Sunday, December 31, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 4

 திருக்குறள் - இதுவரை - பாகம் 4 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/4.html



1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 

7. இனியவை கூறல்

8.செய்நன்றி அறிதல்

9. நடுவு நிலைமை

10. அடக்கமுடைமை 

11.     ஒழுக்கமுடைமை 


வரை முந்தைய பதிவுகளில் சிந்தித்தோம் 


பிறனில் விழையாமை 


இல்லறம் என்ற அறம் சிறக்க வேண்டும் என்றால், மாற்றான் மனைவியை நினைக்கக் கூடாது. வலிமை உள்ளவன், பணம் உள்ளவன், அழகு உள்ளவன், அதிக்காரம் உள்ளவன் தன்னிடம் உள்ள அந்த சிறப்புத் தன்மையை பயன்படுத்தி மாற்றான் மனைவியை தீண்ட நினைப்பது இயல்பு. அது அறமன்று. அப்படி நிகழ்ந்தால், இல்லறம் சிதையும், குடும்பம் என்ற கட்டமைப்பு குலையும், சமுதயாம் சீரழியும். எனவே, பிறனில் விழையாமை என்பதை ஒரு அறமாகக் கூறுகிறார். ஒழுக்கம் உடையவர்களுக்கே இது முடியும் என்பதால், இதை ஒழுக்கம் உடைமை என்ற அறத்தின் பின் கூறினார். 


பொறையுடைமை 


அதாவது பொறுமையை கடைபிடித்தல். இல்லறத்துக்கு மிக இன்றியமையாத பண்புகளில் இதுவும் ஒன்று. இல்லறத்தில் உள்ள ஒருவனுக்கு பலரால் பலவிதங்களில் இன்னல்கள் வரக் கூடும். தான் செய்த ஒன்றின் விளைவாக, மற்றவர்களின் தவறான புரிதல்களால், விதி வசம் என்று பலவித இன்னல்கள் வர நேரும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் உறவுகள் சிதறிப் போகும். பொறுக்கவே முடியாத ஒரு குற்றம்என்றால்,தன் மனைவியை மாற்றான் கொள்ள நினைப்பது. அந்த சமயத்தில் கூட பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்பதால் இதை பிறனில் விழையாமையின் பின் கூறினார். மனைவியை கவர்ந்து சென்ற இராவணனுக்குக்   கூட இராமன் அருள் புரிந்தான்.


அழுக்காறாமை 


அதாவது பொறாமை கொள்ளாமல் இருத்தல். ஒவ்வொருத்தனுக்கும் ஒன்று வாய்க்கும், ஒன்று வாய்க்காது. வாய்த்ததைக் கொண்டு மகிழ்ச்சியாக வாழப் பழக வேண்டும். கிடைக்காததை நினைத்து, மற்றவனுக்கு கிடைத்ததே, எனக்கு கிடைக்கவில்லையே என்று பொறாமை கொள்ளக் கூடாது. பொறாமை, அது உள்ளவனை மட்டும் அல்ல, அவன் குடும்பத்தையே அழித்து விடும். இருப்பதைக் கொண்டு இன்பமாக வாழவேண்டும். பிறர் ஆக்கம் கண்டு துன்பம் கொள்ளக் கூடாது. 


வெஃகாமை


பிறர் பொருளை அறமற்ற முறையில் கொள்ளக் கருதுவது.பொறாமை வந்து விட்டால், நியாயம் அநியாயம் தெரியாது. எப்படியாவது மற்றவன் பெற்ற செல்வத்தை தானும் பெற வேண்டும் என்ற வெறி வரும். தவறான வழியில் செல்லத் தூண்டும். அப்படி அறமற்ற வழியில் பிறர் பொருளை அடைய நினையாமல் இருப்பது வெஃகாமை.


மேலும் சிந்திப்போம். 


Saturday, December 30, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 3

 திருக்குறள் - இதுவரை - பாகம் 3 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/3.html


1, அறன் வலியுறுத்தல்,

2.  இல்வாழ்க்கை, 

3. வாழ்க்கைத் துணைநலம், 

4. புதல்வர்களைப் பெறுதல், 

5. அன்புடைமை, மற்றும் 

6. விருந்தோம்பல் 


வரை முந்தைய பதிவில் சிந்தித்தோம். 


மேலும் தொடர்வோம். 


இனியவை கூறல்: விருந்தினரை உபசரிக்க மிக முக்கியமான ஒன்று இனியவை கூறல். இனிமையாக பேசாதவன் வீட்டுக்கு யார் போவார்கள். இல்லறம் சிறக்க வேண்டும் என்றால் இனிமையாக பேசிப் பழக வேண்டும். இனிமையாக பேச பயிற்சி வேண்டும். உடனே வந்து விடாது. முயற்சி செய்ய வேண்டும். இனிமையாக பேசுவது என்றால் என்ன, அதை எப்படி பழக வேண்டும் என்று இந்த அதிகாரத்தில் சொல்லித் தருகிறார். 


செய்நன்றி அறிதல்:  இனியவை பேசி, விருந்தினர் வந்தால், அவர்களால் ஒருவனுக்கு சில நன்மைகள், உதவிகள் கிடைக்கும். அப்படி உதவி கிடைத்தால், அந்த உதவியை மறக்கக் கூடாது. பாவங்களில் பெரிய பாவமாக செய்த உதவியை மறக்கும் பாவத்தைக் கூறுகிறார் வள்ளுவர். செய்நன்றி மறந்த ஒருவனை யாரும் மதிக்க மாட்டார்கள். அவன் தனித்து விடப்படுவான். இல்லறம் சிறக்காது என்பதால், அதை பெரிய அறமாகக் கூறினார். 


நடுவு நிலைமை: 


விருந்தினர்கள், நண்பர்கள் வருவார்கள். அவர்கள் சில பல உதவிகளை செய்யக் கூடும். அதற்காக அவர் செய்யும் தீமைகளை கண்டும் காணமல் இருக்கக் கூடாது. எப்போதும் நீதியின் பால் நடுவு நிலையோடு இருக்க வேண்டும். அம்மா மற்றும் மனைவிக்கு இடையில் வரும் சிக்கல்கள், பிள்ளைகளுக்கு இடையில் வரும் சிக்கல்கள், உறவினர்களுக்கு இடையே வரும் மனத்தாபங்கள் இவற்றை நடுவு நிலையோடு அணுகவேண்டும். வேண்டப்பட்டவர் என்பதற்காக தவறான ஒன்றை சரி என்று சொல்லக் கூடாது. 


அடக்கமுடைமை 


நடுவு நிலைமை என்றால் மற்றவர் செய்யும் குறை நிறைகளை ஆராய்ந்து நேர்மையான ஒன்றைச் சொல்வது. அதே அளவு கோலை நமக்கும் வைக்க வேண்டும். நாம் செய்வது எல்லாம் சரியா? உண்பது, பேசுவது, இன்பம் அனுபவிப்பது, வரம்பு மீறி சிலவற்றை செய்ய நினைப்பது சரியா என்று சிந்தித்து மனம், மொழி, மெய் இவை தீய வழியில் செல்லாமல் அவற்றை அடக்கி வைத்தல். 


ஒழுக்கமுடைமை 


புலன்கள் அடங்கினால்தான் ஒழுக்கம் வரும். புலன்கள் போன போக்கில் போனால் ஒழுக்கம் கெடும். எனவே அடக்கமுடைக்கு அடுத்து ஒழுக்கம் பற்றி கூறினார். ஒழுக்கம் என்றால் செய்ய வேண்டிய கடமைளை முறையே செய்வது. தனி மனிதக் கடமைகள், சமுதாயக் கடமைகள் என்று இரண்டையும் சரிவரச் செய்வது. 



மேலும் சிந்திப்போம். 





Friday, December 29, 2023

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ

கம்ப இராமாயணம் - வலியானே, வலி காண வாராயோ 



உடல் உறுப்புகள் அறுபட்ட சூர்பனகை புலம்புகிறாள். தன் உறவினர்கள் ஒவ்வொருவராக அழைக்கிறாள். 


கோழிக் குஞ்சை பருந்து தூக்க வந்தால், தாய்க் கோழி தன் சிறகால் மூடி குஞ்சுகளை பாதுக்காக்கும். குட்டி போட்ட நாய், தன் குட்டியின் பக்கத்தில் யாராவது அன்பாக வந்தால் கூட எங்கே குட்டிக்கு ஆபத்து வந்து விடுமோ என்று அப்படி நெருங்கி வருபவர்கள் மேல் பாய்ந்து, குரைத்து, விரட்டி விடும். 


அப்படி சாதாரண விலங்குகளே தன் குட்டியை பாதுக்காக்கும் போது, புலிக் குட்டிக்கு ஏதாவது ஆபத்து வர தாய்ப் புலி விடுமா?  அப்படி, இராவணா, நீ இருக்கும் போது, எனக்கு இப்படி ஒரு துன்பம் வந்து விட்டதே என்று சூர்பனகை புலம்புகிறாள். 


ஊழிக் காலத்தில் எல்லாம் அழிந்தாலும், தாங்கள் அழியாத மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அஞ்சாத வலிமை கொண்ட இராவணனே, என் வலியைப் பார்க்க வரமாட்டாயா என்று அழுகிறாள். 


பாடல் 


"தாய்ப் புலி அருகில் இருக்கும் போது  "புலிதானே புறத்து ஆக, குட்டி

 கோட்படாது" என்ன, ஒலி ஆழி உலகு உரைக்கும் உரை      பொய்யோ? ஊழியினும்

சலி யாத மூவர்க்கும்,      தானவர்க்கும், வானவர்க்கும்,

வலியானே! யான் பட்ட வலி      காண வாராயோ?


பொருள் 


"புலிதானே புறத்து ஆக = தாய்ப் புலி அருகில் இருக்கும் போது 


குட்டி கோட்படாது = புலிக் குட்டியை யாரும் பிடிக்க முடியாது 


என்ன = என்ற 


ஒலி  = ஆர்பரித்து சப்தம் உண்டாக்கும்  


ஆழி = கடல் சூழ்ந்த 


உலகு = உலகம் 


உரைக்கும் உரை = சொல்லும் உண்மை 


பொய்யோ? = பொய்யா? 


ஊழியினும் = ஊழிக் காலத்திலும் 


சலி யாத மூவர்க்கும் = அழியாத மும்மூர்த்திகளுக்கும் 

,

தானவர்க்கும் = அசுரர்களுக்கும் 


வானவர்க்கும் = தேவர்களுக்கும் 


வலியானே!  = மிக்க வலிமை உடையவனே 


யான் பட்ட வலி = நான் கொண்ட வலியை 


காண வாராயோ? = காண வரமாட்டாயா ?


நமக்கு உடல் நிலை அல்லது மன நிலை சரி இல்லை என்றால் யாராவது நம்மை வந்து பார்த்து, பேசி, ஆறுதலாக நாலு வார்த்தை சொன்னால் கவலை கொஞ்சம் குறைந்தது மாதிரி இருக்கும் அல்லவா?




Thursday, December 28, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 2

 திருக்குறள் - இதுவரை - பாகம் 2 



அறம், பொருள், இன்பம் என்பதில் முதலில் அறம் அதில் இல்லறம் பற்றி முதலில் விளக்குகிறார். 


அறம் என்றால் ஏதோ காவி கட்டி சன்யாசம் போவது இல்லை. மிக மிக மகிழ்ச்சியாக, இனிமையாக வாழும் இல்லறத்தை காட்டுகிறார் வள்ளுவர். அதை பின்பற்றுவதில் நமக்கு ஒரு சங்கடமும் இருக்காது. அப்படி ஒரு எளிய வழியைக் காட்டுகிறார். 


கை பிடித்து, ஒவ்வொரு படியாக நம்மை நடத்திச் செல்கிறார். 


அதில் முதல் அதிகாரம் - இல்வாழ்க்கை. 


கணவனும், மனைவியும் சேர்ந்து நடத்தும் இல்வாழ்க்கை பற்றி முதல் அதிகாரத்தில் பேசுகிறார். இல்வாழ்வின் நோக்கம் என்ன?  ஏதோ ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்பம் அனுபவிக்க சமுதாயம் தந்த ஒரு அனுமதி (license) என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. வள்ளுவர் காட்டும் இல்வாழ்க்கை சமுதாயம் நோக்கியது. இல்லறத்தில் ஈடுபட வேண்டும் என்றால் அதற்கு பதினொரு கடமைகளைச் சொல்கிறார். அந்தக் கடமைகளை நிறைவேற்றுவதாக இருந்தால் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கு என்கிறார். நான் பெரியவனா, நீ பெரியவனா, விட்டுக் கொடுத்துப் போவது, சகித்துப் போவது, சம உரிமை, முழு உரிமை, முக்கால் உரிமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. கணவன் மனைவி இருவரும் சேர்ந்து செய்யும் வேலைகள்தான் இருக்கிறது. வள்ளுவர் காட்டும் இல்லறத்தைக் கடைபிடித்தால் இல்லறத்தில் ஒரு சிக்கலும் இருக்காது. 


அடுத்தது - வாழ்க்கைத் துணைநலம் 


வள்ளுவர் காட்டும் இல்லறக் கடமைகள் அனைத்தும் ஆணின் மேல்தான். ஆனால், ஒரு ஆணால் அந்தக் கடமைகளை தனியே செய்யவே முடியாது. அவனுக்கு ஒரு பெண்ணின் துணை அவசியம் தேவை.   ஏன் பெண்ணுக்கு கடமை  கிடையாதா? ஏன் ஆண் அந்த கடமைகளுக்கு துணை போகக் கூடாதா என்று வாதம் செய்யலாம். அப்படி ஒரு இல்லறக் கோட்பாட்டை யாராவது வகுத்து, அது சரி என்று எல்லோரும் ஏற்றுக் கொண்டால் அது நடைமுறைக்கு வரும். வாதம் செய்பவர்கள் முயற்சி செய்யலாம். இல்லறக் கடமைகளை சரிவர ஆற்ற ஒரு பெண்ணின் துணை தேவை என்பதால் அவளை வாழ்க்கை துணை நலம் என்கிறார். வாழ்வில் நல்லது செய்ய ஒரு துணையாக வந்தவள். 


மூன்றாவது - புதல்வர்களைப் பெறுதல் 


இல்லறம் நடத்துவது என்பது ஏதோ உடல் இன்பத்துக்காக மட்டும் அல்ல. குழந்தைகள் அவசியம் என்கிறார். இன்று ஒரே பாலினத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள் எவ்வாறு பிள்ளை பெறுவார்கள் ?  அதை எல்லாம் நம் கலாச்சாரம் அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் இந்த அதிகாரம் காட்டுகிறது. அது மட்டும் அல்ல, பிள்ளகைள் வரும் போது கணவன், மனைவி இருவரின் அன்பு எல்லைகள் விரியும். தனக்கு என்று இருந்ததை எல்லாம் பிள்ளைக்கு என்று கொடுக்கத் தோன்றும். தனக்கு துன்பம் என்றாலும் பரவாயில்லை, பிள்ளை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று இருவரும் நினைப்பார்கள். அது அன்பின் வெளிப்பாடு. 


நான்காவது - அன்புடைமை 


மனைவி, பிள்ளைகள் என்று வந்துவிட்டால் அங்கே அன்புக்கு எங்கே பஞ்சம்?  மனைவிக்கு பிடிக்கும், கணவனுக்கு பிடிக்கும், பிள்ளை விரும்புவான், மகள் இதை ஆசைப் படுவாள் என்று ஒருவருக்கு ஒருவர் கொடுத்து மகிழும் இடமாக இல்லறம் மலரும். குடும்பம் என்பது அன்புப்  பள்ளி. ஒவ்வொரு நாளும் அன்புப் பயிற்சி நிகழும் இடம். 


ஐந்தாவது - விருந்தோம்பல் 


குடும்பம் என்று வந்து விட்டால் விருந்தினர் வருவர். திருமணம் ஆகாத் ஒரு இளைஞனின் வீட்டுக்கு யார் விருந்துக்குப் போவார்கள். அவனே வெளியில் எங்காவது சாப்பிடுவான். மனைவி, பிள்ளைகள் இருக்கும் இடத்துக்கு விருந்தினர் வருவர். அப்படி வரும் விருந்தினரை எப்படி உபசரிப்பது என்று அடுத்துக் கூறுகிறார். விருந்தோம்பலை ஒரு அறமாகக் கொண்டது நம் பண்பாடு. 


(தொடரும்)

 


 

கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல்

 கம்ப இராமாயணம் - சூர்பனகை - உறவினர்களை அழைத்தல் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_28.html


சூர்பனகை படலத்தில் சில பாடல்களை முன்பு சிந்தித்தோம். சூர்பனகையிடம் இராமனும் சரி, இலக்குவனும் சரி நடந்து கொண்ட முறை பற்றி ஆராய்ந்தோம். அது சரியா, தவறா என்ற முடிவை வாசகர்களிடம் விட்டுவிடுவோம்.


ஒரு பெண்ணிடம் அழகாகப் பேசி, அவள் ஆசையை தூண்டிவிட்டு, பின் அவளை ஏசி விரட்டி விட்டதுவரை இராமன் செய்தது. ஆசை கொண்டு வந்த பெண்ணின் மூக்கையும், காதையும், முலையையும் அறுத்து தண்டனை தந்தது இலக்குவன் செயல். 


இலக்குவனால் தண்டிக்கப்பட்ட சூர்பனகை, வலி ஒருபுறம், அவமானம் ஒரு புறம் தாங்காமல் அழுகிறாள். 


அந்தப் புலம்பலிலுமா தமிழை இவ்வளவு அழகாகச் சொல்லுவான் இந்தக் கம்பன். சூர்பனைகையின் சோகத்தில் பங்கெடுத்து அவளுக்காக இரக்கப்படுவதா அல்லது கம்பனின் தமிழில் தோய்ந்து அடடா என்ன ஒரு கவிதை என்று வியந்து மகிழ்வதா? என்று தெரியாமல் நாம் திக்கு முக்காடும் இடம். 


அழுவாதா,  மகிழ்வதா என்று தவிக்கும் இடம். 


முதலில் தன் அண்ணன் இராவணனை கூப்பிட்டு அழுகிறாள். 


"இராவணா, நீ எவ்வளவு பெரிய ஆள் !  சிவன் இருக்கும் அந்த கைலாய மலையையே தூக்கும் மலை போன்ற தோள்களை உடையவன் நீ. உன் முன்னால் தேவர்களும் நிமர்ந்து நடக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட நீ இருக்கும் போது, இந்த தவ வேடம் பூண்ட மானிடர்கள் கையில் வில்லைத் தூக்கிக் கொண்டு அலைவது சரியா"


என்று அண்ணனை நினைத்து புலம்புகிறாள். 


பாடல் 


நிலை எடுத்து, நெடு நிலத்து நீ இருக்க, தாபதர்கள்

சிலை எடுத்துத் திரியும் இது சிறிது அன்றோ? தேவர் எதிர்

தலையெடுத்து விழியாமைச் சமைப்பதே! தழல் எடுத்தான்

மலை எடுத்த தனி மலையே! இவை காண வாராயோ


பொருள்

'நிலை எடுத்து = நிலைத்து நிற்க

நெடு நிலத்து  = பெரிய நிலத்தில்

நீ இருக்க = நீ (இராவணன்) இருக்க.  நெடு நிலத்து நீ நிலை எடுத்து இருக்க என்று வாசிக்க வேண்டும்.

தாபதர்கள்  = தவக் கோலம் கொண்டவர்கள்

சிலை எடுத்துத் = கையில் வில்லை எடுத்து

திரியும் இது = திரிகின்ற இந்த நிலை

சிறிது அன்றோ?  = சிறுமை அல்லவா?

தேவர் = தேவர்கள்

எதிர் = (உன்) எதிரில்

தலையெடுத்து = தலை தூக்கி

விழியாமைச் = விழித்துப் பார்க்காமை

சமைப்பதே! = இருப்பதே

தழல் எடுத்தான்  = கையில் தீயைக் கொண்ட (சிவனின்)

மலை எடுத்த = கைலாய மலையை கையில் எடுத்த

தனி மலையே!  = ஒப்பற்ற மலை போல் வலிமை உடையவனே

இவை காண வாராயோ? = இந்த கொடுமையை காண வர மாட்டாயா ?


நிலை எடுத்து
சிலை எடுத்துத்
தலையெடுத்து
தழல் எடுத்து
மலை எடுத்து

தமிழ்  சொற்கள் கம்பனிடம் கை கட்டி சேவகம் செய்தன. என்னை எடுத்துக் கொள் , என்னை எடுத்துக் கொள் என்று அவன் முன் வரிசையில் நின்றன.

சூர்ப்பனகையின் புலம்பலில் இத்தனை தமிழ் சுவை.


மலை எடுத்த மலையே என்று இராவணனின் ஆற்றலைக்  கூறுகிறாள். 


ஒரு பக்கம் இராவணனின் தங்கை என்ற பெருமிதம், ஆணவம். 


இன்னொரு பக்கம் காமம்.


மறுபுறம் அந்த காமம் மறுக்கப்பட்ட அவலம்.


இன்னொரு புறம் மூக்கும், காதும், முலையும் அறுபட்ட சோகம், வலி. 


ஒரு பெண்ணால் எத்தனை உணர்சிகளை கையாள முடியும். 


காதல் நிராகரிக்கப்பட்டால் பரவாயில்லை. காதலிக்க நினைத்தவனே அவமானபடுத்தி, தண்டித்தால், அந்தத் துன்பத்தை யாரால் தாங்க முடியும்?



Monday, December 18, 2023

திருக்குறள் - இதுவரை - பாகம் 1

 திருக்குறள் - இதுவரை - பாகம் 1 


இதுவரை 24 அதிகாரங்கள் படித்தோம். புகழ் என்ற அதிகாரத்தோடு இல்லறம் முற்றுப் பெறுகிறது. இதுவரை படித்ததை ஒருமுறை மீண்டும் சிந்தித்துப் பார்ப்போம். 


வாழ்க்கை என்பதை நான்கு கூறாக பிரித்துக் கொள்ளலாம். 


அறம், பொருள், இன்பம், வீடு என்று. 


வீடு என்றால் மோட்சம், இறைவனடி, தன்னை உணர்தல் என்று கொள்ளலாம். 


திருக்குறள் வீடு பற்றி பேசவில்லை. அறம், பொருள், இன்பம் பற்றி மட்டுமே பேசுகிறது. ஏன் என்றால் வீட் பற்றி சொல்லி விளக்க முடியாது. அறிவால் உணர முடியாத ஒன்று. அறம், பொருள், இன்பம் இவற்றைச் சரியாக செய்தால், வீடு தானே வரும் என்பது பொருள். 


ஒருவன் ஒரு இடத்துக்குப் போக வழி கேட்கிறான். போகும் வழி சொல்கிறோம். இப்படிச் சென்றால் நீங்கள் தேடும் இடத்தை அடைவீர்கள் என்கிறோம். அந்த இடத்தைப் பற்றி நாம் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால், போகும் வழி பற்றி கூறுகிறோம். அதே போல், வள்ளுவர், போகும் வழி கூறுகிறார். இந்த வழியில் போனால், "வீடு" வந்து சேரும். நீ செல், வரும், கட்டாயம் வரும் என்கிறார். 


எனவே, வீடு பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/1.html


(please click the above link to contiure reading)


மீதி உள்ள அறம், பொருள், இன்பம் என்ற மூன்றில் அறம் பற்றி முதலில் எடுத்துக் கொள்கிறார். 


அறம் என்றால் என்ன?


அதற்கு பரிமேலழகர் மிக எளிமையான, தெளிவான விளக்கம் செய்கிறார். 


அறம் என்பது "விதித்தன செய்தாலும், விலக்கியன ஒழித்தலும்" என்கிறார். 


அதாவது, உயர்ந்த நூல்களில் சொல்லப்பட்டவற்றை செய்வதும், அந்த நூல்கள் எதை செய்யக் கூடாது என்று சொல்கிறதோ அவற்றை செய்யாமல் இருப்பதும். 


இந்த அறம் என்பது ஒழுக்கம், வழக்கு, தண்டனை என்று மூன்று பிரிவுகளைக் கொண்டது. 


இதில் வழக்கு, தண்டனை என்பதை மன்னர்களிடம் விட்டு விட்டார்கள். ஒருவன் ஒழுக்கம் தவறினால் என்ன செய்வது என்ற கேள்வியை மன்னனுக்கு விட்டு விட்டார்கள். மன்னிப்பதும், தண்டிப்பதும், திருத்துவதும் அவன் கடமை. அது எல்லோருக்கும் உரிய செயல் அல்ல என்பதால் அதைத் தவிர்த்து, ஒழுக்கம் என்று சொல்லப் படும் அறம் பற்றி சொல்ல முதலில் ஆரம்பிக்கிறார். 


இந்த அறத்தை இரண்டாக பிரித்துக் கொள்கிறார் வள்ளுவர். 


இல்லறம்

துறவறம் 


இங்கே இல்லறமும், துறவறமும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டது அல்ல. இல்லறத்தின் முதிர்ச்சி துறவறம். ஒரு சிறப்பான இல்லறம், ஒருவனை, இயல்பாக துறவறத்துக்கு இட்டுச் செல்லும். பரந்துபட்ட இல்லறமே துறவறம். துறவறம் என்று தனித்து ஒன்றும் இல்லை. இல்லறம் விரிந்தால் துறவறம். சுருங்கி, ஒரு வட்டத்துக்குள் நின்றால் அது இல்லறம். 


ஆரம்பம் இல்லறம் என்பதால், அதை முதலில் எடுத்துக் கொண்டு அது பற்றி சொல்லத் தொடங்குகிறார். 


தொடரும் 


Monday, December 11, 2023

இனியவை நாற்பது - அலையாமை இனிது

 இனியவை நாற்பது - அலையாமை இனிது 


நாம் ஒரு இக்கட்டில் இருக்கிறோம். நமக்கு ஒரு உதவி தேவைப் படுகிறது. அதை செய்யும் நிலையில் ஒரு நட்போ உறவோ இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவர்களாகவே முன் வந்து செய்திருக்கலாம். செய்யவில்லை. நாம் கேட்கிறோம். அப்போதும் செய்யவில்லை. ஒன்றுக்கு பல முறை கேட்டபின் செய்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 


அப்படி, செய்யமாட்டேன் என்று இருப்பவரை, மீண்டும் மீண்டும் சென்று கேட்பதை விட கேட்காமலே இருப்பது இனிமையானது.


அடுத்ததாக,


இந்த உடல் நிலையானது அல்ல. மரணம் என்றோ ஒரு நாள் கட்டாயம் வரும். அது என்று என்று தெரியாது. அப்புறம் செய்து கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமால் நல்ல காரியங்களை உடனடியாக செய்து விடுவது நல்லது. 


அடுத்தது, 


எவ்வளவு துன்பம் வந்தாலும், அறம் அற்ற செய்யலகளை செய்யாமல் இருப்பது நல்லது. 


பாடல் 


ஆற்றானை யாற்றென் றலையாமை முன்இனிதே

கூற்றம் வரவுண்மை சிந்தித்து வாழ்வினிதே

ஆக்க மழியினும் அல்லவை கூறாத

தேர்ச்சியின் தேர்வினியது இல்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_11.html


(please click the above link to continue reading)


ஆற்றானை = செய்யாதவனை (ஆற்றுதல் = செயல் ஆற்றுதல் ) 


யாற்றென் றலையாமை = செய் என்று அவன் பின்னே அலையாமை (ஆற்று என்று அலையாமை என்று சீர் பிரித்துக் கொள்ள வேண்டும்) 


முன்இனிதே = மிக இனிதானது 


கூற்றம் = காலன், எமன் 


வரவுண்மை = வருகின்ற உண்மை 


சிந்தித்து = அறிந்து கொண்டு 


வாழ்வினிதே = வாழ்வது இனிது 


ஆக்க மழியினும் = சேர்த்து வைத்த அனைத்தும் அழிந்து போகும் என்றாலும் 


அல்லவை = அறம் அல்லாதவற்றை 


கூறாத = சொல்லாத 


தேர்ச்சியின் தேர்வினியது இல் = தெளிந்த தேர்வு செய்வது போன்றது ஒன்று இல்லை 


என்ன ஒழுக்கமாக இருந்து கண்ட பலன் என்ன?  அயோக்கியத்தனம் செய்கிறவன் எல்லாம் மேலே மேலே போய்க் கொண்டு இருக்கிறான். இந்த நீதி, நேர்மை என்று இவற்றைக் கட்டிக் கொண்டு கண்ட பலன் என்ன என்று மனம் தடுமாறாமல், அற வழியில் நிற்கும் நேர்மை நல்லது. இதுதான் சரி என்று தெளிவான சிந்தனையோடு, குழப்பம் இல்லாமல் அற வழியை தேர்ந்து எடுப்பது நல்லது. 


இனியவை நாற்பது என்ற நூலில் இருந்து இந்தப் பாடல். இப்படி நாற்பது பாடல்கள் இருக்கின்றன. 



Friday, December 8, 2023

திருக்குறள் - வாழ்க்கை என்றால் என்ன ?

 திருக்குறள் -  வாழ்க்கை என்றால் என்ன ?


வாழ்க்கை என்றால் என்ன? 


எப்படி வாழ வேண்டும்?  


பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போவது ஒரு வாழ்க்கையா?  ஒருவன் வாழ்ந்தான் என்று சொல்ல வைப்பது எது?  எத்தனையோ பேர் பிறந்து, உண்டு, உறங்கி, பின் வந்தது தெரியாமல் இறந்து போகிறார்கள். அது ஒரு வாழ்க்கையா?


வாழ்கின்ற காலத்தில் ஏதாவது செய்திருப்பானே? ஒன்றுமே செய்யாமல் ஒருவன் எப்படி இருக்க முடியும்?  அப்படி என்னதான் செய்தான் என்ற கேள்வி வரும் அல்லவா?


செய்யும் வேலையை சிறப்பாக செய்து இருந்தால் அவனுக்கு ஒரு பேர் கிடைத்திருக்கும். அதனால் ஒரு புகழ் உண்டாகி இருக்கும். அவனுக்குப் பின்னும், அவன் பேரை மக்கள் சொல்லிக் கொண்டு இருப்பார்கள். அப்படி வாழ்வது ஒரு நல்ல வாழ்க்கை. 


அவனா, அப்படி ஒருவன் இருந்தானா? என்று ஒரு அடையாளமே இல்லாமல் புழு பூச்சி போல் தோன்றி மறைவது ஒரு நல்ல வாழ்க்கையா?


வள்ளுவர் சொல்கிறார், 


"மற்றவர்கள் இகழாதபடி வாழ்பவர்களே வாழ்ந்தவர்கள் என்று  கருதப்படுவார்கள். புகழ் இல்லாமல் வாழ்பவர்கள் , வாழாதவர்களே"


என்று


பாடல் 



வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசைஒழிய

வாழ்வாரே வாழா தவர்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_8.html


(please click the above link to continue reading)



வசையொழிய = பிறர் இகழாதபடி 


வாழ்வாரே  = வாழ்பவரே 


வாழ்வார் = வாழ்கின்றவர் ஆவார் 


இசைஒழிய = புகழ் இல்லாமல் 


வாழ்வாரே = வாழ்பவர்கள் 


வாழா தவர் = வாழாதவர்களாகவே கொள்ளப்படுவர். 


அதாவது புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழோடு வாழ்ந்தால், வாழ்ந்ததாகக் கருதப்படுவர்.


இகழோடு வாழ்ந்தால், அவர்கள் வாழாதவர்களாகவே கருதப்படுவர். 


புகழ் அடையும்படி வாழவேண்டும். இல்லை என்றால் நடைபிணம் தான். 


புகழ் அடைவது என்றால் சாதாரண காரியமா?


என்ன செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், இதில் யார் எவ்வளவு சிறப்பாக செய்து புகழ் அடைந்து இருக்கிறார்கள், அவர்களை விட நாம் எப்படி சிறப்பாக செய்வது என்று எண்ணி, திட்டம் போட்டு,  காரியம் செய்ய வேண்டும். 


ஒரு நாட்டில், ஒவ்வொரு குடிமகனும் இப்படி முயற்சி செய்தால், அந்த நாடு எந்த அளவுக்கு முன்னேறும்?


ஒவ்வொரு தனிமனிதனும், தான் எடுத்துக் கொண்ட முயற்சியில் புகழ் பெற முயல வேண்டும். 




Thursday, December 7, 2023

அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு

 அறநெறிச்சாரம் - அறவுரைக்கு தேவையான நான்கு 


எந்த ஒன்றையும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அது எதனால் ஆக்கப்பட்டது என்று அறிய வேண்டும். ஒரு பொருள் என்றால் அது பல சிறிய பொருள்களின் தொகுப்பு. அந்த சிறிய பொருள்கள் அதனினும் சிறிய பொருள்களின் தொகுப்பு. இப்படி பகுத்துக் கொண்டே போனால், உலகில் உள்ள அத்தனை பொருள்களும் அடிப்படையில் சில மிக நுண்ணிய துகள்களின் தொகுப்பு என்று அறிய முடியும். அந்தத் துகள்களின் தொகுப்புதான் உலகம். 


பிரித்தால்தான் ஆராய முடியும். 


தமிழர்கள் எதையும் சரியான படி பிரித்து, அந்தப் பிரிவுகளின் தன்மைகளை ஆராய்ந்து இருக்கிறார்கள். 


வாழ்வின் நோக்கம் - அறம், பொருள், இன்பம், வீடு என்ற பிரிவுகளை உடையது. 


தமிழ் - இயல், இசை, நாடகம் என்ற பிரிவுகளை உடையது. 


வாழ்க்கை - அகம், புறம் 


அறம் - இல்லறம், துறவறம் 


சுவை - ஆறு சுவை


இசை - ஏழு ஸ்வரங்கள் 


நிலம் - ஐந்து பிரிவு 



இப்படி சரியான படி பிரித்தால், எதையும் நன்றாக புரிந்து கொள்ள முடியும் 


அறத்தின் பிரிவுகள் என்ன ?


அறத்திற்கு நான்கு கூறுகள் என்கிறது அறநெறிச்சாரம். 


அறத்தை சொல்பவன், அதைக் கேட்பவன், சொல்லப்படும் உரை, அதனால் வரும் பயன். 


இந்த நான்கும் அறத்தின் கூறுகள். 


இந்த நான்கிலும், நல்லது, கெட்டது இருக்கும். நல்லவற்றை எடுத்துக் கொண்டு, மற்றவற்றை தள்ளிவிட வேண்டும். 


பாடல் 



உரைப்பவன் கேட்பான் உரைக்கப் படுவ

  துரைத்தனா லாய பயனும் - புரைப்பின்றி

  நான்மையும் போலியை நீக்கி அவைநாட்டல்

  வான்மையின் மிக்கார் வழக்கு.


பொருள் 




(please click the above link to continue reading)


உரைப்பவன் = அறத்தை போதிப்பவன் 


கேட்பான் = அதைக் கேட்கும் மாணவன் 


உரைக்கப் படுவது = சொல்லப்பட்ட அறம் 

 

உரைத்தனா லாய பயனும் = அந்த அறத்தினால் உண்டாகும் பயன் 


புரைப்பின்றி = குற்றம் இன்றி 


நான்மையும் = இந்த நான்கிலும் 


போலியை நீக்கி = நல்லன அல்லாதவற்றை நீக்கி 


அவைநாட்டல் = நல்லதை நிலை நிறுத்துதல் 


வான்மையின் மிக்கார் வழக்கு = ஒழுக்கத்தில் சிறந்தோரது இயல்பு 


அறம் என்பது பயன் நோக்கியது என்று புரிந்து கொள்ள வேண்டும். பலன் இல்லாமல் அறம் செய்வதில் அர்த்தம் இல்லை. 


அறம் சில சமயம் காலத்தோடு ஒன்றாமல் போகலாம். என்றோ சொன்ன அறத்தை காலகாலத்துக்கும் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டிய அவசியம் இல்லை. 


சொல்பவன், கேட்பவன், சொல்லப்படும் அறம், பலன்  - இந்த நான்கிலும் குற்றம் வரலாம் என்கிறது. 


அறத்தில் எப்படி குற்றம் வர முடியும் ?


குறை என்றால், காலத்தோடு ஒவ்வாத அறங்கள். பெண்ணைக் கொல்வது என்பது அறம் அற்ற செயல். இராமன், தாடகை என்ற பெண்ணைக் கொன்றான். அது அறம் வழுவிய செயலா?  தாடகை என்பவள் பெண் உருவில் இருந்தாளே அன்றி பெண்ணின் குணங்கள் இல்லாதவள். அங்கே அறத்தை கொஞ்சம் விரித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. 


குழந்தைத் திருமணம், உடன் கட்டை ஏறுதல் போன்றவை ஒரு காலத்தில் அறம் எனக் கருதப்பட்டது. அதை இப்போது கடைபிடித்தால் அது குற்றம். காலத்தோடு மாற வேண்டும். 


இந்த சொல்பவன், கேட்பவன் இவற்றில் என்ன குற்றம் வந்து விடும்?


பின்னால் அவற்றை விளக்குகிறது இந்த நூல். 


மேலும் சிந்திப்போம். 


 


Wednesday, December 6, 2023

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது

திருக்குறள் - விளைச்சல் நன்றாக இருக்காது 


ஒரு நாட்டில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் துறையில் சிறப்பாக செயல்பட்டு புகழ் உடையவர்களாக இருந்தால் அந்த நாடு எப்படி இருக்கும்?


மாறாக

ஏதோ சொன்ன வேலையை செய்வோம், வர்றது வரட்டும் என்று எல்லோரும் ஏனோ தானோ என்று வேளை செய்தால் எப்படி இருக்கும்?


வள்ளுவர் சொல்கிறார், புகழ் இல்லாதவர்கள் வாழும் நாட்டில், நிலத்தில் நல்ல விளைச்சல் இருக்காது என்று. 


பாடல் 

 

வசைஇலா வண்பயன் குன்றும் இசையிலா

யாக்கை பொறுத்த நிலம்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_6.html


(pl click the above link to continue reading)


வசைஇலா = குற்றம் இல்லாத 


வண் = செழிப்பான, வளமையான 


பயன் = விளைச்சல் 


குன்றும் = குறையும், எப்போது என்றால் 


இசையிலா = புகழ் இல்லாத 


யாக்கை = உடம்பை 


பொறுத்த நிலம் = பொறுத்து தாங்கி கொண்டிருக்கும் நிலம் 


அது எப்படி, புகழ் இல்லாதவர்களை சுமந்த நிலம் குறைந்த விளைச்சல் தரும் ? புகழுக்கும், விளைச்சலுக்கும் என்ன சம்பந்தம் வள்ளுவர் சார் ?


"பயன்" என்ற சொல்லுக்கு விளைச்சல், உற்பத்தி, என்று கொள்ளலாம். புகழ் விரும்பி இருப்பவர்கள், புகழ் பெறவும், பெற்ற புகழை தக்க வைத்துக் கொள்ளவும் சிறப்பாக செயல்படுவார்கள்.  அப்படி அவர்கள் செயல்படும் போது, அந்த செயல்களின் விளைவு உற்பத்தியை மேலும் பெருக்கும் என்பது கருத்து. 


"இசை இல்லா யாக்கை" என்றார். புகழ் இல்லாமல் ஒருவன் வாழ்கிறான் என்றால்  அவனை உயிர் உள்ள மனிதனாகக் கூட வள்ளுவர் மதிக்கவில்லை. அது ஒரு உடம்பு என்கிறார். யாக்கை என்றால் உடம்பு. எலும்பு, நரம்பு, இரத்தம் என்றவற்றால் கட்டப்பட்டதால், இதற்கு யாக்கை என்று பெயர். யாக்குதல், கட்டுதல். 


நிலம் ஏன் குறைவாக விளையும் என்றால், புகழ் இல்லாத மனிதர்கள், பெரிய முயற்சி எடுக்க மாட்டார்கள். அதனால் பொருள் விரயம், சுற்றுப் புற சூழ்நிலை மாசு படுதல் போன்ற பல தவறுகள் நிகழலாம். 


ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு நெல் விளையும் என்றால், அதையே சிறப்பாகச் செய்தால் அதிக மகசூல் பெறலாம், குறைவான நீரை பயன்படுத்தாலாம், பூச்சிக் கொல்லி, இரசாயன உரம் போன்றவற்றை முடிந்தவரை தவிர்த்து உயர்தர விளைச்சலை, குறைந்த செலவில் பெற்றுத் தரலாம். அதற்கெல்லாம் முயற்சி வேண்டும், கடின உழைப்பு வேண்டும். 


அப்படி இல்லாதவர்கள் ஊரில், விளைச்சல், பயன் குறைவாகக் கிட்டும் என்கிறார். 


சிந்திக்க வேண்டிய விடயம். 


எதையும் சிறப்பாக செய்ய வேண்டும், அனைவரும் பாராட்டும்படி செய்ய வேண்டும். 


 




Tuesday, December 5, 2023

அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள்

 அறநெறிச்சாரம் - நீங்கள் புண்ணியம் செய்தவர்கள் 


இந்த உலகில் கெட்டுப் போக எவ்வளவோ வழிகள் இருக்கின்றன. அதில் எல்லாம் போய் மாட்டிக் கொள்ளாமல், இருக்கிறீர்களே, யார் செய்த புண்ணியமோ. 


அறநெறிச்சாரம் என்ற நூல் அறம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது. அறம் என்றால் என்ன, அதை யார் சொல்லலாம், யாருக்குச் சொல்லலாம், யார் சொல்லக் கூடாது, யாருக்குச் சொல்லக் கூடாது, அறத்தின் பயன் என்ன, அதை எப்போது செய்ய வேண்டும் என்று அக்கு வேறு ஆணிவேராக பிரித்துப்  பிரித்துத் தருகிறது. 


அறம் என்றால் என்ன, அதை நம்மவர்கள் எப்படி கடைப் பிடித்தார்கள், நமது கலாச்சாரம் என்ன, என்றெல்லாம் தெரிந்து கொள்ள முடியும். 


முழு நூலையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. 


முதலாவதாக, 


"இந்த உலகில் பாவத்தை எடுத்து உரைக்கும் நூல்கள் பல இருக்கின்றன. காமம், ஆசை இவற்றைத் தூண்டும் நூல்கள் பல இருக்கின்றன. அது போல இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தராத நூல்கள் ஆயிரக் கணக்கில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் விட்டு விட்டு, இந்த நூலை படிக்க வேண்டும் என்று நினைத்தீர்களே, நீங்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள்தான்" 


என்று கூறுகிறது. 


பாடல் 


மறவுரையும் காமத் துரையும் மயங்கிய 

பிறவுரையும் மல்கிய ஞாலத்-தறவுரை

கேட்கும் திருவுடை யாரே பிறவியை

நீக்கும் திருவுடையார்.



பொருள் 




(please click the above link to continue reading)


மறவுரையும் = அறம் அல்லாத உரைகளையும் (பாவத்தைத் தூண்டும்) 


காமத் துரையும் = காமத்து உரையும் = காமம், ஆசை பற்றி பேசும் நூல்களும் 


மயங்கிய = குழப்பம் தரும் 

 

பிறவுரையும் = பிற நூல்களும் 


மல்கிய = நிறைந்த 


ஞாலத்-= இந்த உலகில் 


தறவுரை = அறவுரையை 


கேட்கும் = கேட்கப் பிரியப் பட்டு வந்துள்ள நீங்கள் 


 திருவுடை யாரே = புண்ணியம் செய்தவர்களே 


பிறவியை = இந்தப் பிறவியில் இருந்து 


நீக்கும் = விடுபடும் 


திருவுடையார் = புண்ணியம் உள்ளவர்கள் 


அறவுரையை கேட்பவர்கள் புண்ணியம் பண்ணியவர்கள். அவர்களே இந்தப் பிறவிப் பிணியில் இருந்து விடுபடும் பேறு பெற்றவர்கள். 


அரவுரையைக் கேட்டாலே போதும். அது உள்ளே போகும். மனதில் படியும். சொல்லில், செயலில் கட்டாயம் வெளிப்படும். தவறு செய்வதை மனசாட்சியாக நின்று தடுக்கும். 


வீட பேற்றுக்கு வழி செய்யும். 


aஅந்தக் காலத்திலேயே குப்பைப் புத்தகங்கள் இருந்து இருக்கு. நல்ல புத்தகங்கள், குப்பை புத்தகங்கள் என்று இருக்க வேண்டும் என்றால் மொழியும், மொழி வழி எண்ணங்களை புத்தக வடிவில் பகிர்ந்து கொள்ளும் முறையும் எந்த அளவுக்கு வளர்ச்சி பெற்று இருக்க வேண்டும் !


புத்தகம் என்று சொல்லவில்லை...உரை என்று சொல்கிறது. ஓலைச் சுவடிகளோ, அல்லது வேறு எந்த விதத்திலோ இவை எல்லாம் இருந்திருக்கின்றன. 


சிறந்த புத்தகங்களை தேடிப் பிடித்து படிப்பது என்பது ஒரு கலை. 


முதலில் புத்தகங்களை கண்டு பிடிக்க வேண்டும். பின் படிக்க வேண்டும். பின், அவை புரிய வேண்டும். பின் அதன் படி நடக்க வேண்டும்....







 

Saturday, December 2, 2023

திருக்குறள் - இது இல்லேனா அது

 திருக்குறள் - இது இல்லேனா அது 


புகழ் அடைவது நல்லதுதான். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், எல்லோராலும் புகழ் அடைய முடிவது இல்லை. புகழ் இல்லாமல், ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், படித்தோம், வேலை பார்த்தோம், திருமணம் செய்தோம், பிள்ளைகளப் பெற்றோம், அவர்களை வளர்த்தோம் என்று இருந்து விட்டு போவதில் என்ன பிரச்சனை. 


புகழ் அடைந்தே ஆக வேண்டும் என்று கட்டாயமா? புகழ் இல்லாமல் எத்தனையோ பேர் வாழ்ந்து மறையவில்லையா? நானும் அப்படி இருந்துவிட்டுப் போகிறேன். எனக்கு புகழ் எல்லாம் வேண்டாம் என்று ஒருவர் சொல்லலாம்.


வள்ளுவர் கேட்கிறார்,


சரி. புகழ் இல்லாமல் வாழ்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த வாழ்க்கைக்கு என்ன பெயர்? "சாதாரண வாழ்க்கை" என்று கூறலாமா என்றால் கூடாது என்கிறார் பேராசான்.


புகழ் இல்லாத வாழ்க்கை சாதாரண வாழ்க்கை இல்லை, அது ஒரு இழிவான வாழ்க்கை என்கிறார். 


புகழ் இல்லை என்றால் உனக்கு இகழ்தான் கிடைக்கும் என்கிறார். 


இது என்ன புதுக் கதையாக இருக்கிறதே...நீ நீதிபதி ஆகாவிட்டால் திருடன் என்று சொல்லுவது போல இருக்கிறதே என்று நீங்கள் நினைக்கலாம். 


பாடல் 


வசைஎன்ப வையத்தார்க்கு எல்லாம் இசையென்னும்

எச்சம் பெறாஅ விடின்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post_2.html

(please click the above link to continue reading)


வசைஎன்ப = இகழ்ச்சி என்று சொல்லுவார்கள் 


வையத்தார்க்கு = உலகில் வாழும் மக்களுக்கு 


எல்லாம் = அனைவருக்கும் 


இசையென்னும் = புகழ் என்ற 


எச்சம் = மிகுதியைப் 


பெறாஅ விடின் = பெறாவிட்டால் 


இசை என்றால் புகழ் என்று பொருள். 


இசை இல்லாவிட்டால் வசைதான் என்கிறார். 


ஏன் அப்படி? வள்ளுவர் சொல்லிவிட்டால் நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமா? 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. எதில் புகழ் அடைய முடியாது? எதை எடுத்தாலும் அதில் புகழ் பெற முடியும். இந்தத் துறையில் புகழ் பெற முடியாது என்று ஒன்றே கிடையாது. என்ன செய்தாலும் அதில் புகழ் பெறலாம்.


"என்ன அருமையா பிள்ளைகளை வளர்த்து இருக்கிறா"


அது கூட ஒரு புகழ்தான். 


இப்படி ஆயிரம் வழி இருக்க, ஒன்றும் செய்யாமல் இருந்தால் ஊர் என்ன சொல்லும் ?


"யாரு அவனா, ஏதோ இருக்கான்...ஒரு பைசாவுக்கு புண்ணியம் இல்லை" 


என்று சொல்லும். அது இகழ்ச்சிதானே?


ஒரு வேலைக்கு மனு போடுகிறோம். எவ்வளவு மதிப்பெண் என்று பார்த்தால் ஏதோ 50% /60% வாங்கி இருக்கிறோம். அந்த நிறுவனத்தில், விண்ணப்பங்களை சரி பார்க்கும் கடை நிலை ஊழியன், அந்த விண்ணப்பத்தை நேரே குப்பை தொட்டியில் தூக்கி போட்டு விடுவான். 


"அவனவன் 90%, 95% என்று வாங்கிட்டு வேலைக்கு அலையிரானுக, இவரு 50% வாங்கிட்டு வெக்கம் இல்லாம வேலைக்கு மனு வேறு போட வந்துட்டான்" நு மனதுக்குள்ளாவது திட்டுவானா இல்லையா?


சிறந்த மதிப்பெண் பெற்றால் புகழ். அது வாங்காவிட்டால், இகழ்தான். 50% சதவீதம் புகழ் கிடையாது. புகழ் இல்லாவிட்டால் இகழ்.


எனவே, புகழ் வேண்டாம் என்று இருந்தால், இகழ் கிடைக்கும். அது பரவாயில்லையா?





Friday, December 1, 2023

தேவாரம் - பார்த்தா சிரிப்பா வருது

 தேவாரம் - பார்த்தா  சிரிப்பா வருது 


பக்தி என்பது ஏதோ எந்நேரம் பார்த்தாலும் பஜனை, பூஜை, புனஸ்காரம் செய்து கொண்டு, வாழ்கையை முழுவதுமாக நிராகரிப்பது அல்ல. வாழ்க்கையை இரசிப்பதும், அனுபவிப்பதும் பக்தியோடு சேருமா?


ஐயையோ, புலன் இன்பமா? அபச்சாரம், அபச்சாரம் என்று கன்னத்தில் போட்டுக் கொள்வதுதானா பக்தி. 


வாழ்வின் ஒவ்வொரு இன்பத்தையும் மறுதலித்துக் கொண்டே போனால், எப்படி இருக்கும்? புலன்கள் ஒரு புறம் இழுக்கும். மறு புறம் போகாதே என்று பக்தி தடுக்கும். இந்தச் சண்டையில் யார் வென்றாலும் தோற்பது நீங்கள்தான். 


பக்தி வென்று, புலன் இன்பங்களை எல்லாம் துறந்தால், அத்தனையும் இழந்து விட்டோமே என்ற ஏக்கம் மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருக்கும். 


மாறாக, புலன் இன்பங்கள் வென்று, பக்தி தோற்றால், இப்படி சிற்றின்பங்களுக்கு ஆட்பட்டு, பேரின்பத்தை இழந்துவிட்டேனே என்று தோன்றும். 


நம் பக்தி இயற்கையை, வாழ்வை, ஆன்மீகப் பாதையில் இருந்து பிரித்து வைப்பது இல்லை. இயற்கையை மீறி, இயற்கைக்கு எதிராக செல்வது அல்ல நம் ஆன்மிகம். இயற்கையோடு ஒன்றிப் போவது. 


அது ஒரு குளம். அந்த குளத்தின் அருகில் முடத்தாழை மரம் இருக்கிறது. அந்த மரத்தின் கிளை அந்தக் குளம் நோக்கி தாழ்ந்து இருக்கிறது. அந்தக் கிளையில் உள்ள மலரின் நிழல் குளத்தில் விழுகிறது. அந்த நிழலை குருகு என்று எண்ணி அந்தக் குளத்தில் இல்ல மீன்கள் பயந்து, தாமரை இலையின் பின்னே ஒளிந்து கொள்கிறது. அதைப் பார்த்த, அருகில் இருந்த கடலில் இருந்த முத்துக்கள் சிரித்ததாம். 


அது சரி, இந்தப் பாடலுக்கும், இதற்கு முன் சொன்ன முகவுரைக்கும் என்ன சம்பந்தம் ?


இந்த அர்த்தம் தொனிக்கும் கவிதையை எழுதியவர் திருஞான சம்பந்தர். சிவ பெருமான் மேல் எழுதிய கவிதை. 


 பாடல் 


விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்  தண்புறவில்,

மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,

தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின்பூ மறைய,

கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.


பொருள் 

https://interestingtamilpoems.blogspot.com/2023/12/blog-post.html


(Please click the above link to continue reading)


விடம் = விஷம் 


உண்ட = சாப்பிட்ட 


மிடற்று = கழுத்தை, தொண்டையை உடைய 


அண்ணல் = பெரியவன் 


வெண்காட்டின் = திரு வெண்காடு என்ற தலத்தில் 


 தண்புறவில் = குளிர்ந்த வெளியில் 


மடல் = பூவிதழ் 


விண்ட  = விரித்த 


முடத்தாழை = முடத்தாழை என்ற மரத்தின் 


மலர் = மலரின் 

 


 நிழலைக் = நீரில் விழுந்த நிழலை 


குருகு என்று = குருகு என்ற சிறு பறவை என்று எண்ணி 

,

தடம் = குளத்தில் உள்ள 


மண்டு = வாழும் 


துறைக் கெண்டை = கெண்டை மீன் 


தாமரையின்பூ மறைய = தாமரை பூ கொடியின் இலையின் கீழே சென்று மறைய 


கடல் விண்ட = கடலில் வாழும் 


கதிர் முத்தம் = ஒளிக் கதிர் வீசும் முத்துக்கள் 


நகை காட்டும் = அதைப் பார்த்து சிரிக்கும் 


காட்சியதே = காட்சியதே 


சமயக் குரவர்களில் நால்வரில் ஒருவரான திருஞான சம்பந்தர், குளத்தில் வாழும் மீன் நீந்திப் போவதைப் பார்த்து , இரசித்து, அது மலரின் நிழலுக்கு பயந்து இலையின் அடியில் சென்று ஒளிந்து கொள்வதாக கற்பனை பண்ணி, அதை கண்டு முத்து சிரிப்பதாக கவிதை வரைகிறார். 


இதில் பக்தி எங்கே வந்தது? 


அது தான் பக்தி, இயற்கையோடு ஒன்றிப் போவது, உலகை உள்ளபடி இரசிப்பது, அதில் தன்னை மறந்து ஒன்றிப் போவது...அதுதான் பக்தி. 


ஒவ்வொரு படைப்பும், ஆகச் சிறந்த ஒன்றுதான். உலகம் ஆனந்த மயமானது. அதை இரசிப்பது, அந்த ஆனந்தத்தோடு ஒன்றுவது பக்தி. 


வாழ்கையை இரசியுங்கள். எப்போது பார்த்தாலும் இல்லாத ஒன்றை நினைத்து கனவு கண்டு கொண்டு இருக்காமல், உண்மையில் இருப்பதை கண்டு மகிழுங்கள். 


இந்த ஒரு நொடி மாத்திரமே உண்மை. நேற்றும், நாளையும் பொய்த் தோற்றங்கள். 


மரம், குளம், மீன், குருகு, தாமரை இலை...இதுதான் உண்மை. இதில் மனதை வையுங்கள். நாளைய பற்றிய கனவையும், நேற்றைய பற்றிய கவலைகளையும் விட்டு ஒழியுங்கள்.


அது என்ன விடம் உண்ட கண்டர்?


விஷத்தை எதற்கு உண்டார்? அது விஷம் என்று சிவனுக்குத் தெரியும்தானே. பின் அதை ஏன் உண்ண வேண்டும்? பின் அதை தொண்டைக் குழியிலேயே நிறுத்த வேண்டும்? 


மேலும் சிந்திப்போம்....


Thursday, November 30, 2023

திருக்குறள் - என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..

 திருக்குறள் -  என்ன செய்தாலும் புகழ மாட்டேன் என்கிறார்களே..


என்ன செய்தாலும், பாராட்டி ஒரு வார்த்தை கிடையாது. என்ன செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறை கண்டு பிடித்து, நம்மை குறை சொல்வதையே எல்லோரும் வழக்கமாக கொண்டு இருக்கிறார்கள். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி இதுதான் வழக்கமாக இருக்கிறது. இதில் எங்கிருந்து புகழ் பெறுவது. 


ஒருவருக்கும் பாராட்டும் மனம் இல்லை. இவர்கள் மத்தியில் புகழ் பெறுவது என்பது நடவாத காரியம்....


இது எல்லோருக்கும் நடப்பதுதான். செஞ்சு செஞ்சு அலுத்துப் போய், புகழும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம் என்று விட்டு விடத் தோன்றும். 


வள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். 


பாடல் 


புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_30.html


(please click the above link to continue reading)


புகழ்பட = புகழ் கிடைக்கும்படி 


வாழாதார் = வாழ்க்கையை நடத்தாதவர்கள் 


தம்நோவார் தம்மை = தன்னைத் தான் நொந்து கொள்ளாமல் 


இகழ்வாரை  = தம்மை இகழ்பவர்களை 


நோவது எவன் = குறை சொல்வது எதனால் ?


நீ புகழ் அடையாமல் இருப்பதற்கு காரணம் நீ தான், இதற்கு எதற்கு மற்றவர்களை குறை சொல்கிறாய் என்று வள்ளுவர் கேட்கிறார். 


ஏன் மற்றவர்கள நம்மை குறை சொல்லப் போகிறார்கள்?  அவர்களுக்கு வேறு வேலை இல்லையா என்றால், அதற்கு பரிமேலழகர் பதில் தருகிறார். 


புகழ் அடைய ஆயிரம் வழிகள் இருக்கிறது. அப்படி இருக்க, ஒன்றையும் செய்யாமல், புகழ் இல்லாமல் வாழ்பவனை உலகம் ஏசத்தான் செய்யும். 


முயன்றால் எந்த வழியிலும் புகழ் அடையலாம். 


புகழ் என்றால் ஏதோ ஜனாதிபதி கையால் பரிசு வாங்க வேண்டும், மெடல் வாங்க வேண்டும் என்று இல்லை. 


வகுப்பில் முதலாவதாக வருவதும் புகழ்தான். 


அட, இன்னைக்கு காப்பி சூப்பர் என்று பாராட்டு பெறுவதும் புகழ்தான்.


அவங்க வீட்டுக்குப் போய் இருந்தேன். வீட்டை என்னமா அழகா வச்சிருக்கு அந்த பொண்ணு...என்று சொல்லப் படுவதும் புகழ்தான். 


குப்பை போல வீடு, எப்பவும் போல ஒரே மாதிரி சாப்பாடு, ஏதோ படித்தோம், தேர்ச்சி பெற்றோம் என்று படிப்பு என்று இருந்தால், உலகம் இகழத்தானே செய்யும். 


அதற்கு காரணம் யார்? அவர்கள் இல்லை, நாம் தான். 


எதையும், சிறப்பாகச் செய்ய வேண்டும், மற்றவர்கள் புகழும்படி செய்ய வேண்டும், நல்ல பேர் எடுக்க வேண்டும். 


ஆங்கிலத்தில் "your job is not done until you get the wow effect" என்று. 


சமையல் செய்வது ஒரு கலை என்றால் அதை பரிமாறுவதும் ஒரு கலைதான். பொரியல் நன்றாக இருக்கிறது என்று அதைச் செய்த இருப்புச் சட்டியோடு கொண்டு வந்து பரிமாறினால் எப்படி இருக்கும்?  அதை இன்னொரு அழக்கான பாத்திரத்தில், கொஞ்சமாக எடுத்து, அதற்கு என்று ஒரு தனிக் கரண்டி போட்டு, பரிமாறினால் அழகாக இருக்கும் அல்லவா. 


நல்ல துணி என்றாலும், அழுக்காக, சுருக்கம் சுருக்கமாக அதை அணிந்து கொண்டால் எப்படி இருக்கும்?  


எதையும், நேர்த்தியாக, அழுகுபட செய்தால், புகழ் கிடைக்கும். அது நம் கையில் தான் இருக்கிறது. 


வள்ளுவரும், பரிமேலழகரும் இவ்வளவு மெனக்கெட்டதை, ஔவை கிழவி  மூன்றே வார்த்தையில் சொல்லிவிட்டுப் போய் விட்டாள். 


"செய்வன திருந்தச் செய் "



அவ்வளவுதான். 


முயல்வோம்.


Wednesday, November 29, 2023

நாலடியார் - வயதான காலத்தில்

 நாலடியார் - வயதான காலத்தில் 


ஒருவன் அல்லது ஒருத்தி எவ்வளவு பாடுபட்டு உழைத்து கணவன்/மனைவி/பெற்றோர், பிள்ளைகள், உறவு, நட்பு என்று எல்லோரையும் அரவணைத்துச் சென்றாலும், வயதான காலத்தில், அவர்களுக்கு மதிப்பு குறைவது என்பது இயல்பு. 


"கிழத்துக்கு வேற வேலை இல்லை, எதையாவது பிதற்றிக் கொண்டே இருக்கும்"


"காதும் கேக்குறது இல்ல, சும்மா இருன்னு சொன்னாலும் இருக்கிறது இல்ல"


"உனக்கு ஒண்ணும் தெரியாது, பேசாம வாய மூடிகிட்டு சிவனேன்னு இறேன்"


இது போன்றவற்றை கேட்க வேண்டி இருக்கும். நேரடியாக முகத்துக்கு நேரே சொல்லாவிட்டாலும், பின் புறம் பேசுவார்கள். 


என்ன செய்யலாம்?


வயதாகி, படுக்கையில் விழும் முன், நமக்கு எது நல்லதோ, அதைச் செய்து கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நல்லது செய்கிறேன், எனக்கு வேண்டியதை அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்தால், அந்த அப்புறம் வரும் போது உடலில் வலு இருக்காது. 


அப்போது வருந்திப் பயன் இல்லை. என்ன செய்தாலும், முதுமை வந்தே தீரும். உடலும், மனமும், மூளையும் செயல் குறையும். அதெல்லாம் இப்ப வராது, வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று இருப்பது அறிவீனம். 


பாடல் 


மூப்புமேல் வாராமை முன்னே அறவினையை

ஊக்கி அதன்கண் முயலாதான் - நூக்கிப்

புறத்திரு போகென்னும் இன்னாச்சொல் இல்லுள்

தொழுத்தையாற் கூறப் படும்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_29.html


(pl click the above link to continue reading)


மூப்பு = வயதாகுதல் 


மேல் வாராமை = மேல் வரும் நாட்களில் வருவதை, அல்லது உண்டது வாய் வழியும், மூக்கு வழியும் வருவது. வயதான காலத்தில் வாயில் நீர் வழிவது இயற்கை. 


முன்னே = அதற்கு முன்னே 


அறவினையை = அறம் சார்ந்த செயல்களை 


ஊக்கி = முயன்று செய்து 


அதன்கண் = அச்செயல்களை 


முயலாதான் = செய்ய முயற்சி செய்யாதவன் 


நூக்கிப் = தள்ளி வைத்து, நீக்கி வைத்து 

 

புறத்திரு = புறத்து இரு. வெளிய போய் இரு 


போ = இருந்து என்ன செய்யப் போற. போ(ய் தொலையேன்) 


கென்னும் = என்று சொல்லும் 


இன்னாச்சொல் = கொடிய சொற்களை 


 இல்லுள் = சொந்த வீட்டில் 


தொழுத்தையாற் = வேலைக்காரர்களால்  


கூறப் படும். = கூறப் படுவீர்கள் 


வீட்டில் உள்ள மனைவி, மகன், மருமகள், பேரப் பிள்ளைகள் அல்ல, வீட்டில் வேலை செய்பவர்கள் கூட வயதானவர்களை  மதிக்க மாட்டார்கள். 


அப்படிச்செய்து இருக்கலாம், இப்படிச் செய்து இருக்கலாம் என்று வயதான காலத்தில் வருத்தப் பட்டு பலன் இல்லை. 


இப்போதே அறவினைகளை செய்யத் தொடங்க வேண்டும். 




Sunday, November 26, 2023

திருக்குறள் - புகழோடு தோன்றுக

 திருக்குறள் - புகழோடு தோன்றுக 


இன்று நாம் காண இருக்கும் குறள் நாம் பலமுறை கேட்டு, குழம்பிய குறள். 



தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று


தோன்றினால் புகழோடு தோன்ற வேண்டும். இல்லை என்றால் தோன்றாமல் இருப்பது நல்லது என்பது நேரடியான பொருள். 


இதற்கு, பிறந்தால் புகழோடு பிறக்க வேண்டும், இல்லை என்றால் பிறக்காமலே இருப்பது நல்லது என்று பொருள் எடுக்கலாம். 


பிறப்பது நம் கையில் இல்லை. பிறந்து, வளர்ந்து, புகழ் அடையலாம். அது சாத்தியம். பிறக்கும் போதே எப்படி புகழோடு பிறப்பது? குழப்பமாக இருக்கிறது. 


சிலர், தோன்றில் என்ற சொல்லுக்கு, ஒரு துறையில் நுழைதல் என்று பொருள் கொண்டு. எந்த ஒரு வேலையில் இறங்கினாலும், அதை சிறப்பாக செய்து, அதில் நல்ல பேரும் புகழும் பெற வேண்டும். இல்லை என்றால் ஏதோ நானும் செய்தேன் என்று ஒரு செயலை செய்வதை விட, செய்யாமல் விடுவதே நல்லது என்று பொருள் சொல்கிறார்கள். கேட்க சரியாகத்தான் இருக்கிறது. 


படிக்கப் போகிறாயா, அகில இந்திய அளவில் முதல் மாணவனாக வர வேண்டும்.  ஓடப் போகிறாயா, ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்க வேண்டும். என்று உயர்ந்த புகழ் அடையும் நோக்கத்தில் எந்தத் துறையிலும் இறங்கு என்று சொல்லுவதாக பொருள் சொல்கிறார்கள். 


ஆனால், பரிமேலழகர் அப்படிச் சொல்லவில்லை. 


பரிமேலழகர் உரை தவறாக இருக்க வாய்ப்பு இல்லை. அவ்வளவு நுண்ணியமாக படித்தவர். அவர் என்ன சொல்கிறார் என்றால், 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_26.html


(pl click the above link to continue reading)


"மக்களாய் பிறப்பதாய் இருந்தால் புகழோடு பிறக்க வேண்டும். இல்லை என்றால் விலங்காகப் பிறப்பது நல்லது"


என்கிறார். 


சிக்கல்தான். 


எப்படி அவர் இந்த மாதிரி பொருள் சொல்ல முடியும் என்று அவரே விளக்குகிறார். 


"அஃதிலார்" - அப்படி இல்லாதவர்கள் என்பது உயர் திணை. எனவே, தோன்றுதல் என்பது மனிதர்களைக் குறிக்கும் என்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும் என்றும் பிரித்துக் கொள்கிறார். 


மக்களாக பிறக்காவிட்டால், பிறக்காமலேயே இருந்து விடலாம் என்று அல்ல. பிறப்பது என்பது வினைப் பயன்.  அதைத் தடுக்க முடியாது. மக்களாய் பிறக்காவிட்டால், விலங்காகப் பிறக்க வேண்டும். அது நல்லது என்கிறார். 


ஏன் நல்லது?


விலங்குகள் படிக்கவில்லை, தான தர்மம் செய்யவில்லை, அன்பு செலுத்தவில்லை, பொருள் தேடவில்லை என்று யாரும் குறை சொல்ல மாட்டார்கள். "அது ஒரு சரியான முட்டாள் மாடு" என்று யாரும் ஒரு மாட்டை இழித்துச் சொல்ல மாட்டார்கள். அது படிக்காவிட்டாலும், அதன் மேல் பழி விழாது. ஆனால், மக்கள், முட்டாளாக இருந்தால், "அதோ போகிறான் பார், சரியான மர மண்டை " என்று இகழ்வார்கள். 


அப்படி என்றால் என்ன சொல்ல வருகிறார்?


புகழ் இல்லையா, நீ விலங்கை விட கேவலம் என்கிறார். புகழ் இல்லாத விலங்கு ஒன்றும் பாதகம் இல்லை. புகழ் இல்லாத மனிதன், பழி சுமக்க வேண்டி வரும். 


மனிதர்களுக்கு என்று கடமைகள் இருக்கிறது. அவற்றைச் சிறப்பாக செய்ய வேண்டும். 


அது ஒரு புறம் இருக்கட்டும். 


நாம் செய்யும் நல் வினை, தீ வினைகள் புண்ணிய, பாவங்களாக மாறி அடுத்த பிறவியில் நமக்கு அவற்றின் பலன்களைத் தரும். 


பரிமேலழகர் உரை செய்யும் போது, "புகழ்" என்பதற்கு "புகழ் அடைவதற்கான குணங்களோடு" என்று உரை செய்கிறார். 


பிறக்கும் போதே புகழ் அடையும் குணங்களோடு பிறக்க வேண்டும். 


அது எப்படி வரும்? முற்பிறவியில் செய்த நல்வினையால் வரும். 


எனவே, அடுத்த பிறவி மனிதப் பிறவியாக இருக்க வேண்டும் என்றால், இப்போது நல்லது செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அடுத்த பிறவியில், புகழுக்கு உரிய நற் குணங்களோடு பிறப்போம். புகழும் அடைவோம்.


எனவே, இப்போது நல்லது செய்ய வேண்டும். 


புகழ் ஒரு பிறவியில் வருவது அல்ல. 


"எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் , மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்"


என்பார் மணிவாசகப் பெருந்தகை. 


அவ்வளவு பிறவி வேண்டி இருக்கிறது.




Saturday, November 25, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே

 நாலாயிர திவ்ய பிரபந்தம் - இத்தனை நாளா இது தெரியாம போச்சே 


அயல்நாட்டுக்கோ அல்லது ஒரு அழகிய மலை பாங்கான இடத்துக்கோ, அல்லது ஒரு அழகிய கடற்கரைக்கோ சுற்றுலா போகிறோம். அந்த இடம் மிக அழகாக இருக்கிறது. இரசிக்கிறோம். 


"அடடா, இப்படி ஒரு இடம் இருப்பது இத்தனை நாளா தெரியாம போச்சே...தெரிஞ்சுருந்தா முன்னாலேயே வந்திருக்கலாமே ..." என்று மனம் நினைக்கும் அல்லவா?  


"இத்தனை நாளா இதை miss பண்ணிவிட்டோமே" என்று மனம் வருந்தும் அல்லவா?


அது போல,


திருமங்கை ஆழ்வார் சொல்கிறார் "பெருமாளே உன் திருவடிகளை வந்து அடைந்து விட்டேன். இது தெரியாமல் இத்தனை நாள், இந்த பெண்கள், உலக இன்பங்கள் என்று அலைந்து திருந்தி என் வாழ் நாளை வீணடித்து விட்டேனே" என்று  வருந்துகிறார். 


பாடல் 



சிலம்படியுருவிற்கருநெடுங்கண்ணார் திறத்தனாயறத்தயேமறந்து,

புலம்படிந்துண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினைவாளா,

அலம்புரிதடக்கையாயனே மாயா!  வானவர்க்கரசனே!, வானோர்

நலம்புரிந்திறைஞ்சுன்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்.


சீர் பிரித்த பின் 


சிலம்பு அடி உருவில் கரு நெடுங் கண்ணார் திறத்தனாய் அறத்தையே மறந்து,

புலம் படிந்து உண்ணும் போகமேபெருக்கிப் போக்கினேன் பொழுதினை வாளா,

அலம் புரி தடக்கையாயனே மாயா!  வானவர்க்கு அரசனே!, வானோர்

நலம் புரிந்து இறைஞ்சு உன் திருவடி அடைந்தேன்  நைமிசாரணியத்து உள் எந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_25.html


(pl click the above link to continue reading)


சிலம்பு அடி = கொலுசு அணிந்த கால்கள் 


உருவில் = அவர்கள் மேல் 


கரு  = கருமையான 


நெடுங்  = நீண்ட 


கண்ணார் = கண்களை உடைய பெண்கள் 


திறத்தனாய் = அவர்கள் பின்னே போய் 


அறத்தையே மறந்து = அற நெறிகளை மறந்து 


புலம் படிந்து = புலன்களின் பின்னால் 


 உண்ணும் போகமே  = போகத்தை அனுபவித்து 


பெருக்கிப் = அவற்றையே பெரிது என்று எண்ணி 


போக்கினேன் = வீணாக போக்கினேன் 


பொழுதினை வாளா = என் வாழ்நாளை வீணாக 


அலம் புரி = பக்தர்கள் போதும் போதும் என்று கூறும் அளவுக்கு அள்ளி அள்ளித் தரும் 


தடக்கையாயனே  = நீண்ட  கைகளை உடையவனே 


மாயா!  = மாயவனே 


வானவர்க்கு அரசனே!, = தேவர்களுக்கு அரசனே 


வானோர் = வானவர்களுக்கு 


நலம் புரிந்து = நன்மை பல புரிந்து 


இறைஞ்சு = வேண்டும் 


உன் திருவடி அடைந்தேன் = உன் திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்து = நைமிசாரண்யத்தில் 


உள் எந்தாய் = உள்ள என் தந்தையே 


ஒரு வழியாக உன் திருவடிகளை அடைந்து விட்டேன். இதற்கு முன் பெண்கள், புலன் இன்பங்கள் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன். இறுதியில் உன் திருவடிகளை அடைந்து விட்டேன்.


எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உண்டு. 


ஆண் பெண் ஈர்ப்பு என்பது ஒரு இயற்கையான விடயம்தானே. அதை ஏன் இவ்வளவு பெரிய விடயமாக்க வேண்டும். ஆன்மீகத்தில் உள்ள எல்லா பெரியவர்களும் மனைவி, பெண் ஆசை என்பதை ஏதோ பஞ்ச மா பாதகம் போல் ஏன் சித்தரிக்கிறார்கள். 


அது ஒரு புறம் இருக்க,


இந்தப் பாடல்களை படிக்கும் பெண்கள் மனநிலை எப்படி இருக்கும். 


நான், என் கணவரின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறேனா ? என்ற எண்ணம் ஒரு பெண்ணின் மனதை பாதிக்காதா?


ஒரு பெண், ஆணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறாள் என்றால் ஒரு ஆண், பெண்ணின் ஆன்மீக முன்னேற்றத்துக்கு தடையாக இருக்க மாட்டானா?  


இது பற்றி யாரும் பேசுவதே கிடையாது. 


ஏன் ?







 



Thursday, November 23, 2023

திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது

 திருக்குறள் - வித்தகர்க்கு அல்லால் அரிது



புகழ் அடைவது என்பது எளிதான காரியம் அல்ல. மிகுந்த முயற்சி தேவை. பண விரயம், கால விரயம், உடல் உழைப்பு என்று நிறைய தியாகம் செய்ய வேண்டி இருக்கும். 


வள்ளுவர் கேட்கிறார், நிலையில்லாதனவற்றை கொடுத்து நிலையானதைப் பெற்றுக் கொள்வதில் என்ன சிக்கல் என்று. 


இந்த செல்வம், இளமை (உடல்), ஆயுள் எல்லாம் நாம் என்ன செய்தாலும், செய்யாவிட்டாலும் நம்மை விட்டு ஒரு நாள் போய் விடும். அப்படி போவதை, நல்ல காரியத்துக்காக செலவழித்து அதன் மூலம் புகழ் அடைவது அல்லவா சிறப்பு. 


வாழ்நாள் எல்லாம் வெட்டிப் பொழுதாக கழித்து, இருக்கின்ற பணத்தை ஏதோ கொஞ்சம் செலவழித்து, கொஞ்சம் சேமித்து வைத்து, இறுதியில் கண்டது என்ன?  


இதை அறிந்தவன் என்ன செய்வான்?  பணத்தையும், நேரத்தையும், உடல் உழைப்பையும் புகழ் அடைய செலவழிப்பான். முதலில் அதை அறிய வேண்டும். அந்த அறிவு பெரும்பாலானோருக்கு இருப்பது இல்லை. எனவே, அப்படி செய்வது அறிவுள்ளவர்களுக்கு மட்டும் தான் முடியும் என்கிறார். 


பாடல் 


நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்

வித்தகர்க்கு அல்லால் அரிது


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_23.html

(please click the above link to continue reading)


நத்தம்போல் = ஆக்கம் தரும் 


கேடும் = கேடும் 


உளதாகும் = தக்கவைக்கும் 


சாக்காடும் = சாக்காடு (இறப்பு) 


வித்தகர்க்கு = அறிஞர்களுக்கு 


அல்லால் அரிது = தவிர மற்றவர்களால் முடியாது 


கொஞ்சம் சிக்கலான குறள்.


ஆக்கம் தரும் கேடும் 


உள்ளது ஆக்கும் சாக்காடு 


அது என்ன ஆக்கம் தரும் கேடு, உளது ஆக்கும் சாக்காடு?


எப்படி கேடும், சாக்காடும் நல்லது ஆகும்? அதுவும் அது அறிஞர்களால் மட்டுமே முடியும் என்கிறாரே. 


ஒரே குழப்பாக இருக்கிறது அல்லவா?


நத்தம் என்றால் ஆக்கம், சிறப்பு, உயர்வு. ஆக்கம் தரும் கேடு எது என்றால், பசித்தவனுக்கு நாம் பொருளுதவி செய்கிறோம். நம்மிடம் இருந்த பொருள் குறைந்து விட்டது. நிறைய பேருக்கு அப்படி செய்தால் செல்வம் மிகுவாக குறையும். செல்வம் குறைவது கேடுதான். ஆனால், அந்தக் கேடு ஆக்கத்தைத் தரும். புகழ் என்ற ஆக்கத்தைத் தரும். 


ஒரு தாய் தன் இளமை, அழகு எல்லாம் இழந்து பிள்ளையை வளர்க்கிறாள். அவளது இளமைக்கும், அழகுக்கும் அது கேடுதான். இருப்பினும், ஒரு தாய் அதை மகிழ்ந்து செய்கிறாள். காரணம், அந்த இழப்பு, அவளுக்கு ஒரு குழந்தையைத் தருகிறது. அந்த ஆக்கம் , அவளது இழப்பை விட உயர்ந்தது. 


அது போல, தானம் செய்வது, பிறருக்கு உழைப்பது எல்லாம் ஒரு விதத்தில் கேடுதான், ஆனால் அந்தக் கேடு மிகப் பெரிய புகழைத் தரும்.


எப்படி சாக்காடு சிறப்பு ஆகும்?


இந்த பூத உடல் இறந்து போகும். ஆனால், புகழுடம்பு என்றும் நிலைத்து நிற்கும். உடம்புக்கு அழிவு கட்டாயம் வரும். அந்த அழிவில் இருந்து என்ன கிடைக்கிறது என்று பார்க்க வேண்டும். 


நிலையில்லா இளமையையும், செல்வத்தையும் கொடுத்து நிலையான புகழைப் பெற வேண்டும் என்பது கருத்து. 




Tuesday, November 21, 2023

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன்

நாலாயிர திவ்ய பிரபந்தம் - திருவடி அடைந்தேன் 


நைமிசாரண்யம் என்ற திருத்தலத்தில் உள்ள பெருமாள் மேல் திருமங்கை ஆழ்வார் பத்துப் பாசுரங்கள் மங்களாசாசனம் செய்து இருக்கிறார். 


அற்புதமான பாடல்கள். 


இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று நினைப்பது நம் அறிவின் குறைபாடு. உருவம் இல்லா ஒன்றை நம்மால் சிந்திக்க முடியாது. ஏதோ ஒரு உருவத்தைப் பற்றிக் கொள்கிறோம். சிக்கல் என்ன என்றால், அதை விடுத்து மேலே போவது இல்லை. அதுவே சதம் என்று இருந்து விடுகிறோம். 


நம் மதம், அதில் இருந்து விடுபட பல வழிகளைச் சொல்லித் தருகிறது. 


பிள்ளையார் சதுர்த்தி முடிந்தவுடன், விக்ரகத்தை கடலில் கரைத்து விடுகிறார்கள். ஏன்?  வேலை மெனக்கெட்டு செய்வானேன், பின் அதைக் கொண்டு கடலில் போடுவானேன்?


காரணம் என்ன என்றால்,


உருவமாய் இருந்தது, இப்போது அருவமாகி விட்டது. பிள்ளையார் வடிவில் இருந்த அந்த உருவம், இப்போது கடலில் கரைந்து விட்டது. இப்போது கடலைப் பார்த்தால், அதில் அந்த உருவம் இருக்கிறது என்று தெரியும். ஆனால், அதை காண முடியாது. அடுத்த கட்டம், கடலையும் தாண்டி, இந்த உலகம் பூராவும் அந்த சக்தி நிறைத்து கரைந்து நிற்கிறது என்று உணர்வது. 


இதை ஏன் சொல்கிறேன் என்றால், 


நைமிசாரண்யம் என்பது ஒரு காடு. அந்த காட்டையே இறைவானாகக் கண்டார்கள். திருவண்ணாமலையில், அந்த மலையே சிவன் என்று கொண்டாடுவார்கள். 


நைமிசாரன்யத்துள் உறை பெருமாளே, உன்னிடம் சரண் அடைந்தேன் என்று உருகுகிறார் திருமங்கை.


"இந்த பெண்ணாசையில் கிடந்து நீண்ட நாள் உழன்று விட்டேன். அது தவறு என்று உணர்ந்து கொண்டேன். இந்த பிறவி என்ற நோயில் இருந்து விடுபட எண்ணம் இல்லாமல், இந்த உலக இன்பங்களில் மூழ்கிக் கிடந்தேன். இப்போது அதையெல்லாம் அறிந்து வெட்கப் படுகிறேன். உன் திருவடியே சரணம் என்று வந்துவிட்டேன் " என்று உருகுகிறார். 


பாடல்   


வாணிலா முறுவல் சிறுனுதல் பெருந்தோள் மாதரார் வனமுலைப் பயனே


பேணினேன் அதனைப் பிழையெனக் கருதிப் பேதையேன் பிறவி நோயறுப்பான்,


ஏணிலேனிருந்தேனெண்ணினேனெண்ணி இளையவர்க் கலவியிந் திறத்தை


நாணினேன், வந்துந்திருவடியடைந்தேன் நைமிசாரணியத்துளெந்தாய்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_21.html


(please click the above link to continue reading)



வாணிலாமுறுவல் = வான் + நிலா + முறுவல் = வானில் உள்ள நிலவைப் போல ஒரு புன்முறுவல்  


சிறுனுதல் = சிறிய நெற்றி 


பெருந்தோள் = பெரிய தோள்கள் 


மாதரார் = பெண்கள் 


வனமுலைப் = வனப்பான மார்பகங்களே 


பயனே = அதுதான் இன்பம் என்று 



பேணினேன்  = போற்றினேன் 


அதனைப் = அப்படி போற்றியதை 


பிழையெனக்கருதிப் = தவறு என்று உணர்ந்து 


பேதையேன் =  அறிவில்லா பேதையான நான் 


பிறவிநோயறுப்பான் = பிறவி என்ற நோயை நீக்கும் ,


ஏணிலேனிருந்தேன் = ஏண் இலேன் இருந்தேன் = ஒரு எண்ணமும் இல்லாமல் இருந்தேன் 

 


னெண்ணினேன் = எண்ணினேன் (யோசித்துப் பார்த்தேன்)  


னெண்ணி = எண்ணிய பின் 


இளையவர்க் = அறிவில் சிறியவர்களின் 


கலவியிந்திறத்தை = கலவியின் திறத்தை = அவர்களோடு சேர்ந்து இருப்பதை 



நாணினேன் = வெட்கப்பட்டேன் 


வந்துந் = உன்னிடம் வந்து 


திருவடியடைந்தேன் = உன்னுடைய திருவடிகளை அடைந்தேன் 


 நைமிசாரணியத்துளெந்தாய் = நைமிசாரண்யம் என்ற இடத்தில் எழுந்து அருளி இருக்கும் என் தந்தை போன்றவனே 


ஒரு தவறில் இருந்து மீள வேண்டும் என்றால், முதலில் தவறை ஒத்துக் கொள்ள வேண்டும். 


Alcoholic Anonyms என்று ஒரு இயக்கம் இருக்கிறது. மது, போன்ற போதை பொருள்களுக்கு அடிமையாகி அதில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு அமைப்பு.  அந்த அமைப்பில் உள்ளவர்கள் முதலில் சொல்லுவது...


"I am so-and-so and I am an addict"


என்று ஆரம்பிப்பார்கள். 


காரணம், எது தவறு என்று தெரிந்தால் தானே அதில் இருந்து விடுபட முடியும். 


தவறு செய்து பழகி விட்டால், அதைச் செய்வதற்கு ஒரு ஞாயம் கற்பிக்கத் தொடங்கி விடுவோம். 


முதலில் ஆழ்வார், இதெல்லாம் நான் செய்த தவறுகள் என்று பட்டியலிடுகிறார். 


- பெண்ணாசையில் மூழ்கிக் கிடந்தது 

- சிறியோர் தொடர்பு 

- பிறவி பற்றி எண்ணம் இல்லாமல் இருந்தது 


அது மட்டும் அல்ல , அதை ஏன் செய்தேன் தெரியுமா என்று அதை நியாயப் படுத்த முயலவில்லை. 


"நாணினேன்", வெட்கப் படுகிறேன் என்கிறார். 


சரி, இதெல்லாம் தவறு என்று தெரிகிறது. திருத்தி என்ன செய்வது?


"அதெல்லாம் எனக்குத் தெரியாது...உன்னிடம் வந்து விட்டேன்...இனி உன்பாடு' என்று பெருமாளிடம் விட்டு விடுகிறார்.   


பாசுரத்தை மீண்டும் படித்துப் பாருங்கள். ஏதோ பெருமாளிடம் நேரில் பேசுவது போல இருக்கும். 



Monday, November 20, 2023

திருக்குறள் - புலவரைப் போற்றாது

 திருக்குறள் - புலவரைப் போற்றாது 


நமது வாழ்வில் இன்பமும் துன்பமும் விரவிக் கிடக்கிறது. நமக்கு மட்டும் அல்ல, பொதுவாகவே இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்தே நிற்கிறது. 


இந்த உலகில் இன்பமும் துன்பமும் கலந்து நிற்கிறது. இப்படி கலக்காமல் தனித் தனியே இருக்கும் உலகம் இருக்குமா? 


இருக்கிறது என்கிறார்கள். 


இன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம் சுவர்க்கம் எனப்படுகிறது. 


துன்ப அனுபவம் மட்டுமே உள்ள உலகம், நரகம் எனப்படுகிறது. 


சுவர்க்கம் என்பதை புத்தேள் உலகு இன்று குறித்தார்கள் அந்த நாட்களில். 


அது அப்படி இருக்கட்டும் ஒரு புறம். 


யார் இந்த புத்தேள் உலகுக்குப் போவார்கள்? அங்கே போனாலும் என்ன மரியாதை இருக்கும் ?  மகாத்மா காந்தியும் போகிறார், நானும் போகிறேன் என்றால் யாருக்கு மதிப்பு அதிகம் இருக்கும்?  


ஒரு ஞானியும், ஒரு இல்லறத்தானும் புத்தேள் உலகம் போனால், அங்குள்ள தேவர்கள் யாரை அதிகம் மதிப்பார்கள்?  ஞானியையா? அல்லது இல்லறத்தானையா?  


பாடல் 


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு


பொருள் 



(pl click the above link to continue reading)


நிலவரை = நிலத்தின் எல்லை வரை. அதாவது, இந்த பூ உலகம் நிற்கும் வரை 


நீள்புகழ் = நீண்ட புகழை 


ஆற்றின் = ஒருவன் பெறுவானானால் 


புலவரைப் = ஞானியரை 


போற்றாது = சிறப்பாக நினைக்காது 


புத்தேள் உலகு = சொர்க்கம் 


ஞானியை விட இல்லறத்தில் இருந்து புகழ் பெற்றவனுக்குத் தான் மதிப்பு அதிகம். 


ஞானியாரைப் போற்றாது புத்தேள் உலகு.


ஏன் போற்றாது? இல்லறத்தில் இருப்பவன் எப்படி ஞானியை விட சிறந்தவனாக முடியும்?


இருவருமே புத்தேள் உலகம் போக வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள்.


ஞானி, ஒரு தனி மனிதனாக, தன் முன்னேற்றத்தை பார்த்துக் கொண்டு போகிறான். 


ஆனால், இல்லறத்தில் இருப்பவனோ, தான், பிள்ளை, மனைவி, மக்கள், சுற்றம், நட்பு, விருந்து என்று எல்லோரையும் அணைத்துக் கொண்டு சிறப்பாக இல்லறம் நடத்தி, இங்கும் புகழ் பெறுகிறான், மேலே சென்று அங்கும் புகழ் பெறுகிறான். 


ஒருவன் சிறப்பாக இல்லறத்தை நடத்தினான் என்றால், அவன் புகழ் இந்த வையம் இருக்கும் வரை நிற்கும்.  அவனுக்கு இங்கும் சிறப்பு, அங்கும் சிறப்பு. 


சொர்க்கம் போக வேண்டுமா, இல்லறத்தை சிறப்பாக நடந்த்துங்கள். அது போதும். 


அது என்ன சிறப்பான இல்லறம் என்றால், இதுவரை நாம் பார்த்த அனைத்து குறள் வழியும் நின்றால் போதும். அதுதான் சிறந்த இலல்றம். 


அறன் , வாழ்க்கைத் துணை நலம், புதல்வர்களைப் பெறுதல், அன்புடைமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, விருந்தோம்பல்....என்று படித்ப் படியாக வளர்ந்து பின் ஒப்புரவு, ஈகை, அண்ட் ஆகி இறுதியில் புகழ் என்பதில் வந்து நிற்கும் இல்லறம். 


சொர்க்கம் போக short-cut ... 




Friday, November 17, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான்

 கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - புறத்துப் போக்கினான் 


இராவணனின் மந்திர ஆலோசனை சபை கூட்டம் தொடங்கப் போகிறது. சபை கூடுமுன் என்னவெல்லாம் செய்தான் என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். 


அமைச்சர்கள், நீண்ட காலம் அரச சேவையில் இருப்பவர்கள் என்ற சிலரை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேறச் சொன்னான் என்று முந்தைய பாடலில் பார்த்தோம். 


மேலும், 


அரசவையில் பல திறமைசாலிகள் இருப்பார்கள், போரில் வல்லவர்கள் இருப்பார்கள், நண்பர்கள் இருப்பார்கள். ஆனால், ஒரு பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் எல்லோரையும் வைத்துக் கொண்டு முடிவு எடுக்க முடியாது. ஆட்கள் அதிகம் ஆக ஆக குழப்பம்தான் மிஞ்சும். மேலும், எது சரி எது தவறு என்று நினைப்பவர்கள் ஒரு புறம். தனக்கு எது நல்லது என்று சிந்திப்பவர்கள் ஒரு புறம். தனக்கு நன்மை தருவதை பற்றி சிந்திப்பவர்கள் தனக்கு நெருங்கிய சுற்றத்தார் மற்றும் உறவினர்கள். எனவே,அவர்களை வைத்துக் கொண்டு மற்றவர்களை வெளியேற்றினான். 




பாடல்  


ஆன்று அமை கேள்வியர் எனினும் ஆண் தொழிற்கு

ஏன்றவர் நண்பினர் எனினும் யாரையும்

வான் துணைச் சுற்றத்து மக்கள் தம்பியர்

போன்றவர் அல்லரைப் புறத்துப் போக்கினான்.



பொருள் 



(pl click the above link to continue reading)

ஆன்று = ஆழமாக 


அமை = அமைந்த 


கேள்வியர் = கேள்வி அறிவு உடையவர் 


எனினும் = என்றாலும் 


ஆண் தொழிற்கு = போர்த் தொழிலுக்கு 


ஏன்றவர் = பொருந்தியவர், சரியானவர் என்ற


நண்பினர் = நண்பர்கள் 


எனினும் = என்றாலும் 


யாரையும் = அவர்கள் அனைவரையும் 


வான் = நீண்ட 


துணைச் = துணையாக உள்ள 


சுற்றத்து  மக்கள் = சுற்றத்தார் 


தம்பியர் = தன் தம்பிகள் 


போன்றவர் அல்லரைப் = அவர்கள் போன்றவர் அல்லாதவரை   


புறத்துப் போக்கினான். =  வெளியில் அனுப்பினான் 


இந்தப் பாடல் நமக்குச் சற்று நெருடலான பாடல். 


சொந்தக்காரர்களை, தம்பிகளை வைத்துக் கொண்டான், ஆழ்ந்த அறிவு உள்ளவர்கள், போர்த் தொழிலில் திறமையானவர்களை விலக்கி விட்டான் என்று சொன்னால், அது நமக்குச் சரியாகப் படாது. 


ஆங்கிலத்தில் nepotism என்று சொல்லுவார்கள். தன் உறவினர்களுக்கு முன்னுரிமை கொடுப்பது. 


இன்றைய அரசியல், நிர்வாக முறைப்படி அது தவறாகத் தெரியும். 


ஆனால், அன்று இருந்தது ஜனநாயகம் அல்ல. அரசன் தான் எல்லாம். அவனை இறைவனுக்குச் சமமாக மக்கள் கருதினார்கள். 


அவனுக்கு எது நல்லதோ அது எல்லோருக்கும் நல்லது என்று நம்பினார்கள். 


எனவே, இராவணன், தனக்கு நல்லது நினைப்பவர்களை மட்டும் வைத்துக் கொண்டான். 


ஆனால், தனக்கு எது நல்லது என்று இராவணனுக்குத் தெரியாமலேயே போய் விட்டது. யார் சொன்னதையும் அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை எல்லாம் பின்னால் சிந்திக்க இருக்கிறோம். 


 


Thursday, November 16, 2023

திருக்குறள் - பொன்றாது நிற்பது

 திருக்குறள் - பொன்றாது நிற்பது 


பெரிய பெரிய அரசர்கள் உலகை கட்டி ஆண்டார்கள். பெரிய அரசியல் தலைவர்கள் உலகே வியக்கும்படி சாதனைகள் செய்தார்கள். அவர்கள் வாழ்ந்த வீடு, அவர்கள் பரம்பரை, அவர்கள் சொத்து, என்று எது இருக்கிறது இப்போது?


இராஜராஜ சோழன் பரம்பரை எங்கே, அவன் கட்டிய அரண்மனைகள் எங்கே?  அசோக சக்ரவர்த்தியின் வாரிசுகள் யார்? 


ஒன்றும் தெரியாது. 


மிஞ்சி நிற்பது அவர்கள் பேரும் புகழும் மட்டும்தான். 


என்றோ வாழ்ந்த அதியமான், சிபிச் சக்கரவர்த்தி, கர்ணன் என்று அவர்கள் புகழ் இன்றும் நிற்கிறது. இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நிற்கும். 


முந்தைய பாடல்களில் வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை என்றும் பாடும் புலவர்கள் பாடுவது எல்லாம் அவர்கள் புகழைத்தான் என்றும் பார்த்தோம். 


வள்ளுவர் ஒரு படி மேலே போகிறார். 


ஒருவனுக்கு பசிக்கிறது. உணவு அளித்தோம். புகழ் வந்து விடுமா?  


படிப்பு செலவுக்கு, திருமண செலவுக்கு என்று ஒருவன் நம்மிடம் உதவி கேட்கிறான். ஒரு ஐந்து ஆயிரமோ, பத்து ஆயிரமோ கொடுக்கிறோம். புகழ் வந்து விடுமா?  காலகாலத்துக்கும் நம் புகழ் நிற்குமா?


நிற்காது. பின் என்ன செய்தால் நீண்ட புகழ் வரும்?


வள்ளுவர் கூறுகிறார் 


"இணையில்லாத உலகில் சிறந்த புகழ் அல்லது நிலைத்து நிற்பது வேறு எதுவும் இல்லை"


என்று.


பாடல் 


ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ்அல்லால்

பொன்றாது நிற்பதொன்று இல்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_16.html



(please click the above link to continue reading)


ஒன்றா = ஒப்பிட்டு கூற முடியாத, இணை இல்லாத, 


உலகத்து = உலகில் 


உயர்ந்த புகழ் = சிறந்த புகழ் 


அல்லால் = தவிர 


பொன்றாது = நிலைத்து 


நிற்பதொன்று இல் = நிற்பது வேறு எதுவும் இல்லை 


புகழ் போல நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை என்கிறார். 


சரி, புரிகிறது. ஆனால் இதில் வள்ளுவர் என்ன சொல்ல வருகிறார். 


இது சாதாரண விடயம். எல்லோருக்கும் தெரிந்ததுதானே. இதைச் சொல்ல வள்ளுவர் வேண்டுமா?


அப்படி அல்ல. 


பரிமேலழகர் இல்லை என்றால், இதில் ஒன்றும் இல்லை என்று மேலே சென்று விடுவோம். 


பரிமேலழகர் சொற்களை இடம் மாற்றிப் போடுகிறார். 


ஒன்றா உயர்ந்த புகழ் அல்லால்  உலகத்துப் பொன்றாது நிற்பது ஒன்று இல்


என்று. 


இணையில்லாத உலகம் அல்ல, இணையில்லாத புகழ் அல்லது இந்த உலகில் நிலைத்து நிற்பது வேறு ஒன்றும் இல்லை.


இணையில்லா என்ற அடைமொழியை புகழுக்குச் சேர்க்கிறார். உலகத்துக்கு அல்ல. 


சரி, அதனால் என்ன. இணையில்லாத உலகம், இணையில்லாத புகழ். புரிகிறது. 


அதனால் என்ன பெரிய அர்த்த மாற்றம் வந்து விடும்?


இணையில்லாத புகழ் எப்படி வரும்?


நான் ஒருவனுக்கு ஒரு வேளை உணவு அளிக்கிறேன் என்றால். அதே போல் இன்னொருவனும் செய்ய முடியும். அதை விட அதிகமாகக் கூட செய்ய முடியும். ஒரு வேளை என்ன ஒரு வேளை, இரு வேளை, மூன்று வேளை...ஒரு ஆள் என்ன ஒரு ஆள், பத்து பேர், நூறு பேருக்கு அன்னதானம் செய்கிறேன் என்று மற்றவர்கள் ஆரம்பிக்க முடியும். அப்போது, என் புகழ் மங்கிவிடும். 


இணையில்லாத புகழ் எப்போது வரும்? நான் செய்ததை மற்றவன் செய்ய முடியாத போது எனக்கு அந்த புகழ் வரும் அல்லவா?


அது என்ன செயல்?


ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான். அவசரமாக இரத்தம் தேவைப் படுகிறது. நான் இரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றுகிறேன். அதை எல்லோராலும் செய்ய முடியாது. 


அப்படி கூட சொல்ல முடியாது. இரத்த தானம் செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். 


அப்படி என்றால் அதைவிட சிறந்தது எது?


இங்குதான் பரிமேலழகர் உச்சம் தொடுகிறார். 


யாராலும் கொடுக்க முடியாத ஒன்று உயிர், உடல் உறுப்புகள். 


உயிரைக் கொடுப்பது என்பது நடவாத காரியம். நாட்டுக்காக, குடும்பத்துக்காக ஒருவன் உயிரை தியாகம் செய்கிறான் என்றால், அதுதான் பொன்றாப் புகழ். யாரால் முடியும்?


உடல் உறுப்பு? முடியுமா?  புறாவுக்காக தொடையை அரிந்து கொடுத்தான் சிபிச் சக்ரவர்த்தி. அவனைப் பற்றி வேறு எதுவும் தெரியாது. அவன் புகழ் இன்றளவும் நிற்கிறது. 


கண்ணை எடுத்து கொடுத்தான் கண்ணப்பன். அந்த வேடனின் புகழ் இன்றும் நிற்கிறது. 


தன்னிடம் உள்ள மிகச் சிறந்த ஒன்றை ஒருவன் கொடுக்கும் போது, பொன்றா புகழ் பெறுகிறான் என்கிறார் வள்ளுவர். 


வேறு யாராலும் செய்ய முடியாத ஒன்றை செய்யும் போது, நிலைத்த புகழ் வரும்.


தன் உயிரை, உடல் உறுப்புகளை (organ donation ), நேரத்தை, இன்பத்தை தானம் செய்வது இருக்கிறதே, அதுவே நீண்ட புகழைத் தரும். 


ஒரு வார்த்தையை இடம் மாத்திப் போட்டால் எவ்வளவு பெரிய அர்த்தம் வருகிறது. 


எப்படியெல்லாம் எழுதி இருக்கிறார்கள். 


எப்படி எல்லாம் சிந்தித்து அதற்கு உரை எழுதி இருக்கிறார்கள்.


தலை தாழ்த்தி வணங்குவோம். 



Wednesday, November 15, 2023

பழமொழி - உப்புக் கடல் போல

பழமொழி - உப்புக் கடல் போல 


ஏன் தீயவர்கள் சகவாசம் கூடாது என்று சொல்லுகிறார்கள்?


தீயவர்களோடு சேர்ந்தால், ஒன்று அவர்கள் நல்லவர்களாக வேண்டும், அல்லது அவர்களோடு சேர்ந்து நாமும் தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு விடுவோம். 


எது நடக்க சாத்தியம் அதிகம்?


மலையின் மேல் உள்ள பனி உருகி, பளிங்கு போல நதி நீர் வரும். வரும் வழியில் உள்ள மூலிகைகள், பூக்களின் நறுமணம் எல்லாம் கொண்டுவரும். அத்தனை சுவையாக இருக்கும் அந்த நதி நீர். 


அதே நீர் கடலில் சேர்ந்து விட்டால், என்ன ஆகும்?


கடல் நீர் நல்ல நீராககுமா அல்லது நதி நீர் உப்புக் கரிக்குமா?


ஆயிரகணக்கான ஆண்டுகள் நதி நீர் கடலில் சேர்ந்த வண்ணமாக இருக்கிறது. இருந்தும், கடல் நீர் மாறவே இல்லை. மாறாக, நதி நீர்தான் உப்பு நீராகிறது. 


அது போல தீயவர்களோடு (கடல்) சேர்ந்த நல்லவர்களும் (நதி) அந்தக் கடல் நீர் போல் மாறிப் போவார்கள் என்கிறது இந்த நாலடியார். 


பாடல் 




 மிக்குப் பெருகி மிகுபுனல் பாய்ந்தாலும்

உப்பொழிதல் செல்லா ஒலிகடல்போல் - மிக்க

இனநலம் நன்குடைய வாயினும் என்றும்

மனநலம் ஆகாவாம் கீழ்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_15.html


(please click the above link to continue reading)


மிக்குப் = மிகுதியாக 


பெருகி = பெருகி வந்து 


மிகுபுனல் = அதிகமான நீர் 


பாய்ந்தாலும் = ஆற்றில் பாய்ந்தாலும் 


உப்பொழிதல் = உப்பு + ஒழிதல் = ஒருகாலும் உப்பை விடாத 


செல்லா ஒலிகடல்போல் = இருக்கின்ற கடல் போல 


மிக்க = நல்ல 


இனநலம் = சேரும் இனத்தின் குணம்  


 நன்குடைய வாயினும் = நல்லதாக இருந்தாலும்


என்றும் = எப்போதும் 



மனநலம் = நல்ல மனம் உடையவாக 


ஆகாவாம் = ஆகாது 


கீழ் = கீழான மனம் உடையவர்கள்.


நம்மைவிட உயர்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் உயர்வோம்.


நம்மைவிட தாழ்ந்தவர்களைச் சார்ந்தால், நாமும் தாழ்வோம்.




Tuesday, November 14, 2023

திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம்

 திருக்குறள் - உரைப்பார் உரைப்பவை எல்லாம் 


பலர், பல விதங்களில் புகழ் அடைகிறார்கள். கல்வியில், கேள்வியில், விளையாட்டில், நிர்வாகத்தில், வீர தீர செயல்களில், இலக்கியம் படைப்பதில், கவிதை எழுதுவதில், என்று பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். 


அப்படி ஒரு துறையில் திறமையானவர்களை புகழ்ந்தாலும், எல்லா புகழும் ஒன்றையே குறித்து நிற்கிறது என்கிறார் வள்ளுவர். 


அது எது என்றால், வறியவர்க்கு ஒன்று தானமாக கொடுப்பதையே எல்லா புகழும் சுட்டி நிற்கிறது என்கிறார். 


ஒரு நடிகர் இருக்கிறார். அவர் மிக நன்றாக நடிக்கிறார். அவரை புகழ்ந்து பரிசுகள், பட்டங்கள் தருகிறார்கள். அது எப்படி வறியவர்க்கு கொடுப்பதை குறிக்கும் புகழாகும்?  குழப்பமாக இருக்கிறது அல்லவா?


எல்லா புகழும் வறியவர்க்கு கொடுப்பதை பாராட்டும் புகழ் என்றால் சரியாகப் படவில்லையே என்று தோன்றும். 


மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும். 


பாடல் 


உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ்


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_14.html


(pl click the above link to continue reading)

\

உரைப்பார் = சொல்லுபவர் 


உரைப்பவை = சொல்லியவை 


எல்லாம் = எல்லாம் 


இரப்பார்கொன்று = இரப்பார்க்கு + ஒன்று = யாசிப்பவர்களுக்கு ஒன்று 


ஈவார்மேல் = கொடுப்பவர்கள் பற்றி 


நிற்கும் புகழ் = நிற்கின்ற புகழ் பற்றியே ஆகும்.


நம் குழப்பம் தீரவில்லை. 


நீங்களும், நானும், சாகித்ய அகடமியும், ஒலிம்பிக் குழுவும் பாராட்டுவதை இங்கே அவர் குறிப்பிடவில்லை. 


"உரைப்பார்"...உலகத்துக்கு ஒன்று சொல்லுபவர்கள் என்று உரை எடுக்கிறார் பரிமேலழகர். நீங்களும், நானும் ஒருவரை பாராட்டுகிறோம் என்றால் அது நமக்கு பிடித்து இருக்கிறது, பாராட்டுகிறோம். நாம் உலகத்துக்கு அதன் மூலம் ஒரு செய்தியை சொல்ல வரவில்லை. மனைவி நன்றாக சமைத்து இருக்கிறாள். அதை பாராட்டினால் அதில் ஒன்றும் உலகத்துக்கு செய்தி இல்லை. 


உரைப்பார் என்றால் உலகத்துக்கு ஒரு நல்ல செய்தி சொல்லும் பெரியவர்கள் என்று கொள்ள வேண்டும். அறிஞர்கள், கவிஞர்கள் சொல்லுவது எல்லாம். 


"உரைப்பவை" அவர்கள் சொல்லுவது எல்லாம்.


உலகில் உள்ள பெரியவர்கள், சான்றோர்கள் சொல்லியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, இரப்பவர்க்கு ஒன்று ஈவார் பற்றிய புகழ் ஒன்றுதான். வேறு எதுவும் இல்லை. 


மற்ற எல்லா புகழும் ஒரு திறமையை, வீரத்தை, காட்டி பெறுவது. அதில் தனி மனிதனுக்கு நன்மை இருக்கிறது. 


வறியவர்க்கு ஒன்று கொடுப்பதில் தீரம், வீரம், எல்லாம் இல்லை. அன்பு, கருணை, மனிதாபிமானம் மட்டுமே இருக்கிறது. அந்த ஈகைக்கு பலம் தேவை இல்லை, பொருள் கூடத் தேவையில்லை, மனதில் அன்பும் கருணையும் இருந்தால் போதும். 


அந்தக் கருணைதான் உலகில் மிகச் சிறந்தது என்கிறார் வள்ளுவர். 


இல்லறத்தின் உச்சம் ஈகையும், அதனால் வரும் புகழும். 


மனைவி மேல் அளவு கடந்த காதலும், பிள்ளைகள் மேல் பேரன்பும், சுற்றமும், நட்பும் தழுவி இல்லறம் நடத்தும் ஒருவன், வறுமையில் வாடி தன்னை நாடி வருபவனுக்கு இல்லை என்று சொல்லாமல் ஏதாவது கொடுப்பான். அவன் அன்பில், முதிர்ச்சி பெற்று இருக்கிறான். இல்லறம் அவனுக்கு அன்பை போதித்து இருக்கிறது. 


அப்படி கொடுக்கவில்லை என்றால், அவன் இல்லறத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம். சரியாக நடத்தவில்லை என்று அர்த்தம். 


இல்லறத்தை எப்படி நடத்த வேண்டும் என்று பாடம் சொல்லி தந்துவிட்டு, இப்போது பரீட்சை வைக்கிறார். 


வறியவர்க்கு ஈந்து புகழ் அடைகிறாயா, நீ பாஸ். இல்லை என்றால் பெயில் என்று. 


நமக்கு எவ்வளவு மதிப்பெண் வரும்?




Monday, November 13, 2023

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான்

கம்ப இராமாயணம் - யுத்த காண்டம் - இராவணன் மந்திர ஆலோசனை - வரவு மாற்றினான் 


ஒரு நிர்வாகத் தலைமையில் உள்ளவன் எப்படி நிர்வாகத்தை நடத்த வேண்டும் என்று கம்பன் காட்டுகிறான். 


You are as good as your team என்று சொல்லுவார்கள். 


உன் நண்பன் யார் என்று சொல், உன்னை யார் என்று சொல்கிறேன் என்று தமிழில் ஒரு வழக்கு உண்டு. 


யார் யாரை எல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு பட்டியல் தருகிறான் கம்பன். 


நமக்கு ஒரு சிக்கல் என்றால் நாம் யாரிடம் சென்று ஆலோசனை கேட்போம்? நம் நண்பர்கள், உறவினர்கள் என்று சென்று கேட்போம். அவர்கள் ஒன்றும் நம்மை விட அறிவில் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது. அவர்களிடம் சென்று கேட்டு என்ன பலன்?


நம்மை விட அறிவில், அனுபவத்தில், திறமையில், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். 


இராவணன் யார் யாரை வைத்து ஆலோசனை கூட்டம் நடத்தினான்?



பாடல்  


பண்டிதர், பழையவர், கிழவர், பண்பினர், 

தண்டல் இல் மந்திரத் தலைவர், சார்க!' எனக்

கொண்டு உடன் இருந்தனன்-கொற்ற ஆணையால்

வண்டொடு காலையும் வரவு மாற்றினான்.


பொருள் 


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_13.html


(pl click the above link to continue reading)

பண்டிதர் = கல்வி அறிந்து நிறைந்தவர்கள் 


பழையவர் = நீண்ட நாள் தொடர்பில் உள்ளவர்கள். நம்மை பற்றி நன்கு அறிந்தவர்கள் 


கிழவர் = தலைவர்கள். (முருகன் குறிஞ்சிக் கிழவன் என்றால் குறிஞ்சி நிலத்தின் தலைவன்)


பண்பினர் = உயர்ந்த பண்பினை உள்ளவர்கள் 


தண்டல் இல் = பிரிதல் இல்லாத. சில மந்திரிகள் தேர்தலுக்கு தேர்தல் கட்சி மாறுவது போல் இல்லாமல், என்றும் உடன் இருப்பவர்கள். 


மந்திரத் தலைவர் = ஆலோசனை கூறும் தலைமை பண்பு மிக்கவர்கள் 


சார்க!' = இருங்கள் 


எனக் கொண்டு = என்று கொண்டு 


உடன் இருந்தனன் = அவர்களோடு இருந்தான் 


கொற்ற ஆணையால் = தன்னுடைய அரச ஆணையால் 


வண்டொடு = வண்டுகளையும் 


காலையும் = கால் என்றால் காற்று. காற்றையும் 


வரவு மாற்றினான் = உள்ளே வருவதை நிறுத்தினான். 


ஒரு ஈ காக்க உள்ளே நுழையக் கூடாது என்று சொல்லுவோம் அல்லவா. 


காற்று கூட உள்ளே நுழையக் கூடாது என்று ஆணையிட்டான். 


முந்தைய பாடலில் சிலரை வெளியேற்றினான்.


இந்தப் பாடலில் சிலரை சேர்த்து வைத்துக் கொண்டான். 


எப்படி முன்னேற்பாடுகள் செய்கிறான். 


யுத்த காண்டம் தானே, என்ன சண்டை போட்டு இருப்பார்கள் என்று தள்ளிவிட்டுப் போனால், இதெல்லாம் கிடைக்குமா?






Thursday, November 9, 2023

திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம்

 திருக்குறள் - புகழ் - உயிர்க்கு ஊதியம் 


ஒருவன் நன்றாக படித்து, நான் படித்து விட்டேன் என்று சொன்னால், "அப்படியா, எங்க நாலு கேள்வி கேக்குறேன், பதில் சொல்லு பார்க்கலாம்" என்று தானே உலகம் சொல்லும். 


படித்து, அறிந்து இருந்தாலும், தேர்வு எழுதி, அதில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, பள்ளியோ, கல்லூரியோ சான்றிதழ் வழங்கினால்தான் உலகம் ஏற்றுக் கொள்ளும். 


இவர் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார், இவர் இரண்டாம் வகுப்பு என்று மற்றவர் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சொல்லிக் கொண்டால் உலகம் நம்பாது. 


வாழ்க்கை என்பதும் ஒரு தேர்வுதான். அதில் நாம் தேர்வு பெற்றோமா இல்லையா என்று உலகம் சொல்ல வேண்டும். அந்த உலகம் சொல்வதுதான் "புகழ்".


"அவர் நல்ல மனிதர், ஏழைகளுக்கு உதவி செய்வார், ஒருத்தரை ஒரு வார்த்தை கடிந்து பேச மாட்டார், நல்ல படித்த மனிதர், சிறந்த நடிகர், வள்ளல், " என்றெல்லாம் ஒருவரை உலகம் பாராட்ட வேண்டும். 


அந்த பாராட்டுதல்தான் புகழ் என்பது. 


ஒருவன் இல்லறத்தை செம்மையாக நடத்துகிறான் என்பதற்கு சான்று, அவன் பெறும் புகழ். 


நல்ல மனைவியைப் பெற்று, இல்லற கடமைகளை சரிவர செய்து, விருந்தோம்பி, நடுவுநிலை தவறாமல் இருந்து, செய்நன்றி மறவாமல் இருந்து, இனியவை பேசி, அடக்கமாய் இருந்து, பொறாமை போன்ற குணங்கள் இல்லாமல் இருந்து, ஊருக்கும், தனி மனிதர்களுக்கும் தன்னால் ஆன உதைவிகளை செய்து ஒருவன் சிறப்பான இல்லறம் நடத்தினால், அவனுக்கு நல்ல பேர் கிடைக்கும். 


எனவே, புகழ் என்ற இந்த அதிகாரத்தை இல்லறத்தின் முடிவில் வைத்தார். 


வள்ளுவர் சொன்ன ஒவ்வொன்றையும் சரியான படி செய்து வந்தால், புகழ் தானே வரும். 


வள்ளுவர் கூறுகிறார், 


"வாழ்வின் நோக்கம் என்ன? இந்த வாழ்க்கை வாழ்வதின் பலன் என்ன? எதுக்காக நாம் வாழ்கிறோம். எப்படி வாழ வேண்டும் என்று கேட்டால், மற்றவர்களுக்கு உதவி செய்வதும், புகழோடு வாழ்வதும், இந்த இரண்டைத் தவிர வாழும் உயிர்களுக்கு வேறு ஒரு பயனும் இல்லை"


பாடல் 


ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு


பொருள்


https://interestingtamilpoems.blogspot.com/2023/11/blog-post_9.html


(please click the above link to continue reading)



ஈதல் =  வறியவர்களுக்கு உதவுதல் 


இசைபட = அதனால் வரும் புகழோடு 


வாழ்தல் = வாழ்தல் 


அதுவல்லது = அதைத் தவிர 


ஊதியம் = பயன் ஏதும் 


இல்லை உயிர்க்கு = இல்லை இந்த உயிர்களுக்கு 


ஈதல், இசைபட வாழ்தல் என்று இரண்டு விடயங்களைக் கூறி இருக்கிறாரே, உதவி செய்யாமல், வேறு விதத்தில் புகழ் வந்தால் பரவாயில்லையா?


ஒலிம்பிக்கில் மெடல் வாங்கி, நாட்டிலேயே முதல் மாணவனாக தேர்வு பெற்று, சிறந்த நடிகர்/எழுத்தாளர்/பாடகர் என்றெல்லாம் புகழ் அடைந்தால் போதாதா?  என்றால் போதாது. 


காரணம் இலக்கணம். 


ஈதல், இசைபட வாழ்தல் "அது" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்றார். 


அது என்பது ஒருமை. 


மாறாக, 


ஈதல், இசைபட வாழ்தல் "அவை" அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு என்று சொல்லி இருந்தால், "அவை" என்பது பன்மை. எனவே ஈதல் அல்லது இசை பட வாழ்தல் என்று பொருள் சொல்லலாம்.


ஆனால் வள்ளுவர் அபப்டிச் சொல்லவில்லை,


அது என்றதால், இங்கே ஒரு செயல் தான். ஈதல் மூலம் வரும் புகழ் தான் வாழ்வின் பயன். வேறு விதத்தில் வரும் புகழ்கள் அல்ல என்று அறிந்து கொள்ள வேண்டும். 


ஒவ்வொரு வார்த்தையும் முக்கியம். 


பெரிய நடிகராக இருப்பார். கோடி கோடியாக பணம் சேர்த்து இருப்பார். அவர் நடித்து வெளிவரும் படம் என்றால் கோடிக்கணக்கில் விற்பனை ஆகும். ஊரில் ஒரு வெள்ளம், மக்கள் துன்பப்படுகிறார்கள் என்றால் ஒரு மிக மிக சொற்பமான தொகையை நன்கொடையாகத் தருவார். 


நடிகராக அவர் புகழ் பெற்று இருக்கலாம். 


அது அல்ல முக்கியம் என்பது வள்ளுவர் கருத்து. 


"உயிர்க்கு" என்று பொதுவாகச் சொன்னாலும், இது மனிதர்களுக்கு மட்டுமே பொருந்தும். விலங்குகள், தன்னை விட வறுமையில் உள்ள மற்ற விலங்குகளுக்கு உதவி செய்வதில்லை. எனவே, உயிர் என்றது மனித உயிர்கள் என்று கொள்ள வேண்டும் என்கிறார் பரிமேலழகர்.