Thursday, February 20, 2025

திருக்குறள் - மனோத்தொடு வாய்மை

 திருக்குறள் - மனோத்தொடு வாய்மை 


இந்த உண்மை பேசுவது, உண்மை பேசுவது என்று சொல்கிறார்களே, அது வாயால் பேசுவது மட்டும் தானா?  


ஒருவன் "நான் தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன். இன்ன தொழில் செய்யப் போகிறேன். அதுக்கு கொஞ்சம் முதல் வேண்டும். நீங்கள் உதவி செய்ய முடியுமா " என்று கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். உதவி செய்யும் நிலையில் இருப்பவருக்கு அந்த தொழில் பற்றித் தெரியும். அதில் இலாபம் வராது என்று தெரியும். தெரிந்தும், சொல்லமால், "அதுக்கு என்ன தாராளமாய் செய்யுங்கள்" என்று சொல்லி கொஞ்சம் பணமும் கொடுக்கிறார். பணம் பெற்றுக் கொண்டவர் தொழில் தொடங்கி நட்டப் பட்டு நடுத் தெருவில் வந்து நிற்கிறார். 


உதவி செய்தது தவறா என்றால் இல்லை. ஆனால், மனதில் "நல்லா நட்டப் படட்டும் " என்று நினைத்துக் கொண்டே செய்த உதவி நல்லது அல்ல. 


அது போல் சொல்லால் நல்லது போலத் தோன்றினாலும், மனம் நல்லதாக இருக்காது. 


வள்ளுவர் சொல்கிறார் 


"மனத்தோடு கூடி வாய்மை சொல்வது என்பது தானம், தவம் இவை இரண்டும் செய்வதை விட உயர்ந்தது " என்று 


பாடல் 


மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு

தானம்செய் வாரின் தலை


பொருள் 



மனத்தொடு = மனத்தோடு கூடி 


வாய்மை மொழியின் = உண்மை சொன்னால் 


தவத்தொடு = (அது) தவத்தொடு 


தானம் = தானம் 


செய் வாரின் தலை = செய்வதை விட உயர்ந்தது 


கொஞ்சம் இலக்கணம் படிக்கலாமா?  


எழுத்துகள் சேர்ந்து சொற்கள் உருவாகின்றன. 


சொற்கள் சேர்ந்து வாக்கியம் உண்டாகிறது. 


இந்த சொற்களை ஒட்ட வைக்க ஒரு பசை வேண்டும். 


உதாரணமாக ஒருவன் வேகாமாக ஓடினான் என்று சொல்வதற்கு "மானைப் போல் ஓடினான்" என்கிறோம். 


இதில் "போல்" என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?  அது இந்த மானையும், ஓட்டத்தையும் சேர்த்து வைத்து பொருள் தருகிறது. அதற்கு உவம உருபு என்று பெயர். 


சுக்ரீவனைப் போல் அல்ல வாலி  என்று சொல்லும் போது இருவருக்கும் உள்ள  வேற்றுமையை நாம் காட்டுகிறோம். அது வேற்றுமை உருபு. 


இப்படி பலப் பல உருபுகள் தமிழில் உண்டு. மிக சுவாரசியமானவை. அவை நம் எழுத்தை மேலும் அழகு படுத்தும். 


இங்கே 'ஒடு' என்று உருபு இரண்டுதரம் வந்து இருக்கிறது. 


மனத்தொடு 

தவத்தொடு 


மனத்தொடு என்பதில் மனம், மொழி, மெய் இந்த மூன்றாலும் வாய்மை பேச வேண்டும்,


தவத்தொடு என்பதில் தானம் மற்றும் ஏனைய சிறப்பு அம்சங்கள் சேர்ந்து இருக்கின்றன. 


மன மொழி மெய்யால் வாய்மையுடன் இருப்பது எல்லாவற்றிலும் சிறந்தது. 



Wednesday, February 19, 2025

நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு

 நாலடியார் - தீவினையச்சம் - இடுகாடு 


சுடுகாடு. 


அங்கே என்ன இருக்கும். பிணங்களை, குழி தோண்டி புதைத்து இருப்பார்கள். சுடுகாட்டை எங்கு தோண்டினாலும் பிணம்தான் இருக்கும். 


எங்கே பிணங்கள் புதைத்து வைக்கப் பட்டு இருக்கிறதோ, அந்த இடம் சுடுகாடு. சரி தானே?


விலங்குகளை கொன்று தின்பவர்களின் வயிறும் சுடுகாடு போன்றது என்கிறது நாலடியார். வயிற்றினுள் இறந்த பிணங்களை புதைத்து வைப்பதால் அவையும் சுடுகாடு தான் என்கிறது நாலடியார். 


பாடல்  


துக்கத்துள் தூங்கித் துறவின்கட் சேர்கலா

மக்கள் பிணத்த சுடுகாடு - தொக்க

விலங்கிற்கும் புள்ளிற்கும் காடே புலன்கெட்ட

புல்லறி வாளர் வயிறு.


பொருள் 


துக்கத்துள் தூங்கித் = துன்பத்துள் அழுந்தி, அப்படி துன்பத்தில் கிடக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் இருந்து 


துறவின்கட் சேர்கலா = உயர்ந்த துறவு நெறியில் சேராமல் 


மக்கள் பிணத்த சுடுகாடு = இறந்த மனிதர்களை புதைக்கும் சுடுகாடு 


தொக்க = போல 


விலங்கிற்கும்  = விலங்கினங்களுக்கும் 


புள்ளிற்கும் = பறவைகளுக்கும் 


காடே = இறந்த பின் புதைக்கும் சுடுகாடே 


புலன்கெட்ட = புலன்கள் அழிந்து 


புல்லறி வாளர் = சிறந்த அறிவினை இல்லாதவர் 


வயிறு = அவர்களின் வயிறு 


உயிர்களை கொன்று தின்பதை தீவினை என்கிறது இந்தப் பாடல். 


மாமிசம் உண்பது சரியா தவறா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. என்றேனும் ஒரு முடிவு வருமா என்று தெரியவில்லை. 


தெளிவான முடிவு வரும்வரை என்ன செய்வது? 


அவரவர்க்கு சரி என்று பட்டதைச் செய்யலாம். 


அல்லது 


நம்மைவிட அறிவில் முதிர்ந்த சான்றோர் சொல் கேட்டு நடக்கலாம். 


நாலடியார் போன்ற நூல் வழி நிற்கலாம். 




Tuesday, February 18, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு

திருவாசகம் - அதிசயப் பத்து - எளியவன் அடியார்க்கு 



பெரும்பாலனோர் நினைப்பது என்னவென்றால், ஏதாவது பாவம் செய்து விட்டால், அதற்கு ஒரு பரிகாரம் செய்து அந்த பாவத்தில் இருந்து தப்பி விடலாம் என்று. 


உதாரணமாக, கோவிலில் காணிக்கை செலுத்துவது, அன்ன தானம் செய்வது, நாலு ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது போன்ற நல்ல காரியங்கள் செய்தால் தாங்கள் செய்த பாவம் போய் விடும் என்று நினைக்கிறார்கள். 


அது அப்படி அல்ல. 


பாவக் கணக்கு வேறு, புண்ணியக் கணக்கு வேறு. இரண்டையும் கலக்க முடியாது. 


பாவம் செய்தால் அதற்கு உரிய தண்டனை உண்டு. 


புண்ணியம் செய்தால் அதற்கு ஏற்ற பலன் உண்டு. ஒன்றை ஒன்று சரி செய்ய முடியாது. 


ஒரு கொலை செய்து விட்டு, உண்டியலில் பத்து இலட்சம் போட்டு விட்டால் கொலை பாதகம் போய் விடுமா?


போகாது. 


பாவத்தை அனுபவிக்க பிறக்க வேண்டும். 


புண்ணியத்தை அனுபவிக்கவும் பிறக்க வேண்டும். 


"அறம், பாவம் என்னும் அருங் கையிற்றால் கட்டி"  என்பார் மணிவாசகர். இரண்டும் நம்மை பிறவியோடு சேர்த்துக் கட்டும். ஒன்றை ஒன்று அவிழ்த்து விடாது. 




பின் இந்தப் பிறவிச் சுழலில் இருந்து எப்படித்தான் தப்பிப்பது?


ஒரே வழி, இறைவன் நினைத்தால், நம் புண்ணிய பாவங்கள் நம்மைத் தொடர்வதை நிறுத்த முடியும். 


"அவன் தாள் பட்டழிந்தது இங்கு என் தலைமேல் அயன் கையெழுத்தே"


என்பார் அருணகிரிப் பெருமான். 


இறைவன் திருவருள் இருந்தால் முன்வினைப் பயன் நீங்கும். நாமே ஒன்றும் செய்து கொள்ள முடியாது. 


மணிவாசகர் சொல்கிறார், 


"யாராலும் எளிதில் அறிந்து கொள்ள முடியாத என் தந்தை, தாய் போன்ற சிவ பெருமான், என் முன்வினைகளை துடைத்து, என்னை ஆண்டுகொண்டு, என்னையும் தன் அடியாரோடு சேர்த்துக் கொண்ட அதிசயத்தை என்ன சொல்லுவேன்"


என்று. 


 

பாடல் 


முன்னை என்னுடை வல்வினை போயிட முக்கண துடையெந்தை

தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப்

பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதி யதுவைத்த

அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


முன்னை  = முன்பு 


என்னுடை = என்னுடைய 


வல்வினை = கொடுமையான வினைபயனை 


போயிட = என்னை விட்டு போயகல 


முக்கண துடையெந்தை = மூன்று கண்களை உடைய என் தந்தை 


தன்னை = அவனை 


யாவரும் = யாராலும் 


அறிவதற் கரியவன் = அறிவதற்கு அரியவன். அறிய முடியாதவன் 


எளியவன் = ஆனால், அவன் எளியவன் 


அடியார்க்குப் = அடியவர்களுக்கு 



பொன்னை  = பொன்னின் நிறத்தை 


வென்றதோர் = வென்றது போன்ற 


புரிசடை =  நீண்ட சடை 


முடிதனில் = முடியில் 


இளமதி யதுவைத்த = பிறைச் சந்திரனை சூடிய 


அன்னை = என் அன்னை போன்றவனை 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = அவனுடைய அடியவர் கூட்டத்தில் 


கூட்டிய = என்னையும் சேர்த்துக் விட்ட 


 அதிசயங் கண்டாமே = அதிசயத்தை கண்டு வியகின்றேன் 


பல பக்திப் பாடல்களில் இறைவனை அம்மையே, அப்பா என்று அழைப்பதை கண்டிருக்கிறோம். 


ஏன் அப்படி?


என் பிறவிக்கு காரணமான தந்தை, தாய் இருக்கிறார்கள். நான் அவர்களோடு என்னை அடையாளம் கொண்டால், அவர்கள் மதம் என் மதம் என்று ஆகும், அவர்கள் ஜாதி என் ஜாதி என்று ஆகும், அவர்கள் நாடு என் தாய் நாடு என்று ஆகும். நான் ஒரு சிறு வலையில் மாட்டிக் கொள்வேன். 


நான் ஒரு இந்து, இந்தியன், இன்ன குலத்தில் பிறந்தவன், இன்ன மொழி எனக்குத் தாய் மொழி என்று ஆகி விடும். அதை விட்டு என்னால் வெளியே வர முடியாது. 


உண்மையைக் கண்டறிய இது ஒரு பெரிய தடை. 


நம் மதம் சொல்வதுதான் நமக்குச் சரி என்று படும்.மற்றவை எல்லாம் தவறென்று படும். 


இறைவன் எனக்குத் தாய், தந்தை என்று கொண்டால், எல்லோரும் சமம். சமயம் இல்லை, ஜாதி இல்லை, இன மொழி வேறுபாடு இல்லை. உண்மையைத் தேடி சுதந்திரமாகச் செல்லலாம். 



Friday, February 14, 2025

திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன்

 திருக்குறள் - வாய்மை - உள்ளத்துள் எல்லாம் உளன் 



ஏன் வாய்மை பேச வேண்டும்?  அதனால் என்ன பயன் ? உண்மை பேசினால் நாலு காசு சம்பாதிக்க முடியுமா?  பலன் இல்லாமல் ஒரு காரியத்தை ஏன் செய்ய வேண்டும் ?


என்பன போன்ற கேள்விகள் எழலாம். அவை  நியாயமான கேள்விகளும் கூட.


வள்ளுவர் கூறுகிறார்....


"ஒருவன் தன் மனம் அறிய பொய் சொல்லாமல் இருப்பானானால், அவன் இந்த உலகில் எல்லோர் மனத்திலும் இருப்பான்" 


என்று. 


பாடல் 

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்

உள்ளத்துள் எல்லாம் உளன்


பொருள் 


உள்ளத்தால் = மனதினால் 


பொய்யாது ஒழுகின்  = பொய் சொல்லாமல்  வாழ்ந்து வந்தால் 


உலகத்தார் = உலகில் உள்ளவர்களின் 


உள்ளத்துள்  எல்லாம் = எல்லார் உள்ளத்திலும் 


உளன் = இருப்பான். 


சில பேர் நல்லவர்களை கேலி செய்வார்கள். "அவன் பாவம் ஒரு அப்பிராணி. ஒண்ணும் தெரியாது. நெளிவு சுளிவு தெரியாது.  நாலு காசு பாக்கத் தெரியாத அப்பாவி" என்று அவனைப் பார்த்து பரிதாபப் படுவார்கள். 


பரிமேலழகர் சொல்கிறார் "உலகத்தார்" என்றால் உலகில் உள்ள உயர்ந்தோர் என்று. 


அயோக்கியனுக்கு அயோக்கியத்தனம் தான் பிடிக்கும். "அடா, அவன் கில்லாடி, எப்படி காவல் அதிகாரிகள் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு தப்பிச்சு வந்துட்டான்..." என்று களவாணிப் பயல்களை பெரிதாக பேசுவார்கள். பாராட்டுவார்கள். 


அவர்கள் மனதில் இடம் பிடிப்பது அல்ல நம் வேலை. 


ஒரு தவறான வழியில் பணம் சேர்க்கிறான் என்றான் என்றால் அவனை இகழ வேண்டுமே அல்லாமல் "..எப்படி பொருள் சேர்க்கிறான்...நாமும் தான் இருக்கிறோமே நாலு காசுக்குப் பயன் இல்லாமல்" என்று நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. 


சரி, அது எல்லாம் ஒரு புறம் இருக்கட்டும். 


பொய்யாது ஒழுகினால் எப்படி நல்லவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும்?


ஒருவன் உண்மை மட்டுமே பேசுவது என்று முடிவு செய்து விட்டால், அவனால் ஒரு தவறு கூட செய்ய முடியாது. ஏன் என்றால் செய்த தவறை மறைத்து பொய் சொல்ல முடியாது. உண்மையை ஒப்புக் கொண்டால் மதிப்பு போய் விடும், மரியாதை போய் விடும், தண்டனை வரும், தலை குனிவு வரும்...எனவே உண்மை சொல்வது என்று முடிவு எடுத்து விட்டால் ஒரு தவறும் செய்ய முடியாது. ஒரு தவறும் செய்யாதவனை உலகம் கட்டாயம் போற்றும். 


ஒரே ஒரு நாள் முயன்று பாருங்கள். உண்மை மட்டுமே பேசுவது என்று. என்ன வந்தாலும் சரி, உண்மை மட்டும்தான் பேசுவது என்று. 


உங்களுக்கே உங்களைப் பிடித்துப் போய் விடும். 



தெரியாததை , தெரியாது என்று சொல்லுங்கள். 


செய்யாததை , செய்யவில்லை என்று சொல்லுங்கள். 


மறந்து விட்டால், மறந்து விட்டது என்று சொல்லுங்கள். 


வாழ்க்கை எளிமையாகும். நாம் பொய்களால் வலை பின்னி அதில் நாமே மாட்டிக் கொண்டு தவிக்கிறோம். 


முகமூடிகள் அணிந்து அணிந்து, உண்மையான முகம் எப்படி இருக்கும் என்பதே மறந்து போய் விடுகிறோம். 


 

 

Wednesday, February 12, 2025

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய

திருவாசகம் - அதிசயப் பத்து - பாதி மாதொடு கூடிய 



எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என்று எப்படி அறிந்து கொள்வது?  


எந்த விடயத்தை எடுத்துக் கொண்டாலும் அது சரி என்று சொல்ல கொஞ்சம் பேர், தவறு என்று சொல்ல கொஞ்சம் பேர், அது சரியா தவறா என்று தெரியாமல் குழம்பும் கொஞ்ச பேர். இப்படித்தான் உலகம் இருக்கிறது. 


தவறு என்று ஒரு நீதி மன்றம் சொல்வதை, மேல் நீதி மன்றம் தவறு அல்ல என்கிறது. 


ஒரு நாட்டிற்கு சரி என்பது இன்னொரு நாட்டுக்கு தவறு. 


ஒரு காலத்தில் தவறு என்பது இன்னொரு காலத்தில் சரி. 


மணிவாசகர் சொல்கிறார்


"எது சரி, எது தவறு என்று கூறும் நீதி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அப்படி தெரிந்தவர்களிடமும் சேர மாட்டேன். மனம் போன படி காரியங்கள் செய்து கொண்டு ஏதோ பிறந்து, இறந்து உழன்று கொண்டு இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை, தன் அடியவன் என்று ஏற்றுக் கொண்டு, என்னை ஆண்டு கொண்டு, தன்னுடைய அடியவர்களோடு சேர்த்து வைத்தது எவ்வளவு பெரிய அதிசயம்" 


என்று அதிசயப்படுகிறார். 



பாடல் 


 நீதி யாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பdவ ரொடுங்கூடேன்

ஏத மேபிறந் திறந்துழல் வேன்றனை என்னடி யானென்று

பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய்நின்ற

ஆதி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே.


பொருள் 


நீதி யாவன யாவையும்  = எது சரி, எது தவறு என்று சொல்லும் அனைத்து நீதிகளையும் 


நினைக்கிலேன் = நினைத்துக் கூட பார்க்க மாட்டேன் 


நினைப்பவ ரொடுங் = அது பற்றி சிந்திபவர்களோடும் 

 


கூடேன் = சேர மாட்டேன் 


ஏத மே = ஏதோ கடனே  என்று, ஒன்றும் தெரியாமல்  


பிறந் திறந்துழல் வேன்றனை = பிறந்து இறந்து உழல்வேன் தன்னை 


என்னடி யானென்று = என்னுடைய அடியவன் என்று 


பாதி மாதொடுங் கூடிய = தன் உடம்பில் பாதியை உமாதேவிக்கு கொடுத்த 


பரம்பரன் = மிக உயர்ந்தவன் 


 நிரந்தர மாய்நின்ற = என்றும் அழியாமல் நிலைத்து நிற்கும் 


ஆதி  = முதல்வன் 


ஆண்டு = என்னை ஆட்கொண்டு 


தன் அடியரிற் = தன்னுடைய அடியவர்களோடு 


கூட்டிய = சேர்த்து வைத்த 


அதிசயங் கண்டாமே. = அதிசயத்தைப் பார்த்தோம் 


இறைவனின் அடியவர்களோடு சேர்ந்தால் இறைவன் பற்றிய ஞானம் வரும், இறைவன் மேல் பக்தி வரும். 


நாமும் ஒரு அடியவர்தானே?  நம்மோடு சேர்ந்தால் இறை ஞானம், பக்தி எல்லாம் மற்றவர்களுக்கு வருமா?  


அந்த அளவு ஞானத்தை நாம் தேடி அடைந்து இருக்கிறோமா? நம்மிடம் அவ்வளவு பக்தி இருக்கிறதா? 


ஏன் பிறவி வருகிறது?


சரியானவற்றை செய்யாமல் இருப்பது. 


தவறானவற்றை செய்வது. 


எது சரி, எது தவறு என்று அறியாமல் இருப்பது. 


அறிந்த்வவர்களை அண்டி அந்த அறிவைப் பெறாமல் இருப்பது. 


இவை எல்லாம் இல்லாத எனக்கு அவன் அருள் புரிந்தான் என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு சொல்கிறார். 


உண்மையில் அவருக்குத் தெரியும். அவர் நம் குற்றங்களை தன் மேல் ஏற்றிக் கூறுகிறார். 


நாம் இறைவனால் ஆட்கொள்ளப் படவேண்டும் என்றால், 


நீதி எது என்று அறிய வேண்டும். 


அறிந்தவர்களோடு சேர்ந்து இருக்க வேண்டும். 




Tuesday, February 11, 2025

திருக்குறள் - வாய்மை - சுடும் நெஞ்சு

 திருக்குறள் - வாய்மை -  சுடும் நெஞ்சு 



பொய் சொல்லி வாழ்பவர்கள் பணம் நிறைய சம்பாதிக்கிறார்கள். செல்வாக்கோடு இருக்கிறார்கள். உண்மை சொல்லி நேர்மையாக வாழ்பவர்கள் அரிச்சந்திரன் மாதிரி துன்பப்படுகிறார்கள். இதுதான் உலக நடைமுறையாக இருக்கிறது. 


அப்படி இருக்க உண்மை பேசு, உண்மை பேசு என்று ஏன் சொல்ல வேண்டும். நாமும் பொய் சொல்லி வளமாக வாழ்வதில் என்ன தவறு என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு வள்ளுவர் கூறுகிறார்: 


"பொய் என்று ஒருவன் அறிந்தே சொல்லுவானானால், அவன் மனமே தண்டிக்கும்"


பாடல்  


தன்னெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்தபின்

தன்நெஞ்சே தன்னைச் சுடும்


பொருள் 



தன்னெஞ்சு அறிவது  = ஒருவன், தனது மனம் அறிய 


பொய்யற்க = பொய் சொல்லாமல் விடுக 


 பொய்த்தபின் = மாறாக பொய் சொல்வானாயின் 


தன்நெஞ்சே = அவனுடைய நெஞ்சமே 


 தன்னைச் சுடும் = அவனைச் சுடும் 


அது எப்படி ஒருவனின் மனம் அவனை சுட முடியும்? சுடுதல் என்பதை துன்பம் என்று வைத்துக் கொண்டாலும், எப்படி ஒருவனின் மனம் அவனுக்குத் துன்பம் தரும்?  பொய் சொல்பவர்கள் மனம் எல்லாம் அவர்களை சுடுவது மாதிரி தெரியவில்லையே என்று சந்தேகம் கொண்டால், அதற்கு பரிமேலழகர் விளக்கம் தருகிறார். 


" பொய்த்தானாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும்."


அது பரிமேலழகர் உரை. 


அதாவது, 


கரி என்றால் சாட்சி. 


ஒருவன் தெரிந்தே பொய் சொல்வானானால் அவன் மனமே அந்த செயலுக்கு சாட்சியாய் இருந்து அவனுக்கு துன்பத்தை வருவிக்கும் என்கிறார். 


அவன் மனமே அவனுக்கு துன்பத்தை கொண்டு வரும் என்கிறார். 


ஒருவன் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம். தன் மனதை ஒருவன் ஏமாற்ற முடியாது. அது எப்போதும் அவன் செய்வதை, சொல்வதை கவனித்துக் கொண்டே இருக்கும். 


சரி, ஏதோ தெரியாமல் சொல்லி விட்டேன் என்று சொல்ல முடியாது. அறிந்தே சொன்ன பொய் தான். "தன் நெஞ்சு அறிவது பொய்யற்க" என்றார். தெரிந்தே சொல்லும் பொய்கள். 


எப்போதோ சொன்னேன். அது நாளடைவில் மறைந்து விடாதா, மறந்து விடாதா என்றால் மறையாது, மறக்காது. எனவே தான் "பொய்யற்க" என்றார். பொய்யை ஒரு காலும் சொல்லக் கூடாது. அறவே சொல்லக் கூடாது. 




Monday, February 10, 2025

அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

 அபிராமி அந்தாதி - நூறாவது பாடல் - உதிக்கின்றனவே

https://interestingtamilpoems.blogspot.com/2025/02/blog-post_39.html



அபிராமி அந்தாதியின் முதல் பாடல் தொடங்குவது "உதிக்கின்ற செங்கதிர்" என்று. 


உதிக்கின்ற என்று தொடங்கி, உதிக்கின்றதுவே என்று தான் தொடுத்த பாமாலையை முடிக்கிறார் பட்டர். 


எப்படி சொல் வந்து நிற்கிறது. 


எந்தப் கல்லூரியில் படித்து வருவது இது?


அன்று கல்லூரியின் கடைசி நாள். இனி எப்போது அவளை பார்க்க முடியுமோ தெரியவில்லை. பார்க்கவே முடியாமல் போய் விடுமோ? வாழ்க்கை அவனையும், அவளையும் வேறு வேறு திசையில் கொண்டு போகலாம். அவனுக்கு இந்த நாளை எப்படியாவது நீட்டித்துக் கொண்டே போனால் என்ன என்று தோன்றுகிறது. 


இனி எப்போது பார்ப்போமோ என்ற தவிப்பில் அவளை கண் இமைக்காமல் பார்க்கிறான். அவள் காதோரம் நெளிந்து ஓடும் அந்த முடி, அவள் புருவம், அவள் கழுத்தில் அணிந்திருக்கும் மாலை, அவள் கையில் உள்ள கைக் கடிகாரம், அவள் அணிந்திருக்கும் செருப்பு என்று ஒரு அங்குலம் விடாமல் அவளை தூர நின்று எவ்வளவு தெளிவாக மனதில் பதிய வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு மனதில் பதிய வைக்கிறான். 


இனி காலம் எல்லாம் இந்த பிம்பத்தை மறக்காமல் இருக்க வேண்டுமே என்று அவளை அப்படியே மனதுக்குள் சிற்பம் போல் செதுக்கி வைக்கிறான். 


சொல்லி பார்த்துக் கொள்கிறான்...அவள் கண் எப்படி இருந்தது, விரல்கள் எப்படி என்று...அவளுக்கு திருமணம் ஆகலாம்...திருமண கோலத்தில் எப்படி இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கிறான்....



பாடல் 



குழையைத் தழுவிய கொன்றையந்தார் கமழ் கொங்கைவல்லி

கழையைப் பொருத திருநெடுந்தோளும் கருப்பு வில்லும்

விழையப் பொரு திறல் வேரியம் பாணமும் வெண் நகையும்

உழையைப் பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே



பொருள் 



குழையைத் = காதணி. அவள் அணிந்திருக்கும் தோடு, ஜிமிக்கி


தழுவிய = அந்தக் காதணியை தொடும் 


 கொன்றையந்தார்= தார் என்றால் மாலை. காதில் போட்ட ஜிமிக்கையை தொட்டு வருடும் அந்தக் கொன்றை மாலை.


கமழ் = மணம் வீசும் 


கொங்கை = மார்பு 


வல்லி = சிறந்தவள் 


கழையைப் = மூங்கிலைப் 


பொருத = போட்டிபோடும் 


திருநெடுந்தோளும் = சிறந்த நீண்ட தோள்களும் 


கரும்புவில்லும் = கரும்பு வில்லும் 


விழையப் = விழைவு என்றால் ஆசை, ஆவல், ஆர்வம் 


பொரு = பொருதல் என்றால் சண்டை இடுதல், கட்டித் தழுவி நெருங்கி இருத்தல் 


வேரியம் = மணம் வீசும் 


பாணமும் = மலர்க் கணைகளும் 


வெண் நகையும் = வெண்மையான புன்சிரிப்பும் 


உழையைப் = மானுடன் 


பொரு  = போட்டி போடும் 


கண்ணும்  = கண்களும் 


நெஞ்சில் = என் மனதில் 


எப்போதும் உதிக்கின்றவே = எப்போதும் உதிக்கின்றதே 


சிவன் அணியும் காதணிகள் ஏழு வகைப்படும். 


தோடு, குண்டலம், குழை, சுருள், கோளரவன், ஓலை, பொற்றோடு என்பன.


அவன் அணியும் காதணி இவளிடம் எப்படி வந்தது?  ஆசையாக எடுத்துப் போட்டு இருப்பாளோ?  இல்லை இல்லை, அவன்தான் மாதொரு பங்கன் ஆயிற்றே. அவன் காதணி அவளுடையதும்தான். 


கொன்றை மலர் அவனுக்கு உரியது. அது இவள் தோளில்.  


அவள் மேனி எங்கும் மலர் வாசனை. 


காதணி, மாலையும் கழுத்துமாக அவள், முத்துப் பல் சிரிப்பு....


எப்போதெல்லாம் அவன் மனம் சோர்கிறதோ, அப்போதெல்லாம் அவன் மனதில் சூரியனாய் அவள் உதித்து ஒளி வீசுகிறாள். 


படித்துப் பாருங்கள். புரியலாம்.