Wednesday, May 29, 2013

இரணிய வதம் - நரசிங்கம் வளருதல்

இரணிய வதம்  - நரசிங்கம் வளருதல் 


தூணில் இருந்து வெளிப்பட்ட நரசிங்கம் வளர்ந்து பேருரு கொள்கிறது.

மிகப் பெரிய உருவம் கொள்கிறது. பெரியது என்றால் இப்படி அப்படி அல்ல....கம்பன் வருணிக்கிறான்....மிக பிரமாண்டமான வடிவம்....கற்பனைக்கு  எட்டாத வடிவம்...

பாடல்

'பிளந்தது தூணும்; ஆங்கே பிறந்தது, சீயம்; பின்னை 
வளர்ந்தது, திசைகள் எட்டும்; பகிரண்டம் முதல மற்றும்
அளந்தது; அப் புறத்துச் செய்கை யார் அறிந்துஅறையகிற்பார் ?
கிளர்ந்தது; ககன முட்டை கிழிந்தது, கீழும் மேலும்.



பொருள் 



பிளந்தது தூணும் = தூண் பிளந்தது

ஆங்கே பிறந்தது, சீயம் = அதிலிருந்து பிறந்தது சிங்கம்

பின்னை வளர்ந்தது = பின் அது வளர்ந்தது

திசைகள் எட்டும் = எட்டு திசையும் வளர்ந்தது

பகிரண்டம் முதல மற்றும் அளந்தது = எல்லா அண்டங்களையும் அளந்தது

அப் புறத்துச் செய்கை = இந்த உலகத்தை தாண்டி அந்த பக்கம் அது வளர்ந்ததையும், அங்கு என்ன செய்தது என்பதையும்

யார் அறிந்துஅறையகிற்பார் ? = யார் அறிந்து சொல்ல முடியும் ? கண்ணுக்கு எட்டும் வரை நாம் அறிந்து சொல்ல முடியும் ? அந்த நரசிங்கமோ மிக பிரமாண்டமாக வளர்ந்து இந்த உலகையும் தாண்டி அப்புறம் சென்றது. அங்கிருந்து யாரவது வந்து சொன்னால் தான் உண்டு அது எவ்வளவு தூரம் சென்றது என்று.

கிளர்ந்தது = கிளர்ந்தது

ககன முட்டை கிழிந்தது = உலகம் என்ற முட்டை கிழிந்தது

கீழும் மேலும்.= மேலயும் கீழேயும். ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்ந்து நின்றது.

இதை படிக்கும் போது எனக்கு ஒன்று தோன்றும். இந்த நரசிங்கம் என்பது அணுசக்தி மாதிரி.

சாணிலும் இருக்கும், அணுவை சத கூறிட்ட கோனிலும் அணு இருக்கும்.

அணுவை பிளந்தால் பெரிய சக்தி வெளிப்படும்

அணுக் குண்டு வெடித்தவுடன் மஷ்ரூம் (Mushroom ) cloud என்று சொல்லுவார்கள்...அது வெடித்து அதன் வெப்பம் கிளர்ந்து மேல் எழும்பும்....அளவற்ற ஆற்றல் .... அதன் வழியில் உள்ள எல்லாவற்றையும் எரித்து பொசுக்கும் சூடு...எல்லாம் சேர்த்து பார்க்கும் போது நரசிங்கம் என்பது ஒரு  nuclear force போல இருக்கிறது.....



2 comments:

  1. கவிதையில் ஒரு dramatic வடிவம் கொடுக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் இங்கே!

    ReplyDelete
  2. ககன முட்டை கிழிந்தது = உலகம் என்ற முட்டை கிழிந்தது..this statement clearly proves mother Earth is flat and is covered by a Dome which is like the shape of an egg. Wow, truth hidden in plain sight. Hari Bol!!!

    ReplyDelete