Tuesday, May 28, 2013

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன்

திருவெம்பாவை - ஓத உலவா ஒரு தோழன் 


நட்பு என்பது மிக உயர்ந்த உறவு.

நம் குற்றங்கள் எல்லாம் தெரிந்தும் நம்  அன்பு செலுத்துபவன் நண்பன் / நண்பி.

இறைவனும் அப்படித்தானே ? நம் குறைகள் எல்லாம் தெரிந்தும் நம் மேல் அன்பு செலுத்துபவன் அவன்.

இறைவனை தோழா என்று உரிமையோடு அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

பாடல்

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாப்பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
    ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.  



பொருள்





பாதாளம் ஏழினுங்கீழ் = ஏழு பாதாளத்திற்க்கும் கீழே

சொற்கழிவு = சொற்கள் எல்லாம் கழிந்த பின், சொற்களும் வார்த்தைகளும் சென்று அடையாத இடத்தில் உள்ளது

பாதமலர் = பாத மலர்

போதார் = மலர் துலங்கும் (போது  = மலர், ஆர் = ஆரவாரிக்கும்)

புனைமுடியும் = புனைந்த முடியும்

எல்லாப் பொருள்முடிவே = எல்லா பொருள்களின் முடிவு

பேதை ஒருபால் = பெண் ஒரு பக்கம்

திருமேனி ஒன்றல்லன் = அவன் மேனி  அல்ல

வேதமுதல் = முதன்மையான வேதங்களும்; வேதம் தொடங்கி

விண்ணோரும் மண்ணும் = விண்ணில் உள்ளவர்களும் மண்ணில் உள்ளவர்களும்

துதித்தாலும் = துதித்தாலும்

ஓத உலவா = உல என்றால் முடிவு, அந்தம், கழிவு. ஓத உலவா என்றால் ஓதி முடியாத. உலகம் என்ற சொல்லின் வேர்ச்சொல் உல . எல்லை இல்லாதது. உலவா கிளி என்றால் அள்ள அள்ள குறையாத பொற் கிளி...பொன் முடிப்பு

ஒருதோழன் = ஒரு நண்பன்

தொண்டருளன் = தொண்டர்கள் உள்ளத்தில் உள்ளவன். இமை பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்பது மணிவாசகம்.

கோதில் = குற்றமில்லாத

குலத்தரன்றன் = குலத்து + அரன் + தன் = குற்றமில்லாத குலத்தில் தோன்றிய

கோயிற் பிணாப்பிள்ளைகாள் = கோவிலில் பணி புரியும் கன்னிப் பெண்களே

ஏதவன்ஊர் = ஏது அவன் ஊர் ?

ஏதவன்பேர் = ஏது அவன் பேர் ?

ஆருற்றார் = ஆர் உற்றார் ?

ஆரயலார் = ஆர் அயலார் ?

ஏதவனைப் = ஏது அவனைப்

பாடும் பரிசேலோ ரெம்பாவாய் = பாடும் பரிசு ? ஏலோர் எம்பாவாய்

அவனுக்கு எது ஊர் ? எது பேர் ? யார் அவனுக்கு உறவு ? யார் அவனுக்கு உறவு அல்லாதவர்கள் ?

  

4 comments:

  1. ஓத உலவா ஒரு தோழன் - "ஓத" என்றால், "சொல்ல" என்பது பொருள் அல்லவா? அப்படியானால், சொல்ல இயலாத அளவு நட்பான ஒரு தோழன் என்று பொருளாகும்.

    ஆஹா, என்ன ஒரு அருமையான தோழமைக் கருத்து!

    ReplyDelete
  2. மிக்க நன்றி
    எனக்கு இந்த அளவு எளிமையான விளக்கம் வேறு எங்கும் கிடைக்கவில்லை .
    திருவெண்பாவை பொருள் புரிந்து படிக்க நினைக்கும் எம்போன்றோர்க்கு தங்கள் சேவை மிகுந்த தேவை

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  3. #pkkபிழையிலாத்தமிழ்கற்போம் 4
    #திருவெம்பாவை 10
    "பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்" என்று தொடங்கும் திருவெம்பாவை 10வது பாடலின் மூன்றாவது வரியில் வரும் சொற்றோடர்:
    "ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்" என்பது. ஆனால் இங்கு "தோழம்" என்று சொல்வதே சரி. தோழம் என்பது ஒரு பேரெண்ணைக் குறிக்கும். "உண்ணற்கரிய நஞ்சையுண்டொரு தோழந் தேவர் விண்ணிற் பொலிய அமுதளித்த விடைசேர் கொடி யண்ணல்" என்று சம்பந்தர், "எண்ணிறந்த தேவர்கள்" என்ற பொருளில் சொல்லியுள்ளார். "ஒரு தோழம் காலம்" என்பது பரிபாடல். எனவே ஒரு+தோழன்+ தொண்டு+அருளன் என்று பிரித்தால் வரும் பொருளை விட, ஒரு+தோழம்+ தொண்டர்+உளன் என்று பிரித்துப் படிப்பதே "சொல்ல முடியாத அளவு அதிகமான தொண்டர்களை உடையவன்" என்றழகான பொருள் தருகின்றதில்லையா?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete