Monday, November 6, 2023

நாலடியார் - புல்லின் மேல் பனி

 நாலடியார் - புல்லின் மேல் பனி 


சிறு வயதில், ஏன் சில பேருக்கு வயதான பின் கூட, சில அறிவற்றவர்களிடம் பழக்கம் இருக்கும். சின்ன வயசில் இருந்தே பழக்கம். நீண்ட நாள் நட்பு, உறவு என்று அறிவு இல்லா மூடர்களோடு சேர்ந்து திரிவார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் பெரிய குறிக்கோள் இருக்காது, நோக்கம் இருக்காது. நாம் நல்லது செய்ய முயற்சி செய்தாலும், ஏதாவது சொல்லி குழப்பி விடுவார்கள். 


அவர்களோடு சேர்ந்து நமக்கும் சில கெட்ட பழக்கங்கள் தொற்றிக் கொள்ளும். புகை பிடிப்பது, சூதாடுவது, வெட்டிப் பேச்சு பேசுவது, அரட்டை அடிப்பது போன்ற பழக்கங்கள்.


இதில் இருந்து எப்படி விடுபடுவது?


எப்படி நம் வாழக்கையை சிறப்பாக ஆக்கிக் கொள்வது?


நாலடியார் சொல்கிறது 


"அறியாத சிறுவயதில் அடக்கம் இல்லாதவர்களோடு சேர்ந்து தவறான பாதையில் போனாலும், நல் வழி செல்லும் சான்றோரோடு சேர்ந்துவிட்டால், புல்லின் மேல் உள்ள பனி எப்படி சூரியன் வந்தவுடன் ஆவியாகிப் போகிறதோ, அது போல பழைய கெட்ட பழக்கங்கள் எல்லாம் போய் விடும்" 


என்று. 


பாடல் 


அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி

நெறியல்ல செய்தொழுகி யவ்வும் - நெறியறிந்த

நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்

புற்பனிப் பற்றுவிட் டாங்கு.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_6.html


(pl click the above link to continue reading)


அறியாப் பருவத்து = அறியாத பருவத்தில் 


அடங்காரோடு = அடக்கம் இல்லாமல் திரிபவர்களோடு 


ஒன்றி = சேர்ந்து இருந்து 


நெறியல்ல = நெரியலாதவற்றை , தவறானவற்றை 


செய்தொழுகி யவ்வும் = செய்து வந்ததும் 


நெறியறிந்த = நல் வழி அறிந்த 


நற்சார்வு  = நல்லவர்களோடு கொண்ட  தொடர்பு 


சாரக்கெடுமே = சேர்ந்திருக்க அந்த பழைய பழக்கங்கள் நம்மை விட்டுப் போய் விடும். எப்படி என்றால் 


வெயில்முறுகப் = வெயில் ஏற ஏற 


புற்பனிப் = புல்லின் மேல் பனி 


பற்று = பிடித்து இருந்த பற்று  


விட் டாங்கு. = விட்டதைப் போல 


புல் ஒன்றும் செய்ய வேண்டாம். சூரியன் வந்தால், பனி தானே விலகிவிடும். அது போல், பெரியவர்கள் நட்பு, தொடர்பு கிடைத்தால், நம் பழைய தீய எண்ணங்கள், பழக்கங்கள் தானே நம்மை விட்டுப் போய் விடும். 


கவனிக்க வேண்டியது என்ன என்றால்:


நம் நல்ல பழக்கங்களும், தீய பழக்கங்களும் நம்மை சேர்த்தவர்களைப் பொறுத்தே அமைகிறது. யாரோடு சேர்கிறோமோ, அவர்களின் குணம் நம்மை சேரும். 


இரண்டாவது, பாடல் "இளம் வயதில்" என்று கூறவில்லை. அறியா பருவத்தில் என்று கூறுகிறது. சிலருக்கு அறியாப் பருவம் என்பது நீண்ட நாள் தொடரும். அவர்கள் கெட்டவர்களோடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று அவர்கள் அறிய மாட்டார்கள். 


உங்கள் பணத்தை ஒருவன் திருடிக் கொண்டு போகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு தொடர்பில் இருப்பீர்களா?


திருடவில்லை, உங்களை ஏமாற்றி உங்கள் பொருளை ஒருவன் பறித்துக் கொள்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனோடு நட்பில் இருப்பீர்களா?


ஒருவன் உங்கள் நேரத்தை வீணடிக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவனை?  நாம் நேரத்தை பெரிதாக நினைப்பது இல்லை. உங்களிடம் தேவையில்லாதவற்றை பேசுபவர்கள், அரட்டை அடிப்பவர்கள், புறம் சொல்லுபவர்கள், என்று உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் உங்கள் வாழ்கையை வீணடிப்பவர்கள்.  அந்த நேரம் இருந்தால் அதை நல்ல வழியில் செலவழிக்க முடியும்.  


அதே சமயம் உங்கள் நேரத்தை பயனுள்ளதாக ஆக்குபவர்கள், அவற்றின் மூலம் உங்களுக்கு பல நன்மைகள் வரும்படி செய்பவர்கள், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கோளோடு இருந்தால், நாளடைவில், முன் சொன்னவர்களின் தொடர்பு தானே கழலும். 


சுற்றி முற்றி பாருங்கள். 


உங்கள் சுற்றம் மற்றும் நட்பில், உங்களை நாளும் உயர்த்துபவர்கள் யார், உங்கள் நேரத்தை வீணடிப்பவர்கள் யார் என்று. 


No comments:

Post a Comment