Friday, May 10, 2013

பிரபந்தம் - மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ


பிரபந்தம் - மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ


வயதாகும். முடி நரைக்கும். பல் விழும். தோல் சுருங்கும். கண் பார்வை மங்கும். கையும் காலும் வலு இழக்கும். நினைவு தடுமாறும். நா குழறும்.

நம்மை பெரிய ஆள், படித்தவன், பணம் படைத்தவன், அறிவாளி, என்று புகழ்ந்தவர்கள் கூட நமக்கு பின்னால் நம்மை ஏளனம் செய்யும் முதுமை வந்து சேரும்.

நம் உடையை கூட நாம் சரியாக உடுத்த முடியாமல் போகலாம்.

உடை சரியாக உடுத்தாமல், பிறர் பார்த்து சிரிக்கும்படி நாம் உடை உடுத்து நடக்கலாம்.

இதுவரை செய்தது எல்லாம் சரியா என்ற சந்தேகம் வரும். மாற்றிச் செய்யலாம் என்றால் முதுமை இடம் கொடுக்காது.

எனவே, இப்போதே அவன் பெயரை சொல்லி பணியுங்கள், வாழுங்கள்.

பாடல்

பணிமின் திருவருள் என்னும்அம் சீதப்பைம் பூம்பள்ளி
அணிமென் குழலார் இன்பக் கலவி அமுதுஉண்டார்
துணிமுன்பு நாலப் பல்ஏழையர் தாம்இழிப்பச் செல்வர்
மணிமின்னு மேனிநம் மாயவன் பேர்சொல்லி வாழ்மினோ.(3235)

பொருள்





இந்த பாடலில் வார்த்தைகள் கொஞ்சம் முன்னும் பின்னும் மாறி இருக்கிறது. பாடலின் இலக்கணத்தை காக்க சில வார்த்தைகள் இடம் மாறி இருக்கின்றன.


பணிமின் = பணியுங்கள். அதைகூட ஆழ்வார் பணிவோடு சொல்கிறார்.

திருவருள் என்னும் = திருவருள் என்னும்

அம் சீதப்பைம் பூம்பள்ளி = அந்த குளிர்ச்சியான பூக்களால் ஆன பள்ளியறை

அணிமென் குழலார் = அணிகலன்களை அணிந்த மென்மையான குழலை உடைய பெண்களின்


இன்பக் கலவி அமுதுஉண்டார் = இன்பமான கலவி என்ற அமுது உண்டவர்கள்

துணிமுன்பு நாலப் = துணி முன்னால் தொங்க. பின்னால் இழுத்து சொருக (கோவணத்தை) கையால் முடியவில்லை (கையால் பின்னால் போக முடியவில்லை ) அல்லது மறந்து போனது.....முன்புறம் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கிறது.

பல்ஏழையர் = பல ஏழையர் (நம்மை விட பல விதத்திலும் தாழ்ந்தவர்கள் - பணத்தால், அறிவால், வயதால், இப்படி பல விதத்திலும் ஏழையர்)

தாம்இழிப்பச் செல்வர் = அவர்கள் நம்மை பார்த்து இழித்து சொல்லும்படி செல்வர் (எல்லோரும் நகைக்கும் படி செல்வர் )

மணிமின்னு மேனி =நீல மணி போல் மின்னும் மேனியை கொண்ட

நம் மாயவன் = நம்முடைய மாயவன்

பேர்சொல்லி வாழ்மினோ = திருநாமத்தை சொல்லி வாழுங்கள்



1 comment:

  1. நல்ல பாடல். அதற்கு மேலே என்ன சொல்வது என்று தெரியவில்லை.

    ReplyDelete