Tuesday, November 7, 2023

திருக்குறள் - சாவதை விட சிறந்தது

திருக்குறள் - சாவதை விட சிறந்தது 


ஒருவனுக்கு மிகவும் துன்பம் தரக் கூடியது எது என்றால் மரணம் தான். மரணத்தை விட கொடிய துன்பம் எது இருக்க முடியும்? இருக்கின்ற செல்வம், சுற்றம், உறவு, இந்த உலகம், அதி இருந்து கிடைக்கும் அனுபவங்கள் இதை எல்லாம் விடுவது என்றால் எளிதான காரியமா? 


எவ்வளவு வறுமையில் இருந்தாலும், எவ்வளாவு தோல்விகள் வந்தாலும், எவ்வளவு வலி இருந்தாலும், வாழ்க்கை இனிக்கத்தான் செய்கிறது. இவ்வளவு துன்பம் இருக்கிறதே, இருந்து என்ன பலன், உயிரை விடுவோம் என்று எவ்வளவு பேர் நினைப்பார்கள். 


வள்ளுவர் சொல்கிறார், அந்த மரணத்தை விட துன்பம் தரக்கூடியது ஒன்று இருக்கிறது. அது என்ன என்றால், நம்மிடம் ஒருவன் வந்து  ஒரு உதவி கேட்டு அதை நாம் கொடுக்க முடியாமல் இருப்பது. அதைப் போல பெரிய துன்பம் எதுவும் இல்லை. அது மரணத்தை விட கொடிய துன்பம் என்கிறார். 


பாடல் 


சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்

ஈதல் இயையாக் கடை


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_7.html


(please click the above link to continue reading)


சாதலின் = இறப்பதைவிட 


இன்னாதது = துன்பம் தருவது 


இல்லை = வேறு எதுவும் இல்லை 


இனிததூஉம் = இனிது + அதுவும் = அது கூட இனியதுதான். எப்போது என்றால் 


ஈதல் = கொடுத்தல், உதவுதல் 


இயையாக் கடை = முடியாத போது 


இராமயணத்தில், கூனி எவ்வளவோ சொல்லி கைகேயின் மனதை மாற்றப் பார்க்கிறாள். கைகேயி மனம் மாறவில்லை. 


கடைசியில் ஒன்று சொல்கிறாள், கைகேயி தலைகீழாக மாறி விடுகிறாள். 


"ஏய் கைகேயி, நாளை இராமன் முடி சூடிக் கொள்ளப் போகிறான். அனைத்து செல்வமும் அவனிடம் போய் விடும். உன்னிடம் யாராவது வறியவர்கள் வந்து உதவி கேட்டால் நீ என்ன செய்வாய்? நீ போய் கோசலையிடம் போய் கையேந்தி நிற்பாயா?  அவளிடம் பொருள் பிச்சை வாங்கி வந்து நீ மற்றவர்களுக்கு உதவுவாயா? ஒருவேளை அவள் தரவில்லை என்றால் என்ன செய்வாய்? கோபிப்பாயா? துக்கத்தால் விம்மி உயிரை விடுவாயா? இல்லை உதவி என்று வந்தவர்களுக்கு உதவி செய்யமாட்டேன் என்று மறுத்து திருப்பி அனுப்பி விடுவாயா?"


என்று கேட்கிறாள். 


'தூண்டும் இன்னலும், வறுமையும், தொடர்தரத் துயரால்

ஈண்டு வந்து உனை இரந்தவர்க்கு, இரு நிதி, அவளை

வேண்டி ஈதியோ? வெள்குதியோ? விம்மல் நோயால்

மாண்டு போதியோ? மறுத்தியோ? எங்ஙனம் வாழ்தி? 


கைகேயி திகைத்துப் போகிறாள். அவளால் அந்த நிலையை சிந்தித்துக் கூட பார்க்க முடியவில்லை. 


என்ன ஆனாலும் சரி, அப்படி ஒரு நிலை எனக்கும் என் மகன் பரதனுக்கும் வரக் கூடாது என்று முடிவு எடுக்கிறாள். பின் நடந்தது உங்களுக்குத் தெரியுமே. 


உதவி செய்ய முடியவில்லை என்றால் சாவது மேல். உயிரை விடுவது இனியது என்று நம்ம்பியது நம் பரம்பரை. 


எந்த நிலையில் இருந்து சிந்தித்து இருக்கிறார்கள் என்று பாருங்கள். 


ஏதோ வள்ளுவர் அறிவுரை சொல்லிவிட்டுப் போகவில்லை. இராமாயணமும் அதையே பேசுகிறது. கர்ணன் மூலம் பாரதமும் அதைப் பேசியது. 


துறவிகளை கொண்டாடியதைப் போல, வள்ளல்களையும் கொண்டாடியது நம் பாரம்பரியம். 


பருந்துக்காக தன் தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்கரவர்த்தி என்று இன்றும் கொண்டாடுகிறோம். ஒரு அரசன் நினைத்து இருந்தால் நொடியில் எவ்வளவோ மாமிசம் வாங்கித் தந்திருக்க முடியும். கேட்டவுடன் கொடுக்க வேண்டும். மயிலுக்கு போர்வை தந்தவன், கொடிக்கு தேரைத் தந்தவன் என்று அந்த வள்ளல்களை இன்றும் போற்றுகிறோம். 


ஈந்துவக்கும் இன்பம் அறிந்து வாழ்ந்தவர்கள் நாம். 


இந்தக் குறளோடு, ஈகை என்ற இந்த அதிகாரம் முற்றுப் பெறுகிறது.


அடுத்து....

1 comment: