திருக்குறள் - என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..
என்ன செய்தாலும், பாராட்டி ஒரு வார்த்தை கிடையாது. என்ன செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, நம்மை குறை சொல்வதையே எல்லோரும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இதுதான் வழக்கமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து புகழ் பெறுவது.
ஒருவருக்கும் பாராட்டும் மனம் இல்லை. இவர்கள் மத்தியில் புகழ் பெறுவது என்பது நடவாத காரியம்....
இது எல்லோருக்கும் நடப்பதுதான். செஞ்சு செஞ்சு அலுத்துப் போய், புகழும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று விட்டு விடத் தோன்றும்.
வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
பாடல்
புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்
பொருள்
https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_30.html
(please click the above link to continue reading)
புகழ்பட = புகழ் கிடைக்கும்படி
வாழாதார் = வாழ்க்கையை நடத்தாதவர்கள்
தம்நோவார் தம்மை = தன்னைத் தான் நொந்து கொள்ளாமல்
இகழ்வாரை = தம்மை இகழ்பவர்களை
நோவது எவன் = குறை சொல்வது எதனால் ?
நீ புகழ் அடையாமல் இருப்பதற்கு காரணம் நீ தான், இதற்கு எதற்கு மற்றவர்களை குறை சொல்கிறாய் என்று வள்ளுவர் கேட்கிறார்.
ஏன் மற்றவர்கள நம்மை குறை சொல்லப் போகிறார்கள்? அவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்றால், அதற்கு பரிமேலழகர் பதில் தருகிறார்.
புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. அப்படி இருக்க, ஒன்றையும் செய்யாமல், புகழ் இல்லாமல் வாழ்பவனை உலகம் ஏசத்தான் செய்யும்.
முயன்றால் எந்த வழியிலும் புகழ் அடையலாம்.
புகழ் என்றால் ஏதோ ஜனாதிபதி கையால் பரிசு வாங்க வேண்டும், மெடல் வாங்க வேண்டும் என்று இல்லை.
வகுப்பில் முதலாவதாக வருவதும் புகழ்தான்.
அட, இன்னைக்கு காப்பி சூப்பர் என்று பாராட்டு பெறுவதும் புகழ்தான்.
அவங்க வீட்டுக்குப் போய் இருந்தேன். வீட்டை என்னமா அழகா வச்சிருக்கு அந்த பொண்ணு...என்று சொல்லப் படுவதும் புகழ்தான்.
குப்பை போல வீடு, எப்பவும் போல ஒரே மாதிரி சாப்பாடு, ஏதோ படித்தோம், தேர்ச்சி பெற்றோம் என்று படிப்பு என்று இருந்தால், உலகம் இகழத்தானே செய்யும்.
அதற்கு காரணம் யார்? அவர்கள் இல்லை, நாம் தான்.
எதையும், சிறப்பாகச் செய்ய வேண்டும், மற்றவர்கள் புகழும்படி செய்ய வேண்டும், நல்ல பேர் எடுக்க வேண்டும்.
ஆங்கிலத்தில் "your job is not done until you get the wow effect" என்று.
சமையல் செய்வது ஒரு கலை என்றால் அதை பரிமாறுவதும் ஒரு கலைதான். பொரியல் நன்றாக இருக்கிறது என்று அதைச் செய்த இருப்புச் சட்டியோடு கொண்டு வந்து பரிமாறினால் எப்படி இருக்கும்? அதை இன்னொரு அழக்கான பாத்திரத்தில், கொஞ்சமாக எடுத்து, அதற்கு என்று ஒரு தனிக் கரண்டி போட்டு, பரிமாறினால் அழகாக இருக்கும் அல்லவா.
நல்ல துணி என்றாலும், அழுக்காக, சுருக்கம் சுருக்கமாக அதை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்?
எதையும், நேர்த்தியாக, அழுகுபட செய்தால், புகழ் கிடைக்கும். அது நம் கையில் தான் இருக்கிறது.
வள்ளுவரும், பரிமேலழகரும் இவ்வளவு மெனக்கெட்டதை, ஔவை கிழவி மூன்றே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள்.
"செய்வன திருந்தச் செய் "
அவ்வளவுதான்.
முயல்வோம்.