Saturday, April 3, 2021

திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார் - பாகம் 2

 திருக்குறள் - நிலமிசை நீடு வாழ்வார்  - பாகம் 2 


பாடல் 

மலர்மிசை யேகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். (03)


சீர் பிரித்த பின் 


மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்

நிலம் மிசை நீடு வாழ்வார்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/2.html


(pl click the above link to continue reading)


மலர் மிசை = மலரின் கண் 


ஏகினான் = சென்று அடைந்தவனது 


மாண் = மாட்சிமை பொருந்திய 


அடி சேர்ந்தார் = திருவடிகளை சேர்ந்தவனது 


நிலம் மிசை = நிலத்தின் கண் 


நீடு வாழ்வார்  = நீண்ட நாள் வாழ்வார் 


இதில் மலர் என்பதற்கு "அன்பான் நினைவாரது இதயக் கமலத்தில்" என்று முந்தைய ப்ளாகில் பார்த்தோம். 


அது மட்டும் அல்ல, "விரைவின் சென்று அடைதலால்". அதாவது தன்னை நினைக்கும் அன்பர்கள் மனதில் இறைவன் விரைவில் சென்று அடைவான் என்கிறார் பரிமேலழகர். 


ஆனால், அப்படி ஒன்றும் வள்ளுவர் சொல்லவில்லை. 


குறளில் எங்கே இருக்கிறது "விரைவில் சென்று அடைவான்" என்று. பரிமேலழகர் தன் இஷ்டத்துக்கு ஏதாவது உரை சொல்லலாமா ?  குறளில் இல்லாத ஒன்றை எப்படி உரையில் சொல்லலாம்?


பரிமேலழகர் அதற்கும் விளக்கம் கூறுகிறார். 




அடுத்தது, 


"ஏகினான்" = சென்று அடைந்தான். 


ஏகினான் என்பது இறந்த காலம். ஏற்கனவே சென்று அடைந்து விட்டான் என்று அர்த்தம். அப்படி என்றால் எதற்கு அவன் திருவடிகளை தொழ வேண்டும்? அவன் தான் ஏற்கனவே பக்தர்கள் மனதில் சென்று குடி ஏறி விட்டானே? என்ற கேள்வி வரும். ஏகுவான் என்று போட்டு இருக்கலாம். ஏகினான் என்று இறந்த காலத்தில் ஏன் கூறினார்? 


வெளியே போக வேண்டும். இதோ இரண்டு நிமிடத்தில் வருகிறேன் என்று உடை மாற்றி, make up செய்து கொள்ள சென்ற மனைவி ஒரு மணி நேரம் ஆகியும் வரவில்லை.  கணவனுக்கு பொறுமை போய் அற்றுப் போய் விட்டது. 


"இப்ப நீ வர்றியா இல்லையா" என்று கேட்கிறான். 


"இதோ வந்துட்டேங்க"  என்று குரல் வருகிறது.


ஆள் வரவில்லை. ஆனால், வந்து விட்டேன் என்று இறந்த காலத்தில் குறிப்பிடுகிறாள். 


நண்பன் வெளியே பைக்கில் இருக்கிறான். "மச்சான், ரெடியா, போலாமா " என்று கேட்கிறான். "ஒரு நிமிஷம், வந்துட்டேன்டா" என்று பதில் வருகிறது. 


வரல. ஆனால், வந்துட்டேன் என்று சொல்கிறான். 


அவசரம் கருதி, எதிர் காலத்தில் நிகழ வேண்டிய ஒன்றை ஏற்கனவே நிகழ்ந்து விட்டது போல கூறுவது இயல்பு. 


இதற்கு ஒரு இலக்கணமே இருக்கிறது. 


"வாராக் காலத்து நிகழுங்காலத்து

மோராங்கு வரூஉம் வினைச்சொற் கிளவி

யிறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்

விரைந்த பொருள வென்மனார் புலவர்"1 


(தொல்காப்பியம்)


அதாவது


"வாராக் காலத்து = எதிர் காலம். அதற்கு வாரா காலம் என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். அழகாக இருக்கிறது இல்ல. வாராக் காலம். 


நிகழுங்காலத்து = நிகழும் காலம் 


மோராங்கு வரூஉம் = அங்கே வரும் 


வினைச்சொற் கிளவி = வினைச் சொல் 


யிறந்த காலத்துக்  = இறந்த காலத்து 


குறிப்பொடு கிளத்தல் = குறிப்போடு சேருதல் 


விரைந்த பொருள = விரைவாக நிகழ இருக்கும் ஒன்றை குறிப்பிடுவதற்காக 


வென்மனார் புலவர்"  = என்று புலவர்க்கள் சொல்லுவார்கள் 


என்கிறார் தொல்காப்பியர். 



"ஏகினான்" என்ற சொல்லைப் போட்டதன் மூலம், இறைவன் விரைவாக வந்து சேருவான் என்பது பெறப் பட்டது என்கிறார் உரை ஆசிரியர். 



3 comments:

  1. எம்மா...

    வாரா காலம் ... ரொம்ப நல்லா இருக்கு

    ஏகினான்... பள்ளி படிக்கும் போது என் மனத்தில் வந்த கேள்விக்கு இன்றே விடை கிடைத்தது. நன்றி

    ReplyDelete
  2. ‘இதோ வந்தாச்சு’ என்பது போல இருக்கிறது. நீங்க விளக்கின பிறகுதான் இந்த ப்ரயோகத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

    ReplyDelete
  3. "ஏகினான்" என்ற சொல்லுக்கான உரையும் , அதற்கான இலக்கணக் குறிப்பும் அற்புதம்.

    ReplyDelete