Sunday, May 19, 2013

இராமாயணம் - நின்ற அம்பு



 இராமாயணம் - நின்ற அம்பு 


இராமன் எய்த அம்பு வாலியின் மார்பில் , வாழைப்பழத்தில் ஏறிய ஊசி போல் நுழைந்தது. நின்றது. ஏன் நின்றது ?

வாலியின் மார்பு எவ்வளவு உரம் வாய்ந்தது ? இந்த நீரும், அந்த நீரைத் தரும் நெருப்பும், காற்றும், இவற்றை தாங்கும் நிலமும் இந்த நான்கின் சேர்ந்த வலிமை பெற்றது. அப்படிபட்டவனின் மார்பை அந்த அம்பு தைத்தது.

இந்த பாடல் சற்று ஆழமான பாடல் - அருஞ்சொற்பொருளோடு விரிவான பொருளையும் பார்ப்போம்....

பாடல்


கார் உண் வார் சுவைக்
      கதலியின் கனியினைக் கழியச்
சேரும் ஊசியின் சென்றது -
      நின்றது என், செப்ப? -
நீரும், நீர் தரு நெருப்பும்,
      வன் காற்றும், கீழ் நிவந்த
பாரும், சார் வலி படைத்தன்
      உரத்தை அப் பகழி.


பொருள்







கார் உண் வார் சுவைக் = உண்ணக்கூடிய சுவை மிகுந்த

கதலியின் = வாழை

கனியினைக் = பழத்தினை

கழியச் சேரும் = நுழைந்து வெளிச் செல்லும்

 ஊசியின் சென்றது  = ஊசியினைப் போல சென்றது

நின்றது என் = சென்ற அம்பு மார்பினை ஊடுருவி செல்லவில்லை - நின்றது. முதன் முதலாக  இராகவனின் அம்பு இலக்கை துளைக்கவில்லை. நின்று விட்டது . அந்த அம்பே திகைத்து போய் நின்று விட்டது. இப்படி ஒரு காரியத்தை இராகவன் செய்து விட்டானே என்று அம்புக்கு ஒரு திகைப்பு. பரசுராமனின் தவத்தை கொண்ட அம்பு, சொல்லென புறப்பட்டு, பொருளென புறம் சென்று தாடகையின் உயிரை கொண்ட அம்பு, ஒரு புல்லால் காகாசுரனின் உயிரை கொண்ட இராகவனின் ஆற்றல், முதன் முதலாக தடை பட்டு நின்றது.

ஒரு அம்பால் வாலியின் உயிர் போய் இருந்தால், என்ன ஆகி இருக்கும் ? வாலி  இராமனை குற்றவாளி கூண்டில் நிறுத்தி அத்தனை கேள்வி கேட்டிருக்க  முடியாது. வால்மீகியும், கம்பனும் வாலியை அவ்வளவு எளிதாக சாக விடவில்லை.


 செப்ப?  = ஏதோ சொல்ல ?

நீரும் = நீரும்

 நீர் தரு நெருப்பும் = நீரை தந்த நெருப்பும். சற்று ஆச்சரியமான   விஷயம். ஆதியில் நெருப்பு கோலம் இருந்தது. அது வெடித்து சிதறி இந்த உலகங்கள் உண்டானது என்று  அறிவியல் கூறுகிறது. இன்றுள்ள நீர் யாவும் அந்த நெருப்பில் இருந்து   வந்ததுதான்


வன் காற்றும் = வன்மையாக வீசும் காற்றும்


கீழ் நிவந்த பாரும் = இவற்றை தாங்கும் இந்த உலகமும்


சார் வலி படைத்தன் = இந்த நான்கின் வலிமையையும் ஒன்றாக பெற்றவன்

உரத்தை அப் பகழி = வலிமையை சோதித்தது அந்த அம்பு.

சரி. இராகவன் அம்பு எய்து விட்டான்.

ஏன் அப்படி செய்தான் ?





1 comment: