Sunday, March 31, 2019

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம்

கம்ப இராமாயணம் - தவம் செய்த தவம் 



IIT போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு மாணவர்கள் சில பல மாதங்கள் தனியாக பயிற்சி எடுத்துக் கொள்ளவார்கள். IIT போன்ற நிறுவனங்களில் சேர்வது என்பது அவ்வளவு எளிதல்ல.  இந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்வதும் அவ்வளவு எளிதல்ல. அவற்றில் சேர்வதற்கும் நுழைவு தேர்வு உண்டு. வருகிற எல்லோரையும் அவர்கள் சேர்த்துக் கொள்வதில்லை. அந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து, பயிற்சி பெற்று IIT ல் சேர முடியும்.

இப்போது என்ன ஆகிறது என்றால், அந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுகிறார்கள்.

அதில் சேர்ந்து பயிற்சி பெற்று, இந்த பயிற்சி நிறுவனங்களில் நுழைந்து, அங்கு மீண்டும் IIT க்கு பயிற்சி பெற்று, IIT ல் சேர வேண்டும்.

சரி, அதுக்கும், இராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம் ? IIT எங்கே இருக்கிறது, இராமாயணம் எங்கே இருக்கிறது ?

இராமன் தவம் செய்ய கானகம் வந்தான்.

தவம் செய்யவா வந்தான் ?

ஆம். அப்படித்தான் கைகேயி சொல்லி அனுப்பினாள்.

ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ 
தாழிரும் சடைகள் தாங்கி, தாங்க அரும் தவம் மேற் கொண்டு 
பூழி வெங்கானம் நல்கி புண்ணியத் துறைகள் ஆடி 
ஏழிரண்டு ஆண்டின் வா என்று இயம்பினன் அரசன்

என்றாள்

"பரதன் நாட்டை ஆளட்டும். நீ காட்டில் போய் தவம் செய்"

என்று சொல்லித்தான் அனுப்பினாள்.

எனவே இராமன் தவம் செய்ய காட்டுக்கு வந்திருக்கிறான்.

சூர்ப்பனகை பார்க்கிறாள். எல்லோரும் தவம் செய்து அதன் பலன்களைப் பெறுவார்கள். ஆனால், இந்த இராமன் தவம் செய்ய, இந்த தவம் , என்ன தவம் செய்ததோ என்று வியக்கிறாள்.

இராமன் தவம் செய்கிறான் என்றால் அது தவத்திற்கே பெருமையாம்.

நாம் எல்லாம் தவம் செய்தால் அது நமக்குப் பெருமை. இராமன் தவம் செய்தால் அதனால் தவத்துக்கு பெருமை.

இராமன் தவம் செய்ய வேண்டுமே என்று அந்த தவம் முன்பு தவம் செய்ததாம்.

பாடல்


எவன் செய, இனிய இவ்
    அழகை எய்தினோன்,
அவம் செயத் திரு உடம்பு
    அலச நோற்கின்றான்?
நவம் செயத் தகைய இந்
    நளின நாட்டத்தான்
தவம் செயத் தவன் செய்த
    தவன் என்? ‘என்கின்றாள்.

பொருள்

எவன் செய = எதைப் பெறுவதற்காக

இனிய = இனிமையான

இவ் அழகை எய்தினோன், = இந்த அழகை அடைந்தவன்

அவம் செயத்  = துன்பப் பட்டு

திரு உடம்பு = அவனுடைய இந்த உயர்ந்த உடம்பு

அலச நோற்கின்றான்? = நோகும்படி தவம் மேற்கொள்கிறான்

நவம் செயத் தகைய  = புதுமையை உண்டாக்கக் கூடிய

இந் நளின நாட்டத்தான் = இந்த நளினமான கண்களை உடைய இராமன்

தவம் செயத் = தவம் செய்ய

தவன் செய்த = தவம் செய்த

தவன் என்? ‘என்கின்றாள். =தவம் என்ன என்கிறாள்

இவன் தவம் செய்ய, அந்த தவம் என்ன தவம் செய்ததோ என்கிறாள்.

நீங்க எங்க வீட்டுக்கு வர இந்த வீடு என்ன புண்ணியம் பண்ணியதோ என்று சொல்லுவதைப் போல.

IIT ல் சேர கோச்சிங் சென்டர். கோச்சிங் சென்டரில் சேர ஒரு டுடோரியல் சென்ட்ரல் மாதிரி.

தவம் செய்ய தவம் செய்த தவம் .

கம்பனின் கவித் திறமைக்கு ஒரு உரைகல்.

மேலும்,

நாம் ஒரு வேலை செய்கிறோம் என்றால், நம்மால் அந்த வேலை பெருமை அடைய வேண்டும். அந்த அளவுக்கு நம்மை உயர்த்திக் கொள்ள வேண்டும். இராமன் உயர்த்திக் கொண்டான்.

இராமாயணம் படிப்பது கம்பனின் கவிதத்திறமையை இரசிக்க மட்டும் அல்ல, அதில் உள்ள கதையை படிப்பதற்கு மட்டும் அல்ல, அதில் உள்ள பாடங்களையும்  படித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு காரியத்தை எவ்வளவு சிறப்பாக செய்ய முடியுமோ அவ்வளவு சிறப்பாக செய்ய வேண்டும். நம்மால் அந்த காரியத்துக்கு பெருமை வந்து சேர வேண்டும்.

அணு ஆராய்ச்சி செய்தாலும் சரி, தெரு பெருகினாலும் சரி....மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும்.



மார்ட்டின் லூதர் கிங் சொல்லுவார்

If a man is called to be a street sweeper, he should sweep streets even as a Michaelangelo painted, or Beethoven composed music or Shakespeare wrote poetry. He should sweep streets so well that all the hosts of heaven and earth will pause to say, 'Here lived a great street sweeper who did his job well.”





Saturday, March 30, 2019

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன்

கம்ப இராமாயணம் - கண்ணில் காய்தலால் இற்றவன் 


மனிதன் எதையும் வெல்ல முடியும் காமத்தைத் தவிர. காமம் ஞானிகளையும் ரிஷிகளையும் முனிவர்களையும் புரட்டிப் போட்டிருக்கிறது. சாம்ராஜ்யங்களை சாம்பல் மேடாக்கியிருக்கிறது.

எல்லாம் துறந்த துறவிகளும் காமத்தின் பிடியில் இருந்து வெளி வரமுடியாமல் தவித்து இருக்கிறார்கள். பெண்ணை ஏசி, தூற்றி, அவள் உடம்பை கொச்சைப் படுத்தி பாடி தீர்த்து இருக்கிறார்கள்.

மாணிக்க வாசகர், எவ்வளவு பெரிய ஞானி....இறைவனை அடைய இதில் இருந்து எல்லாம் தப்பிப் பிழைத்தேன் என்று ஒரு பட்டியல் தருகிறார்.



ஆண்டுகள் தோறும் அடைந்த அக்காலை
ஈண்டியும் இருத்தியும் எனைப்பல பிழைத்தும்
காலை மலமொடு கடும்பகல் பசி நிசி
வேலை நித்திரை யாத்திரை பிழைத்தும்
கரும்குழல் செவ்வாய் வெள்நகைக் கார்மயில் 30
ஒருங்கிய சாயல் நெருங்கி உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து கதிர்ந்து முன் பணைத்து
எய்த்து இடைவருந்த எழுந்து புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்
பித்த உலகர் பெரும் துறைப் பரப்பினுள்
மத்தம் களிறு எனும் அவாவிடைப் பிழைத்தும்
கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்
செல்வம் என்னும் அல்லலில் பிழைத்தும்
நல்குரவு என்னும் தொல்விடம் பிழைத்தும் 40
புல்வரம்பு ஆய பலதுறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி

அனைத்துக்கும் ஒரு வரி சொன்ன அவர், பெண்ணிடம் இருந்து பிழைத்தேன், காமத்தில் இருந்து பிழைத்தேன் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியது தானே...

கரும்குழல்
செவ்வாய்
வெள்நகைக்
கார்மயில்
ஒருங்கிய சாயல்
நெருங்கி
உள் மதர்த்துக்
கச்சு அற நிமிர்ந்து
கதிர்ந்து
முன் பணைத்து
எய்த்து
இடைவருந்த
எழுந்து
புடைபரந்து
ஈர்க்கு இடைபோகா
 இளமுலை மாதர்தம்
கூர்த்த நயனக் கொள்ளையில் பிழைத்தும்

என அடுக்குகிறார்.

பெண்ணின் மார்பகம் அவரை அப்படி அலைக்கழிக்கிறது.

காமம் தேவேந்திரனை விடவில்லை. வால்மீகியை விடவில்லை - வியாசரை விடவில்லை. சந்திரனை விடவில்லை.

அந்த காமத்தை வென்ற ஒருவன் சிவன்.

சிவ பெருமான் யோகத்தில் இருக்கிறார். அந்த யோகத்தை கலைக்க வேண்டும். தேவர்கள் மன்மதனை அனுப்புகிறார்கள். நடுங்கிக் கொண்டு போகிறான் மன்மதன். சிவன் மேல் மலர் அம்பை தொடுக்கிறான்.

கண் விழித்த சிவன் காமவயப் படவில்லை. மன்மதனை எரித்து விட்டான்.

காமத்தை வென்றவன் சிவன்.

பின், ரதி அழுது, பார்வதி இரங்கி, மன்மதன் உயிர் பெறுகிறான் ஆனால் அவன் யார் கண்ணுக்கும் தெரிய மாட்டான் என்ற ஒரு நிபந்தனையோடு.

சூர்ப்பனகை, இராமனை பார்க்கிறாள்.

"ஒருவேளை அந்த மன்மதன், தவம் செய்து, சாப விமோச்சனம் பெற்று, எல்லோரும் காணும் படி ஆகி விட்டானோ. அந்த மன்மதன் தான் இவன் போலும்" என்று ராமனை கண்டு வியக்கிறாள் சூர்ப்பனகை.

பாடல்


'கற்றை அம் சடையவன் கண்ணில் காய்தலால் 
இற்றவன் , அன்றுதொட்டு இன்றுகாறும் தான் 
நல் தவம் இயற்றி , அவ் அநங்கன் , நல் உருப் 
பெற்றனன் ஆம் 'எனப் பெயர்த்தும் எண்ணுவாள் .


பொருள்


'கற்றை அம் சடையவன் = கற்றை முடியை கொண்ட சிவன்

கண்ணில் காய்தலால்  = நெற்றிக் கண்ணால் எரித்ததால்

இற்றவன் , = இறந்தவன் (மன்மதன்)

அன்றுதொட்டு = அன்று முதல்

இன்றுகாறும் = இன்று வரை

தான் = அவன்

நல் தவம் இயற்றி  = நல்ல தவம் புரிந்து

அவ் அநங்கன் = அந்த மன்மதன்

நல் உருப் பெற்றனன் ஆம் '= நல்ல வடிவத்தை பெற்றான்

எனப் பெயர்த்தும் எண்ணுவாள்  = என்று மீண்டும் எண்ணுவாள்


கம்பன் கோடி காட்டுகிறான்.

காமத்தை வென்றவன் சிவன்.

காமத்தில் தடுமாறி நிற்கிறாள் சூர்ப்பனகை.

மேலும் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_30.html

Friday, March 29, 2019

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா

பட்டினத்தார் பாடல்கள் - ஐயா, திருவையாறா 



பாடல்

மண்ணும் தணல் ஆற வானும் புகை ஆற
எண்ணரிய தாயும் இளைப்பாறப் - பண்ணுமயன்
கையாறவும் அடியேன் கால் ஆறவும் காண்பார்
ஐயா திருவை யாறா


பொருள்

மண்ணும் தணல் ஆற = மீண்டும் மீண்டும் நாம் பிறந்து, பின் இறந்து கொண்டிருந்தால், நம் உடலை மீண்டும் மீண்டும் எரிப்பார்கள். அப்படி மாறி மாறி எரித்துக் கொண்டிருந்தால், இந்த மணல் (சுடுகாட்டு மணல் ) சூடாகவே இருக்கும் அல்லவா? அந்த மணல் கொஞ்சம் தணல் ஆறவும். சூடு ஆறி குளிரவும்

வானும் புகை ஆற = உடலை எரிக்கும் போது எவ்வளவு புகை வரும். நாம் மறுபடியும் மறுபடியும் பிறந்து இறந்து எரித்து எரித்து இந்த வானமே புகை மண்டி கிடக்கிறது. அந்த புகை ஆறவும்

எண்ணரிய தாயும் இளைப்பாறப் = பிள்ளையைப் பெறுவது என்றால் எவ்வளவு சிரமம் ஒரு தாய்க்கு. எத்தனை தாய்மார்கள் நம்மை மறுபடி மறுபடி பெறுவதற்கு சிரமப் படுவார்கள். அவர்கள் கொஞ்சம் இளைப்பாறவும். 


பண்ணுமயன் = பண்ணும் + அயன் . நம்மை மீண்டும் மீண்டும் படைக்கும் ப்ரம்மா 

கையாறவும் = நம் தலை எழுத்தை எழுதி எழுதி அவனுக்கும் கை வலிக்காதா? அவன் கை ஆறவும் 

அடியேன் கால் ஆறவும் = பிறந்தது முதல் ஆட்டம், ஓட்டம் என்று ஓடிக் கொண்டே இருக்கிறோம். பள்ளிக்கூடம், வேலை, வெட்டி என்று அலைந்து திரிகிறோம். கால் தான் வலிக்காதா நமக்கு. ஒரு பிறவி என்றால் பரவாயில்லை. எத்தனை பிறவி, எவ்வளவு நடப்பது ? கால் தான் வலிக்காதா ? என் கால் இளைப்பாறவும் 


காண்பார் = இவை எல்லாம் இளைப்பாறும்படி காண்பாய் 

ஐயா = ஐயா 

திருவை யாறா = திருவையாறா, திருவையாற்றில் உள்ள சிவனே 

பட்டினத்தாருக்கு தமிழ் வந்து விழுகிறது. 

ஐந்து ஆறுகள் சேரும் இடம், திரு + ஐந்து + ஆறு. திருவையாறு. 

அந்த ஆற்றினை, ஆறுதல் என்ற இளைப்பாறுதல் என்ற வார்த்தையோடு சேர்க்கும் இலாகவம் பட்டினத்தாருக்கு இருக்கிறது. 

அது போகட்டும். 

நமக்கு நேற்று நடந்தது கொஞ்சம் நினைவு இருக்கிறது. போன வாரம் நடந்தது அதை விட கொஞ்சம் குறைவாக நினைவு இருக்கிறது. போன மாதம், போன வருடம் ?

நாள் ஆக , ஆக நினைவு குறைந்து கொண்டே போகிறது. 

போன ஜென்மம் நினைவு இருக்கிறதா ? இல்லவே இல்லை. 

ஞானிகளுக்கு அது நினைவு இருக்கிறது. 

பட்டினத்தார் சொல்கிறார் எத்தனை பிறப்பு, எத்தனை தாய்மார் என்று. 

மாணிக்க வாசகர் சொல்லுகிறார் 

"எல்லா பிறப்பும் பிறந்திளைத்தேன் எம் பெருமான் 
மெய்யே உன் பொன்னடிக்கு கண்டு இன்று வீடு உற்றேன் "

என்று சிவபுராணத்தில்.

புல்லாகி, பூடாகி, புழுவாய் , பறவையாய், பாம்பாய் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். அத்தனை பிறப்பும் பிறந்து இளைத்தேன் என்கிறார். 

இளைத்து யார் ? இந்த உடம்பு அல்ல. இந்த ஆன்மா. மறுபடி மறுபடி பிறந்து இளைக்கிறது.

எளிய தமிழில் ஆழ்ந்த அர்த்தம்.

இது உங்கள் சொத்து. உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு விட்டுச் சென்ற சொத்து. வெட்டிக் கொண்டு போனாலும் சரி. கட்டிக் கொண்டு போனாலும் சரி. விட்டு விட்டுப் போய் விடாதீர்கள்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_15.html

இராமாயணம் - யாரோ இவன் ?

இராமாயணம் - யாரோ இவன் ?


சில பேருக்கு எதைச் சொன்னாலும் குதர்க்கமான அர்த்தம் தான் தோன்றும்.  நல்ல புத்தகத்தை கொடுத்தால், "இதை எடைக்கு போட்டால் என்ன விலை வரும் " என்று சிந்திப்பார்கள்.

"தீயவரோடு சேராதே" என்று சொன்னால், "அப்ப தீயவர்கள் எப்படித்தான் திருந்துவார்கள். நாம் தான் பழகி அவர்களை திருத்த வேண்டும் " என்று வாதம் செய்வார்கள்.

என்ன செய்வது. அவர்கள் அறிவின் ஆழம் அவ்வளவுதான் என்று விட்டு விட வேண்டும்.

இராமனை நேரில் காண்கிறாள் சூர்ப்பனகை. அவன் பரம்பொருள் என்று அவளுக்குத் தெரியவில்லை. அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.

"மன்மதனுக்கு உருவம் கிடையாது. இந்திரனுக்கு ஆயிரம் கண்கள். சிவனுக்கு மூன்று கண்கள். திருமாலுக்கு நான்கு தோள்கள். இவனைப் பார்த்தால் அப்படி யாரும் போலத் தெரியவில்லையே. இவன் யாராக இருக்கும்" என்று அவன் உடல் அழகை கண்டு வியக்கிறாள்.

பாடல்


'சிந்தையின் உறைபவற்கு உருவம் தீர்ந்ததால் ; 
இந்திரற்கு ஆயிரம் நயனம் ; ஈசற்கு 
முந்திய மலர்க்கண் ஓர் மூன்று ; நான்கு தோள் 
உந்தியின் உலகு அளித்தாற்கு 'என்று உன்னுவாள் .


பொருள்


'சிந்தையின் = மனதில்

உறைபவற்கு = இருப்பவருக்கு (எல்லோர் மனத்திலும் காதலும் காமமும் உண்டு. அதற்கு காரணமான மன்மதன்)

உருவம் தீர்ந்ததால் ;  = உருவம் இல்லாததால்

இந்திரற்கு = இந்திரனுக்கு

ஆயிரம் நயனம்  = ஆயிரம் கண்கள்

ஈசற்கு  = சிவனுக்கு

முந்திய மலர்க்கண் ஓர் மூன்று = மூன்று மலர் போன்ற கண்கள்

நான்கு தோள்  = நான்கு தோள்கள்

உந்தியின் = நாபிக் கமலத்தில் இருந்து

உலகு  = இந்த உலகை

அளித்தாற்கு ' = அளித்தவனுக்கு

என்று உன்னுவாள் . = என்று நினைப்பாள்

உருவம் தாண்டி மேலே செல்லத் தெரியவில்லை. புறத் தோற்றமே முடிவானது என்று முடிவு  செய்து விட்டாள்.

கவிதை தெரியும், கவிஞனின் உள்ளம் தெரியாது.

“அணி செய் காவியம் ஆயிரம் கற்கினும்
ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார் “


என்பான் பாரதி.

மனைவி தெரியும், அவள் உள்ளம் தெரியாது.

"சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார், செல்வர் சிவபுரம்"

என்பார் மணிவாசகர். பொருள் அறிந்து அல்ல, பொருள் உணர்ந்து.

புறத் தோற்றங்களைத் தாண்டி மேலே செல்ல வேண்டும்.



Thursday, March 28, 2019

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்

கம்ப இராமாயணம் - அருந்துயில் துறந்த ஐயனைக்


கடவுள் யார் என்றே தெரியாது. இருந்தும் கடவுளை "தேடுகிறேன்", என்று சொல்லுகிறார்கள். தெரியாத ஒன்றை எப்படி தேட முடியும்? கடவுளை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவன் யார், எப்படி இருப்பான் என்று தெரியாது, எங்கே இருப்பான் என்று தெரியாது. ஆனால், அவனை அடைய வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

நாளையே கடவுள் நேரில் வந்து "வா போகலாம் " என்றால் எத்தனை பேர் கிளம்புவார்கள். முதலில், வந்திருப்பது கடவுளா என்ற சந்தேகம் வரும். நம் வீட்டில் உள்ள படத்தில் இருப்பது போல இல்லை என்றால், வந்த ஆளை கடவுள் என்று எப்படி ஏற்றுக் கொள்ளுவது? ஒரு வேளை அதே போல் இருந்தால், யாரேனும் அப்படி வேஷம் போட்டு வந்து நம்மை ஏமாற்றுகிறார்களோ என்ற சந்தேகம் வரும்.

சரி, கடவுள் நம்மிடம் சொல்ல வில்லை. சும்மா, நம் பக்கத்தில் வந்து நிற்கிறார். பஸ்ஸில் நம் கூட பிரயாணம் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம். நமக்குத் தெரியுமா அவர் தான் கடவுள் என்று ?

தெரியவே தெரியாது.

சூர்ப்பனகை, இராமனை கண்டாள். அவன் கடவுள் என்று அறியவில்லை. அனுமன் அறிந்தான். குகன் உணர்ந்தான். சூர்ப்பனகை அறியவும் இல்லத்தில். உணரவும் இல்லை.

கம்பன் ரொம்பவும் மெனெக்கெட்டு சொல்லுகிறான்.

"அந்தக் காலத்தில் தேவர்கள் எல்லாம் சென்று அரக்கர்கள் எங்களை பாடாய் படுத்துகிறார்கள் என்று முறையிட்ட அந்த விஷ்ணுவை சூர்ப்பனகை கண்டாள் " என்று.

ஆனால், இராமன் அவளுக்கு கடவுளாகத் தெரியவில்லை. மானிடனாகத் தெரிந்தான். அவன் உடம்பு தான் அவளுக்குத் தெரிந்தது.

என்ன செய்ய ? அவள் அறிவின் ஆழம் அவ்வளவுதான்.

பாடல்

எண் தகும் இமையவர் ,'அரக்கர் எங்கள்மேல்
விண்டனர் , விலக்குதி 'என்ன , மேலை நாள்
அண்டசத்து அருந்துயில் துறந்த ஐயனைக்
கண்டனள் , தன் கிளைக்கு இறுதி காட்டுவாள் 


பொருள்

எண் தகும் = எண்ணத் தகுந்த, பூஜிக்கத் தகுந்த

இமையவர் = கண் இமைக்காதவர்கள் (தேவர்கள்)

,'அரக்கர்  எங்கள் மேல் = அரக்கர்கள் எங்கள் மேல்

விண்டனர் = சண்டை செய்து எங்களை அடக்கி வைத்து இருக்கிறார்கள்

, விலக்குதி  = அதில் இருந்து எங்களை விலக்கி அருள் புரிவாய்

'என்ன  = என்று

 மேலை நாள் = முன்பொரு நாள்

அண்டசத்து =  பாம்பணை மேல் (முட்டையில் இருந்து வந்த பாம்பு)

அருந்துயில் = அரிய துயில்

துறந்த = விட்டு விட்ட

 ஐயனைக் = ஐயனை (விஷ்ணுவை)

கண்டனள்  = கண்டாள்

 தன் கிளைக்கு இறுதி காட்டுவாள்  = தன்னுடைய உறவினர்களுக்கு முடிவை தேடித் தரும்  சூர்ப்பனகை

கடவுள் அருகில் இருந்தாலும் அறிந்து கொள்ள முடியவில்லை.

குளத்தில் தாமரை இருக்கும். அதில் தேன் இருக்கும். அந்தக் குளத்தில் இருக்கும் தவளைக்கு தேன் பற்றி ஒன்றும் தெரியாது.

எங்கேயோ உள்ள காட்டில் இருந்து வந்த வண்டு அந்த தேனை சுவைக்கும்.

கடவுளோ, அறிவோ, அறிவுள்ளவர்களோ அருகில் இருந்தாலும் அரக்கர்களுக்கு அது தெரியாது.

தண்டாமரையின் உடன் பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம்
வண்டோ கானத்து இடைஇருந்து வந்தே கமல மதுவுண்ணும்
பண்டே பழகி இருந்தாலும் அறியார் புல்லோர் நல்லோரைக்
கண்டே களித்தங்கு உறவாடித் தம்மில் கலப்பார் கற்றாரே. 

(விவேக சிந்தாமணி)


அப்படி தெரியாமல் இருப்பவர்கள் அரக்கர்கள். நம்மில் எத்தனை அரக்கர்களோ...?

சூர்பனகைக்கு, இராமன் அருகில் இருந்தும் அவன் பரம்பொருள் என்று தெரியவில்லை. 

காரணம், காமம். 

காமம் அவள் கண்ணை மறைத்தது. 

இராவணனுக்குத் தெரியவில்லை. ஆணவம் அவன் கண்ணை மறைத்தது. 

வீடனுக்குத் தெரிந்தது. அது ஞானம். 

காமத்தையும், கோபத்தையும், அறிவீனத்தையும் வைத்துக் கொண்டு தேடினால், இறைவனே நேரில் வந்தாலும் தெரியாது என்று கம்பன் சொல்லித் தருகிறான்.

கண்ணைக் கட்டிக் கொண்டா தேடுவது?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_28.html




Wednesday, March 27, 2019

திருக்குறள் - மறத்திற்கும் அஃதே துணை

திருக்குறள் - மறத்திற்கும் அஃதே துணை


பிள்ளைகளை அடித்து வளர்க்கலாமா? பிள்ளைகளை திட்டலாமா?

ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கலாமா?

கணவன் மனைவி உறவில் ஒருவர் தவறு செய்தால் மற்றொருவர் அதை தட்டிக் கேட்கலாமா?

இதெல்லாம் கூடாது என்று ஒரு சாரார் கூறி வருகின்றனர். மேலை நாடுகளில் பிள்ளைகளை அடிப்பதோ, திட்டுவதோ சட்டப்படி குற்றம் என்று ஆகி விட்டது. அந்த கலாச்சாரம் மெல்ல இங்கும் பரவி வருகிறது. ஆசிரியர் , மாணவனை அடித்ததாலோ, சுடு சொல் கூறினாலோ அவர் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆகி விட்டது.

கோபமும், அதனால் வரும் கண்டிப்பும், சுடு சொல்லும், தவறா?

சில சமயம், நண்பர்களுக்குள் கருத்து வேறுபாடு வரலாம். ஒருவரை ஒருவர் கோபித்து பேசலாம் ..."ஏண்டா உனக்கு அறிவு இருக்கா..இப்படி சொல்கிறாயே/செய்கிறாயே" என்று கடிந்து சொல்லலாம்.


வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று கேட்போம்

பாடல்

அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார் 
மறத்திற்கும் அஃதே துணை 

பொருள்

அறத்திற்கே = அறத்திற்கே

அன்பு = அன்பு

சார்பு என்ப = சார்ந்தது என்று கூறுவார்

அறியார்  = அறியாதவர்கள்

மறத்திற்கும் = மறத்திற்கும்

 அஃதே துணை  = அதுவே (அந்த அன்பே) துணை

அறத்திற்கு மட்டும் அல்ல, மறத்திற்கும் அந்த அன்பே துணையாக நிற்கிறது.

இது ஒரு சிக்கலான குறள். இதற்கு பலர் பலவிதமான அர்த்தங்கள் கூறி இருக்கிறார்கள்.

நான் என் நோக்கில் எது சரி என்று கூற விழைகிறேன். ஏற்றுக் கொள்வதும், புறம் தள்ளுவதும் உங்கள் பாடு.

மறம் என்றால் என்ன? தீமை, கொடுமை, கடுமை என்று  பொருள் கொள்ளலாம். இதில் தீமை என்பதை விட்டு விடுவோம்.

கடுமை, கண்டிப்பு என்று பொருள் கொண்டால், அந்த கடுமை , கண்டிப்பு இவற்றிற்கும்  அன்பே காரணம் என்று ஆகும்.

ஒரு பெற்றோர் பிள்ளையை திட்டுகிறார்கள்/அடிக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அதற்கு காரணம் அவர்கள் அந்த பிள்ளை மேல் வைத்த அன்புதானே? என் பிள்ளை தவறான வழியில் போய் கெட்டு போய் விடக் கூடாதே, அவன் நல்லவனாக வல்லவனாக வர வேண்டுமே என்ற நல்ல எண்ணம் தானே அந்த கண்டிப்புக்கு பின்னால் இருப்பது? அவன் மேல் கொண்ட பாசம் தானே அந்த கோபத்துக்கு காரணம்.

அரிசினத்தால் ஈன்ற தாய் அகற்றிடினும்  மற்றவள் அருள் நினைத்தே அழும் குழவி அதுபோல இருந்தேனே என்பார் குலசேகர ஆழ்வார்


தருதுயரம் தடாயேலுன் சரணல்லால் சரணில்லை
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தா லீன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி அதுவேபோன் றிருந்தேனே



மறத்திற்கும் அன்பே காரணம்.

கையை அல்லது காலை வெட்டினால் தான் உயிர் பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூறினால், அது அவர் அந்த நோயாளி மேல் வைத்த அன்பின்றி வேறு என்ன. நோயாளியின் காலை வெட்டி அவர் என்ன சுகம் காணப் போகிறார். காலை வெட்டுதல் என்ற கொடுமையான செயலுக்கும் அன்பே காரணம்.

நண்பன் ஒருவன் புகை பிடித்து / தண்ணி அடித்து / எந்நேரம் பார்த்தாலும் whatsapp பார்த்து கெட்டுப் போகிறான் என்றால், அவனை கண்டித்து திருத்துவதும் அன்பின்பால் பட்டதே என்கிறார் வள்ளுவர்.

எனவே, அன்பு என்றால் எப்போதும் கண்ணே மணியே என்று கொஞ்சிக் கொண்டே இருப்பது மட்டும் அல்ல. கோபத்திற்கும் கண்டிப்புக்கும் அன்பே காரணம்.

எல்லா கோபத்துக்கும் அன்பு காரணமாக இருக்க முடியாது. ஆனால், அன்பினால் கோபமும் வெளிப்படலாம்.

இந்த விளக்கம் சரியாக இருக்கும் என்று உங்களுக்கு தோன்றுகிறதா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_27.html



Tuesday, March 26, 2019

கம்ப இராமாயணம் - வெய்யது ஓர் காரணம்

கம்ப இராமாயணம் - வெய்யது ஓர் காரணம் 


 கொடுமையான சூர்ப்பனகை இராகவன் இருக்கும் இடம் வந்தாள். இது ஒரு பெரிய விஷயம் என்று மெனக்கெட்டு கம்பன் ஒரு பாடல் எழுதுகிறான். காரணம் இல்லாமலா இருக்கும் ?

பாடல்

வெய்யது ஓர் காரணம் 
     உண்மை மேயினாள்,
வைகலும் தமியள் அவ் 
     வனத்து வைகுவாள், 
நொய்தின் இவ் உலகு எலாம் 
     நுழையும் நோன்மையாள்,- 
எய்தினள், இராகவன் 
     இருந்த சூழல்வாய்.

பொருள்


வெய்யது = கொடுமையான

ஓர் காரணம்  = ஒரு காரணம்

உண்மை மேயினாள் = உள்ளத்தில் கொண்டு சென்றாள்

வைகலும் = தினமும்

தமியள் = தனி ஆளாய்

அவ்  வனத்து = அந்த வனத்தில் , அந்த காட்டில்

வைகுவாள் = வாழ்வாள்

நொய்தின் = விரைவாக

இவ் உலகு எலாம் = இந்த உலகத்தின் அனைத்து இடங்களுக்கும்

நுழையும் நோன்மையாள்,-  = செல்லும் வலிமை பொருந்தியவன்

எய்தினள் = அடைந்தாள்

இராகவன் = இராமன்

இருந்த சூழல்வாய். = இருந்த இடத்துக்கு

வெய்யது - வெப்பம் நிறைந்தது, கொடுமையானது, சூடானது.

இராமன் காட்டுக்கு வருகிறான். மேல் உடை ஒன்றும் இல்லை. சூரியன் வெயில் அவன் மேல்   படுகிறது.  மேலாடை இல்லாமல் வெயிலில் போனால் எப்படி இருக்கும்.  கம்பன் பதறுகிறான். ஐயோ, இராமனுக்கு சுடுமே என்று.  கம்பனுக்கு  சூரியன் மேல் கோபம் வருகிறது.  சூரியனுக்கு ஆயிரம் பேர் இருக்கலாம்.  கம்பன், கோபத்தில், "வெய்யோன்" என்று சூரியனை சொல்லுகிறான்.

வெய்யோன் ஒளி தன் மேனியின்
     விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
     இளையானொடும் போனான் -
‘மையோ, மரகதமோ, மறி
     கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
     அழியா அழகு உடையான்.


இராமனின் மேனி ஒளியில், அந்த சூரியனின் ஒளி மழுங்கி விட்டதாம்.

வெய்யோன்.

"வெய்யது ஓர் காரணம்". அது என்ன காரணம்?

சூர்ப்பனகையின் கணவன் பெயர் வித்யுதசிவன். அவனை  இராவணன் கொன்று விட்டான். சூர்பனகைக்கு கோபம். இருக்காதா. எப்படியும் இந்த இராவணனை  பழி வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள்.


இங்கே ஒரு கணம் நிதானிப்போம்.

தங்கையின் கணவன் என்றும் பாராமல் அவனைக் கொன்றான் இராவணன்.

அண்ணன் என்றும் பாராமல் அவனை பழி வாங்க துடிக்கிறாள் சூர்ப்பனகை.

கோபம் - மன்னிக்காத குணம் - பழி வாங்கும் எண்ணம் - உறவுகளை மதிக்காத குணம்  ....இவை எல்லாம் தான் அரக்க குணம்.

அந்த அரக்க குணம் எப்படி அவர்கள் குலத்தையே அழித்தது என்று நமக்குத் தெரியும்.

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
இனம் எனும் ஏமப் புணையை சுடும்

என்பார் வள்ளுவர். சினம் என்பது அதைக் கொண்டவனை மட்டும் அல்ல, அவன் குடுமத்தை மட்டும் அல்ல, அவன் இனைத்தையே அழிக்கும் என்றார் வள்ளுவர்.

வள்ளுவன் வகுத்துத் தந்த அறத்தை உள்வாங்கி தன் காப்பியத்தில் சேர்கிறான் கம்பன்.

இராவணனின் சினம், சூர்ப்பனகையின் சினம் அரக்க குலத்தையே அழித்தது.

நமக்குள்ளும் அந்த அரக்க குணம் இருக்கலாம். கண்டு பிடித்து களைய வேண்டும்.

"உண்மை மேயினாள்" =  உள்ளத்தில் கொண்டு சென்றாள். தமிழில் உண்மை, வாய்மை,மெய்மை என்று மூன்று சொல் உண்டு. பார்க்க எல்லாம் ஒன்று போல் இருக்கும்.

மனிதன் மூன்று நிலைகளில் செயல்படுகிறான். மனம், மொழி, மெய் என்ற மூன்று  நிலைகளில் செயல்படுகிறான். மனோ, வாக்கு, காயம் என்பார்கள் வடமொழியில்.

மனம் (உள்ளம்) - உள்ளத்தில் இருந்து வருவது உண்மை
அது வாய் வழியாக வெளிப்படுவது வாய்மை
அதுவே செயல் வழியாக வெளிப்பதுவது மெய்மை

"உண்மை மேயினாள் " என்றால் உள்ளத்தில் கொண்டு சென்றாள் என்று அர்த்தம்.

ஒவ்வொரு வார்த்தையையும் கம்பன் தெரிந்து எடுத்துக் போடுகிறான்.

சூர்ப்பனகை ஏன் இப்படி ஒரு கொடிய அரக்கியாக ஆனாள்? என்றும் நாம் சிந்திக்கலாம்.

அது பற்றி மற்றொரு நாள் சிந்திப்போம்.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_26.html

Sunday, March 24, 2019

கம்ப இராமாயணம் - ஓர் இறுதி ஈட்டுவாள்

கம்ப இராமாயணம்  - ஓர் இறுதி ஈட்டுவாள் 




சூர்ப்பனகை வருகிறாள். எண்ணெய் கண்டிராத செம்பட்டை முடி. கொதிக்கும் உடம்பு. நல்லவர்கள் எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டும் குணம் கொண்டவள்.


பாடல்

செம் பராகம் படச் 
     செறிந்த கூந்தலாள், 
வெம்பு அராகம் தனி 
     விளைந்த மெய்யினாள், 
உம்பர் ஆனவர்க்கும், ஒண் 
     தவர்க்கும், ஓத நீர் 
இம்பர் ஆனவர்க்கும், ஓர் 
     இறுதி ஈட்டுவாள்,

பொருள்

செம் பராகம்  = செம்பு என்ற உலோகம் போல

படச் செறிந்த கூந்தலாள்,  = சிவந்த அடர்ந்த கூந்தலை கொண்டவள்

வெம்பு அராகம் = வெப்பம்

தனி  விளைந்த மெய்யினாள், =  தோன்றிய உடலை உடையவள்

உம்பர் ஆனவர்க்கும், = தேவர்களுக்கும்

ஒண் தவர்க்கும், = உயர்ந்த தவ சீலர்களுக்கும்

ஓத நீர் இம்பர் ஆனவர்க்கும், = கடல் சூழ்ந்த இந்த உலகில் உள்ளவர்களுக்கும்


ஓர் இறுதி ஈட்டுவாள்,= ஒரு முடிவு கட்டுவாள்

பெண் என்பவள் உயிரை உருவாக்குபவள். உயிரை காப்பவள். அதற்கு நேர் எதிர்மறையாக  சூர்பனகையை காட்டுகிறான் கம்பன்.உயிரை எடுப்பவளாக.

அவள் உடலில் காமம் மிகுந்து இருக்கிறது. எனவே, உடல் சூடாக இருக்கிறது.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_24.html

Saturday, March 23, 2019

கம்ப இராமாயணம் - உடன் உறை நோய்

கம்ப இராமாயணம் - உடன் உறை நோய்


ஒரு மனிதனின் வாழ்வில் பெண்ணின் பங்கு பெரும் பங்கு.

இராமாயணத்தை எடுத்துக் கொண்டால், பெண்கள்தான் காப்பியத்தை நடத்திக்
கொண்டு செல்கிறார்கள்.

கூனி தொடங்கி, கைகேயி, சூர்ப்பனகை என்று காப்பியத்தின் போக்கையே
திசை திருப்பியது பெண்கள்தான்.

கொஞ்ச நேரம் வந்து போகும் சபரி கூட தன் பங்கிற்கு இராமனை சுக்ரீவனிடம்
மடை மாற்றி விட்டுப் போகிறாள். காப்பியத்தின் போக்கு மாறிப் போகிறது.

சூர்ப்பனகை, இராவணனின் தங்கை. காட்டில், இராமன், இலக்குவன்,
மற்றும் சீதை இருக்கும் இடம் தேடி வருகிறாள்.

சூர்பனகையை அறிமுகம் செய்கிறான் கம்பன்.

ஒவ்வொரு மனிதனும் இறுதியில் இறப்பதற்கு ஒரு நோய் காரணமாக
இருக்கும். மாரடைப்பு, இரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி என்று
ஏதோ இரு நோய் காரணமாக இருக்கும். அந்த நோய்கள் அவன்
பிறந்த போதே அவன் உடம்பில் இருக்கும். அவன் தளரும் போது
நோய்கள் வலிமை பெற்று அவனை வீழ்த்தும்.

ஆனால், இராவணனின் உடல் வலிமை மிகப் பெரியது. நோய் கூட
அவன் கிட்ட வர அஞ்சுமாம். பின் நோயே இல்லாவிட்டால் ஒருவன்
எப்படித்தான் முடிவை அடைவது?

நோய் எப்படி கூடவே பிறந்து ஒருவனை அழிக்குமோ, அது போல
இராவணனின் உடன் பிறந்தாள் சூர்ப்பனகை. பிறந்து அவனை அடியோடு
அழித்தாள். உடன் பிறந்தே கொல்லும் நோய் போன்றவள் என்றான் கம்பன்.

பாடல்


நீல மா மணி நிற
     நிருதர் வேந்தனை
மூல நாசம் பெற முடிக்கும்
     மொய்ம்பினாள்,
மேலைநாள் உயிரொடும்
     பிறந்து, தான் விளை
காலம் ஓர்ந்து, உடன் உறை கடிய
     நோய் அனாள்,


பொருள்

நீல மா மணி = நீல நிறம் கொண்ட பெரிய மணியைப் போல

நிற = நிறத்தைக் கொண்ட

நிருதர் வேந்தனை = இராவணனை

மூல நாசம் பெற முடிக்கும் = அடியோடு நாசம் செய்ய

மொய்ம்பினாள், = சூழ்ச்சியினால் அழிக்கும் ஆற்றல்  கொண்ட

மேலைநாள் = முன்பு

உயிரொடும் பிறந்து = உயிர் பிறக்கும் போதே உடன் பிறந்து

தான் விளை காலம் ஓர்ந்து, = தான் (நோய் ) விளையக் கூடிய காலம் எது
என்று அறிந்து


 உடன் உறை = கூடவே இருக்கும்

கடிய  = கொடுமையான, வலிமையான

நோய் அனாள், = நோய் போன்றவள்

இராவணன், நோயால் இறக்கவில்லை. உடன் பிறந்த சகோதரியால் இறந்தான்.

அப்படி, கதையாக அதை படித்து இரசித்து விட்டும் போகலாம்.

கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தால் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினையும் கிடைக்கலாம்.

உடன் பிறந்தால் மட்டும், நெருங்கி இருந்தால் மட்டும் மற்றவர்கள் நமக்கு
நல்லது செய்வார்கள் என்று நினைக்க முடியாது.


கூடவே பிறந்து கொல்லும் நோயும் உண்டு. எங்கோ உள்ள மலையில் உள்ள மூலிகை நோய் தீர்த்து உடலுக்கு இன்பம் சேர்ப்பதும் உண்டு என்பாள் ஒளவை.



உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா
உடன் பிறந்தே கொல்லும் வியாதி-உடன் பிறவா
மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்
அம் மருந்து போல் வாரும் உண்டு.


நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவினர்கள் என்று யாரையும் பெரிதாக நினைக்க வேண்டாம். நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள், தெரியாதவர்கள் என்று  யாரையும் தள்ளவும் வேண்டாம்.

கூடவே இருந்தாலும், தீமை செய்பவர்களும் உண்டு. முன் பின் தெரியாதவர்களாக இருந்தாலும் நன்மை செய்பவர்களும் உண்டு.

ஏமாந்து போகக் கூடாது.


நன்மையும் தீமையும் எங்கிருந்து வரும் என்று தெரியாது.

அறிவை தீட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_23.html

Friday, March 22, 2019

கம்ப இராமாயணம் - உடன் உறை கடிய நோய்

கம்ப இராமாயணம் - உடன் உறை கடிய நோய் 


இராமாயணத்தில் கொஞ்சம் "அட" என்று நம்மை ஆச்சரியத்தோடு நிமிர்ந்து உட்கார வைக்கும் இடம் சூர்ப்பனகை படலம்.

இராமனின் முற்றிலுமாக ஒரு வித்தியாசமான முகத்தை இங்கு காண முடிகிறது.

இராமனா, இப்படி பேசினான் என்று நம்மை ஆச்சரியப் படவைக்கும் இடம்.

அவன் செய்கை நம் முகத்தில் புன்னகையை வரவழைக்கும்.

எங்கோ தூரத்தில் இருந்த அவனை, நம் அளவுக்கு கொண்டு வந்து காட்டும் இடம்.

கொஞ்சம் கிண்டல், நக்கல், நையாண்டி, சீண்டல் என்று இராமன் மானுடனாய், நம்மில் ஒருவனாய் காட்சி அளிக்கும் இடம் இது.

அவற்றை,இனி  வரும் நாட்களில் சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_99.html


திருக்குறள் - எண்ணியாங்கு எய்துப

திருக்குறள் - எண்ணியாங்கு எய்துப


ஆசைப்பட்டதெல்லாம் கிடைத்து விட்டால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருக்கும்.

அப்படி கிடைக்க என்ன வழி?

நாமும் தான் எவ்வளவோ ஆசைப்படுகிறோம். பணம், பொருள், செல்வம், புகழ், ஆரோக்கியம், அன்பு, நட்பு, உறவு என்று ஏதேதோ வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். எங்கே கிடைக்கிறது?

வள்ளுவர் சொல்கிறார், "நீ ஆசைப்பட்டது எல்லாம் உனக்குக் கிடைக்க ஒரு வழி இருக்கிறது.  நீ எண்ணியதை , எண்ணியபடியே அடைவாய், நீ உறுதியானவனாய் இருந்தால் "

பாடல்


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்


பொருள்

எண்ணிய = எண்ணியவற்றை

எண்ணியாங்கு = எண்ணியபடியே

எய்துப  = அடைவார்

எண்ணியார் = எண்ணியவர்கள்

திண்ணியர் = உறுதியானவர்களாய்

ஆகப் பெறின் = இருக்கப் பெற்றால்

சும்மா, இதெல்லாம் கதை. ஏதேதோ வேண்டும் என்று எவ்வளவு உறுதியாக ஆசைப் பட்டோம். எங்கே கிடைத்தது? வள்ளுவர் ஏதோ சும்மா சொல்லிவிட்டுப் போகிறார். இதெல்லாம் நடக்கிற காரியமா என்ற சந்தேகம் எழலாம்.

கொஞ்சம் விரித்துப் பார்ப்போம்.  வள்ளுவர் சொல்லுவது சரியா இல்லையா என்ற முடிவை, இறுதியில், உங்களிடமே விட்டு விடுகிறேன். என்ன சரியா ?


முதலாவது, வள்ளுவர் ஏன் தேவை இல்லாமல் ஒரு வார்த்தையை போடுகிறார்? 

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்பதில் "எண்ணியாங்கு" என்ற வார்த்தை எதற்கு? 

எண்ணிய  எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்

என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே. எண்ணியவர்கள் உறுதி உள்ளவர்களாக இருந்தால், அவர்கள் எண்ணியது கிடைக்கும் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ? எதற்கு அந்த "எண்ணியாங்கு" என்ற வார்த்தை?

அதில்தான் இருக்கிறது இரகசியம்.

"எண்ணிய படியே" அடைவர்.

அப்படி என்றால் நம் எண்ணம் தெளிவாக இருக்க வேண்டும்.

உதாரணமாக, "நிறைய பணம் வேண்டும், பெரிய செல்வந்தனாக வேண்டும்" என்று நினைத்தால் நடக்காது. ஏன் ? நிறைய பணம், பெரிய செல்வந்தன் என்றால் என்ன ? எவ்வளவு பணம் இருந்தால் "நிறைய" பணம்?  ஒரு பத்து ரூபாய், நூறு ரூபாய், இலட்ச ரூபாய், கோடி ரூபாய்?

ஒரு வீடு, நாலு காரு, ஒரு தோட்டம், இவ்வளவு fxied டெபாசிட் என்று ஒரு தெளிவான எண்ணம் வேண்டும்.

"சிறந்த கல்விமானாக வேண்டும்" என்று நினைத்தால் நடக்காது. பட்டப் படிப்பு, உயர்நிலை, முனைவர் (doctorate ) என்று ஒரு தெளிவான குறிக்கோள் வேண்டும். 

"நல்ல பாடகனாக வேண்டும்" என்று நினைத்தால் போதாதது. கர்நாடக சங்கீதத்தில், இந்தியா அளவில் பல ஊர்களில் பாடி, இன்ன இன்ன பரிசில்களை பெற வேண்டும், இன்ன இன்ன பட்டங்களை பெற வேண்டும் என்ற  தெளிவான குறிக்கோள் வேண்டும். 

ஏன் அப்படி ஒரு குறிக்கோள் வேண்டும் என்று பின்னே சொல்லுகிறேன். 

முதலில் வரையறுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது. 

ஒரு காகிதத்தில் எழுதுங்கள். 

"என் கணவன்/மனைவி என்னிடம் அன்பாக இருக்க வேண்டும்" என்று நினைத்தால் போதாது. 

உங்களுக்கு வேண்டிய அன்பு என்றால் என்ன என்று தெளிவாக சொல்லுங்கள். 

"என் கணவன் என்னை மாதம் ஒரு முறை சினிமாவுக்கு கூட்டிப் போக வேண்டும், வருடத்துக்கு நாலு பட்டுச் சேலை வாங்கித் தர வேண்டும், வாரம் ஒரு நாள் சமயலில் இருந்து விடுதலை வேண்டும் ...." இப்படி ஒரு தெளிவான பட்டியலை போட்டுக் கொள்ளுங்கள்.  அன்பாய் இல்லை, அன்பாய் இல்லை என்று  அனத்தக் கூடாது. அன்பு என்றால் உங்கள் அகராதியில் என்ன என்று எழுதுங்கள். 

"பிள்ளை சரியாக படிக்க மாட்டேன் என்கிறான்" என்று சொன்னால், நீங்கள் வேண்டுவது என்ன என்பது தெளிவாக இல்லை. குறை சொல்லிக் கொண்டே இருந்தால்  அது தான் கிடைக்கும். கணவன்/மனைவி அன்பு செய்யவில்லை என்று குறை சொன்னால், நீங்கள் குறை சொல்லுவதியிலேயே குறியாக இருக்கிறீர்கள். உங்கள் மனம் எல்லாம் குறையை சுற்றியே வருகிறது. குறையே சொல்லிக் கொண்டு இருந்தால் அது தான் கிடைக்கும். மாறாக, "என் பிள்ளை வகுப்பில் முதலாவதாக வர வேண்டும் " என்று நினையுங்கள். 

நினைத்தால் நடந்து விடுமா ? சும்மா நினைத்தால் போதுமா ?

இல்லை, அடுத்தது சொல்லுகிறார் வள்ளுவர். 


"திண்ணியர் ஆகப் பெறின் "

அது என்ன திண்ணியர்? நிறைய தின்னச் சொல்லுகிறாரா ?

திண்ணியர் என்றால் உறுதியானவராக இருக்க வேண்டும்.

உறுதி என்றால் மன உறுதி, செயலில் உறுதி, உடலில் உறுதி. 

சும்மா கனவு கண்டுகொண்டு, சாப்பிட்டு சாப்பிட்டு தூங்கினால் எண்ணிய படி ஒன்றும்  நடக்காது.

எதை அடைய வேண்டுமோ, அதில் மன உறுதி வேண்டும். 

அதை செயல் படுத்துவதில், செயலில் உறுதி வேண்டும். 

செய்யும் உடலுக்கு உறுதி வேண்டும். 

சில பேர், உடல் எடை குறைய வேண்டும் என்று உடற் பயிற்சி தொடங்குவார்கள், உணவு கட்டுப்பாடு கொள்ள வேண்டும் நினைப்பார்கள். அப்படி  நினைத்த சில நாட்களில், ஏதாவது கல்யாணம், பிறந்த நாள் என்று ஒரு  விஷேசம் வரும். இனிப்பு, ஐஸ் கிரீம் என்று ஒரு கட்டு கட்டிவிடுவார்கள். மனதில் உறுதி  இல்லை.

இன்னும் சிலர் செயலில் இறங்குவார்கள். எதிர்ப்பு வரும், தோல்வி வரும்...இது நமக்கு  சரி வராது என்று விட்டு விடுவார்கள். விடா முயற்சி இல்லை. 

எந்த செயலுக்கும் கடின உழைப்பு வேண்டும். உழைக்காமல், வேலை செய்யாமல்  ஒன்றும் கிடைக்காது. அதைச் செய்ய சோம்பல் இல்லாமல் உழைக்க வேண்டும். அதற்கு உறுதியான உடல் வேண்டும். 

மனமும், உடலும், செயலும் உறுதியாகச் செயல்பட்டால், எண்ணியதை எண்ணியபடியே அடையலாம்.

"எண்ணியாங்கு" என்பதற்கு பின்னால் விளக்கம் சொல்லுகிறேன் என்று சொல்லி இருந்தேன்..

நம் எண்ணங்கள் மிக மக தெளிவாக இருந்தால் தான் திட்டம் இட முடியும். 

"என் மனைவி என் மேல் அன்பாக இருக்க வேண்டும்" என்று நினைத்தால் அதில் நாம்   செயல் பட ஒன்றும் இல்லை. 

மாறாக "என் மனைவி என் வேலைப் பளுவை புரிந்து கொள்ள வேண்டும்,  என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய வேண்டும், எனக்கு பிடித்த  பண்டங்கள் செய்து தர வேண்டும்,  எப்போது நை நை என்று அரிக்கக் கூடாது " என்று தெளிவான தேவைகள் இருந்தால் அதை செயல்படுத்த முடியும். 

அவளிடம் பேசலாம். வேலைப் பளுவை பற்றி விளக்கலாம். என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று   விளக்கிச் சொல்லலாம். இவற்றை எல்லாம் அவள் செய்ய  வேண்டும் என்றால், அவளுக்கென்று சில தேவைகள் இருக்கும். அவள் அவற்றை உங்களிடம்  சொல்லலாம். பரஸ்பரம் , நீ இதைச் செய், நான் அதைச் செய்கிறேன்  என்று புரிந்து கொண்டு பகிர்ந்து வாழலாம். 

இப்படி எந்த ஒரு துறையிலும், எது தேவை என்று தெளிவாக வரையறுத்தால், அதை அடைய என்ன   செய்ய வேண்டும் அறிந்து கொண்டு செய்யலாம்.

இன்னொரு உதாரணம்.

எனக்கு 1000 கோடி ரூபாய் சொத்து வேண்டும் என்று நினைத்தால் அதையும் அடையலாம். 

இப்போது எவ்வளவு இருக்கிறது. 1000 கோடி ரூபாய் எப்போது வேண்டும். அப்படி என்றால்  இந்த இடைப்பட்ட நேரத்தில் வருடத்துக்கு எவ்வளவு சம்பாதிக்க வேண்டும். அப்படி யாராவது சம்பாதிக்கிறார்களா ? அவர்கள் எப்படி   அப்படி சம்பாதிக்கிறார்கள். நாம் அவ்வாறு சம்பாதிக்க என்ன செய்ய வேண்டும்   என்றெல்லாம் சிந்திக்கலாம். அப்போது, அந்த இலக்கை அடைய எவ்வளவு  உழைப்பு தேவைப் படும் என்று கணக்கு போடலாம். நம்மால்  அந்த அளவு உழைக்க முடியுமா என்று சிந்திக்க வேண்டும். முடியாது என்றால், 1000 கோடி என்பதை 100 கோடியாக்கி , அதன் பின் 300 கோடி, 500 கோடி, 1000 கோடி என்று படிப்படியாக முன்னேறலாம். 

பள்ளியில் முதலாவதாக வர வேண்டுமா, ஒரு நாளைக்கு 5 மணி நேரம் படிக்க வேண்டும். முடியுமா ? உறுதியாக (திண்ணியர்) செய்ய முடியுமா ? 

இலக்கு தெளிவானால், அதை அடையும் வழி தெரியும். வழி தெரிந்தால், பின் என்ன  நடக்க வேண்டியதுதானே. இன்றில்லாவிட்டால், நாளை இலக்கை அடைந்தே தீருவீர்கள்.

இப்போது சொல்லுங்கள், வள்ளுவர் சொன்னது சரிதானா என்று. 

(வாசகர்கள் மன்னிக்க. blog சற்று நீண்டு விட்டது)

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_22.html

Wednesday, March 20, 2019

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல

குறுந்தொகை - செம்புலப் பெயனீர் போல 


எங்கேயோ பிறந்து, வளர்ந்த இருவர் திருமணம் செய்து கொள்கிறார்கள். முன்ன பின்ன தெரியாது. காதலித்து திருமணம் செய்தாலும் அதே நிலை தான். என்ன திருமணத்துக்கு முன் சில காலம் காதலித்து இருக்கலாம். அதற்க்கு முன் அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்ததே இல்லை.

இப்படி இந்த உறவு சாத்தியமாகிறது ?

கணவனுக்காக, மனைவி உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்கிறாள். மனைவியை காப்பாற்ற கணவன் வாழ்நாள் எல்லாம் பாடு படுகிறான். எப்படி இது முடிகிறது?

திருமணம் ஆனவுடன் எங்கிருந்து இந்த அன்பும், கற்பும், அக்கறையும், கரிசனமும் வந்து விடுகிறது?

ஆச்சரியமாக இல்லை?

அவர்களுக்குள் காதல். ஒருவர் மேல் மற்றொருவர் உயிரையே வைத்து இருந்தனர். இருந்தாலும், அவன் அடிக்கடி வெளியூர் போக வேண்டிய நிர்பந்தம். அவளை விட்டு விட்டுப் போய் வருகிறான். அவன் பிரிவு ஒரு பக்கம். இன்னொரு பக்கம், ஒரு வேளை அவனுக்கு நம்மை பிடிக்கவில்லையோ, நம்மை மறந்து விடுவானோ, வேறு யார் மேலும் அவனுக்கு அன்பு இருக்கிறதோ என்ற பெண்மைக்கே உண்டான சந்தேகம் அவளுக்குள் எழுகிறது.

அவனிடம் கேட்டேவிட்டாள். "என் மேல் உனக்கு உண்மையிலேயே அன்பு இருக்கிறாதா? என்னை கை விட்டு விடுவாயா ? " என்று கேட்டாள்.

அவன் பதறிப் போனான்.

அவளுக்கு ஆறுதல் கூறுகிறான்

"உன் தாயும், என் தாயும் யாரோ எவரோ. உன் தந்தையும் என் தந்தையும் எந்த விதத்தில் உறவு? ஒரு உறவும் இல்லை. சரி அதாவது போகட்டும், நீயும் நானும் எந்த விதத்தில் ஒன்று பட்டவர்கள். ஒன்றும் இல்லை. இருந்தும் செம்மண் நிலத்தில் பெய்த மழை நீரும், அந்த செம்மண்ணும் எப்படி ஒன்றோடு ஒன்று கலந்து விடுகிறதோ அது போல கலந்து விட்டோம். இனிமேல் நமக்குள் பிரிவு என்பதே இல்லை "

பாடல்




யாயு ஞாயும் யாரா கியரோ 
எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர்
யானு நீயு மெவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சந் தாங்கலந் தனவே. 


பொருள்


யாயு ஞாயும் = உன் தாயும், என் தாயும்

யாரா கியரோ  = யாரோ எவரோ

எந்தையு = என் தந்தையும்

நுந்தையு  = நுன் (=உன்) தந்தையும்

மெம்முறைக் = எந்த முறையில்

கேளிர் = உறவு ?

யானு = நானும்

நீயு = நீயும்

மெவ்வழி யறிதும் = எந்த வழியில் ஒன்று பட்டவர்கள் ? நான் அறிய மாட்டேன்

செம்புலப் = சிவந்த மண்ணில்

பெயனீர் = பெய்த நீர் (மழை)

போல = போல

அன்புடை  = அன்புள்ள

நெஞ்சந்  தாங் = நெஞ்சம் தான்

கலந் தனவே. = கலந்தனவே

கேள் என்றால் உறவினர்.

இராமயணத்தில், கங்கை ஆற்றை கடந்து செல்ல வேண்டும். இராமனும், இலக்குவனும், சீதையும் தயாராகி விட்டார்கள். குகனுக்கு அவர்களை விட்டு பிரிய மனம் இல்லை. "நானும் உங்களுடனேயே வருகிறேன்" என்று அடம் பிடிக்கிறான்.

அவனை சமாதனம் சொல்லி இருக்கப் பண்ணுகிறான் இராமன்.

"நீ இந்த கடற் கரைக்கு அரசன். நீ தான் இந்த குடி மக்களை பாதுக்காக வேண்டும். இந்த சீதை இருக்கிறாளே அவள் உன் உறவினள். நான் உன் அரசுக்கு கட்டுப் பட்டு இருக்கிறேன்.


அன்னவன் உரை கேளா,
    அமலனும் உரை நேர்வான்,
என் உயிர் அனையாய் நீ;
    இளவல் உன் இளையான்; இந்
நல் நுதலவள் நின் கேள்;
    நளிர் கடல் நிலம் எல்லாம்
உன்னுடையது; நான் உன்
    தொழில் உரிமையின் உள்ளேன் 

"நல் நுதல் அவள் நின் கேள்"....அழகிய நெற்றியை உடைய சீதை உன் உறவினள் என்கிறான் இராமன். 

கேள் என்றால் உறவு.

மீண்டும் குறுந்தொகைக்குப் போவோம். 

"என்னை விட்டு பிரிந்து விடுவாயா " என்று கேட்ட அவளுக்கு அவன் சொன்ன பதில், நாம் ஒருவரோடு ஒருவர் கலந்து விட்டோம். இனி பிரிவென்பது ஏது என்பதுதான்.

பெண்ணின் ஏக்கம், பயம், சந்தேகம், காதல், கவலை என்று அனைத்தையும் ஒன்றாக கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் பாடல். அவள் சொல்வதாக ஒன்றுமே இல்லை இந்தப் பாடலில். இருந்தும், நீர் ததும்பும் அவள் விழிகளை, துடிக்கும் அவள் இதழ்களை, விம்மும் அவள் நெஞ்சை நாம் உணர முடிகிறது அல்லவா.

Tuesday, March 19, 2019

திருவானைக்கா அகிலாண்ட நாயகி - பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான்

திருவானைக்கா அகிலாண்ட நாயகி - பித்தன் என்று ஒரு பெயர் பெற்றான் 


நமக்கு யாரை எங்கே வைப்பது என்று தெரியவில்லை. முன் பின் தெரியாத பேருக்கு விழுந்து விழுந்து உதவி செய்வோம். கட்டிய கணவன் / மனைவிக்கு ஒன்றும் செய்ய மாட்டோம். அறிமுகம் இல்லாதவர்கள் செய்த சின்ன உதவிக்குக் கூட நன்றி செல்வோம். பெற்றோருக்கு, ஆசிரியருக்கு, உயிர் காத்த மருத்துவருக்கு எல்லாம் ஒன்றும் நன்றி சொல்ல மாட்டோம்.

இந்த சிக்கல் நமக்கு மட்டும் அல்ல. சிவபெருமானுக்கே இருந்திருக்கிறது.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் , திருவானைக்கா அகிலாண்ட நாயகி மேல் பாடிய பாடல் ஒன்று.

"நாம் தண்ணீரில் விழுந்து விட்டால், நீச்சல் தெரியாவிட்டால், மூன்று முறை மேலே வருவோம், அதற்குள் எப்படியாவது கரை ஏற முடியவில்லை என்றால், மூழ்கிவிடுவோம். நீர் மூன்று முறை தான் பிழை பொறுக்கும் என்று சொல்லுவார்கள்.

ஒரு தாய் தன் பிள்ளை எத்தனை முறை தவறு செய்தாலும் பொறுப்பாள்.

அகிலாண்ட நாயகியே, அளவற்ற பிழைகள் பொறுக்கும் உன்னை உடம்பில் பாதியில் வைத்தான். மூன்றே பிழைகள் பொறுக்கும் கங்கையை தலையில் வைத்துக் கொண்டு ஆடுகிறான். அவனை பித்தன் என்று சொல்லியது ஒன்றும் பிழை இல்லை "

என்று பாடுகிறார்.

தேன் சிந்தும் அந்தப் பாடல்


பாடல்


அளவறு பிழைகள் பொறுத்திடும் நின்னை
அணிஉருப் பாதியில் வைத்துத்
தளர்பிழை மூன்றே பொறுப்பவள் தன்னைச்
சடைமுடி வைத்தனன்; அதனால்
பிளவியல் மதியம் சூடிய பெருமான்
‘பித்தன்’ என்று ஒரு பெயர் பெற்றான்!
களமர் மொய் கழனி சூழ் திரு ஆனைக்கா
அகிலாண்ட நாயகியே!

பொருள்

அளவறு = அளவற்ற

பிழைகள் = தவறுகளை

பொறுத்திடும் நின்னை = பொறுத்துக் கொள்ளும் உன்னை (உமா தேவி)

அணி = அழகிய

உருப் = உருவத்தில்

 பாதியில் வைத்துத் = பாதியில் வைத்து

தளர் பிழை = தளரும் பிழைகள்

மூன்றே பொறுப்பவள் தன்னைச் = மூன்று முறை மட்டும் பொறுப்பவளை

சடைமுடி வைத்தனன்;  = சடை முடியின் மேல் வைத்துக் கொள்கிறான்

அதனால் = அதனால்

பிளவியல் = பிளந்தது போல உள்ள

மதியம் சூடிய பெருமான் = நிலவை சூடிய பெருமான்

‘பித்தன்’ என்று ஒரு பெயர் பெற்றான்! = பித்தன் என்று ஒரு பெயரைப் பெற்றான்

களமர் = களத்தில் வாழ்பவர்கள் (விவசாயிகள்)

மொய் = மொய்க்கும்

கழனி சூழ் = கழனிகள் சூழ்ந்திருக்கும்

திரு ஆனைக்கா = திருவானைக்காவில் இருக்கும்

அகிலாண்ட நாயகியே! = அகிலாண்ட நாயகியே


பிழை பொறுப்பது என்பது நல்ல குணம். அகிலாண்ட நாயகி அளவற்ற பிழைகளை பொறுப்பாளாம்.

நாம், நமக்கு வேண்டியவர்கள் செய்த சிறு பிழையையாவது பொறுப்போமே.


https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_19.html

Wednesday, March 13, 2019

திருக்கோவையார் - நீ வைத்த அன்பினுக்கே

திருக்கோவையார்  - நீ வைத்த அன்பினுக்கே 



முதலிலேயே சொல்லி விடுகிறேன்...திருக்கோவையார் மாணிக்க வாசகர் அருளிச் செய்தது.

அவனுக்கு அவள் மேல் அப்படி ஒரு காதல். ஆனால் அதை அவளிடம் சொல்ல முடியவில்லை. ஏதேதோ காரணம். சாதி ஒரு காரணமாக இருக்கலாம். சமுதாய அந்தஸ்து ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது அவள் மிக மிக அழகாகவும், அவன் ரொம்ப சுமாராகவும் இருக்கலாம்.

இருந்தும், அவனால் அவள் மேல் கொண்ட காதலை விட முடியவில்லை.  சொல்லவும் முடியவில்லை. தொண்டையில் சிக்கிய முள்ளாக மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் ஒரு சங்கடம்.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப் பட்டது போல என்று சொல்லுவார்களே அது போல. முடியாது என்று தெரிந்தும் ,ஆசை விடவில்லை.

தன் வேதனையை யாரிடம் சொல்லுவான்? தன் நெஞ்சிடம் சொல்லுகிறான்..."ஏய் நெஞ்சே, அவளை காதலித்தது நீ. அவளை விட்டு உன்னால் எப்படித்தான் பிரிந்து இருக்க முடிகிறதோ தெரியவில்லை. என்னால் முடியவில்லை. நீ வேணும்னா இந்த துக்கத்தை பொறுத்துக் கொண்டு இரு. என்னால் முடியாது...செத்து போயிருவேன் போல இருக்கு " என்று புலம்புகிறான்.

பாடல்

மாற்றே னெனவந்த காலனை
யோல மிடஅடர்த்த
கோற்றேன் குளிர்தில்லைக் கூத்தன்
கொடுங்குன்றின் நீள்குடுமி
மேற்றேன் விரும்பு முடவனைப்
போல மெலியுநெஞ்சே
ஆற்றே னரிய அரிவைக்கு
நீவைத்த அன்பினுக்கே. 

பொருள்


மாற்றே னென = மாற்றேன் என

வந்த காலனை = வந்த காலனை (எமனை)

யோல மிட  = ஓலம் இட (அலறிட)

அடர்த்த = சண்டை போட்ட

கோற்றேன் = கோ என் , என் தலைவன்

குளிர்தில்லைக் கூத்தன் = குளிர்ந்த தில்லையம்பதியில் ஆடும் கூத்தன்

கொடுங்குன்றின் = பெரிய மலையின்

நீள்குடுமி = நீண்ட உச்சியில்

மேற்றேன் = மேல் தேன் , மேலே உள்ள தேனை. மலை உச்சியில் உள்ள தேனை

விரும்பு முடவனைப் = விரும்பும் முடவனைப்

போல  = போல

மெலியுநெஞ்சே = வருந்தும் என் நெஞ்சே

ஆற்றே னரிய = ஆற்றேன், (பொறுத்துக் கொள்ள மாட்டேன்) அரிய (சிறந்த)

அரிவைக்கு = பெண்ணுக்கு

நீவைத்த அன்பினுக்கே = நீ வைத்த அன்பினுக்கே


" மாற்றேன் என வந்த காலனை "....முடிவு காலம் வந்து விட்டால், என்ன கதறி அழுது புரண்டாலும்   அதை மாற்ற மாட்டான் அந்த காலன் . காலம் முடிந்து விட்டால்  உயிரை கொண்டு போய் விடுவான்.

"மேல் தேன் விரும்பும் முடவனை "....முடவனுக்கு மலை உச்சியில் உள்ள தேன் மீது ஆசை.  கையும் இல்லை, காலும் இல்லை. எப்படி அடைவது. பார்த்து ஏங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஆற்றேன் ...என்னால் பொறுக்க முடியவில்லை. நெஞ்சே என்னால் பொறுக்க முடியவில்லை. நீ வேண்டுமானால் பொறுத்துக் கொண்டிரு. என்னால் முடியாது  என்பது பொருள்.

"நீ வைத்த அன்பினுக்கே" ...அவள் மேல் நானா அன்பு வைத்தேன். நெஞ்சே, நீ தானே  அன்பு வைத்தாய்.

காதலின் வேதனையை வெளிப்படுத்தும் பாடல்.

திருக்கோவையார் ...மீண்டும் ஒரு முறை சொல்லுகிறேன்...எழுதியவர் மாணிக்க வாசக ஸ்வாமிகள்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_13.html

Tuesday, March 12, 2019

திருக்குறள் - புகழோடு தோன்றுக

திருக்குறள் - புகழோடு தோன்றுக 


பாடல்

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

பொருள்

தோன்றின் = தோன்றினால்

புகழொடு = புகழோடு

தோன்றுக = தோன்ற வேண்டும்

அஃதிலார் = அப்படி இல்லாவிட்டால்

தோன்றலின் = தோன்றுவதை விட

தோன்றாமை நன்று = தோன்றாமல் இருப்பதுவே நன்று

இந்தக் குறளும் அதன் பொருளும் யாருக்குத்தான் தெரியாது. மிக எளிமையான குறள். கடினமான வார்த்தை ஒன்று கூட இல்லை.

அப்படி நினைத்து, இந்த குறளை கடந்து போய் விடக் கூடாது.

வள்ளுவர் பொதுவாகவே சொற் சிக்கனம் உள்ளவர்.

இந்த ஒரு குறளில் "தோன்றின்" , "தோன்றுக", "தோன்றலின்", "தோன்றாமை" என  நாலு தடவை ஒரே வார்த்தையை கையாளுகிறார். இருக்கிற ஏழு வார்த்தைகளில் நாலு வார்த்தை  ஒரே சொல்லுக்குப் போய் விடுகிறது என்றால் அது எவ்வளவு முக்கியமான வார்த்தையாக இருக்க வேண்டும் ?

எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் வரும்படி செய்ய வேண்டும். இல்லை என்றால் அதைச் செய்யாமல் இருப்பதே நல்லது.


ஒரு மாணவன் பள்ளிக்கு அல்லது கல்லூரிக்குச் செல்கிறான் என்றால், பள்ளியிலேயே அல்லது  கல்லூரியிலேயே முதலாவது வர வேண்டும். அதுதான் புகழ்.  நாலாவது, ஐந்தாவதாக வந்தால் யாருக்கும் தெரியாது.

ஓடினால் , ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும். அது தான் புகழ்.

பாடினால், grammy award வாங்க வேண்டும். அது புகழ்.

நானும் கல்லூரிக்குப் போனேன், நானும் பாட்டு கற்றுக் கொள்கிறேன், நானும் ஓடுகிறேன் என்று இருக்கக் கூடாது.

எந்த வேலையை செய்தாலும் அதில் புகழ் தோன்றும் படி செய்ய வேண்டும்.

"தோன்றுதல்"

நிறைய பேருக்கு திறமை இருக்கும். கடின உழைப்பு இருக்கும். அதை சரியான படி வெளிப்படுத்தத் தெரியாது.

உள்நாட்டில் வேலை செய்வதை விட, அயல் நாட்டில் சென்று வேலை செய்தால்  பல மடங்கு ஊதியம் கிடைக்கும். நல்ல பேர் கிடைக்கும். "ஐயோ, அயல் நாடா...? சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா " என்று குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்தால் புகழ் வெளிப்படாது. புகழ் "தோன்றாது".

இன்னும் சில பேர் மாங்கு மாங்கு என்று வேலை செய்வார்கள். ஆனால், ஒரு மதிப்பும், மரியாதையும், பதவி உயர்வும் இருக்காது. காரணம், தாங்கள் செய்ததை  சரியான படி வெளிச்சம் போட்டுக் காட்டத் தெரியாது.

தோன்றுதல் என்றால் வெளிப்படுதல் என்று பொருள்.  நம் திறமையை, அறிவை சரியான  படி வெளிப்படுத்தத் தெரிய வேண்டும். திறமை இருந்தால் மட்டும் போதாது. நல்ல இசை ஞானம் இருந்து என்ன பலன், குளியல் அரையைத் தவிர  வேறு எங்கும் பாட மாட்டேன் என்றால் ?

நாலு பேர் முன்னால் பாடிக் காட்ட வேண்டும்.

ஒரு வேலையை செய்யத் தொடங்கும்முன், அதில் இதுவரை சாதிக்கப்பட்டது என்ன, யார் சாதித்தார்கள், எப்போது சாதித்தார்கள் என்று அறிந்து கொள்ள வேண்டும். அதை விட பெரிதாக என்ன செய்ய முடியும் என்று சிந்திக்க வேண்டும். அப்படி பெரிதாக செய்ய வேண்டும் என்றால் எப்படி செய்வது, அதற்கு என்ன பயிற்சி வேண்டும், யாருடைய உதவி தேவைப்படும் என்றெல்லாம் சிந்திக்க வேண்டும்.

இதுவரை சாதிக்காதவற்றை நாம் எவ்வாறு சாதிப்பது என்று சிந்தித்து செயல்பட வேண்டும்.

அப்படி சாதிக்க முடியும் என்றால், அந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லை என்றால்  அந்த வேலையைத் தொடக் கூடாது.

நானும் வேலைக்குப் போகிறேன், நானும் கல்லூரிக்குப் போகிறேன், என்று இருக்கக் கூடாது.

நாம், எப்போதும் நம் திறமையை அதிகமாக எண்ணிக் கொள்வோம். என்னைப் போல் யார் உண்டு என்று நினைப்போம்.

நம் திறமை வெளிப்பட்டால்தான் தெரியும் அது எவ்வளவு உயர்வானது அல்லது சாதாரணமானது என்று.  திறமை வெளிப்படும் போது பாராட்டும் கிடைக்கும், விமர்சனங்களும் எழும். குறை சொல்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அவர்கள் சொல்லும் குறைகள் என்ன என்று ஆராய்ந்து, நம்மை மேலும் முன்னேற்றிக் கொள்ள வேண்டும்.

குடத்தில் இட்ட விளக்காய் இருந்தால், ஒன்றும் தெரியாது.

குன்றில் இட்ட விளக்காய் இருக்க வேண்டும்.

தோன்றுங்கள். உங்கள் திறமை வெளிப்படும்படி தோன்றுங்கள்.

புகழ் உங்களை வந்து சேரும்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_12.html


Monday, March 11, 2019

கம்ப இராமாயணம் - கூற்றினுக்கு ஊட்டி

கம்ப இராமாயணம் - கூற்றினுக்கு ஊட்டி 


சிறு பிள்ளைகளுக்கு தாய்மார்கள் ஊட்டி விடுவார்கள். அன்பு மிகுதியால் சில சமயம் கணவன்/மனைவி, காதலன்/காதலிக்கு ஊட்டி விடுவதும் உண்டு.

ஊட்டி விடுவது ஒரு சுகம். பிள்ளைகள் சந்தோஷமாய் உண்பதை காண்பதும் ஒரு சுகம்தான்.  சில சமயம், கொஞ்சம் சாப்பிட்டபின் , குழந்தை போதும் என்று தலையை திருப்பிக் கொள்ளும், என்ன முயன்றாலும் சாப்பிடாது என்ன செய்ய. கிண்ணத்தில் உணவு கொஞ்சம் மிச்சம் இருக்கும்.  நெய்யும், பருப்பும், கீரையும் போட்டு குழைய செய்த உணவு. தூரவா போட முடியும் என்று அதை உருட்டி தாய்மார்கள் தாங்கள் உண்டு விட்டு, பாத்திரத்தை கழுவப் போடுவார்கள்.


கம்பன் ஒரு ஊட்டுதலை காட்டுகிறான். நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

எமனுக்கு ஊட்டி விட்டால் எப்படி இருக்கும் ?

ஜடாயு, அரக்கர்களை கொன்று யமனுக்கு ஊட்டி விடுவானாம். ஊட்டிய பின், மிச்சம் இருப்பதை தான் தின்று விடுவானாம்.

பாடலைப் பாருங்கள்

பாடல்

வீட்டி வாள் அவுணரை, 
     விருந்து கூற்றினை 
ஊட்டி, வீழ் மிச்சில் தான் 
     உண்டு, நாள்தொறும் 
தீட்டி, மேல் இந்திரன் சிறு 
     கண் யானையின் 
தோட்டிபோல் தேய்ந்து 
     ஒளிர் துண்டத்தான்தனை


பொருள்

வீட்டி வாள் = வீசும் வாளை (கத்தி) கொண்ட

அவுணரை = அரக்கர்களை

விருந்து = விருந்தாக

கூற்றினை ஊட்டி = எமனுக்கு ஊட்டி

வீழ் மிச்சில் = வீழ்ந்த மிச்சத்தை

தான் உண்டு = தான் (ஜடாயு) உண்டு

நாள்தொறும் = தினமும்

தீட்டி = கூர் செய்து

மேல் இந்திரன் = இந்திரன் அமரும்

சிறு கண் யானையின்  = சிறிய கண்களை கொண்ட யானையின்

தோட்டிபோல்  = அங்குசம் போல

தேய்ந்து = தேய்ந்து (கூர் மழுங்கி)

ஒளிர் = ஒளி வீசும்

துண்டத்தான்தனை = அலகைக் கொண்ட ஜாடாயுவை (இராமனும் இலக்குவனும் கண்டார்கள் )


பிள்ளைக்கு ஊட்டிய பின் மிச்சத்தை தாய் உண்பது போல, எமனுக்கு ஊட்டிய பின்   மிச்சத்தை தான் உண்பானாம்.

எமனுக்கு வேண்டியது உயிர் தான். அவனுக்கு அதை ஊட்டிய பின், மிச்சமிருக்கும் உடலை தான் தின்பானாம்.

என்ன ஒரு கற்பனை.

இப்படி அரக்கர்களோடு சண்டை போட்டு, சண்டை போட்டு, ஜடாயுவின் அலகு தேய்ந்து போய் விட்டதாம். இந்திரனின் யானையை அடக்கும் அங்குசம் போல.

தேய்ந்து போனாலும், எப்போதும் வேலை செய்து கொண்டே இருந்ததால் அது ஒளி வீசிக் கொண்டிருத்ததாம்.

கவிதை. கற்பனை.

நம் வீட்டில் தங்க வைர நகைகள் இருக்கும். அதை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைத்து பூட்டி வைப்போம்.

குப்பை இருக்கும். அதை அலமாரியில் வைத்தா பூட்டி வைப்போம் ?

உயர்த்த கருத்துகளை நம் மூளையில் சேர்த்து வைக்க வேண்டும்.

பெரும்பாலும் என்ன செய்கிறோம் ? குப்பைகளை சேர்த்து வைக்கிறோம்.

குப்பை வைக்கும் இடமா நம் மூளை? ஒவ்வொரு நாளும் லாக்கரை திறந்து கொஞ்சம் குப்பையை அதில் திணித்து பின் மூடி வைக்கிறோம்.

என்ன பலன் ?

டிவி, செய்தித் தாள்கள், தொடர் சீரியல்கள், வாட்சப் செய்திகள், facebook படங்கள், செய்திகள், youtube, அரட்டைகள், என்று குப்பைகளாக சேர்த்து வைத்துக் கொண்டிருக்கிறோம்.

முதலில் உங்கள் பெட்டகத்தைத் திறந்து அதில் உள்ள குப்பைகளை அள்ளி வெளியே போடுங்கள். பெட்டகத்தை சுத்தம் செய்யுங்கள்.

நல்லவற்றை மட்டும் உள்ளே வையுங்கள்.

இனிமேல், குப்பைகளை உள்ளே வைப்பது இல்லை என்று முடிவு செய்யுங்கள்.

இராமாயணம், அறிவியல், திருக்குறள், போன்ற உயர்ந்த நூல்களில் உள்ள சிறந்த கருத்துகளை மட்டுமே உங்கள் மூளைக்குள்  வைப்பது என்று முடிவு செய்யுங்கள்.

ஒன்றும் இல்லாவிட்டால் பரவாயில்லை. பெட்டகம் காலியாகத்தானே இருக்கிறது என்று  கொஞ்சம் குப்பையை உள்ளே வைக்காதீர்கள்.

உங்களை, உங்கள் அறிவை, உங்கள் நேரத்தை மதிக்கப் பழகினால், எதை படிக்கலாம், எதை கேட்கலாம் என்ற தன்னுணர்வு தானே வரும்.

எப்போது சுத்தம் செய்யப் போகிறீர்கள்?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_11.html



Sunday, March 10, 2019

கம்ப இராமாயணம் - சிறை விரித்து இருந்தனன்

கம்ப இராமாயணம் - சிறை விரித்து இருந்தனன்


எந்த விஷயத்திலும் நாம் சிறந்து விளங்க வேண்டும் என்றால், அதில் நல்ல பயிற்சி வேண்டும். அது படிப்பாக இருக்கட்டும், விளையாட்டு, சமையல், ஆடல், பாடல், நடிப்பு, வேலை, எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். தொடர்ந்த பயிற்சியின் மூலம் நாம் எந்தத் துறையிலும் சிறந்து விளங்க முடியும்.

அது ஒரு புறம் இருக்கட்டும்.

வாழ்வில் நாம் உயர வேண்டும், சிறப்பாக விளங்க வேண்டும், பேரும் , புகழும், பணமும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்று விரும்பாதவர் யார். எப்படி வாழ்வில் உயர்ந்து உன்னத நிலையை அடைவது ?

வள்ளுவர் சொல்கிறார்

வெள்ளத்து அனையது மலர் நீட்டம் மாந்தர்தம்
உள்ளது அனையது உயர்வு

நாம் எந்த அளவு உயர முடியும் என்றால், நம் மனம் எந்த அளவு உயர்கிறதோ அந்த அளவு உயர முடியும்.

எனக்கென்று ஒரு தனி விமானம் வேண்டும், ஒரு கப்பல் வேண்டும், ஒரு தீவு வேண்டும் என்று எப்போதாவது நினைத்து இருக்கிறோமா ?

நோபல் பரிசு வேண்டும்,  ஒலிம்பிக்கில் தங்கம் வாங்க வேண்டும் என்று ஆசை பட்டு இருக்கிறோமா ?

இல்லை. ஏன் என்றால், அதெல்லாம் நடக்கிற காரியம் இல்லை, நம்மால் முடியாது, அதுக்கெல்லாம் ரொம்ப நாளைக்கு முன்பிருந்தே முயற்சி தொடங்கி இருக்க வேண்டும், இப்ப ரொம்ப வயசாகி விட்டது என்று நமக்கு நாமே முட்டுக் கட்டை போட்டுக் கொள்கிறோம்.

உள்ளம் குறுகி இருக்கிறது. முடியாது, நடக்காது, நடை முறைக்கு ஒத்து வராது என்று பெரிய விஷயங்களை எல்லாம் தள்ளிப் போட்டுக் கொண்டே போகிறோம். அல்லது தள்ளி வைத்து விடுகிறோம்.

அப்படி அல்லாமல், எப்படி பெரிதாக சிந்திப்பது ?

அதாவது, மனம் பெரிதாக சிந்திக்க வேண்டும் என்றால், அதற்கு பயிற்சி வேண்டும் அல்லவா ?    பெரிய பளுவை தூக்க உடலுக்கு பயிற்சி வேண்டுவது போல, பெரிதாக சிந்திக்க மனதுக்கு பயிற்சி வேண்டும்.

மனதை எப்படி பயிற்றுவிப்பது ? அதுக்கு ஏதாவது கோர்ஸ் இருக்கா ? மனப் பயிற்சி என்று எங்காவது சொல்லித் தருகிறார்களா ? எவ்வளவு செலவு ஆகும்?

ஒன்றுமே வேண்டாம். மிக மிக எளிய வழி இருக்கிறது.

இலக்கியம்.

இலக்கியங்களை படிக்க படிக்க மனம் விரியும். கற்பனையின் எல்லைகள் பரந்து படும். நடை முறையில் சாத்தியம் இல்லாதவற்றை எல்லாம் கூட மனதால் சிந்திக்க முடியும். இதுவரை காணாதது, கேட்டிராதது போன்றவற்றைக் கூட  மனதால்   கற்பனை செய்ய முடியும்.

அது ஒரு வித மனப் பயிற்சி.

கம்பன் அந்தப் பயிற்சியை நமக்குத் தருகிறான்.



இராமன், இலக்குவன் மற்றும் சீதை மூவரும் நாடு விட்டு காடு வந்து சேர்ந்தனர். காட்டில் ஜடாயுவை சந்தித்தனர்.

கழுகைப் பார்த்தார்கள் என்று சொல்லிவிட்டுப் போகலாம்.

கம்பன் மெனக்கிடுகிறான்.

ஜடாயு ஒரு மலை மேல் தன் சிறகுகளை விரித்தபடி அமர்ந்து இருக்கிறான். அது எப்படி இருக்கிறது என்றால், மலையின் மேல் சூரியன் வரும் போது அதன் கதிர்கள் எப்படி பிரகாசிக்குமோ அப்படி இருக்கிறது .....


பாடல்

உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து
     உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து
     அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச்
     சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என,
     விளங்குவான் தனை,


பொருள்


உருக்கிய = உருக்கப்பட்ட

சுவணம் = தங்கம்

ஒத்து = ஒன்றாக தோன்றும் படி இருந்து

உதயத்து = உதிக்கும் போது

உச்சி சேர் = உச்சியில் வரும் போது

அருக்கன் = சூரியன்

இவ் அகல் இடத்து = இந்த அகன்ற இடத்தில்

அலங்கு திக்கு எல்லாம் = பொருந்திய அனைத்து திசைகளிலும்

தெரிப்புறு = தெறித்து விழும்படி

செறி சுடர்ச் =  சக்தி வாய்ந்த சுடர்

சிகையினால் = ஒளி கீற்றுகளால்

சிறை விரித்து இருந்தனன் = சிறகை விரித்து இருந்தான்

 என விளங்குவான் தனை, = என்று இருந்த அவனை

மலை , உலகம்
சூரியன், ஜடாயு
சூரிய கதிர்கள் - ஜடாயுவின் சிறகுகள்


பொன்னிறமான கழுகு. மலை மேல் தக தக என்று ஜொலிக்கிறது. சிறகை விரித்து உலகுக்கு எல்லாம் ஒளி தருகிறது.

இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்.

இருந்தாலும், நம் கற்பனை விரிகிறது அல்லவா ? அப்படி மலை மேலே உள்ள ஒரு பெரிய கழுகை நம்மால் சிந்திக்க முடிகிறது அல்லவா ?

அது தான் மனப் பயிற்சி.

மனம் விரிய விரிய நமது வாழ்வின் எல்லைகள் விரியும்.

நினையாததெல்லாம் நிறைவேற காண்போம்.

பெரிய முன்னேற்றங்கள் நிகழும்.

பெரிதினும் பெரிது கேள் என்றாள் ஒளவை.  (பாட்டி பெரிய ஆள் தான்).

இலக்கியங்களை ஆழ்ந்து அனுப்பவித்துப் படிப்பதால் வாழ்வில் மிகப் பெரிய விஷயங்களை சாதிக்கலாம். பெரிய உண்மைகளை கண்டறியலாம்.

மனம் விரியட்டும். குறுகிய எண்ணங்கள் தொலையட்டும். வானம் வசப்படட்டும்.



https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_10.html



Thursday, March 7, 2019

கம்ப இராமாயணம் - கண்டனர் கழுகின் வேந்தையே

கம்ப இராமாயணம் - கண்டனர் கழுகின் வேந்தையே 


சடாயுவும் தயரதனும் நெருங்கிய நண்பர்கள்.

இராமனும், இலக்குவனும், சீதையும் நாடு விட்டு காடு வருகிறார்கள்.

கம்பர் காட்டும் காட்டை பற்றி படித்ததால், நமக்கும் அங்கே ஒரு  நடை போய் வரலாம் போலத்  தோன்றும். அவ்வளவு அழகு.

காடு ஒரு புறம் இருக்கட்டும்.

நம்மால் ஒரு கிலோமீட்டர் செருப்பு இல்லாமல் நடக்க முடியுமா ? செருப்பு, ஷூ போட்டுக்கொண்டு ஒரு பத்து கிலோமீட்டர் நடக்க முடியுமா ?

இராமனும், இலக்குவனும் சக்கரவர்த்தி வீட்டுப் பிள்ளைகள். எவ்வளவு செல்லமாக வளர்ந்து இருப்பார்கள். அவர்கள் இருவரும் காட்டில், மர உரி உடுத்து நடந்தே வருகிறார்கள்.

சீதை, ஜனகனின் செல்லப் பெண். எப்படி எல்லாம் வளர்த்து இருப்பான் ஜனகன் தன் பெண்ணை. அவளும் நடக்கிறாள்.

நம்மால் நினைத்துப் பார்க்க முடியுமா ?

பாடல்

நடந்தனர் காவதம் பலவும்;
     நல் நதி
கிடந்தன, நின்றன,
     கிரிகள் கேண்மையின் 
தொடர்ந்தன, துவன்றின;
     சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
     கழுகின் வேந்தையே.


பொருள்

நடந்தனர் = இராமன், இலக்குவன் மற்றும் சீதை மூவரும் நடந்தனர்

காவதம் பலவும்; = மைல் கணக்கில்

நல் நதி கிடந்தன = நல்ல நதிகள் பல கிடந்தன

நின்றன  கிரிகள் = மலைகள் உயர்ந்து நின்றன

கேண்மையின் தொடர்ந்தன = அவை தொடர்ந்து வந்தன

துவன்றின = ஒன்றை ஒன்று நெருங்கி இருந்தன

சூழல் யாவையும் கடந்தனர்;= அப்படிப்பட்ட இயற்கை சூழலை கடந்தனர்

கண்டனர் = கண்டனர்

கழுகின் வேந்தையே. = கழுகின் தலைவரான ஜடாயுவை


இந்த ஜடாயு சம்பந்தப் பட்ட காட்சிகள் இல்லாவிட்டால் காப்பியம் ஒன்றும் குறைந்து விடாது.

இருந்தும், வேலை மெனக்கெட்டு கம்பர் ஏன் இதைச் சொல்ல வருகிறார் ?

அதற்குப் பின் என்ன நோக்கம் இருக்கக் கூடும் ?

சிந்திப்போம்.

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_7.html


Wednesday, March 6, 2019

கம்ப இராமாயணம் - சடாயு, இராமன், இலக்குவன்

கம்ப இராமாயணம் - சடாயு, இராமன், இலக்குவன் 


இரண்டு பையன்களோ, அல்லது இரண்டு பெண்களோ இள வயது முதல் நட்பாக பழகி வந்திருப்பார்கள். அவர்களுக்கு இடையே மிக ஆழ்ந்த நட்பு இருக்கலாம்.  வளர்ந்த பின், அவரவர்கள் திருமணம் முடித்து அவர்கள் வழியில் போய் இருக்கலாம். அவர்களில் ஒருவரின் பிள்ளை தங்களுடைய தாய் அல்லது தந்தையின் நண்பரை பார்த்தால் எப்படி பழகுவார்கள் ?

எனது நண்பனின் மகன் என்னிடம் எப்படி பழகுவான் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

எனக்கும் அந்த நன்பனின் மகனுக்கும் பெரிய பாசப் பிணைப்பு இருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை தன் தந்தையின் அல்லது தாயின் நண்பர் அல்லது நண்பி என்று மரியாதை இருக்கலாம். சின்ன ஆச்சரியம் இருக்கலாம்.


ஆனால், எனக்கு அந்தப் பிள்ளையை பார்க்கும் போது என் பிள்ளையை பார்ப்பது போன்ற ஒரு வாஞ்சை, அன்பு வரத்தான் செய்யும்.

இது ஒரு சிக்கலான இடம். அன்போடு அந்தப் பிள்ளையை அரவணைத்தால், அந்தப் பிள்ளை சங்கடத்தில் நெளியக் கூடும்.

இராமாயணத்தில் அப்படி ஒரு இடத்தை கம்பர் காட்டுகிறார்.

தயரதனும் , சடாயுவும் நெருங்கிய நண்பர்கள். தயரதன் இறந்த பின், இராம இலக்குவர்கள்  காட்டுக்குப் போகிறார்கள். காட்டில் ஜடாயுவை சந்திக்கிறார்கள். தங்கள் தந்தையின் நண்பர்.

என்ன நிகழ்கிறது, அவர்களுக்குள் என்ன பேசிக் கொண்டார்கள். எப்படி அறிமுகம் செய்து கொண்டார்கள். சடாயு தயரதனைப் பற்றி என்ன சொன்னார்....இராம இலக்குவன்கள் அவரோடு எப்படி பழகினார்கள் ?

சிந்தித்துப் பாருங்கள்....

இராமாயணம் காட்டும் அந்த உறவு கோலத்தை நாம் காண இருக்கிறோம் வரும் நாட்களில்...

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_6.html


Tuesday, March 5, 2019

திருக்குறள் - எண்ணித் துணிக

திருக்குறள் - எண்ணித் துணிக 


பாடல்

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

பொருள்

எண்ணித் = ஆராய்ந்த பின்

துணிக = முடிவு செய்க 

கருமம் = எந்த செயலையும்

துணிந்தபின்  = முடிவு எடுத்த பின் , செயல் தொடங்கிய பின்

எண்ணுவம் = ஆராய்ந்து கொள்ளலாம்

என்பது இழுக்கு. = என்பது குற்றம்

எப்போதும் போல, குறள் என்னவோ எளிமையான ஒன்றுதான். சிந்திக்க சிந்திக்க பொருள் விரிந்து கொண்டே போகும் தன்மை உடைய குறள்.

முதலாவது, "துணிக"


ஏன் துணிக என்ற சொல்லை போட்டு இருக்கிறார் வள்ளுவர். எண்ணிச் செய்க கருமம்  என்று சொல்லி இருக்கலாம் அல்லவா ? ஏன் சொல்லவில்லை?


எந்த செயலை தொடங்குவது ஆனாலும், அது பற்றிய முழு விவரமும் நமக்கு கிடைக்காது. கொஞ்சம் சந்தேகம் இருக்கத்தான் செய்யும். அது சரியா, தவறா  என்ற குழப்பம், தயக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

எதைப் படிப்பது, எங்கே படிப்பது, எதை வாங்குவது, எப்போது வாங்குவது, இன்னும் கொஞ்ச நாள் வைத்து இருக்கலாமா அல்லது இப்போதே விற்று விடலாமா,  திருமணம் செய்து கொள்வது,  குழந்தைகளுக்கு வரன் தேடுவது என்று  எந்த செயலை எடுத்தாலும், எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்தாலும்  தெரியாதது கொஞ்சம் இருக்கத்தான் செய்யும்.

அப்போது என்ன செய்வது ? நல்லது கெட்டதுகளை ஆராய்ந்தபின், நல்லது அதிகமாக இருக்கும் என்றால்  துணிந்து காரியத்தில் இறங்க வேண்டியதுதான்.

வேலை செய்வதற்கு ஒரு தைரியம் , துணிவு வேண்டும். பயந்து கொண்டே இருந்தால்  ஒரு காரியமும் நடக்காது.

இரண்டாவது, "எண்ணி".

எதை என்ன வேண்டும் ?

ஒரு காரியத்தின் இலாப நட்டங்களை எண்ண வேண்டும். நல்லதை மட்டுமே நினைக்கக் கூடாது. அதில் உள்ள சிக்கலைகளையும் சிந்திக்க வேண்டும்.

அடுத்தது, காரியம் செய்ய எது சரியான தருணம் என்று சிந்திக்க வேண்டும்.

உருவத்தால் பருத்து உயர்ந்த மரங்களானாலும் பருவத்தால் அன்றி பழா .

அடுத்தது, ஒரு காரியம் செய்ய நமக்கு என்னவெல்லாம் வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். பணம், அறிவுரை, நண்பர்கள் உதவி, உறவினர்கள் உதவி, மற்ற உபகரணங்கள் என்று அனைத்தையும் சிந்திக்க வேண்டும்.

அடுத்தது, ஒரு செயலை செய்யும் போது அதில் வரும் சிக்கல்களை, எதிர்ப்புகளை  பற்றி சிந்திக்க வேண்டும். எல்லாமே நாம் நினைப்பது போல நடக்காது. அப்போது என்ன செய்வது என்று முதலிலேயே சிந்தித்து வைத்துக் கொள்ள வேண்டும்.


"துணிந்த பின் எண்ணுவம்"

வேலையை தொடங்கி  விடுவோம், போகப் போக பார்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு.

ஏன் ? அப்படி செய்தால் என்ன தவறு ?

முதலாவது, ஒரு வேளை தவறான காரியமாக இருந்தால் அதில் இருந்து மீள வழி இல்லாமல் போகலாம்.

உதாரணமாக அது ஒரு சட்ட விரோதமான செயலாக இருக்கலாம். வாங்கிய இடம்  பொது இடமாக இருக்கலாம் அல்லது அரசாங்கத்துக்கு சொந்தமான இடமாக இருக்கலாம். அதில் போய் வீடு காட்டினால்? கட்டுவோம் , அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. பெரிய நட்டத்தில் கொண்டு போய் விட்டு விடும்.

இரண்டாவது, அரை குறையாக திட்டம் தீட்டினால், ஒரு வேலை நாம் நினைத்தை விட அதிக செலவு பிடிக்கும் செயலாக இருக்கலாம். செலவை ஈடு கட்ட கடன் வாங்க வேண்டி இருக்கலாம். அதுக்கு வட்டி கட்ட வேண்டும். இப்படி பலப் பல  சிக்கல்களில் கொண்டு போய் விட்டு விடும்.

மூன்றாவதாக, சரியாக திட்டம் தீட்டவில்லை என்றால், செயலை முடிப்பதில் கால தாமதம்  ஏற்படலாம். அலைச்சல், வீண் செலவு, குழப்பம் எல்லாம்  நிகழும்.

தொடங்கியபின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது.

"பின் எண்ணுவம் என்பது இழுக்கு"

சரி, ஒரு வேலையை நன்றாக திட்டமிட்டுத்தான் தொடங்கினோம். எதிர்பாராத  சிக்கல் வந்து விட்டது. இப்போது என்ன செய்வது? அந்த சிக்கலை விடுவிக்க மீண்டும் திட்டம் இட வேண்டாமா ?

ஆம், செயலை தொடங்கிய பின்னும் , பல புது பிரச்சனைகள் வரலாம். அவற்றை தீர்க்க மீண்டும் திட்டம் தீட்டத்தான் வேண்டும். வள்ளுவர், "துணிந்த பின்  எண்ணுவம் என்பது கூடாது " என்று சொல்லவில்லை.

"துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு" என்று சொன்னார்.

அது குறைதான். முதலிலேயே எண்ணி இருக்க வேண்டும். பின்னால் எண்ணுவது ஒரு  குறைதானே தவிர அதை அறவே செய்யக் கூடாது என்று சொல்லவில்லை.

"துணிந்த பின் எண்ணுவம் என்பது பிழை"

என்று சொல்லவில்லை. இழுக்கு என்று சொல்கிறார். இழுக்கு என்றால் அவ்வளவு சிறப்பானது அல்ல. இழிவானது.

ஒவ்வொரு வார்த்தைக்குப் பின்னாலும் ஆழ்ந்த அர்த்தங்கள் உண்டு.

பொறுமையாக படித்தால் அந்த ஆழம் புலப்படும்.

ஒவ்வொரு குறளுக்குப் பின்னாலும் எவ்வளவு கொட்டிக் கிடக்கிறது!

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post_5.html


Friday, March 1, 2019

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

கலித்தொகை - எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா


மனித உணர்ச்சிகள் நுண்மையானவை. அந்த உணர்ச்சிகளை வெளிப்படுத்த மிகுந்த திறமை வேண்டும். மனதில் நினைப்பதை சரியாகச் சொல்லத் தெரியாமல், ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லி, எவ்வளவு சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்.

ஆண் பெண் உணர்வு என்பது மிக நுட்பமானது. மிகவும் அந்தரங்கமானது. பெண்ணுக்குள்ளும் ஆயிரம் ஆசைகள் இருந்தாலும், ஒரு நாணம், ஒரு பயம், ஒரு தயக்கம் அவளை எப்போதும் பின்னுக்கு இழுத்துக் கொண்டே இருக்கிறது. எனவே, அவள் சொல்வதில் பாதி உண்மை, மீதியை நாம் ஆண்  தேடி புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. தவறாக புரிந்து கொண்டால், அதுவும் சிக்கல். என்ன

கலித்தொகை. பாலைக் கலி.

அற்புதமான பாடல்.

தலைவி, தன் தோழியிடம் சொல்கிறாள். காதல், காமம் எல்லாம் ஒன்று சேர்ந்தது. அதை எவ்வளவு நளினமாக, நாசூக்காக, ஒண்ணுமே தெரியாத மாதிரி சொல்கிறாள் என்று பாருங்கள்.

"பல்லு கொஞ்சம் கூர்மையானது தான். முள்ளு போல இருக்கும். இருந்தாலும் குத்தாது. குத்தினாலும் வலிக்காது. அந்த பற்கள் நிறைந்த வாயில் இருந்து ஊறும் நீர், கள்ளை விட இன்பம் தரும் என்று சொல்லும் அவர், அதோடு நிற்காமல், என் உடையையும் திருத்துவார். ஏன் அப்படி செய்கிறார் என்று எனக்கு ஒண்ணும் தெரியல" என்கிறாள் பாவம் போல.

பாடல்

முள்ளுறழ்  முளை  யெயிற் றமிழ்தூறுந் தீநீரைக்
கள்ளினு மகிழ்செயு மெனவுரைத்து மமையாரென்
னொள்ளிழை திருத்துவர் காதலர் மற்றவ
ருள்ளுவ தெவன்கொ லறியே னென்னும்

கொஞ்சம் சீர் பிரிக்கலாம்

முள்ளு உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை 
கள்ளினும் மகிழ் செய்யும் என உரைத்து அமையார் என் 
ஒன் ஒள்  இழை திருத்துவார் காதலர் மற்று 
அவர் உள்ளுவதென் கொல் அறியேன் என்னும் 

பொருள்


முள்ளு = முள்

உறழ் = மாறிய, மாறுபட்ட. முள்ளு மாதிரி இருக்கும், ஆனா முள்ளு இல்லை

முளை = முனை ,

எயிற்று = எயிறு என்றால் பல்

அமிழ்து ஊறும் = அமிழ்து ஊறும்

தீ நீரை  = தீ நீரை

கள்ளினும் = கள்ளை விட

மகிழ் செய்யும் = மகிழ்ச்சி தரும்

என உரைத்து = என்று சொன்னதோடு

அமையார் = சும்மா இருக்க மாட்டார்

என் = என்னுடை

ஒன் ஒள்  இழை = ஒள் என்றால் ஒளி பொருந்திய, shining.  இழை என்றால் ஆடை. சிறந்த பள பளப்பான ஆடை

திருத்துவார் = சரி செய்வார்

காதலர் = காதலர்

மற்று  = மேலும்

அவர் = அவர்

உள்ளுவதென் = மனதில் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாரோ

கொல் = அசைச் சொல்

அறியேன் = எனக்கு ஒண்ணும் தெரியாதுப்பா

என்னும் = என்று சொல்லுவாள்



"முளை எயிற்று அமிழ்து ஊறும்"

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

என்பது திருமதிரம்.

இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை

இந்து என்றால் சந்திரன்

சந்திரனின் இளம் பிறையை போன்ற பல்லை (தந்தத்தை) உடைய விநாயகரை போற்றுகிறேன் என்கிறார் திருமூலர்.



"தீ நீர்"

சூடான நீர்.  குளிர்ச்சிதான். இருந்தாலும் கொஞ்சம் சூடும்தான். என்ன ஒரு வார்த்தை பிரயோகம்.

அவனை பார்ப்பதற்கு என்றே நல்லா உடை உடுத்திக் கொண்டு போய் இருக்கிறாள்.

அவன் அந்த ஆடையை "திருத்தினானாம்". எதுனால அப்படி செய்தான்னு எனக்குத் தெரியலை என்கிறாள். பாவம் போல.

ஏன் என்று சொல்லி இருந்தால், அது மூன்றாம் தர காம பத்திரிக்கையாகி இருக்கும். தெரியாது என்று சொன்னதில் அந்த இலக்கியம் உயர்ந்து நிற்கிறது.

காமத்தை எவ்வளவு நளினமாக, மென்மையாக வெளிப்படுத்துகிறது இந்த இலக்கியங்கள்.

மற்றதை எல்லாம் விட்டு விடுவோம்.

உணர்ச்சிகளை மென்மையாக, முழுமையாக எப்படி வெளிப்படுத்துவது என்று  இதில் இருந்து பாடம் படிப்போம். அது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

https://interestingtamilpoems.blogspot.com/2019/03/blog-post.html