Saturday, May 18, 2013

இராமாயணம் - இராமனின் தர்ம சங்கடம்

இராமாயணம் - இராமனின் தர்ம சங்கடம் 



'எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி' என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான்.

கொஞ்சம் வேகமாக முன்னோக்கி செல்வோம். சுக்ரீவனுக்கும் வாலிக்கும் சண்டை நடந்தது. முதலில் சுக்ரீவன் அடிபட்டு சோர்ந்து வருகிறான். சுக்ரீவனை கொடிப்பூ அணிந்து செல்லச் சொல்கிறான் இராமன். அவனும் செல்கிறான்.

சண்டை நடக்கிறது.

போரின் உச்ச கட்டம்.

வாலி , சுக்ரீவனை தலைக்கு மேல் தூக்கினான். கீழே எறியப் போகிறான். அவன் வேகத்தோடு எறிந்தால், சுக்ரீவன் அடிபட்டு மாண்டு போவான் என்பது உறுதி.

இராமன் முடிவு எடுக்க வேண்டிய கட்டாயம்.

சமயம் அதிகம் இல்லை..ஒரு சில வினாடிகள் இருக்கிறது

சுக்ரீவனை காப்பாற்ற வேண்டும் என்றால், வாலியை கொல்ல வேண்டும்.

இல்லை, வாலியை மறைந்து இருந்து கொல்வது தவறு என்று  நினைத்து தயங்கினால் சுக்ரீவன் இறப்பது உறுதி.

வில்லறம் ஒரு புறம்.

சரணாகதி அடைந்தவனை காக்க வேண்டிய சொல்லறம் மறுபுறம்.

இரண்டையும் காக்க முடியாது. ஏதோ ஒன்றை துறக்க வேண்டும்.

எதை துறப்பது ?

வில் அறத்தை துறந்தால் பழி வரும் ஆனால் சுக்ரீவன் பிழைப்பான். வாலி
இறப்பான்

சொல் அறத்தை துறந்தால் சுக்ரீவன் இறப்பான், பழி வராது, வாலி உயிரோடு இருப்பான்.

என்ன செய்வான் இராமன் ?

நீங்கள் இராமனின் இடத்தில் இருந்தால் என்ன  செய்து இருப்பீர்கள் ?

நம்பி  வந்தவனின் உயிர் முக்கியமா ? உங்கள் வீரம் முக்கியமா ?

உங்களுக்கு நல்ல பெயரா ? உங்கள் நண்பனின் உயிரா ?

பாடல்


'எடுத்துப் பாரிடை எற்றுவென், பற்றி' என்ரு, இளவல்
கடித்தலத்தினும், கழுத்தினும், தன் இரு கரங்கள்
மடுத்து, மீக் கொண்ட வாலிமேல், கோல் ஒன்று வாங்கி,
தொடுத்து, நாணொடு தோள் உறுத்து, இராகவன் துரந்தான். 


பொருள் 


எடுத்துப் = சுக்ரீவனை எடுத்து

பாரிடை எற்றுவென், பற்றி = தரையின் மேல் ஏறிவேன் அவனை என்று பற்றி

என்ரு = என்று

இளவல் = சுக்ரீவனின்

கடித்தலத்தினும் = இடுப்பிலும்

கழுத்தினும் = கழுத்திலும்

தன் இரு கரங்கள் மடுத்து = தன்  இரு கரங்களால்

மீக் கொண்ட வாலிமேல் = தூக்கிய வாலியின் மேல்

கோல் ஒன்று வாங்கி = அம்பு ஒன்றை எடுத்து

தொடுத்து = தொடுத்து

நாணொடு தோள் உறுத்து = வில்லின் நாணை தோள் வரை இழுத்து

இராகவன் துரந்தான். = இராமன் விட்டான்



1 comment:

  1. இராமன் வெளியே வந்து ஒரு குரல் கொடுத்திருந்தால், வாலி சுக்ரீவனை விட்டுவிட்டு இராமனுடன் போர் தொடங்கியிருக்க மாட்டானா?! மறைந்திருந்து கொல்லவேண்டிய அவசியம் என்ன?

    ReplyDelete