் இலக்கணம். 


நிறைய இடைச் சொற்கள் இருக்கின்றன.

அதில் ஏகார (ஏ ) இடைச் சொல்லை மட்டும் பார்ப்போம்.

இந்த ஏகார இடைச் சொல் பல 7 விதமாக வரும்.

ஏகார வினைச்சொல், தேற்றமும், வினாவும், எண்ணும், பிரிநிலையும் எதிர்மறையும், இசைநிறையும் ஈற்றசைவுமாகிய ஏழு பொருளைத்தரும்.

எப்படி என்று பார்ப்போமா ?

1. தேற்றம் என்றால் உறுதி, தெளிவு.

நான் நேற்று வந்தேன் என்று சொல்லலாம்

நான் நேற்றே வந்தேன் என்றும் சொல்லலாம்.

இரண்டுக்கும் என்ன வேறுபாடு ? நேற்றே வந்தேன் என்பது நேற்று வந்தேன் என்பதே அழுத்தமாக , உறுதியாகச் சொல்கிறது.

நான் இதைச் செய்தேன்
நானே இதைச் செய்தேன்

நான் செய்தேன் என்றால் வேறு யாரோ கூட என்னோடு சேர்ந்து செய்திருக்கலாம்.

நானே செய்தேன் என்பது நான் செய்தேன் என்பதே தெளிவாக்குகிறது அல்லவா.

2. வினா

வீட்டுக்குப் போகிறாய்
வீட்டுக்குத் தானே போகிறாய் ?

முதலில் உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போவதை குறிக்கிறது.
இரண்டாவது உள்ள வாக்கியம் வீட்டுக்குப் போகிறாயா அல்லது வேறு எங்காவது போகிறாயா என்ற வினாவை எழுப்புகிறது. "தானே" வில் உள்ள ஏகாரம் அந்த வாக்கியத்தை வினாவாக மாற்றுகிறது.

3. எண்

வீடு, நிலம், நகை
வீடே, நிலமே, நகையே

இரண்டாவது உள்ள வாக்கியம் வீடு, நிலம் , நகை என்ற மூன்று இருக்கிறது என்று எண்ணிக்கையை சொல்ல வருகிறது.

வீடே , நிலமே, நகையே என்று சொல்லும் போது நம்மை அறியாமலேயே நாம் அவற்றை எண்ணத் தொடங்கி விடுகிறோம். சொல்லிப் பாருங்கள்.


4. பிரிநிலை

அனைத்து மாணவர்களில் அவனே சிறந்த மாணவன்

இதில் , அந்த ஒரு மாணவனை பிரித்து காட்டுகிறது.

இராமாயணத்தில் உள்ள பாத்திரங்களில் பரதனே சிறந்த பாத்திரம்.

பரதனை பிரித்துக் காட்டுவதால், இது பிரிநிலை ஏகாரம்.


5. எதிர்மறை

நீயே கொண்டாய் என்ற வாக்கியத்தில் நீயா கொண்டாய் என்ற கேள்வி நிற்கிறது.

6. இசை நிறை

’ஏயே யிவலொருத்தி பேடியோ வென்றார்.’’


இதை இவள் ஒருத்தி என்று ஆரம்பித்து இருக்கலாம். ஏயே என்று ஆரம்பித்தது  இசை நயம் கருதி.

7. ஈற்று அசை

அசைச் சொல் என்றால் அர்த்தம் இல்லாமல், இலக்கணத்தை நிறைவு செய்யும் பொருட்டு  சேர்க்கப்படும் சொற்கள்.  Filler , buffer , மாதிரி.

 என்றுமேத்தித் தொழுவோ மியாமே

 என்றும் ஏத்தி தொழுவோம் யாம் என்று நிறுத்தி இருக்கலாம். யாமே என்பதில் உள்ள  ஏ காரம் அர்த்தம் ஏதும் இன்றி நின்றது. அசைச் சொல்.


அறன் எனப்பட்டதே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலை. 


எதைப் பிரிக்கிறது?


இல்லறத்தை, துறவறத்தில் இருந்து பிரிக்கிறது. 


இரண்டையும் பிரித்து விட்டதால், 


"அஃதும் பிறன்பழிப்பது இல்லாயின் நன்று"


என்பதில் வரும் "அஃது" என்பது துறவறத்தை சுட்டுகிறது என்கிறார் பரிமேலழகர். 


இல்லறமே சிறந்தது. 


துறவறமும் சிறந்ததுதான் பிறர் அதை பழிக்காமல் இருந்தால் என்கிறார். 


ஏன் பழிக்கப் போகிறார்கள் என்பதற்கும் விளக்கம் தருகிறார். 


துறவறம் என்பது ஆசைகளை அடக்கி, புலன்களை அடக்கி, மனதை ஒருமுகப் படுத்தி, தவம், விரதம் எல்லாம் செய்ய வேண்டும். இவை மனித இயல்புக்கு எதிரானவை. இன்பம் துயிப்பது என்பது உயிர்களின் அடிப்படைக் குணம். துறவு அதை மறுத்து நிற்கிறது. 


எவ்வளவு நாள் நிற்க முடியும்? எங்கேனும் ஒரு கணத்தில் சறுக்கி விழ வாய்ப்பு இருக்கிறது. 


பெரிய பெரிய தவ முனிவர்கள் எல்லாம் சறுக்கி இருக்கிறார்கள். சறுக்கி தவ வலிமையை இழந்து இருக்கிரார்கள். அப்படி என்றால சாதாரண துறவிகளை என்னென்று சொல்லுவது. 


ஒரு துறவி சறுக்கினால் உலகம் அவனைப் பழிக்கும். தூற்றும். 


எனவே, பழி வராமல் துறவு இருந்தால் அதுவும் நல்லதுதான் என்ற பொருள் பட கூறினார். 


இல்லறமே சிறந்தது, பழி இல்லாமல் இருந்தால் துறவறமும்  சிறந்தது தான் என்கிறார். 


மேலும் படிப்போம்.



Wednesday, July 28, 2021

விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல

 விவேக சிந்தாமணி - மூடரை மூடர் கொண்டாடியது போல 


ஒரு ஊர்ல ஒரு கழுதை இருந்தது. அந்தக் கழுதை இராத்திரி ஆனா, ஊருக்கு வெளியே உள்ள ஒரு காட்டுக்குப் போய், சத்தம் போட்டு தன்னுடைய இனிய குரலால் பாடும்.  அந்தக் காட்டுல ஒரு பேய் இருந்து வந்தது. அந்த பேய்க்கு இந்த கழுதையின் பாட்டு ரொம்ப பிடித்துப் போய் விட்டது. 


"ஆஹா, கழுதையாரே உன்னுடைய குரல் வளமே வளம். என்ன அருமையா பாடுற...இன்னும் கொஞ்சம் பாடு " என்று இரசித்துக் கேட்கும். 


அதைக் கேட்ட உடன், கழுதைக்கு பெருமை தாங்காது. நம்மை விட்டா இனிமையா பாட இந்த உலகத்ல யாரும் இல்லைன்னு பெருமிதம் கொள்ளுமாம். 


ஊருக்குள்ள இப்படி நிறைய கழுதைகளும், பேய்களும் இருக்கின்றன. 


முட்டாளை பெரிய ஆள் என்று போற்றுவதும், அதைக் கேட்ட அந்த முட்டாள், நம்மை விட பெரிய புத்திசாலி இந்த ஈரேழு பதினாலு உலகிலும் கிடையாது என்று நினைப்பதும், நாளும் நடப்பது தானே....


பாடல் 


கழுதை காவெனக் கண்டுநின் றாடிய வலகை

தொழுது மீண்டுமக் கழுதையைத் துதித்திட வதுதான்

பழுதி லாநமக் கார்நிக ராமெனப் பகர்தல்

முழுது மூடரை மூளர்கொண் டாடிய முறைபோல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_28.html



(pl click the above link to continue reading)


கழுதை  = கழுதை 


'கா' வெனக் = காள் காள் என்று பாடியதைக் 


கண்டு  = கண்டு 


நின் றாடிய = நின்று, அந்தப் பாட்டுக்கு ஆடிய 


வலகை = பேய் 


தொழுது = அந்தக் கழுதையை தொழுது 


மீண்டும் = மீண்டும் 


அக் கழுதையைத் = அந்தக் கழுதையை 


துதித்திட = போற்றிட 


அதுதான் = அந்தக் கழுதையும் தான் 


பழுதி லா = குற்றமில்லாத 


நமக் கார் = நமக்கு யார் 


நிக ராமெனப் = நிகராம் என 


பகர்தல் = சொல்லி 


முழுது மூடரை = முழு முட்டாளை 


மூளர்கொண் டாடிய முறைபோல் = முட்டாள் கொண்டாடியது போல 


சங்கீதம்னா என்ன என்று கழுதைக்கும் தெரியாது, பேய்க்கும் தெரியாது. 


நாட்டுக்குள்ள நிறைய பேய்கள், பல கழுதைகளை பாராட்டிக் கொண்டு இருக்கின்றன. 


இத்தனை பேய்கள் பாராட்டுகிறதே, அது தப்பாவா இருக்கும் என்று மற்றவர்களுக்கும் ஒரு சந்தேகம் வரத் தான் செய்யும். 


எத்தனை பேர் பாராட்டுகிறார்கள் என்பதல்ல முக்கியம். 


பாராட்டுபவனுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். 


ஒரு முட்டாளை இன்னொரு முட்டாள் பாராட்டினால் பாராட்டி விட்டுப் போகட்டும். 


நமக்கு என்ன?



Tuesday, July 27, 2021

திருக்குறள் - அறனிழுக்கா இல்வாழ்க்கை

திருக்குறள் - அறனிழுக்கா இல்வாழ்க்கை


முந்தைய குறளில் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்று கூறினார். அதே கருத்தை மேலும் வலியுறுத்துகிறார் இந்தக் குறளில். 


பாடல் 


 ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை

நோற்பாரின் நோன்மை உடைத்து


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_27.html


(pl click the above link to continue reading)


ஆற்றின் = வழியில், நல்ல வழியில் 


ஒழுக்கி = நடத்திச் சென்று, நடக்கச் செய்து 


 அறனிழுக்கா = அறவழியில் இருந்து தவறாத 


 இல்வாழ்க்கை = இல்வாழ்கை 


நோற்பாரின் = தவம் நோற்பாரின், தவம் மேற் கொள்வாரின் 


நோன்மை  = வலிமை, சிறப்பு 


உடைத்து = உடையது.


அதாவது, தவம் மேற்கொள்வாரின் வாழ்கையை விட, இல்வாழ்கை உயர்ந்தது என்கிறார். 


கொஞ்சம் விரித்து பொருள் காண்போம். 


"ஒழுக்கி" ஒழுகி என்றால் தான் ஒழுகுதல். ஒழுக்கி என்றால் மற்றவர்களை நடத்திச் செல்லுதல்? 


யாரை ஒழுக்கி?  பிரம்மச்சாரி, வானப்ரஸ்தம், துறவு மேற்கொண்டவர்களை அவர்கள் அறத்துக்கு ஏற்ப வாழ்வை நடத்த உதவி செய்து என்று பொருள் கொள்ள வேண்டும். 


மற்றவர்களுக்கு, அற வழியில் செல்ல உதவி செய்கிறேன் பேர்வழி என்று தான் அற நெறியை கை விட்டு விடக் கூடாது என்பதற்காக "அறனிழுக்கா இல்வாழ்க்கை" என்றார். 


எல்லோருக்கும் நினைப்பு என்ன என்றால், தவம் செய்பவர்கள் பெரியவர்கள், உயர்ந்தவர்கள் என்று. 


திருவள்ளுவர் அதை மறுதலிக்கிறார்.  தவம் முயல்வாரைவிட இல்லற வாழ்வில் உள்ளவன் உயர்ந்தவன் என்கிறார். 


சரி, அப்படி என்றால், துறவறம் என்று ஒன்று எதற்கு? பேசாமல் எல்லோரும் இல்லறத்திலேயே இருந்து விடலாமே. துறவறத்தை விட இல்லறம் உயர்ந்தது என்றால், ஏன் தவம், விரதம் என்று துன்பப் பட வேண்டும் ? 


பின் வரும் குறள்களில் துறவறத்தை தூக்கிப் பிடிக்கிறார் வள்ளுவர்.


அப்படி என்றால் என்ன தான் சொல்ல வருகிறார்?


படிக்கப் படிக்கப் புரியும். இப்போது சொன்னால் குழப்பமே மிஞ்சும். 


பொறுமையுடன் ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டே போனால், எல்லாம் தெளிவாகும். 


என்ன அவசரம்...மெதுவாக படிப்போமே....


Monday, July 26, 2021

கம்ப இராமாயணம் - இரண்டின் ஒன்றே துணிக

கம்ப இராமாயணம் - இரண்டின் ஒன்றே துணிக 


அங்கதனை தூது அனுப்புவது என்று முடிவு ஆகி விட்டது. அங்கதனுக்கும் அதில் பெரிய மகிழ்ச்சி. 


இராவணனிடம் என்ன சொல்ல வேண்டும் என்று கேட்கிறான் அங்கதன். 


அதற்கு இராமன் 


"ஒண்ணு சீதையை விட்டு விட்டு உன் உயிரை காத்துக் கொள். அல்லது சண்டை போட்டு உன் தலைகள் பத்தும் போர்க் களத்தில் சிதறி விழும். இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்து எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டு வா" என்கிறான். 



பாடல் 




 'என் அவற்கு உரைப்பது?' என்ன,  ' "ஏந்திழையாளை விட்டுத


தன் உயிர் பெறுதல் நன்றோ? அன்றுஎனின்,  தலைகள் பத்தும்


சின்னபின்னங்கள் செய்ய, செருக்களம் சேர்தல்  நன்றோ?


சொன்னவை இரண்டின் ஒன்றே துணிக!" எனச் சொல்லிடு' என்றான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_26.html


(pl click the above link to continue reading)


 'என் அவற்கு உரைப்பது?' என்ன = இராவணனுக்கு என்ன தூது செய்தி சொல்லட்டும் என்று அங்கதன் கெட்ட போது 


"ஏந்திழையாளை = அழகிய ஆபரணங்களை அணிந்த சீதையை 


விட்டுத் = சிறையில் இருந்து விடுவித்து 


தன் உயிர் பெறுதல் நன்றோ? = உன்னுடைய உயிரை தக்க வைத்துக் கொல்லுதல் நல்லதா 


அன்றுஎனின்,  = இல்லை என்றால் 


தலைகள் பத்தும் = பத்துத் தலைகளும் 


சின்னபின்னங்கள் செய்ய = சின்னா பின்னாமாக 


செருக்களம் சேர்தல்  நன்றோ? = போர்க் களத்தில் விழுந்து கிடப்பது நல்லதா 


சொன்னவை இரண்டின் = நான் சொன்ன இந்த இரண்டில் 


ஒன்றே துணிக!" = ஒன்றை தேர்ந்து எடுப்பாயாக 


எனச் சொல்லிடு' என்றான். = என்று சொல்லி விட்டு வா என்றான். 


சில கெட்ட காரியங்களை செய்யத் தொடங்கி விட்டால் பின் அதை நாமே நினைத்தால் கூட விட முடியாது. 


சரி,  இது சரிப்பட்டு வராது என்று இராவணன் சீதையை விட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் ?


அவனுக்கு அது பெரிய தலை குனிவாகப் போய் இருக்கும். எல்லோரும் அவனை பார்த்து சிரிப்பார்கள். அவன் வீரம், மானம், பெருமை எல்லாம் சிறுத்து விடும். இராமனிடம் பயந்து விட்டான் என்று எதிரிகள் அவனை ஏளனம் செய்வார்கள். 


எனவே, சீதையை சிறை விடுவது என்பது முடியாத காரியமாகப் போய் விட்டது. 


உடன் பிறந்த தம்பி இறந்தான், பெற்ற பிள்ளை இறந்தான், இருந்தும் முடியவில்லை. கடைசியில் அவனிடம் இருந்தது காமம் அல்ல. பிடிவாதம். நான் விடுவதா என்ற அகம்பாவம். 


விடாவிட்டால், சண்டை போட்டு உயிரை விட வேண்டி வரும். 


சிந்திக்க வேண்டும். 


கெட்ட செய்கைகளை ஆரம்பிக்கவே கூடாது. பின் அது நம்மை விடாது, நாம் விட்டு விடலாம் என்று நினைத்தால் கூட. 


ரொம்ப ஏன் சிந்திப்பான்? காப்பி, அதை விட முடிகிறதா? 


ஒரு தடவைதானே என்று ஆரம்பித்த எத்தனை கெட்ட பழக்கங்கள் ஒட்டிக் கொண்டு விடுகின்றன. 


மாற்றான் மனைவி மேல் கொண்ட ஆசை அவனை எங்கு கொண்டு நிறுத்தியது? 


அது அறத்தின் வலிமை. 




Sunday, July 25, 2021

திருக்குறள் - பெறுவது என்ன?

 திருக்குறள் - பெறுவது என்ன? 


இல்லறம் சிறந்ததா, துறவறம் சிறந்ததா என்ற கேள்வி இன்று வரை தொடர்கிறது. பற்றினை விட்டு விட வேண்டும், ஆசை கூடாது, ஆசையே துன்பத்திற்கு எல்லாம் காரணம் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். 


இங்கே, இல்லறத்தின் சிறப்பை சொல்ல வந்த வள்ளுவர், இல்லறத்துக்கு வெளியே போய் கிடைப்பது என்ன இருக்கிறது என்று கேட்கிறார். 


பாடல் 


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்

போஒய்ப் பெறுவது எவன்?


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_25.html


(pl click the above link to continue reading)


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் = ஒருவன் இல்வாழ்க்கையை அற வழியில் நடத்துபவன் ஆனால் 


 புறத்தாற்றில் = அதற்கு வெளியே 


போஒய்ப் பெறுவது எவன்? = போய் பெறுவது என்ன இருக்கிறது ? (ஒன்றும் இல்லை)



இல் வாழ்கையை அற வழியில் செலுத்தினால், அதை விட அடையப் போவது ஒன்றும் இல்லை. 


அதாவது, இல்லறத்தை விட்டு துறவறத்தில் சென்று அடையப் போவது ஒன்றும் இல்லை என்கிறார். 


அற வழி என்றால், மேலே உள்ள குறள்களில் சொன்ன பதினொரு கடமைகளும், அற வழியில் பொருள் ஈட்டுதலும், அன்பும் அன்புடன் கூடிய இல்லறமும் ஆகும். 


அது சரி, வள்ளுவர் பாட்டுக்கு சொல்லி விட்டார். அதில் உண்மை இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டாமா? 


இல்லறம் ஏன் சிறந்தது? 


இல்லறத்தில் உள்ள ஒருவன், தானும் இன்பம் அனுபவித்து, மற்றவர்களுக்கும் இன்பம் தருகிறான் (பதினொரு கடமைகள்). ஆனால், துறவறத்தில், தானும் இன்பம் அனுபவிக்கமால் (விரதம், தவம், போன்றவற்றால் உடலை வருத்தி) மற்றவர்களிடம் பிச்சை பெற்று அவர்களையும் துன்பப்படுத்துவதால் துறவறத்தை விட இல்லறமே சிறந்தது என்கிறார் இந்தக் குறளில். 


"அங்க ஒண்ணும் இல்ல, பேசாம் இங்கேயே இருந்து இன்பம் காண், இதுவே சிறந்தது" என்று சொல்கிறார். 


இல்லறம் அன்பைக் காட்டும், அருளுக்கு அழைத்துச் செல்லும், அருள் வீடு பேற்றைத் தரும் எனவே இந்தப் பிறவியில் இன்பமும், பின் வீடு பேறும் தருவதால், இல்லறமே சிறந்தது என்பது அவர் முடிவு.


அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். 




Saturday, July 24, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 3

  

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 3


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/3.html


(pl click the above link to continue reading)


இந்தக் குறளுக்கு விளக்கம் எழுதிய பின், "இதற்கு மேல் என்ன இருக்கிறது" என்று எழுதியிருந்தேன். 


இருக்கிறது. 


இரண்டு விடயம் விடுபட்டு போய் விட்டது. 


"தானென்றாங்கு " என்று குறளில் வருகிறது. 


தனக்குத் தானே ஒன்றைச் செய்வது அறமாகுமா?


நான் இன்று ஒரு பெரிய அறம் செய்தேன்...அந்த உணவு விடுதியில் சென்று மூக்கு முட்ட சாப்பிட்டேன்...என்றால் அது அறமா? 


பின் ஏன் வள்ளுவர் "தான்" என்பதையும் இல்லறக் கடமைகளில் சேர்கிறார்?


பரிமேலழகர் இல்லாவிட்டால் இதற்கு அர்த்தம் தெரியாமலேயே போய் இருக்கும். அல்லது தவறான அர்த்தம் புரிந்து கொண்டிருப்போம். வள்ளுவரே சொல்லி விட்டார், நமக்கு நாம் செய்வதும் அறம் தான், எனவே நான் எனக்கும் என் குடும்பத்துக்கும் நிறைய அறம் செய்யப் போகிறேன் என்று ஒரு கும்பல் கிளம்பி இருக்கும். 


பரிமேலழகர் உரை செய்கிறார்....


"எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும் அறனாயிற்று."


மற்ற அறங்கள் எல்லாம் செய்ய வேண்டும் என்றால், நான் இருந்தால்தானே செய்ய முடியும். நான் என்னைச் சரியாக கவனிக்கமால், சாப்பிடாமல், உறங்காமல், நோய் வந்தால் கவனிக்காமல் விட்டு விட்டால், நான் தளர்ந்து போவேன், வேலை செய்ய முடியாமல் முடங்கிப் போவேன், அல்லது இறந்து போவேன். பின் எப்படி அறம் செய்ய முடியும்? 


அறங்களைச் செய்ய நான் நன்றாக இருக்க வேண்டும் அல்லவா? எனவே, அதற்காக நீ உன்னை காத்துக் கொள் என்கிறார். சந்தோஷம் அனுபவிக்க அல்ல, மற்ற அறங்களைச் செய்ய வேண்டி இருப்பதால், உன்னை நீ காத்துக் கொள் என்கிறார். 


இது விட்டுப் போன ஒரு விடயம். 


இன்னொன்று, இந்த ஐந்து பேருக்கும் அறம் செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது, எவ்வளவு செய்வது. எப்பவாவவது, மனம் தோன்றிய படி செய்யலாமா? 


நன் இன்றைக்கு சிரார்த்தம் செய்யப் போகிறேன், எனவே வீட்டுக்கு வந்த விருந்தாளியை விரட்டி விடலாமா?


இல்லை. இந்த ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய கடமையாக வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி வை என்கிறார்.  


வீட்டுச் செலவுக்கு இவ்வளவு (தான்), தெய்வ காரியங்களுக்கு இவ்வளவு, விருந்தினர் வந்தால் போனால் அவர்களை உபசரிக்க இவ்வளவு என்று எல்லாவற்றிற்கும் பங்கு வை என்கிறார். 


அதோடு நின்றால் பரவாயில்லை. 


ஒரு அரசாங்கம் எவ்வளவு வரி போடலாம் என்றும் இதற்குள் சொல்லிவிட்டுப் போகிறார். 


இந்த ஐந்து பேருக்கு ஒரு கூறு. ஆறாவதாக அரசன் அல்லது அரசாங்கம். வரி செலுத்த வேண்டும் அல்லவா? இல்லறத்தான் வரி கட்டாமல் இருக்க முடியுமா? வள்ளுவர் சொல்லவில்லை, எனவே வரி கட்ட மாட்டேன் என்று சொல்ல முடியுமா?


மறவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் கூட விடலாம். வரி கட்டா விட்டால், அரசன் அல்லது அரசாங்கம் வலிந்து கொள்ளும். சொத்தை பறிமுதல் செய்யும். கட்டாதவர்களை சிறையில் போடும். எனவே, நீ தராவிட்டாலும் அரசன் எடுத்துக் கொள்வான் என்பதால் அதை சொல்லாமல் விட்டார் என்கிறார் பரிமேலழகர்.


மேலும், வருமானத்தில் ஆறில் ஒரு பங்கு அரசனுக்கு வரியாகச் செலுத்த வேண்டும் என்கிறார். 


இவர்கள் ஐவருக்கும் ஐந்து கூறு. அரசனுக்கு ஆறாவது கூறு. அதாவது, 1/6 அல்லது  16% வரி என்கிறார். 


"அரசனுக்கு இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று, இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான் என்பதறிக"


என்பது பர்மேலழகர் உரை. 


வருமானத்தை ஆறு பிரிவாக பிரித்துக் கொள். ஆறில் ஒரு பகுதி அரசனுக்கு வரி. மீதி ஆறில் ஐந்து பகுதி மேற் சொன்ன ஐந்து பேருக்கும் என்று பிரித்துக் கொள் என்கிறார். 


வீடு, நாடு என்று எவ்வளவு பொறுப்புணர்வோடு இல்லற கடமைகளை சொல்லித் தருகிறார். 


படிக்க படிக்க, இத்தனை நாள் இதை படிக்காமல் இருந்து விட்டோமே என்ற குற்ற உணர்வுதான் மிஞ்சுகிறது. 



(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html )


(இதன் இரண்டாம் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/2_17.html



Thursday, July 22, 2021

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும்

திருக்குறள் - இல்வாழ்வின் பண்பும் பயனும் 


இல்லறத்தின் பதினொரு கடமைகள் சொன்னார். அந்தக் கடமைகளை செய்ய உண்டாக்கும் பொருளும் அற வழியில் ஈட்ட வேண்டும் என்றார். 


அடுத்ததாக, இதெல்லாம் சாத்தியமா? ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் செய்யலாம். வாழ்நாள் முழுவதும் செய்து கொண்டே இருக்க முடியுமா? தளர்ந்து போக மாட்டோமா? இப்படி எல்லோருக்கும் செய்து கொண்டே இருந்தால் நாம் வாழ்வது எப்போது? என்றெல்லாம் பல கேள்விகள் வரும். 


எல்லாவற்றிற்கும் பதில் தருகிறார் வள்ளுவர். 


பாடல் 


 அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_22.html


(click the above link to continue reading)



அன்பும் = அன்பும் 

அறனும் = அறமும் 

உடைத்தாயின் = உளவாக இருப்பின் 

இல்வாழ்க்கை = இல்வாழ்க்கை 

பண்பும் = பண்பும், இயல்பும் 

பயனும் = பயனும், விளைவும் 

அது = அது 


சரி. இதில் என்ன விடை இருக்கிறது? ஒன்றும் இல்லையே என்று தோன்றலாம். சிந்திப்போம். 


முதலாவதாக, இல்வாழ்கையில் அன்பு இருக்க வேண்டும். கணவன், மனைவி, பிள்ளைகள், சுற்றம்,நட்பு என்று அந்த வட்டத்துக்குள் ஒருவருக்கு ஒருவர் அன்புடன் இருக்க வேண்டும். அன்பு என்றால் ஏதோ நாள் கிழமைக்கு செய்வது அல்ல. திருமண நாள், விருந்தினர் வந்த நாள் என்று இருக்கக் கூடாது. அன்பு செலுத்துவது என்பது ஒரு பண்பாக இருக்க வேண்டும். இயல்பான ஒன்றாக இருக்க வேண்டும். அன்பு இல்லாவிட்டால், இல்வாழ்க்கையில் ஒரு அர்த்தமும் இல்லை. 


தொடர்புடையார் மாட்டுச் செய்வது அன்பு. தொடர்பிலாதர் மாட்டும் செய்வது அருள். இல்லறத்துக்கு அன்பு வேண்டும். துறவறத்துக்கு அருள் வேண்டும். 


இரண்டாவது, அன்பு என்பது பண்பாக இருந்தால், அறம் என்பது பயனாக விளையும். இல்வாழ்வில் அறம் செழிக்க வேண்டும் என்றால் அன்பு முதலில் வேண்டும். கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு இருந்தால், விருந்தினரை எப்படி உபசரிப்பது? அன்பு அடிப்படை குணமாக இருந்தால்தான், இல்லறம் நடக்கும். இல்லை என்றால் கோர்ட் படியில் தான் நடக்க வேண்டி இருக்கும். 


மூன்றாவது, கடினமாக படித்தால், நல்ல மதிப்பெண் பெறலாம் என்பதில் கடின உழைப்பு பண்பு, (இயல்பு) மதிப்பெண் பெறுவது உழைப்புக்கு கிடைத்த பயன் அல்லது பலன்.  அது போல, இல்வாழ்வில் அன்பு இருந்தால், அறம் தானாகவே விளையும். அறம் செய்யப் போகிறேன் என்று மெனெக்கெட வேண்டாம். ஒருவருக்கு ஒருவர் அன்பு செய்தாலே போதும், அறம் தானே வரும். மதிப்பெண் வாங்கப் போகிறேன் என்று கிளம்ப முடியாது. நிறைய படிக்கப் போகிறேன் என்று கிளம்பலாம். மதிப்பெண் தானே வரும். அது போல. 


நான்காவது, அன்பு இல்லை என்றால், இல்லறம் இல்லை. மனைவி மேல் அன்பு இல்லாவிட்டால், வேறு ஒரு பெண்ணை பார்க்கத் தலைப்படுவான் கணவன். குடும்பம் சிதையும். பிள்ளைகள் மேல் அன்பு பிறக்காது. சுற்றமும் நட்பும் விலகிப் போய் விடும். அன்பு செய்யப் பழக வேண்டும்.  அன்பு இருக்கும், அதை வெளிப்படுத்தத் தெரியாது. அறம் தழைக்க வேண்டும் என்றால் அன்பு செழிக்க வேண்டும். 


இந்தக் குறளுக்கு பலர் பலவிதமாக உரை செய்து இருக்கிறர்கள். ஆர்வம் உள்ளவர்கள், தேடிக் கண்டடைக.


அன்பு அருளாக மாறும். அருள் துறவறம் தரும். துறவறம் வீடு பேற்றைத் தரும். 


பின்னால் அது பற்றி வரப் போகிறது. 


மேலும் சிந்திப்போமா?






Wednesday, July 21, 2021

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - மன நிலை கூறலாமோ?

கம்ப இராமாயணம் - அங்கதன் தூது - மன நிலை கூறலாமோ?



அங்கதனை தூதாக இராவணனிடம் அனுப்பவது என்று முடிவு செய்கிறார்கள். 


இராமன் அங்கதனை அழைத்து, "அங்கதா, நீ அந்த இராவணனிடம் சென்று நான் சொல்லும் இரண்டு விடயங்களைக் கூறி, அதற்கு ஒன்றைப் பதிலாக பெற்றுக் கொண்டு வா" என்கிறான். 


பாடல் 


 'நன்று' என, அவனைக் கூவி, 'நம்பி! நீ நண்ணலார்பால்

சென்று, உளது உணர ஒன்று செப்பினை திரிதி' என்றான்;

அன்று அவன் அருளப் பெற்ற ஆண்தகை அலங்கல் பொன் தோள்

குன்றினும் உயர்ந்தது என்றால், மன நிலை கூறலாமோ?


பொருள்  


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_21.html


(Please click the above link to continue reading)



 'நன்று' என,  = இலக்குவன், வீடணன், அனுமன் ஆகியோர் கூறியதைக் கேட்டு, நல்லது என்று  இராமன் கூறி 


அவனைக் கூவி,  = அங்கதனை அழைத்து 


'நம்பி! = நம்பி 


நீ = நீ 


நண்ணலார்பால் = பகைவர்களிடம்  (இராவணனிடம்) 


சென்று = சென்று


உளது உணர  = மனதில் படும்படி சொல்லி 


ஒன்று  = ஒன்றை பதிலாக 


செப்பினை  திரிதி = பெற்று வா என்றான் 


அன்று = அப்போது 


அவன் = இராமனின் 


அருளப் பெற்ற = அருளைப் பெற்ற 


ஆண்தகை  = ஆண்களில்சிறந்தவனான அங்கதன் 


அலங்கல் பொன் தோள் = மாலை அணிந்த பொன் போன்ற ஒளி விடும் தோள்கள் 


குன்றினும் உயர்ந்தது என்றால் = குன்றை விட பூரித்து உயர்ந்தது என்றால் 


மன நிலை கூறலாமோ? = அவன் மன நிலை எப்படி இருந்தது என்று கூற முடியுமா?


நம்பி என்றால் நற்குணங்கள் நிறைந்தவன் என்று பொருள்.


அங்கதனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. 


ஏன்?


இராமன் , அவனை நம்பி என்று கூறிவிட்டான். இராமனே கூறினான் என்றால் மகிழ்ச்சி இருக்காதா. கம்பன் பாடம் சொல்கிறான் நமக்கு. வேலை வாங்க வேண்டுமா, வேலை செய்பவர்களை பாராட்டு. அவர்கள் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள். இல்லை என்றால் கடனே என்று செய்வார்கள். எப்பப் பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருந்தால், யாருக்குத்தான் வேலை செய்ய மனம் வரும். 



பிள்ளையிடம் வேலை சொல்வதாக இருந்தாலும் "என் இராசா இல்ல...குடிக்க கொஞ்சம் தண்ணி தருவியா" என்றால் சந்தோஷமாக ஓடிச் சென்று கொண்டு வருவான். "ஏய், இங்க வா, அந்த தண்ணி பாட்டில எடுத்துட்டு வா" ஒண்ணு செய்ய மாட்டான் இல்லேனா முணு முணுத்துக்கொண்டே  செய்வான். 


கணவன் மனைவியிடமும் அப்படித்தான். 



"ரொம்ப களைப்பா இருக்கு...கொஞ்சம் டீ போட்டுத் தர்றியா" என்று மனைவியிடம் கேட்டால், "இதோ அஞ்சு நிமிஷத்ல " என்று சுட சுட போட்டுத் தருவாள். 



"என்ன இன்னிக்கு டீ போடலியா" என்று அதட்டினால் "இல்லை" னு பதில் வரும். 



இரண்டாவது, இராமன் மற்றவர்களை எல்லாம் விட்டு விட்டு தன்னிடம் வேலை சொன்னான் என்பதில் அங்கதனுக்கு ஒரு மகிழ்ச்சி. 


அப்படி ஒரு தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள பழக வேண்டும். எப்படா பாஸ் வேலை சொல்லுவார் என்று கீழே இருப்பவர்கள் ஏங்க வேண்டும். 


இதனால், அவன் தோள்கள் விம்மி புடைத்தன....அப்படி என்றால் மனம் எவ்வளவு மகிழ்ந்திருக்கும் என்று கம்பர் கேட்கிறார். 



நல்லா இருக்கா ?


Tuesday, July 20, 2021

திருக்குறள் - வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

 திருக்குறள் - வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்


இல்லறத்துக்கு உள்ள பதினொரு கடமைகள் சொல்லி விட்டார். அடுத்து என்ன?


இந்த பதினொரு கடமைகளை செய்ய பொருள் வேண்டுமே? பிரம்மச்சாரி, வானப்ரஸ்தம், துறவு இவற்றில் உள்ளவர்கள், தென்புலத்தார், சுற்றம், தான், விருந்து, கை விடப் பட்டவர்கள், ஏழைகள், அனாதையாக இறந்தவர்கள் என்று இவர்களுக்கு எல்லாம் உதவி செய்ய பொருளுக்கு எங்கே போவது?


நாலு பேருக்கு நல்லது செய்வது என்றால் எதுவும் தவறு இல்லைன்னு தவறான வழியில் பணம் சம்பாதித்து இந்த உதவிகளைச் செய்யலாமா? 


அது கூடாது. அற வழியில் பொருள் ஈட்டி, அதை மேற்கண்ட வழிகளில் செலவு செய்ய வேண்டும் என்கிறார். 


சரி, அப்படிச் செய்தால் என்ன கிடைக்கும் அல்லது அப்படி செய்யாவிட்டால் என்ன நிகழும்?


பாடல் 


பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை

வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_20.html


(pl click the above link to continue reading)



பழியஞ்சிப் = பழிக்கு பயந்து 

பாத்தூண் = பகிர்ந்து உண்ணும் 

உடைத்தாயின் வாழ்க்கை = வாழ்கை உடைத்தாயின் 

வழியெஞ்சல் = வழியின் மிச்சம் 

எஞ்ஞான்றும் இல் = எப்போதும் இல்லை 


பழியஞ்சிப் = பழிக்கு பயந்து. தவறு செய்ய பயப்பட வேண்டும். என்னை யார் என்ன செய்து விட முடியும் என்ற தைரியம், நான் திறமையானவன், நான் செய்யும் தவறுகளை யாரும் கண்டு பிடிக்க முடியாது,  என்ற தைரியம் தான் குற்றங்களுக்கு மூலம். பழிக்கு அஞ்ச வேண்டும். 


இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் கூறுவார் 


"பாவத்தான் வந்த பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம் பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார்."


அதாவது, ஒருவருடைய பொருளை நாம் திருடி அதில் தர்மம் செய்தால், அந்தத் தர்மத்தின் பலன் யாரிடம் இருந்து திருடினோமோ அவர்களுக்கும், திருடிய குற்றத்தின் பாவம் நமக்கும் வந்து சேரும் என்கிறார். 



"அறம் பொருளுடையார்" = நல்லறத்தின் பலன் யாருடைய பொருளோ அவர்களுக்கும் 

 "மேலும், பாவம் தன் மேலுமாய் நின்று" = பாவம் தனக்கும் வந்து சேரும் என்கிறார். 


ஊரெல்லாம் கொள்ளை அடித்து அன்ன தானம் செய்தால், புண்ணியம் வராது, பாவம்தான் வரும். 


தவறான வழியில் பணம் சேர்த்து, வள்ளுவர் சொன்னார் "தெய்வத்துக்கு" செய்ய வேண்டும் என்று கோவில் உண்டியலில் போட்டால் புண்ணியம் வராது. 


பாத்தூண் = பகிர்ந்து உண்டால். யாரோடு பகிர்ந்து உண்ண வேண்டும்? மேலே சொன்ன பதினொரு பேருடன் பகிர்ந்து உண்ண வேண்டும். அலுவலகத்தில் உள்ள மேலதிகாரி, கடை முதலாளி, அரசாங்க அதிகாரிகள் அவர்களோடு பகிர்ந்து உண்ணச் சொல்லவில்லை. 


உடைத்தாயின் வாழ்க்கை = அப்படிப்பட்ட வாழ்கை ஒருவன் வாழ்ந்தால் 


வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல் = இது கொஞ்சம் சிக்கலான இடம்.  எஞ்ஞான்றும் என்றால் எப்போதும் என்று அர்த்தம். அவன் இல்வாழ்க்கை என்ற பயணம் ஒரு போதும் தடை படாது. அவன் வழி தடை படாது. 


சிலர் நினைக்கலாம், இப்படி எல்லோருக்கும் செய்து கொண்டிருந்தால் நாம் பொருள் எல்லாம் இழந்து ஒன்றும் இல்லாமல் போய் விடுவோம். அப்புறம் ஒரு அறமும் செய்ய முடியாது. அது எல்லாம் நின்று போகும் என்று நினைக்கலாம். வள்ளுவர் சொல்கிறார், "பயப்படாதே. ஒரு போதும் தடை வராது. எங்கிருந்தாவது வரும்" என்கிறார். 


"எங்காயிணும் வரும் ஏற்பவருக்கு இட்டது" என்று அருணகிரி நாதர் கூறியது போல. 


எப்படி இல் வாழ்கை வாழ வேண்டும் என்று ஒவ்வொரு படியாக கையை பிடித்து நம்மை அழைத்துச் செல்கிறார். 


எவ்வளவு பெரிய வழிகாட்டி நூல். 


வாழ்கையை இந்த அளவுக்கு ஆழமாய், ஆராய்ந்து, ஒரு சமுதாய பொறுப்பு உணர்வுடன் சொல்ல யாரால் முடியும்? 


படிப்போம், அறிவோம். வாழ்வில் கடை பிடிப்போம். 








Monday, July 19, 2021

சிலப்பதிகாரம் - உண்டு கொல்?

சிலப்பதிகாரம் - உண்டு கொல்?


தன் கணவன் கள்வன் அல்ல என்று அறிந்த பின், கண்ணகி எழுந்து நடக்கிறாள். அவள் கோபம் கொப்பளிக்கிறது.


"இதெல்லாம் ஒரு ஊரா? கற்புள்ள பெண்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? சான்றோர்களும் இந்த ஊரில் இருக்கிறார்களா? தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா"' என்று கோபத்தில் கேட்கிறாள். அவளின் ஏக்கம், கோபம், வார்த்தைகளில் வெடிக்கிறது. எல்லாம் இரண்டு இரண்டு தடவை கேட்கிறாள். 


"இருக்கா, இருக்கா" என்று சந்தேகம், இருந்தும் இப்படி நடக்குமா என்ற வெறுப்பு, ஆயாசம், தனக்கு இழைக்கப்பட்ட அநீதி எல்லாம் அந்த கேள்விகளில் தொக்கி நிற்கிறது. 


பாடல் 


 பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம்

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்

சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்?

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?

வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில்

தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்?’


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_19.html

(please click the above link to continue reading)


 பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? 


 பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? 


கொண்ட = கட்டிய 


கொழுந ருறுகுறை = கொழுநருக்கு உறு குறை = கணவனுக்கு வந்த பெரிய குறையினை 


தாங்குறூஉம்  = பொறுத்துக் கொள்ளும், சகித்துக் கொள்ளும் 


பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் = பெண்களும் இருக்கிறார்களா? இருக்கிறார்களா? 



சான்றோரும் உண்டுகொல்? சான்றோரும் உண்டுகொல்? = கற்று அறிந்து, ஒழுக்கத்தில் சிறந்த சான்றோரும் இருக்கிறார்களா? 


தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல்? = தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா? 


வை வாளின் = கூரிய வாள் அறம் 


தப்பிய = தவறிய 


மன்னவன் கூடலில் = பாண்டிய மன்னனின் நாட்டில் 


தெய்வமும் உண்டுகொல்? தெய்வமும் உண்டுகொல் ?’ = தெய்வம் என்று ஒன்று இருக்கிறதா?


என்ன சொல்ல வருகிறார் இளங்கோ அடிகள்?


ஒரு நாட்டில் அறம் நிலைக்க வேண்டும் என்றால், அது கற்புடைய பெண்கள் இருந்தால், சான்றோர் இருந்தால் தான் நடக்கும். 


கற்புடைய பெண்கள் இல்லை என்றால், அறம் நிலைக்காது. 


இந்த பாண்டிய நாட்டில் அறம் தவறி விட்டது. அப்படி என்றால் இந்த நாட்டில் கற்புடைய பெண்கள் இல்லாமலா போய் விட்டார்கள்? சான்றோர் என்று யாரும் இல்லையா? தெய்வம் கூடவா இல்லாமல் போய் விட்டது? 


இவ்வளவு பேர் இருந்துமா அறம் தவறி விட்டது? அப்படி என்றால் யார் தான் இந்த அறத்தை தாங்கிப் பிடிப்பது? என்று கேட்கிறாள்.


அறம் பிழைக்க வேண்டும் என்றால், சான்றோர் வேண்டும். 


சான்றோர் இருந்தும், சில சமயம் அவர்கள் வாய் மூடி மௌனமாக இருந்து விடுகிறார்கள். அவர்களின் அந்த மௌனம் எவ்வளவு பெரிய அழிவுக்கு வழி கோலுகிறது! நாடே அழிந்தது. 


கௌரவர் அவையில் சான்றோர் மெளனமாக இருந்ததால் மாபாரத போர் வந்தது. எவ்வளவு அழிவு. 


அறத்தைத்  தாங்கிப் பிடிக்க வேண்டும். இல்லை என்றால் பேரழிவு திண்ணம். 


எவள் சேலையை எவன் பிடித்து இழுத்தால் எனக்கு என்ன என்று இருந்தால், குலம் வேர் அறுபட்டு போகும்.


கதை ஒரு பக்கம் இருக்க, நீதியை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். 






Sunday, July 18, 2021

கம்ப இராமாயணம் - ஒள்ளியது உணர்ந்தேன்

 கம்ப இராமாயணம் - ஒள்ளியது உணர்ந்தேன் 


பகை என்று வந்து விட்டால் அதை சாம, தான, பேத, தண்டத்தால் தீர்க்க முயல வேண்டும். 


முதலில் சமாதானத்திற்கு முயல வேண்டும். எடுத்தவுடனேயே சண்டைக்குப் போகக் கூடாது. முடியவில்லை என்றால் எதிரியின் பலத்தைக் குறைக்க வேண்டும் (பேதம்), அதுவும் இல்லை என்றால் தானம் செய்து, பொருள் கொடுத்து பகையை முடிக்க வேண்டும். இது எதுவும் நடக்கவில்லை என்றால், கடைசியில் தண்டம் அதாவது தண்டனை அல்லது போர் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். 


சமாதானத்தின் முதல் முயற்சி தூது அனுப்புவது. நமது இல்லக்கியங்களில் பல தூதுகள் நிகழுந்து இருக்கின்றன. எல்லா தூதும் தோல்வியில்தான் முடிந்தது ஒன்றே ஒன்றைத் தவிர. 


பாண்டவர்களுக்காக, கண்ணன் தூது போனான். தூது தோற்று, சண்டை மூண்டது. 


முருகனுக்காக வீரபாகு தூது போனார், தூது தோற்றது.சண்டை வந்தது. 


இராமனுக்காக அங்கதன் தூது போனான். தூது தோற்று சண்டை மூண்டது. 


வெற்றி பெற்ற தூது சுந்தரருக்காக் சிவ பெருமான் சென்ற காதல் தூது. அது வென்றது. 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


இங்கே அங்கதன் தூது பற்றி பார்ப்போம். 


கம்ப இராமாயணத்தில் ஒரு சிறு பகுதி. மிக அழகான பகுதி.  சில சிக்கல்களை விடுவிக்கும் பகுதி. 


படையோடு இராமன் இலங்கையை சூழ்ந்து நிற்கிறான். இலங்கையின் வடக்குப் புற வாசல் அருகே இராவணனை எதிர்பார்த்து நிற்கிறான்.  இராவணன் வரவில்லை. 


அருகில் நின்ற வீடணனிடம் இராமன் கூறுவதாக இந்தப் பகுதி ஆரம்பிக்கிறது. 


பாடல் 


வள்ளலும் விரைவின் எய்தி, வட திசை வாயில் முற்றி, 

வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் கணித்த வெஞ் சேனையோடும்,

கள்ளனை வரவு நோக்கி, நின்றனன்,  காண்கிலாதான்,

'ஒள்ளியது உணர்ந்தேன்' என்ன, வீடணற்கு உரைப்பதானான்



பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_18.html


(please click the above link to continue reading)



வள்ளலும் = வள்ளலாகிக்ய இராமனும் 


விரைவின் எய்தி = விரைந்து சென்று அடைந்து 


வட திசை வாயில் முற்றி,  = இலங்கையின் வடக்குப் புற வாயிலை அடைந்து 


வெள்ளம் ஓர் ஏழு-பத்துக் = எழுபது வெள்ளம் சேனைகளோடு 


கணித்த = எழுபது வெள்ளம் என்று கண்ணிதுச் சொல்லப்பட்ட 


வெஞ் சேனையோடும், = கொடுமையான சேனைகளோடு 


கள்ளனை வரவு நோக்கி = கள்ளமாக ஜானகியை கவர்ந்து சென்ற இராவணனின் வரவு நோக்கி 


நின்றனன் = இராமன் நின்றான் 


காண்கிலாதான், = இராவணன் வராததால் அவனை காண முடியாமல் இருந்தான் 


'ஒள்ளியது உணர்ந்தேன்' = ஒளி பொருந்திய, அதாவது புகழுக்கு உரிய செயல் ஒன்றை உணர்ந்தேன் 

என்ன = என்று 


வீடணற்கு உரைப்பதானான்: = வீடணனுக்கு சொல்லத் தொடங்கினான் 




Saturday, July 17, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 2

 

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 2

(இதன் முதல் பாகத்தை கீழே உள்ள வலை தளத்தில் காணலாம். 

https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html )


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 



https://interestingtamilpoems.blogspot.com/2021/07/2_17.html


(pl click the above link to continue reading)



சில சமயம், ஒரு காரணமும் இல்லாமல் நாம் சந்தோஷமாக இருப்போம். ஏன் என்று தெரியாது. சில சமயம், நாம் நினைக்காத சில நன்மைகள் தாமே நமக்கு வந்து சேரும். முடியாது என்று நினைத்து இருப்போம், அது எளிதாக முடிந்து விடும். இது எங்க முடியப் போகிறது என்று மலைத்து இருப்போம், சட்டென்று முடிந்து விடும். 


அது எப்படி நிகழ்கிறது?


அதெல்லாம் தற்செயல் (random incident) என்று புறம் தள்ளிவிடலாம். 


நம் தமிழ் என்ன சொல்கிறது என்றால்...


நாம் இதற்கு முன் பிறந்து இறந்து இருப்போம் அல்லவா? அந்தப் பிறவியில் நம் பிள்ளைகள் நமக்கு சிரார்த்த கடன்கள் செய்தால், அந்த சிரார்த்ததின் பலன் நமக்கு இந்தப் பிறவியில் நன்மையாக வந்து சேர்கிறது.எதிர்பாராத நன்மைகளாக வந்து சேர்கிறது. 


உடல்தான் மடிகிறதே தவிர உயிர் வேறு வேறு உடலில் பயணம் செய்கிறது. அந்த உடலுக்கு, பிறவிக்கு அவர்கள் செய்யும் சிரார்த்த பலன்கள் வந்து சேர்கின்றன. 


இந்த பலன்களை யார் கொண்டு போய் சேர்ப்பது?


அங்கு தான் குறள் வருகிறது. 


"தென் புலத்தார்" ...தென் புலத்தார் என்பவர்கள் தேவர்கள். அவர்களின் வேலை சிரார்த்த பலன்களை கொண்டு சேர்ப்பது. 


இல்லறத்தில் இருப்பவன், அந்த தென் புலத்தாருக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்ய வேண்டும்.  


உங்களுக்கு இந்த கடவுள், தென் புலத்தார், சிரார்த்தம் என்பவற்றில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.  நீங்கள் இன்று இந்த இன்பங்களை அனுபவிக்கக் காரணமாக இருந்த உங்கள் முன்னோர்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு வாய்ப்பாக இதைக் கருதி செய்யலாம். உங்கள் முன்னோர்கள் பற்றி உங்களுக்கு சந்தேகம் இருக்காதே?


அடுத்தது, "தெய்வம்".  நம் இலக்கியங்கள் பெரும்பாலானவை தெய்வம் உண்டென்று நம்பின. எனவே, தெய்வத்திற்கு செய்ய வேண்டிய முறைமைகளை ஒரு இல்லறத்தான் செய்ய வேண்டும். 


அடுத்தது,  "விருந்து". விருந்து என்றால் புதுமை என்று பொருள். நமக்கு முன் பின் தெரியாத ஒருவர் நம் வீட்டுக்கு வந்தால் அவர் விருந்தனர். என் பெற்றோர், என் உடன் பிறப்புகள் என் வீட்டுக்கு வந்தால், அதற்கு விருந்து என்று பெயர் அல்ல. முன்ன பின்ன அறியாதவன் வந்தாலே அவனை உபசரிக்க வேண்டும் என்றால் மற்றவர்களைப் பற்றி சொல்லவும் வேண்டுமோ?


அடுத்து, "ஒக்கல்" என்றால் சுற்றத்தார். உறவினர். உறவினரை பேண வேண்டும் என்பதை ஒரு கடமையாக வைத்தது நம் பண்பாடு. 


அடுத்தது, "தான்". இங்கு தான் வள்ளுவர் உயர்ந்து நிற்கிறார். எல்லோரையும் பார்த்துக் கொண்டு, உன்னை நீ கவனிக்காமல் விட்டு விடாதே. உன்னையும் நீ போற்றி பாதுகாக்க வேண்டும் என்கிறார். 


எனவே, இல்வாழ்வான் என்பவன்

1. பிரமச்சாரி 

2. வானப்ரஸ்ததில் உள்ளவன் 

3. துறவி 

4. காக்கப் பட வேண்டியவர்களால் கை விடப் பட்டவர்கள் 

5. ஏழ்மையில் வாடுபவர்கள் 

6. அனாதையாக இறந்தவர்கள் 

7.  தென் புலத்தார் 

8. தெய்வம் 

9. விருந்தினர் 

10. சுற்றம் 

11. தான் 


என்ற இந்த பதினொரு பேருக்கு உதவி செய்ய வேண்டும். அது இல்லற தர்மம். கடமை. 


இந்த பதினொரு கடமைகளை செய்வதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்லறத்தில் ஈடுபடு. இல்லை என்றால், இல்லறம் உனக்கு அல்ல என்கிறார் வள்ளுவர். 


இல்லற கடமைகளை சொல்லியாகிவிட்டது. 


இதற்கு மேல் இல்லறத்தில் என்ன இருக்கும் ? மூன்று குறள்தான் ஆகி இருக்கிறது. இன்னும் ஏழு குறளில் என்ன சொல்லி இருப்பார்? 



Thursday, July 15, 2021

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 1

திருக்குறள் - ஓம்பல் தலை - பாகம் 1 


நீங்கள் இன்று இந்த ப்ளாகை வாசிக்கிறீர்கள் என்றால், இதற்குமுன் சில விடயங்கள் நடந்து இருக்க வேண்டும். அவை எல்லாம் ஒழுங்காக நடந்து இருந்தால் தான், நீங்கள் இதை வாசிக்க முடியும். 


அவை என்னென்ன?


முதலில் நீங்கள் பிறந்து இந்தக் கணம் வரை உயிரோடு இருக்க வேண்டும். எத்தனை நோய், எத்தனை ஆபத்துகளை கடந்து வந்து இருகிறீர்கள். சாலையை கடக்கும் போது விபத்து நேர்ந்து இருக்கலாம். அல்லது நீங்கள் செல்லும் வாகனம்  விபத்துக்கு உள்ளாகி இருக்கலாம், நீங்கள் வசிக்கும் இடத்தை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் இருக்கலாம், இப்படி ஆயிரம் ஆயிரம் ஆபத்துகளில் இருந்து தப்பி வந்து இருகிறீர்கள். எவ்வளவு பெரிய விசயம். 


அடுத்தது, உங்கள் பெற்றோர் உங்களைப் பெற்றெடுக்கும் வரை உயிரோடு இருந்து இருக்க வேண்டும். அவர்கள் இல்லை என்றால் நீங்கள் இல்லை. அவர்கள் எவ்வளவு சிக்கல்களை மீறி பிழைத்து உங்களை பெற்று எடுத்து இருக்கிறார்கள். 


அடுத்தது, அவர்களின் பெற்றோர், அதாவது உங்கள் தாத்தா பாட்டி, 


அவர்களின் பெற்றோர் என்று இந்த பரம்பரை சங்கிலி எத்தனை ஆயிரம் வரும் பின்னோக்கி போகும்? இதில் ஒருவர் அகாலத்தின் மரணம் அடைந்து இருந்தால் கூட நீங்கள் பிறந்து இருக்க மாட்டீர்கள். இந்த குறளை வாசித்து, அட, இவ்வளவு இருக்கிறதா என்று வியந்து இரசிக்க முடியாது. 


சரி, அதோடு போகிறதா, உங்கள் முன்னோருக்கு முன்னால், குரங்கில் இருந்து வந்தோம் என்று சொல்கிறார்கள். அந்த குரங்கு பரம்பரை, அதற்கு முன் அது எதுவாக இருந்ததோ அதன் பரம்பரை என்று இந்த உலகில் முதல் செல் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை ஒரு இடை விடாத சங்கிலி இருந்து வந்து இருக்கிறது. 


அந்த மாபெரும் உயிர் சங்கிலியில் முதல் கண்ணி ஒரு அமீபா அல்லது ஏதோ ஓர் ஒரு செல் உயிரினம். அதன் கடைசி கண்ணி, நீங்கள். 


பிரம்பிப்பாக இருக்கிறது அல்லவா? அத்தனையும் உண்மை. இதில் ஒரு தொடர் விட்டுப் போனாலும், நீங்களும் நானும் இல்லை. 


நீங்கள் அனுபவிக்கும் அத்தனை இன்பங்களுக்கும், உங்களுக்கு முன் இருந்த அத்தனை கோடி உயிர்களும் துணை செய்து விட்டுப் போய் இருக்கின்றன. 


அவவ்ர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா? வேண்டாமா? 


உங்கள் அப்பா அம்மா, தாத்தா பாட்டி வரை உங்களுக்குத் தெரியும். அதற்கு முன் கோடானு கோடி உயிர்கள் ஒன்று சேர்ந்து போராடி, அத்தனை ஆபத்துகளையும் தாண்டி உங்களை கொண்டு வந்து சேர்த்து இருக்கிறார்கள். 


அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டுமா இல்லையா?


அதைத்தான் இந்தக் குறளில் சொல்கிறார்...


பாடல் 


தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு

ஐம்புலத்தாறு ஓம்பல் தலை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/1_15.html


(please click the above link to continue reading)



தென்புலத்தார் = தென் திசையை சேர்ந்தவர்கள் 


தெய்வம் = தெய்வம் 


விருந்தொக்கல் = விருந்து , ஒக்கல் 


தானென்றாங்கு = தான் என்று ஆங்கு 


ஐம்புலத்தாறு = ஐந்து இடத்துக்கும் செய்யும் அற நெறிகளை விடாமல் 


ஓம்பல் தலை = கைக் கொள்ளுதல், சிறந்த அறமாகும் 



இதன் விரிவான விளக்க உரையை நாளை காண்போம். 


Wednesday, July 14, 2021

சிலப்பதிகாரம் - ஈது ஒன்று

 சிலப்பதிகாரம் - ஈது ஒன்று 


கண்ணகி சூரியனிடம் கேட்கிறாள் "என் கணவன் கள்வனா" என்று. காய் கதிர் செல்வனும் "உன் கணவன் கள்வன் அல்லன்" என்று சொல்லி விடுகிறான். 


இங்கே சூடு பிடிக்கிறது கிளைமாக்ஸ். 


அதில் நுழைவதற்கு முன்னால், தன் கணவன் வேறு ஒரு பெண்ணிடம் சென்றான் என்பது கண்ணகிக்குத் தெரியும்; குன்றென இருந்த செல்வம் அனைத்தையும் கரைத்தான் என்று அவளுக்குத் தெரியும்; நாடு விட்டு நாடு கன்னைகியை நடத்தியே கூட்டி வந்தான் என்பதும் அவளுக்குத் தெரியும்.


இத்தனையும் அவள் பொறுத்துக் கொள்கிறாள். 


ஏன்?  


கோவலனோடு சண்டை போட்டு இருக்க வேண்டாமா? ஊரை எரிக்கும் வண்மை உள்ள அவள், குறைந்த பட்சம் இது பற்றியெல்லாம் பேசியாவது இருக்க வேண்டாமா?  கண்டித்து இருக்க வேண்டாமா? 


பஞ்சாயத்தை கூட்டி நியாயம் கேட்டிருக்க வேண்டாமா? கோவலன் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றி அவனை உண்டு இல்லை என்று செய்திருக்க வேண்டாமா?  


பெண் என்றால் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டுமா? ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், பெண் அமைதியாக இருக்க வேண்டுமா?   இதையெல்லாம் இந்தக் கால பெண்களிடம் சொன்னால், சிரிப்பார்கள். 


அது அல்ல செய்தி. 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_14.html

(click the above link to continue reading)


குடும்பத்துக்குள் தவறு நடக்கும். தவறை சரி என்று சொல்ல வரவில்லை. தவறுகளை பொறுக்க முடியாவிட்டால், ஒரு நொடியில் குடும்பம் அழிந்து போகும். அநியாயம், தவறு இவை எல்லாம் குடும்பத்தில் நடக்கவே செய்யும். 


பொறுத்துதான் போக வேண்டும். சகிக்கத்தான் வேண்டும். வேறு வழி இல்லை. 


ஆ...பெண்ணுக்கு வந்தால் சகிக்க வேண்டும், பொறுக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியது. இதுவே ஆணுக்கு வந்தால் இப்படி சொல்வீர்களா? பெண் என்றால் ஒரு ஏமாளி என்று ஒரு நினைப்பு...


அந்த எண்ணமும் தவறு. 


மூத்த மகனுக்கு வர வேண்டிய அரசை, சின்னம்மா தட்டிப் பறித்து தன் மகனுக்குக் கொடுத்தாள், இராமயணத்தில். அது தவறு தானே. அது மட்டும் அல்ல, இராமனை காட்டுக்கும் விரட்டி விட்டாள். இராமன் என்ன தவறு செய்தான்? அவனை ஏன் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்?   


இராமன் சண்டை போடவில்லை. அப்பாவுக்கு சின்னம்மா மேல் அன்பு அதிகம். அதைப் பயன் படுத்தி அவள், நியாயம் இல்லாமல் அரசையும் பிடுங்கிக் கொண்டு, நாட்டை விட்டும் விரட்டி விடுகிறாள். 


இராமன் பொறுத்துக் கொண்டான். புன்னகையோடு ஏற்றுக் கொண்டான்.  


இராமன் நினைத்து இருந்தால், ஒரு நொடியில் கைகேயியையும் பாரதனையுக் சிறையில் அடைத்து இருக்க முடியும். 


குடும்பம் என்றால் இதெல்லாம் இருக்கும். சகிக்கத்தான் வேண்டும். 


நீதி, நேர்மை, நியாயம் என்று கொடி பிடித்தால் அவை ஜெயிக்கும், குடும்பம் தோற்றுப் போகும். 


இவற்றை எல்லாம் எப்படி சொல்லி புரிய வைப்பது? 


கணவன் தவறு செய்தால் விவாகரத்து, பெற்றோர் கண்டித்தால் காவல் துறையில் புகார், ஆசிரியர் அடித்தால் அவருக்கு சிறைத் தண்டனை என்ற காலத்துக்கு வந்து விட்டோம். 


கதைக்கு வருவோம். 


பாடல் 


என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி

நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:

‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்

நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:


பொருள் 



இன்றைய முன்னுரை சற்றே நீண்டு விட்டதால், பொருள் பற்றி நாளை சிந்திக்க இருக்கிறோம்


Tuesday, July 13, 2021

திருக்குறள் - இல்வாழ்வான் என்பான் துணை

 திருக்குறள் - இல்வாழ்வான் என்பான் துணை


இல்லறம் என்பது மிகப் பெரிய பொறுப்பு என்பது வள்ளுவம் காட்டும் நெறி.  ஒரு பெண்ணும், ஆணும் இணைந்து நடத்தும் இல்லறம் என்பது ஒரு சமுதாய பொறுப்பாகவே  காணப்பட்டது.  


முதல் குறளில் பிரமச்சாரிக்கும், வானப்ரஸ்தத்தில் உள்ளவர்களுக்கும், துறந்தவர்களுகும் அவர்கள் நல் வழியில் செல்ல துணை நிற்க வேண்டும் என்று பார்த்தோம். 


அடுத்தகாக, 


"துறந்தார்க்கும், ஏழ்மையில் உள்ளவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் இல்வாழ்வான் என்பவன் துணை" என்கிறார். 


பாடல் 


துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_13.html


(Please click the above link to continue)



துறந்தார்க்கும் = துறந்தவர்களுக்கும் 


துவ்வா தவர்க்கும் = வறுமையில் உள்ளவர்களுக்கும் 


இறந்தார்க்கும் = இறந்தவர்களுக்கும் 


இல்வாழ்வான் என்பான் = இல்லறத்தில் உள்ளவன் 


 துணை = துணை 


முந்தைய குறளில் துறந்தார் என்று கூறினாரே, மீண்டும் இந்தக் குறளில் ஏன் துறந்தார்? 


பரிமேலழகர் இல்லை என்றால் இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம் நமக்கு பதில் கிடைத்து இருக்காது. 


பரிமேலழகர் கூறுகிறார்....


துறந்தார் என்பார், காக்கப்பட வேண்டியவர்களால் துறக்கப் பட்டவர்கள். பல குடும்பங்களில்,  காக்கப் பட வேண்டிய முதியவர்கள், காக்கப் படாமல் விடப் படுகிறார்கள். 


அவர்களை யார் காப்பாற்றுவது? அரசாங்கமா? சமுதாயமா? அல்லது அவர்களை ஏதாவது அநாதை ஆசிரமத்தில் விட்டு விடலாமா? 


வள்ளுவர் சொல்கிறார், இல்லறத்தில் இருப்பவன், அவர்களைப் போன்றவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும்.  இது நாலாவது கடமை. 


அடுத்தது, "துவ்வாதார்கு" 


துவ்வாதார் என்றால் வறுமை வயப்பட்டவர்.  அவர்கள் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நம் கையில் இல்லை. சிறுக சிறுக சேர்த்து, கொஞ்சம் கடன் வாங்கி, வீடு வாங்கினால், சின்ன நில நடுக்கம் வந்தால் போதும், வாழ் நாள் சேமிப்பு போய் விடும். பெரிய நோய் வந்தால், மருத்துவ செலவில் செல்வம் கரைந்து போகலாம். களவு போகலாம். 

ஏதோ ஒரு காரணத்தால் வறுமையால் வாடுபவர்களை கை கொடுத்து தூக்கி விட வேண்டியது இல்லறத்தானின் கடமையாகும்.  அவர்களின் குடும்பத்தை காத்து, இருக்க இடம் கொடுத்து, அவர்கள் தங்கள் காலில் நிற்கும் வரை உதவி செய்ய வேண்டும். 


மூன்றாவது, "இறந்தார்க்கு".  இறந்தவருக்கு எவ்வாறு உதவி செய்வது? ஒருவன் அனாதையாக இறந்து போனால், அவன் எந்த ஜாதி, மதம், குலம் என்று பார்க்க வேண்டியதில்லை. அவனை நல்லடக்கம் செய்து, அவனுக்கு செய்ய வேண்டிய நீர்க் கடன் செய்ய வேண்டியது இல்லறத்தானின் கடமை. 


மீண்டும், அனாதை பிணம் என்று விட்டுவிடக் கூடாது. அல்லது அது அரசாங்கத்தின் வேலை என்றும் விட்டு விடக் கூடாது என்று வள்ளுவர் கூறுகிறார். 


இராமாயணத்தில், ஜடாயு என்ற பறவைக்கு இராமன் நீர்க் கடன் செய்கிறான். 


காக்கப் படவேண்டியவர்களால் கை விடப் பட்டவர்கள் 

வறுமையில் வாடுபவர்கள் 

துணையின்றி இறந்தவர்கள் 


இந்த மூன்று பேருக்கும் துணையாக இருக்க வேண்டியது இல்லறத்தானின் கடமை. 


யோசித்துப் பாருங்கள்.  இன்று சோசியலிசம், கம்யுனிசம் போன்ற சிந்தாதங்கள் என்ன சொல்கிறன. இருப்பவற்றை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று சொல்கின்றன.  


இல்லறம் என்பது எவ்வளவு பெரிய கடமை, பொறுப்பு, முக்கியத்வம் வாய்ந்தது என்று பாருங்கள். 


ஒரு தனி மனிதன், குடும்பம், சமுதாயம், நகரம், நாடு, உலகம் என்று அது விரிந்து கொண்டே போகிறது. 


இது வரை ஆறு கடமைகளை சொல்லி இருக்கிறார். 






Monday, July 12, 2021

திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 2

திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 2


(இதன் முதல் பகுதியை கீழே உள்ள தளத்தில் காணலாம்

)



பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள்




(please click the above link to continue reading)


இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்


இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு


நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக


நின்ற துணை = துணையாக


"இயல்பு உடைய மூவர்க்கும்" என்றால் யார் யார் அந்த மூவர்?


நாம் முன்பே சிந்தித்தபடி தனி மனித வாழ்கையை நம்மவர்கள் நான்கு கூறுகளாக பிரித்துக் கொள்கிறார்கள். 


பிரமச்சரியம் 
இல்லறம் 
வானப்ரஸ்தம் 
துறவறம் 


இது பற்றி முன்பு பலதடவை சிந்தித்து விட்டபடியால், மேலே செல்வோம். 


இதில் இல்லறத்தில் வாழ்பவன் ஏனைய மூவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்கிறார். 

யார் அந்த மூவர் ?


பிரம்மச்சாரி 
வானப்ரஸ்தத்தில் இருப்பவன் 
துறவறம் கொண்டவன் 


இந்த மூவருக்கும் உதவி செய்வது ஒரு இல்லறத்தானுக்கு கடமை. 



நீங்கள் இல்லறத்தில் ஈடு பட்டு இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் வீட்டுக்கு வந்து ஒரு ஏழை மாணவன் உதவி கேட்க்கிறான். பள்ளிக்கு பணம் கட்ட வேண்டும், பரிட்சைக்கு பணம் செலுத்த வேண்டும், புத்தகம் வாங்க வேண்டும் என்று உதவி கேட்கிறான். 



அவனுக்கு உதவி செய்வது என்பது உங்கள் சௌகரியத்தைப் பொறுத்தது அல்ல. அது உங்கள் கடமை. செய்தே ஆக வேண்டும். 



அதே போல ஒரு துறவி பசி என்று கேட்டால், அவனுக்கு உதவி செய்ய வேண்டியது இல்லறத்தானின் கடமை. 


இதெல்லாம் கேட்க நல்லா இருக்கு....யாரை நம்ப முடிகிறது இந்த உலகில்...பரிட்சைக்கு பணம் என்று வாங்கிக் கொண்டு போய் தண்ணி அடித்து விட்டு வருவான்,  சாமியார் என்ற பெயரில் பணம் கேட்டு அதை தவறான வழியில் செலவு செய்வான்...எப்படி இவர்களை நம்பி உதவி செய்வது என்ற கேள்வி எழலாம்.


இந்தச் சிக்கல் இன்றல்ல, அன்றே இருந்திருக்க வேண்டும். வள்ளுவர் அதற்கும் விடை தருகிறார். 



"இயல்பு உடைய மூவர்க்கும்" - இந்த மூன்று நிலைகளும் (பிரமச்சாரி போன்ற நிலைகள்) அவர்களுக்கு இயல்பாக அமைந்து இருக்க வேண்டும் என்பது முதல் நிபந்தனை.  அதாவது, நாற்பது வயது வரையிலும் திருமணம் செய்து கொள்ளாமல், நான் பிரம்மச்சாரி, எனக்கு மற்றவர்கள் உதவி செய்ய வேண்டும் என்றால் அது சரி அல்ல. கல்வி கற்கும் காலம் வரைதான் பிரம்மச்சாரி. அது இயல்பான நிலை. அதற்கு மேல் காதல் தோல்வி அது இது திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தால், அவனும் பிரம்மச்சாரிதான், ஆனால் அது இயல்பான ஒன்று அல்ல. 


அது போல, துறவறம் என்பது இயல்பாக அமைய வேண்டும். மூத்த மடாதிபதி அடுத்தவரை தேர்ந்து எடுப்பது இயல்பான துறவறம் அல்ல. 



பட்டினத்தார் போனாரே "காதற்ற ஊசியும் வாராது காண் நும் கடை வழிக்கே" என்ற வரியை படித்தவுடன், அது துறவறம். 



இயல்பான துறவிக்கு உதவி செய்ய வேண்டும். செயற்கை துறவிகளுக்கு அல்ல. 


இன்றெலாம் துறந்தவனிடம் அதிகம் இருக்கிறது. 



சரி, இந்த மூவருக்கும் உதவி செய்யலாம்....எவ்வளவு செய்வது? ஒரு கல்லூரி மாணவன் பைக் வாங்க வேண்டும் என்று உதவி கேட்கிறான், நண்பர்களோடு உல்லாசமாக  உணவு உண்ண, கேளிகைகளில் ஈடுபட பணம் கேட்கிறான்...கொடுக்க வேண்டுமா?


சாமியார் கார் கேட்கிறார், சொத்து பத்துகளை கேட்கிறார்...கொடுக்க வேண்டுமா?


"நல்லாற்றின் நின்ற துணை"


என்கிறார் வள்ளுவர். 



அப்படி என்றால், 

ஆறு என்றால் வழி. நல் + ஆறு = நல்ல வழி. 


நல்ல வழியில் அவர்கள் செல்ல உதவ வேண்டும். 


ஊதாரித்தனமாக செலவழிக்க, கூத்தடிக்க அல்ல. 



இதற்கு அற்புதமாக பரிமேலழகர் உரை எழுதி இருக்கிறார். 


"இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச் செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர் முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும் மருந்தும் உறையுளும் முதலிய உதவி, அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல் ஆற்றின் நின்ற துணை' என்றார்"



"பசி, நோய், குளிர் முதலிய"...அதாவது மிகக் குறைந்த அளவு ....bare minimum என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே, அது போல. 


பசி வந்தால் - உணவு கொடு 
நோய் வந்தால் மருந்து கொடு 
குளிர் வந்தால் - நல்ல உடை கொடு


அது போல குறைந்தபட்ச உதவியை செய்யச் சொல்கிறார்.  பைக் வாங்கவும், சினிமாவுக்குப் போகவும் உதவி செய்யச் சொல்லவில்லை. 



அதுவும் எதற்காக ?


"அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான்"


அவர்கள் அந்த ஒழுக்கங்களை தவறில்லாமல் கடைபிடிக்க உதவ வேண்டும். 



யாருக்குக் கொடுக்க வேண்டும், எவ்வளவு கொடுக்க வேண்டும், எதற்கு கொடுக்க வேண்டும், ஏன் கொடுக்க வேண்டும் என்று அனைத்தையும் ஒரு குறளுக்குள் அடக்கி விடுகிறார். 



சரி, இப்போது குறளை விட்டு வெளியே வருவோம். 



இன்று student loan என்பது எவ்வளவு பெரிய சுமையாக இளைய சமுதாயத்தின் மேல் அழுத்திக் கொண்டு இருக்கிறது.  அமெரிக்காவில், இந்த கடனின் சுமை கிட்டத்தட்ட 1.7 ட்ரில்லியன் டாலர் அளவு. 


இந்தியாவில் எத்தனையோ அறிவுள்ள குழந்தைகள் பணம் இல்லாத காரணத்தால் மேலே படிக்க முடியாமல், படிப்பை விட்டு விட்டு ஏதோ சில்லறை வேலை செய்யப் போகின்றன. அதில் எத்தனை மருத்துவ மேதைகள் இருப்பார்களோ, எத்தனை துன்பங்களை அவர்கள் தீர்த்து இருப்பார்களோ தெரியாது. 



இந்த சிக்கலுக்கு அன்றே விடை கண்டவர்கள் நம்மவர்கள். 


வயதான காலம் என்பது எவ்வளவு கொடுமையான காலம். முதியோர் இல்லங்கள் எத்தனை வந்து விட்டன.  காரணம் என்ன? 


இதற்கும் விடை இந்த குறளுக்குள் இருக்கிறது. 


ஒரு பக்கம் இளைஞர்கள் , மறு புறம் முதியவர்கள் இருவரையும் அணைத்துக் கொண்டு செல்லும் பொறுப்பு இல்லறத்தில் இருப்பவனுக்கு இருக்கிறது. 


இல்லற தர்மத்தின் முதல் மூன்று பொறுப்புகளை சொல்லி விட்டார். 



இதுக்கு மேல என்ன இருக்கும்? இன்னும் எட்டு இருக்கா? அப்படி என்னதான் இருக்கும்? 



Tuesday, July 6, 2021

14 Lacs Page Views on this blog - thanks to all the readers

 




சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே

 சிலப்பதிகாரம் - வாயிலோயே வாயிலோயே


இன்று ஒரு முதல் மந்திரியையோ, பிரதம மந்திரியையோ பார்க்க வேண்டும் என்றால் எவ்வளவு கடினம். 


அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும், காத்துக் கிடக்க வேண்டும், அனுமதி கிடைக்குமோ கிடைக்காதோ தெரியாது. 


ஐந்து வருடம் ஆளும் அனுமதி பெற்ற இவர்கள் பாடே இப்படி என்றால் அந்தக் காலத்தில், ஒரு அரசனை சென்று காண்பது என்றால் எளிதான காரியமா?


சூரியனிடம் கேட்கிறாள் "என் கணவன் கள்வனா" என்று. சூரியனும் இல்லை என்று சொல்லி விட்டான். 


புறப்படுகிறாள் கண்ணகி. 


நடுவில் உள்ள கொஞ்சம் பக்கத்தை விட்டுவிட்டு அவள் பின் செல்வோம். 


அரண்மனை வாசலை அடைகிறாள். 


"வாயில் காப்போனே, வாயில் காப்போனே, அறிவு கொஞ்சம் கூட இல்லாமல், அறம் தப்பி, அரச முறை தப்பிய அரசனின் வாயில் காப்போனே, கையில் முத்து உள்ள ஒரு சிலம்பைஏந்திக் கொண்டு கணவனை இழந்த ஒரு பெண் வாயிலில் நிற்கிறாள் என்று போய் உன் அரசனிடம் சொல்" என்று ஆணையிடுகிறாள். 


பாடல் 


வாயி லோயே வாயி லோயே

அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து

இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே

இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்

கணவனை யிழந்தாள் கடையகத் தாளென்று

அறிவிப் பாயே அறிவிப் பாயே, என


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_6.html


(please click the above link to continue reading)



வாயி லோயே வாயி லோயே = வாயில் காப்பவனே வாயில் காப்பவனே 


அறிவறை போகிய = அறிவு முற்றும் இழந்த 


பொறியறு நெஞ்சத்து = அறம் இல்லாத நெஞ்சினோடு 


இறைமுறை பிழைத்தோன் = அரச தர்மம் பிழைத்தவன் 


வாயி லோயே = வாயில் காப்பவனே 


இணை = இணையான இரண்டில் ஒன்றை 


யரிச் சிலம்பொன் றேந்திய கையள் = முத்துகளை உடைய சிலம்பு ஒன்றை ஏந்திய கையோடு 


கணவனை யிழந்தாள்= கணவனை இழந்த அவள் 


கடையகத் தாளென்று = வாசலில் நிற்கிறாள் என்று சொல் 


என்கிறாள். 


வாயிலோயே வாயிலோயே என்று இரண்டு தரம் ஏன் அழைக்க வேண்டும் ?


அரசனுக்கே அறிவு இல்லை. அந்த அரசன் மாளிகை காவல் காரனுக்கு என்ன அறிவு இருக்கப் போகிறது என்று உணர்த்த அவனுக்கு இரண்டு தரம் சொல்கிறாள். எல்லாவற்றையும் இரண்டு இரண்டு தரம் சொல்கிறாள். 


சிலம்பை காலில் அணிவார்கள். இவளோ கையில் கொண்டு வந்திருக்கிறாள். அது அந்தக் காவல் காரனுக்கும் தெரியும். எங்கே அந்த மடையன் சொல்லமால் விட்டு விடுவானோ என்று நினைத்து, கையில் சிலம்போடு ஒரு பெண் வந்து இருக்கிறாள் என்று சொல் என்கிறாள்.  காலில் மற்றொரு சிலம்பு இல்லை. ஒரு சிலம்பு கையில் இருக்கிறது. 


காவலனிடம் அரசனைப் பற்றி கூறுக்கிறாள் ...."அறிவில்லாதவன், அறம் இல்லாதவன், அரச நீதி தப்பியவன்" என்று அடுக்குகிறாள். அரச குற்றமாவது மண்ணாவது என்று எல்லாவற்றையும் காலில் போட்டு மிதிக்கிறாள். 


ஒரு பெண்ணிடம் இவ்வளவு வசை வாங்கிய ஒரே அரசன் அந்தப் பாண்டியனாகத் தான் இருக்கும். 


அந்தக் காவலனுக்கு எப்படி இருந்திருக்கும் ?






திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 1


திருக்குறள் - இல்வாழ்க்கை - பாகம் 1 


இல்லறதுக்குள் அடி எடுத்து வைக்கிறோம். 


இல்லறம் என்றால் மனைவி, பிள்ளைகள் என்று இல்லற நெறியில் வாழ்வது. 


அதற்கு, முதலில் திருமணம் செய்து கொள்ள வேண்டும். 


எதற்காக திருமணம் செய்து கொள்ள வேண்டும்? 


இது என்ன கேள்வி? 


கல்யாணம் பண்ணிக் கொண்டால் மனைவியோடு (அல்லது கணவனோடு) உல்லாசமாக இருக்கலாம், பிள்ளைகளை பெற்றுக் கொள்ளலாம், அவர்களை வளர்ப்பது ஒரு சுகம், நமக்கென்று ஒரு வீடு, மனைவி, மக்கள் என்று மகிழ்ச்சியாக இருக்கலாம் ...இதற்குத்தானே கல்யாணம் பண்ணிக் கொள்கிறோம் என்பதே நம் விடையாக இருக்கும்.


இவை எல்லாம் சுய நலத்தின் பாற்பட்டது.


திருமணம், குடும்பம் என்பது அவ்வளவுதானா ? குடும்பத்திற்கு ஒரு சமுதாயப் பொறுப்பு என்று ஒன்றும் இல்லையா ?


இருக்கிறது.


ஒன்றல்ல இரண்டல்ல, பதினொரு பொறுப்புகளைச் சொல்கிறார் வள்ளுவர்.


திருமணம் என்பதே ஒரு மிகப் பெரிய பொறுப்பு என்கிறார்.


இந்தப் பொறுப்புகளை எல்லாம் ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் திருமணம் செய்து கொள், இல்லையென்றால் திருமணம் உனக்கு ஏற்றது அல்ல என்கிறார்.


அது என்ன பதினொரு கடமைகள் ?


இருப்பது ஒண்ணே முக்கால் அடி, ஏழே ஏழு வார்த்தைகள் அதில் பதினொரு கடமையை எப்படிச் சொல்ல முடியும்?


மூன்று குறளாக பிரித்துக் கொண்டு, அந்த பதினொரு பொறுப்புகள் அல்லது கடமைகளைச் சொல்கிறார்.


முதல் குறள்


பாடல்


இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.


பொருள்



(please click the above link to continue reading)


இல்வாழ்வான் என்பான் = இல் வாழ்க்கையில் வாழ்பவன் என்பவன்


இயல்பு உடைய மூவர்க்கும் = இயல்பான மூன்று பேருக்கு


நல்லாற்றின் = அவர்கள் நல்ல வழியில் போக


நின்ற துணை = துணையாக


இந்தக் குறளின் விரிவு நம்மை வியக்க வைக்கும். 


ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் அவ்வளவு அர்த்தச் செறிவு 


அதிலும் பரிமேலழகர் செய்திருக்கும் உரை, நம்மால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று. 


"இல்வாழ்வான் என்பான் "


"இல் என்பது ஆகுபெயர். என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது."

என்பது பரிமேலழகர் உரை. 

இல்வாழ்வான் என்றால் இல்லத்தில் வாழ்பவன் என்று அர்த்தம். இல்லத்தில் வாழாமல் வேறு எங்கு வாழ்வது?  இதை ஏன் சொல்கிறார் வள்ளுவர் என்று பரிமேலழகர் விளக்கம் செய்கிறார். 

இல் என்பது ஆகுபெயர். ஆகு பெயர் என்றால் ஒன்றின் பெயர் மற்றதிற்கு ஆகி வருவது. 

உலகம் பழிக்கும் அல்லது போற்றும் என்றால் உலகம் வந்து போற்றாது. உலகில் உள்ள மக்கள் போற்றுவார்கள் என்று அர்த்தம். இங்கே உலகம் என்பது உலகில் உள்ள மக்களுக்கு ஆகி வந்தது. 

அது போல,

இல்வாழ்வான் என்றால் இல்லற நெறியின் கண் நின்று வாழ்வான் என்று பொருள். 

இல்லம் என்பது இல்லற நெறிக்கு ஆகி வந்தது. 

சரி.

"இல்வாழ்வான் என்பான்" என்றால் அது யாரைக் குறிக்கிறது? இல்லற நெறியில் வாழ்பவனையா அல்லது அப்படி ஒருவன் வாழ்கிறான் என்று சொல்பவனையா?

உதாரணமாக, இராமன் இல்லற நெறியில் வாழ்கிறான். முருகன் எல்லோரிடமும் போய் இராமன் இல்லற நெறியில் வாழ்கிறான் என்று சொல்கிறான். 

இங்கு, "இல்வாழ்வான் - என்பான்" என்ற இரண்டு சொல் இருப்பது போலத் தெரிகிறது அல்லவா? வாழ்பவன், வாழ்வான் என்று சொல்லுபவன். இதில் யாரைச் சொல்கிறார் வள்ளுவர். 


பரிமேலழகர் விளக்கம் செய்கிறார் 

"என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல் போலக் கூறப்பட்டது"

என்கிறார். "என்பான்" என்ற சொல் வாழ்வான் என்ற வினைக்கு முதல் போல சொல்லப்பட்டாலும், அது அல்ல. வாழ்பவனைத்தான் வள்ளுவர் குறிப்பிடுகிறார் என்று விளக்கம் செய்கிறார். 


அடுத்தது 

"இயல்புடைய மூவர்க்கு"

என்கிறார்.

யார் அந்த மூவர்?

நாளை சிந்திப்போமா?


Sunday, July 4, 2021

சிலப்பதிகாரம் - ஒள் எரி உண்ணும் இவ் ஊர்

சிலப்பதிகாரம் - ஒள் எரி உண்ணும் இவ் ஊர் 


"என் கணவன் கள்வனா ?" என்று சூரியனைப் பார்த்து கேட்கிறாள் கண்ணகி. 


கற்புடைய பெண்கள் கேட்டால், அவர்கள் ஆணையிட்டால் இயற்கையும் அடங்கும், பஞ்ச பூதங்களும் அடங்கும் என்று நம் இலக்கியங்களில் பல இடங்களில் வருகிறது. 


அவள் அப்படி கேட்டவுடன் , வானில் இருந்து ஒரு அசரீரி வருகிறது 


"உன் கணவன் கள்வன் அல்லன். உன் கணவனை கொன்று அறம் தவறிய இந்த ஊரை தீ உண்ணும்" 


என்கிறது. 


பாடல்  


கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் 

ஒள்ளெரி யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/07/blog-post_4.html


(please click the above link to continue reading)



கள்வனோ அல்லன் = கள்வன் அல்லன் 


கருங்கயற்கண் = கரிய மீனைப் போன்ற கண்களை உடைய 


மாதராய்  = பெண்ணே 


ஒள்ளெரி = ஒளி வீசும் எரி (தீ) 


யுண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். = உண்ணும் இந்த ஊரை என்றதொரு குரல்.



இது முக்கியமான இடம். 


பாண்டிய மன்னன் தவறாக தீர்ப்புச் சொல்ல அதனால் கோவலன் மாண்டான். 


அது பாண்டிய மன்னனுக்கும், கண்ணகிக்கும் இடையே உள்ள வழக்கு. ஊர் என்ன செய்யும்? அதற்கு எதற்கு ஊரை எரிப்பானேன். 


கண்ணகி செய்தது சரி என்றால், நாளை யார் யாருக்கெல்லாம் அநீதி நடக்கிறதோ, அவர்கள் எல்லாம் ஊரை எரிக்க புறப்பட்டு விடுவார்கள். கண்ணகியே செய்தாள், அது தமிழர் பண்பாடு என்று. 


அது ஒரு புறம் இருக்க, இந்தப் பழங்கதை எல்லாம் எதுக்கு நாம் படிக்க வேண்டும். அந்த நேரத்துக்கு வேறு ஏதாவது உருப்படியாக படிக்கக் கூடாதா  என்றும்  ஒரு கேள்வி எழலாம். 


எல்லாவற்றிற்கும் பதில் இருக்கிறது. 


முதலாவது, ஒரு தலைவன் தவறு செய்தால் அது அவனை மட்டும் பாதிக்காது. அவன் நிர்வகிக்கும் நிறுவனத்தைப் பாதிக்கும். அரசன் என்றால் நாட்டை, ஒரு நிறுவனத்தின் தலைவர் (CEO) என்றால், அந்த நிறுவனத்தை, ஒரு குடும்பத் தலைவன் என்றால் அந்தக் குடும்பத்தை அது பாதிக்கும்.  


கணவன் இலஞ்சம் வாங்கி சிறை சென்றால், அது மனைவியை, பிள்ளைகளை, அண்ணன் தம்பியை, பெற்றோரை பாதிக்காதா?  


பொறுப்பில் இருப்பவர்கள் தவறு செய்யக் கூடாது. தவறு செய்ய அஞ்ச வேண்டும். 


பாண்டிய மன்னன் வேண்டும் என்றே செய்த குற்றம் இல்லை. தெரியாமல் நிகழ்ந்த குற்றம். இருந்தும், அவன் நாடே அந்த குற்றத்துக்கு பலி ஆனது. 


அது மன்னனுக்கு மட்டும் அல்ல, குடும்பத் தலைவன்,குடும்பத் தலைவி என்று எல்லோருக்கும் பொருந்தும். 


இரண்டாவது, இந்த அறத்தை சொல்வது இந்த இலக்கியம். இது தெரிய வேண்டுமா இல்லையா. நான் தவறு செய்தால் அது என்னைத் தானே பாதிக்கும். பரவாயில்லை, என் பெண்டாட்டி பிள்ளைகள் நல்லா இருப்பார்கள் என்றால் நான் தவறு செய்கிறேன் என்று நினைக்கக் கூடாது. 


ஈன்றாள் பசிக் காண்பானாயினும் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை. 


மூன்றாவது, கண்ணகி எப்படி ஊரை எரிக்கலாம் என்ற கேள்விக்கு விடை, அவள் எரிக்கவில்லை. மன்னன் அறம் தவறியதால் இந்த ஊரை தீ தின்னும் என்று அசரீரி கூறுகிறது. ஊர் எரியப் போகிறது என்பது முன்பே முடிவாகிவிட்டது. எப்போது பாண்டியன் தவறு செய்தானோ, அப்போதே அந்த ஊரின் அழிவு முடிவாகிவிட்டது.  


கண்ணகி எரித்தால் என்பது ஒரு குறியீடு. ஊர் எரியப் போகிறது என்று முன்னமேயே முடிவாகிவிட்ட ஒன்று. 


நான்காவது, அறத்துக்கு, நீதிக்கு, எந்த அளவுக்கு நம் முன்னவர்கள் முக்கியத்வம் கொடுத்து இருக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்ள முடிகிறது. சரி, ஏதோ தவறு நிகழ்ந்து விட்டது. அதற்கு உரிய நட்ட ஈடை கொடுத்து காரியத்தை முடிப்போம் என்று நினைக்கவில்லை. 


பாண்டியன் தன் உயிரை கொடுத்தது மட்டும் அல்ல, அந்த நகரமே அந்த அநீதிக்கு பதில் சொல்ல வேண்டி இருந்தது. 


ஏதேனும் தவறு செய்யுமுன், இதை நினைத்தால் தவறு நிகழுமா?