நாலாயிர திவ்ய பிரபந்தம் - கண்கள் நீர் மல்க நிற்கும் நாள் என்றோ ?
நாம் ஒருவரிடம் ஒரு உதவியை எதிர் பார்த்துப் போகிறோம். அவர் எவ்வளவு செய்வார், எப்படி செய்வார் என்று தெரியாது. நம் எதிர்பார்ப்பு என்னவோ கொஞ்சம் தான். அதுவும் சந்தேகத்தோடுதான்.
அவரைப் பார்த்தவுடன், அவர் நாம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு உதவியை செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம், அவரின் அன்பு நினைத்து நம் மனம் எப்படி இளகும். அடடா, அந்த மனிதனுகுத்தான் என் மேல் எவ்வளவு அன்பு, கரிசனம். அவர் செய்த மாதிரி யார் செய்வார் என்று நினைந்து நினைத்து உருகுவோம் அல்லவா?
அது போல உருகுகிறார் குலசேகர ஆழ்வார்.
"நம் மனமோ எப்போதும் ஏதாவது தீய எண்ணங்களிலேயே மூழ்கிக் கிடக்கிறது. அதை விட்டுவிட்டு, மனதில் உள்ள வஞ்சனை எண்ணங்களை துடைத்து எறிந்து விட்டு , ஐந்து புலன்களை அடக்கி, சாகும் வரை அவனையே நினைத்துக் கொண்டிருக்கும், முடிவு இல்லாத பழைய நெறிகளை பின் பற்றி அதில் நிலைத்து நிற்கும் அடியவர்களுக்கான கதியான திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் மாயோனை கண்ணில் நீர் மல்க நின்று காணும் நாள் எதுவோ"
என்று உருகுகிறார்.
பாடல்
மறந்திகழு மனமொழித்து வஞ்ச மாற்றி ஐம்புலன்க ளடக்கியிடர்ப் பாரத் துன்பம்
துறந்துஇருமுப் பொழுதேத்தி யெல்லை யில்லாத் தொன்னெறிக்கண் நிலைநின்ற தொண்ட ரான
அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப் பொன்னி அணியரங்கத் தரவணையில் பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் மாயோனைக் கண்டென் கண்கள் நீர்மல்க என்றுகொலோ நிற்கும் நாளே
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_70.html
(click the above link to continue reading)
மறந்திகழு = மறம் + திகழும் = எப்போதும் சண்டை சச்சரவு என்றே அலைந்து கொண்டிருக்கும்
மனமொழித்து = மனதை ஒழித்து. அதாவது, அந்த எண்ணங்களை ஒழித்து
வஞ்ச மாற்றி = வஞ்சக எண்ணங்களை மாற்றி
ஐம்புலன்க ளடக்கி = ஐந்து புலன்களை அடக்கி
இடர்ப் பாரத் துன்பம் = பெரிய பாரமான துன்பம். அதாவது பழைய வினைகள்.
துறந்து = அறுத்து
இருமுப் பொழுதேத்தி = இருமும் பொழுதில் போற்றி. அதாவது, இறக்கும் தருவாயில் போற்றி
எல்லை யில்லாத் = முடிவு இல்லாத. இங்கே, ஆரம்பம் இல்லாத
தொன்னெறிக்கண் = தொன்மையான நெறியின் கண்
நிலைநின்ற = நிலைத்து நின்ற, அதாவது, அதை இடைவிடாமல் கடை பிடித்து
தொண்ட ரான = தொண்டர்களான
அறம்திகழும் = அறம் எப்போதும் மனதில் இருக்கும்
மனத்தவர்தம் = மனதை உடையவர்களுடைய
கதியைப் = கதியை, வழியை, செல்லும் பாதையை
பொன்னி = பொன்னி நதி
அணியரங்கத் தரவணையில் = அணி செய்யும் பாம்பணையில்
பள்ளி கொள்ளும் = பள்ளி கொள்ளும்
நிறம்திகழும் = கரிய நிறத்தோடு திகழும்
மாயோனைக் = மாயோனை
கண்டென் = கண்டு என்
கண்கள் = கண்கள்
நீர்மல்க = நீர் நிறைந்து நிற்க
என்றுகொலோ நிற்கும் நாளே = எப்போது அப்படி நிற்கப் போகிறேன்
"இருமுப் பொழுதேத்தி" அது என்ன இருமும் பொழுது போற்றி. அப்படி என்றால் மற்ற நேரங்களில் போற்றக் கூடாதா? சாகும் போதுதான் போற்ற வேண்டுமா?
எப்போதும் போற்றிக் கொண்டே இருந்தால் தான், சாகும் தருவாயில் அது வரும்.
"சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே." என்பார் அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில்
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச் செஞ்சுடர்வேல்
வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி
காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச்
சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு தாழ்வில்லையே.
புலவர் கீரன் இது பற்றி ஒரு நகைச்சுவை கதை ஒன்று சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
சாகும் போது எதை நினைத்துக் கொண்டே சாகிறோமா, அதை நாம் மறு பிறவியில் அடைவோம் என்பது நம்பிக்கை. அப்படி என்றால், பெரும் பணக்காரனாக வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இறந்தால், மறு பிறவியில் பெரும் பணக்காரனாகி விடலாமே என்றால், சாகும் போது அந்த நினைப்பு வர வேண்டுமே? அந்த நேரத்தில் தொண்டை அடைக்கும், மல சலம் துடைக்காமல் உறுத்திக் கொண்டு இருக்கும். இருமி இருமி நெஞ்சு வலிக்கும். பணம் எங்கே நினைவு வரும்?
கீரன் சொல்வார்,
ஒரு கிழவி சாகக் கிடந்தாளாம். அருகில் இருந்தவர்கள் எல்லோரும், "கிழவி நல்லதா நாலு வார்த்தை சொல்லு " என்று சொல்லிக் கொண்டு இருந்தார்களாம்.
அந்தக் கிழவியும், மிக முயற்சி செய்து "மு" என்று சொன்னாளாம்.
உடன் இருந்தவர்கள் எல்லோரும் மகிழ்ந்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு" என்றார்களாம்.
கிழவியும் "முரு" என்று இரண்டு எழுத்தை சொன்னாளாம். எல்லோருக்கும் ரொம்ப மகிழ்ச்சி. ஆஹா முருகன் பெயரைச் சொல்லப் போகிறாள். அவளுக்கு முக்தி தான் என்று நினைத்து, "ம்ம்...மேல சொல்லு மேல சொல்லு " என்றார்களாம்...
கிழவியும், தன் சக்தியெல்லாம் கூட்டி "முருக முருக இரண்டு தோசை கொண்டு வாருங்கள் என்றாளாம்"
அவளுடைய பசி அவளுக்குத் தான் தெரியும்.
மீண்டும் பாசுரத்துக்கு வருவோம்.
இறைவனை அடைய வழி சொல்கிறார் ஆழ்வார். ஏதோ பாசுரம் படித்தோம், இரசித்தோம், என்று இருக்காமல், அவை என்ன என்று சிந்திப்போம். முடிந்தவரை அவற்றை செயல் படுத்த முனைவோம்.
முதலாவது, மனதில் உள்ள "மற" எண்ணங்களை மாற்ற வேண்டும். துவேஷம், போட்டி, பொறாமை போன்றவை.
இரண்டாவது, வஞ்சக எண்ணங்களை போக்க வேண்டும். உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் வஞ்சக மனதை விட்டு ஒழிக்க வேண்டும்.
மூன்றாவது, ஐந்து புலன்களை அடக்க வேண்டும்.
நான்காவது, எப்போதும் இறை நாமத்தை சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.
ஐந்தாவது, வேத நெறிகளில் நின்று ஒழுக வேண்டும்.
ஆறாவது, மனதில் அறச் சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும்.
இதில் ஆழ்வார் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கிறார். இது வரை கேள்விப் பட்டிராத ஒன்று. வியாக்கியானங்களை புரட்டிப் பார்த்தேன், தெளிவாகவில்லை.
அன்பர்கள் சொன்னால் கேட்டுக் கொள்கிறேன்.
"அறம்திகழும் மனத்தவர்தம் கதியைப்"
கதி என்றால் வழி. அதோகதி, பிரகதி என்று சொல்கிறோம் அல்லவா. இங்கே கதி என்றால் விதி என்றும் கொள்ளலாம்.
இறைவன் என்பவன் சென்று அடையும் ஒரு இடமோ, பொருளோ, ஆளோ அல்ல. அவன் தான் வாழ்கை நெறி என்கிறார். இங்கே "அவன் தான்" என்று சொல்லே சரி இல்லை.
ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய விஷயம். இப்போதைக்கு விடை கிடைக்கவில்லை. என்றேனும் கிடைக்கலாம்.