Tuesday, April 13, 2021

திருக்குறள் - மனக் கவலை மாற்றல் அரிது

 திருக்குறள் - மனக் கவலை மாற்றல் அரிது 


கடவுள் இருக்கிறாரோ, இல்லையோ எனக்குத் தெரியாது. அப்படி இருக்கும் போது நான் ஏன் கடவுளை வணங்க வேண்டும்? அவரை வணங்கினால் நல்லது செய்வார், வணங்காவிட்டால் நல்லது செய்யமாட்டார் என்றால் அவருக்கும் சாதாரண மனிதர்களுக்கும் என்ன வேறுபாடு? 


மனிதர்கள் அப்படித்தானே செய்கிறார்கள். கடவுளும் அப்படித்தான் என்றால், அவரும் நம்மளை மாதிரித்தான் என்றால், அவரைப் போய் ஏன் வணங்க வேண்டும்? 


நான் வணங்குவதினால் கடவுளுக்கு என்ன பலன்? நான் வணங்காவிட்டால் அவருக்கு என்ன நட்டம் வந்து விடப் போகிறது? அப்படி இருக்க, நான் ஏன் வணங்க வேண்டும் என்று பலப் பல வாதங்கள் இருக்கலாம். 


வள்ளுவர் சொல்கிறார். 


உனக்கு மனக் கவலை போக வேண்டுமா, இறைவனை வணங்கு. இல்லை என்றால் உன் மனக் கவலை தீராது என்கிறார்.   


மனக் கவலை தீர அது ஒன்றுதான் மருந்து. இல்லை, எனக்கு மருந்து வேண்டாம், கவலையில் இருந்துவிட்டுப் போகிறேன் என்றால், அது  அவரவர் விருப்பம். 


பாடல் 

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2021/04/blog-post_13.html


(click the above link to continue reading)


தனக்குவமை = தனக்கு உவமை 


இல்லாதான் = இல்லாதான் 


தாள் = திருவடிகளை 


சேர்ந்தார்க்கு = சேர்ந்தார்க்கு 


அல்லால் = அல்லது 


மனக்கவலை = மனதில் வரும் கவலைகளை 


மாற்றல் அரிது = மாற்றுவது கடினம் 


இதில் பரிமேலழகரின் நுட்பமான உரையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். 


"ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது தாளைச் சேர்ந்தார்க்கு அல்லது; மனத்தின்கண் நிகழும் துன்பங்களை நீக்குதல் உண்டாகாது. ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது. தாள் சேராதார் பிறவிக்கு ஏது ஆகிய காம வெகுளி மயக்கங்களை மாற்றமாட்டாமையின், பிறந்து இறந்து அவற்றான் வரும் துன்பங்களுள் அழுந்துவர் என்பதாம்"


இது உரை. 


விரித்துப் பார்ப்போம். 


"தனக்கு உவமை இல்லாதான்" என்பதற்கு  "ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவனது" என்று உரை எழுதுகிறார். 


காரணம் என்ன?


ஒரு சங்கீத மேதை இருக்கிறார்.  இசை அவருக்கு அத்துப்படி. இசையில் அவருக்கு தெரியாத விஷயமே இல்லை என்று சொல்லலாம். அவருக்கு இணை என்று யாரையும் சொல்ல முடியாது.  அவ்வளவு பெரிய அறிஞர். ஆனால், அவரிடம்  அறிவியல் பற்றி ஏதாவது கேட்டால் ஒன்றும் தெரியாது. 


இசையில் அவருக்கு உவமை சொல்ல யாரும் இல்லை. அதை வைத்துக் கொண்டு அவருக்கு எல்லாத் துறையிலும் அதே அளவு அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது அல்லவா? 


ஆனால், இறைவன் அப்படி அல்ல. ஒருவாற்றானும் தனக்கு நிகர் இல்லாதவன் என்று உரை எழுதுகிறார்.  இந்த விஷயத்தில் கடவுள் பெரிய ஆள், மற்ற விஷயத்தில் அப்படி சொல்ல முடியாது என்றில்லை. எந்த விஷயத்திலும் தனக்கு நிகராக யாரையும் சொல்ல முடியாத உயரத்தில் இருப்பவன் கடவுள். 


"மாற்றல் அரிது"....அரிது என்றால் கடினம். அவ்வளவுதானே. முடியாது நு சொல்லலியே. கஷ்டம் நு சொல்லி இருக்கிறார். இறைவனை வணங்கினால் மனக் கவலை மாற்றுவது எளிது. இல்லை என்றால் கொஞ்சம் கடினம். பரவாயில்லை, நான் கடினமான வழியை தேர்ந்து எடுத்துக் கொள்கிறேன். அப்படி என்றால், இறைவனை வணங்க வேண்டாமே ? என்று யாராவது நினைக்கலாம். 


பரிமேலழகர் உரையில் 


"ஈண்டு 'அருமை' இன்மைமேல் நின்றது.".   


அதாவது, அருமை என்று சொன்னது, முடியாது என்ற பொருளில் வந்தது என்கிறார். 


"நீ இருபதாவது மாடியில இருந்து குதிசிட்டேன்னா உனக்கு இலட்சம் ரூபாய் பரிசு தருகிறேன்" என்று சொன்னால் என்ன அர்த்தம்? குதிக்க முடியாது என்று அர்த்தம். 


சரி, மனக்கவலை னா என்ன?


தலை வலி, காய்ச்சல், பரிட்சையில் தேர்வு அடைவது, வேலை கிடைப்பது, உடல் வலி போவது போன்றதா?  இதுக்கு எதுக்கு கடவுள்? 


உள்ளதுக்குள்ள பெரிய கவலை, பிறவித்துன்பம் என்ற கவலை. 


இறந்து, பிறந்து, அது தான் பெரிய துன்பம். அடுத்து என்னவாகப் பிறப்போமோ ? நாயோ, நரியோ, பன்றியோ, கழுகோ, யாருக்குத் தெரியும் ?  அந்தக் கவலைதான் பெரிய கவலை. 


அந்தக் கவலையை மாற்ற வேண்டும் என்றால், அவன் தாள் சேர வேண்டும் என்கிறார். 


நாம் முன்பே பார்த்தோம் "சேர்தல்" என்றால், இடையறாது நினைத்தல் என்று பொருள். 


முன்னால் சேர்தலின் பலன் சொன்னார். 


இப்போது சேராததின் துன்பம் சொல்கிறார். 


பலன் வேண்டும் என்றால் நினை. 


துன்பம் வேண்டாம் என்றாலும் நினை. 


நன்றாக இருக்கிறதா?

3 comments:

  1. நன்றாக - இல்லை இல்லை - மிக மிக நன்றாக இருக்கிறதே ஐயா . வணக்கம் ...

    ReplyDelete
  2. Very nice exposition of a profound thought. Thanks

    ReplyDelete
  3. இரண்டு வரிகளில் இத்தனை பொருளா?

    பரிமேலழகர் உரை இந்தக் குறளை எவ்வளவு ஆழப்படுத்துகிறது!

    இந்த உரை இல்லாமல் பரிமேலழகர் உரையைப் படித்தான் ஒன்றும் புரியாது!

    ReplyDelete