Monday, May 6, 2013


இராமாயணம் - கடல் கடையும் தோளினான் - வாலி - 2


ஒரு முறை தேவர்களும், அசுரர்களும் அமுதம் வேண்டி பாற் கடலை கடைந்தார்கள். மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தார்கள்.

முடியவில்லை. கை சலித்து, உடலும் மனமும் சலித்தார்கள்.

வாலி அங்கு வந்தான் ....

"எல்லாரும் தள்ளுங்க...இது கூட முடியல" என்று அந்த வாசுகியின் தலையை ஒரு கையால் பிடித்தான், வாலை  இன்னொரு கையால் பிடித்தான்...கட கட என்று கடைந்தான். வாசுகி வலி தாங்காமல் வயறு கலங்கி நெருப்பாக மூச்சு விட்டாள்....மந்திர மலை தேய்ந்து உருக் குலைந்தது...அதை பற்றியெல்லாம் அவன் கவலைப் படவில்லை...பாற்  கடலை கடைந்து அமுதம் எடுத்து அவர்களுக்குத் தந்தான்....

அப்பேற்பட்ட வலிய தோள்களை உடையவன்....

நினைத்து பாருங்கள் மலையைக் கொண்டு கடலை கடைபவனின் தோள் ஆற்றல் எப்படி இருக்கும் என்று.....

பாடல்


கழறு தேவரோடு, அவுணர் கண்ணின் நின்று,
உழலும் மந்தரத்து உருவு தேய, முன்,
அழலும் கோள் அரா அகடு தீ விட,
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்;


பொருள்





கழறு தேவரோடு = பாவங்களை போக்கும் தேவர்களோடு

அவுணர் = அரக்கர்கள்

 கண்ணின் நின்று = கண் முன் நின்று

உழலும் = சுலழும்

மந்தரத்து = மந்திர மலையின்

உருவு தேய = உருவம் தேய


முன் = முன்னால்

அழலும்  கோள் அரா அகடு தீ விட = வலியால் துன்புற்று வாசுகி என்ற பாம்பு தீயை கக்க (அரா = பாம்பு. அரவம் அதில் இருந்து வந்தது; அகடு = உள் , வயறு)
,
சுழலும் வேலையைக் = கடைந்ததால் சுழலும் கடலை

கடையும் தோளினான் = கடைகின்ற தோளினை உடையவன்



1 comment: