திருவருட்பா - அடிவயிற்றை முறுக்காதோ ?
பாடல்
பொய்விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலைகொலைகள் புரிகின்றீர் கலகல என்கின்றீர்
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் கருத்திருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ கொடிய முயற்றுலகீர்
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம்
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே!!
பொருள்
பொய்விளக்கப் புகுகின்றீர் - நமக்கு எது சரி , எது தவறு என்று சரியாகத் தெரிவதில்லை. நாம் நினைப்பதுதான் சரி என்று நினைத்துக் கொண்டு , அவற்றை மற்றவர்களுக்கு விளக்கமாக சொல்லிக் கொண்டு இருக்கிறோம். இப்படி செய்ய வேண்டும், அப்படி செய்ய வேண்டும் என்று. ஒரு வேளை நாம் மெய் என்று நினைத்துக் கொண்டிருப்பது பொய்யாக இருந்தால் ? வாழ் நாள் எல்லாம் பொய்யை விளக்கிக் கொண்டு இருந்திருப்போம் அல்லவா ? அது சரியா ? நாம் மெய் என்று நம்புவதை மெய் தானா என்று அறிய வேண்டாமா ? யாரோ சொன்னார்கள், ஏதோ ஒரு புத்தகத்தில் படித்தோம் என்பதற்காக அதை உண்மை என்று எடுத்துக் கொள்ளலாமா ?
போது கழிக்கின்றீர் = பொழுதை வீணே கழிக்கின்றோம். டிவி, whatsapp , facebook , வார மற்றும் மாத இதழ்கள் , சினிமா , வெட்டி அரட்டை என்று பொழுதை வீணாக கழித்துக் கொண்டு இருக்கிறோம்.
புலைகொலைகள் புரிகின்றீர் = புன்மையான கொலைகள் செய்கின்றோம். நாம் உண்பதற்காக மற்ற உயிர்களை கொல்கிறோம் . நான் தான் சைவம் ஆயிற்றியே , மாமிசம் சாப்பிடுவது இல்லையே என்று சொல்பவர்கள் கூட , தங்கள் தேவைக்காக காலணி , கையுறை, belt , suitcase , wallet , purse போன்ற தேவைகளுக்காக உயிர்க்கொலை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. காபி டீ குடிப்பதற்காக நாம் உபயோகப் படுத்தும் பாலுக்காக மாடுகள் எவ்வளவு துன்பப் படுத்தப் படுகின்றன. உயிர் கொலை இல்லாவிட்டாலும், ஒருவரின் மனதை எத்தனை விதங்களில் கொலை செய்கிறோம். கடின வார்த்தைகளால், அவர்களை உதாசீனப் படுத்துவதின் மூலம் எவ்வளவோ மனக் கொலைகள் செய்கிறோம்.
கலகல என்கின்றீர் = அர்த்தமில்லாத சிரிப்பு, பேச்சு நாளும் எத்தனை.
கைவிளக்குப் பிடித்தொரு பாழ் கிணற்றில் விழுகின்ற
களியர் எனக் களிக்கின்றீர் = நாமும் சில பல நல்ல புத்தங்களை படித்திருப்போம்; நல்லவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அப்படி ஒன்றும் சுத்த முட்டாளாக நாம் இருப்பது இல்லை. கீதை, குறள் போன்ற உயர்ந்த நூல்களை பற்றி கொஞ்சம் அறிந்திருப்போம். இருந்தும், அவை எல்லாம் கேட்க/படிக்க நல்லா இருக்கு. நடை முறைக்கு சாத்தியம் இல்லை என்று கூறி அவற்றை ஒதுக்கி வைத்து விட்டு நம் வழியில் செல்கிறோம். கையில் விளக்கு இருந்தும் பாழும் கிணற்றில் விழும் அறிவிலிகளைப் போல வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
கருத்திருந்தும் கருதீர் = அறிவு இருக்கிறது. நல்லது கெட்டது தெரிகிறது. இருந்தும் அவற்றை கடை பிடிப்பது இல்லை. சின்ன உதாரணம், அதிகமாக இனிப்பு உண்ணக் கூடாது என்று தெரிகிறது. இருந்தும் சமயம் கிடைக்கும் போது விடுவது இல்லை. இன்று ஒரு நாள் மட்டும் என்று உள்ளே தள்ளி விடுகிறோம். கருத்து இருந்தும் கருதாமல் விட்டு விடுகிறோம்.
ஐவிளக்கு மூப்பு மரணாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முறுக்காதோ = ஐந்து புலன்களால் வரும் துன்பம், மூப்பு, மரணம் இவற்றைப் பற்றி எல்லாம் நினைத்தால் அடிவயிற்றில் ஒரு பயம் வராதா ? ஏதோ நமக்கு மூப்பே வராது என்பது போலவும், நமக்கு மரணமே வராது என்பது போலவும் நாம் நினைத்துக் கொண்டு வாழ்கிறோம். அது சரியா. மூப்பையும், மரணத்தையும் நினைத்தால் பயம் வர வேண்டாமா ?
கொடிய முயற்றுலகீர் = கொடுமையான பலவற்றை செய்து கொண்டு இருக்கும் உலகத்தீரே
மெய்விளக்க எனதுதந்தை வருகின்ற தருணம் = உண்மையை விளக்க எனது தந்தையாகிய இறைவன் வரும்போது
மேவிய தீண்டு அடைவீரேல் ஆவி பெறுவீரே = அவனுடைய ஸ்பரிசம் கிடைக்கும் போது நீங்கள் உயிர்ப்பு அடைவீர்கள்
என்கிறார் வள்ளலார்.
பொய்யானவற்றை விட்டு, பொழுதை நல்ல வழியில் செலவழித்து, உயிர் கொலை புரியாமல், இருக்கின்ற காலம் கொஞ்ச நாள் தான் என்று உணர்ந்து செயல்பட்டால் ஆன்மீக அனுபவம் நிகழும் என்கிறார் வள்ளல் பெருமான்.
சிந்திப்போம்.